எங்கள் வீட்டுக்கு அருகில் அழகானதொரு ஏரி இருக்கிறது. ஏரியை ஒட்டி நடப்பதற்கு ஏற்ற வகையில் செப்பனிடப்பட்ட நீண்ட நடைபாதையில் நடப்பது இன்பமளிக்கும் அனுபவம்.
ஒருசில
நாட்களில் பத்து பதினைந்து இளைஞர்களும் இளம்பெண்களும் சூழ நடுவில் நின்றபடி ஒரு பெரியவர்
ஏரிக்கரையில் நடந்துகொண்டிருக்கும் கால்நீண்ட நாரைகளையோ அல்லது தண்ணீரில் நீந்திக்கொண்டிருக்கும்
நீர்க்காகங்களையோ அல்லது தண்ணீர்ப்பரப்பின் மீது வட்டமடித்துப் பறக்கும் கழுகுகளையோ
சுட்டிக்காட்டி ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் நின்று
அவர் சொல்வதைக் கேட்பேன். குறிப்பிட்ட பறவையின் தோற்றம், வளர்ச்சி, உணவு, வாழ்க்கைமுறை,
ஆயுள் போன்ற தகவல்களையெல்லாம் இணைத்து ஒரு கதையைப்போலச் சொல்வார். ஏற்கனவே நாம் அறிந்த
தகவல்களாக இருந்தாலும் கூட, அவர் சொல்வதைக் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். சில
சமயங்களில் அவர் சொல்லும் தகவல்கள் எல்லாமே புதியவையாக இருக்கும்.
ஒருநாள்
அவர் ஒரு இலுப்பை மரத்தடியில் நின்றபடி, அருகிலிருந்த பூவரசமரத்தின் கிளையின் பக்கமாகச்
சுட்டிக்காட்டி, “அதோ பாருங்க. அதுதான் பூங்கொத்திக்குருவி. நாம எல்லாருமே சிட்டுக்குருவிதான் அளவுல சின்னக்
குருவின்னு நெனச்சிட்டிருப்பாங்க. அதைவிடவும் சின்ன குருவி இந்தப் பூங்கொத்திக்குருவி.
பூக்கறதுக்கு முந்திய கட்டத்துல இருக்கற மொட்டுகளை ரொம்ப விரும்பித் தின்னுற குருவி.
அங்க பாருங்க. அதுங்க மொட்டுகளைக் கொத்தித்
தின்னுற அழகை இன்னைக்கு பூரா பார்த்துட்டே இருக்கலாம்” என்று பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் தம்மிடம் இருந்த புகைப்படக்கருவியில் அவற்றைப் படம்
பிடித்துக்கொண்டிருந்தார். அவர் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்த இளளைர்கள் கூட்டமும்
“ஆமாம் சார், ஆமாம் சார்” என்று உற்சாகத்துடன் குரல்கொடுத்தார்கள். சிலர் தம்மிடம்
இருந்த தொலைநோக்கி வழியாக பார்த்து ரசித்தார்கள்.
சிலர் தத்தம் கைப்பேசியை உயர்த்தி படம்
பிடிக்கத் தொடங்கினர்.
அவர்கள்
உற்சாகத்தைக் கேட்டதும் எனக்கும் அந்தக் குருவியைப் பார்க்கும் ஆவல் எழுந்தது. நானும்
அந்த மரத்தின் திசையில் வேகமாகத் திரும்பி ஒவ்வொரு கிளையாகத் தேடினேன். என் கண்களுக்கு
அந்தக் குருவி தென்படவே இல்லை. எனக்குக் கொஞ்சம் பார்வைக்குறைபாடு உண்டு. படிப்பதற்குக்
கண்ணாடி வேண்டும். ஆனால் பார்ப்பதற்குத் தேவையில்லை. சமாளித்துவிடுவேன். ஆயினும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு
அப்பால் இருப்பது தெரியாது. குருவி அமர்ந்திருந்த
கிளையை என்னால் பார்க்கவே முடியவில்லை. அதன் அசைவைக்கூட என்னால் பார்க்கமுடியவில்லை.
என்னைச் சுற்றி நின்றவர்கள் அனைவரும் ஆரவாரத்தோடும் ஆனந்தத்தோடும் அக்குருவியைப் பார்த்து
கொண்டாடிய வேளையில் நான் ஏமாற்றத்தோடு நின்றிருந்தேன். தொடர்ந்து அந்த இடத்தில் நின்றிருக்க
சங்கடமாக இருந்ததால், உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
அடுத்தநாள்
வரை காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. வீட்டுக்குத் திரும்பிய வேகத்தில் கண்ணாடியை
எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த மரத்தடியை நோக்கிச் சென்றேன். இளைஞர்கள் கூட்டம் போய்விட்டிருந்தது.
யாருமே இல்லை. நடமாட்டம் குறைந்துவிட்ட அந்த இடத்தில் நின்றபடி, கண்ணாடியை அணிந்துகொண்டு
அதே பூவரச மரக்கிளையைப் பார்த்தேன். கிளையின் மரப்பட்டைகள் வரை காட்சிகள் துல்லியமாகத்
தெரிந்தன. ஆனால் அந்தக் குருவியைத்தான் பார்க்கமுடியவில்லை.
ஆயினும்
மனம் தளராமல் அந்த வரிசையில் நின்றிருந்த ஒவ்வொரு பூவரச மரத்தடியிலும் நின்று நின்று
பார்த்தபடி நடந்தேன். மூன்றாவது மரத்தின் கிளையில் பூமொட்டுகளைக் கொத்தும் அந்தக் குருவிகளைப்
பார்த்தேன். அணில்குஞ்சு நிறத்தில் இருந்தது அக்குருவி. பார்ப்பதற்கு ஒரு பலாச்சுளையின்
அளவுக்கு சின்னஞ்சிறியதாக இருந்தது. உள்ளங்கைக்குள் வைத்து மூடிக்கொள்ளலாம் போல இருந்தது.
மிளகு மாதிரியான அதன் கண்களும் அவை சுழலும் வேகமும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்தன. அந்தக்
காட்சி அன்றைய தினம் நான் துய்த்த பேரனுபவம்.
அந்த
இன்பத்தில் திளைத்தபடி கண்ணாடியை எடுக்காமலேயே தொடர்ந்து ஒவ்வொரு மரமாக நின்றுநின்று பார்த்தபடி சென்றேன். வழக்கமாக நான் பார்த்தபடி
கடந்துபோகும் அதே மரங்கள். அதே செடிகள். அதே பூக்கள். அதே பறவைகள். ஆனால் எல்லாமே அன்று
எனக்குப் புதியவையாக, வேறு விதமாக, பொலிவோடு காட்சியளித்தன.
ஒரு கண்ணாடி,
அன்று என்னைச் சுற்றியிருந்த உலகத்தின் வண்ணமயமான கோலத்தையும் அதுவரை பார்த்தே இராத
பூங்கொத்திக்குருவியையும் பார்க்கவைத்துவிட்டது. ஒருவேளை, எதுவாக இருந்தால் என்ன, நடக்கும்போது
கண்ணாடி அணியவேண்டாம் என்ற பிடிவாதத்தோடு நான் கடந்துபோயிருந்தால், அன்று எனக்குக்
கிடைத்த அரிய அனுபவத்தை நான் தவறவிட்டிருப்பேன். பிடிவாதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு,
கண்ணாடியோடு வந்ததால் நல்லதொரு காட்சியனுபவத்தில் திளைக்கும் நற்பேறு வாய்த்தது.
இந்த
அனுபவத்தை, ஒரு கட்டுரைத்தொகுதிக்காக எழுதப்படுகிற இந்த முன்னுரையில் நீட்டிச் சொல்வதற்கு
ஒரு காரணம் இருக்கிறது. நண்பர் சுகுமாரன் பல ஆண்டு கால வாசிப்பனுபம் உள்ளவர். தொடர்ச்சியான
தன் வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் படைப்புகளில் பிரதிபலிக்கும் வாழ்க்கையம்சங்களைத்
தொட்டுக் காட்டி வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நிலவும் உறவை உணர்த்தும்
வகையில் இத்தொகுதியில் இருக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒரு பொது வாசகருக்கு
இதுபோன்ற குறிப்புகள் மிகமுக்கியம். ஒரு வழிகாட்டியாக
இவை அமைந்து வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும். நேரடிப் பார்வைக்குத் தெரியாத குருவியை
கண்ணாடி அணிந்த பிறகு எனக்குப் பார்க்கவாய்த்ததைப்போல, நேரடி வாசிப்பில் தென்படாத அம்சங்களை,
கண்டுணர முடியாத மானுட நெருக்கடிகளை அறிவதற்கும் உணர்வதற்கும் இந்த வாசிப்பு உதவியாக
இருக்கும். இது ஒரு நல்ல வழிகாட்டி நூல்.
சுகுமாரன்
தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சாகித்திய
அகாதமி விருது பெற்ற படைப்புகளை முன்வைத்து எழுதுவது என்பதுதான் அவ்விதி. சாகித்திய
அகாதமி விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படுகிற முதன்மையான விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மொழியில் வெளியாகும் மிகச்சிறந்த
ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது. பெரும்பாலும் கவிதை, நாவல்,
சிறுகதை என படைப்பிலக்கியம் சார்ந்த நூல்கள் தேர்வாகின்றன. சிற்சில சமயங்களில் ஆய்வுநூல்களும்
கட்டுரைநூல்களும் தேர்வாகின்றன. 1955ஆம் ஆண்டு முதல் சாகித்திய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
ஏறத்தாழ எழுபது ஆண்டு காலமாக விருது பெற்ற படைப்புகளிலிருந்து, தன் ரசனையின் அடிப்படையில்
இருபது புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் வாழ்க்கையின் தரிசனங்களைத்
தொகுத்து எழுதியிருக்கிறார் சுகுமாரன். மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,
ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் போன்ற மூத்த தலைமுறையினரிடமிருந்து
தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், தேவிபாரதி
போன்ற இப்போதைய தலைமுறையினர் வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்படைப்புகளின்
வலிமையை உணர்ந்து, படைப்புகளைத் தேடியெடுத்து ஊன்றிப் படிக்கும் ஆர்வத்தை பொது வாசகர்களிடையில்
இத்தொகுதி உருவாக்கும்.
கி.ராஜநாராயணனின்
படைப்பாக்கத்தில் உருவான நாவல் கோபல்லபுரத்து மக்கள். இந்தியா எங்கும் பரவிய சுதந்திரப்போராட்ட
எழுச்சி கோபல்லபுரம் என்னும் கிராமத்தில் ஏற்படுத்திய விளைவுகளின் பதிவாக இந்நாவல்
விளங்குகிறது. அதன் முக்கிய அம்சங்களைத் தன் கட்டுரையில் தொட்டுக்காட்டி எழுதியிருக்கிறார்
சுகுமாரன். அந்த நாவலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நாவலுக்கு முன்பாக இதே நாவலாசிரியர்
கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்லபுரம் என்னும் நாவலையும் மூன்றாவதாக எழுதிய அந்தமான் நாயக்கர்
என்னும் நாவலையும் இணைத்துப் படிக்கும் எண்ணத்தையும் விதைக்கிறார் சுகுமாரன்.
தெலுங்கைத்
தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடியினர் ஆந்திராவின் ஒரு பகுதியிலிருந்து இஸ்லாமியரின் பிடியில்
சிக்காமல் இருப்பதற்காகவும் தம் குடும்பத்துப் பெண்மக்களின் மானத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும்
தென் தமிழகத்தைநோக்கி நடைப்பயணமாகவே வந்து
தக்க இடத்தை அடைந்து நிலைகொண்ட கதையை கோபல்லபுரம் முன்வைக்கிறது. அதன் இறுதி அத்தியாயம்
மிகமுக்கியமான பகுதி. ஆங்கிலேயர் வருகை அப்போது நிகழ்கிறது. அவர்களால் நம் பெண்பிள்ளைகளுக்கு
ஆபத்தில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட அந்தக் குடி அவர்களும் இணைந்து வாழலாம் என அனுமதி
அளிக்கிறது.
பெண்கள்
மீது ஆதிக்கம் செலுத்தாமல் போனாலும் மண்மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது ஆங்கிலேய
அரசு. இரண்டாம் பகுதி நாவல் முழுதும் இத்தகு நிகழ்ச்சிகள் ஏராளமாக அமைந்துள்ளன. கட்டாய
வரி என்ற பெயரில் எளிய மக்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். அடக்குமுறையில் சிக்கி
அவர்கள் தம் இயல்பான வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். விடுதலைப்போராட்டம் தவிர்க்கப்பட
முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.
மூன்றாம்
பகுதியில் விடுதலை பெற்ற இந்தியா காட்சியளிக்கிறது. கிராமத்தில் சுதந்திரக்காற்று வீசுகிறது.
விடுதலைக்காக போராடி அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான நாயக்கர் ஊருக்குத்
திரும்பி வருகிறார். அவருடைய அவல வாழ்க்கை துயரளிப்பதாக உள்ளது. சுகுமாரன் முன்வைப்பது,
விருது பெற்ற ’கோபல்லபுரத்து மக்கள்’ நாவலைத்தான் என்றபோதும், அவர் தேர்ந்தெடுத்து
முன்வைக்கும் தகவல்களின் இணைப்பு, ஒரு வாசகனை முதல் நாவலையும் மூன்றாம் நாவலையும் தேடிச்
செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு பரிந்துரை சரியாக வேலை செய்கிறது என்பதற்கு
இதுவே சாட்சி.
கி.ராஜநாராயணன்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் தகவல்களை ஊடுபாவாக இணைத்து நாவல்களை எழுதியதுபோல, பிரெஞ்சு
ஆட்சிக்காலத்தின் தகவல்களை ஊடுபாவாக இணைத்து முப்பெரும் நாவல்களை எழுதியவர் பிரபஞ்சன்.
அவை மானுடம் வெல்லும், வானம் வசப்படும், கண்ணீரால் காப்போம் என்ற தலைப்பில் தனித்தனி
நூல்களாக வெளிவந்தன. இரண்டாம் பகுதியான வானம் வசப்படும் நாவலுக்கு சாகித்திய அகாதமி
விருது கிடைத்தது. அந்த நாவலின் சிறப்பான காட்சிகளைக் கோர்வையாகத் தொகுத்து தன் கட்டுரையில்
முன்வைத்திருக்கிறார் சுகுமாரன். உடனடியாக நாவலைத் தேடிப் படிக்கத் தூண்டும் வகையில்
அவர் கட்டுரை அமைந்திருக்கிறது.
தி.ஜானகிராமன்,
நாஞ்சில் நாடன், வண்ணதாசன், அம்பை ஆகியோர் தம் சிறுகதைத்தொகுதிகளுக்காக சாகித்திய அகாதமி
விருதைப் பெற்றவர்கள். ஒவ்வொரு தொகுதியைப்பற்றியும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்
சுகுமாரன்.
ஒரு வாசகரின்
ரசனை என்பது சமகால ஆளுமைகளின் படைப்புகளை அவர் இடைவிடாது தேடி வாசிப்பதன் வழியாக திரண்டு
வரும் ஒன்றாகும். இதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, அந்த வாசகர் தன்னிச்சையாக தன்
வாசிப்பின் போக்கில் தானே முட்டி மோதி கண்டடைந்து வளர்த்துக்கொள்வது. இன்னொன்று, நம்பிக்கையான
ஒருவரின் அறிமுகத்தின் வழியாக தேடிப் படித்து வளர்த்துக்கொள்வது. வாசிப்பு பெருகப்பெருக
ரசனையும் பெருகிக்கொண்டே போகும். தொட்டனைத்தூறும் மணற்கேணி போல வாசிக்க வாசிக்க ரசனையும்
வளர்ந்துகொண்டே போகும். ஒரு கட்டத்தில் மேலான ரசனை இன்னும் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கு
வாசிப்பின் திசையை நோக்கி இழுத்துச் செல்லத் தொடங்கிவிடும். ரசனையால் வாசிப்பு பெருகுகிறதா,
வாசிப்பால் ரசனை பெருகுகிறதா என பிரித்தறிய முடியாதபடி ஒன்றையொன்று வளர்த்துக்கொண்டு
வாழ்க்கையை இனிமைமயமானதாக கட்டமைத்துக்கொள்கிறது. ஒருவருடைய மனத்தில் ரசனை நிலைகொள்ளும்
கட்டத்தில், அதுவே அவருடைய வாழ்க்கைப்பார்வையாக
மாற்றமடைகிறது. ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மாறுவதுபோல.
இத்தகு
அறிமுகம் இன்றைய சூழலில் மக்களுக்குத் தேவையாக இருக்கிறது. நம் நாட்டில் திரைப்படமும்
அரசியலும் அறிமுகமாகியிருக்கிற அளவுக்கு இலக்கிய அறிமுகம் கிடையாது. பாரதியாருக்குப் பின்னால் கவிதை எழுதிய பத்து கவிஞர்களின்
பெயர்களை வரிசைப்படுத்திச் சொல்லும்படி கேட்டால், பலருக்கு விடை சொல்லத் தெரியாது.
பத்தாயிரம் பேர் வசிக்கக்கூடிய ஒரு கிராமத்தில் இருக்கும் நூலகத்துக்குச் சென்று, அங்குள்ள
ஒவ்வொரு நூலையும் எத்தனை பேர் எடுத்துச்சென்று படித்திருக்கிறார்கள் என்னும் குறிப்பைப்
பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். கைவிரல் எண்ணிக்கையிலேயே ஒவ்வொரு புத்தகத்தையும் படித்தவர்கள்
இருப்பார்கள். பத்தாயிரம் பேர் வாழும் கிராமத்தில் பத்து பேர் கூட இலக்கியப்புத்தகங்களைப்
படிக்காத நிலைதான் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் இத்தகு அறிமுகம் தேவைப்படுகிறது.
இலக்கிய
அறிமுகம் ஒருவருடைய இளமைக்காலத்திலேயே அமைவது மிகமுக்கியம். திறந்தவெளியாக இருக்கும்
மனம் வேகவேகமாக எல்லாவற்றையும் இழுத்து தன்னை நிரப்பிக்கொள்ளும். அது ஒரு நல்வாய்ப்பு.
மனமூன்றிப் படிக்கும் காலத்தில் நம் வேகமும் கூடுதலாக இருக்கும். வயது கூடக்கூட, புற
அழுத்தங்கள் நம் செயல்வேகத்தைக் குறைத்துவிடும்.
சுகுமாரனின்
கட்டுரைத்தொகுதி நல்லதோர் அறிமுகநூல். நம்பிக்கையான ஒரு வழிகாட்டி. அதை ஒரு தொடக்கமாகக்
கொண்டு வாசகர்கள் தம் வாசிப்புப்பயணத்தைத் தொடங்கலாம். சுகுமாரனுக்கு வாழ்த்துகள்.
(சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்களுடைய ‘கதைகளில்
ஒளிரும் வாழ்க்கை’ என்னும் கட்டுரைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை )