Home

Monday, 15 November 2021

செடி - சிறுகதை

 காலை வெளிச்சத்தில் குலுங்கிக் கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.

சின்ன உறுமலோடு வாசலில் ஒரு வேன் வந்து நின்றபோது எங்கள் கவனம் திரும்பியது. மஞ்சள் நிற வேன். டிரைவர் இறங்கி வந்தார்.

‘‘ஆளுங்க கிடைக்கலை. அதான் நேரமாயிடுச்சு.’’

அப்பாவை நெருங்கித் தணிந்த குரலில் சொன்னார் டிரைவர். ‘‘சரி சரி, சீக்கிரம் ஆவட்டும்’’ என்றார் அப்பா. ஆள்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார். பிள்ளைகளை அவசரமாய் அப்பாவின் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஆள்களுக்கு ஒத்தாசை செய்ய உள்ளே நுழையப் போனேன். ‘‘அதெல்லாம் அவுங்க பாத்துக்குவாங்க’’ என்று அப்பா தோள்களைப் பற்றித் தடுத்தார்.

நான் திண்ணையில் உட்கார்ந்தேன். கல் திண்ணையில் ஜில்லிப்பு உடம்பில் தொற்றிக்கொண்டது. அப்பாவிடம் இருந்த பிள்ளைகள் என் அருகில் வந்தார்கள். ‘‘மாமா, நாமளும் வண்டியிலேயே போறமா?’’ என்று கேட்டான் பையன். நான் மெதுவாகத் தலையசைத்தேன். ‘‘இல்லம்மா சாமானுங்க மட்டுந்தான் வண்டியில் போவும். நாம பஸ்லிலே போவலாம்’’ என்றேன்.

அவர்களை ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டேன் நான்.

அதிர்ச்சியும் குழப்பமும் என் மனசை அடைந்திருந்தன. நடந்து போன எதையும் நம்ப முடியவில்லை. மனசைப் பிடுங்கி வேறு எதிலாவது பொருத்தினாலும் மறுபடியும் பழைய நினைவுகள் மிதந்தெழுந்து வந்து கவ்வின. அப்பாவின் பார்வை அலமாரியில் படிந்திருந்தது. அவர் முகம் சிவந்து இறுகுவது தெரிந்தது. உதடுகளைக் கடித்தபடி வேறுபுறம் திரும்புவதும் தெரிந்தது.

அப்பாவை நெருங்கி ஏதாவது ஆறுதல் சொல்லவேண்டும் என்று தோன்றியது. உண்மையில் என்னாலும் பேச முடியவில்லை. உடைந்துவிடும்போல இருந்தது மனம்.

பத்தாண்டுகளுக்கும் முன்னால் இதே வாசலில் நண்பகல் நேரத்தில் நானும் அப்பாவும் இறங்கினோம். வண்டி நிறையச் சாமான்கள் இருந்தன. கட்டில், படுக்கை, அலமாரிகள், மின் விசிறி, குளிர்சாதனைப் பெட்டி, தொலைக்காட்சிப்பெட்டி, தட்டு முட்டுச் சமாமான்கள். அக்காவும் மாமாவும் வேறு வண்டியில் வந்து இறங்கினார்கள்.

அக்காவின் கன்னங்களில் சந்தோஷம் பூசி இருந்தது. நிமிடத்துக்கொருதரம் மாமாவைக் கூப்பிட்டபடி கூடத்துக்கு வந்தாள். மறுதரம் தானிருக்கும் அறைக்கு மாமாவைக் கூப்பிட்டாள். நானும் அப்பாவும் புதுச் சாமான்களை அடுக்குவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தோம். அக்காவின் சந்தோஷம் எங்களிடமும் ஒட்டிக்கொண்டிருந்தது. எங்களைப் பார்க்கும்போதெல்லாம் அக்கா கூச்சத்தில் முகம் சிவந்தாள். நாங்கள் புறப்படும்போது அக்காவிடம் ஓர் ஏக்கம் கலந்த குதூகலமிருந்தது. கிளர்ச்சி படர்ந்த கண்கள். சிரிப்பு, திரும்பத் திரும்பக் காதோரம் கூந்தலை ஒதுக்கிக்கொண்டிருந்தாள். எனக்கு அவள் கன்னத்தைத் திருகவேண்டும் போல இருந்தது.

தெருமுனை வரை சென்று திரும்பிப் பார்த்தேன். வாசல் படலையொட்டி அக்கா இன்னும் நின்றிருந்தாள். அவள் காதில் குனிந்து மாமா என்னவோ சொல்லும் தோற்றம் அதே கணம் அவர் மார்பில் அவள் சாய்ந்துவிடும் தோற்றம்.

கூலியாள்கள் வேகவேகமாய்ப் பொருள்களைத் தூக்கிச் சென்று வைத்துக்கொண்டிருந்தார்கள். ஆன்டெனாவைக் கழற்றும் பொருட்டு ஒருவன் மாடிப் பக்கம் சென்றான். அக்கா மாமாவின் உருவங்கள் என்னைச் சுற்றிச்சுற்றி அலைந்தன. அவள் சிரிப்பொலி அறைக்குள்ளிருந்து கேட்டதுபோல இருந்தது.

டிரைவர் தள்ளி நின்று புகைத்துக்கொண்டிருந்தார். வீட்டு ஓனர் வேன் ஓரமாக ஒதுங்கி வந்து அப்பாவின் அருகில் நின்றார். கையிலிருந்து பத்திரத்தையும் காகித உறையையும் அப்பாவிடம் நீட்டினார். அப்பா வாங்கி என்னிடம் கொடுத்தார்.

‘‘எண்ணிப் பார்த்துக்குங்க சார்! இருபதாயிரம் இருக்குது. அட்வான்ஸா கொடுத்த பணம்.’’

அப்பா எதையும் பேசவில்லை. சோகமான சிரிப்பொன்று அவர் முகத்தில் எழுந்தது. மனசுக்குள் தேங்கிய வேதனையின் விம்மல்.

அக்காவுக்கு முப்பத்தைந்து வயது தான் இருக்கும் என்னைவிட ஐந்து வயது பெரியவள். அவளுடைய நீண்ட கைவிரல்களை மறக்கவேமுடியாது. என் வயதிற்கு எந்தப் பெண்ணின் கையிலும் அவ்வளவு நீண்ட விரல்களைப் பார்த்ததில்லை. மெத்தென்று சதைப்பிடிப்பானவை. பூக்காரி முழம் அளந்தால் அவள் அதை சாண்அளப்பாள். ஊரிலிருந்த வரை நித்தமும் எங்களுக்குள் மோதல் வரும் அடுத்த கணமே சரியாகிவிடும். மீன்களைத் துண்டு செய்து கழுவும் போது அவளுடைய நீண்ட கையில் பத்துப் பதினைந்து துண்டுகளும் அடங்கி விடும். அவள் மீன் குழம்பு வைத்தால் சொட்டு கூட மிச்சமின்றி ஒரே வேளையில் தீர்ந்து போகும். அவ்வளவு ருசி. அதன் வாசம் எந்த மூக்கையும் இழுத்து விடும்.

விரட்டிவிரட்டி என் தலையில் எண்ணெய் தேய்த்து விட்டதும், மாலைச் சாப்பாட்டுக்குப் பிறகு வேப்ப மரத்தடியில் ஸ்டூல் போட்டுக் கொண்டு நாங்கள் கேரம் போர்டு ஆடியதும், முதல் முதலில் மீசையை ஒதுக்கிக்கொண்டு வந்த நாளன்று என்ன பெரிய கட்டபொம்மன்னு நினைப்பா? என்று இழுத்து இழுத்துக் கிண்டல் செய்ததும், பத்து வார்த்தை பேசுவதற்குள் இருபது முறை உரிமையோடு டாபோட்டுப் பேசியதுமாக அக்காவின் நடவடிக்கை ஒவ்வொன்றும் மனசில் மிதந்து மிதந்து எழுந்தன.

குடும்ப வாழ்வில் அவள் அவ்வளவு திருப்தியாக இல்லை. எப்போதும் ஏதாவது பிரச்சினை. அவளுடைய ஆரம்ப சந்தோஷம் படிப்படியாகக் குலைந்து சிதையத் தொடங்கி விட்டது. மாமாவின் நடவடிக்கை சரியில்லை என்று அவள் சொன்னாள். சிறிதும் சகிப்புத்தன்மை அற்றவள் என்று மாமா குறை சொன்னார். பரஸ்பரம் சுமத்திக்கொண்ட குற்றங்கள் ஏராளம். சிறிய பொறியைக்கூட இருவருமே ஊதிஊதிப் பெரிதாக்கி நெருப்பு மூட்டிக்கொண்டார்கள். கசப்புக்கு அது மட்டுமே போதுமானதாக இருந்தது. என் சமீப வருகைகளில் அவள் அழாத நாளே இல்லை. அவள் கண்களில் கண்ணீர் என்பது நம்ப முடியாத கோலம்.

அவள் அழுவதைக் காணச் சகிக்காமல் தான் நான் இந்த ஊருக்கு வருவதையே நிறுத்தி இருந்தேன். அவளை நினைத்த போதெல்லாம் அந்த அழுகைதான் ஞாபகத்துக்கு வந்து இம்சை கொடுத்தது. போன் வந்தது. மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திக் கொண்டாள். பெங்களூரிலிருந்து பஸ் பிடித்து வருவதற்குள் உயிர் பிரிந்துவிட்டிருந்தது. பாண்டிச்சேரியிலிருந்து அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மா மார்பில் அறைந்து கொண்டு அழுதாள். இரண்டு பிள்ளைகளும் துக்கம் தாளாமல் குமுறிக்குமுறி அழுதார்கள். வெளியில் அழும் மாமாவைப் போலீஸ் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அவள் வாழ்ந்த வீடு மௌனத்தில் உறைந்திருந்தது.

மரக்கட்டிலை வெளியே எடுக்க முடியவில்லை. கதவின் அகலம் போதவில்லை. ஆள்கள் கையைப் பிசைந்துகொண்டு வந்து சொன்னார்கள். அப்பா என்னை உள்ளே அனுப்பினார். பின்னாலேயே பிள்ளைகள் வேடிக்கை பார்க்க ஓடி வந்தார்கள். கால் வேறு, சட்டம் வேறாக அவற்றைப் பிரித்துக் கொடுத்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு அவற்றைப் பூட்டியதும் என் கைகள் தான். ஒரு கணம் என் மனம் அதிர்ந்தது. அவர்கள் எடுத்துச் சென்றதை வெறித்தபடி நின்றேன்.

வீட்டு ஓனர் என்னை வெளியே வருமாறு சைகையால் கூப்பிட்டார்.

‘‘பேங்க் அக்ளெண்ட்ஸலாம் இருந்துச்சே, செட்டில் செய்தாச்சா?’’

‘‘எல்லாத்துக்கும் டெத் சர்டிபிகேட் கேட்கறாங்க. கார்பரேஷன்ல கொஞ்சம் சிக்கலா இருக்குது. அடுத்த வாரம் வரச் சொல்லி இருக்காங்க. அது வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பாக்கணும்.’’

சோபா நாற்காலிகளைத் தொடர்ந்து சமையல் பாத்திரங்களும் தட்டுமுட்டுச் சாமான்களும் ஏற்றப்பட்டன. அதன் பிறகு பையனின் சைக்கிள், பழைய விளையாட்டுச் சாமான்கள். பழைய நடைவண்டி தொட்டில், பல்லாங்குழி, பொம்மைகள், ரயில். குத்துவிளக்குகள். சாமி படங்கள், மனைப் பலகைகள். புத்தகப்பைகள். எல்லாமே ஒவ்வொரு தருணத்தில் அப்பாவும் நானும் பரிசாகத் தந்தவை.

அக்காவின் மரணம் எங்களை முற்றிலும் குலைத்திருந்தது. தவறு யார் பக்கம், சரி யார் பக்கம் என்றெல்லாம் யோசிக்கிற மனநிலையில் இல்லை. அழகான பூச்செடி மாதிரி இருந்தவளே கருகிச் சாம்பலாகி விட்ட பிறகு மற்றவற்றையெல்லாம் யோசித்து என்ன ஆகப் போகிறது என்று கசப்பில் திளைத்திருந்தோம்.

மூன்றாவது நாள் இரவில் மாமாவைக் காணவில்லை. தாமதமாக வரக்கூடும் என்று நாங்களும் தேடவில்லை. அந்த நேரத்தில்தான் சுடுகாட்டுக்கு அருகில் ஒரு மரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு விட்டார் அவர் என்று காலையில் தகவல் கிடைத்துப் போய்ப் பார்த்தபோது உயிர் பிரிந்து விட்டிருந்தது. மூன்று நாள்களின் இடைவெளிக்குள் சிறுவன் இரண்டாம் முறையாகக் கொள்ளி வைத்தான்.

காற்றின் வேகம் திடுமென அதிகமானபோது செடிகள் வளைந்துவளைந்து நிமிர்ந்தன. பூக்களோடு பூக்கள் உரசின. அக்காவுக்கு மிகவும் பிடித்த பூ அது. அலைந்து அலைந்து அவள் வைத்துக்கொள்வதைப் பார்த்தால் நூறு செடிகளில் பூக்கிற பூவைக்கூட அவள் ஒருத்தியே வைத்துக் கொள்வாள் என்று தோன்றும். கல்யாணத்துக்குப் பிறகு நான் வந்திருந்த தருணமொன்றில் ‘‘இந்த ஊரில் கனகாம்பரமே கிடைக்கலடா. கிடைச்சாலும் முழம் பூவுக்கு ஆனை விலை சொல்றான். அம்மாகிட்ட சொல்லி நம்ம தோட்டத்திலேருந்து நாலு செடி பிடுங்கி வாடா’’ என்று ஒருமுறை என்னிடம் சொல்லியனுப்பிளான். ஏதோ ஞாபகத்தில் இரண்டு முறை மறந்து போனேன். உண்மையிலேயே, அவளுக்குக் கோபம்தான். ஆனால், எதையும் காட்டிக்கொள்ளாமல், ‘‘சரி சரி... அடுத்த முறையாவது மறக்காம எடுத்தாடா’’ என்றாள். அடுத்த முறை கொண்டுபோய்க் கொடுத்தேன். அந்த வாடகை வீட்டின் ஒரு புறத்தில் அக்கா ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்கிவிட்டாள்.

சின்னப் பையன் திடுமென செடிகளுக்கு நடுவில் இறங்கி உள்ளே செல்லத் தொடங்கினான். அவசரமாய் அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் பெண். ‘‘செடியை மிதிக்காதடா. இங்கேயே நில்லு’’ என்றாள். அந்த டாகுரல். என் உடல் ஒரு முறை நடுங்கிச் சிலிர்த்தது.

எல்லாச் சாமான்களையும் ஏற்றி விட்டார்கள். ஆள்கள் கதவை மூடி விட்டுக் கயிற்றைச் சுற்றிக் கட்டினார்கள்.

வீட்டு ஓனர் அப்பாவோடு பேசிக் கொண்டே வீட்டுக்குள் ஒருமுறை உள்ளே போய் வந்தார். அக்கா, மாமா, பிள்ளைகளின் படங்கள் கொண்ட கட்டை, அப்பா எடுத்து வண்டியின் முன் பக்கத்தில் வைத்தார். மூடப்பட்ட காகிதக் கிழிசலில் மேலாக இருந்த படத்தில் அக்காவின் திருமணக் கோலம் தெரிந்தது.

‘‘நீங்க எப்ப வேணா வரலாம். எத்தனை நாளு வேணா தங்கலாம். உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்க. ஏதோ நம்ம நேரம் தான். இப்படி ஆயிடுச்சு. அதுக்காக அதையே நினைச்சு உருகாம ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்க.’’

ஓனர் சொன்னார். அப்பாவைவிட வயதில் பெரியவர். அப்பாவின் தோளைத் தொட்டுச் சொன்னார். அப்பாவின் கண்களில் ஈரம் பனித்தது.

‘‘பிள்ளைங்களை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க.’’

அப்பா தலையசைத்துக்கொண்டார். பிள்ளைகள் கைகளையசைத்து விடைபெற்றுக் கொண்டார்கள். ஓனர் வீட்டு அம்மா வந்து நின்றார்.

பிள்ளைகள் என் முகத்தைப் பார்த்து விட்டு ஓடினார்கள். நான் சூட்கேஸ்களைத் தயார் செய்தேன்.

‘‘சரி, நீங்க கிளம்புங்க. அட்ரஸ் சீட்டு பத்திரம். பஸ் ஸ்டாண்டுகிட்ட போய் மாரியம்மன் கோயில் தெரு எங்கேன்னு கேட்டா யார் வேணுமின்னாலும் காட்டிடுவாங்க. நாங்க பஸ்ல வந்துடறோம்.’’

அப்பா டிரைவரிடம் கூறினார்.

‘‘எல்லாருமே இதிலேயே போகலாம் சார்! தைரியமா முன்னால் உக்காருங்க. உங்களமாதிரி இன்னும் நாலு பேர் ஏத்துவோம் தெரியுங்களா?...’’

‘‘வேணாம்பா...’’

‘‘த்ச்... சொன்னக் கேளுங்க சார்! கூட்டமா போனா ஏதாச்சும் பேசிகிட்டே போயிடலாம்.’’

நாங்கள் தயங்கும் போதே எங்கள் பெட்டிகளை எடுத்து கேபினுக்குள் வைத்துக் கொண்டான். கூலி ஆள்களுக்குப் பணத்தைத் தந்து விட்டுக் கம்பியைப்பற்றி உள்ளே ஏறி வந்தார் அப்பா.

பிள்ளைகள் ஓடி வந்தார்கள். மீண்டும் ஓனரிடம் சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த வீட்டுப் பிள்ளைகள்கூட வந்து வாசலில் நின்றுகொண்டு எட்டிப் பார்த்தார்கள். எல்லாரையும் பார்த்துப் பையன் சிரித்துத் தலையசைத்துக் கையசைத்தான். இளம் செடி ஒன்றைப் பிடுங்கிக்கொண்டு நிமிர்ந்தாள் பெண்.

‘‘வேணுமாம்மா?...’’

ஓனர் உள்ளே சென்று ஒரு தாளைக் கொண்டு வந்து வேரோடும் மண்ணோடும் சுற்றித் தந்தார். குனியும் போது அவள் தலையைத் தடவி உச்சியில் முத்தமிட்டார் அவர். லேசாக அவர் கண்கள் பனித்தன. அவளைத் தூக்கி வண்டிக்குள் அனுப்பினார். எல்லாரும் கேபினுக்குள் உட்கார்ந்து கொண்டோம்.

சிறிது நேரம் உறுமி விட்டு வண்டி புறப்பட்டது. மெல்ல மெல்ல எங்கள் பார்வையில் இருந்து மறைந்தது வீடு. நெடுநேரம் வண்டிக்குள் எந்தப் பேச்சும் இல்லாமல் இருந்தது. மௌனம். யாராவது பேச மாட்டார்களா என்றிருந்தது.

‘‘அம்மாவுக்கு இந்தப் பூன்னா ரொம்ப இஷ்டம் மாமா!’’

அந்தப் பெண் நிமிர்ந்து பார்த்தாள். ஒப்புக்கொள்ளும் தொனியில் தலையசைப்போடு அவளது தலையைத் தொட்டேன் நான். மௌனத்தை மேலும் இறுக வைத்து விட்டது அவள் வார்த்தை.

அவள் கையில் ஏந்தி இருந்த செடி, ஜன்னல் வழியே வந்த காற்றில் அழகாகக் குலுங்கிக்கொண்டிருந்தது.

(அமுதசுரபி -1996)