Home

Monday, 29 November 2021

மீரா பற்றிய சில குறிப்புகள் - சிறுகதை

 

குட்டை குட்டையாய் காட்டாமணக்குச் செடிகளும்

நுனியில் சாணம் அதக்கி நட்டிருக்கிற நாலு

முருங்கைக்கன்றுகளும் இருக்கிற வரிசைதான் மீரா வீட்டு

வேலி. வேலிக்கு இந்தப் பக்கத்தில் மாட்டுக் கொட்டகையோரம்

சாணம் மிதித்துக் கொண்டிருந்தாள் மீரா.

 

மீராவுக்கு வயசு என்று பார்த்தால் இன்றைக்கெல்லாம்

நாற்பதுக்குப் பக்கமாய்ச் சொல்லவேண்டும். தமிழ் வாத்தியார்

செல்வராஜி மகன் இன்பராஜிதான் இவள் பிறந்த சமயத்தில்

பிறந்தவன். பேய்மழையும் காற்றும் புயலுமாய் பாண்டிச்சேரி

ஜனங்களையே பயத்தில் ஆழ்த்திய ஒரு கார்த்திகை மாதத்தில்

அரைமணி வித்தியாசத்தில்தான் பிறந்ததாகச் சொல்வார்கள்.

அதே தெருவில் இருந்த செல்லத்தாயி வைத்திச்சிதான் இரண்டு

குழந்தைகளையும் தாயின் கதகதப்பான வயிற்றில் இருந்து

இழுத்துப் போட்டவள். அவளைக் கேட்டால் இன்றுகூடச்

சொல்வாள்.

 

சமுத்தரம் பொங்கனமாதிரி ஊரே பொயலும் மழையுமா

இருக்குது. ஒரு மரம் தெருவுல நிக்கல. சடக்கு சடக்குனு முரிஞ்சி

உழுது. வெளியில கால் வைக்க முடியல. ஒரே காத்து. ஆளயே

அலாக்காத் தூக்கிக்னு போய்டும்போல. வெளிய தெருவுல

பாத்தா பூங்காவனக் கவுண்டர் தலைல தட்டிய புடிச்சிகினு

ஓடியாறாரு. செல்லத்தாயி செல்லத்தாயி சீக்கிரமா கௌம்பு.

கற்பகத்துக்கு இடுப்புவலி ஆரம்பமாயிருச்சின்னாரு. வர்றது

இருக்கட்டும். நீங்க உள்ளார கொஞ்சம் ஒதுங்குங்கன்னு

சொல்றன் நானு. காலத் தொடச்சிக்னு கவுண்டர் வாசல்ல

வந்து பொண்டாட்டிக்கு வலி கண்டிருச்சினு சொல்றாரு.

எனக்கு ஒன்னும் புரியல. எம் புருஷன் இன்னாடான்னா

மழைல போவாதடி செல்லத்தாயிங்கறாரு. நா கேக்கல. பிரசவம்

பாக்கறவங்க அப்படியெல்லாம் சொல்லலாமா. சட்டுனு மழைல

எறங்கிட்டன். மொதல்ல பூங்காவனக் கவுண்டர் ஊடு.

பொண்கொழந்த. அடுத்தது செல்வராஜி கவுண்டர் ஊடு.

ஆண்கொழந்த. ரெண்டு பேரும் அப்படியே மலந்து போயி

ஆளுக்கு ஒரு மூட்ட நெல்லு அனுச்சிட்டாங்க. அவ்ளோ

சந்தோஷம்...ம். அதெல்லாம் ஒரு காலம். ஒடம்புலயும் தெம்பு

இருந்திச்சி. இப்ப ஆவுமா...?’

 

இன்பராஜிக்கு கல்யாணமாகி நாலு பிள்ளைகள் உள்ளனர்.

மூத்தபெண் புஷ்பவதியானதை முன்னிட்டு போன மாசம்தான்

மஞ்சள்நீர் சுபசடங்கு செய்தார்கள். இன்பராஜிக்கு மட்டுமல்ல,

ஏறத்தாழ மீராவுடன் சமகாலத்திலும் பின்னாலும் பிறந்த

ஆண்களுக்கும் பெண்களுக்கும்கூட கல்யாணம்

காட்சியெல்லாம் நடந்து குழந்தை குட்டிகளோடு இருந்தார்கள்.

ஆனால் மீராவுக்குத் தான் எதுவுமே நடக்காமல் போனது.

ஐயோ நடக்காம போச்சேஎன்று பச்சாதாபப்படவோ,

விசனப்படவோகூட யாரும் இல்லாமல் போனது.

விசனப்பட்டவர்கள் எல்லாம் அவள் அப்பாவும்

அம்மாவும்தான்.

 

ஏழெட்டு வயசு இருக்கும்போது வலிப்பு வந்து வாய் கோணி

மூச்சு இழுத்து விறைப்பாய் கட்டை மாதிரி வாசற்படியில்

சாய்ந்த வாழைக்கன்றுபோல என்றைக்கு மீரா விழுந்தாளோ

அன்றே அம்மா அப்பாவுக்கு விசனம் ஆரம்பமாயிற்று. அந்தச்

சம்பவத்துக்குப் பிறகு வாய்க்கோணல் நிரந்தரமாயிற்று.

வலிப்பும் நிரந்தரமானது. பேச்சு குழறி வார்த்தைகள் எச்சிலாய்

சிதறின. சமய சந்தர்ப்பம் இல்லாமல், கடைவாய் ஓரம் ஜொள்

ஒழுகியது. புத்தி குறைந்தது. தலைமுடி கொட்டியது.

பெண்மையின் கவர்ச்சியும் ஈர்ப்பும் மறைந்தது. எல்லா

சாமிகளையும் காப்பாற்று காப்பாற்று என்று பிரார்த்தனை

செய்து செய்தே அம்மாவும் அப்பாவும் போய்ச் சேர்ந்தார்கள்.

 

அதன் பிறகு கூடப் பிறந்த பிறப்புகளாகட்டும்,

அண்ணிகளாகட்டும் எல்லோருக்கும் அவள் நல்ல

வேலைக்காரியாக இருந்தாள். பயந்த சுபாவமும் பணிவுமான

வேலைக்காரி. துணி துவைக்க, மாடு கட்ட, சாணி தட்ட,

கொட்டகை சுத்தம் செய்ய என்று நியமிக்கப்பட்ட

வேலைக்காரி. த வலிப்புஎன்று கூப்பிட்டால் வந்து நிற்க

வேண்டிய வேலைக்காரி. வீட்டுக்குள் வர அவளுக்கு அனுமதி

இல்லை. மாட்டுக்கொட்டகைக்குப் பக்கத்திலேயே திண்ணை

எழுப்பி கூரைப் போட்டுத் தந்திருந்தார்கள்.

 

மெட்ராஸ் மெயில் போகிற நேரத்தில் வரும் ஜம்புலிங்க

கோனார்தான் மீராவை எழுப்புகிற முதல் ஆள். கோனார்

வேலியைச் சுற்றிவந்து மீரா இருக்கிற தட்டிப்பக்கம் சத்தம்

போடுவார். அரண்டு மிரண்டு எழுகிற மீராவுக்கு அந்தக்

குரலோடுதான் பொழுது ஆரம்பமாகும். கறவைப்பசுவை

இழுத்துவர, கன்றுக்கு அளவாய் ஊட்டி விலக்க, மடியைக்

கழுவ, தண்ணீர்தர என்று வேலைகள் இருக்கும். கறப்பு

முடிந்ததும் கோனார் புறப்பட மாட்டுக்கொட்டகைக்குள்

போகிறவளுக்கு பத்து பத்தரை வரைக்கும் வேலைகள் சரியாக

இருக்கும். சாணத்தையெல்லாம் வாரி எடுக்க, வைக்கோலை

உதறி வெயிலில் காயப்போட, மூத்திரம் தேங்கிக் குட்டையான

இடத்தைச் சரியாக்க, குழிவான இடத்தில் மண் வாரிவந்து

போட, மாட்டுக்காரன் வந்ததும் மாடு விரட்ட, சாணம் பிசைந்து

வறட்டி தட்ட என்று மூச்சுமுட்ட வேலைகள் முதுகு

முரிந்துவிடும். எல்லாம் முடிந்ததும் அண்ணிக்காரியிடம்

போகணியை எடுத்துக்கொண்டு போவாள். அது ஆயிருச்சா

இது ஆயிருச்சாஎன்று கேட்டுக்கொண்டே பழைய சோறு

ஊற்றுவாள் அண்ணி. குடித்து முடித்ததும் துணி துவைக்கிற

வேலை ஆரம்பமாகும். தென்னந்தோப்பு பம்ப்செட்டுக்கோ

குழாய்க்கோ போகவேண்டும். சோப்புப்போட்டு துவைத்து

கசக்கிப் பிழிந்துகொண்டு திரும்ப மணி இரண்டரை மூன்று

ஆகும். வந்து உதறிக் காயப்போடும் போதே தலை சுற்றும்.

திண்ணைக்கே போகணியில் சோறு போட்டு வரும். சாப்பிட்ட

அசதியில் கண் மூடுவாள். படுத்த மாத்திரத்திலேயே

அடித்துப்போட்டமாதிரி தூக்கம். தூங்குகிறவனை

மாட்டுக்காரன்தான் எழுப்புவான். மேய்ச்சலில் இருந்து வருகிற

மாடுகளோடு மறுபடியும் பொழுது தொடரும். மாட்டைக்

கழுவ, பிண்ணாக்கு பருத்திக்கொட்டை மாவு கரைக்க, தீவனம்

வைக்க, வைக்கோல் உதறிப் போட, அலையாதமாதிரி

முளைக்குச்சியில் இழுத்துக் கயிற்றை இழுத்துக்கட்ட,

சாயங்காலக் கறவைக்கு வருகிற பால்காரனுக்கு சகாயம் செய்ய

என அடுத்தடுத்து வருகிற வேலைகளில் பொழுது கழிந்து

ராத்திரியாகிவிடும்.

 

மீராவின் குரல் ரொம்பவும் சின்னது. கிணற்றுக்குள் இருந்து

கேட்கிறமாதிரி இருக்கும். துணி துவைக்கப்போகும் போதோ

வறட்டி தட்டும்போதோ யாராச்சும் அவளிடம் பேசுவதுண்டு.

காது அடைத்தவள் பேசுகிறமாதிரி சின்னச்சின்ன

வார்த்தைகளாய் விழுகிற அவள் பேச்சு உடைந்துபோன

புல்லாங்குழலில் வருகிற மெல்லிய ஓசைமாதிரி இருக்கும்.

கேட்கிறவர்கள் மனசில் சட்டென்று பரிதாபம் படரும். எந்தப்

பேச்சானாலும் மீரா கொண்டுவந்து முடிப்பது

கல்யாணத்தில்தான். எப்ப ஒனக்கு கல்யாணம்? யாரைப்

பண்ணிக்கப் போற? கல்யாணத்துக்கு என்னக் கூப்டுவியா?

சாப்பாடு போடுவியா?’ என்பாள். ரொம்ப ஏக்கமாக

கேட்கிறமாதிரி இருக்கும். அவளது கேள்விகளுக்குப் பதில்

சொல்கிறவகையில் எப்போதும் சின்னவயசுப் பிள்ளைகள்

இருப்பார்கள்.

 

அந்தமாதிரி கேட்கப்படுகிற எந்த பெண்ணோ

ஆணோ, கல்யாண விஷயம் என்று சொல்கிறபோது அவள்

வரைக்கும் செய்தியைக் கொண்டுவருவது இல்லை.

என்றைக்காவது ஒருநாள் நேரில் பார்க்கிற சந்தர்ப்பத்தில்

மறுபடியும் எப்ப கல்யாணம்?’ என்று கேட்க நேரிடுகிகற

போது, நிஜம் வெளிவரும். ரொம்ப ஆச்சரியமாய் எப்ப ஆச்சு?’

என்று கேட்டுவிட்டு போக வழி விடுவாள்.

குழந்தைகள் என்றால் மீராவுக்கு ரொம்பவம் இஷ்டம்.

 

தங்கச்சி குழந்தை. தம்பி குழந்தை, அண்ணன் குழந்தை என்று

வீட்டில் எப்போதும் குழந்தைகளாய் இருக்கும். எந்தக்

குழந்தையையும் உள்ளே வந்து தொடக்கூடாது என்னும்

அண்ணியின் கட்டளையை மீறி அந்த வீட்டில் துரும்புகூட

நகராது. மொதல்லியே வலிப்பு இந்த லட்சணத்துல கொழந்தய

வச்சிக்னு ஆடும்போது எங்கனாச்சும் உழுந்து கை போச்சு

கால் போச்சுன்னா இன்னா செய்யறது? எல்லாம்

போனதுக்கப்புறம் அம்மா போச்சே ஐயோ போச்சேன்னு

சொன்னா வருமா?’ என்று இழுத்து நியாயம் சொல்வாள்.

 

கேட்கிறவர்களுக்கு இந்த நியாயம் சரி என்றுதான் படும்.

ஆனால் அண்ணியின் உள்மனசு வேறுமாதிரி இருக்கும்.

சனியன் பார்க்கவே சகிக்கல. இதுங்கையில கொழந்தய குடுத்து

ஏதாச்சும் தொத்து நோய் வந்திருச்சின்னா யாரு

அவஸ்தப்படறது?’ என்பதுதான் அது. குழந்தைகள் வீட்டுக்குள்

தடுக்கப்பட்ட விஷயமாய் இருந்தாலும் பம்ப் செட்டில் அதற்கு

நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

 

யாராவது குடியானவப்பெண் துணிக்கு சோப்பு போடுகிற

போது இவளைப் பார்த்ததும் தூக்கிக்கொண்டு வந்த

குழந்தையை பக்கத்தில் விட்டு கொஞ்சம் பார்த்துக்க ஒடம்பு

கசகசங்குது குளிச்சிட்டு வந்துர்றன்என்று போவார்கள்.

சோப்பு போடுவதைக்கூட நிறுத்திவிட்டு குழந்தைக்குப்

பக்கத்தில் போய் உட்கார்வாள் மீரா. இன்னா ராஜா. இன்னா

கண்ணுஎன்று தெரிந்த வார்த்தைகளில் மெல்லக்

கொஞ்சுவாள். பம்ப்பில் இருந்து பீறிட்டு அடிக்கிற நீர்

சத்தத்தில் இவள் பேச்சு இவளுக்கே கேட்காது. கோணல்வாய்ப்

பேச்சைப் பார்த்ததும் குழந்தை சிரித்துவிடும். குழந்தை

சிரிப்பைக் கண்டதும் இவளுக்கு பூரித்துப்போகும்.

சந்தோஷத்துடன் குழந்தை கன்னத்தைத் தொட்டு முத்தம்

தருவாள். மெல்ல மோவாயைச் சீண்டி ஏன்டா ராஜா என்னக்

கல்யாணம் கட்டிக்கறியா சொல்லுஎன்று கேட்பாள். அந்தக்

குழந்தை ஏதோ வாய் திறந்து நிச்சயம் பதில் சொல்லிவிடும்

என்கிறமாதிரி ரொம்ப நம்பிக்கையோடும் வெகு ஆவலோடும்

பிரியம் குறையால் அதையே திரும்பத்திரும்பக் கேட்பாள்.

மோவாயைத் தொட்டு ஒரு தரம், கன்னங்களை சீண்டி ஒருதரம்

பிடறிக்கடியில் கையைக் கொடுத்து ஒரு தரம், உள்ளங்கையில்

தயிர் கடைகிற ஆட்டம் மாதிரி பாவனை செய்துகொண்டே

ஒருதரம், வயிற்றை கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டே ஒருதரம் என்று

அதையே திரும்பத்திரும்பக் கேட்பாள். இவள் சேஷ்டையில்

குழந்தைகளுக்கென்று சிரிக்கும். அந்தப்பக்கம் இந்தப்பக்கம்

பார்க்கும். அங்கெல்லாம் பாக்காத ராஜா. நேரா பாத்து

சொல்ணும். கட்டிகிறியாடா?’ என்று தலையைத் தன்பக்கம்

திருப்புவாள். குளிக்கப் போனவள் வந்து குழந்தையை வாங்க

கைநீட்டிக் குழந்தையை வாங்க வழிந்த சிரிப்போடு இவள்

நிற்பாள். அடுத்த நிமிஷம் துணியும், சோப்பும், கல்லுமாய் உலகம்

மாறும்.

 

இத்தனை வேலைகள் செய்தும் அவளைக் கண்டு திருப்திப்

படுகிறவரோ பரிதாபப்படுகிறவரோ வீட்டில் யாரும் இல்லை.

கூப்பிட்டு வைத்து நாலு நல்ல வார்த்தை பேசுகிற இதம்

கிடையாது. நாளோ கிழமையோ வந்தால் வீட்டில் செய்கிற

பண்டங்களில் இரண்டை எடுத்துப் போட்டு தின்னுஎன்று

சொல்லுகிற பரிவு கிடையாது. பொங்கலோ தீபாவளியோ

வந்தால் அழுக்கும் கிழிசலுமாய் இருக்கிறவளுக்கு ஒரு

துண்டுத்துணி புதுசாக கிடையாது. போக்கற்றுப்போய்

எப்போதாவது வலிப்பு வந்து கீழே விழுந்தால் ஐயோ என்று

ஓடிவந்து கை தொடுவது கிடையாது. எல்லாவற்றையும்விட

கொடுமையான விஷயம் இதுதான். வலிப்பு வந்து கையும்

காலும் உதற நுரைதள்ள அவள் புரளுகிறதைக் கண்ணால்

பார்க்கிறபோதுகூட தெருமுக்கில் இருக்கிற வைத்தியச்சி

வந்துதான் தொடவேண்டும். அவளுக்குத்தான் செய்தி

அனுப்புவார்கள். அவள் இல்லாமல் போகிற ஏதாவது ஒரு

சந்தர்ப்பத்தில் லாடக்காரன் காளியப்பன்தான் வந்து

அடக்கவேண்டும். அதுவரை கழுத்தறுந்த கோழிமாதிரி

விலுக்விலுக்கென்று இழுத்துக்கொண்டு கிடந்தாலும் சொட்டுத்

தண்ணீர் வாயில் ஊற்ற நாதி இருக்காது.

 

வைத்தியச்சிக்கு பெரிய

குறை இது. தள்ளாத வயசில் அவள் அடித்துப்பிடித்து

ஓடிவருகிற ஓட்டத்தையும் பதற்றத்தையும் பார்க்கும்போது எந்த

ஜன்மத்துல ரெண்டும் தாயா புள்ளயா இருந்துச்சிங்களோ

என்றுதான் சொல்லத் தோன்றும். சோர்ந்து அடிவாங்கிய

கன்றுக்குட்டிமாதிரி பேச்சுமூச்சில்லாமல் கிடக்கிற அவளை

எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அழுவாள். இந்த மாதிரி

நாறப்பொழப்புதான் ஒன்னிதுன்னு தெரிஞ்சிருந்தா நான்

அன்னிக்கே ஒன் சங்க முரிச்சிருப்பேன்டிஎன்று மெதுவாக

சொல்லிப் புலம்புவாள். களைப்பில் இருந்து மீண்டும் அவள்

தெளிவடைந்ததும் துடைத்துக் குளிப்பாட்டி உட்கார

வைத்துவிட்டுத்தான் எழுந்திருப்பாள்.

 

நன்றாகிப் போன அடுத்த நிமிஷமே மீராவுக்கான இன்றைய

உலகம் தயாராய் இருக்கும். சாணம், வரட்டி, மாடு, துணி பம்ப்

செட் என்று. வலித்து இழுத்துக் கிடந்தபோது சீண்டக்கூட

நெருங்காத ஜனங்களுக்கு வேலை சொல்ல மட்டும் ஆயிரம்

நாக்குகள் இருக்கும்.

 

எதைப்பற்றியும் ஆழமான சிந்தனை இல்லாதவளாக,

சாணம் உருட்டிக் கொண்டிருக்கும்போது

மாட்டுக்கொட்டகைப் பக்கம் ஒரு பையன் வந்து நின்றான்.

சாணம் தட்டுவதை நிறுத்திவிட்டு இவள் பார்த்தாள். அறிமுகம்

இல்லாத பையன்.

 

யாரு ணும்?’’

 

மாடு ஓட்டிப் போணும்

 

அவள் கொட்டகைப்பக்கம் சைகை காட்டிப் பேசியதும்

இவளுக்கு புரிந்தது.

 

மாடசாமி வரலியா?’

 

ம்ஹும்.

 

அவன் இன்னாவா ணும் ஒனக்கு?’

 

அண்ணன்

 

ஓஹோ... எதுக்கு வரல மாடசாமி?’

 

அடுத்தவாரம் கல்யாணம். அதுக்கோசரம் தாலி

செய்யறதுக்கு டவுனுக்குப் போய்ருக்குது. இனிமே நான்தான்

வருவன்.

 

ஓஹோ.

 

மீராவுக்கு சிரிப்பு வழிந்தது.

ஆறு எருமைகளையும் அவிழ்த்து அதட்டிஅதட்டித்

தள்ளினான். மாடுகள் அசைந்து நடந்தன.

பையனைப் பார்த்து மீரா கேட்டாள்.

 

ஒனக்கு எப்ப கல்யாணம்...?’

 

சட்டென்று வெட்கம் படர்ந்தவனாய் பையன் இவளைப்

பார்த்துத் தயங்கினான். மறுபடியும் சிரிப்பு வழிய மீரா

கேட்டாள்.

 

எப்ப ஒனக்கு கல்யாணம்? கல்யாணத்துக்கு என்னக்

கூப்புடறியா?’

 

(குங்குமம் – 1986)