Home

Monday, 15 November 2021

மனிதர்களின் சித்திரத்தொகுப்பு - கட்டுரை

   

     ஒரு தொன்மக்கதை. முன்னொரு காலத்தில் ஒரு சிற்பி வாழ்ந்துவந்தார். வளர்ந்து இளைஞனான அவருடைய மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றித் திரிவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கடுமையான சொற்களால் அவனைக் கண்டித்தபோது, இளைஞன் வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். ஏதோ ஆத்திரத்தில் அவனை வெளியேற்றிவிட்டாலும் அவருடைய மனம் அவனை எண்ணி உருகியபடியே இருக்கிறது. அவன் பிரிந்துசென்ற துயரத்தை நெஞ்சில் சுமந்தபடி அலைந்த அவருக்கு சிற்பவேலைகளில் ஓய்வின்றி ஈடுபடுவது மட்டுமே ஆறுதலளிப்பதாக உள்ளது.

காலம் உருண்டோடினாலும் அவருடைய துயரம் கரையவில்லை. ஒருநாள் அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு குன்றில் சிற்பங்களைச் செதுக்கத் தொடங்குகிறார். அதே சமயத்தில் அந்தக் குன்றின் பள்ளத்தாக்கில் தாழ்வான பகுதியில் வேறொரு சிற்பியும் ஒரு சிற்பத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கிறான். ஒருவர் செதுக்குவதை இன்னொருவர் உணராமலேயே சிற்பங்கள் வளர்ந்துவருகின்றன. ஒருநாள் மூத்த சிற்பி இளைப்பாறுவதற்காக செதுக்கும் வேலையை நிறுத்திவிட்டு வெற்றிலை போட மரத்தடியில் அமர்கிறார். அப்போதுதான் கீழேயிருந்து உளிச்சத்தம் எழுவதை அவர் மனம் அறிகிறது. உடனே வேகவேகமாக பள்ளத்தாக்கில் இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்கிறார். தனக்குத் தெரியாமல் தான் சிற்பம் செதுக்கும் பகுதியில் தன்னைச் சீண்டுவதற்காகவே யாரோ ஒருவர் வந்து சிற்பம் செதுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற எண்ணத்தால் அவர் நடை விசைகொண்டதாக மாறுகிறது.  

அருகில் நெருங்கி ஆள் நின்றிருப்பதை உறுதிசெய்துகொண்ட கணத்திலேயே, அவன் யார் என்று தெரிந்துகொள்ளக்கூட முயற்சி செய்யாமல் கையில் இருந்த உளியை அவனை நோக்கி வீசுகிறார். அது அந்த இளைய சிற்பியின் கழுத்தில் ஆழமாக இறங்கிவிட, அக்கணமே அவன் அப்பா என்ற அலறலோடு கீழே சாய்கிறான். அப்போதுதான் அவன் முகத்தை அவர் பார்க்கிறார். அவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற தன் மகனே அந்த இளைய சிற்பி என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து புலம்பத் தொடங்குகிறார். அவன் அங்கே செதுக்கிவைத்த ஒற்றைக்கல் கோபுரத்தையும் சிற்பங்களையும் பார்த்து திகைத்து நின்றுவிடுகிறார். எவ்வளவு பெரிய தவறை இழைத்துவிட்டோம் என நினைத்து உருகி உருகி அழுகிறார். திருநெல்வேலிச் சீமையில் கழுகுமலையை ஒட்டியிருக்கும் வெட்டுவான்கோவில் குன்றோரத்தில் காணப்படும் முற்றுப்பெறாத சிற்பத்துக்குப் பின்னணியில் இந்தத் துயரமான அப்பா-மகன் கதை மறைந்துள்ளது.

ஒரு வரலாற்றுச் செய்தி. அருட்பணியாற்றுவதற்காக லண்டனிலிருந்து 1843இல் நெல்லைச்சீமைக்கு வந்த மருத்துவர் ஒருவர் ஊரிலிருக்கும் தன் இளைய சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் நெல்லைவாழ் பெண்களின் நிலையைப்பற்றி ஆதங்கத்துடன் சில தகவல்களைத் தெரிவிக்கிறார். படிப்பறிவில்லாதவர்களாக அவர்கள் வாழ்வதைப் பார்த்த தன் துயரத்தை சகோதரியுடன் பகிர்ந்துகொள்கிறார். அந்தச் சகோதரியின் பெயர் சாராள் டக்கர். அந்த மருத்துவரின் பெயர் ஜான் டக்கர்.

மாற்றுத்திறனாளியான அச்சகோதரி ஒரு பள்ளி மாணவி. இந்தியாவில் பெண்கள் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்னும் செய்தியே அவளைத் திகைக்கவைக்கிறது. அவள் மனம் அக்கணமே நெல்லைச்சீமையில் பெண்களுக்காகவே ஒரு பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று உறுதிகொள்கிறது. அவளும் அவள் தோழிகளும் சேர்ந்து இருபது சவரன் தங்கத்தைத் திரட்டி நன்கொடையாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு மருத்துவர்  அந்த ஊரில் சிறுமிகள் படிக்கும் வகையில் ஒரு பள்ளியைத் தொடங்குகிறார்.

பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பள்ளி இயங்கியது. பிறகு போதிய பணவசதியின்றி அதை மூடவேண்டிய நிலை உருவானது. தன் சகோதரரின் கடிதம் சுமந்துவந்த அச்செய்தியைப் படித்துவிட்டு சாராள் டக்கர் வேதனையில் மூழ்குகிறாள். எதிர்பாராத உடல்நலக்குறைவால் அவளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயம் அது. இந்தியா என்னும் பெயரை வரைபடத்தில் பார்த்ததைத்தவிர, இந்தியாவைப்பற்றி வேறு எந்தச் செய்தியும் அறியாத அந்த இளம்பெண்ணின் மனம் மூடப்பட்ட அந்தப் பள்ளியை எப்படியாவது தொடர்ந்து நடத்தவேண்டும்   என்று தவியாய்த்தவிக்கிறது. அந்தத் தவிப்பிலேயே அவள் உயிர் பிரிந்துவிடுகிறது.

அவள் அடக்கம் செய்யப்படும் நாளில் அவளுடைய தோழிகளும் இரு மூத்த சகோதரிகளும் சாராளின் பள்ளிக்கனவை நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுக்கிறார்கள். நகர் முழுதும் அலைந்து பலரைச் சந்தித்து நிதி திரட்டுகிறார்கள். ஏறத்தாழ எண்ணூறு பவுனுக்கு மேல் திரண்டுவிட்ட நிதியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கிறார்கள். 1861இல் பள்ளிக்காக நிலம் வாங்கப்பட்டு கட்டுமான வேலை தொடங்கியது. சாராள் டக்கர் பெயரிலேயே முதலில் தொடக்கப்பள்ளி உருவானது. முப்பதாண்டு வளர்ச்சிக்குப் பிறகு அது உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அது கல்லூரியாகவும் வளர்ந்தது. தென்னிந்தியாவிலேயே பெண்களுக்காக முதன்முதலாக ஒரு கல்வி நிலையம் நெல்லைச்சீமையில் உருவான வரலாற்றின் பின்னணியில் சாராள் டக்கரின் கருணையும் தியாகமும் கரைந்துள்ளன.

அந்தப் பள்ளியின் முதல்வராக பணிபுரிந்தவர் ஆஸ்க்வித் என்னும் அருட்பணியாளர். ஒருநாள் பள்ளிக்கூட வளாகத்தின் பக்கம் தட்டுத்தடுமாறி வந்து நின்று வேலை கேட்டுக் கெஞ்சிய பார்வையற்ற சிறுவனுக்கு அவர் அடைக்கலம் அளிக்கிறார். அச்சிறுவனுக்கு கல்வியின் மீது இருக்கும் ஆர்வம் அவருக்கு புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்வையில்லாதவனுக்கு எப்படி கல்வியை அளிப்பது என்ற யோசனையில் மூழ்கிவிடுகிறார். இதற்காகவே அவர் லண்டனுக்குச் செல்கிறார். மூன் என்னும் மருத்துவருடன் இணைந்து புதிய எழுத்து முறைகளை உருவாக்குகிறார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்த பிறகு அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கிறது. சாராள் டக்கர் கல்வி நிலைய வளாகத்திலேயே பார்வையற்றோர் பள்ளியை அவர் உருவாக்குகிறார். அப்பள்ளியின் உருவாக்கத்துக்குக் காரணமான சிறுவன் அப்பள்ளியில் படித்து, வளர்ந்து பட்டம் பெற்று அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து சேவையாற்றினார்.

மற்றொரு வரலாற்றுச் செய்தி. தஞ்சையில் வாழ்ந்த மராட்டிய பிராமண வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் கோகிலா. அந்த ஊர் திவானின் மனைவி. குடும்ப வழக்கப்படி கணவன் மறைந்ததும் அவளை உடன்கட்டை ஏறுவதற்குச் சம்மதிக்கவைத்துவிடுகிறார்கள் அவள்  உறவினர்கள். குழந்தைப்பருவத்திலிருந்து அவளை வளர்த்த பெண்மணி, அந்த வட்டாரத்தைச் சேர்ந்த லிட்டில்டன் என்னும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து புகாரளித்து கோகிலாவைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறாள். உடன்கட்டைக்கு ஏற்பாடுகள் நடைபெறும் இடத்துக்கு விரைந்து சென்ற லிட்டில்டன் சின்னச்சின்ன தீக்காயங்களோடு அவளைக் காப்பாற்றிவிடுகிறார். பிறகு தன் மாளிக்கைக்கே அவளை அழைத்துச் சென்று தக்க மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்து பிழைக்கவைக்கிறார்.  தனிவீட்டில் கோகிலாவைத் தங்கவைத்து பாதுகாப்பளித்த லிட்டில்டன் அவளுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்கிறார். அவளிடமிருந்து அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையிலிருந்து நெல்லைக்கு மாற்றலாகி புறப்படும்போது கோகிலாவையும் தன்னோடு அழைத்துக்கொண்டு வருகிறார் லிட்டில்டன். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்குகிறார்கள். அங்கே அவருக்குப் புதிய வாழ்க்கை தொடங்குகிறது. கோகிலா என்ற பெயரை கிளாரிந்தா என்று மாற்றிக்கொள்கிறார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் கல்வியறிவைப் புகட்டுவதற்காக முதலில் அவர் தன் பெயரிலேயே ஒரு பள்ளியை உருவாக்குகிறார். பிராட்டஸ்டண்டு சித்தாந்தங்களை நன்கு கற்றறிந்த அவர் 1783இல் ஒரு அழகான தேவாலயத்தைக் கட்டத் தொடங்கி இரண்டாண்டுகளில் கட்டிமுடித்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பாளையங்கோட்டை தெற்குப் பகுதியில் இரு கிணறுகளை வெட்டினார். ‘பாப்பாத்தியம்மாள் கிணறுஎன்ற அடைமொழியோடு அவை இன்றளவும் மக்கள் நாவில் திகழ்கின்றன.  கால்டுவெல் தன் நூலில் அளித்துள்ள இந்தியக் கிறித்துவர்களின் பெயர்ப்பட்டியலில் முதல் பெயராக கிளாரிந்தாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

இன்னுமொரு வரலாற்றுச் செய்தி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாளையங்கோட்டை. ஒருபக்கமாகவும் திருநெல்வேலி மறுபக்கமாகவும் பிரிந்திருக்க இடையில் தாமிரபரணி நதி கரைபுரண்டு ஓடியது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல மக்கள் பரிசில்களையே சார்ந்திருந்தனர். ஆனால் பரிசில் பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. உயர்சாதி மக்கள் அமர்ந்திருக்கும் பரிசிலில் தாழ்ந்த சாதி மக்களால் அமர்ந்து செல்லமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் தீராத சாதிச்சண்டைகள். அப்போது ஆட்சியராக இருந்தவர் தாம்சன் என்னும் ஆங்கிலேயர். அவருடைய அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தவர் சுலோச்சனா முதலியார்.  ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு வந்து குவியும் புகார்களில் இந்தச் சாதிச்சண்டை புகார்களே அதிகம்.

இந்த மோதல்களுக்கு ஒரு முடிவை உருவாக்க நினைத்த ஆட்சியர் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் நீண்டதொரு பாலத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தை வகுத்தார்.  பொருத்தமான பொறியாளரைக் கொண்டு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செலவுத்தொகை கணக்கிடப்பட்டது. பொருத்தமான தீர்வைக் கண்டறிந்த ஆட்சியர் அச்செலவுத்தொகையை ஈட்டுவதற்கான வழியை மட்டும் பொருத்தமில்லாத வகையில் வகுத்தார். மக்கள் மீது புதிய வரிகளை விதித்து வசூலாகும் தொகையை வைத்து அச்செலவை ஈடுகட்ட நினைத்தார்.

முதலியாருக்கு அந்தத் திட்டம் ஏற்புடையதாகப் படவில்லை. அன்று இரவே தன் மனைவியிடம் இதைப்பற்றி உரையாடி மொத்த செலவையும் தானே ஏற்பதாகவும் அதற்காக தன் சொத்துகளை விற்றுத் தருவதாகவும் தெரிவித்தார். முதலியாரின் கருணையைக் கண்டு ஆட்சியர் மகிழ்ந்தார். பாலத்தின் கட்டுமானத்திட்டக் கோப்பைத் திறந்து, முதலியாரின் திட்டத்தை ஏற்பதாகவும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அப்பாலத்துக்கு முதலியார் பெயரையே சூட்டவேண்டும் என்றும் குறிப்பெழுதி கையெழுத்திட்டார். பாலத்தை கட்டி முடித்த சமயத்தில் தாம்சன் இடமாற்றலில் வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். புதிய்வர் ஒருவர் பதவி ஏற்றிருந்தார். ஆயினும் தாம்சன் எழுதிய குறிப்பின்படியே பாலத்துக்கு சுலோச்சனா முதலியார் பாலம் என்றே பெயர்சூட்டப்பட்டது. இன்றளவும் பயன்பாட்டில் உள்ள அப்பாலம் ஒரு கோணத்தில் மாபெரும் கருணையின் அடையாளம். இன்னொரு கோணத்தில் அகற்றமுடியாத அளவுக்கு மனிதமனத்தில் மண்டிக்கிடக்கும் சாதியுணர்வை நினைவூட்டும் புள்ளி.

வாய்வழித் தகவல்களாகவும் நூல்வழித் தகவல்களாகவும் திரட்டப்பட்ட ஏராளமான வரலாற்றுச் செய்திகளை ஒருங்கே தொகுத்து நூலாக்கியிருக்கிறார் நாறும்பூநாதன். ’திருநெல்வேலி நீர்நிலம்மனிதர்கள்என பொருத்தமாகவே தலைப்பைச் சூட்டியிருக்கிறார். அந்தக் கால நெல்லைச்சீமையைப்பற்றிய சித்திரத்தை இந்த நூலை வாசித்த பிறகு நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

இந்தப் புத்தகத்தில் நாற்பத்தொன்று அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புனைகதையைப் படிக்கும் சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. எகிப்திலிருந்து மரக்கலங்கள் வழியாக கொச்சி துறைமுகத்துக்கு வந்து, அங்கிருந்து காயல்பட்டினத்தை நோக்கி நடைப்பயணமாகத் தொடங்கி தென்தமிழகத்துக்குள் இறங்கி, களைப்பின் காரணமாக தாமிரபரணிக் கரையோரமாக மங்காநல்லூரில் தங்கி, பிறகு அங்கேயே நிலைத்து வாழத் தொடங்கிய இஸ்லாமியர்களின் வாழ்க்கைவரலாற்றைப் படிக்கும்போது ஒரு நாவலின் சுருக்கத்தைப் படித்ததுபோல இருக்கிறது.

ஒரு அத்தியாயத்தில் வீடுகளை விற்றுவிட்டு  பிழைப்பைத் தேடி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் இந்து குடும்பத்தினர் பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கிறது. அந்த வீடுகளை வாங்கிய இஸ்லாமிய மக்களிடம் தம்முடைய பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்கவேண்டும் என்னும்  வாக்குறுதியை வாங்கிக்கொண்ட பிறகே அவர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். இன்றைய தலைமுறை வரைக்கும் இஸ்லாமியர் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றிவருகிறார்கள் என்னும் செய்தி நல்லிணக்கம் நாடும் மனத்துக்கு மிகவும் ஆறுதலாகவும் நம்பிக்கையின் அடையாளமாகவும் இருக்கிறது.

தனிமனிதர்கள் தன் நினைவுகள் வழியாக எழுதும் ஊர்வரலாறுகள் நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ளன. அது அவர்கள் அறிந்துவைத்திருக்கும் எண்ணற்ற மனிதர்களின் சித்திரத்தொகுப்பாக அமைந்திருப்பதுதான் முக்கியமான காரணம். நாறும்பூநாதன் எழுதியிருக்கும் திருநெல்வேலி வரலாறு   நமக்குக் கிடைத்திருக்கும் அபூர்வச் சித்திரங்களின் தொகுப்பு.  ஒரு படைப்பாளியின் மனம் இயங்கும் விதத்தை ஒருவராலும்  அறுதியிட்டுச் சொல்லமுடியாது. அது ஒரு புயல்காற்று போல. தானாகவே உருவாகி, தானாகவே வீசி, தானாகவே அடங்கி ஓய்ந்துவிடும். சாத்தான்குளம் ராகவனுடைய புத்தகத்துக்கு இசக்கி அண்ணாச்சி அட்டைப்படம் வரைந்துகொடுத்ததைப்பற்றி இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகுறிப்பே இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு. நாள்கணக்காக தாமதப்படுத்திய ஓர் ஓவியத்தை நள்ளிரவில் நாலுமணி நேரத்தில் வரைந்துமுடித்துக் கொடுத்து அனுப்பிவிடுகிறார் அண்ணாச்சி. அக்கணத்தில் எங்கிருந்தோ ஒரு ஆற்றல் அவருக்குள் செயற்பட்டு அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டது. அந்த ஆற்றலின் வருகைக்காகவே அவர் அத்தனை நாட்கள் காத்திருந்தார் போலும்..   இசக்கி அண்ணாச்சியை அன்று ஓவியம் தீட்டவைத்த அதே ஆற்றலே, ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாக நெல்லைச்சீமையைச் சுற்றிச்சுற்றி வந்த நாறும்பூநாதனை இந்த வரலாற்றை எழுத வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

 

( திருநெல்வேலி : நீர்நிலம்மனிதர்கள்.  இரா.நாறும்பூநாதன். சந்தியா பதிப்பகம். 53வது தெரு, 9வது அவென்யு. அசோக் நகர், சென்னை -83. விலை ரூ.270)

 

(புக்டே இணையதளத்தில் 13.11.2021 அன்று வெளிவந்த கட்டுரை)