Home

Monday, 6 January 2020

திறக்க முடியாத ஜன்னல் - கவிதை




தொடரும் பயணத்தில்
என்னையும் உலகையும் ஜன்னல் தான் இணைக்கிறது
அது கொண்டுவரும் காற்று
அது வழங்கும் காட்சிகள்
அது காட்டும் வானம்
அது சுட்டும் மனித முகங்கள்
ஒவ்வொரு கணத்தையும் உயிரூட்டுகிறது அது
எனினும் இந்தமுறை ஏமாந்து விட்டேன்
என்பது தான் சோகமான விஷயம்


ஜன்னலோர இருக்கைதான் வேண்டுமென்று
வாதாடி வாங்கியிருந்தேன்
இருக்கைப் படத்தைக் கணிப்பொறியில் பார்த்துத்தான்
இந்த இடத்தைப் பதிந்திருந்தேன்

இழுக்க இழுக்கத் திறக்க மறுத்து
இரும்புத் திரைபோல நிற்கிறது ஜன்னல்
எனக்காக அந்த நடத்துநரே வந்து
முயற்சி செய்தபின்பு கைவிரித்து விட்டார்
இப்போது மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பில்லை
எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன
வேறுவழியே இல்லை என்னும்போது
நம்பிக்கையோடு
ஜன்னலைத் திறக்க
மீண்டும் முயற்சித்துத் தோற்கிறேன்
அந்த ஜன்னலுக்கு இரக்கமே இல்லை
கிஞ்சித்தும் இறுக்கம் தளரவில்லை

என் உலகமோ மறுபுறம் இருக்க
இறுதிக் கணத்தில் நிலைகுலைய வைத்தது ஜன்னல்
மூச்சுமூட்டத் தொடங்கிவிட்டது இந்தப் பயணம்

(கணையாழி, டிசம்பர் 1994.)