Home

Monday 29 November 2021

ஆர்யா என்கிற பாஷ்யம் : சத்தியமும் சாகசமும் - கட்டுரை

             24.11.1919 அன்று தில்லியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து உற்சாகத்துடன் பங்கேற்ற கிலாபத் மாநாட்டில்தான் காந்தியடிகள் முதன்முதலாக ஒத்துழையாமை என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். பிறகு தொடர்ச்சியாக நண்பர்களுடன் உரையாடி ஒத்துழையாமையை ஒரு கொள்கைத்திட்டமாக உருவாக்கினார். அரசு அளித்த பட்டங்களையும் கெளரவப்பதவிகளையும்  உடனடியாகத் துறத்தல், ஊதியம் பெறும் அரசு பதவிகளிலிருந்தும் போலீஸ் இராணுவச் சேவையிலிருந்தும் வெளியேறுதல், சட்டசபையைப் புறக்கணித்தல், வரி கொடுக்க மறுத்தல் போன்ற அம்சங்களுக்கு அத்திட்டத்தில்  கூடுதலான அழுத்தத்தை அவர் அளித்தார். தம் உரைகளிலும் கட்டுரைகளிலும் தொடர்ந்து அந்த அம்சங்களை வலியுறுத்தினார். காந்தியடிகளின் திட்டத்துக்கு பொதுமக்களில் ஒரு சாரார் ஆதரவைத் தெரிவிக்க, மற்றொரு சாரார் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை  சட்டமன்றங்களுக்குச் செல்வதற்கு தடை இல்லாத வகையில் மாற்றவேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கையாக எங்கெங்கும் ஒலிக்கத் தொடங்கியது.

     இறுதியில் 01.08.1920 அன்று ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் தொடங்கியது. ஒருவரும் எதிர்பாராத விதமாக அன்று திலகர் மறைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் தேவையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக காந்தியடிகள் ஒரு பயணத்தைத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக அவர் 12.08.1920 அன்று மெளலான செளகத் அலியுடன் சென்னைக்கு வந்தார். தொடர்ச்சியாக பல கூட்டங்களில் கலந்துகொண்டு ஒத்துழையாமையை ஒட்டி மக்களிடையில் நிலவும் ஐயங்கள் அனைத்தும் அகன்று தெளிவேற்படும் வகையில்  உரையாற்றியபடி 16.08.1920 அன்று கும்பகோணத்துக்கு வந்தார். அங்கிருந்து ராஜகிரி, நாச்சியார் கோவில், தஞ்சாவூர், பண்டாரவாடை ஆகிய ஊர்களுக்குச் சென்றார். நீடாமங்கலத்தில் எண்ணற்ற தொண்டர்கள் தனக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கேட்டு காந்தியடிகள் அந்த ஊருக்குச் சென்று மக்களிடையில் உரையாடினார். அன்று அக்கூட்டத்தில் பொதுமக்களைவிட அதிக அளவில் மன்னார்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் அங்கே திரண்டிருந்தார்கள்.

     அதற்கான காரணத்தை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் காந்தியடிகள். திலகரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒருநாள் கல்லூரிக்கு விடுப்பு அறிவிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை மன்னார்குடியைச் சேர்ந்த வெஸ்லியன் மிஷன் கல்லூரி ஏற்க மறுத்தது. அது மட்டுமன்றி கல்லூரி முதல்வர் மாணவர்களை நோக்கி தவறான சொற்களைப் பயன்படுத்திப் பேசிவிட்டார். தன் சொற்களை முதல்வர் திரும்பப் பெறவேண்டும்  என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காக நீடாமங்கலம் கூட்டத்துக்கு வந்துவிட்டனர்.

     ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் தம் உரையில் எடுத்துரைத்த காந்தியடிகள் எந்த நிலையிலும் மாணவர்கள் அகிம்சை வழியைவிட்டு விலகிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டினார். பொதுவாழ்வில் இலக்கும் அதை அடையும் வழிமுறையும் ஒருங்கே தூய்மையாக இருக்கவேண்டிய தேவையைப்பற்றி சுருக்கமாகப் பேசினார். அவருடைய உரை மாணவர்களிடம் தேசபக்தியை ஊட்டியது. அன்று காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காகவே, வகுப்பைப் புறக்கணித்துவிட்டு தன்னுடன் படிக்கும் பல மாணவர்களைத் திரட்டி அழைத்துக்கொண்டு நீடாமங்கலத்துக்கு வந்திருந்தார் ஒரு மாணவர். பதினான்கு வயது நிறைந்த அவரிடம் அப்பருவத்திலேயே தலைமைக்குணம் நிறைந்திருந்தது. அன்று காந்தியடிகள் நிகழ்த்திய உரை அவருடைய எண்ணங்களில் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. அவர் பெயர் பாஷ்யம்.

     நீடாமங்கலம் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடைய மனம் மெல்ல மெல்ல சுதந்திரப் போராட்டத்தின் திசையில் திரும்பியது. செய்தித்தாட்களைப் படித்து, நாடெங்கும் நடைபெறும் பல போராட்டச் செய்திகளைப் பற்றி பாஷ்யம் தெரிந்துகொண்டார். அரசின் அடக்குமுறை காரணமாக தேசமெங்கும் பல இடங்களில் தொண்டர்கள் மரணமடையும் செய்திகளையும் பொய்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைதண்டனையை ஏற்று சிறை புகும் செய்திகளையும் கேட்கும் போதெல்லாம் அவர் உள்ளம் கொதித்தது.  அரசு அதிகாரிகளைப் பழிவாங்க வேண்டும் என்றொரு வேகம் பொங்கியது. ஆயினும் எக்காரணத்தை முன்னிட்டும் வன்முறையை வழிமுறையாக வைத்துக்கொள்ளக் கூடாது என்னும் காந்தியடிகளின் சொல் அந்த வேகத்தைத் தணித்தது. தன்னிச்சையான சீற்றத்துக்கும் கொள்கையின் கட்டுப்பாட்டுக்கும் இடையில் அவர் மனம் ஊசலாடியபடியே இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு பட்டப்படிப்புக்காக திருச்சி நேஷனல் கல்லூரியில் இணைந்தார் பாஷ்யம். பட்டம் பெறவேண்டும் என்னும் வேகத்தைவிட, தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்னும் விழைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது. அதனால் திருச்சியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். கதராடைகள் மீது அவருடைய ஆர்வம் பெருகியது. அந்நியத்துணிமணிகளுக்கு எதிரான பிரச்சாரமும் அவரை ஈர்த்தது.

ஒத்துழையாமை இயக்கத்தில் அர்ப்பணிப்புணர்வோடு பங்கேற்ற தலைவர்களில் ஒருவர் லாலா லஜபதிராய். அவர் லாகூரில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் மதச்சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு,  ஆங்கிலக் கல்விக்கு எதிராக  தயானந்த் வேதிக் ஆங்கிலப்பள்ளி என்று பெயரில் பல இடங்களில் பள்ளிகளை உருவாக்கி தேசியக்கல்வியைப் பரவலாக்கினார். ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார். லாகூரில் ஒரு தேசியக் கல்லூரியையும் தொடங்கினார். செளரிசெளரா சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தை  விலக்கிக்கொண்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து காங்கிரஸைவிட்டு கசப்போடு வெளியேறினார் லாலா லஜபதிராய்.

அவர் எழுதிய யுவ இந்தியா (Young India) என்னும் புத்தகத்துக்கு கல்லூரி வட்டாரங்களில் உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. தேச விடுதலையின் மீது நாட்டம் கொண்ட மாணவர்கள் அப்புத்தகத்தை ரகசியமாகப் பெற்று தமக்குள் படித்துப் பரிமாறிக்கொண்டனர். திருச்சி கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பாகப் படிக்கப்பட்ட அப்புத்தகத்தை வாங்கிப் படித்த பாஷ்யம் உணர்ச்சிப் பிழம்பாக மாறினார். அகிம்சைப்பாதையின் மீது அவர் கொண்டிருந்த பற்று சட்டென ஒரு கணத்தில் நழுவிவிட, ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களை வெல்லவேண்டும் என்ற முனைப்பு கூர்மை பெற்றது. இந்தியாவுக்கு இங்கிலாந்து செலுத்தவேண்டிய கடன் (England’s dept to India)  மாண்புமிகு டேவிட் லாய்ட் ஜார்ஜுக்கு ஒரு வெளிப்படையான மடல் (An open Letter to the Right Honourable David Lloyd George)  இந்தியாவின் அரசியல் எதிர்காலம் (The Political future of India) இந்திய தேசியக்கல்வியின் சிக்கல் (The problem of National Education in India) என லாலா லஜபதி ராய் எழுதிய பிற நூல்களையும் பாஷ்யம் தொடர்ச்சியாகத் தேடிப் படித்தார். வீர சாவர்க்கர் எழுதிய 1857 – இந்திய சுதந்திரப்போர் என்னும் புத்தகமும் அவருக்குள் கனலை மூட்டியது. அவர் மனம் காந்தியப் பாதையிலிருந்து விலகத் தொடங்கியது.

இந்திய ஆட்சிமுறையில் அறிமுகப்படுத்தவேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர், ஆட்சியாளர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எட்டுவதற்காக ஜான் சைமன் என்பவரின் தலைமையில் ஏழு பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை 1928இல் ஆங்கிலேய அரசு அமைத்தது. இந்தியர்கள் எவரும் உறுப்பினராக இல்லாத சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கியது. பழைய வேறுபாடுகளை மறந்து போராட்டத்தில்  இறங்கிய லஜபதிராய் லாகூர் நகரில் பெரியதோர் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார். அப்போது காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜேம்ஸ் ஸ்காட் என்பவர் தடியடி நடத்தி ஊர்வலத்தைக் கலைக்க உத்தரவிட்டார். லஜபதிராய் மீது தடியடி விழுந்தது. அதைக் கண்டு மனம் கலங்காத லஜபதிராய்இது என் மீது விழும் அடியல்ல, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்என முழங்கினார். உடனடியாக தொண்டர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆயினும் சிகிச்சை பலனளிக்காமல் 17.11.1928 அன்று லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.  அவருடைய மரணம் தேசமெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அச்செய்தியைப் படித்து மாணவரான பாஷ்யத்தின் மனம் துடித்தது.

சில நாட்களிலேயே திருச்சி நகரிலும் சைமன் குழு எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. எதிர்ப்பு முழக்கங்களோடு லாலா லஜபதிராயின் தியாகத்தை வாழ்த்துகிற முழக்கங்களும் இணைந்துகொண்டன. ஆவேச அலையால் ததும்பிக்கொண்டிருந்த பாஷ்யம் தன்னுடைய கல்லூரி நண்பர்களை மட்டுமன்றி, அருகிலிருந்த மற்ற இரு கல்லூரி மாணவர்களையும் திரட்டி அழைத்துக்கொண்டு ஊர்வலத்துடன் சேர்ந்துகொண்டார். அச்செயலை, மறைந்த தலைவருக்கு தாம் செலுத்தும் மானசிக அஞ்சலியாக அவர் மனம் நினைத்தது. தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத உணர்ச்சிவேகம் அவரை இழுத்துச் சென்றது.

ஆனால் அடுத்தநாள் காலையில் பாஷ்யமும் அவரோடு ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களும் கல்லூரி வாசலிலேயே தடுக்கப்பட்டனர். விசாரணைக்காக அனைவரும் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது சாரநாதன் என்பவர் கல்லூரி முதல்வராக இருந்தார். மாணவர்களின் கல்வி மீது மிகுந்த அக்கறை கொண்டவர். மாணவர்களுடைய குடும்ப விவரங்களனைத்தையும் கேட்ட பிறகு, பெற்றோரின் அரவணைப்பில் படிக்கும் காலத்தில் அரசியல் ஈடுபாடுகள் வேண்டாமென்றும் சொந்தக்காலில் நிற்கும் வயதில் யோசித்து விருப்பமான அரசியலில் ஈடுபடலாமென்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கல்லூரி விதிகளுக்கு உட்பட்டு, எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரண்டு ரூபாய் அபராதம் விதித்தார் முதல்வர். தலைமை தாங்கி அழைத்துச் சென்ற பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார். அபராதத்தொகையைச் செலுத்திவிட்டு மாணவர்கள் அனைவரும் வகுப்புக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் பாஷ்யம் அபராதத்தொகையைச் செலுத்தவில்லை. அவர் முதல்வரைச் சந்தித்து அபராதத்தொகையைச் செலுத்த தன் மனசாட்சி இடம்தரவில்லை என்றும் அபராதத்துக்குப் பதிலாக தனக்குப் பொருத்தமான தண்டனையை வழங்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பாஷ்யத்தின் வேண்டுகோளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் முதல்வர். நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனின் எதிர்காலம் வீணாகிவிடக் கூடாது என்னும் எண்ணம் அவரை வதைத்தது. சில கணங்கள் யோசித்த பிறகு, பாஷ்யத்துக்குப் பதிலாக தானே அபராதத்தொகையைச் செலுத்தி விடுவதாகவும் அவர் வகுப்புக்குச் செல்லலாம் என்றும் சொல்லிவிட்டார். முதல்வர் சொன்ன சொல்லைத் தட்ட இயலாத பாஷ்யம் அந்த அறையிலிருந்து வெளியேறி தன் வகுப்புக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் அடுத்தநாள் முதல் பாஷ்யம் கல்லூரிக்குச் செல்லவில்லை. தேச விடுதலைக்கான போராட்டம் தன்னை அழைப்பதாக அவர் உணர்ந்தார். அதன் பொருட்டு பாடுபடுவதே இனி தன் வாழ்வின் முக்கியமான நோக்கமென அக்கணத்தில் முடிவெடுத்தார். படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வெளியேறுவதென்ற முடிவோடு முதல்வருக்கு ஒரு கடிதத்தை  எழுதி அனுப்பிவைத்தார். அக்கடிதத்தில் தன் முடிவை சுருக்கமாகத் தெரிவித்த பிறகு, கல்லூரியைவிட்டு வெளியேறினார்.

நெருக்கமான நண்பர்களை மட்டும் திருச்சியில் தனக்குத் தெரிந்த ரகசியமான இடங்களுக்கு வரவழைத்தார் பாஷ்யம். அங்கே,  அடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களைப்பற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். இளமையின் வேகத்தில், நடவடிக்கையின் முதல் கட்டமாக சென்னை மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளைக்கார அதிகாரியையும் ஒரு குறிப்பிட்ட நாளில் சுட்டுக் கொன்றுவிட வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. அந்த முடிவை உடனடியாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முதலில் கொலைக்கருவியாக பயன்படுத்த ஒரு துப்பாக்கி வேண்டும்.  பிறகு தொண்டர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கவேண்டும். பயிற்சி பெறுவதற்கு யாருமறியாத இடமும் வேண்டும். இப்படி, தேவைகளைப் பட்டியலிட்ட பிறகு, அவற்றை எப்படி அடைவது என்று யோசனையில் மூழ்கினர்.

பாஷ்யமும் அவருடைய நண்பர் அனந்தராம் என்பவரும் பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்குச் சென்று நான்கு கைத்துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு திரும்பினர். பஞ்சந்தாங்கி பள்ளத்தாக்கில் பெரிதாக ஒரு குடிசையைக் கட்டியெழுப்பி, அதை சந்திக்கும் ரகசிய இடமாக  வைத்துக்கொண்டனர். குடிசைக்குள் காளிதேவியின் புகைப்படத்தை வைத்து வழிபட்டு பாரதமாதாவை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க உயிரைக்கூட கொடுப்போமென அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஏற்கனவே கல்லூரியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த பாஷ்யம் ஒவ்வொரு நாளும் மற்ற நண்பர்களுக்கு துப்பாக்கி பிடித்து சுடும் பயிற்சியை அளித்தார். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்த பயிற்சியின் விளைவாக அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். அவர்களுடைய மன உறுதியும் பெருகியது.

அச்சமயத்தில் பாஷ்யம் மன்னார்குடியில் சிதம்பரம் நகரில் இருந்த தன் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். தற்செயலாக ஒருநாள் செய்தித்தாளில் கவர்னர் துரை மார்ஷ் பாங்ஸ் என்பவர் சிதம்பரம் நகரில் ஒரு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வருகை தரவிருக்கும் செய்தியைப் படித்தார். கவர்னர் கலந்துகொள்ளும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எப்படியாவது அவரைச் சுட்டு வீழ்த்துவது என முடிவெடுத்தார். ஒருகணம் அவருடைய நெஞ்சில் அகிம்சையையே தன் வழியெனக் கொண்ட காந்தியடிகளைப்பற்றிய எண்ணம் வந்து கலக்கமடைய வைத்தது. ஆனால் மறுகணமே அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டார். இந்திய இளைஞர்களின் வீரத்தைப் பற்றி ஆங்கிலேய அரசுக்குப் புரியவைக்க இதைத்தவிர வேறு வழியே இல்லை என நினைத்து மனத்தை அமைதிப்படுத்திக்கொண்டார். நினைத்தபடி கொலைத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்தார்.

குறிப்பிட்ட நாளில், தெரிந்த நண்பரொருவரிடமிருந்து நிகழ்ச்சி அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்குள் எப்படியோ பாஷ்யம் சென்றுவிட்டார். கவர்னர் அமர்ந்திருந்த இருக்கைக்கு வெகு அருகில் சென்று நின்றார். இருவருக்கும் இடையில் ஆறேழு அடி தொலைவு மட்டுமே இருந்தது. குறி பார்த்து சுடுவதற்கு சூழலும் பொருத்தமாகவே இருந்தது. பையிலிருக்கும் துப்பாக்கியைப் பற்றியது அவர் கை. ஆயினும் ஏதோ ஒன்று அத்தருணத்தில் அவரைத் தடுத்தது. அருகில் நின்று அந்த அதிகாரியைப் பார்த்தபடி நின்றிருந்தாரே தவிர, நினைத்தபடி சுடுவதற்கு மனம் வரவில்லை. அதற்குள் கவர்னர் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

தானாக தேடிவந்த வாய்ப்பை நழுவவிட்டதை நினைத்து அவர் குற்ற உணர்ச்சி கொண்டார். அடுத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறவேண்டும் என உறுதிகொண்டார். ஒவ்வொரு பயணத்துக்கும் திட்டமிடலுக்கும் நிறைய பணம் தேவைப்பட்டது. ஆனால் பணத்தை எப்படித் திரட்டுவது என்பது புரியாமல் சோர்வடைந்தனர். அப்போது உடனிருந்த நண்பர்கள் ஏதேனும் வங்கியில் பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று யோசனை சொன்னார்கள். இலக்கு மட்டுமன்றி, அதை அடையும் வழிமுறையும் தூய்மையாக இருத்தல் வேண்டும் என்ற காந்தியடிகளின் சொற்கள் அடிக்கடி நினைவுக்கு வந்து அவரிடம் குற்ற உணர்ச்சியைத் தூண்டியது. ஆயினும் வேறு வழி எதுவும் புலப்படாததால் கொள்ளையடிக்கும் திட்டத்துக்கு பாஷ்யம் உடன்பட்டார்.

அடுத்த நாளே பாஷ்யமும் அவருடைய நண்பர்களும் மதுரைக்குச் சென்று முகாமிட்டனர். பல வங்கிகளுக்குச் சென்று கண்காணித்தனர். நுழையும் வழி, வெளியேறும் வழி அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டனர். வங்கியிலிருந்து பெரிய அளவில் தொகையை  வாங்கிக்கொண்டு செல்கிறவர்களிடமிருந்து வழிப்பறி செய்வதற்கு அவர்கள் செய்த முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை.

சுப்பையர் வங்கி என்பது அக்காலத்தில் இயங்கிவந்த ஒரு தனியார் வங்கி. அந்த வங்கி தன் வரவுசெலவுக் கணக்கை இம்பீரியல் வங்கியில் வைத்திருந்தது. பெருந்தொகையை செலுத்துவதற்காக அல்லது எடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் சுப்பையர் வங்கி ஊழியர் ஒருவர் இம்பீரியல் வங்கிக்கு வந்து செல்வதை நோட்டம் பார்த்து வைத்துக்கொண்டனர்.

ஒருநாள் சுப்பையர் வங்கி ஊழியர் வங்கியிலிருந்து பன்னிரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மிதிவண்டியில் தன் வங்கியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்த பாஷ்யம் குழுவைச் சேர்ந்த இருவர் துப்பாக்கியால் அவருடைய காலில் சுட்டனர். அடிபட்ட ஊழியர் கீழே விழுந்ததும் அவரிடமிருந்த பணத்தை ராமசாமி என்பவர் பிடுங்கி மாரியப்பன் என்பவரிடம் கொடுக்க, அவர் அதை எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினார். ஆனால் பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வெளியே இருந்த பாஷயத்துடைய பெயரையும் மற்ற நண்பர்கள் பெயர்களையும் தெரிவித்துவிட்டனர். வேகமாக அறைக்குத் திரும்பிவந்த பாஷ்யமும் நண்பர்களும் தம் அரசியல் ஈடுபாட்டுக்குச் சாட்சியாக இருக்கக்கூடிய அனைத்துத் தடயங்களையும் அழித்தனர்.  அதிகாலையில் தப்பித்துச் செல்ல இருந்த தருணத்தில் காவலர்கள் வீட்டுக்குத் தேடி வந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு மாத காலம் வழக்கு நடந்தது. ராமசாமிக்கு மட்டும் ஏழாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மீண்டும் காந்திய வழிக்குத் திரும்பிய பாஷ்யம் கதராடை அணிந்து தினமும் இராட்டையில் நூல் நூற்கத் தொடங்கினார். தொடர்ச்சியான கதர்ப்பிரச்சாரமும் அந்நியத்துணி எதிர்ப்பும் கள்ளுக்கடை மறியலும் அரசாங்க வருமானத்தை கணிசமான அளவில் குறைந்தது. பல மாவட்டங்களில் கள்ளுக்கடைகளை ஏலத்தில் எடுப்பவர்கள் இருந்தபோதும், கடைகளில் விற்பனை சரிந்தது. சில இடங்களில் கள்ளுக்கடைகளை ஏலத்தில் எடுக்கக்கூட ஆளில்லை. பொதுமக்களில் கணிசமான விழுக்காட்டினர் கதராடைகளை விருப்பத்துடன் அணியத் தொடங்கினர். கடைகளில் நேரடியான விற்பனை குறைந்தது.  வெளிநாட்டிலிருந்து வந்த சரக்குகள் விற்கப்படாமல் தேங்கின. இவையனைத்தும் நகரெங்கும் காந்தியர்கள் முன்னின்று நடத்திய  தொடர்போராட்டங்களின் விளைவு என்பதை அனைவரும் கண்கூடாகக் கண்டனர். 

தொடர்ச்சியான பிரச்சாரத்தின் வழியாக காந்தியடிகள் அரசாங்க வருமானத்தை கணிசமான அளவில் குறைத்துவிட்டார் என்பதை அரசு உணர்ந்துகொண்டது. அதையடுத்து 12.03.1930 அன்று காந்தியடிகள் தொடங்கிய உப்பு சத்தியாகிரகம் நாட்டு மக்களிடையில் சுதந்திர உணர்வை ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டது.  தண்டிக்கு அருகில் ஆட் கடற்கரையில் ஒரு பிடி உப்பை அள்ளிக்கொண்டு கையை உயர்த்திய காந்தியடிகள்ஒரு சத்தியாகிரகியின் கையில் இருக்கிற உப்பு இந்தத் தேசத்தின் கெளரவம். நம் உயிரே போனாலும் நம் கை தாழ்ந்துவிடக் கூடாதுஎன்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, அதுவரை எவ்வகையிலான போராட்டத்திலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தவர்களைக் கூட போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியது. காந்தியடிகளும் மற்றும் பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல சுற்றுகளாக நிகழ்ந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு காந்தியடிகளுக்கும் வைசிராயாக இருந்த இர்வினுக்கும் இடையில் 05.03.1931 அன்று ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. சட்டமறுப்புப் போராட்டத்தைக் கைவிடவும் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளவும் இந்திய தேசிய காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. உப்பு சத்தியாகிரகத்தில் கைதான அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவும் உப்புவரியை ரத்து செய்யவும், இந்தியர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட அனுமதியும் கள்ளுக்கடைகளின் முன்பும் வெளிநாட்டுத்துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பும் மறியல் செய்ய அனுமதியும் காங்கிரஸின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அவசரகால சட்டங்களை விலக்கிக்கொள்ளவும் போராட்ட காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சத்தியாகிரகிகளின் சொத்துகளைத் திருப்பியளிக்கவும் அரசு ஒப்புக்கொண்டது.

அப்போது பாஷ்யம் சென்னைக்கு வந்து தன் மற்றொரு சகோதரர் இல்லத்தில் தங்கினார். காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து அந்நியத்துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பு நின்று மறியலில் ஈடுபடுவதை தன் தினசரிக்கடமையென வகுத்துக்கொண்டார். கடைக்கு துணிவாங்க வருபவர்களை கைகுவித்து வணங்கி நிறுத்திஅந்நியத்துணிகளை தயவுசெய்து வாங்காதீர்கள். அதன் மூலம் அந்நியர் ஆட்சியை வலிமையடையச் செய்துவிடாதீர்கள்என்று வேண்டுகோள் விடுத்தார். கடைகளின் உரிமையாளர்கள் பாஷ்யத்தின் முகத்திலும் மற்ற தொண்டர்களின் முகத்திலும் வெற்றிலை பாக்கு எச்சிலை சீற்றத்துடன் காறி உமிழ்ந்தனர்.  மேலும் புகைத்துக்கொண்டிருக்கும் சிகரெட் துண்டுகளை நெருப்புக்கங்குடன் முகத்தின் மீது வீசினார்கள். எதற்கும் மனம் கலங்காமல் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டார் பாஷ்யம். ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஒரு கள்ளுக்கடையின் முன்பு நின்று மறியலில் ஈடுபட்டிருந்த போது ஒரு கடைக்காரர் சீற்றத்துடன் ஒரு கள்ளுப்பானையைத் தூக்கி பாஷ்யத்தின் தலையிலேயே அடித்து உடைத்தார். அப்போதும் எதிர்த்தாக்குதலில் ஈடுபடாமல் பாஷ்யம் தம் வழியில் மறியல் குரலை எழுப்புவதிலேயே மூழ்கியிருந்தார்.

லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இர்வின் பதவியிலிருந்து விலகிவிட, வெலிங்க்டன் புதிய வைசிராயாக பதவியேற்றார். இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார். காங்கிரஸின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. நாடெங்கும் நிலவிய அடக்குமுறையைப் பார்த்து மனவேதனையுற்றார். சுதந்திரம் கிடைத்துவிடும் என்று துளிர்த்த நம்பிக்கை கண்முன்னாலேயே சிதைவதை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  இரு ஆண்டுகளுக்கு முன்பாக லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேரு அறிவித்த பூரண சுயராஜ்ஜிய அறிவிப்பை அவர் மனம் அசைபோட்டது. அந்த ஆண்டின் இறுதிநாளில் லாகூரில் நேருவே முன்னின்று இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றிய செய்தியைப்பற்றிய நினைவு அவருக்குள் ஒருவித எழுச்சியை ஊட்டியது. நேரு அறிவித்த ஜனவரி 26 ஆம் நாளில் அவர் நினைத்ததுபோலவே  சென்னை கோட்டையில் 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் மூவண்ணக்கொடியை பட்டொளி வீசி பறக்கவிடச் செய்யவேண்டும் என முடிவெடுத்தார்.

வேறெந்த சிந்தனைக்கும் மனத்தில் இடம் கொடுக்காமல் தன் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்கிற ஒற்றை எண்ணத்திலேயே மூழ்கினார் பாஷ்யம். ஒரு வார காலம் கோட்டையையும் கொடிக்கம்பம் இருக்குமிடத்தையும் சுற்றியலைந்து, அதன் உச்சியை அடைவதற்கான வழிமுறையை வகுத்துக்கொண்டார். தன் திட்டத்துக்கு உதவியாக  சடகோபன், ஸ்ரீபாதசங்கர் ஆகிய இரு நண்பர்களையும் சேர்த்துக்கொண்டார். அவர் நினைத்த நீள அகலத்தில் கொடி கிடைக்காததால் ஒரு பெரிய கதர் வேட்டியை வாங்கிவந்து, வீட்டிலேயே வண்ணம் திட்டி கொடியாக மாற்றினார். கொடியின் கீழ்ப்பகுதியில்இன்றுமுதல் இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறதுஎன பெரிய எழுத்துகளில் எழுதினார். கம்பத்தில் கட்டுவதற்குத் தோதாக உறுதியான நாடாவையும் தைத்துக்கொண்டார். 25.01.1932 அன்று இரவு கவிந்ததும் மூவண்ணக் கொடியை மடித்து இடுப்பில் சுற்றிக்கொண்டு, அதன் மீது சேவாதளத் தொண்டர்கள் அணியும் காக்கி உடைகளை அணிந்துகொண்டார். ஒரே ஒரு நண்பரை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு இரவு 9.30க்குத் தொடங்கும் திரைப்படக்காட்சிக்குச் சென்றார்கள். படம் நள்ளிரவில் முடிந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நடந்து இருவரும் கோட்டையின் பக்கம் சென்றனர். நண்பரை இருளில் மறைந்திருக்கச் செய்துவிட்டு, பாஷ்யம் மட்டும் இருளில் மறைந்து கொடிக்கம்பத்தை நெருங்கினார். எங்கும் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு வயர்லெஸ் கம்பத்தின் இரும்பு ஏணியில் அடிவைத்து மெல்ல மெல்ல ஏறத் தொடங்கினார். சிறிது தொலைவில் சுழன்றுகொண்டிருந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சக்கற்றைகளின் வீச்சிலிருந்து தப்பி ஏறி எப்படியோ உச்சியை அடைந்து கொடியைக் கட்டி பறக்கவைத்தார். பிறகு மெதுவாக இறங்கிவந்து, நண்பரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். 26.01.1932 அன்று அதிகாலையில்,  ஆங்கிலக் கோட்டையின் கொடிக்கம்பத்தில் மூவண்ணக்கொடி பறக்கும் அதிசயத்தை நகரத்து மக்கள் அனைவரும் கூடிக்கூடிப் பார்த்தனர். கோட்டைக்கு காவலாக இருந்த ராணுவ வீரர்கள் பதற்றமடைந்து கொடியைக் கட்டிவிட்டுச் சென்றவரைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

தன் சாகச முயற்சியின் விளைவுகளை நேருக்குநேர் கண்ட பாஷ்யத்தின் நெஞ்சில் மீண்டும் சாகச எண்ணங்கள் உருவாகி, அவரை திசைமாற்றி அழைத்துச் சென்றன. அவர் உடனே தன் அறையை மாற்றிக்கொண்டு புதிய இடத்துக்குக் குடிபுகுந்தார். அங்கே தங்கியபடி சின்னச்சின்ன பெட்டிகளைத் தயார் செய்தார். அப்பெட்டிக்குள், கசிந்து வெளியேறிப் பரவியதும் நெருப்பு பிடிக்கும் வகையில் வெடிமருந்தை நிரப்பினார். அப்போது ஜார்ஜ் டவுன் பகுதியில் அந்நியத்துணிகளை விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடைக்குச் சென்று, ஒருவருமறியாமல் துணியடுக்குகளுக்கு நடுவில் பெட்டியை மறைத்துவிட்டு வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டார். அவர் வெளியேறிச் சென்ற சிறிது நேரத்துக்குள் கடையில் இருக்கும் துணிகள் எரிந்து சாம்பலாகிவிடும்.

பாஷ்யத்தின் துணிவை அறிந்த அமீன் ஹைதர்கான் என்னும் கம்யூனிசத்தொண்டர், தனக்குத் தேவையான சில உதவிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார் அவர். பாஷ்யமும் அவர் கேட்ட எல்லா உதவிகளையும் செய்தார். எதிர்பாராத விதமாக அமீர் ஹைதர்கானை காவல்துறை கைது செய்தபோது, பாஷ்யத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

விடுதலை பெற்ற பாஷ்யம் வன்முறைப் பாதையைத் துறந்து, மீண்டும் காந்திய நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு பணியாற்றினார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கியதும் அவரும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் அமைதியின்மை நிலவியது. அச்சூழலில் பாஷ்யம் தன்னையறியாத வேகத்தோடு மறுபடியும் சாகசப்பணிகளில் ஈடுபடத்தொடங்கினார்.   அடையாளம் தெரியாத ஏதோ ஒரு விசை காலமெல்லாம் பாஷ்யத்தை அகிம்சைவழிக்கும் சாகசவழிக்கும் மாறிமாறி செலுத்தியபடி இருந்தது. நண்பர்களைத் திரட்டிக்கொண்டு யாருமறியா இரவு வேளைகளில் தந்திக்கம்பிகளைத் துண்டித்தார். தண்டவாளங்களைத் தகர்த்து ரயில் சேவை நிற்கும்படி செய்தார். பல முக்கியமான பாலங்களை வெடிவைத்து தகர்த்தார்.

எதிர்பாராத விதமாக அவரை ஏதோ ஒரு வழக்கில் தொடர்புப்படுத்தி காவல்துறை அவரை கைது செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது. கொடுமையான சிறையனுபவத்தால் அவருடைய உடல் தளர்ந்தது. ஆயினும் மனம் தளரவில்லை. ஒவ்வொரு நாளும்ஜயமுண்டு பயமில்லை மனமேஎன பாரதியார் பாடலைப் பாடி மன உறுதியைத் திரட்டிக்கொண்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகிலிருந்த அறையொன்றில் அடைப்பதற்காக மகாவீர் சிங் என்னும் தேசபக்தர் அழைத்துவருவதைப் பார்த்தார். அவர் கைதிகளுக்குரிய குல்லாயை அணிய மறுப்பதையும் அலுவலர்கள் அவரை வற்புறுத்துவதையும் கண்டார். அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உயரதிகாரியான ஜெனரல் இன்ஸ் என்பவரே சிறைக்கூடத்துக்கு வந்தார். அவருடைய உத்தரவுக்கும் மகாவீர் சிங் அடிபணிய மறுத்தார். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த இன்ஸ் அவருக்கு அக்கணமே முப்பது கசையடிகள் கொடுக்க உத்தரவிட்டார். அங்கிருந்த மற்ற கைதிகளும் பார்க்கும் வகையில் கைகால்கல் கட்டப்பட்டு அவருக்கு கசையடி கொடுக்கப்பட்டது.  அதைப் பார்த்து பாஷ்யத்தின் மனம் பொங்கியது. அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்தார்.

தக்க தருணத்துக்காக காத்திருந்தார் பாஷ்யம். ஒருநாள் கழிப்பறைக்குச் செல்வதற்காக அலுவலர் கைவிலங்குகளைக் கழற்றியதும் அவர் கழிப்பறைக்குச் சென்றார். பிறகு திட்டமிட்டபடி எதிர்பாராத கணத்தில் வெளியே வந்து அங்கிருந்த அதிகாரி இன்ஸ் மீது புலியெனப் பாய்ந்து கீழே தள்ளிமகாவீர் சிங்கை அடித்ததற்கு இது தண்டனைஎன்று சொல்லிக்கொண்டே தான் அணிந்திருந்த செருப்பாலேயே அவர் தலையில் அடித்தார். அக்கம்பக்கத்தில் நின்றிருந்த அலுவலர்கள் ஓடி வந்து விலக்கும் வரையில் அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.  அடுத்த நிமிடமே அவர் கைகால்கள் விலங்கிடப்பட்டு அறைக்குள் அடைக்கப்பட்டார். அவர் உடலெங்கும் கசையடிகள் வரிவரியாக விழுந்தன. சதை பிய்த்துக்கொண்டு ரத்தம் சொட்டியபோதும்வந்தே மாதரம் வந்தே மாதரம்என முழங்கியபடி எல்லா வலியையும் தாங்கிக்கொண்டார். அன்று விழுந்த கசையடிகளின் வடு அவர் உயிருடன் இருந்தவரை மறையவே இல்லை.

09.08.1942 அன்று சிறையிலடைக்கப்பட்ட காந்தியடிகள் 06.05.1944 அன்று உடல்நலம் குன்றிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார். உடல்நலம் தேறியதும் 29.06.1944 அன்று பூனாவில் பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் தோன்றி, நாடெங்கும் நிகழ்ந்த கணக்கற்ற வன்முறைகளைக் கண்டு துயருறுவதாகத் தெரிவித்தார்.  மக்களிடையே அகிம்சைத் தத்துவத்தின் மீதான பற்று உறுதிப்படும் வகையில் உழைக்காமல் போனதற்காக தான் வருந்துவதாகவும் கலக்கத்துடன் சொன்னார். அந்த உரையைக் கேட்டு பாஷ்யம் மீண்டும் மனம் கலங்கினார். தான் ஈடுபட்ட வன்முறைச் செயல்களை நினைத்து பெரிதும் வருந்தினார். இனி எவ்விதமான வன்முறைகளிலும் ஈடுபடுவதில்லை என மனத்துக்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.

அன்றுமுதல் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றுவதை மட்டுமே தம் வாழ்நாள் பணியெனக் கொண்டார் பாஷ்யம். ஒருவரும் எதிர்பாரத விதமாக, அவர் ஓவியம் தீட்டத் தொடங்கினார். ஓவியங்களுக்காகவே ஆர்யா என்னும் புனைபெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டிக்கொண்டார். பத்திரிகைகளுக்கு அரசியல் கருத்துப்படங்களையும் கதைகளுக்கான படங்களையும் வரைந்து கொடுத்தார். அவர் தீட்டிய ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் வரைந்த பாரதியார், நேதாஜி, காந்தியடிகள் படங்களை நாடே புகழ்ந்தது. ஓவியத்தைத் தொடர்ந்து சிற்பக்கலையிலும் பாஷ்யம் தேர்ச்சி பெற்று விளங்கினார். அவர் வடித்த காந்தியடிகளின் சிற்பத்தை உலகமே பாராட்டியது.

சரியான திசையில் கப்பலைச் செலுத்தும் சுக்கானைப்போல சத்தியமும் அகிம்சையும் மனத்தை இயக்குகின்றன. அந்த ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வது மட்டுமே அமைதிக்கான வழி.  அந்த உண்மையைத் தன் சொந்த அனுபவங்கள் வழியாக கற்றுக்கொண்டவர் ஆர்யா என்னும் பாஷ்யம்.

 

(சர்வோதயம் மலர்கிறது – நவம்பர் 2021)