18.11.1928 அன்று காந்தியடிகள் இலங்கையில் உள்ள மாத்தளைக்குச் சென்றிருந்தார். இராட்டையில் நூல் நூற்றல், கதராடை அணிதல், தீண்டாமை ஒழிப்பு, மதுவை விலக்குதல் ஆகியவற்றை ஒட்டி மக்களிடையில் விழிப்புணர்வை உருவாக்கும்பொருட்டும்
கதர் நிதி திரட்டும்பொருட்டும்
அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடைபெறவிருந்த மைதானத்தில் உள்ள மேடை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடைக்கு எதிரில் ஐம்பது அறுபது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் தொடங்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாக மேடைக்கு வந்துவிட்ட காந்தியடிகள் பொழுதை வீணடிக்க விரும்பாமல் மேடையிலேயே கால்களை மடக்கி உட்கார்ந்தபடி மடிமீது ஒரு பலகையை வைத்துக்கொண்டு ஏதோ எழுதத் தொடங்கிவிட்டார். அரைமணி நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக கூட்டம் சேர மைதானமே மனிதர்களால் நிறைந்துவிட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆவலோடு எழுந்து காந்தியடிகளையும் மக்களையும் வணங்கிவிட்டு எழுதிவைத்திருந்த வரவேற்பு மடலைப் படிக்கத் தொடங்கினார்.
சட்டென கூட்டத்தின் சலசலப்பு அடங்கிவிட, எங்கும் அமைதி நிலவியது. ஆர்வக்கோளாறில் காந்தியடிகளின் துணைவியாரான அன்னை கஸ்தூர்பாவை வரவேற்பாளர் காந்தியடிகளின் அன்னை என பிழையாக எழுதிவைத்துப் படித்துவிட்டார். தமிழைப் புரிந்துகொள்ள முடிந்தவர் என்பதால் காந்தியடிகள் அதைக் கேட்டு புன்னகைத்தார். காந்தியடிகள் தன் உரையில் அந்த வரியைக் குறிப்பிட்டு ‘அது ஒரு நல்ல பிழையே’ என்று சொல்லிவிட்டு மீண்டும் புன்னகைத்தார். பிறகு சமீப காலமாக அவர் தனக்கு அன்னையைப்போலவே விளங்குவதாகவும் சொன்னார். தொடர்ந்து
நூல்நூற்றலின்
முக்கியத்துவத்தையும்
கதராடையை அணிதலின் தனித்தன்மையையும் எடுத்துரைக்கத் தொடங்கினார். அதையடுத்து இலங்கைக்கு வரும் முன்பு இலங்கை நாட்டின் வருமானப் புள்ளிவிவரங்களைப் படித்ததாகவும் இலங்கை வருமானத்தில் கணிசமான பகுதி மதுவிற்பனையின் வழியாக ஈட்டப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமுற்றதாகவும் மதுப்பழக்கம் கொண்டவர்கள் அதை அடியோடு கைவிட முயற்சி செய்யவேண்டும் என்றும் சொன்னார். அடுத்து கருணையை வலியுறுத்தும் புத்தமதத்தைப் பின்பற்றும் இலங்கை நாட்டினர் தீண்டாமைப்பழக்கத்தைக் கைவிட்டு,. மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் எண்ணத்தை ஆழமாக நெஞ்சில் பதியவைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தன் உரையை முடித்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளின் உரையைக் கேட்பதற்காகவே திருகோணமலையிலிருந்து பதினேழு வயதுள்ள இளைஞரொருவர் வந்திருந்தார். கதராடைகளைப்பற்றி காந்தியடிகள் சொன்ன சொற்கள் அவருடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அக்கணமே இனி வாழ்வில்
கதராடைகளை மட்டுமே அணியவேண்டும் என மனத்துக்குள் உறுதியெடுத்துக்கொண்டார். ஊருக்குத் திரும்பியதும் தன் தந்தையாரிடம் தன் முடிவைத் தெரியப்படுத்தினார். அவர் வாங்கிக் கொடுத்த
கதராடைகளை அன்று முதல் அணியத் தொடங்கினார். காந்தியடிகளை தன் வாழ்க்கையின் வழிகாட்டியாகவே நினைத்தார் அவர். காந்தியடிகளின் நூல்களைப் பெற்று அவரை முழுமையாகத் தெரிந்துகொள்ள முனைந்தார். நாளுக்கு நாள் காந்தியடிகள் மீதான அவருடைய ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. அவர் பெயர் இராஜகோபால். பிற்காலத்தில் தியாகி கோ.ராஜகோபால் என இலங்கை மக்களால் அழைக்கப்பட்டவர்.
இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார் காந்தியடிகள். தன்னை வரவேற்பதற்காக திரண்டு வந்திருந்த மக்களிடையே உரையாற்றும்போது தான் வெறும் கைகளுடன் திரும்பியிருப்பதாக வருத்தமுடன் குறிப்பிட்டார். அதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை சட்டவிரோத அமைப்பென அறிவித்து ஓர் அவசரகால சட்டத்தையும் பிறப்பித்தது ஆங்கில அரசு. காந்தியடிகள் அச்சட்டத்தை அப்போதைய வைசிராயான வெலிங்க்டன் பிரபு இந்திய தேசத்துக்கு அளித்த
கிறிஸ்துமஸ் பரிசு என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். 04.01.1932 அன்று நள்ளிரவைக் கடந்த நேரத்தில் காந்தியடிகள் தங்கியிருந்த இடத்துக்குள் வந்த காவல்துறை அதிகாரிகள் காந்தியடிகளை உறக்கத்திலிருந்து எழுப்பி கைது செய்து எரவாடா சிறைக்கு அழைத்துச் சென்றார்கள். காவலர்களின் வாகனத்தில் அமரும் முன்பாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ”ஆண்டவனின் கருணை அளவற்றது. சத்தியத்திலிருந்தும் அகிம்சையிலிருந்தும் நீங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிறழாதீர்கள். சுயராஜ்ஜியத்தைப் பெற உங்களுக்கு உடைமையான அனைத்தையும் அர்ப்பணித்து தொடர்ச்சியாகப் போராடுங்கள்” என உரைத்துவிட்டுப் புறப்பட்டார். அந்தச் செய்தி இலங்கையில் உள்ள எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தது. அதைப் படித்த இராஜகோபால் இந்தியாவுக்கு உடனே சென்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று .விரும்பி தன் தந்தையாரிடம் அனுமதி பெற்று இந்தியாவுக்குக் கப்பலேறிவிட்டார்.
அப்போது சென்னையில் ஓட்டேரி பகுதியில் காங்கிரஸ் தொண்டர் முகாம் நடைபெற்று வந்தது. அதன் தலைவர் யோகி எம்.கே.பாண்டுரங்கன். முகாமுக்குத் தேவையான உதவிகளைச் செய்தவர் ராயபுரத்தைச் சேர்ந்த மரவணிகர் ஸ்ரீராமுலு நாயுடு. சென்னைக்கு வந்த இராஜகோபால் அந்த முகாமில் இணைந்து ஒரு மாத காலம் தங்கி பயிற்சி பெற்றார். பயிற்சிக்குப் பிறகு அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்பு மறியல் செய்யக் கிளம்பிய தொண்டர்களுடன் அவரும் சென்றார். “நம்மை அடிமைப்படுத்தி அடக்குமுறைச் சட்டங்களின் துணையோடு ஆட்சி செய்யும் ஆங்கிலேயரின் நாட்டைச் சேர்ந்த பொருட்களை வாங்குவது மிகப்பெரிய பாவம். ஒருவகையில் அது நம் தேசத்துக்கு இழைக்கும் துரோகம். தயவுசெய்து அந்நியத் துணிமணிகளை வாங்காதீர்கள்” என்று பொதுமக்களிடம் கோரும் துண்டறிக்கைகளை இராஜகோபால் அங்கு கூடியிருந்தவர்களிடம் வழங்கினார். அங்கு சாதாரண உடையில் நின்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி வேகமாக வந்து இராஜகோபாலின் கன்னத்திலேயே அறைந்து கைது செய்து சூளை காவல்நிலையத்துக்கு
அழைத்துச் சென்றார். ”இந்த பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கச் சொல்லி உன்னிடம் யார் கொடுத்தார்கள்?” என்று கேட்டுக்கேட்டு அவரை அடித்தார்கள். ஆனால் இராஜகோபாலிடமிருந்து ஒரு விவரத்தையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.
அவரிடமிருந்து
ஒரு தகவலும் கிடைக்காது என்று புரிந்துகொண்ட காவலர்கள் இரவு கவிந்த பிறகு அவரை “இந்தப் பக்கமே தலைகாட்டாதே. ஓடிப் போய்விடு” என்று மிரட்டி அனுப்பிவைத்தார்கள்.
ஆனாலும் அச்சமோ சோர்வோ இன்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார் இராஜகோபால்.
சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்ட காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கி தண்டி கடற்கரையில் உப்பெடுத்த நாள் 12.03.1930. அது நிகழ்ந்து இரு ஆண்டுகள் நிறைவெய்துவதை முன்னிட்டு 12.03.1932 அன்று சென்னைக் கடற்கரையில் அதிகாலையில் உப்புக் காய்ச்சி சட்டத்தை
மீற காங்கிரஸ் முகாம் திட்டமொன்றைத் தீட்டியது. அதன்படி யோகி எம்.கே.பாண்டுரங்கன் அவர்களின் துணைவியாரான சரஸ்வதி அம்மாள் அவர்களின் தலைமையில் ஒரு தொண்டர் கூட்டம் சென்னை சட்டக்கல்லூரி வாசலிலிருந்து ஊர்வலாமாகக் கிளம்பிச் சென்றது. அவர்களில் ஒருவராக இராஜகோபால் தேசியக் கொடியை ஏந்தி முன்னணியில் சென்றார். கடற்கரையை அடைந்ததும்
கையோடு கொண்டு சென்றிருந்த மண்பானையில் கடல்நீரை நிரப்பி உப்புக் காய்ச்சத் தொடங்கினார்கள். எங்கிருந்தோ பார்த்துவிட்டு வேகமாக வந்த காவல்துறையினர் அனைவரையும் தாக்கி கொடியையும் பானையையும் பிடுங்க முயற்சி செய்தார்கள். இடைவிடாத தாக்குதல்களை தாங்கிக்கொண்ட போதும் குடத்தையும் கொடியையும் தொண்டர்கள் உறுதியாகப் பற்றியிருந்தனர். “உப்பை அள்ளும்போது நம் கையிலிருக்கும் உப்பை காவலர்கள் பறித்துவிட அனுமதிக்கக்கூடாது. ஒரு தாய் தன் உயிரே போனாலும் தன் குழந்தையை பிறர் பறித்துச் செல்ல இடம்கொடுக்காமல் காப்பாற்றுவதுபோல நாம் எடுத்த உப்பைக் காப்பாற்றவேண்டும்” என்று உப்பு சத்தியாகிரகத்தின்போது சொன்ன சொற்களை நினைத்தபடி அனைவரும் காவல்நிலையத்துக்குச் சென்றார்கள். திருவல்லிக்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட மற்றோர் அணியையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துவந்தார்கள். இரவு கவிந்த பிறகு ஒவ்வொருவரையும் அடித்து அடித்து காவல்நிலையத்தைவிட்டு வெளியேற்றினார்கள்.
ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நினைவுதினம். அதையொட்டி நகரமே கடுமையான கண்காணிப்பில் இருந்தது. அன்றைய தினம் அந்நியத்துணிகளை அணியவேண்டாம் என்னும் வழக்கமான முழக்கங்களுடன் திருவல்லிக்கேணி கடைகள் முன்பு நடந்துசென்றபோது இராஜகோபாலை கைது செய்து அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். நீதிமன்றத்தில் விசாரணை நடந்து ஆறுமாதம் கடுங்காவல் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டது. தனிமைச்சிறையில் சொல்லொணாத் துயரை அவர் அனுபவித்தார். அங்கு விரித்துப் படுக்க பாயில்லை, தலையணையுமில்லை. வெறும் தரையிலேயே சாக்கை விரித்துப் படுக்கவேண்டியதுதான். காலையில் ஆறுமணிக்கு சிறையின் கதவுகள் திறக்கும். அக்கணம் முதல் மாலை ஆறுமணி வரைக்கும் அவர் ஓய்வின்றி செக்கிழுக்கவேண்டியிருந்தது. அதுவே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை. ஆனால் தண்டனையால் தளராமல் மேலும் மேலும் உறுதியை வளர்த்துக்கொண்டார் இராஜகோபால். தண்டனைக்காலம் முடிவடைந்ததும் திருகோணமலைக்குத் திரும்பி காந்தியக்கொள்கைகளை மக்களிடையே பரப்புவதில் ஈடுபடத் தொடங்கினார். ஈழகேசரி என்னும் இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின.
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் உலகப்போர் மூண்டது. இந்தியாவை அந்தப் போரில் இணைத்துக்கொள்ள விரும்பியது ஆங்கில அரசு. அதை எதிர்த்து தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார் காந்தியடிகள்.
அப்போது முதன்மைப் போராளியாக இருந்த வினோபா பாவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மாகாண சட்டசபை உறுப்பினர்களும் மத்திய சட்டசபை உறுப்பினர்களும் அகிம்சை வழியில் போராட்டத்தில் இறங்கினார்கள். காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகள் நாடெங்கும் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து சிறைபுகுந்தார்கள்.
யுத்தநிதி திரட்ட முனையும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கவேண்டாமென காந்தியடிகளின் சீடர்கள் இலங்கையிலும் பிரச்சாரம் செய்தார்கள். அப்போராட்டத்தில் ஈடுபடும் விழைவோடு இராஜகோபால் ஈழகேசரியில் செய்துவந்த வேலையை உதறிவிட்டு கப்பலேறி மதுரைக்கு வந்துவிட்டார். மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஹரிஜனர்களை அழைத்துச்சென்ற, காந்திய நிர்மாணத்தலைவர் வைத்தியநாதையரைச் சந்தித்து போராட்டத்தில் இணைய காந்தியடிகளிடம் அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். வைத்தியநாதையருக்கு இராஜகோபால் அணிந்திருந்த கதராடையைக் கண்டு நம்பிக்கை பிறந்தபோதும் “நினைத்ததும் சேர்ந்து யாரும் சத்தியாக்கிரகியாக முடியாது. காந்தியடிகள் வகுத்தளித்த நிர்மாணத் திட்டத்தில் கதர், தீண்டாமை, மதுவிலக்கு ஆகியவற்றில் முழுநம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே காந்தியடிகளிடமிருந்து அனுமதி கிடைக்கும். முதலில் உங்களுக்கு நூற்கத் தெரியுமா?” என்று கேட்டார். அக்கணத்தில் தான் அதுவரை நூற்கப் பழகாததை நினைத்து மனம் வருந்தினார் இராஜகோபால். உண்மையைச் சொல்லி விரைவில் கற்றுக்கொள்வதாக வைத்தியநாதையரிடம் வாக்களித்தார். அவர் இராஜகோபாலை மதுரைக்கு அருகிலிருந்த கல்லுப்பட்டி காந்தி நிகேதனுக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.
மூன்று மாத காலம் ஆசிரமத்தில் தங்கி இராட்டையில் நூல்நூற்கக் கற்றுக்கொண்டார். ஒரு மணிக்கு நானூறு முழ நீளத்துக்கு தடையில்லாமல் நூற்கும் பயிற்சியில் தேர்ந்த பிறகு அவருடைய நூற்கும் திறமையை மெச்சி சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டதும்
அவர் மீண்டும் மதுரைக்கு வந்து வைத்தியநாதையரைச் சந்தித்தார். உடனே அவருடைய பெயரை காந்தியடிகளுக்குப் பரிந்துரைத்தார் வைத்தியநாதையர். ஒரு மாத காலத்தில் அவருக்குக் காந்தியடிகளின் அனுமதி கிடைத்தது. அக்கடிதத்துடன் சத்தியாகிரகத்தில் ஈடுபட அவர் நாகப்பட்டினம் சென்றார். அங்கு யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி காவலர்களால் கைது செய்யப்பட்டார். பத்து நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை அடைந்ததுமே அவருடைய பிரச்சாரப்பணி மீண்டும் தொடங்கியது. அவருடன் மேலும் சில தொண்டர்கள் சேர்ந்துகொள்ள நடைப்பயணமாகவே ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைச் சந்தித்து உரைநிகழ்த்தியபடி செல்லத் தொடங்கினார்கள். தோளில் ஒரு கதர்ப்பையில் துணிமணிகள். ஒரு கையில் தேசியக்கொடி. மற்றொரு கையில் அறிவிப்புக்கு உதவும் தப்புமேளம். ஒவ்வொரு ஊராக இராஜகோபாலின் ஊர்வலம் தடையின்றி சென்றுகொண்டே இருந்தது. ஊர்மக்கள் சத்தியாகிரகிகளை மிகவும் மதிப்புடன் நடத்தி அவர்களுடைய உரைகளைக் கேட்டு மகிழ்ந்தார்கள். ஒரு சில ஊர்களில் அவர்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்கிறது. பருகுவதற்கு மோர் கொடுக்கிறார்கள் சிலர். ஒருசில ஊர்களில் எதுவும் கிடைப்பதில்லை. கிடைத்தால் உண்பதையும் கிடைக்காவிட்டால் பசியைத் தாங்கிக்கொள்வதையும் அவர்கள் பழகிக்கொள்கிறார்கள். ஏதோ ஓர் ஊரில் ஒருவர் அரிசிமாவையும் கேழ்வரகு மாவையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்து பசிக்கும்போது வெந்நீரில் கலந்து உண்ணும்படி கொடுக்கிறார். அதையும் அன்புடன் பெற்றுக்கொள்கிறார்கள். இடையில் சில ஊர்களில் அவர்களை வழிமறித்து சிலர் கேலி செய்து புண்படுத்துகிறார்கள். வசைமழை பொழிகிறார்கள். மெளனத்தின் வழியாகவே அவையனைத்தையும் எதிர்கொள்கிறார்கள் சத்தியாகிரகிகள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தீண்டாமை, மதுவிலக்கு, கதராடை அணிதல், சமூகமுன்னேற்றம், தெய்வ வழிபாடு என்பவற்றை ஒட்டி காந்தியடிகளின் கருத்துகளை மக்களிடையே விரிவாகப் பேசுகிறார்கள். நாகப்பட்டினத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கும் மேலாக நானூறு
மைல்கள் அளவுக்கு நடைபெற்ற அவர்களுடைய நடைப்பயணம் வழியில்
அமைந்திருந்த இருநூற்றைம்பது கிராமங்களில் தங்கி பிரச்சாரம் செய்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியும் இறுதியில் சென்னையை வந்தடைந்தது.
பிரச்சார அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டம் இராயபுரத்தில் நடைபெற்றது. உரையை முடித்து யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபோது இராஜகோபாலை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். நீதிபதி அவரிடம் “இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். குற்றவாளி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு இராஜகோபால் தெளிவும் உறுதியும் மிக்க குரலில் “ஆங்கில அரசாங்கத்தின் யுத்த ஏற்பாட்டுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என மக்களிடம் எடுத்துரைப்பது என் கடமை. என் கடமையையே நான் செய்தேன். உங்கள் பார்வையில் அது குற்றமெனில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று பதில் சொன்னார். நீதிபதி அவருக்கு நான்குமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இராஜகோபால் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர் சென்னைக்குத் திரும்பிவந்து சில நாட்களுக்குப் பிறகு இலங்கைக்குத் திரும்பிச் சென்றார்.
1942ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவின் உரையாடலில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தான விதை ஊன்றப்பட்டது.
ஆகஸ்டு மாதம் அந்த முழக்கம் ஒரு பேரியக்கமாக வடிவெடுத்தது. காந்தியடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தேசத்தலைவர்கள் நாடெங்கும் கைது செய்யப்பட்டார்கள். காந்தியடிகளின் போராட்டச் செய்தியையும் கைதான செய்தியையும் பத்திரிகைகள் வழியே அறிந்துகொண்ட இராஜகோபால் வழக்கம்போல அப்போராட்டத்தில் கலந்துகொள்ள நினைத்து கப்பலேறி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். சில நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தளத்தின் மீது விமானம் வழியாக குண்டு வீசி தாக்கிய ஜப்பானின் இரக்கமற்ற செயலை விவரித்து மாண்டுபோன மக்களின் குடும்பங்கள் ஆதரவின்றி நிற்கும் அலங்கோலத்தையும் சொன்னார். தொடர்ந்து இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, இலங்கையிலிருந்தும் வெள்ளையர்கள் வெளியேறவேண்டும் என்று ஓங்கிய குரலில் எடுத்துரைத்தார்.
இராஜகோபாலின் உரையை ஒட்டிய குறிப்பை எழுதி நாகப்பட்டினத்தின் காவல்துறை தஞ்சாவூருக்கு அனுப்பியது. அவர்கள் அதை சென்னைக்கு அனுப்ப இராஜகோபால் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு இராஜகோபாலுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கினார் நீதிபதி. இராஜகோபால் அலிப்புரம்
சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் சிறிது காலம் தமிழகத்தில் தங்கியிருந்தார் இராஜகோபால். அப்போதுதான் காந்திமதி என்னும் அம்மையாரை அவர் மணந்துகொண்டார். சட்டென மாற்றமடையத் தொடங்கிய இந்தியச்சூழல் தான் தொடர்ந்து இயங்குவதற்குத் தோதான வகையில் இல்லாததால் மீண்டும் இலங்கைக்குச் சென்று பத்திரிகைப்பணியில் ஈடுபடத் தொடங்கினார். காந்திய சேவா சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக சத்தியம், அகிம்சை, தீண்டாமை, மதுவிலக்கு, கிராம மேம்பாடு போன்ற காந்தியக்கொள்கைகளைப்பற்றிய விழிப்புணர்ச்சி மக்களிடையே பரவும் வகையில் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டார். பொதுமக்களின் ஆதரவோடு எல்லாக் கோவில்களிலும் ஹரிஜனங்கள் சென்று வணங்குவதற்கு வகைசெய்தார்.
பாரதியார் பாடல்கள் மீதும் நாமக்கல் கவிஞரின் பாடல்கள் மீதும் இராஜகோபால் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் நல்ல குரல்வளம் கொண்டவர். இசையறிவும் மிக்கவர். கவிஞர்களின் விடுதலைப்பாடல்களை மேடைதோறும் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்கும் நண்பர்கள் அவரைப் பாடும்படி தூண்டி கேட்பதும் வழக்கமாக இருந்தது.
இராஜகோபால் தன்னுடைய தன்வரலாற்றில்
சுபாஷ் சந்திரபோஸ் சந்திப்பு தொடர்பாக எழுதியிருக்கும் குறிப்பு மிகமுக்கியமானது. ஜபல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுபாஷ் சந்திரபோஸ் உடல்நிலை குன்றியதை ஒட்டி சென்னை சிறைச்சாலைக்கு முதல் வகுப்பு சிறைக்கதையாக அவர் மாற்றப்பட்டிருந்த நேரம் அது. சிறைவார்டர் வழியாக அச்செய்தி மூன்றாம் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளிடையில் பரவிவிட்டது. இராஜகோபாலும் மற்ற கைதிகளும் அவரைச் சந்திக்க விரும்பினார்கள். தன் விருப்பத்தை வார்டரிடம் கூறி அவருடைய உதவியை நாடினார்கள். பிறகு அவருடைய உதவியோடு ஒருமுறை போஸைச் சந்திக்கச் சென்றார்கள். போஸ் அவர்களுக்கு தானே தயாரித்த கேசரியைக் கொடுத்து அனைவரையும் உபசரித்தார். தேச விடுதலையைப்பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு அனைவரும் தம் கொட்டடிக்குத் திரும்பினர்.
வார்டரின் உதவியோடு அடிக்கடி அவரைச் சந்தித்து அவருடைய உரையைக் கேட்பது தொடர்ந்துவந்தது. மூன்று மாத காலம் அந்தத் தொடர்பு நீடித்தது. சென்னைக்கு மாற்றப்பட்ட பிறகும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றமெதுவும் ஏற்படவில்லை. காசநோய் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் அவரை வேறொரு இடத்துக்கு மாற்றுவது நல்லது என ஆலோசனை வழங்கினார்கள்.
புறப்படுவதற்கு
முன்பாக மூன்றாம் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களிடம் விடைபெறுவதற்காக அவரே வந்துவிட்டார். அங்கு அவர்கள் இழுக்கும் செக்குகளைப் பார்த்தும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பணிச்சுமைகளைப் பார்த்தும் மனம் கலங்கினார். நாம் அனுபவிக்கும் துன்பங்கள் வீண்போகாது. விரைவில் நம் நாடு சுதந்திரமடையும் என்று சொல்லி ஊக்கப்படுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
காந்தியடிகள் கண்ணீர் விட்டழுத இரு சம்பவங்களைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்து இராஜகோபால் எழுதிய கட்டுரை மிகமுக்கியமானது. இருபதுகளை ஒட்டிய காலகட்டத்தில் கல்கத்தாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த சார்லஸ் பெகன் என்பவர் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்கும் வகையில் பல இளைஞர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பிவைப்பதில் ஈடுபட்டிருந்தார். அவரால் எண்ணற்ற வங்காளத்து
இளைஞர்கள் கைதாகி சிறைக்கொடுமைகளை அனுபவித்து வந்தார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கோபிநாத் சகா என்னும் இளைஞர் 12.01.1924 அன்று அவரைச் சுட்டுக் கொல்வதற்காக அவருடைய அறைக்குள் சென்றார். ஆனால் சார்லஸ் பெகன் என நினைத்து அங்கிருந்த வேறொரு வெள்ளைக்காரரான எர்னஸ்ட்டே என்பவரை தவறுதலாகச் சுட்டுவிட்டார். காவல்துறை அவரை உடனடியாக கைது செய்தது.
அப்போது அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகக் கூட்டத்தில் இந்த அரசியல் கொலையை ஒட்டிய பேச்சு எழுந்தது. சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலை பெற்று வந்திருந்த காந்தியடிகள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நிகழ்ந்துமுடிந்த அரசியல் கொலையைக் கண்டித்து அவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அத்தீர்மானத்தை உடனே எதிர்த்தார்.
தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டது. சிலர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அகிம்சை வழி கோட்பாட்டை தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கே புரியவைக்க முடியவில்லையே என்னும் துக்கத்தால் மனம் வருந்தினார் காந்தியடிகள். சபையினர் நடுவிலேயே அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
15.08.1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்திய நாடு இரு துண்டான விதம் காந்தியடிகளை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. எங்கெங்கும் மதமோதல்கள். மரணங்கள். பஞ்சாப் நகரில் சீக்கியர்கள் நிறைந்த ஒரு கிராமத்தை பகைக்கும்பல் வந்து சூழ்ந்துகொண்டது. வீடுகளுக்குத் தீவைத்துக் கொளுத்தியது. சர்தார் பிரதாப்சிங் என்பவர் தன்னுடன் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு அக்கும்பலுடன் போராடினார். மூன்று நாட்கள் வரைக்கும் அப்போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் அனைவரும் பகைக்கும்பலிடம் அகப்பட்டுவிட்டனர். அவர்களைக் கட்டிவைத்து தலைமுடியை வெட்டி மதமாற்றம் செய்த்து அக்கும்பல். அக்கிராமத்தில் வாழ்ந்த எழுபத்துநான்கு இளம்பெண்கள் சிறைப்பிடித்து வரப்பட்டனர். அனைவரையும் மதம் மாறவைத்து மணந்துகொள்ளவேண்டும் என்று திட்டமிட்டனர்.
உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள நினைத்த அப்பெண்கள் அருகிலிருந்த கிணற்றில் இறங்கிக் குளித்து தொழுதுவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். படிக்கட்டுகள் வழியாக கிணற்றில் இறங்கிய ஒவ்வொருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரைத் துறந்தனர். வெகுநேரம் கடந்த பிறகும் பெண்கள் வராததால் அவர்கள் சென்ற பாதையில் தேடி வந்த கும்பல் அனைவரும் பிணமாக மிதப்பதைக் கண்டு திகைத்தனர். அக்கணத்தில் அவர்களிடமிருந்த மிருக உணர்ச்சி மறைந்து மனித உணர்ச்சி மேலெழுந்தது. அவமானத்தால் கூனிக் குறுகினர். கிணற்றிலிருந்து ஒவ்வொரு சவமாக வெளியே எடுத்து அடக்கம் செய்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருத்தியை உடனடியாக அருகில் செயல்பட்டுவந்த மருத்துவமுகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மருத்துவராக சேவை செய்துவந்த சுசிலா நய்யார் அப்பெண்ணை உயிர்பிழைக்கவைத்தார். நடந்த சம்பவத்தைக் கேட்டதும் காந்தியடிகளின் கண்களில் கண்ணீர் தளும்பியது. காலமெல்லாம் எடுத்துரைத்து வந்த அகிம்சைவழியின் ஆற்றலையும் பெருமையையும் இந்தியச் சமூகம் சரியான விதத்தில் உணர்ந்துகொள்ளவில்லையே என்னும் ஆற்றாமையே அவருக்குள் துக்கமாகப் பெருகியது.
இந்த உலகத்தில் அனைத்தும் நல்லதாகவும் உண்மையானதாகவும் வன்முறையற்றதாகவும் இருக்கவேண்டுமென்று நினைத்தவர் காந்தியடிகள். அதற்காகப் போராடும் எளிய உயிராகவே அவர் தன்னைப்பற்றி எப்போதும் நினைத்திருந்தார்.
ஆனால் அந்த உயரத்தை எட்டித் தொட்டுவிட முடியாதபடி தான் தோற்றுக்கொண்டே இருப்பதாக அவர் நினைத்தார். அதே நேரத்தில் தன் முயற்சியில் அவர் ஒருபோதும் தளராமல் ஈடுபட்டபடியே இருந்தார். அந்தப் பயணம் வேதனை மிக்கதென்றாலும் அந்த வேதனையையே தன் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் வகையில் தன் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கை அவரை இறுதிமூச்சு வரை வழிநடத்தியது. காந்தியக்கொள்கைகள் அனைத்தும் இந்த உலகத்தை மாற்றும் நோக்கத்தைவிட, மனிதர்கள் தம்மைத்தாமே சீரமைத்துக்கொள்ளவும் ஆற்றலுள்ளவர்களாக வடிவமைத்துக்கொள்ளவும் உதவுவதையே நோக்கமாகக் கொண்டவை. ஒருவருடைய சிந்தனையையும் சொல்லையும் செயலையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலை காந்தியின் சொற்கள் கொண்டிருந்தன. காந்தியடிகளை நம்பும் ஒவ்வொருவரும் தன்னை அறியாமலேயே தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுவிடுகிறார். காந்தியத் தொண்டர்கள் அனைவரும் அப்படி உருவானவர்களே. அவ்வரிசையில் திருகோணமலை இராஜகோபாலின் இடம் மகத்தானது.