Home

Tuesday 21 January 2020

நிலைகொள்ளாத பறவை - அஞ்சலிக்கட்டுரை



பெங்களூர் நகரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சென்ட்ரல் கல்லூரி மிகப்பெரிய புல்வெளியைக் கொண்ட வளாகம். அந்தக் காலத்தில் இராஜாஜி அந்தக் கல்லூரியில்தான் சட்டப்படிப்பு படித்ததாகச் சொல்வார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலரும் அங்குதான் சந்தித்து உரையாடுவோம். தமிழவன், கோ.ராஜாராம், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, மகாலிங்கம், முகம்மது அலி, கிழார், தேவராசன் என பலரும் வந்து கலந்துகொள்வார்கள். சமீபத்தில் படித்த புத்தகத்தைப்பற்றி யாராவது ஒருவர் முதலில் பேசி முடித்ததும் அதையொட்டி உரையாடல்கள் வளர்ந்துசெல்லும். இதுதான் கூட்டத்தின் நடைமுறை.

ஒருநாள் கூட்டத்துக்கு இளைஞரொருவரை புதிதாக அழைத்து வந்திருந்தார் தமிழவன். பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுவதாகவும் கவிதை எழுதக்கூடியவரென்றும் அனைவருக்கும் அரிமுகப்படுத்தினார். அவர் பெயர் நஞ்சுண்டன். சொந்த ஊர் சேலம். சிரித்த முகம். எந்த வேறுபாடும் காட்டாமல் சட்டென்று ஒட்டிவிடும் நெருக்கம். பேச்சில் ஒரு வேகம். உறுதியான குரல். இவையனைத்தும் சேர்ந்த கலவைதான் அன்றைய நஞ்சுண்டன். அன்று அவர் தன் குறிப்பேட்டிலிருந்து சில கவிதைகளைப் படித்தார். அனைவரும் அக்கவிதைகளையொட்டி சிறிது நேரம் உரையாடினோம்.
ஓராண்டுக்குள்ளேயே அவர் ஒரு தொகுப்பு வெளியிடும் அளவுக்கு நிறைய கவிதைகள் எழுதிவிட்டார். விரைவில் புத்தகமாக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். பதிப்பாசிரியர்களிடம் கொடுத்து ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதைவிட சொந்தச் செலவில் தொகுப்பை வெளியிடப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். கவிஞர் என்னும் அடையாளத்தின் மீது அவருக்கு அந்த அளவுக்கு விருப்பமிருந்தது. ஒரு விஷயத்தை அவர் முடிவுசெய்துவிட்டால், அவருடைய வேகத்தை அவராலேயே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. நாலைந்து நாட்களிலேயே ஒரு புத்தகம் போலவே தோற்றம் தரும் அளவுக்கு கையெழுத்திலேயே தன் தொகுப்பை எழுதி முடித்து என் அலுவலகத்துக்கு வந்து என்னிடம் கொடுத்தார். ”தொகுப்புல எத சேர்த்துக்கலாம், எத எடுக்கலாம்னு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. எந்த தாட்சண்யமும் பார்க்காம சொல்லுங்க. நான் உங்க வார்த்தையை நம்பறேன்என்று அழுத்திச் சொன்னார். அலுவலகத்துக்கு வெளியே சென்று நாங்கள் தேநீர் அருந்தினோம். “வர வெள்ளிக்கிழமை சாயங்காலம் இதே நேரத்துக்கு வரேன். அப்ப பேசலாம்என்று சொல்லிவிட்டு உடனே சென்றுவிட்டார்.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உட்கார்ந்து நான் அக்கவிதைகளைப் படித்துமுடித்தேன். தொகுப்பில் இருக்கலாம் என்று நான் உணர்ந்த கவிதைகளை ஒரு பட்டியலாகவும் நீக்கலாம் என்று உணர்ந்த சில கவிதைகளை மற்றொரு பட்டியலாகவும் பிரித்து குறிப்புகளை எழுதிவைத்துக்கொண்டேன். வெள்ளிக்கிழமை அன்று அவரைச் சந்தித்தபோது அக்குறிப்புகளின் உதவியோடு விரிவாகப் பேசினேன். அனைத்தையும் அவர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். சில கருத்துகளை ஏற்பதாகவும் சில கருத்துகளை ஏற்க விருப்பமில்லையென்றும் வெளிப்படையாகவே சொன்னார். அந்த மாத இறுதிக்குள் தொகுப்பைக் கொண்டுவந்துவிடுவதாக உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்த மாதத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்திருந்த நஞ்சுண்டனின் முகத்தில் மகிழ்ச்சிக்களை மின்னியது. தோள்பையிலிருந்து புதிய தொகுப்பை எடுத்து அனைவருக்கும் ஒரு பிரதியைக் கொடுத்தார். தொகுப்பின் தலைப்புசிமெண்ட் பெஞ்சுகள்’. அதற்கு அடுத்த கூட்டத்தில் அனைவருமே அத்தொகுதியைப்பற்றிப் பேசினோம்.
ஆர்வமும் செயல்வேகமும் கொண்ட அளவுக்கு எதிலும் தொடர்ச்சி இல்லாத அளவுக்கு அடிக்கடி ஒன்றைவிட்டு இன்னொன்றை எடுக்கும் மனப்போக்கும் நஞ்சுண்டனிடம் இருந்தது. ஒன்று அவரை மேலே செலுத்தும் விசை. இன்னொன்று கீழ்நோக்கி இழுக்கும் விசை. இரு விசைகளாலும் அவர் மாறிமாறி இழுபட்டபடி இருந்தார். அவர் சொல்லும் விஷயத்தை கட்டாயம் செய்துவிடுவார் என்று உறுதியாக நம்பிக்கை கொள்வதும் சிரமம். இவரால் இது முடியுமா என்று அவநம்பிக்கை கொள்வதும் சிரமம்.
சிமெண்ட் பெஞ்சுகள் தொகுதியை அடுத்து அவர் கவிதைகள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டார். சிறுகதைகளின் திசையில் அவர் மனம் திரும்பியது. அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட -நேர்க்கோட்டுக் கதைகளையும் வடிவமற்ற வடிவம் கொண்ட கதைகளையும் எழுதிப் பார்க்க முயற்சி செய்தார். “உங்களுக்கு என்ன வருமோ, அதை செய்யுங்க நஞ்சுண்டன். இந்த மோஸ்தர்கள் மாயையெல்லாம் அவசியம்தானா?” என்று ஒருநாள் கேட்டேன். “ஒரு ரைட்டருடைய ரைட்டிங்க்ஸ்ல சோதனைகள் தோத்துப் போகலாம். ஆனால் சோதனைகளே வேணாம்னு எப்படி இருக்கமுடியும்?” என்று கேட்டார். நான் அந்த உரையாடலை வளர்க்க விரும்பவில்லை.
நாளடைவில் தான் நினைத்த அளவுக்கு கதைகளையும் அவரால் எழுத இயலாமல் போய்விட்டது. கூட்டங்களுக்கு வருவதையும் அவர் குறைத்துக்கொண்டார். சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அமையவில்லை. ஒருமுறை இதைக் குறிப்பிட்டு அவரிடம் கேட்டபோதுநான் இருக்கற எடம் வெகுதூரம். ரெண்டுமூணு மணிநேரம் பஸ்ல பயணம் செஞ்சி வரணும். அதெல்லாம் சரிவராது. எனக்கு தோணும்போது நானே வந்து உங்கள பார்ப்பேன்என்று சொல்லிவிட்டார்.
ஒரு சில ஆண்டுகள் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஒருநாள்  மாலையில் திடீரென அலுவலகத்துக்கு வந்திருந்தார். தமிழிலிருந்து கன்னடத்துக்கு மொழிபெயர்க்க நினைத்திருப்பதாகச் சொன்னார். ”யாருமே இந்தத் துறையில் இல்லை. பத்துப்பதினைந்து ஆண்டுகளாக எந்தப் படைப்புமே தமிழிலிருந்து கன்னடத்துக்கு வரவில்லை. நான் தொடங்கிவைக்கப் போகிறேன். முதல் முயற்சியாக ஒரு புளிய மரத்தின் கதை நாவலை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அடுக்கிக்கொண்டே போனார். சில ஆண்டுகள் பழக்கத்திலேயே அவருடைய இயல்பைப் புரிந்துகொண்டவன் என்கிற முறையில்எடுத்ததுமே ஏன் பெரிய வேலையில் கைவைக்கிறீர்கள்? முதலில் சிறுகதைகள் சிலத எடுத்துச் செய்யுங்க. அப்புறமா நாவல் பக்கம் போவலாம்என்று மெதுவாகச் சொன்னேன். முடியாது என்பதுபோல தலையசைத்துப் புன்னகைத்தபடி இல்ல பாவண்ணன். என்ன பொறுத்தவரையில் எல்லாமே பெரிதினும் பெரிது கேள்தான். புளிய மரத்தின் கதை சரியான தேர்வுதானா, அதைச் சொல்லுங்கஎன்று தொடங்கிய இடத்துக்கே வந்து நின்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “உங்க தேர்வு நல்ல தேர்வுதான். உங்க விருப்பமும் நல்ல விருப்பம்தான். நிச்சயம் செய்யவேண்டிய வேலைதான். செய்யுங்கஎன்றேன்.
இரண்டு மூன்று வார இடைவெளியில் அவர் மீண்டும் அலுவலகத்துக்கு உற்சாகத்தோடு வந்தார். நாவலின் முதல் இரு அத்தியாயங்களை கன்னடத்தில் மொழிபெயர்த்து கணிப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்ட பிரதிகளின் கோப்பை என்னிடம் கொடுத்தார். வேலை நேர்த்தி அவருடைய சிறப்புக்குணங்களில் ஒன்று. “இப்ப படிக்கவேணாம். ஆபீஸ் முடியட்டும். எங்கனா புல்வெளிக்குப் போய் படிக்கலாம்என்றார். அலுவலகம் முடிந்த பிறகு காப்பி அருந்திவிட்டு அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்று உட்கார்ந்தோம். கன்னடப் பிரதியை என்னிடம் கொடுத்துவிட்டு தமிழ்ப்பிரதியை தன்னிடம் வைத்துக்கொண்டார். “நான் தமிழ்ல ஒரு வாக்கியம் படிக்கறேன். நீங்க அதே வாக்கியத்த கன்னடத்துல படியுங்க. எங்கயாவது இடறுதுன்னா நிறுத்துங்க. சரி பண்ணிடலாம்என்று உற்சாகமாகப் படிக்கத் தொடங்கினார். ஏறத்தாழ இரண்டு மணி நேரம். வரிவரியாக நாங்கள் இருவரும் அந்த அத்தியாயங்களைப் படித்துமுடித்தோம். ஒரு சிறு இடறல் கூட இல்லை. நான் அவருடைய கைகளைப் பற்றிக் குலுக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.
நீங்க எனக்கு இன்னொரு உதவி செய்யணும். இத எடுத்துச் சென்று சுந்தர ராமசாமியிடம் படித்துக் காட்டப் போகிறேன். நீங்கள் எனக்கு ஒரு அறிமுகக்கடிதம் எழுதிக் கொடுக்கவேண்டும்என்றார்.  நிச்சயம் அந்த முயற்சி சுந்தர ராமசாமிக்குப் பிடிக்கும் என்று எனக்குத் தோன்றியது. மகிழ்ச்சியாக உடனடியாக அவருக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன்.
ஒரு பத்து நாட்கள் கழித்து நஞ்சுண்டன் மீண்டும் அலுவலகத்துக்கு வந்தார். அவர் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. அந்த மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமிக்குப் பிடித்துவிட்டது என்பதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. “அப்பறம் என்ன, சீக்கிரமா அடுத்தடுத்த அத்தியாயங்களையும் முடிச்சிடுங்க. இந்த ஆண்டுக் கடைசிக்குள்ள புத்தகத்த கொண்டுவந்திரலாம்என்றேன். “இந்த வருஷம் இதான் பெஸ்ட் ட்ரான்ஸ்லேஷன், எழுதி வச்சிக்குங்கஎன்று புன்னகையோடு கையசைத்துவிட்டுச் சென்றார்.
வழக்கம்போல சில மாதங்களாக அவரைப் பார்க்கவே முடியவில்லை. வேலையில் மூழ்கியிருக்கக்கூடும் என்றே நான் நினைத்திருந்தேன். சரியாக ஓராண்டுக்குப் பிறகுதான் அவரை நான் பார்த்தேன். தாடி வளர்த்திருந்தார். ஆளும் மெலிந்துவிட்டார். வழக்கமாக தான் உடுத்தும் ஆடைகளில் மிகவும் அக்கறையோடு இருப்பவர் அவர். அன்று ஏனோதானோ என்று உடுத்தியிருந்தார். கண்ணாடிக்குள் கண்கள் ஒடுங்கியிருந்தன. நீரிழிவுப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாகச் சொல்லி வருத்தப்பட்டார். ”அதெல்லாம் இன்னைக்கு ஒரு பிரச்சினையே இல்ல. சீக்கிரம் சரியாய்டும்என்றேன்.
முதல் இரு அத்தியாயங்களைத் தொடர்ந்து புளிய மரத்தின் கதை நாவலை அவர் தொடவே இல்லை. நாளை நாளை என ஒத்திவைத்து அவரால் செய்யவே இயலாதபடி போய்விட்டது. நான் மெளனமாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். “கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கலாம்ன்னு யோசிக்கிறேன். மரணத்தை மையமாகக் கொண்ட ஒரு பத்து கதைகள எடுத்து செய்யலாம்ன்னு திட்டம். என்ன சொல்றீங்கஎன்றேன். ”சரி, செய்ங்கஎன்றேன் நான். “எல்லாக் கதைகளையும் உங்ககிட்டதான் கொண்டுவருவேன். நீங்க படிச்சிட்டு சொல்லணும்என்றார். நான் அதற்கும் சம்மதித்தேன்.
இந்த முறை அவர் சீராகவும் தொடர்ச்சியாகவும் வேலை செய்தார். ஏறத்தாழ ஏழெட்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட கதைகளை முடித்துவிட்டார். வழக்கம்போல மாறிமாறிப் படித்து சீராக்கிக்கொண்டார். தொகுப்புக்குமரணம் மற்றும்என்று பெயர் சூட்டினார். அது 2002இல் வெளிவந்தது. அவர் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். “இதேபோல பெண்கள் பாடுகளை மையமாகக் கொண்ட கதைகளை எடுத்துத் தொகுத்தால் நன்றாக இருக்குமா?” என்று கேட்டார். “நிச்சயம் நன்றாக இருக்கும், செய்யுங்கஎன்றேன். அவரும் வேகமாகத் தொடங்கினார். அந்த மாதமே ஒரு சிறுகதையை முடித்துவிட்டார். அத்தோடு சரி, அவருடைய வேகம் சரசரவென இறங்கிவிட்டது. அந்தத் தொகுப்புவேலையை முடிக்க அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. அக்கதைகளேஅக்காஎன்னும் தலைப்பின்கீழ் வந்தன. அக்கா என்னும் விளி பொதுவாக அக்கமகாதேவியைக் குறிக்கும் சொல். இன்னொரு கோணத்தில் பெண்ணுலகத்தின் குறியீடு. தொடர்ந்து சீராக இயங்கி அனந்தமூர்த்தியின் அவஸ்தை, பிறப்பு ஆகிய இரு நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். இந்தக் காலகட்டமே அவர் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்த காலம்.
ஒருமுறை விவேக் ஷான்பாக் என்னும் கன்னட எழுத்தாளரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவர இருப்பதாகவும் கதைகளையெல்லாம் தேர்வு செய்துவைத்துவிட்டதாகவும் சொன்னார். சில கணங்கள் கழித்துநீங்க எதையும் செஞ்சிடாதீங்கஎன்றார். செய்யமாட்டேன் என்று நானும் அவரிடம் சொன்னேன். ஓராண்டு கடந்த நிலையில்கூட அவர் ஒரு கதையைக்கூட செய்யவில்லை. இதேபோல ஜயந்த் காய்கிணியின் தொகுப்புத்திட்டம் கூட அவர் மனத்தில் இருந்தது. ஆனால் எதுவும் செயல்வடிவம் கொள்ளவில்லை.
எதிர்பாராத விதமாக அவர் கவனம் இலக்கணத்தின்பால் திரும்பியது. தமிழிலக்கணத்தை கசடறக் கற்றார் என்றே சொல்லவேண்டும். அவர் பேசத் தொடங்கினாலே இலக்கணக்குறிப்புகளாகக் கொட்டுவார். தனது பைக்குள் ஏராளாமான புத்தக, இதழ்களின் பக்கங்களின் ஒளியச்சுப் படிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் சிவப்பு மையால் அடிக்கோடிட்ட பகுதிகள் காணப்படும். “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதனா தமிழ் எப்படி உருப்படும்?” என்று தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பார்.
மைசூரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்திய மொழிகள் மைய நிறுவனம் தமிழிலக்கணக் கோட்பாடுகளை கன்னடத்திற்கு மொழிபெயர்க்கும் ஒரு திட்டத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தது. சில ஆண்டுகள் அர்ப்பணிப்புணர்வோடு அந்த வேலையை அவர் செய்தார். தமிழ் இலக்கணச் சொல்லுக்கு இணையான கன்னட இலக்கணச் சொல்லைத் தேடி அவர் மொழியறிஞர்களிடம் விளக்கம் பெற அலைந்ததை நான் அறிவேன். இன்றும் அந்தத் தொகைநூல் அவருடைய அறிவுக்கும் ஆளுமைக்கும் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது.
மறைந்த மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். அவர்களுக்கு நடைபெற்ற ஒரு பாராட்டு விழாவிற்கு அவர் சென்றிருந்தார். அப்போதுதான் அவர் பிரதி மேம்படுத்துநர் என்னும் சொல்லை உருவாக்கிப் படித்தார். அதன் தொடர்ச்சியாகவோ என்னமோ, அவர் மனம் செம்மையாக்கத்தின் பக்கம் திரும்பிவிட்டது. முதலில் பகடியாக கோடிட்டு வைத்திருக்கும் சில பக்கங்களைப் படித்துக் காட்டுவதில்தான் அவர் தொடங்கினார்.  மெல்ல மெல்ல அவரையறியாமலேயே அவர் கண்கள் பிழைகளை மட்டுமே தேடும் கண்களாகிவிட்டன. பிழை காண்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாகிவிட்டது. “நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஒரு படைப்பில் உள்ள பிழைகளும், படைப்பின் ஒரு பகுதியே. ஒரு ஆளுமையை அந்தப் பிழைகளோடு சேர்த்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும். அதில் குற்றமொன்றுமில்லைஎன்று சொன்னேன். “நீங்க எல்லாரயும் மன்னிக்கிற ஆள். அப்படித்தான் சொல்விங்க. ஒங்களுக்கு எதுவுமே பெரிய குற்றமில்லை. ஆனால் இந்த விஷயத்தை அப்படி சும்மா விட்டுடமுடியாதுஎன்று சிரித்துக்கொண்டே எழுந்துபோய்விட்டார்.
அதற்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. அடுத்த ஆண்டே நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். வழக்கமாக அலுவலகம் முடிந்ததும் நிகழும் சந்திப்புகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். நீண்ட காலம் கழித்து ஒரு சிறுகதையை எழுதியிருப்பதாகவும் படித்துப் பார்த்துவிட்டு அழைக்குமாறும் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தேன். அது மரணத்தைப்பற்றிய ஒரு கதை. அதிகாலையில் ஒரு திருமணத்துக்காக வீட்டைவிட்டுக் கிளம்பிச் செல்லும் கணவன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனைவியை எழுப்ப மனமின்றி சொல்லாமலேயே சென்றுவிடுகிறான். திருமண வீட்டுக்குச் சென்றபிறகுதான் அவள் உயிர் அதிகாலையிலேயே பிரிந்துவிட்டது என்னும் செய்தி கிடைக்கிறது. நான் அவரை அழைத்தேன். தன் நண்பனுடைய வீட்டில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியதாகக் குறிப்பிட்டார். இந்த மண்ணில் எதிர்பாராத மரணங்களுக்கு பஞ்சமே இல்லை, அதற்குத் தர்க்கங்களும் இல்லை என்று சொன்னேன்.
21.12.2019 அன்று காலையில் அழைத்த நண்பர் மகாலிங்கம் வழியாகத்தான் நஞ்சுண்டனின் மறைவுச்செய்தி கிடைத்தது. அவர் எழுதிய கதையில் நிகழ்ந்ததுபோலவே எதிர்பாராத ஒரு மரணம். அன்று எனக்குக் கடுமையான காய்ச்சல். துயரமும் வெறுமையும் சோர்வூட்டினாலும் கையறுநிலையில் இருந்தேன். அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. நஞ்சுண்டனுக்கு அஞ்சலிகள்.


(புத்தகம் பேசுது - ஜனவரி 2020 இதழில் வெளிவந்த கட்டுரை)