Home

Monday 27 January 2020

ஜே.சி.குமரப்பா - உலகம் வாழ்க - கட்டுரை

09.05.1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக மேலைநாட்டுமுறையில் உடையணிந்த இளைஞரொருவர் வந்திருந்தார். இங்கிலாந்தில் வணிகநிர்வாகவியல் துறையில் இளநிலைப் பட்டமும் அமெரிக்காவில் பொதுநிதித் துறையில் உயர்நிலைப் பட்டமும் பெற்றவர் அவர். அயல்நாட்டிலேயே செய்யத் தொடங்கிய வேலையைத் துறந்து தாயின் விருப்பத்துக்கிணங்க இந்தியாவுக்குத் திரும்பி மும்பை நிறுவனமொன்றில் தணிக்கையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் அவர்.

இதற்கு முன்பாக ஏப்ரல் மாத இறுதியில் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பைக்கு காந்தியடிகள் சென்றிருந்த நேரத்தில் அவரைச் சந்திப்பதற்காக முதன்முதலாக சென்றிருந்தார் அந்த இளைஞர். சில ஆண்டுகளுக்கு முன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் எழுதியபொதுநிதியும் நமது வறுமையும்என்னும் ஆய்வுக்கட்டுரைத் தொகுதியை காந்தியடிகள் படித்துப் பார்க்க அளிக்கவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. ஆனால் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் அவரைச் சந்திக்க இயலாது என்றும் கூட்டம் முடியும்வரை காத்திருந்து பிறகு பார்க்கலாம் என்றும் காந்தியடிகளின் செயலாளர் சொன்னதைக் கேட்டு சற்றே ஏமாற்றமடைந்தார்.. நேரமின்மையின் காரணமாக அந்த இளைஞர் தான் கொண்டுவந்திருந்த  கட்டுரைத்தொகுதியை காந்தியடிகளிடம் சேர்க்கும்படி கூறி செயலாளரிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.
கூட்டம் முடிந்தபிறகு செயலாலர் காந்தியடிகளிடம் கையெழுத்துப்பிரதியைக் கொடுத்தார். அதை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தபோது அங்கங்கே தென்பட்ட கருத்துகள் தன் சிந்தனையுடன் இணைந்துபோவதை காந்தியடிகள் உணர்ந்தார். அந்த இளைஞரை உடனடியாக சந்தித்துப் பேச விரும்பினார். அதனால் அந்த இளைஞரை தொலைபேசியில் அழைத்து 09.05.1929 அன்று பகல் 2.30 மணியளவில் சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார் செயலாளர். நேரம் தவறாத பண்பைக் கொண்ட அந்த இளைஞர் குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்கள் முன்பாகவே சபர்மதி ஆசிரமத்துக்கு வந்துவிட்டார். பத்து நிமிட  இடைவெளியில் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கலாமென புறப்பட்டார். இயற்கைச்சூழலில் அமைந்திருந்த எளிய குடிசைகளையும் சாணம் மெழுகி சுத்தமாக வைத்திருந்த தரையையும் விருந்தினர் இல்லத்தில் கூட உட்கார்வதற்கு பாய் மட்டுமே விரிக்கப்பட்டிருந்த விந்தையையும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தார்.
ஒரு மரத்தடியில் தரையில் அமர்ந்து இராட்டையில் நூல்நூற்றுக்கொண்டிருந்த காந்தியடிகளை யாரோ ஒரு வயதான முதியவரென நினைத்து வியப்போடு பார்த்தபடி நின்றுவிட்டார் இளைஞர். அவரை புன்னகையோடு நிமிர்ந்து பார்த்த காந்தியடிகளிடம் தயக்கத்துடன்நீங்கள்தான் காந்தியடிகளா?” என்று மெதுவாகக் கேட்டார்.  ஆமாம்என்று காந்தியடிகள் தலையாட்டியதும் அதுவரை தரையிலேயே அமர்ந்திராத இளைஞர் எவ்விதமான யோசனைக்கும் இடமின்றி காந்தியடிகளுக்கு எதிரில் தரையில் அமர்ந்து உரையாட்த் தொடங்கினார். அவர்தான் காந்தியடிகளின் அடிச்சுவட்டில் உறுதியாகவும் நம்பிக்கையோடும் அடியெடுத்து வைத்த ஜோசப் கொர்னீலியஸ் குரமப்பா என்கிற ஜே.சி.குமரப்பா.
குமரப்பாவின் கட்டுரையை தான் விரும்பிப் படித்ததாகச் சொன்ன காந்தியடிகள் அதை யங் இந்தியா இதழில் தொடராக வெளியிடுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து குஜராத்தில் உள்ள சில கிராமங்களை அவர் சுற்றிப் பார்க்கவேண்டுமென்றும், தேவையான தகவல்களைத் திரட்டி, கிராமங்களின் பொருளாதார நிலையைச் சித்தரிக்கும் ஒரு கட்டுரையை  எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவருக்கு குஜராத்தி மொழி தெரியாததால் காகா காலேல்கரும் இன்னும் சில ஊழியர்களும் துணைக்கு வருவார்கள் என்றும் சொன்னார். மறுபேச்சுக்கே இடமில்லாமல் குமரப்பா அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். குஜராத் கிராமப்பயணம் அவருக்கு கிராமியச்சூழலையும் வறுமையையும் புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இருந்தது.
வாழும் நோக்கத்தின் அடிப்படையில் வாழ்க்கையை ஐந்து வகைகளாக வகைப்படுத்துவது குமரப்பாவின் வழக்கம். முதல்நிலை தாய்மை வாழ்க்கை. உலகத்தில் தாயின் வாழ்க்கையே உயர்வானது. ஒளி கொடுக்க தன்னையே கரைத்துக்கொள்ளும் மெழுகுவர்த்தியைப்போல,  தன்னலத்துக்கு இடம்கொடாமல் தன் குழந்தைகளின் உயர்வுக்காக தன்னையே அழித்துக்கொள்பவர் தாய் மட்டுமே.
இரண்டாவது நிலை குழு வாழ்க்கை. குழுவாழ்க்கையின் மேன்மைச் சிறந்த எடுத்துக்காட்டு தேனீக்களின் கூட்டுவாழ்க்கை. ஒவ்வொருவரும் பலருக்காகவும் பலரும் ஒவ்வொருவருக்காகவும் வாழும் வாழ்க்கைமுறை இது. இப்படி வாழ்பவர்கள் மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடத்தைப் பிடித்துக்கொள்கிறார்கள். தேனீக்களின் கூடுபோல அமையக்கூடிய குடும்பவாழ்க்கை கூட்டுவாழ்க்கைக்கு சிறந்த்தொரு எடுத்துக்காட்டு.
மூன்றாவது நிலை முயற்சி வாழ்க்கை. தேனியின் வாழ்க்கையையே இதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். தேனீ ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறது. மலர்களை நாடிச் சென்று துளித்துளியாக மதுவை உறிஞ்சியெடுக்கிறது. பிறகு மதுவை தேனாக மாற்றி தன் அடைக்குள் சேமித்துவைக்கிறது. தனக்கு உணவைத் தரும் மலருக்கு, கைம்மாற்றாக மகரந்தச் சேர்க்கைக்கு துணைசெய்கிறது. ஒருவகையில் எடுத்தும் கொடுத்தும் வாழும் வாழ்க்கை. நாலாவது நிலை கொள்ளை வாழ்க்கை. கிட்டத்தட்ட  குரங்குபோல. குரங்கு உழைப்பதில்லை. மற்றவர்களுக்குரிய தோட்டத்தில் புகுந்து பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டு செடிகொடிகளை மிதித்து நாசமாக்கிவிடும்.  ஒருவகையில் வன்முறையும் தன்னலமும் நிறைந்த வாழ்க்கை.
ஐந்தாம் நிலை வாழ்க்கை கொலைவாழ்க்கை. புலி வாழும் முறையை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். தன் முன் எதிர்ப்படும் எந்த விலங்கையும் தின்று பிழைக்கும் குணம்கொண்டது புலி. முற்றிலும் வன்முறையை வழியாகக் கொண்ட வாழ்க்கை. முற்றிலும் மாறுபட்டதொரு கோணத்தில் வாழ்க்கையை வகைப்படுத்தியதுபோல பொருளாதார நிலைகளையும் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வகைப்படுத்தினார். அவர் சிந்தனைக்கு ஆதாரமாக விளங்கியது அறம். ஒருவர் ஈட்டும் செல்வம் அறத்தின் பாதையில் ஈட்டப்பட்டதாக இருந்தால் மட்டுமே அதற்கு மதிப்புண்டு என்றார் அவர்.
கிளைவ் முதல் கெய்ன்ஸ் வரைஎன்றொரு புத்தகத்தை குமரப்பா எழுதினார். நம்முடைய வரிப்பணத்தைச் சுரண்டி தன்வசப்படுத்திக்கொள்ளும் வழிமுறையைத் தொடங்கிவைத்தவர் கிளைவ் என்றும் வழிவழியாக அந்த ஊழல்முறை இன்றுவரை தொடர்ந்து வருகிறதென்றும் ஆதாரங்களோடு எழுதினார். மாதத்துக்கு ஐந்து பகோடா சம்பளத்துக்கு பதினெட்டு வயதில் இந்தியாவுக்கு வந்த கிளைவ் பதினேழு ஆண்டு காலம் பணி செய்த பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். அப்போது அவரிடம் ரொக்கமாக மூன்று லட்சம் பவுன் இருந்தது. அதுமட்டுமன்றி ஆண்டுக்கு இருபத்தேழாயிரம் பவுன் வருமானத்தை அளிக்கக்கூடிய நிலத்தையும் சொந்தமாக அவர் சம்பாதித்திருந்தார். ஆங்கில அரசின் அறமற்ற பொருளீட்டலை அவர்களிடமிருந்தே தகவல்களைத் திரட்டியெடுத்து அம்பலப்படுத்தினார்.
உப்பு சத்தியாக்கிரகத்தை முன்னிட்டு காந்தியடிகள் தண்டி யாத்திரையைத் தொடங்கிய நேரம். ‘பொது நிதியும் நமது வறுமையும்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினார் குமரப்பா, அந்தப் புத்தகத்துக்கு  காந்தியடிகள் முன்னுரை எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. யாத்திரையில் இருந்த காந்தியடிகளுக்கு உடனே அவர் கடிதம் எழுதி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். காந்தியடிகள் அவரை குறிப்பிட்ட ஒரு தேதியில் கராடி என்னும் இடத்துக்கு வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்பினார்.
வேலைச்சுமைகளோடு யாத்திரையில் இருக்கும் காந்தியடிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கக்கூடாதென நினைத்து காந்தியடிகள் எழுதியதைப்போலவே ஒரு முன்னுரையை தானாகவே எழுதி தயாராக வைத்துக்கொண்டார் குமரப்பா. ஒருமுறை காந்தியடிகள் அதைப் படித்துவிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டால் பிரசுரத்துக்கு உடனடியாகக் கொடுத்துவிடலாம் என்பது அவர் எண்ணமாக இருந்தது.
கராடியில் காந்தியடிகளைச் சந்தித்தார் குமரப்பா. குமரப்பாவின் புத்தகவெளியீடு தொடர்பான விருப்பத்தைக் கேட்டு மகிழ்ந்தார் காந்தியடிகள். ஆனால் குமரப்பாவே எழுதிக்கொண்டு வந்த முன்னுரையை அவர் ஏற்கவில்லை. “என்னுடைய முன்னுரையை நான்தானே எழுதவேண்டும். விரைவில் எழுதித் தருகிறேன்என்று வாக்களித்தார். பிறகுவேறொரு முக்கியமான வேலைக்காகவே நான் உங்களை இங்கு வரும்படி எழுதினேன்என்றார். விழிகளில் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்த்த குமரப்பாவிடம்எக்காரணத்தை முன்னிட்டும் நம்முடைய யங் இந்தியா இதழ்  இன்றைய சூழலில் நின்றுவிடக்கூடாது. ஒருவேளை தண்டி யாத்திரையின் முடிவில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்ல நேரிடலாம். அப்போது தனிமையில் இந்த இதழை நடத்த மகாதேவ தேசாய் சிரமப்படக்கூடும். அதனால் ஆசிரமத்துக்குச் சென்று அவருக்குத் துணையாக  நீங்கள் செயற்படவேண்டும். அதைச் சொல்லவே இங்கு உங்களை அழைத்தேன்என்றார் காந்தியடிகள். தொடக்கத்தில் சற்றே தயக்கம் காட்டினாலும் இறுதியில் காந்தியடிகளின் வேண்டுகோளை குமரப்பா ஏற்றுக்கொண்டார்.  திரும்பி அவர் ஆசிரமத்துக்குச் சென்ற நேரத்தில் காந்தியடிகளுக்கு முன்பாக மகாதேவ தேசாய் கைது செய்யப்பட்டார். பத்திரிகை அனுபவம் என்பதே துளியும் இல்லாத குமரப்பா பத்திரிகையின் ஆசிரியராக இருந்து துணிச்சலுடன் செயல்படத் தொடங்கினார்.
அதுவரை வேட்டியே அணிந்திராத குமரப்பா முதன்முறையாக கடைக்குச் சென்று கதரில் வேட்டியும் சட்டையும் குல்லாயும் வாங்கி அணிந்துகொண்டார். கைரா மாவட்டத்தில் மதார் வட்டாரத்தில் மூன்று மாத காலம் ஐம்பத்துநான்கு கிராமங்களில் சுற்றியலைந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில்மதார் வட்டார பொருளாதார வளர்ச்சிஎன்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதுவரை கருத்துருவமாக மட்டுமே இருந்த காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகள் குமரப்பாவின் நூல் வழியாக வலிமைமிக்க அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டிடமாக உயர்ந்து நிற்கத் தொடங்கியது.
நாடெங்கும் ஆங்கிலேய அதிகாரிகளால் தொண்டர்கள் கடுமையான முறையில் நடத்தப்பட்டதால், அவர்கள் அனைவரும் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அத்தகைய செய்திகள் ஏராளமான அளவில் குமரப்பாவுக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் தொகுத்து தகுந்த தலைப்புடன் செய்திகளை எழுதி யங் இந்தியாவில் வெளியிட்டார் குமரப்பா. அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியெழுதும் கட்டுரைகளைப் படித்த அதிகாரிகள் யங் இந்தியா இதழை அச்சிட்ட அச்சகத்தைக் கைப்பற்றியது. அச்சகம் இல்லாவிட்டால் இதழ் நின்றுவிடும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் குமரப்பா பத்திரிகையை தட்டச்சுப்பொறியில் அடித்து  படியெடுத்து அனைவருக்கும் அனுப்பிவைத்தார். அதனால் அரசு அவர்மீது இராஜத்துரோகக் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தது. அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அங்கு ஆங்கிலேய அதிகாரிகளின் அத்துமீறல்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுச் சொன்னார் குமரப்பா. ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அப்பாவி மக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட அதிகாரிகள் மீதுதான் எடுக்கவேண்டுமென்றும் அவற்றை செய்தியாக வெளியிட்ட பத்திரிகைக்காரன் மீது பழிசுமத்துவது எவ்விதத்திலும் அறமல்ல என்றும் சுட்டிக்காட்டினார். இறுதியில் நன்னடத்தை  உறுதிமொழி வழங்கவோ பிணைத்தொகையைக் கட்டவோ முடியாதென மறுத்துவிட்டார். நீதிமன்றம் குமரப்பாவுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
கோடிக்கணக்கில் இந்தியாவிடமிருந்து வரிப்பணத்தை வசூல் செய்துகொண்ட பிறகும் இந்தியா இங்கிலாந்துக்கு கடன்பட்டிருப்பதாக ஆங்கில அரசு தொடர்ந்து அறிவித்தபடி இருந்தது. அதன் உண்மை நிலையை ஆய்வு செய்யும்பொருட்டு கராச்சி நகரில் கூடிய காங்கிரஸ் மாநாடு ஒரு குழுவை அமைத்தது.  அதில் குமரப்பா இடம்பெற்றிருந்தார்.  தீவிரமான ஆய்வுக்குப் பிறகு அரசு அளித்த அறிக்கையில் பிழை இருப்பதை சுட்டிக்காட்டினார் அவர். எங்கெங்கோ இங்கிலாந்து போரிட்ட செலவு, இந்தியப் போர்வீரர்களை போர் நிகழும் இடங்களுக்கு அழைத்துச் சென்ற செலவு, ஆங்கிலேய இராணுவத்தை இந்தியாவுக்கு அழைத்துவந்த செலவு என ஏதேதோ செலவுகளையெல்லாம் இந்தியாவின் தலையில் சுமத்திவைத்திருப்பதை அவர் அம்பலப்படுத்தினார். சரியான முறையில் கணக்கிட்டு இந்தியாவுக்கு இங்கிலாந்து 1800 கோடி ரூபாய் கடன்பட்டிருப்பதாக சான்றுகளோடு அறிவித்தார். அரசின் கொள்கையால் இந்தியத்தொழில்கள் அழிந்ததையும்  ஆலைத்தொழில்கள் சுரண்டலை வளர்த்ததையும் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வறுமையில் வாடுவதையும் தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தியது குமரப்பாவின் அறிக்கை. குமரப்பா மீண்டும் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுக் காலம் நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1934 ஆம் ஆண்டில் பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சாம்ப்ரான், முஜாஃபர்பூர், தர்பங்கா, சரன், பாட்னா, மாங்யர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இருக்க இடமும் உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி ஏராளமானோர் தவித்தனர். பேருக்காக சில உதவிகளைச் செய்ததோடு  தன் கடமையை முடித்துக்கொண்டது அரசு. மறுவாழ்வுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக அவர்களுக்குச் செய்யவேண்டும் என்று காந்தியடிகள் நினைத்தார். நாடு முழுதும் பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. நிலநடுக்க நிவாரணக்குழுவுக்கு இராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றிருந்தார். ஏறத்தாழ முப்பது லட்ச ரூபாய் திரட்டவேண்டும் என்பது குழுவின் எண்ணமாக இருந்தது. அவ்வளவு பெரிய தொகையைக் கணக்குவைத்துக்கொள்ளவும் கையாளவும் ஒரு தணிக்கையாளர் அக்குழுவுக்குத் தேவைப்பட்டது. அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையான குமரப்பாவை உடனடியாக பீகாருக்குப் புறப்பட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். சிறையிலிருந்து கிழிந்த கதராடையோடு வந்த குமரப்பா அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்.
நிவாரணப்பணி பன்னிரண்டு மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஊழியர்கள் அதில் ஈடுபட்டிருந்தனர்.  ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் கணக்குவைத்திருந்தார்கள். அவர்களுடைய செலவுக்கணக்கும் ஆளுக்கு ஆள் மாறுபட்டதாக இருந்தது. வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு வரைமுறையின்றி இருந்தது.  அனைத்தையும் முறைப்படுத்தாவிட்டால் திரட்டப்படும் தொகையில் பாதிக்கு மேல் ஊழியர்களுக்கே செலாவாகிப் போய்விடும் என்பதை உணர்ந்து கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்தார் குமரப்பா. ஓர் ஊழியருக்கு உணவுச்செலவு உட்பட ஒரு நாளுக்கு மூன்றணா என்னும் விதிமுறையை  அவர் கொண்டுவந்தார். வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளையும் அவர் அறிவித்தார். தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஒரே விதி என்பதில் அவர் கண்டிப்பாக இருந்தார். ஒருமுறை காந்தியடிகளின் குழு பீகாரில் நடைபெற்றுவரும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட வந்தது.  அவர்களுக்கும் அதே விதிகளுக்குட்பட்ட வகையிலேயே செலவுக்கான தொகையை அளித்தார் அவர்.
பொதுப்பணத்தை கையாள்வதில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. ஒருமுறை எதிர்பாராத விதமாக கையிருப்பை சரிபார்த்தபோது பத்தாயிரம் ரூபாய் குறைவதைக் கண்டுபிடித்தார் குமரப்பா. ஊழியர் ஒருவர் ரசீது வாங்காமல் பணத்தைக் கொடுத்துவிட்டதாக கணக்கர் தெரிவித்தார். ரசீதை பிறகு வாங்கி வைத்துவிடலாம் என்று சொன்னார். அதை குமரப்பா ஏற்கவில்லை. ஊழியர் உடனடியாக தன் சொந்தப் பணத்திலிருந்து பத்தாயிரம் ரூபாயைக் கொண்டுவந்து செலுத்தி கணக்கை நேர்செய்யவேண்டும் என்றும் அவர் தன் பொறுப்பிலிருந்து விலகிவிடவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஊழியரும் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்.
 அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தணிக்கைக்கேற்ற வகையில் கணக்குகளைச் சரிசெய்தார் குமரப்பா. அதுவரை திரட்டப்பட்ட பத்தொன்பது லட்ச ரூபாய் ஒரு சின்னஞ்சிறு வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய தொகையை ஒரு சிறிய வங்கியில் வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார் குமரப்பா. உடனே இம்பீரியல் வங்கியில் ஒரு கணக்கைத் தொடங்கி பணத்தை மாற்றவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட குழு உடனடியாக காசோலையை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டது.  அதை எடுத்துக்கொண்டு கணக்கு தொடங்குவதற்காக இம்பீரியல் வங்கிக்குச் சென்றார். ஆனால் அவர் உடையணிந்திருந்த கோலத்தைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அவரை மதிப்பின்றி நடத்தினார்கள். எனினும் அவரிடம் இருந்த பத்தொன்பது லட்ச ரூபாய் காசோலையைப் பார்த்த பிறகு அடங்கி அமைதியாகி கடமையைச் செய்துமுடித்தனர்.
குமரப்பா மற்றவர்களிடமிருந்து எதை எதிர்பார்த்தாரோ, அதை நூற்றுக்கு நூறு சதவீதம் அவரும் கடைபிடிப்பவராக இருந்தார்.  சொல்வேறு செயல்வேறு என ஒருநாளும் அவர் இருந்ததில்லை. அவர் தன் வாழ்க்கையை பற்றற்ற ஒரு துறவியின் வாழ்க்கையைப்போல அமைத்துக்கொண்டார். எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படும் மனம் அவருக்கில்லை. அதனால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அவரால் வாழமுடிந்தது. எதிர்பார்த்ததைவிட மிகுதியான தொகையை நிவாரணக்குழு திரட்டியது. சரியான வகையில் எல்லா உதவிகளையும்  அக்குழு பொதுமக்களுக்குச் செய்தது. ஒவ்வொன்றுக்கும் கணக்கு துல்லியமாக இருந்தது. ”கணக்கை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்என்று நிமிர்ந்து நின்று மாகாண சபையில் ராஜேந்திர பிரசாத் பேசும் அளவுக்கு குமரப்பாவின் செயல்பாடு அமைந்திருந்தது.
நிவாரணப்பணி முடியும் தருணத்தில் குமரப்பாவிடம் இந்தியக் கிராமக் கைத்தொழில் சங்கமொன்றை நிறுவிச் செயல்படுத்தவேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக்கொண்டது. உண்மையில் அது காந்தியடிகளின் விருப்பம். ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியர்களின் ஆட்சி தொடங்குவதால் மட்டுமே கிராம மக்களின் வாழ்க்கையில் வறுமை மறைந்து வளம் ஏற்பட்டுவிடாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். வேளாண்மையையும் கைத்தொழில்களையும் வளர்த்தால்மட்டுமே கிராமங்களைக் காப்பாற்றமுடியும் என்பதால் இப்படியொரு சங்கத்தை உருவாக்கவேண்டும் என அவர் விழைந்தார்.
சுதேசிக் கருத்துக்கு காந்தியடிகள் ஒரு விளக்கத்தை அப்போது வழங்கினார். உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதுதான் சுதேசியம் என்று மக்கள் நம்பினர். இதனை இந்திய முதலாளிகள் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டனர். கிராம மக்கள் தம்மிடையே வாழ்கிறவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதே உண்மையான சுதேசியம் என விளக்கினார் காந்தியடிகள். அதன் விளைவாகமட்டுமே  ஏழைகள் வளம்பெற முடியும் என்றும் கிராமங்கள் தன்னிறைவு கொண்டதாக எழுச்சிபெறும் என்றும் சொன்னார். கதரோடு கிராமத் தொழில்களையும் சேர்த்து வளர்க்கவேண்டும் என்பது காந்தியடிகளின் எண்ணமாக இருந்தது. இறுதியில் குமரப்பாவை செயலாளராகக் கொண்டு காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படாத, தனித்துச் செயல்படக்கூடியதாக இந்தியக் கிராமியக் கைத்தொழில் சங்கம் உருவாகியது.  ஆராய்ச்சி, உற்பத்தி, பயிற்சி, பிரச்சாரம், கிளை அமைப்புகளை உருவாக்குதல் என ஐந்து பிரிவுகளில் சங்கம் பணியாற்றத் தொடங்கியது.
குமரப்பா நாடெங்கும் பயணம் செய்து கிராமியக்கைத்தொழில்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெருகச் செய்தார். தன் இடையறாத தொண்டின் வழியாக காந்தியப் பொருளாதார மேதையாக அவர் வளர்ச்சியுற்றார். இக்காலத்தில்தான் அவர் நிலைத்த பொருளாதாரம், கிராம வளர்ச்சிக்கு ஒரு முழுமையான திட்டம், கிராம இயக்கம் ஏன், உணவுக்குப் பதிலாக கல் போன்ற முக்கியமான நூல்களை எழுதினார். சங்கத்தின் வழியாக கிராமக் கைத்தொழில் பத்திரிகை என்னும் இதழை ஆங்கிலத்திலும் இந்தியிலும் தொடங்கி பல கட்டுரைகளை அதில் எழுதி வெளியிட்டார். ’உணவுக்குப் பதிலாக கல் கட்டுரை ஆங்கில அரசை நேரிடையாகவே குற்றம் சாட்டியது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரம் அது. குமரப்பா உடனடியாக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
ஒருமுறை கல்கத்தாவில் இந்தியக் கிறித்துவர்களுக்கான தலைமைக் குருவாக இருந்த வெஸ்காட் என்பவர் காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம் கிறித்துவின் போதனைகளுக்கு முரண்பட்டதென்று பைபிளிலிருந்து மேற்கோள் காட்டி பிரச்சாரம் செய்தார். அவருடைய கூற்றில் இருந்த தர்க்கப்பிழையைச் சுட்டிக்காட்டிய குமரப்பா அகிம்சைப் போராட்டம் கிறித்துவின் போதனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பதை பொருத்தமான பைபிள் மேற்கோள்களோடு விளக்கி வெஸ்காட்டுக்கு நீண்ட கடிதங்களை அடுத்தடுத்து எழுதினார். அக்கடிதங்கள் யங் இந்தியாவில் வெளிவந்தன. பைபிள் நூலை ஆழ்ந்து கற்றவர் குமரப்பா. மூன்றாவது முறை சிறைக்குச் சென்றபோது, அவர் பைபிள் கருத்துகளை ஒட்டி ஏசுவின் நடைமுறைகளும் கருத்துகளும்என்ற தலைப்பில் சிறந்ததொரு புத்தகத்தை எழுதிமுடித்தார்.
காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு நாட்டில் நடைபெற்ற பல பணிகள் அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. காந்தியின் சீடர்களென கூறிக்கொண்டவர்கள் காந்திய வழியை விட்டு விலகிச் செல்வதை வன்மையாகக் கண்டித்தார். சுதந்திர இந்தியாவை வடிவமைப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கென உருவாக்கப்பட்ட திட்டக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கென ஒரு மன்றம் உருவாக்கப்பட்டது. அதில் குமரப்பா ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கிராமியக் கைத்தொழில் வளர்ச்சியைப்பற்றி அவர் முன்வைத்த ஆலோசனைகள் எதுவும் அந்த மன்றத்தாரால் பொருட்படுத்தப்படவில்லை. அக்கணமே அதிலிருந்து அவர் விடுபட்டு மதுரை மாவட்டத்தில் இருந்த கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்துக்கு வந்துவிட்டார். பயிற்சிநிலையத்தில் பயிலவரும் மாணவர்களிடம் உரையாடுவதும் பொருளாதாரச் சிந்தனைகளை முன்வைத்து விவாதிப்பதுமாக வாழ்க்கையைக் கழித்தார்.
கிராமியக் கைத்தொழில்களோடு கிராமத்தினருக்கு துணையாக உழைக்கும் கால்நடைகளின் நல்வாழ்க்கையைப்பற்றியும் யோசித்தவர் குமரப்பா. ஆசிரமத்தில் ஒருமுறை செக்கில் எண்ணெயெடுக்கும் பிரிவைச் சுற்றிவந்தார் அவர். தோள்பட்டைகளுக்கு நடுவில் பொருத்தப்பட்ட நுகத்தடியை சுமந்தபடி சுற்றிச்சுற்றி வரும் மாடுகளை ஒருகணம் உற்றுப் பார்த்தார். பட்டைகளின் வடிவமைப்பில் ஏதோ ஒரு குறையிருப்பதை அவர் நுட்பமாகக் கண்டுபிடித்தார். அந்தப் பட்டைகள் நீண்டு மாடுகளின் தொடையில் தொடர்ந்து இடித்துக்கொண்டே இருப்பதால் உருவாகும் வேதனையால் அவை துவண்டு நடப்பதை அவர் உணர்ந்தார். உடனே அங்கிருந்த பயிற்சியாளரிடம் அந்தப் பட்டைகளின் வடிவமைப்பை மாற்றும்படி சொன்னார். ஒரு தச்சுத்தொழிலாளியின் உதவியோடு பட்டைகளின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. மறுநாள் மாடுகள் வேதனையின்றி நடப்பதைப் பார்த்து அவர் மனம் நிறைவுற்றது.
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் பேருந்துகளில் பயன்படாத சக்கரங்களை மாட்டுவண்டிகளில் பொருத்தி ஓட்டலாம் என ஒரு திட்டத்தை வகுத்தது அரசு. வண்டிகளின் வேகத்தை அது அதிகரிக்கும் என ஆலோசனை வழங்கவும் செய்தது. ஆனால் மாடுகள் செலுத்தவேண்டிய கூடுதல் உழைப்பைப்பற்றியோ, அவற்றின் துன்பத்தைப்பற்றியோ யாரும் கவலைப்படவில்லை. அத்துன்பத்தை உணர்ந்தவராக இருந்தவர் குமரப்பா ஒருவர் மட்டுமே. அவர் தன் எதிர்ப்பை அறிக்கையாகவே வெளியிட்டார். மாட்டுவண்டிச் சக்கரங்களுக்கும் மாடுகளின் இழுக்கும் திறனுக்கும் உள்ள விகிதம் மிகமுக்கியமானது. மாடுகளின் நடைவேகத்துக்கு ஐந்தடி விட்டம் கொண்ட மரச்சக்கரங்கள் பொருந்திய வண்டிகளே பொருத்தமானதென்றும், அதில் ஏற்படுத்தும் மாற்றம் மாடுகளுக்கு பெருந்துன்பத்தை அளிக்குமென்றும் அவர் உறுதியாகச் சொன்னார்.







எதிர்காலத்தில் ஒரு பொறியியல் வல்லுநராக வரவேண்டும் என்ற விருப்பத்துடன் இளம்பருவத்தில் கணக்குப் பாடத்தை ஆழ்ந்து படித்த குமரப்பா விதிவசத்தால் வரலாற்றை முதன்மைப்பாடமாக படிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகு பொருளியல் பாடத்தைப் பொதுவாகவும் பொது நிதி பாடத்தைச் சிறப்பாகவும் படித்து பட்டங்கள் பெற்றார். கிராமிய வாழ்க்கையைப்பற்றியும் அறத்தின் அடிப்படையில் அமைந்த அழிவற்ற பொருளாதாரத்தைப்பற்றியும் அவர் சிந்திக்கத் தொடங்கியதற்கு ஒருவகையில் இந்த மாற்றங்களே துணையாக இருந்தன. காந்தியடிகளின் சிந்தனைமுறையும் குமரப்பாவின் சிந்தனைமுறையும் ஒரே இலக்கை உடையவை. முதல் சந்திப்பிலேயே காந்தியடிகளின் ஆளுமை குமரப்பாவை ஈர்த்ததற்கு இதுவே காரணம். காந்தியடிகளை தன் குருவாகவும் மேலாளராகவும் ஏற்றுக்கொண்டவர் குமரப்பா. காந்தியடிகளோ இந்த நாட்டின் ஏழை விவசாயியையே தன் மேலாளராக நினைப்பவர். இதன் அடையாளமாக ஓர் ஏழை விவசாயியின் படத்தைஎன்னுடைய குருவின் குரு  என்ற வாசகத்துடன் தன் அறையில் கண்ணில் படும் தொலைவில் வைத்திருந்தார் குமரப்பா.
சர்வோதயம் என்பது தனிமனிதன் என்னும் மையப்புள்ளியில் தொடங்கி உலக நல்வாழ்வு என்னும் பெருவட்டத்தை நோக்கி வளரும் ஆற்றலைக் கொண்ட தத்துவமாகும். உலகத்தை வாழவைப்பதன் வழியாகவே தனிமனிதன் வாழவேண்டும். உலகைச் சிதைத்தழித்தோ அல்லது சுரண்டியோ வாழநினைக்கும் தனிமனித வாழ்க்கை குரூரம் நிறைந்தது. சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதன் வழியாகவே போட்டியில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். எந்திரமயமான பெருந்தொழில் வளர்ச்சி தனிமனித சுரண்டலுக்கே வழிவகுக்கும். காலப்போக்கில் அது சந்தைகளைக் கைப்பற்றும் போட்டியாக மாறி, ஒன்றை ஒன்று அழிக்கத் தொடங்கிவிடும். எழுந்தவை இன்னும் உயரத்தில் இன்னும் உயரத்தில் என பறக்க நினைக்க, விழுந்தவை எப்படியாகவது எழுந்து நிற்கமாட்டோமா என தவிக்க, இரண்டுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்தபடியே செல்லும். ஒருவகையில் அது சமூகத்தின் தற்கொலைப்பாதை. வாழ்வின் இறுதி மூச்சுள்ள வரையில் அதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தவர் ஜே.சி.குமரப்பா.