Home

Tuesday, 23 November 2021

காலம் - சிறுகதை

 

தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக் கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லி வைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே சொல்லி வைத்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இது கூடச் சொன்னேன்.

தொடக்கத்தில் எல்லாம் ஒழுங்காய்த்தான் இருந்தது. வீச்சு வீச்சு என நடையில் ஒரு வேகமும் பேச்சில் ஒரு எழுச்சியும் சேர்ந்ததும் மீனாவைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எப்படியாவது கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடுத்தெருவுக்குப் போய் நின்றாள். இன்னும் அதிகபட்சமாய் ஆண்ட்டி ஆண்ட்டிஎன்று எதிர்வீடு வரைக்கும் சென்று அந்த வீட்டுப் பையன் மனோவோடு ஆடினாள். வீடுதாண்டி வீடு போகிறபோது ஏடாகூடமாய் ஏதாச்சும் ஆகிவிடுமோ என்கிற பீதி என் நெஞ்செங்கும் நிறைந்திருந்தது. சாவித்திரியிடம் சொன்னால் நா அடுப்பப் பாப்பனா அவளப் பாப்பனாஎன்று கைவிரித்தாள். முதலில் நல்ல தனமாகவே கொஞ்சலோடு புத்தி சொல்லிவிட்டு செய்தித்தாளைப் புரட்டி ஒரு பக்கம் வாசிப்பதற்குள் அப்படி இப்படிப் போக்குக் காட்டிவிட்டு தெருவில்போய் நின்றாள் மீனா. தூக்கி வந்து உள்ளே விட்டு மறுதரமும் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தில் ஒருபத்தி படிப்பதற்குள் மாயமாகி விட்டாள். கலவரத்தோடு வெளியே போய்ப் பார்த்தால் எங்கும் இல்லை. நாலைந்து தரம் குரல் கொடுத்த பிற்பாடு எங்க வீட்லதா இருக்கா ஒங்க பொண்ணுஎன்று அடுத்த வீட்டுப்பெண் சிரித்தாள்; வாயைத் திறந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்துவந்து மீண்டும் புத்தி சொல்லிவிட்டுக் கட்டிலில் சாய்ந்தேன். சிறிது நேரத்துக்குள் கல் பொறுக்கப்பட்டு முறத்தில் வைத்திருந்த அரிசியையெல்லாம் கீழே கொட்டிவிட சாவித்திரி சத்தம் போட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமையை நிம்மதியாய் கழிக்க முடியவில்லையே என்கிற எரிச்சல் எனக்கு. மூர்க்கத்தனமான ஓர் ஆத்திரம் புரள ஊட்டுக்கு வெளியேயும் போவக் கூடாது ஊட்டுக்குள்ளயும் கலாட்டா செய்யக் கூடாதுஎன்று மிரட்டிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டேன். சொல்லி விட்டேனே தவிர மனசுக்குள் வருத்தமாய்த்தான் இருந்தது. மீனாவின் முகத்தில் சோகமும், இயலாமையும் கவிந்திருந்தது. பத்து நிமிஷமோ பதினைந்து நிமிஷமோ கழிந்தபிறகு எதேச்சையாய்த் திரும்பும்போது கவனித்தால் கண்ணை உருட்டிஉருட்டி விழிக்கும் மிஷா பொம்மையின் கைகளைப் பிடித்தபடி ரிங்கா ரிங்கா ரோசா, ஹஷ்ஷா புஷ்ஷா...என்று தடபுடலாய் ஆடிக் கொண்டிருந்தாள் மீனா.

பொம்மை உயிருள்ள ஒரு குழந்தை மாதிரியும், அதற்கு இவளே எல்லாவற்றையும் மிக உற்சாகத்தோடு சொல்லிக் கொடுக்கிற மாதிரியும் இருந்தது. தன்மேல் விதிக்கப்பெற்ற சட்டங்களையெல்லாம் மிகச் சாதாரணமாய்த் தள்ளிவிட்டு இருந்த இடத்திலேயே தனக்குரிய உலகத்தை ரொம்பவும் நேர்த்தியாய் சிருஷ்டித்துக்கொண்ட விதம் மறக்க முடியாத காட்சியாய் நெஞ்சில் உறைந்தது. மனசுக்குள் பிரகாசமுடன் ஒரு வெளிச்சம் புகுந்தது. ஒரு பொம்மையின் மகத்துவம் பற்றியும் பொம்மைகளோடு குழந்தை கொள்கிற ஈடுபாடு பற்றியும் ஞானம் பிறந்தது அன்று.

சாயங்காலம் மீனாவைக் கடைக்கு அழைத்துச் சென்றேன். பொம்மைகளுக்கென்றே ஆன கடை அது. பொம்மைகளின் வர்ணங்களிலும், ரகங்களிலும் அவள் கிறங்கி நின்றாள். தாங்க முடியாத சந்தோஷத்தில் ஒவ்வொரு பொம்மையையும் கைகளால் தொட்டுப் பார்க்க ஆரம்பித்தாள். அவளைத் தூக்கி அணைத்துக்கொண்டு அவளுக்கு விருப்பமானதைக் காட்டச் சொன்னேன். தனக்காகத் தேர்ந்தெடுக்க அவள் மிகவும் திணறினாள். கண்களை விரித்துவிரித்து ஒவ்வொன்றையும் மாறிமாறிப் பார்த்தாள்.

கடைக்காரன் ஒரு பொம்மையைத் தூக்கி மேசையில் வைத்து முதுகுப் பக்கம் எதையோ முடுக்கினான். ஒரு அடி உயர பொம்மை அது. நின்ற வாக்கில் இடுப்பில் கட்டி இருந்த டிரம்மில் தொம்தொம் என்று கைகளை ஓங்கி ஓங்கி உயிருள்ள பிள்ளையைப் போலவே தட்டியது. அந்தச் சத்தத்தைக் கேட்கிற உற்சாகத்தில் மீனா கைகளைத் தட்டினாள். இன்னொரு பொம்மையைக் கடைக்காரன் முடுக்கியதுமே அது மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து மேசைகளில் இருந்த பொம்மைகளின் ஊடே முன்னேறியது. அளவு கடந்த சந்தோஷத்தில் துள்ளினாள் மீனா. மீனாவின் சந்தோஷத்தைப் பார்த்து கடைக்காரனும் விறுவிறுப்புண்டவன் போல தலையைத் தூக்கி தும்பிக்கையை அசைக்கிற யானை பொம்மை, மொசமொச என்று முடி அடர்ந்த கரடி பொம்மை, அட்டகாசமாய்ச் சிரிக்கும் கோமாளியின் பொம்மை, தலையை மட்டும் ஆட்டும் நடனக்காரப் பெண்ணின் பொம்மை என்று அடுக்கிக் கொண்டே போனான்.

மீனா நிமிர்ந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

எது ஓணும் ஒனக்கு?’

அல்லாம் ஓணும்.

பாப்பாவுக்கு எது ரொம்ப புடிக்குது?’

இது, இது, அது அல்லாம் புடிக்குது.

மீனாவின் பேச்சைக்கேட்டு எனக்குச் சிரிப்பு வந்தது. கடைக்காரனும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்தான். நான் கையில் இருந்த தொகைக்குத் தகுந்தமாதிரி சில பொம்மைகளை மாத்திரம் காட்டச் சொல்லி வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் பிரித்து அடுக்கிக் கொண்டு அப்போதே ஆடத் தொடங்கிவிட்டாள் மீனா. சுற்றியும் பொம்மைகளைப் பரப்பிவிட்டு நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

அதற்கடுத்து எந்த ஊருக்குப் போய்த் திரும்பினாலும் அவளுக்குப் பொம்மை வாங்கித் தருவது பழக்கமாகிவிட்டது. ஒரு கடையே வைக்கிற அளவுக்கு பொம்மைகள் சேகரமாகி விட்டதைக் கண்டு சாவித்திரி சிரித்தாள். கட்டிலுக்கடியில், அட்டைப்பெட்டிகளில் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் பொம்மைகளாகவே இருந்தன.

வேலையில் இருந்து திரும்பும்போது மீனா ஒருநாள் உம்மென்றிருந்தாள். அவள் முகம் மிகவும் துக்கமுடனிருந்தது. என்ன விஷயம்என்றேன். பேசத் தொடங்கும் சாவித்திரியை முந்திக் கொண்டு அரிசி அண்டாவைத் தள்ளும்போது பொம்மையின் காலை நசுக்கி சாவித்திரி உடைத்துவிட்டதாக மீனா பிரஸ்தாபித்தாள். வழக்குத் தொடுக்கிற அவசரம் அவளது குரலில் இருந்தது. உடைந்த கால் துணுக்கை வழக்குக்கான ருசு போல மடியிலிருந்து எடுத்துக்காட்டிச் சிணுங்கினாள். இன்னொருபக்கம் வாயைப் பொத்திக்கொண்டு சாவித்திரி சிரித்தாள். அப்பன்கிட்ட கோள் மூட்டறத பாத்தியா இதுஎன்று பின்பக்கம் முதுகில் மெல்லத் தட்ட பாருப்பா அம்மாவஎன்று முன்னிலும் ஆவேசமாய்ச் சிணுங்கினாள் மீனா. சாவித்திரியின் பக்கம் பொய்யாய் ஓர் அதட்டலைச் சிதறிவிட்டு மீனாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன்.

நொண்டி பொம்மய என்னப்பா செய்யறது?’

இரு! இரு! ஓட்ட முடியுமா, பாப்பம்.

பொம்மையையும் துணுக்குக் காலையும் வைத்துக் கொண்டு ரொம்பநேரம் யோசித்தேன். காலற்ற பொம்மைப் பையனைப் பார்க்க மனக்கஷ்டமாய் இருந்தது. சட்டென மனசில் ஓர் எண்ணம் உதித்ததும் இன்சுலேஷன் டேப்பை எடுத்து நன்றாக ஒட்டிக் கொள்கிற மாதிரி உடைந்த பாதங்களைப் பொருத்திக் கட்டினேன். கால் பொருந்தி முழுப்பொம்மையும் உருப்பெற்றதும் மீனாவின் கண்களில் பழைய சந்தோஷம் மின்னலிட்டது. என் தோளைப் பற்றி அப்பாதா நல்ல அப்பா. அம்மா கெட்ட அம்மா. அம்மா பேச்சி கா. அப்பா பேச்சி பழம்என்று சொல்லிக்கொண்டே முத்தங்களாய்ப் பொழிந்தாள். கட்டிலோரம் நின்றபடி சாவித்திரி மீனாவுக்கு அழகு காட்டினாள்.

பாருப்பா அம்மாவ.

நீ ஆடுமா. அவுங்கள ஏன் பாக்கற?’

மிகவும் கு-தூகலமானாள் மீனா. சாவித்திரிக்குப் பதில் அழகு காட்டி விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்துவிட்டாள். நான் அவள் ஆட்டத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். உயிரற்ற பொம்மைகளை எல்லாம் சக தோழிகளாய்ப் பாவித்துக் கொண்டு அவற்றோடு பேசி, அவற்றோடு சிரித்து, அவற்றை அதட்டி ஆடுகிற ஆட்டத்தைக் காண புதிராகவும் இருந்தது. ஆனந்தமாகவும் இருந்தது.

பல நேரங்களில் என் புறக்காரியங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவள் கூடவே இருக்க ஆரம்பித்தேன். அதில் அளவற்ற நிறைவையும், சுகத்தையும் உணர்ந்தது மனம். மறக்க முடியாத சந்தோஷம் மிக்க காலகட்டாயமாய் அதை நினைத்துக் கொண்டேன்.

விடுப்புக்கு ஊருக்குப் புறப்படலாம் என்றதும் ஆயா ஊட்டுல பொம்ம இருக்குமாப்பாஎன்று கேட்ட போது சிரிப்பு வந்தது.

ஆயா ஊட்டுல ஆயாதா இருப்பாங்க. பொம்மைங்க எப்படி இருக்கும்?’

ஆயா ஆடமாட்டாங்களா?’

மீனா மாரி சின்னப்பாப்பாங்கதா பொம்மை வச்சி ஆடும். பெரியவங்கள்ளாம் ஆடமாட்டங்கம்மா.

நீ மட்டும் ஆடறியே!

ஆயா எல்லாரவிடயும் பெரியவங்கில்ல. அதான்.

ஆயா ஊட்டுல பாப்பா இல்லியா?’

ம்ஹும்.

எதுக்கு இல்ல.

நீதா ஆயா பாப்பா. நீ இங்க இருக்கும்போது அங்க யாரு இருப்பா...

ம், நா ஆயா பாப்பா இல்ல. அப்பா பாப்பாதா.

அப்பா பாப்பாவும் நீதா. அம்மா பாப்பாவும் நீதா. ஆயா பாப்பாவும் நீதா.

மீனாவின் பேச்சை வலுக்கட்டாயமாய் நிறுத்த வேண்டியிருந்தது. போன வருஷம் ஊருக்குப் போனபோது இத்தனை கேள்வி இல்லை. இத்தனைப் பேச்சுமில்லை. இவளே ஒரு பொம்மையைப் போல இருந்தாள். மணியடிக்கிற மாதிரி கிண்கிண்ணென்று இப்போது பேசுவதை நினைத்தபோது சந்தோஷமாய்த்தான் இருந்தது. என் சிறுவயதில் மனசைக் கவர்ந்த விஷயங்களை எல்லாம் அசைபோட்டது மனசு. சாவித்திரி எடுத்துஎடுத்து கொடுக்க, நான் அடுக்கிக் கொண்டிருக்கும் போதே கைகொள்ளாமல் கட்டிப்பிடித்தபடி பொம்மைகளை வாரிக்கொண்டு வந்து நின்றாள் மீனா.

எதுக்குமா பொம்மைங்க?’

இதயும் பொட்டில வைப்பா. அங்க ஆடறதுக்கு வேணாமா.’230 s பாவண்ணன் தொகுப்பு பாகம் 1

பொட்டில எடமில்லம்மா. இங்க வந்தப்றம் ஆடலாம் வச்சிடு.

இதற்குள் அவள் முகம் வாடி விட்டது. உதடு கடித்து அழத் தொடங்கினாள். ஒவ்வொரு பொம்மையாய்க் கீழே விழுந்தது.

அழாத மீனா, சொல்றதக் கேளு.

கால்களை உதறிக்கொண்டு அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள். எல்லாம் நீங்க குடுக்கற செல்லம்என்று என்னிடம் சொன்னாள் சாவித்திரி. வேறு வழி எதுவும் தோன்றாமல் ஒரு தோல்பையைத் தேடி சுத்தம் செய்து அவள் கொடுத்த பொம்மைகளை வாரி அடுக்கினேன். அதற்குப் பிறகுதான் பிரகாசமானது அவள் முகம்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் தோல்பையைக் காலுக்கடியிலேயே வைத்துக் கொண்டாள் மீனா. -தூக்கி உயரே சுமைஅடுக்கில் வைக்கலாம் என்றபோது ஒத்துக்கொள்ளவில்லை. பொம்மைப்பை மீது அவள் கொண்டிருந்த அக்கறையைப் பார்க்க சிரிப்பு வந்தது.

ஊரில் அம்மாவுக்கு எங்களைப் பார்க்க ஏகப்பட்ட சந்தோஷம். மீனாவை வாரி முத்தம் தந்தாள். அந்தப் பெரிய வீட்டுக்குள் மீனா தனக்குரியதாய் ஒரு மூலையை வைத்துக் கொண்டு பையைப் பிரித்துப் பொம்கைளையெல்லாம் அடுக்கினாள். காலையும், மாலையும் எந்த நேரமும் பொம்மைகளுடனேயே அவள் பொழுது சந்தோஷமுடன் கழிந்தது.

மறுநாள் பரண்மேல் இருந்த பிரம்புக் கூடையை எடுத்துத் தரச் சொன்னாள் அம்மா. எடுத்துத் தந்ததும் வெளிச்சம் இருக்கிற பக்கமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டு ஓட்டடையையெல்லாம் ஊதி ஊதி உதறித் தள்ளிக் கூடையைப் பிரித்தாள். அம்மாவின் செய்கையினால் என் மனம் சுவாரஸ்யமானது. ஆர்வமுடன் கவனித்தேன்.

கூடைக்குள் இருந்து சின்னச்சின்ன மரச் சொப்புகளை எடுத்துத் துணியால் துடைத்து ஒரு பக்கம் அடுக்கினாள். சொப்புகளுக்கு நடுவில் ஒரு மரப்பாச்சியும், பித்தளைக் கிலுகிலுப்பையும் இருந்தன. மீண்டும் ஒரு தரம் எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து மிகவும் திருப்தியுடன் கண்களை இடுக்கிக்கொண்டு மீனா இருந்த திசையில் பார்த்து கூப்பிட்டாள்.

என்ன ஆயா?’

இங்க வாடி கண்ணு.’

எதுக்கு ஆயா?’

இங்கவா ராஜாத்தி. ஆயா ஒனக்கோசரம் இன்னா வச்சிருக்கம் பாரு!

ஆர்வத்தோடு மீனா ஓடிவந்தாள்.

அய்... என்ன ஆயா இதுலாம்?’

இது மரப்பாச்சி. இது சொப்பு. இது கிலுகிலுப்ப; நீ ஆடறதுக்குதா இது.

ஏது இது?’

இதுவா? அந்தக் காலத்துல ஒங்கப்பன் கொழந்தயா இருந்தப்ப வச்சி ஆடனது. அதுக்கு முந்தி நா வச்சி ஆடனது. அதுக்கு முன்னால எங்கம்மா கொழந்தயா இருந்தப்ப ஆடனாங்களாம். ஒனக்காகத் தாண்டி இவ்ளோ காலமா இத வச்சிருக்கன்.

இத வச்சிக்கினா ஆடுவாங்க?’

ம்.

ஐய... ஆயா பொய் சொல்ற.

இல்லடி.

இத வச்சிக்னு எப்டி ஆடறது. அதோ நா வச்சிருக்கன்ல பெரிய பெரிய பொம்மைங்க அத வச்சிக்னுதா ஆடுவாங்க.

இதுவுந்தான்டி ஆடறதுக்கு.

ஆச்சரியத்தோடு நம்பமுடியாதவள் மாதிரி ஒவ்வொரு மரச்சாமானாய்த் தொட்டுத்தொட்டு அதிசயமாய்ப் பார்த்தாள். கிலுகிலுப்பையை ஒருதரம் அசைத்துப் பார்த்து அதன் சத்தத்தை ரசித்தாள். ஆனபோதிலும் அவள் கண்களில் நம்பிக்கையின்மையின் மிச்சம் இருந்தது.

சரி நா ஆடப்போறன்.

எழுத்து கொண்டாள் மீனா.

இதுங்கள எடுத்துகினு போடி

வேணாம் ஆயா; எனக்கு அதுதா புடிக்குது.

தன் பொம்மைகளை இங்கிருந்தபடியே சுட்டிக்காட்டி விட்டு ஓடி விட்டாள் மீனா. அதிர்ச்சியானவள் போல் அம்மா உட்கார்ந்திருந்தாள். தளர்ச்சியான அவள் முகத்தைப் பார்க்க வருத்தமாய் இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

என்னம்மா தெகப்பூண்ட மெரிச்சமாரி ஆய்ட்ட?...’

என்னடா இது ஆசயா குடுத்தா ஓம்பொண்ணு இப்படி சொல்லிட்டு ஓடறா...

இருக்கட்டும் உடும்மா. அந்தக் காலம் மாதிரியா இந்தக் காலம்? அதுங்கிட்டபோயி மரப்பாச்சிய நீட்டினா அதுக்கு பொம்மன்னு தெரிமா, கட்டன்னு தெரிமா?’

(சுருதி - 1991)