சினிமாவுக்காக எதையும் செய்யத் தயங்காத எங்கள் ஊர்க்காரர்களை நினைத்தால் இப்போதும் உடம்பு சிலிர்க்கிறது. இரண்டு டாக்கீஸ்கள் ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருந்த காலம் அது. நடையாய் நடந்து வந்து சினிமா பார்க்கிற அடுத்த ஊர்க்காரன் எல்லாம் “இந்த ஊரு கெட்ட கேட்டுக்கு ரெண்டா” என்று வயிறு எரிந்தார்கள். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பத்துப் பதினைந்து கிராமங்களிலும் இதே பேச்சாய் இருப்பதை நானே காதாரக் கேட்டிருக்கிறேன்.
அப்போது பிரபாத் டாக்கீஸ்
நிர்வாகத்தில் பிரச்சாரக்காரனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எட்டாவதில் மூன்று
முறை தோற்ற பிறகு பள்ளிக் கூடத்தைத் துறந்து டாக்கீஸ் வேலையில் ஆசையோடு
சேர்ந்திருந்தேன். என் அபிமான நடிகரின் படங்களையே வரிசையாய் வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டிருந்தது
பிரபாத் டாக்கீஸ். அப்படங்களின் புகழையும் உயிருக்குயிரான நடிகரின் திறமையையும் மைக்கில்
பிரசாரம் செய்வதே என் இளமையின் லட்சியமாகவும் பாக்கியமாகவும் கருதிக்
கொண்டிருந்தேன். எனக்குத் துணையாக எங்கள் ஊரில் ஒரு பெரிய கூட்டமே இருந்தது.
கூட்டமாய் உட்கார்ந்து எங்கள் ஆதர்ச புருஷனைப்பற்றி வாயாரப் பேசுவது இன்பமான
அனுபவம். எங்கள் நடை, சிரிப்பு, சிகையமைப்பு, உடை
எல்லாவற்றிலும் எங்கள் நடிகரின் சாயலைப் படாத பாடு பட்டுக் கொண்டுவந்தோம். எங்கள்
ஒவ்வொரு அசைவிலும் எங்கள் நடிகரின் ஜீவனைக் கரைத்து வெளிப்படுத்துவதில் இருந்த
ஆனந்தத்தை வேறு எதிலும் கண்டதில்லை. இருப்பது ஒரு உயிர், ஒரு வாழ்க்கை. அதில்
ஒரே ஒரு கணமாவது எங்கள் நடிகரைப் போல வாழ்ந்துவிட்டுக் குதூகலத்துடன் சாகக்கூடத்
தயாராய் இருந்தோம்.
எங்களுக்கு
வயிற்றெரிச்சலைக் கிளப்பவென்றே குப்புசாமி இருந்தான். “எங்க ஆள்
கால்தூசு பெறமாட்டான்டா ஒங்க கெழவன்” என்று எங்களுக்கு ஆத்திரத்தை மூட்டிவிட்டுச் சிரிப்பான்.
அவன் சிரிப்பு எங்கள் ரத்தத்தைச் சூடாக்கும். அவன் இன்னொரு நடிகனை ஆராதிப்பவன்.
அந்த நடிகரின் படங்களை எங்களுக்குப் போட்டியாய் வெளியிடுவதையே லட்சியமாய்க்
கொண்டிருந்த சரவணா டாக்கீஸ் பிரச்சாரக்காரன் அவன்.
“யார் பெரியவர்” என்கிற கேள்வி எங்கள் நெஞ்சை அரித்துக்கொண்டே இருக்கும்.
குப்புசாமியின் வாதங்களை சாமர்த்தியமாய் முறியடித்துவிடுவேன். அவனையும் அவன்
கூட்டத்தையும் திக்குமுக்காடச் செய்யும் என நினைத்து நான் முன் வைத்த கேள்விகளைச்
சுலபமாய்ச் சமாளித்து விடுவான் அவன். சண்டை மூண்டு விட்டால் வயிற்றைக்
கிழிப்பதுபோல தலையாலேயே முட்டும் சுபாவம் கொண்டவன் அவன். “அவனும் மாடு.
அவன் ஆளும் மாடு” என்று
சொல்லிவிட்டு ஓடிவிடுவோம் நாங்கள்.
எனக்கும் அவனுக்குமான
தீராத பகையும் கசப்பும் என் தூக்கத்தைக் கெடுத்தன. என் நடிகரின் ஜெயக்கொடியை
நாட்டுவதற்கு அவனே பெருந்தடையாக இருப்பதாய் நினைத்தேன். அவனோ அல்லது நானோ இருவரில்
ஒருவரே உயிரோடு இருக்க வேண்டும் என்று முடிவு கட்டுவேன். தினம், தினம் வாதங்களில்
செத்து மடிவதைக் காட்டிலும் ஒரு உயர்ந்த லட்சியத்துக்காக உயிரைத் தியாகம் செய்வது
சந்தோஷமானது. “என் தலைவனைப்
பழித்தவனைத் தாய் தடுத்தும் விடமாட்டேன்” என்று எத்தனையோ படங்களில் எங்கள் நட்சத்திரம் பேசிய வசனம்
என் நெஞ்சில் ஊற்றுப் போலப் பெருகி ஓடும்.
வெள்ளிக் கிழமைதான் படம்
மாற்றும் நாள். அன்று மதியம் 12 மணி வரைக்கும் என்ன படம் என்று முடிவாகவில்லை. பெட்டிக்காக
வெளியூர் போன முதலாளி வரவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் எங்கள் உடல் சூடு
ஏறிக்கொண்டிருந்தது. வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு பிரசாரத்திற்குச் செல்லக்
காத்திருந்தேன். சரவணாவில் ஏற்கெனவே படத்தை அறிவித்து விட்டிருந்தார்கள். வழக்கம்
போல எங்கள் எதிர் நடிகரின் படம். நிமிஷத்துக்கு நிமிஷம் எங்கள் படபடப்பு
அதிகமாகியது. சாப்பிடக்கூடப் போகவில்லை. பரிகாசத்துக்கு உள்ளாகி விடுவோமோ என்கிற
பதட்டம் கூடியது. நல்ல வேளை அப்படி எதுவும் ஆகவில்லை. மூன்று மணி அளவில்
டாக்ஸியில் வந்து இறங்கினார் முதலாளி. அவர் முகத்தில் சோர்வையும் மீறி
வெற்றிக்களை. படப் பெட்டியையே கொண்டுவந்து விட்டர்ர். நாங்கள் வராதா வராதா என்று
மாசக் கணக்கில் ஏங்கிக் கொண்டிருந்த படம் கடைசியாய் வந்தே விட்டது. எழுந்து ஆடாத
குறைதான். அவ்வளவு சந்தோஷம். ‘சரவணா’ காரனுக்கு சரியான போட்டி.
அவசரமாய்ப் போஸ்டர்களைத்
தட்டியில் ஒட்டிக்கொண்டு வண்டியைப் பூட்டினேன். நாலு ஆள்கள் பசை வாளிகளோடும்
போஸ்டர் கட்டுகளோடும் நாலு திசைக்கும் ஓடினார்கள். டாக்கீஸிலிருந்தே என்
முழக்கத்தை ஆரம்பித்துவிட்டேன். கிராம போன் இரண்டு வரி பாடும். அடுத்து என்
பேச்சு. என் குரலால் நடிகரே பேசினார். குடிசைகளிலிருந்து வெளியே வந்த பெண்கள்
ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்தார்கள். ‘அச்சு அசல் அவர் மாதிரியே இருக்குடி.’ பிள்ளைகள் எங்கள்
பின்னாலேயே ஓடிவந்தார்கள். என் ஒவ்வொரு வசனத்துக்கும் கை தட்டல். நான்
உருகிக்கொண்டிருந்தேன்.
முதல் நாள் இரண்டு
காட்சிகளையும் பார்த்தேன். வீட்டுக்குத் திரும்ப மனசே இல்லை. ஒரு வாரம் ஓடியது
தெரியவில்லை.
வெற்றிகரமான இரண்டாவது
வாரத் தொடக்கம். அன்றைய பிரச்சாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டேன். என் நடிகரின்
பாணியில் பேண்டும் சட்டையும் அணிந்திருந்தேன். புதுசாக நான் அணிந்திருந்த ஒரு
கருப்புக் கண்ணாடி அவரைப் போலவே எனக்கும் கம்பீரத்தைத் தந்தது. சாலைச்
சந்திப்புகளில் வண்டியை நிறுத்தி பாடலை முடுக்கிவிட்டேன். வரிகளுக்குத் தகுந்தபடி
வாயசைத்து நான் செய்த நடன அசைவுகள் எல்லாரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிவிட்டது.
கவர்ச்சியான விளம்பர முறை ஊருக்குள் பரபரப்பாகியது.
குப்புசாமி கும்பல்
எங்களைத் திகைப்போடு பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்து நக்கலாய்ச்
சிரித்துக்கொண்டோம். ஆனால் வாயைத் திறக்கவில்லை. அடுத்த நாள் ‘சரவணா’ விளம்பர வண்டியில்
சிவன் வேஷத்தோடு ஒருவன் இறங்கினான். கையில் சூலத்தோடு நட்ட நடுத்தெருவில் சிவ
தாண்டவம் ஆடினான். ‘இதெல்லாம் ஒரு
ஆட்டமா’ என்று அலட்சியமாய்
சிரித்தோம் நாங்கள். கும்பல் எங்களை முறைத்துப் பார்த்தது.
முதல் வார வெற்றியைக்
கொண்டாடும் வகையில் என்ன செய்யலாம் என்று நானும் வீரப்பனும் ஆலோசித்தோம். சோமுவும்
முனியனும் கூட இருந்தார்கள். நோட்டீஸ் ஒட்டலாம் என்றான் சோமு. வெற்றிவிழாத் தட்டி
எழுதிவைக்கலாம் என்றான் முனியன். அதெல்லாம் நாங்கள் வழக்கம்போல் செய்வதுதான்.
புதுசாக, ஊரே காணாததாக
இருக்கவேண்டும் என்று மூளையைக் கசக்கி, கடைசியில் பாண்டிச்சேரியில் வைக்கிற மாதிரி ஆள் உயர
கட்அவுட் வைக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால் புதிதாக ஒரு இடத்தில் சொல்லிச் செய்யவைக்க
அவகாசம் இல்லை. உடனடியாக வேண்டும். என்ன செய்வது என்று குழம்பினோம். ஊரில் ‘மன்றம்’ நடத்திக்
கொண்டிருந்த வீரப்பன் தன் செல்வாக்கால் பாண்டிச்சேரியிலிருந்து அரை நாளுக்குள்
கொண்டு வருவதாய்ச் சொன்ன பிறகுதான் மனசே சமாதானமானது.
அடுத்த நாள் காலையிலேயே
வீரப்பன் பாண்டிச்சேரிக்குக் கிளம்பிப் போய்விட்டான். நாங்கள் செய்தியை ரகசியமாய்
வைத்திருந்தோம். நேரம் மெல்லமெல்லக் கரைந்து கொண்டிருந்தது. பாண்டிச்சேரி
திசையிலிருந்து வரும் ஒவ்வொரு வண்டியையும் பார்த்துப்பார்த்து ஏமாந்தோம்.
கடைசியில் மதிய நேரம் ஆள்கள் வழியவழிய வந்துகொண்டிருந்த நடன ராணி பஸ்ஸில் வீரப்பன்
வெற்றிப் புன்னகையோடு வந்து சேர்ந்தான். இறங்கும் போதே பஸ் உச்சியைக்
காட்டிக்கொண்டே இறங்கினான். சோமு தாவி மேலே ஏறினான். கயிறுகளை அவசரமாய் அவிழ்த்து
கட்அவுட்டைப் பக்கவாட்டில் இறக்கினான். நாங்கள் கீழே சுற்றி நின்று வாட்டமாய்ப்
பிடித்து மெல்ல இறக்கி மரத்தில் சாய்த்து நிறுத்தினோம். எங்கள் நடிகரின்
பிரமாண்டமான உருவம், அந்த முகக்
கவர்ச்சி, புன்சிரிப்பு, சிவந்த உதடு, கன்னம், அரும்பு மீசை, அப்படியே கட்டிப்
பிடித்து முத்தம் தரலாம் போல இருந்தது. எங்கள் கூட்டமே சேர்ந்து சுமந்தது. ஊரில்
பிரதான சந்திப்புக்கு அருகில் வந்தோம். பார்வைக்கு எடுப்பாக மரத்திற்கும்
கம்பத்திற்குமிடையே முட்டுக்கொடுத்து. நிற்கவைத்துக் கட்டினோம். அதற்குள் பெரிய
ரோஜா மாலை வந்துவிட்டது. வீரப்பனிடமிருந்து வாங்கி நான் கட்அவுட்டின் கழுத்தில்
சூட்டினேன். கை தட்டலில் ஊரே அதிர்ந்தது.
எங்கள் எதிர் அணிக்காரர்கள்
முகம் தொங்க நடப்பதைக் கண்டு வெற்றிப் புன்னகை செய்தோம். குப்புசாமியை நேருக்கு
நேர் பார்த்து, என் நடிகரின்
பாணியில் இடுப்பில் கைவைத்து, “பார்த்துக் கொள்ளடா அசடா” என்றேன். திருவிழாவுக்கு வந்து போகிற மாதிரி
ஆண்களும் பெண்களும் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போலப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
காரில் வந்து பார்த்த எங்கள் ‘பிரபாத்’ முதலாளி இன்னொரு பெரிய ரோஜா மாலையை வாங்கித் தந்துவிட்டுப்
போனார். ‘சரவணா’காரர்கள் எவ்வளவோ பாடுபட்டும் கூட ஒரு கட் அவுட்டைக் கொண்டு
வர இயலவில்லை. தோற்று விட்டோமோ என்கிற கவலை அவர்களுக்கு உள்ளூர இருந்தது. இரண்டு
நாள்களுக்கு ஒருவனும் தெருப்பக்கம் நடமாடவில்லை. மூன்றாம் நாள் போஸ்டரில் இருந்த
அவர்கள் நடிகரின் படத்தையே நறுக்கி அட்டையில் ஒட்டி எங்கள் கம்பத்துக்கு
எதிர்க்கம்பத்தில் கட்டி மாலை போட்டார்கள். எங்களுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ‘மலை எங்கே மடு
எங்கே?’ என்று பாட்டுப்
பாடினோம்.
அடுத்த நாள் காலை
எங்களுக்கு அதிர்ச்சி தரும் சங்கதி காத்திருந்தது. காலையில் டீ குடிக்க சத்திரம்
பக்கம் போய் வந்த சோமுதான் திரும்ப வந்து படபடப்புடன் என்னை எழுப்பிவிட்டுச்
சொன்னான். நான் வீரப்பனை எழுப்பிக் கொண்டு ஓடினேன். எங்கள் ஆள்கள் பின்னால்
ஓடிவந்தார்கள். எங்கள் எல்லா போஸ்டர்களிலும் சாணம் அடிக்கப்பட்டிருந்தது. அநேகமாய்
எல்லாத் தெருக்களையும் சுற்றி வந்தோம். எங்கள் நடிகரின் முகத்தைச் சிதைத்திருந்தார்கள்.
எங்கும் சாணம். ‘அட கோழைகளா’ என்று பல்லைக்
கடித்தபடி கடைத்தெருவுக்கு வந்தோம். கட்அவுட்டிலும் சாணம். ஒரே அதிர்ச்சி.
கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தேன் நான். எதிர்பாராத விதமாய் குப்புசாமியின்
கூட்டத்தைச் சேர்ந்தவன் எதிரே வந்ததைப் பார்த்து ஓடிப்போய் பிடித்துக்கொண்டேன்.
திமிறி ஓட முயன்றவனை இடுப்பிலேயே உதைத்து மடக்கினேன். ஒரு படத்தில் எங்கள் நடிகர்
இதே விதத்தில்தான் எதிரியை உதைத்து மடக்கி விசாரிக்க ஆரம்பிக்கும் காட்சி மனசில்
விரிந்தது.
“சொல்லுடா, யாரு செஞ்சது?”
“எனக்குத் தெரியாது.”
“சொல்லலே, ஒடம்புத் தோல உரிச்சிடுவேன்.”
மீண்டும் அடிக்கப்
போனேன். வீரப்பன் தடுத்தான். என் பிடியிலிருந்து அவனை விடுவித்தான். “எதுக்குத்
தடுக்கற? அவன் சாவணும்” என்றான் ஒருவன். “எங்க ரத்தம் கொதிக்குது” என்றான் இன்னொருவன்.
“அவசரம் வேணாம். கோழை மாதிரி அவனுங்க இருட்டுல செஞ்சி இருக்கானுங்க.
நாம தைரியசாலிங்க. பட்டப் பகலிலேயே அந்த வேலையைச் செய்வோம் வாங்க. எவனுக்கு வீரம்
இருக்குதோ வந்து தடுக்கட்டும்.”
இதுவும் சரியான திட்டம்
என்று தோன்றியது. உடனே வாளிகளில் சாணியைக் கரைத்துக்கொண்டு கிளம்பினோம்.
கண்ணுக்கு அகப்பட்ட அவர்கள் போஸ்டர்களில் எல்லாம்
சாணத்தால் நிரப்பிக்கொண்டிருந்தோம். ஒரு கொசு கூட எங்களைத் தடுக்கவில்லை. ‘ராவுகாலத்துல
பொறந்ததுங்க. ஒன்னாவது இந்தத் தெருவுல உருப்படியா இருக்குதா பாரு’ என்று முணுமுணுத்த பெரியவரை முறைத்துப் பார்த்தோம். திரும்பி
நழுவிவிட்டார் அவர். வாளிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று எங்கள் நடிகர்
படங்களையெல்லாம் கழுவினோம். கட்அவுட்டைக் கழுவுவதற்கு ராமு மேலே ஏறினான். நான்
தண்ணீரை மொண்டு கீழிந்தபடி ஊற்றினேன். அவன் கைகளால் தேய்த்துக் கழுவினான்.
இறங்கும்போது தடுமாறி விட சட்டென கீழே விழுந்து விட்டான். நாங்கள் எதிர்பாராத
சம்பவம் அது. தொடையில் அடி. வீங்கத் தொடங்கி விட்டது. நாங்கள் பயந்தபடி அவனைத்
தூக்கிக்கொண்டு அவன் வீட்டுக்கு ஓடினோம். அவன் அப்பா திட்டினார். ஆனால் அதை அவன்
லட்சியம் செய்யவில்லை. தலைவனுக்காக நடந்த ஒரு போராட்டத்தில் பரிசாகக் கிடைத்த
காயம் என்று சாதாரணமாய்ச் சொன்னான்.
இரண்டு வாரங்களைத் தாண்டி
மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்தன படங்கள். ஒரு ரசிகனுக்கு இதை விடவும்
சந்தோஷம் அளிக்கும் விஷயம் என்ன இருக்க முடியும். ஆனந்தத்தில் பூரித்துவிட்டோம்.
இதற்குள் அந்தப் படத்தின் பாடல்களும் வசனங்களும் - குறிப்பாக வில்லனைப் பார்த்துத் தலைவர் பேசும்
வசனம் மனப்பாடமாகிவிட்டன. ஓய்வு நேரத்தில் ஒருவருக்கொருவர் சொல்லிக் காட்டினோம்.
ஒரு எழுத்து, ஒரு அசைவு கூட
மாறாமல் சுய லயிப்பில் நாங்கள் அவரைப்போலவே அபிநயிப்பதை நினைத்து ஒருவருக்கொருவர்
பாராட்டிக்கொண்டோம். எங்கள் வயதும் உருவமும் மெல்லமெல்ல உதிர்ந்துவிட நாங்கள்
அவராகவே மாறிக்கொண்டிருந்தோம்.
எங்களுக்கு
வருத்தமளிக்கிற விஷயம் ஒன்று உண்டு என்றால் எதிர் அணிக்காரர்களின் படமும் விடாமல்
போட்டியாக ஓடிக் கொண்டிருந்ததுதான். ‘இன்றே கடைசி’ என்று என்றைக்காவது துண்டுத்தாள் ஒட்ட மாட்டார்களா என
எதிர்பார்த்தோம். ஏதோ பேச்சுவாக்கில் சோமு “நம்ப படம் ஓடுது. அவங்க படத்தை ஓட்டறாங்க” என்று
சொல்லிவிட்டான். பட்டென சிரித்து விட்டோம் அவ்வளவுதான் குப்புசாமிக்கு கண்மண்
தெரியாமல் கோபம் வந்துவிட்டது. சண்டைக்கு வந்துவிட்டான்.
“நீ வந்து பாத்தியா? உனக்குத் தெரியுமாடா?”
“டிக்கட் கௌண்டர்ல
ஈ பறக்குது. டாக்கீஸ்ல மட்டும் எப்படிடா ஹவுஸ் புல்?”
“சும்மா சும்மா பேசி ஆத்திரத்தைக் கிளப்பாதே. கண்ணால பாத்தா
பேசணும். இல்ல
மூடிட்டுக் கெடக்கணும்.”
“நேத்து ராத்திரி படத்தை பார்த்துட்டுத்தான் சொல்றேன்.”
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கெடைக்காது.”
“பெரிய சாமியார் இவரு. அருள் வாக்கு சொல்றார்.”
மீண்டும் சிரிப்பலைகள்.
எங்கள் நடிகரின் பாணியில் கேசத்தை ஒதுக்கிவிட்டுச் சிரித்தோம். குப்புசாமிக்கு
ஆத்திரம் ஏறிவிட்டது.
“இந்த உலகத்திலேயே எங்க ஆள் மாதிரி நடிக்கறத்துக்கு ஆள்
கெடயாது, தெரியுமா” என்று கர்வமுடன்
சொன்னான்.
“ஆமாம். அவ்வளவு பெரிய தொப்பை உலகத்திலேயே வேற யார்க்கும்
கெடயாது.”
மறுபடியும் சிரிப்பு.
“சின்னச் சின்ன பொண்ணுங்களோட ஆடத்தான்டா ஒங்க ஆளு லாயக்கு. சுட்டுப்
போட்டாலும் நடிப்பு வராதுடா.”
“ஒங்க ஆளுக்கு சண்டை போடத் தெரியுமா? செத்தாலும்
வராது.”
“ஒங்க ஆளுக்குத்தான்டா வராது.”
“ஒங்க ஆளுக்குத்தான்டா வராது.”
குப்புசாமி தலையைச்
சிலிர்த்துக்கொண்டு சிங்கம்போல ஆட்டினான். முட்டப்போகிறான் என்று நினைத்தேன். அதற்குள்
அவனது ஆள்கள் வந்து அவனைப் பிடித்து விட்டார்கள். எங்கள் ஆள்களை நாங்கள் மறித்துக்
கொண்டோம்.
நாளுக்கு நாள் வசூலை அள்ளிக்
குவித்தபடி படம் ஓடிக்கொண்டிருந்தது. என்றும் இல்லாத அளவுக்குக் கூட்டம்.
எப்படியும் 25 நாள்கள் ஓடும்
என்பது எங்கள் கணிப்பு. இதுவரை எங்கள் ஊரின் சரித்திரத்திலேயே இரண்டு படங்கள்தான் 25 நாள்
ஓடியிருந்தன. இரண்டும் எங்கள் படங்கள். மூன்றாவதாக சரித்திரம் படைக்கும்
தருணத்துக்காக நாங்கள் காத்திருந்தோம். எங்கள் கூட்டத்துக்கு இதே பேச்சாக
இருந்தது. குப்புசாமி கும்பலும் உற்சாகமாய் இருந்தார்கள். அவர்கள் படம் 25 நாள் தாண்டி 50 நாள்கள் வரை கூட
ஓடும் என்று உறுதியான குரலில் சொன்னான் குப்புசாமி.
“ஒங்க ஆள் படம் 50 நாள் ஓடுச்சின்னா நான் ஒரு பக்கத்து மீசையை
எடுத்துக்கறேன்.”
வீரப்பன் எழுந்து நிதானமாய்ச்
சொன்னான். எங்கள் கும்பலிலேயே அவனுக்குமட்டும் தான் மீசை இருந்தது. குப்புசாமியும்
அவனது ஆள்களும் அவனைக் குரூரமாய்ப் பார்த்தார்கள்.
“எங்க படம் 25 நாள் கேரண்டி ஓடிட்டா நீ மீசையை எடுத்துக்கறியா?”
அதே நிதானமான குரலில் சொன்னான்
வீரப்பன். அவர்களுக்கு உடல் பதறியது.
“நீ வந்து செறைக்கறதா இருந்தா எடுத்துக்கறேன்.”
“நான் மொட்டையே அடிச்சிக்கிறேன்டா.”
“நான் ரெடி.”
படபடவென்று அவன் ஆள்கள்
பதில் சொன்னார்கள். கூடவே கேலிச்சிரிப்பு. அவர்களுக்கு உடனே முகத்தில் அறைவதுபோல்
பதில் சொல்லவேண்டும் என்று துடித்தோம். நாங்கள் வீரப்பன் முகத்தைப் பார்த்தோம்.
வீரப்பனுக்கு முகம் சிவந்துவிட்டது.
“வேறு ஏதாச்சிம் பேசனா பல்ல உடைச்சிடுவேன் ஜாக்கரதை.”
’பூவாவது பறி, புடலங்காயாவது பறி. எனக்கென்னடா?” என்று தாவிய
வீரப்பன் சொன்னவன் கையைப் பிடித்து முறுக்கினான். அவனைக் காப்பாற்ற குப்புசாமி
வீரப்பன் மேல் தாவினான்.
சண்டை முற்றிவிட்டது.
இரண்டுபேரும் கட்டிப் புரண்டார்கள். “வீரப்பா விடாதே!” என்று பக்கத்தில் நின்றபடி நாங்கள் அவனுக்கு உற்சாகம்
மூட்டினோம். சட்டென ஒரு படத்தின் பெயர் சொல்லி “அதுலே தலைவர் புடிச்சு முறுக்குவாரே அது மாதிரி
முறுக்கு” என்ற
ஞாபகப்படுத்தினேன். குப்புசாமியின் சகாக்களும் கூவிக் கொண்டிருந்தார்கள்.
உச்சகட்ட நேரம்.
சைக்கிளில் வந்துகொண்டிருந்த துணிக் கடைக்காரர் அவசரமாய் வண்டியை நிறுத்திவிட்டு
வந்து இருவரையும் பிடித்து விலக்கிவிட்டார். இருவரும் இரண்டு பாம்புகளைப்போல
சீறினார்கள்.
“போங்கடா, போங்கடா” என்று தள்ளிவிட்டு கலைந்து போகச் சொன்னார். சட்டென்று தன்
நடிகரின் பெயரை உரக்கக் கூவிய குப்புசாமி வாழ்க என்று கோஷமிட்டான். அவன் கூட்டமும்
அதை எதிரொலித்தது. உடனே எங்கள் நரம்புகள் முறுக்கேறின. வீரப்பன் ஓங்கிய குரலில்
எங்கள் நடிகரின் பெயரைச் சொன்னான். நாங்கள் உயிரைக் கொடுத்து வாழ்க என்று
கூவினோம். ஜெயகோஷங்களால் எங்கள் தெருவே ஸ்தம்பித்து விட்டது.
நாங்கள் ஆவலோடு
எதிர்பார்த்த 25வது நாள்
வந்துவிட்டது. ஒரு பெரிய வெற்றி விழா ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஊரின்
ஒரு எல்லையிலிருந்து கிளம்பி, எல்லாத் தெருக்களையும் கடந்து டாக்கிஸ் வரை சென்று படம்
பார்ப்பது என்று திட்டம். ஒவ்வொரு தெருவாக முழக்கங்களுடன் சென்று முன்னேறிக்
கொண்டிருந்தோம். எங்கள் கைகளில் உயர்ந்த பதாகைகளில் எங்கள் உயிருக்குயிரான
நடிகரின் படங்கள். எங்கள் மார்பில் அவர் படம் பொறித்த பேட்ஜுகள். தெருக்காரர்கள்
வாய் பிளந்தபடி எங்களையே வேடிக்கை பார்த்தார்கள். எங்கள் எதிர் அணிக்காரர்களும்
ஊர்வலம் நடத்தினார்கள். இரண்டு ஊர்வலங்களும் கடைத்தெருவில் சந்தித்துக்கொண்டன.
அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் எங்கள் முழக்கங்கள் உயர்ந்தன. வாழ்க கோஷங்கள்
எதிர்த்தரப்பில் இருந்தும் அதே விசையோடு முழங்கின. எந்தத் தரப்பில் முதலில்
சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. எதிர் அணி நடிகரின் பெயரைச் சொல்லி ஒழிக கோஷம்
தொடங்கிவிட்டது. முற்றிலும் ஆக்ரோஷமான கோஷங்கள். ஒருவருக்கொருவர் வெளிப்படையாய்
வெறியோடு பார்த்துக் கூவினோம். கணத்துக்குக் கணம் குரலில் சூடேறியது. கோபம்.
ஆத்திரம். வீரப்பன் சட்டென எதிர்ப்பக்கம் பாய்ந்து ஒருவனைக் கீழே தள்ளினான்.
குப்புசாமி என்மேல் தாவினான். எல்லாம் குழம்பிவிட்டது. கற்கள் பறந்து தாக்கின.
தெருவில் புழுதி பறந்தது. ஒருவரையொருவர் குதறிக் கொண்டோம். யார் தலையோ பிளந்தது.
ரத்தம், குழப்பம்.
போலீஸுக்குச் செய்தி பறந்தது. லத்திக்கம்புகள் விர்ரென்று சுழன்றன. ஒரே அடியில்
எலும்புகளை உடைக்கும் மடேர்மடேர் என்ற சத்தம். பதாகைகளும் தட்டிகளும் சிதற ஊர்வலம்
கலைந்து சிதறியது. வீரப்பனும் நானும் குப்புசாமியும் முனியாண்டியும் மட்டும்
அகப்பட்டுக் கொண்டோம். மற்றவர்கள் ஓடிவிட்டார்கள்.
ஸ்டேஷனில் சட்டைகளைக்
கழற்றி உள்ளாடையுடன் மட்டும் நிற்க வைத்து விட்டார்கள்.
“யாரக் கேட்டுக்கிட்டு பர்மிஷன் இல்லாம ஊர்வலம் வந்தீங்க?”
அந்த சப் இன்ஸ்பெக்டர் கேள்விக்கு
நான் மௌனமாய் இருந்தேன். சட்டென எதிர்பாராத கணத்தில் கன்னங்களில் மாறிமாறி
அறைந்தான் அவன். வயிற்றில் எட்டி ஒரு உதை விட்டான். நான் அழவில்லை. கண் சிவக்க
அவனை முறைத்துப் பார்த்தேன். இன்ஸ்பெக்டரின் முகத்தை அலட்சியமாய்ப் பார்க்கும் என்
தலைவரின் சித்திரம் என் மனசில் தைரியம் கொடுத்தது.
“என்னடா மொறைக்கற? பெரிய ராஜா தேசிங்குன்னு நெனப்பா?”
மீண்டும் கன்னங்களில்
மாறிமாறி அறைந்தான். கான்ஸ்டபிள்களும் தம் தம் பங்குக்கு லத்தியால் அடித்தார்கள்.
சாயங்காலம் வரை அங்கேயே
நின்றிருந்தோம். லத்தி அடி பட்ட இடங்களில் வீங்கி ரத்தம் கசிந்தது. உள் எலும்பு
வலித்தது. என்னால் கையைக்கூடத் தூக்க முடியவில்லை. தோளில் வலி. எங்கள் டாக்கீஸ்
முதலாளிகள் எங்களை அழைக்க வரக்கூடும் என்ற நம்பிக்கை கொஞ்சம்கொஞ்சமாய்க் கரைந்து
கொண்டிருந்தது.
இருட்டத் தொடங்கிய நேரம்
ஸ்டேஷனுக்கு வெளியே சல சலப்புக் கேட்டது. ஊரே திரண்டு வந்திருந்தது.
இன்ஸ்பெக்டரும் கான்ஸ்டபிள்களும் வெளியே சென்றார்கள்.
ஏறத்தாழ கால்மணி நேரம்
பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு இன்ஸ்பெக்டரும் எங்கள் தெரு மக்களால் ‘பெரியப்பா’ என்று
அழைக்கப்படுபவரும் உள்ளே வந்தார்கள்.
“வளர்ற வயசுல இப்படி சினிமா சினிமானு அலைஞ்சா எதிர்காலம்
என்னாவும்ன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா?”
“ஒலகத்துல யாருடா சினிமா பாக்காம இருக்கா? ஆனா, இப்படி வெறியோடு
அலைஞ்சா இப்பிடிதான் எல்லாம் முடியும்.”
ஏகப்பட்ட உபதேச வார்த்தைகள்.
கடைசியில் சில தாள்களில் இன்ஸ்பெக்டர் சொன்ன இடங்களில் பெரியப்பாவே கையெழுத்துப்
போட்டுவிட்டுக் கும்பிட்டார். நாங்கள் எங்களது துணிகளைத் திரும்ப வாங்கி அணிந்து
கொண்டோம். பகையை மறந்து நானும் குப்புசாமியும் ஒருவரையொருவர் நெருக்கமான
பார்வையுடன் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.
வெளியே எங்களுக்காகத்
திரண்டிருந்த ஊரைப் பார்த்ததும் வலி மறந்துவிட்டது. எங்களைப் பார்த்த ஆனந்தத்தில்
ஒரு மூலையிலிருந்து எங்கள் அபிபமான நட்சத்திரங்களின் பெயர்கள் உற்சாகத்துடன்
எழுந்தன. ‘வாழ்க’ கோஷங்கள்
அதிர்ந்தன.
(கவிதா சரண், அக்டோபர் 1993)