உலகம் முழுக்க
வாசகர்களைக் கொண்ட “லோட்டஸ்” ஆங்கில
இணைய இதழில் புத்தக அறிமுகப்பகுதிகளை
எழுதிக்கொண்டிருந்த
சந்திரன் என் இளம்பருவத்துத் தோழன். கூர்மையான
அறிவாளி.
படிப்பும் எழுத்துமாகவே வாழ்பவன். ஒரு
புத்தகத்தின் வலிமையான
வரிகளும் வலிமையற்ற வரிகளும் அவன்
கண்களிலிருந்து
ஒருபோதும் தப்பிவிட முடியாது. இலக்குநோக்கி எய்யப்பட்ட
அம்பைப்போல அவன் கண்கள் சரியாக அவற்றில்
படிந்து நிற்கும்.
எந்த மனச்சாய்வுமின்றி சுதந்திரமாக
கருத்துரைப்பவன் என்று
சின்ன வயசிலேயே பெயரெடுத்திருந்தான். “ஆலமரத்தில் ஒரு
பறவை” என்னும் தலைப்பில் என் தந்தையாரைப்பபற்றி நான்
எழுதி முடித்திருந்த வாழ்க்கை வரலாற்று நூலின்
கையெழுத்துப்
பிரதியை அச்சுக்குத் தரும்முன்னால் அவனிடம்
ஒருமுறை
காட்டி கருத்துக் கேட்பது மிகமுக்கியம் என்று
மீண்டும்
மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தாள் சுலோச்சனா.
எழுத்துவேலையெல்லாம் முடிந்து கணிப்பொறியில்
அச்சேற்றத்
தொடங்கிய நாளிலிருந்தே நினைவூட்டியபடியே
இருந்தாள்..
செய்யவேண்டிய திருத்தங்கள அல்லது விலக்கவேண்டிய
பக்கங்களைப்பற்றி துல்லியமாக அவன்
சொல்லக்கூடும் என்பது
அவள் நம்பிக்கை. எனக்குத்தான் சற்றே தயக்கமாக
இருந்தது.
“சுலோ, இது நாவலோ சிறுகதையோ அல்ல. அவன் கருத்துச்
சொல்லவோ, சொல்வதற்கேற்ப மாற்றங்களைச் செய்யவோ
இதில் வாய்ப்பே இல்லை. என் தந்தையார் எப்படி வாழ்ந்தாரோ,
அப்படித்தானே நான் எழுதமுடியும். இந்த
முயற்சியில் அவனை
எதற்கு இழுக்கவேண்டும்?” என்று தட்டிக்கழித்துக்கொண்டே
இருந்தேன். ஒருநாள் காலையில் நடைப்பயிற்சிக்காக பூங்காவின்
பக்கம் சென்றிருந்த சமயத்தில் தொலைபேசி செய்து வரவழைத்து
விட்டாள்.
காலணிகளைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தபோது அவன்
தேநீர் மேசையில் எனக்காக காத்திருந்தான். அவன்
முன்னிலையில்
ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட என் கையெழுத்துப்பிரதி. என்
வருகையின் சத்தத்தால் கவனம் கலைந்து பிரதியின்
பக்கங்களை
மூடிவிட்டுத் திரும்பினான்.
“புத்தகப் பிரசுரத்துக்காக யாரையாவது
அணுகியிருக்கிறாயா?”
“இன்னும் இல்லை சந்திரன். எல்லாமே இனிமேல்தான்
செய்யவேண்டும்.”
“அவசரப்பட்டு யாருக்கும் வாக்களித்துவிடாதே
கிரி. மிகச்
சிறப்பான முறையில் கொண்டுவர நான் ஏற்பாடு செய்கிறேன்.
அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடு.
ஆலமரத்தில் ஒரு
பறவை. புத்தகத்தின் தலைப்பு எனக்கு ரொம்பப்
பிடித்திருக்கிறது
கிரி. உன் மொழி புத்தம்புதுசாக உள்ளது. புதிய தளிர்போல ஒரு
மினுமினுப்பு அதில் உள்ளது. சாணை பிடித்த கத்திபோல ஒரு
கூர்மை. முன்னாலுமின்றி பின்னாலுமின்றி நடுவில்
பிரித்து ஏதோ
நாலு பக்கங்களைப் படித்தேன். ஒரு சுழலைப் போல உன் மொழி
நூலுக்குள் இழுப்பதை உணரமுடிகிறது. ஒரேஒரு வாரம் போதும்.
பிரதியை முழுக்கவும் படித்துவிடுகிறேன். பிறகு
சந்திக்கலாம்.”
அவன் வார்த்தைகள் உண்மையிலேயே உற்சாகம் கொடுப்பவையாக
இருந்தன. ஒரு பெரிய பாரம் கரைந்து போனதைப் போல
ஆனந்தமாகக் காணப்பட்டாள் சுலோ. காலைத் தேநீர் அருந்தியபிறகு
கையெழுத்துப் பிரதியோடு அவன் உடனே
கிளம்பிப்போனான்.
என் தந்தையார் விஸ்வநாதன். வழக்கறிஞர் பட்டம் பெற்றிருந்தாலும்
வாக்குச்சாமர்த்தியம் காட்டி மனிதர்கள் தமக்குள் போட்டுக்கொள்ளும்
சொத்துச்சண்டைக்கும் வரப்புத் தகராறுக்கும்
வாதாடி தன்னை
நிலைநிறுத்திக் கொள்ள்ள அவருக்கு விருப்பமில்லை. காந்தியின்
அழைப்பை கடமையின் அழைப்பாகக் கருதிய
கோடிக்கணக்கான
இளைஞர்களில் அவரும் ஒருவாரனார். உப்புச்
சத்தியாக்கிரகப்
போராட்டத்தில் கலந்துகொள்ள பெயர்கொடுப்பதற்காக நேராக
ஆசிரமத்துக்கே சென்று காந்தியைச் சந்தித்துப்
பேசினார்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுக்காலம் ஆசிரமத்திலேயே
தங்கி
பயிற்சி எடுத்துக்கொண்டார். காந்தி
போகுமிடங்களிலெல்லாம்
பின்னாலேயே அலைந்தார். அகமதாபாத்தில் ஒரு
ஊர்வலத்தில்
எதிர்பாராவிதமாக நடந்துவிட்ட தடியடியிலும் துப்பாக்கிச்சூட்டிலும்
தன் மனைவியையும் மூன்று குழந்தைகளையும்
பறிகொடுத்தார்.
இழப்பின் துக்கத்தையும் விரக்தியையும்
காந்தியுடன் மேலும் நெருங்கி
உழைப்பதன்மூலம் விரட்டினார். தில்லியில் பங்கி காலணியில்
காந்தியோடு தங்கியிருந்த
வெகுசிலரில் அவரும் ஒருவர். பீகாருக்கும்
கல்கத்தாவுக்கும்
காந்தி போகும் போதெல்லாம் அவரும் கூடவே
சென்றார்.
காந்தியின் மரணம் மட்டுமே அவரைத் திசைதெரியாத
பறவையாக
தடுமாற வைத்தது-. இதுவரையிலான சம்பவங்களை
அவருடைய
வாழ்வின் முக்கியப்பகுதியாக சொல்லலாம்.
இதற்குப்பிறகு அரசியல்
தளத்திலிருந்து விலகியிருந்தாலும் காந்தியின்
எழுத்துக்களை
திரட்டித் தொகுப்பதிலும் மொழியாக்கம் செய்வதிலும்
ஆர்வம்
காட்டி வந்தார்.
ஏழெட்டு ஆண்டுகளில் அவர் கிட்டத்தட்ட
ஐந்தாயிரம்
பக்கங்களை மொழிபெயர்த்துத் தொகுத்தார். அவருடைய
கடுமையான
உழைப்பு ஆசிரமத்தில் அவருக்கு கௌரவமான பெயரைத்
தேடிக்
கொடுத்தது. 1957ல் அவருடன் தங்கியிருந்த சங்கர்தயாள் பானர்ஜி
என்னும் வங்காளநண்பர் அவரை மறுமணம் செய்துகொள்ளச்
சம்மதிக்கவைத்தார். சென்னையைச் சேர்ந்த
லலிதாவுக்கும்
அவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
அவர்தான்
என் தாயார். ஆனால் அந்த இல்லறம் வெகுகாலம்
நீடிக்கவில்லை.
என்னைப் பெற்றெடுத்தபிறகு உடல்நலம் குன்றிப்
படுத்தவர்
மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. நோயின் கடுமை
அவரை
மனநலம் பிறழும் கட்டம்வரை தள்ளிவிட்டது. ஆண்டுமுழுக்க
அளிக்கப்பட்ட தொடர்ச்சியான மருத்துவத்துக்குப்
பிறகும் அவர்
இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துபோனார். நான்
பெரியம்மா
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அடுத்தடுத்து
நேர்ந்த துக்கங்களால்
குலைந்துபோன தந்தையார் மனஅமைதிக்காக மீண்டும்
காந்திஜியின்
ஆசிரமத்தை நாடிச் சென்றுவிட்டார். ஒன்றிரண்டு
ஆண்டுகள்
மட்டுமே அவரால் அங்கும் இருக்கமுடிந்தது. ஒருநாள் தன்
அறையிலேயே மாரடைப்பில் இறந்துபோனதாகத் தகவல்
வந்தது.
என் தந்தையாரின் புத்தக உடைமைகள் மூட்டைகளில் கட்டப்பட்டு
பெரியம்மாவின் வீட்டுக்கு வந்துசேர்ந்தன.
சுயசரிதை இந்த இடத்தில்
முற்றுப்பெற்றது.
ஒரு வாரத்துக்குப் பிறகு வருவதாகச்
சொல்லிவிட்டுப் போன
சந்திரன் இரண்டாவது நாளே இரவுநேரத்தில்
வீட்டுக்கு வந்தான்.
“ஆலமரத்தில் ஒரு பறவை” அழகாக வந்துள்ளது என்றான். எழுத்து
முயற்சிகளில் இது ஒரு மைல்கல்லாக நிச்சயம்
வரவேற்கப்படக்கூடும்
என்றும் தெரிவித்தான். அவன் நெகிழ்ந்துபோய் சொன்னவிதம்
எனக்கும் ஆனந்தமாக இருந்தது. இறுதியில்
முற்றுப்பெறும்
பகுதிமட்டுமே தனக்குத் திருப்தியளிக்கவில்லை
என்றான்.
“எப்படி முடிந்ததோ அப்படித்தானே எழுதமுடியும்
சந்திரன்?
அதை எப்படி மாற்றமுடியும்?” அவன் ஆதங்கத்தைச் சரியாகப்
புரிந்துகொள்ள இயலாமல் கேட்டேன்.
“நீ ஒன்றும் செய்வதற்கில்லை என்பது சரிதான். ஒரு வாழ்க்கை
வரலாற்று நூலில் பொய்யாகவோ புனைவாகவோ எதையும்
எழுதிச் சேர்த்துவிட முடியாது. ஆனால் அம்முடிவை
கவித்துவம்
கொண்டதாக நிறைவு செய்யவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
அப்போது புத்தகம் மேலும் சிறக்க வழிபிறக்கும்.”
கிட்டத்தட்ட அரைமணிநேரம் இதைப்பற்றியே பேசிக்
கொண்டிருந்தோம். சுலோ தயாரித்துத் தந்த தேநீர்
புத்துணர்ச்சி
அளித்தது.
“அப்பா பல நண்பர்களுக்கு கடிதம்
எழுதியிருக்காங்க. எல்லாமே
இல்லைன்னாலும் ஒரு ஏழெட்டாவது இருக்கும்.
அப்பறமா
அம்மாவும் அப்பாவும் எழுதிகிட்ட கடிதங்களும்
இருக்கு. அம்மா
ஆஸ்பத்திரியில இருந்தப்ப அப்பா எழுதன கடிதத்த
நான் பலதரம்
படிச்சிருக்கேன். ஒவ்வொரு தடவயும் அத கண்ணீர்
தளும்பாம
படிக்கவே முடியாது. கடிதக் குவியலிலேருந்து
பத்து பதினைஞ்
சயாவது சேத்துக்கலாம்.”
“நல்ல யோசன. அபபடியே செய். எனக்கு இன்னொரு
யோசனையும் தோணுது. இந்தப் புத்தகத்த
படிக்கும்போது
கிட்டத்தட்ட இருபது முப்பது பேரப்பத்தி பேர்
சொல்லியே பல
இடங்களில் எழுதியிருக்கறாரு அப்பா. அந்த
பேருங்களயெல்லாம்
ஒரு பட்டியல் போட்டு வச்சிருக்கேன் பாரு.
இவுங்க எல்லாரும்
உயிரோட இருக்கறதுக்கு வாய்ப்பில்லன்னாலும் கொஞசம் பேராவது
இருக்கலாம். அப்பாவ பத்தி அவுங்க மனப்படிமம்
என்னன்னு
அவுங்களயே சொல்லவச்சி பின்னிணைப்பா சேத்தா
புத்தகத்தோட
மதிப்பு இன்னும் கூடுதலா இருக்கும். ரொம்ப
வேணாம். ஆளுக்கு
ஒரு பக்கம் போதுமே. இந்தக் கோட்டுச் சித்திரம்
படிக்கற வாசகர்கள்
மனத்துல ஆழமான பாதிப்புகள ஏற்படுத்தும்.”
எனக்கும் அந்தத் திட்டம் சரியானதாகவே பட்டது.
அன்று
இரவு நானும் சுலோவும் சேர்ந்து அப்பெயர்களின்
பட்டியலை
வைத்துக்கொண்டு அப்பாவின் நாட்குறிப்புகளையும் வேறு சில
கடிதங்களையும் அலசி ஏதாவது முகவரி கண்டுபிடிக்க
முடிகிறதா
என்று முயற்சி செய்தோம். நீண்ட நேர ஆராய்ச்சிக்குப் பிறகு
பன்னிரண்டு முகவரிகளை மட்டுமே திரட்டமுடிந்தது.
மூன்று
முகவரிகள் அகமதாபாத்தைச் சேர்ந்தவை. இரண்டு அலகாபாத்தைச்
சேர்ந்தவை. மேலும் மூன்று கல்கத்தாவிலும்
இரண்டு மதுரையிலும்
இரண்டு திருநெல்வேலிக்குப் பக்கத்திலும் உள்ளவை.
சந்திரன் கொடுத்த உற்சகாத்துடன் கையில்
பெட்டியுடன்
ஒருநாள் கிளம்பிவிட்டேன். நான் குறித்து வைத்திருந்த
பன்னிரண்டு
முகவரிகளில் எட்டு முகவரிகளை மட்டுமே தேடிக்
கண்டுபிடிக்க
முடிந்தது. அவர்களில் ஐந்துபேர்மட்டுமே
உயிருடன் இருந்தார்கள்.
என்னைப் பற்றிய விவரத்தைச் சொன்னதும் அவர்கள்
காட்டிய மதிப்பும் அன்பும் என்னால் மறக்க
இயலாதவை. என்
பட்டியலிலேயே இல்லாத ஒருவரையும்
ஆச்சரியப்படததக்க
சூழலில் சந்திக்க நேர்ந்தது. அவரும் என்
தந்தையைப்பற்றிய
தகவலைச் சொல்பவராகவே இருந்தார். இந்த மண்ணில்
அவரையும்
அவருடைய அன்பையும் நினைத்துநினைத்துப் பேசுகிற
உயிர்கள்
இன்னும் ஏதோ ஒரு மூலையில் வசிக்கிறார்கள் என்னும் விஷயம்
எனக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. இந்தப்
பயணத்தாலும்
இந்தப் புத்தகத்தாலும் எனக்குக் கிட்டிய
பேரின்பம் இந்தப்
பெருமிதமே. ஊருக்குத் திரும்பியதுமே எல்லாக்
குறிப்புகளையும்
ஒருங்கிணைத்து சந்திரனுடைய ஆலோசனைப்படி
பின்னிணைப்பாக
வைத்து நானே மீண்டும் ஒருமுறை படித்தபோது
ஆச்சர்யப்பட்டுப்
போனேன். உலக அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளனும் தன்
புத்தகத்தை சந்திரன் படித்துவிடவேண்டும் என்று
ஏன் ஆசைப்பட்டு
தவியாய்த் தவிக்கிறார்கள் என்பதன் ரகசியம் புரிந்தது. இந்த ஆறு
குறிப்புகளையும் படிக்கும்போது உங்களுக்கும்
புரியக்கூடும்.
*
“ஆசிரமத்தில் எல்லாமே கூர போட்ட கட்டடங்கள்தான்.
அதுலதான் நாங்க இருந்தோம். ஒன்னொன்னிலயும் ஆறு
அல்லது
ஏழு பேர்ங்கன்னு ஒரு கணக்கு. இருக்கற வேலைங்கள
மாத்திமாத்தி
செஞ்சிடுவோம். ஒருநாள் சரியான பேய்மழ. ஒரு கூரை திடீர்னு
சரிஞ்சி சுவரெல்லாம் இடிஞ்சி விழுந்திடுச்சி.
வீட்டுக்குள்ள இருந்த
தொண்டர்ங்க கதி என்னாச்சோன்னு தெரியாம
எல்லாருமே ஓன்னு
அலறனோம். அப்ப சின்ன வயசுக்கார தம்பி ஒருத்தர்
அம்புபோல
அந்த மழயில ஓடி இடிஞ்ச சுவர்ங்கள அந்தப்பக்கம்
கொஞ்சம்
இந்தப்பக்கம் கொஞ்சம்னு தள்ளி வழி உண்டாக்கறது தெரிஞ்சிது.
அவருதான விஸ்வநாதன்னு எல்லாரும் பேசிகிட்டாங்க.
ஒத்த ஆளா
எல்லாத்தையும் இழுத்துப் போட்டுட்டுருந்தாரு
அவரு. சின்னதா
ஒரு வழி உண்டாச்சி. தரையோடு தரையா ஒரு
கொழந்தமாதிரி
படுத்தவாக்கில் தவழ்ந்துதவழ்ந்து உள்ள புகுந்து போனாரு.
கொஞ்சநேரம் கழிச்சி ரெண்டு காலுங்க மட்டும்
வெளிய தெரிஞ்
சிது. அடிஅடியா நவுந்துநவுந்து முழு உருவம்
தெரிஞ்சபோது,
அவரு இன்னொருத்தர புடிச்சி இழுத்துட்டு
வராருங்கறது தெரிஞ்
சிது. இதுக்கப்புறமும் ஒதுங்கிநின்று பாத்தா
மரியாத இல்லாம
போயிடும்ன்னு எல்லாருமே அங்க ஓடினோம். அடுத்த
அஞ்சி
நிமிஷத்துல உள்ள மாட்டிகிட்டிருந்த மத்த நாலுபேரயும்
காப்பாத்தி
இழுத்து வந்துட்டோம். அதுக்குள்ள விஷயம் பாபுஜி காதுக்கு
போயிடுச்சு. அடுத்த நிமிஷமே அவரும் அங்க
வந்துட்டாரு.
தொண்டருங்க எல்லாரும் விஸ்வநாதனப் பத்தி
பாபுஜிக்கு
சொன்னாங்க. பாபுஜி அவர நெருங்கி மார்போடு
கட்டித்
தழுவிகிட்டாரு.”
“விஸ்வநாதனப்பத்தி எப்ப நெனச்சாலும் எனக்கு
இந்தச்
சம்பவம்தான் உடனடியாக ஞாபகம் வரும்.
அதுக்கப்புறம் கதை
சொல்றதுல பெரிய கில்லாடி அவரு. அதுவும்
ஞாபகத்துக்கு வரும்.
ரொம்ப ரசனையோட கதை சொல்வாரு. என் ஞாபகத்துல
அவரு
சொன்ன பல கதைங்கல்லாம் நேத்து கேட்டாப்பல
இருக்குது. பெரிய
கதைசொரங்கம் அவரு. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கு
தகுந்தாப்லயும்
பாத்திரத்துக்கு தகுந்தாப்லயும் அவரோட கொரலும்
பாவனையும்
அழகழகா மாறும். நாங்கள்ளாம் ஜெயில்ல இருக்கறப்போ அவரு
சொல்ற கதைங்கதான் பெரிய தொணை. விஸ்வநாதன்,
ஒரு கதை
சொல்லுங்களேன்னு கேட்டதுமே கொஞ்சம்கூட தயக்கமே
இல்லாம
சொல்வாரு. அவருக்கு இந்தி, மலயாளம், தெலுங்கு, வங்காளம்
எல்லா மொழியும் அத்துபடி. எலலாத்தயும் கரச்சி
குடிச்சமாதிரி
பேசுவாரு. கேக்கற ஆளுக்கேத்தமாரி அந்தந்த
மொழியில பேசுவாரு.
அவரு சொன்ன ஒரு கதைய இன்னிவரிக்கும் நான்
ஆயிரம்
பேருக்காவது சொல்லியிருப்பேன். அவ்வளவு
அற்புதமான கதை
அது.”
“அந்த கதையில ரெண்டு சீடருங்க வருவாங்க. ஒரு
காட்டுல
ரெண்டு பேரும் ஒரு குருகிட்ட பயிற்சி
எடுத்துக்கறாங்க. கடுமையான
தவப்பயிற்சி. பயிற்சி முடிஞ்சது கடைசி நாள் ரெண்டுபேரயும்
தனித்தனியா அழைச்சி ஒரு மந்திரத்த
உபதேசிக்கறாரு குரு.
இந்த மந்திரத்த சொன்னா செல்வம்
கொழிக்கும்ங்கறாரு.
ஆனா வாழ்க்கையில் மூணுதரம் மட்டும்தான் இந்த
மந்திரத்தை
பயன்படுத்திக்க முடியும்னு சொல்றாரு. எல்லா
பற்றுங்களிலிருந்தும்
விடுபட்டு நிக்க பயிற்சி குடுத்த நீங்க பற்றைத்
தூண்டி செல்வத்த
சேர்க்கும் மந்திரங்கள எதுக்காக சொல்றீங்க குருவேன்னு ஒரு
சீடரு கேக்றாரு. குரு அவரு தோளத்தட்டி உன்
பற்றின்மை எந்த
அளவுக்கு பற்றில்லாம இருக்குதுங்கறத
பாத்துக்கறதுக்காகன்னு
சொல்லி அனுப்பறாரு.”
“சீடருங்க ரெண்டுபேரும் மனம்போன போக்குல
நடக்கறாங்க.
ஒரு கட்டத்துக்கப்புறம் நீ ஒரு பக்கம் போ நான்
ஒரு பக்கம்
போறேன்னு ஆளுக்கு ஒரு தெசையை பாத்து
நடக்கறாங்க. முதல்
சீடர் போன தெசையில ஒரு கிராமம் தெரிஞ்சிது.
கடுமையான
பஞ்சத்துல அந்த கிராமத்து ஜனங்க பசி பட்டினியில
ரொம்ப
கஷ்டப்பறாங்க. அந்த ஊரு சிற்றரசனே பட்டினியில
தவிக்கிறான்.
எல்லாத்தையும் பார்த்து சீடர் ரொம்ப துக்கத்துல
முழுகிடறாரு.
குருவ நெனச்சி மந்திரத்த சொல்றாரு. உடனே ஏரி கொளம்லாம்
ரொம்பி வழியுது. காடு மேடெல்லாம் பயிர்
பச்சையாயிடுது.
எல்லா எடங்களுயும் செழிப்பாவுது. ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும்
நிலவறையில ஏகப்பட்ட தானியம் சேந்துடுது.
கிராமத்து ஜனங்க
முகக்திலும் சந்தோஷம் கொடிகட்டி பறக்குது. ராவோட ராவா
சீடர் அந்த ஊரவிட்டு அடுத்த ஊருக்கு போயிடறாரு.
கொஞ்ச
நாள் கழிச்சி ஒரு விசித்திரமான கிராமத்த பாக்கறாரு.
அந்த
ஊருல கால்நடைங்களே இல்ல. அந்த ஊருல காலடி
எடுத்து
வைக்கற கால்நடை எப்படிப்பட்ட திடகாத்திரமானதா
இருந்தாலும்
நாலே நாள்ள வதங்கி செத்துபோவுது. கால்நடைங்க இல்லாததால
விவசாயம் இல்ல. விவசாயம் இல்லாததால
செழிப்புங்கறதே
இல்ல. சீடருக்கு தன் உள்ளுணர்வு மூலமா நிலத்தடி நீரில்
ஒருவித நச்சுத்தன்ம படர்ந்திருக்கிறது
தெரியுது. கருணையோட
தன் கமண்டலத்துலேருந்து கொஞ்சம் தண்ணிய உள்ளங்கையில
ஊத்தி மந்திரத்த முணுமுணுத்து பூமிலே
தெளிக்கிறாரு. உடனே
மண்ணுக்குள்ள இருந்த நச்சு அகன்று போவுது. செத்துப்போன
கால்நடைங்கல்லாம் மறுபடியும் உயிர்வந்து
நிக்குதுக. எல்லாருடைய
கொட்டிலுங்கள்ளயும் அம்மா அம்மான்னு மாடு கன்னுங்க கத்துது.
கால்நடைச்செல்வம் திரும்ப கெடைச்சதும் மக்கள் ஆனந்தத்துல
ஆட ஆரம்பிச்சிட்டாங்க”
“தொடர்ந்து காட்டுவழியா போயிட்டே இருக்கறாரு
சீடர். ஒரு
குகை வாசல்ல ஒருத்தன் பித்தனப்போல முணங்கி
கிட்டிருக்கான்.
என்னன்னு நெருங்கி விசாரிக்கறாரு. காட்டுக்கு
பக்கத்துல இருக்கற
பட்டணத்துக்காரன் அவன். பெரிய நகை வியாபாரி.
விக்கறதுக்காக
நாடுதாண்டி நாட்டுக்கு அனுப்பன ஆபரணங்கள யாரோ
கொள்ளையடிச்சிட்டாங்க, வியாபாரிங்களயும் கொன்னுட்டாங்கன்னு
சேதி கெடைச்சதா சொல்றாரு. மொத்த ஆஸ்தியையே
மொதலா
போட்டு அந்த நகைங்கள செஞ்சிருக்காரு. அதுல
கெடைக்கற
செல்வத்த வச்சிதான் ஏழு பொண்ணுங்களுக்கு
கல்யாணம்
செய்ய நெனைச்சிருக்கறாரு. செல்வம் வந்துரும்னு
கல்யாணத்துக்கு
வேணுங்கற ஏற்பாடுங்க நடக்குது. வியாபாரி
ஓட்டாண்டின்னு
தெரிஞ்சதும் எல்லாரும் ஒதுக்கிடறாங்க.
துக்கத்துல அழுதுக்கிட்டே
இருக்கிற ஏழு பொண்ணுங்க மொகத்த பாக்க மனசுல
தெம்பில்லாம
பகல் முழுக்க காட்டுல கழிக்கறாரு வியாபாரி.
ராத்திரி நேரத்துல
சொந்த ஊட்டுக்கே பிச்சைக்காரன்போல போயி
சாப்புட்டு
திரும்பறன்னு சொல்றாரு. வியாபாரி கதைய கேட்டு
மனது
நொந்துபோறாரு சீடர். மூணாவது மந்திரத்தயும்
சொல்லி வியாபாரி
இழந்த செல்வத்தயெல்லம் கெடைக்கறமாரி செய்றாரு.
“எங்கயும் தங்காம நடந்துட்டே இருக்கறாரு சீடர்.
சில
ஆண்டுகளுக்கு அப்புறமா ஒரு பட்டணத்துக்குள்ள வராரு.
ஒரு மாளிகைமுன்னால் பிச்சைக்காக நிக்கறாரு.
காவல்காரங்க
மொதலாளி வர நேரம், போபோன்னு அவர விரட்டறாங்க. அவரும்
கௌம்பறாரு. அப்ப மொதலாளி பல்லக்குல வந்து
எறங்கறாரு.
பாத்தா ரெண்டாவது சீடர்தான் அவரு. ரெண்டு பேருக்கும்
அடயாளம் தெரிஞ்சிடுது. சிரிச்சிக்கிறாங்க.
சீடரா இருந்த ஆளு
செல்வந்தரா மாறனது எப்படின்னு கேக்கறாரு மொதல்
சீடர்.
ரெண்டாவது சீடர் அதுக்கு பொறுமையா பதில்
சொல்றாரு.
குரு சொன்ன மந்திரத்த ரொம்ப நாளா
பயன்படுத்தாமத்தான்
இருந்தான். அதுக்கான சந்தர்ப்பமே அமையாம
இருந்திச்சி.
குரு நமக்கு மந்திரத்த சொன்னதுக்கான காரணம்
நம்மள
நாமே செல்வந்தனா மாத்திக்கறதா இருக்குமோன்னு
எனக்கு
தோணிச்சு. உடனே அந்த மந்திரத்த மூணுதரமும்
எனக்கு நானே
சொல்லி செல்வத்த பெருக்கிட்டேன். இன்னிக்கு
இந்த நாட்டு
அரசனவிட, நானே பெரிய செல்வந்தன் தெரிமான்னு சிரிச்சாரு.
அங்க தங்கறதுக்கு முதல் சீடருக்கு தயக்கமாக
இருந்திச்சி. சரி,
போய்வரன்னு சொல்லிட்டு கௌம்பி நடக்க ஆரம்பிக்கறாரு.”
“விஸ்வநாதன் இந்த இடத்துல கதைய நிறுத்திடுவாரு.
இதுதான்
இந்தியாவின் இரண்டு முகங்கள்னு சொல்லி நாங்க விவாதிப்போம்.
தன்னையே இழப்பது என்பது ஒருபுறம். தன்னை நோக்கி
எல்லாத்தையும் இழுத்துக்கறதுக்கறது
இன்னொருபுறம். நாங்க
சொன்ன விளக்கங்கள அவரு தப்புன்னு சொன்னதில்ல,
சரின்னும்
சொன்னதில்ல, மர்மமா சிரிச்சிட்டு விட்டுடுவாரு. அந்தச்
சிரிப்பு
அவருக்கு பெரிய வரம்னுதான் சொல்லணும்.
“விஸ்வாநாதன் புள்ளயா நீங்க? வாங்க. வாங்க. உள்ள வாங்க.
உங்கள பாக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்குது.
அந்தக் காலத்துல
அவர பாத்தமாதிரியே இருக்குது. அந்த நாற்காலிய
இப்படி
இழுத்து போட்டுக்கங்க. எனக்கு காது கொஞ்சம்
மந்தம். சத்தமா
பேசனாதான் கேக்கும்.”
“இந்த ஒத்த கால வச்சிட்டு நான் எங்கயும்
போவறதில்ல.
சுதந்தரத்துக்கு பிறகு உப்ப வாங்கி வியாபாரம்
பண்ணன்.
புள்ளைங்க வளந்தது எல்லாத்தையும் உட்டுட்டன்.
ஒருத்தன்
மொளகா வியாபாரம் செய்றான். இன்னொருத்தன் பொகயில
மண்டி வச்சிருக்கான். எனக்கு இந்த மூலைதான்
கதின்னு ஆயிடுச்சி.
வேளாவேளைக்கு சாப்பாடு வந்துடும். கண்ண மூடனா
அந்த
காலத்துல நடந்ததெல்லாம் படம்படமா ஓடும்.
எப்படிப்பட்ட
மனுஷங்களோடயெல்லாம் நாம் இருந்திருக்கம்னு
தோணும்.
அதையெல்லாம் அசைபோடறதுதான் என் வேல.”
“விஸ்வநாதன நெனைக்காத நாளே இல்ல தம்பி. என்னடா
கெழவன் அதிகமா சரடுவிடறானோன்னு உங்களுக்குத்
தோணலாம்.
எதுக்காக அப்படி நெனைச்சிக்கறன்னு சொன்னாதான்
உங்களுக்கு
புரியும்.”
“ஒரு ஊர்வலத்துல போலீஸ் துப்பாக்கி சூடு
நடந்திச்சி.
எனக்கு கால்ல குண்டடி. ஆஸ்பத்திரில
சேத்துட்டாங்க. கால
எடுக்கணுமின்னு சொல்லிட்டாரு டாக்டரு. சொந்தக்காரங்க
யாரும்
பக்கத்துல இல்ல. ஆசிரமத்துலேருந்து சில
தொண்டருங்கதான்
வந்து பொறுப்பா பார்த்துகிட்டாங்க. விஸ்வநாதன்
அப்படித்தான்
பழக்கமானாரு. அவரு என்ன சொந்த தம்பியப்போல
பாத்துகிட்டாரு.
நாப்பது நாளோ ஐம்பது நாளோ ஆஸ்பத்திரில படுக்கை.
அவர்
எனக்கு உயிர் குடுத்த தெய்வம்னுதான் சொல்லணும்.”
“வலி தாங்கவே முடியாது. கூரான கத்தியால யாரோ
கோடு
கிழிச்சிகிட்டே இருக்கமாதிரி ஒரே வேதனையா
இருக்கும். மனச
எங்கயும் எதிலயும் திருப்பமுடியாது. என் மனச
திசை திருப்பறதுக்காக
எங்கஎங்கயோ தேடி புஸ்தகங்கள கொண்டுவந்து
குடுப்பாரு
விஸ்வநாதன். அம்மா அப்பாவுக்கு
கூட்டாளிங்களுக்கு கடிதம்
எழுதுங்கன்னு கத்தகத்தயா பேப்பருங்க தருவாரு.
என்னைக்காவது
ஒருநாளு பக்கத்துல ஒக்காந்து அழகா பாடுவாரு.
கேக்க கேக்க
வேதனையெல்லாம் கரைஞ்சி போனமாதிரி ஆயிடும். யாரோ
தேவதைங்க எறங்கிவந்து வேதனைய போக்கறமாதிரி
இருக்கும். இதமா
பேசறமாதிரி இருக்கும். எல்லாரும் கண்முன்னால
நடமாடறமாதிரி
இருக்கும். ஒடம்புல புது ரத்தம் பாயரமாதிரி
இருக்கும். பரவசத்துல
மிதக்கறமாதிரி இருக்கும்.”
“என் பக்கத்து படுக்கையில இன்னொரு தொண்டர்
இருந்தாரு. விஸ்வநாதன் இல்லாத சமயத்துல எனக்கு
அவருதான்
பேச்சுக்தொண. பாபுஜி சொல்ற தியாகம், அர்ப்பணிப்புணர்வு,
உழைப்புலாம் அவரிடம் முழுஅளவுல இருக்கறத
பாக்கறேன்னு
சொன்னாரு. வாஸ்தவம்தான். முன்னபின்ன தெரியாத
என்கிட்டயே
இவ்வளவு பாசம் காட்டறாரே, அவரு மனசுக்குள்ள கடவுள்தான்
இருக்கணும்ன்னு நான் சொன்னன். அப்படின்னா
விஸ்வநாதனைப்
பத்தி முழுசா ஒங்களுக்கு தெரியாதான்னு கேட்டாரு
அவரு.
தெரியாதுன்னு சொன்னன். பாபுஜி கூட பத்து
வருஷத்துக்குமேல
இருக்கறாரு. ஏதோ ஒரு ஊர்வலத்துல நமக்கு
நடந்தாமாதிரி
துப்பாக்கிசூடு நடந்து பொண்டாட்டியையும் மூணு
புள்ளைங்களயும்
பறிகுடுத்துட்டாரு. அவருக்கு உண்டான வேதனை
உலகத்துல வேற
யாருக்கு நடந்திருந்தாலும் தாங்கமாட்டாங்க.
விஸ்வநாதன் கல்ல
முழுங்கி தண்ணி குடிச்சமாதிரி எல்லாத்தயும்
மனசுக்குள்ளேயே
போட்டு அழுத்திக்கிட்டாருன்னு சொன்னாரு.
அதக்கேட்டதும்
எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. தன்
கஷ்டத்திபத்தி வாயே திறக்காம
ஒருத்தர் இவ்வளவு தூரம் சேவை செய்யறாரேன்னு ஆச்சரியமா
இருந்தது. மனஉறுதிக்கு அவர்தான் எனக்கு
முன்மாதிரி. எந்த துக்கம்
வந்தாலும் அவரத்தான் நெனைச்சிக்குவேன்.
விஸ்வநாதனைப்போல
மனஉறுதியக் குடு கடவுளேன்னு தான்
வேண்டிக்குவேன்.”
“பாபுஜி
வார்த்தைக்கு இந்த தேசமே கட்டுப்பட்டு நின்னதுன்னு
சொல்வாங்க. அந்த பாபுஜியயே கட்டுப்படுத்தற
மாதிரி கேள்வி
கேட்டவங்க யாரும் இருக்கமாட்டங்கன்னுதான்
எல்லாரும்
நெனைச்சிட்டிருப்பாங்க. எனக்கு தெரிஞ்சி அவர
கட்டுப்படுத்தறமாதிரி
கேள்விகேட்ட ஒரே ஆள் விஸ்வநாதன்தான்.”
“ஒரு தரம் பாபுஜிக்கு உடல்நலம் ரொம்ப சரியில்லாம
போயிடுச்சி. படுத்த படுக்கையாயிட்டாரு. பல
டாக்டருங்க
வந்து பாத்தாங்க. நானும் விஸ்வநாதனும் இன்னும்
ஆறேழு
தொண்டருங்களும் அங்கதான் இருந்தோம். பென்சிலின்
மருந்து
அப்போதான் பிரபலமாயிட்டிருந்த நேரம். ஒரு வாரம்
அந்த
ஊசி போட்டுக்கணும்னு சொன்னாங்க டாக்டருங்க.
பாபுஜிக்கு
அதுல விருப்பமில்ல. முடியாதுன்னு
மறுத்துட்டாரு. எனக்கு
ராமநாமமே பென்சிலின், அதுவே போதும்னு சிரிச்சாரு. அவர
பேசி ஜெயிக்க முடியாத டாக்டருங்க சரி, உங்க விருப்பம்னு
போயிட்டாங்க. தொண்டர்ங்களும் ஒரொருத்தவங்களா
வெளிய போயிட்டாங்க. நானும் விஸ்வநாதனும்
மட்டும்தான்
இருந்தோம். விஸ்வநாதன் பாபுஜிய நெருங்கி
உங்ககிட்ட ஒருநொடி
பேசலாமான்னு தயக்கத்தோட கேட்டாரு. சொல்லுங்கன்னு
தலயாட்டனாரு பாபுஜி. பென்சிலினோட வருகை
மருத்துவ
உலகத்துல மிகப்பெரிய புரட்சி. கிட்டத்தட்ட நம்ம
அகிம்சைத்
தத்துவத்தப்போல. அதை நிராகரிக்கறதுக்கு
உங்களுக்கு ஆயிரம்
காரணம் இருக்கலாம். அதுல உங்க பிடிவாதம்தான்
வெளிப்படுதே
தவிர தெளிவு இல்லைங்கறது என் எண்ணம். அகிம்சைய
இன்று
நாடெங்கும் நாம் வலியுறுத்தி பேசறோம். அது ஒரு
சக்தியாகவே
வளர்த்திருக்கோம். ஆனா வன்முறையே எனக்கு
வழிமுறைன்னு
உறுதியா நிக்கறவங்க யாரயும் நம்மால அணுக
முடிஞ்சதில்ல.
ராமநாமமே எனக்கு பென்சிலின்னு சொல்லறதுக்கும்
வன்முறையே
எனக்கு வழிமுறைன்னு சொல்லறதுக்கும் பெரிய
வித்தியாசம்
இருக்கறமாதிரி எனக்குத் தெரியலைன்னு பேச்ச
நிறுத்தினாரு. பாபுஜி
எதுவும் பேசாம ரெண்டு மூணு வினாடி அவரு
முகத்தயே உத்துப்
பாத்தாரு. அவருடைய உதடுகள் துடிச்சிது.
விஸ்வநாதன பக்கத்துல
வான்னு சைகை காட்டனாரு. உங்க ஆலோசனைக்கு நன்றி.
நான்
இதைப்பற்றி யோசிக்கிறேன்னு சொல்லி அனுப்பனாரு.
**
நிறைய குழந்தைகளுக்கு நடுவே
உட்கார்ந்திருந்தார் அப்துல் காதர்.
நான் சென்ற நேரத்தில் அக்குழந்தைகளுக்கு கதையோ
பாட்டோ
சொல்லிக்கொண்டிருந்தார் அவர். என்னைப்
பார்த்ததும் அன்பு
நிறைந்த புன்னகையோடு அருகில் வருமாறு
அழைத்தார். வயசு
நிறைய ஆகிவிட்டது. கைத்தடியின் உதவியோடு கூட
அவரால்
எழுந்து நிற்க இயலவில்லை. என் கைகளை வாங்கித்
தன்
கைகளுக்குள் வைத்துக்கொண்டு வெகுநேரம் பேசாமல்
இருந்தார்.
அவருடைய உருண்ட விழிகள் தளும்பின. நிதானமாக
பேசத்
தொடங்கினார்.
“நான் ஆசிரமவாசியல்ல. எப்பவாவது சிலமுறை
போயிருக்கேன்.
தங்கன சமயத்துல விஸ்வநாதன் தங்கியிருந்த
அறையிலதான்
நானும் தங்கினேன். அவர் அதிகமா பேசக்கூடிய
ஆளில்ல. ஆனா
உறுதியான மனம் உள்ளவரு. ஓவியத்துல அவருக்கு
ரொம்ப
ஆர்வம் இருந்திச்சி. நேரம் கெடைக்கும்
போதெல்லாம் ஒரு பெரிய
நோட்டுல பென்சிலால படம் வரைஞ்சிசிட்டே
இருப்பாரு. மரம்,
செடி, கொடிங்க, விலங்குகள்,
மலைகள்னு வரையறதில ரொம்ப
பிரியம். நான் பாக்கும்போதே ரெண்டு மூணு நோட்டு
நெறயா
வரஞ்சி வச்சிருந்தாரு.”
“ஒருநாள் ஏதோ ஒரு ஆர்வத்துல யாருக்காக இத்தன
படங்கள
வரையறீங்கன்னு கேட்டேன்.”
“என் புள்ளைங்களுக்குன்னு சொன்னாரு அவரு.”
“எத்தன புள்ளைங்க ஒங்களுக்குன்னு மறுபடியும்
கேட்டேன்.”
“மூணு பேரு. ரெண்டு ஆணு, ஒரு பொண்ணுன்னு சொன்னாரு.
எங்க இருக்காங்கன்னு கேட்டேன். அமைதியா அண்ணாந்து
ஆகாயத்த காட்டனாரு. அப்பறமா மெதுவா கடவுள்கிட்ட
போயிட்டாங்கன்னாரு-. விஷயம் என்னன்னு
புரிஞ்சதும் ஒருநொடி
எனக்கு உடம்பே ஆடி நின்னுது. பேசறதுக்கு நாக்கே
வரலை.
ரொம்ப கூச்சமா இருந்திச்சி. அப்புறம் எதஎதயோ
பேசி அவர்
கவனத்த வேற பக்கமா திருப்பனன்.”
“ஒரு நாள் என் கொழைந்தங்களுக்கு ரெண்டு படம்
வரைஞ்சி
தரீங்களான்னு தயக்கத்தோடு கேட்டன். அவரு
சரின்னு
சிரிச்சிக்கிட்டே தலயசச்சாரு. நான் கௌம்பற
அன்னிக்கு பத்து
பதினைஞ்சி படங்கள ஒரு பைக்குள்ள போட்டு
கொண்டுவந்து
குடுத்தாரு.”
அத்தருணத்தில் அவரது பேச்சில் குறுக்கில்
புகுந்து “அந்தப்
படங்கள இன்னும் வச்சிருக்கிங்களா, நான் பாக்கலாமா?” என்று
அவசரமாக கேட்டுவிட்டேன். ஒரு வேளை நான்
அப்பேச்சில்
புகாமல் இருந்திருப்பின், அவர் இன்னம் கூடுதலான தகவலைச்
சொல்லியிருக்கக்கூடும். என் ஆவலைப் பார்த்ததும்
அடுத்த
அறைப்பக்கம் திரும்பி “உஸ்மான் உஸ்மான்” என்று இரண்டுமுறை
அழைத்தார். ஒரு சிறுவன் ஓடிவந்து நின்றான்.
சுவரோரமாக
இருந்த அலமாரிகளில் ஒன்றைச் சுட்டிக்காட்டி
திறக்கச்
சொன்னார். அதன் அடித்தட்டில் துணிமணிகளுக்குக்
கீழே
இருந்த பையைக் கொண்டுவருமாறு சொன்னார். சிறுவன்
ஒரு
புதையலைக் கொண்டுவருவதைப்போல எடுத்துவந்து
கொடுத்தான்.
என்னிடம் தரும்படி அவர் அச்சிறுவனிடம்
சொன்னார். அதை
வாங்கும்போது என் உடல் சிலிர்த்ததை உணர்ந்தேன்.
பைக்குள்
கையைவிட்டு அப்படங்களை வெளியே எடுத்தேன்.
பழமையின்
காரணமாக தாள்கள் பழுப்பேறியிருந்தன. தாள்களுடைய
உறுதியின்
காரணமாகவே அவை எடுத்துப் புரட்டிப் பார்க்கும்
நிலைமையில்
இருந்தன. என் அப்பாவின் விரல்பட்ட தாள்கள் அவை.
அவர்
விரல்கள் தீட்டிய ஓவியங்கள். அவற்றைத் தொடுவது
அப்பாவின்
விரல்களைப் பற்றுவதைப்போல இருந்தது-. அப்பா
என்று
மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். நெஞ்சம்
விம்மியது.
கண்கள் தளும்பித் தேங்குவதை தவிர்க்க
இயலவில்லை. ஒவ்வொரு
படத்திலும் அவருடைய கற்பனை சிறகடித்துப்
பறந்தபடி இருந்தது.
கிட்டத்தட்ட பத்து நிமிஷங்களுக்கும் மேல்
அந்தப் படங்களை
மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவருடைய
ஓவியச்
சுவடிகளில் ஒன்றுமே பெரியம்மாவின் வசம்
இருந்ததில்லை என்பது
ஞாபகம் வந்தது
ஏக்கத்தோடு அப்படங்களை அவரிடம்
திருப்பியளித்தேன்.
“ஒரு பொதையல்போல இன்னைக்கு வரைக்கும் அதை நான்
காப்பாத்தி வந்தாச்சி. இனிமேல் இது உங்க
புதையலா இருக்கட்டும்.
நீங்களே வச்சிக்குங்க”
நான் பேச முடியாமல் தடுமாறினேன்.
“ஆமா. நீங்களே வச்சிக்குங்க. என் மனசுக்கு
அதுதான் சரின்னு
படுது
**
“எரவாடா ஜெயில்லதான் நான் அவர முதல்முதலா
பாத்தேன்.
எலும்பான தேகம். ஆனா கண்கள்ல அசாதாரணமான
வெளிச்சம்.
நான் எப்பவும் படபடபன்னு பேசிட்டே இருக்கற ஆளு.
ஏழெட்டு
ஆளுங்கள கூட வச்சிகிட்டு பேசிட்டே இருப்பேன்.
கீதையபத்தி
அப்ப நான் ஒரு புத்தகம் எழுதியிருந்தன். அதன்
சிந்தனைகளைப்பத்தி
தொண்டர்களுக்கு முடியும்போதெல்லாம் சொல்லுவேன்.
ஒருநாளு விஸ்வநாதன் சின்னதா அடக்கமா ஏதோ ஒரு
புத்தகத்த
படிச்சிட்டிருந்ததப் பாத்தேன். என்ன புத்தகம்னு
கேட்டேன்.
திருக்குறள்னாரு. தமிழ்ல பல நூற்றாண்டுகளுக்கு
முன்னால்
எழுதப்பட்ட புத்தகம்னாரு. எனக்கு அவர
சீண்டிப்பாக்கணும்னு
ஆவல். ஒரே ஒரு குறள் சொல்லுங்கன்னு கேட்டேன்.
அறிவினான்
ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக்
கடைன்னு சொல்லி முடிச்சாரு. இவ்வளவுதானான்னு
அவசரப்
பட்டு கேட்டுட்டன். தொடங்கனதும் தெரியலை,
முடிச்சது
தெரியலையேன்னு ஆச்சரியமா இருந்திச்சி. என்ன
விளக்கம்னு
கேட்டேன். பத்து நிமிஷம் அவர் அதைப்பத்தி ஆழமா
சொன்னாரு.
எனக்கு ரொம்ப கூச்சமா போச்சி. என் ஆராய்ச்சியெல்லாம்
அதுக்கு முன்னால ஒன்னுமே இல்லைன்னு தோணிச்சி.
ஆறுமாசம்
நாங்க அந்த சிறையில இருந்தம். ஒவ்வொரு நாளும்
எனக்கு அவர்
தமிழ் சொல்லிக்குத்தாரு. திருக்குறளும்
சொல்லிக்குடுத்தாரு. அது
மிகப்பெரிய அனுபவம் எனக்கு. வாழ்க்கையில் ஒரு
தத்துவம்
பயன்படும் விதம் பத்தி வேற எந்த புத்தகமும்
இந்த அளவுக்கு
அழகா சொன்னதா தெரியலன்னு சொன்னன்.
சிறையிலிருந்து
வெளியே வந்ததும் மறுபடியும் திருக்குறள முழுசா
ஆங்கிலத்திலயும்
தமிழ்லயும் மாத்திமாத்தி படிச்சேன்.
கிட்டத்தட்ட ஒரு வருஷம்.
அதுலயே மூழ்கியிருந்தேன்னுதான் சொல்லணும்.
அதுக்கு அடுத்த
வருஷத்தில் திருவள்ளுவரின் வாழ்வியல்
தத்துவம்னு ஒரு புத்தகம்
எழுதி முடிச்சேன். என் வாழ்க்கையில அது ரொம்ப
முக்கியமான
கட்டம். வங்காளத்து அறிவு ஜீவிங்க கவனத்த
திருக்குறள்பக்கம்
திருப்பனது ஒருமுக்கியமான திருப்பம். விஸ்வநாதன
சந்திச்சுது என்
வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைன்னு
சொல்லணும். அவர
ஒரு நண்பர்ங்கறதவிட ஒரு குருன்னு சொல்லணும்.”
**
பயணத்துக்குத் தயாராவதன் பொருட்டு
துணிகளையெல்லாம்
பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்த சமயத்தில்
என்னைப்
பார்ப்பதற்காக மூதாட்டி ஒருவர் வந்திருப்பதாக
வரவேற்பறையிலிருந்து
தொலைபேசி வழியாகச் சொல்லப்பட்டதும் ஆர்வத்தோடு
வெளியே
வந்தேன். படியிறங்கி வரும்போதே வரவேற்பறைக்கு
அக்கம்பக்கமாக
பார்வையை ஒட்டியபடி வந்தேன். வெள்ளைப்
புடவையில்
வயதான ஒரு பெண்மணி நீண்ட இருக்கையில்
உட்கார்ந்திருந்தார்.
வரவேற்பறை இளம்பெண் கண்களாலேயே அவரே என்னைத்
தேடி
வந்தவர் என்பதை உணர்த்தினாள். சுருக்கம்
விழுந்து தளர்வைக்
காட்டும் முகம். அருகில் சென்று என்னை
அறிமுகப்படுத்திக்
கொண்டதும் அவர் முகம் மகிழ்ச்சியில்
மலர்ந்தது-.
ஒரு குழந்தையை வாங்குவதற்கு நீள்வதைப்போல என்னை
நோக்கி நீண்டன அவர் கைகள். அவர் அருகில்
உட்கார்ந்தபடி என்
கையை நீட்டினேன். அவர் என்னைத் தொட்டதும் உடல்
முழுக்க
ஒரு மின்சக்தி பாய்ந்ததைப்போல சிலிர்த்தது.-உள்ளங்கையை
வருடிக் கொடுத்தார். மனத்துக்குள் அவர்
சமநிலைக்கு வர
இயலாத அளவுக்கு போராடிக் கொண்டிருப்பதை என்னால்
உணரமுடிந்தது. கண்கள் திடீரென குழம்பிச்
சிவந்தன. மற்றொரு
கையில் மடித்துவைத்திருந்த கைக்குட்டையை
மூக்குக்கு அருகில்
வைத்து உறிஞ்சிக்கொண்டார். வாய் ஒரு கணம் கோணலாகி
சரியானது.
“நேத்து ராத்திரி அப்துல் காதர் போன்பண்ணி
விஸ்வநாதன்
புள்ளை வந்திருக்காம்மான்னாரு. எனக்கு
நம்பிக்கையே வரலை.
அவருதான் இந்த இடத்துல தங்கியிருக்கறதா
சொன்னாரு. இன்னிக்கு
கௌம்பிடுவாம்மான்னு சொன்னாரு. அதுதான் அவசரமா
நானே
கௌம்பிவந்தேன். உன்ன பாத்தா அச்சுஅசலா
விஸ்வநாதன்
மாதிரியே இருக்குது. ஒரேஒரு இம்மிகூட
மாத்தமில்லாம இருக்கிற.
அவரே மறுபொறப்பெடுத்து வந்ததுபோல இருக்குது.”
நிறுத்திநிறுத்திப் பேசினார். வயதின் காரணமாக
அவரால்
வேகமாகப் பேசமுடியவில்லை. நான் அவர் கண்களையே
பார்த்தபடி
இருந்தேன்.
“அவருடைய ஒழுக்கம், கடமையுணர்ச்சி, சுத்தம், எல்லாமே
பாக்கறவங்களை உடனே அவர் பக்கம் இழுத்துரும்.
எந்த நேரமும்
தேனீபோல சுறுசுறுப்பா இருப்பாரு. ஆசிரமத்துல
நான் பெண்கள்
பிரிவுல இருந்தேன். பால்யவிவாகம் நடந்து
விதவையான பொண்ணு
நானு. எங்க அண்ணனுக்கு காங்கிரஸ் மேல தீவிரமான
ஈடுபாடு.
அவரும் நானும்தான் ஆசிரமத்துல சேவை செஞ்சோம்.
சுதந்திரப்
போராட்டங்கறது ராமர் பாலம் கட்டணமாதிரி பெரிய
வேல.
அதுல அணில்சேவ மாதிரி எங்க ஆசிரமத்து வேலைங்க.
முடிஞ்ச
அளவுக்கு சின்னச்சின்ன காரியங்கள்.”
அவர் நிறுத்தி மூச்சு வாங்கினார்.
அங்கிருந்தபடியே அவருக்கு
ஒரு பழச்சாறு கொண்டுவருமாறு சொன்னேன். வந்ததும்
நிதானமாக
உறிஞ்சிப் பருகியபிறகு மீண்டும் பேசத்
தொடங்கினார்.
“அவரு கதையெல்லாம் ரொம்ப தாமதமாத்தான் தெரிஞ்
சிது. சொந்த விஷயத்த பேசறதுல அவருக்கு ரொம்ப
தயக்கம்.
சாயங்காலம் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப்
பிறகு ஒரு மரத்தடியில
எல்லாரும் உக்காந்திருந்தாங்க. இவரு கண்கள
மூடிட்டு ரொம்ப
ரசனையோட மோகன ராகத்துல பாடிட்டிருதாரு. அந்த
இசைதான்
என்ன அந்தப்பக்கம் இழுத்துச்சி. நானும் போயி
அந்த மரத்தடியில
உக்காந்திட்டேன். மனசெல்லாம் குளுந்தமாதிரி
ஆயிடுச்சி.
அவ்வளவு உசத்தியான சங்கீதத்த கேட்டு ரொம்ப நாளாய்டுச்சி.
ரொம்ப சந்தோஷமா இருக்குதுன்னு அவருகிட்ட
சொன்னன்.
தலையாட்டி சிரிச்சிகிட்டாரு. அதுக்கப்பறம்தான்
கொஞ்சம் கொஞ்
சமா பேசிப் பழகினேன்.”
“அவரப்பத்திய விவரமெல்லாம் தெரிஞ்சதும் அவர்மேல
நாட்டம்
அதிகமாயிடுச்சி. அவர் சம்மதிச்சா திருமணம் செய்துக்கலாம்னு
நெனைச்சேன். நேரா கேக்க எனக்கு தயக்கம். அண்ணன்
வழியா
சொல்லி அனுப்பினேன். ஆனா அவருக்கு அதுல
விருப்பமில்லன்னு
சொல்லி அனுப்பிட்டாரு. எனக்கு அது பெரிய
அதிர்ச்சி. ஒருநாள்
சமயம் பார்த்து என்கிட்ட என்ன கொறைன்னு
தயக்கத்தோடு
கேட்டேன்.”
“உங்கள கொறசொன்னா என் நாக்கு அழுகிடும். எனக்கு
அந்த
பாக்கியமில்ல. ஒன்னுக்கு ரெண்டுதரம்
பாத்தாச்சி. எதுவுமே சரியா
அமையல. போதும் அந்த அனுபவம். இன்னொரு பொண்ண
நான் பலி குடுக்கணுமா?- என்னால அத தாங்கமுடியாதுன்னாரு.
அவ்வளவு தீர்மானமா இருக்கறவங்கள மாத்தறது
கஷ்டம்ன்னு
நெனச்சி அவர தொந்தரவு செய்யாம தள்ளி
வந்துட்டேன்.”
பேச இயலாதபடி அவருக்கு இறைத்தது. கண்களும்
லேசாக
கசிந்தன. வாட்டம்கொண்ட குழந்தையைப்போல ஆனது
அவர்
முகம். இருக்கையுடன் ஒரு தலையணையை
அண்டக்கொடுத்து
அவரைச் சாய்ந்துகொள்ளச் செய்தேன். சில
நிமடங்களுக்குப் பிறகு
அவர் சகஜமானார்.
என்னையே சற்றுநேரம் கூர்ந்து பார்த்தபிறகு
புன்னகை
புரிந்தார். ஏதோ சொல்வதற்கு அவா உதடுகள்
துடித்தன. ஆனால்
பேசவில்லை. சிறிது இடைவெளிவிட்டு நான் மட்டும்
மேலும்
சில கேள்விகளைக் கேட்டு பதில்
தெரிந்துகொண்டேன். சிறிது
நேரத்துக்குப் பிறகு அவர் என்னைக் கேட்டார்.
“ஒனக்கு திருமணம் ஆயிடுச்சா?-”
“ம்.”
“மனைவி பெயர்?”
“சுலோச்சனா.”
“என் ஞாபகமா அவளுக்கு இத குடு”.
ஒரு பவழமணியை கைப்பைக்குள்ளிருந்து எடுத்துக்
கொடுத்தார்.
நான் கூச்சத்தோடு வாங்கிக்கொண்டேன்.
மிகவிரைவில் அவர்
என்னைக் கவர்ந்துவிட்டது எனக்கே ஆச்சரியமாக
இருந்தது.
அவரிடமிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை.
இந்தக்
கண்களில் என் தந்தையின் சித்திரங்கள்
பதிந்திருக்கின்றன
என்ற எண்ணம் மகிழ்ச்சியளித்தது. அக்கண்களைப்
பார்ப்பது
ஒருவகையில் அவரையே பார்ப்பதைப் போல அல்லவா
என்று
சொல்லிக்கொண்டேன்.
“உங்க பெயரை கேட்டுக்க மறந்துபோயிடுச்சி.”
புன்னகைத்தபடி அவரைப் பார்த்தேன்.
“மீரா”
(அமுதசுரபி தீபாவளி மலர், 2004)