Home

Friday 12 November 2021

நினைவுகளும் கனவுகளும்

      1974இல் பள்ளியிறுதி வகுப்பில் நான் படித்தபோது எங்களுடைய ஆங்கிலப் பாடத்தில் தாகூரின் கீதாஞ்சலி இடம்பெற்றிருந்தது. எங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்த ராமனாதன் ஐயா அந்தப் பிரார்த்தனைப் பாட்டின் முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே உருகிவிட்டார். ஒவ்வொரு சொல்லையும் அவரே சொந்தமாகச் சொல்லி முறையிட்டு மன்றாடுவதுபோல சொன்னார். இரண்டே இரண்டு பத்திகள்தான் எங்களுக்குப் பாடமாக இருந்தன. ஆனால் அப்பாடலை ஒவ்வொரு வரியாக அதை அவர் ஒரு வாரம் முழுதும் நடத்தினார். அப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் எங்கள் நெஞ்சில் பதிந்துவிட்டது.

அடுத்த வாரம் தொடங்கியதும் புதிய பாடத்தைத் தொடங்குவார் என நாங்கள் அனைவரும் நினைத்திருந்த வேளையில் எங்கள் ஐயா தன் பையிலிருந்து ஒரு புதிய புத்தகத்தை எடுத்து, அதிலிருந்து ஒரு பாட்டைப் படித்தார். ஆனால் அது பிரார்த்தனைப் பாடலல்ல. ஒரு குழந்தை தன் அம்மாவிடம் உரையாடுவது போன்ற பாடல். ஐயாவின் குரலும் அன்று குழந்தையைப் போலக் கொஞ்சியது. பாடலைப் படித்துவிட்டு, அதற்கு பொருளையும் சொன்ன பிறகுஇதுவும் தாகூர் பாட்டு. இதப் பத்தியும் நீங்க தெரிஞ்சிக்கணும். இந்தியாவில இலக்கியத்துக்காக நோபெல் பரிசு  வாங்கிய ஒரே கவிஞர் தாகூர்என்று பெருமையுடன் சொன்னார். பாடப்பட்டியலில் இல்லாத அந்தச் சிறிய புத்தகத்தை நாங்கள் அனைவருமே அவரிடமிருந்து வாங்கிப் பார்த்தோம். Crescent Moon என்று அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பலரும் அத்தலைப்பைப் படித்துவிட்டு மெளனமாக இருப்பதைப் பார்த்துவிட்டு ஐயாவேமூன்னு சொன்னா நிலா, அது தெரியுமில்லை? க்ரெசென்ட் மூன்னு சொன்னா வளர்பிறை நிலா. கொஞ்சம் கொஞ்சமா பெரிசா வானத்திலேயே வளரக்கூடிய நிலா. புரியுதா?” என்றார். நாங்கள் அனைவரும் புரிந்ததுபோல அனைவரும் புன்னகையுடன் தலையாட்டினோம்.

அதே புத்தகத்தை இரண்டாண்டுகள் கழித்து நான் கல்லூரியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்திருந்த சமயத்தில் எங்கள் ஆசிரியர் தங்கப்பாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று படித்தேன். நாற்பது பாடல்களே அதில் இருந்தன. அதனால் ஒரே இரவில் படித்துவிட்டேன். நிலவின் பெயரை தலைப்பில் கொண்டிருந்த அப்புத்தகத்தில் நிலவைப்பற்றிய பாடலே இல்லை. குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளரும் வளர்ச்சியை அடையாளப்படுத்துவதற்காகவே அந்தச் சொல்லைத் தாகூர் பயன்படுத்திக்கொண்டார் என்பது புரிந்தது. குழந்தையின் எண்ண ஓட்டங்களைச் சித்தரிக்கும் ஒவ்வொரு வரியையும் படிக்கப்படிக்க  மகிழ்ச்சியாக இருந்தது.

            1976இல் நான் படித்த அந்தப் பாடல்தொகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பை போன மாதம் பெங்களூர் நூலகத்தில் பார்த்தேன். தாகூரின் பெயரை புத்தகத்தின் அட்டையில் பார்த்துவிட்டு எடுத்துப் பிரித்தபோதுதான், ஒரு காலத்தில் நான் விரும்பிப் படித்த Crescent Moon தொகுதியின் மொழிபெயர்ப்பு என்பது புரிந்தது. ஒருகணம் எங்கள் பள்ளியாசிரியர் ராமனாதன் ஐயாவின் முகம் என் நெஞ்சில் நிழலாடியது. மனம்போன போக்கில் ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தேன். அந்தக் கற்பனை உலகம் என்னை ஒரு காந்தம் போல இழுத்துக்கொண்டது. எனக்கு அருகில் நின்று என்னோடு உரையாடும் குழந்தையின் குரலை அப்பாடலில் நான் கேட்டேன். வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கும் முடிவோடு அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.

1949இல் முதல் பதிப்பாகவும் 1953இல் இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்த அந்தப் புத்தகத்தை அன்றைய தேதி வரையில் ஆறு பேர் மட்டுமே படித்திருந்தார்கள் என்பதை புத்தகத்தின் பின்னட்டையோடு ஒட்டிவைக்கப் பட்டிருந்த பதிவுத்தாளில் தெரிந்தது. ஏழாவது ஆளாக நான் என்னுடைய எண்ணைப் பதிவு செய்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே  வந்தேன்.

கீதாஞ்சலி எழுதி இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்ற தாகூர் குழந்தைகளுக்காக எழுதிய புத்தகங்களில் Crescent Moon ஒன்று. தாகூர் வங்கமொழியில் முதலில் எழுதிய அப்பாடல்களை, சிறிது காலம் கழித்து அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். குறைந்த ஆங்கில மொழிப்பயிற்சி உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு பாட்டையும் தளர்வான உரைநடைமொழியிலேயே மொழிபெயர்த்தார். ஒரு பாட்டில் குழந்தை தன் தாயாரை நோக்கி உரையாடுகிறது. இன்னொரு பாட்டில் தாயார் தன் குழந்தையை நோக்கி உரையாடுகிறாள். மாறி மாறி நிகழும் இந்த உரையாடல்களே அத்தொகுதி முழுக்க நிறைந்திருந்தது. ஆங்கிலத்தில் வெளிவந்த அத்தொகுதியை வளர்மதி என்ற தலைப்பில் லலிதா என்பவர் தமிழில் மொழிபெயர்க்க, ஸ்டார் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.

நாற்பது பாடல்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.  அன்று எங்கள் வகுப்பில் ராமனாதன் ஐயா படித்துவிட்டு பொருள் சொன்ன பாடலை முதல் வாசிப்பிலேயே கண்டுபிடித்துவிட்டேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு குழந்தை தன் தாயிடம் ஒரு கேள்வி கேட்கிறது. பிறகு தான் எடுத்திருக்கும் ஒரு முடிவை உருக்கமான குரலில் தெரிவிக்கிறது. அவ்வளவுதுதான் அக்கவிதை. ஆனால் படித்தபோது மனம் கரைந்துவிட்டது.

அம்மா, என் அருமையான அம்மா. நான் உன் குழந்தையாக இல்லாமல் ஒரு நாய்க்குட்டியாக இருந்து, உன்னுடைய தட்டில் வாய்வைத்து தின்ன முயற்சி செய்தால், நீ என்னைத் தடுத்துபோக்கிரி நாய்க்குட்டியே, சீ போஎன்று வெறுத்து விரட்டுவாயாஎன்பது ஒரு கேள்வி. பிறகுஅப்படித்தான் நீ நடந்துகொள்வாய் என்றால் நான் உன்னை நெருங்கிவர மாட்டேன் அம்மா. நீ எனக்கு ஊட்டிவிடவும் சம்மதிக்கமாட்டேன்என்று தெரிவிக்கிறது.  அம்மா, என் அருமையான அம்மா. நான் உன் குழந்தையாக இல்லாமல் ஒரு பச்சைக்கிளியாக இருந்தால், எங்காவது தப்பித்துப் பறந்துபோய் விடுவேன் என்று நினைத்து என்னை கூண்டில் அடைத்துவிடுவாயா? அட, நன்றி கெட்ட பறவையே, இரவும் பகலும் கூண்டுக் குச்சிகளைக் கொத்திக் கடித்துக்கொண்டே இருக்கிறாயே என்ரு கடிந்துகொள்வாயாஎன்பது மற்றொரு கேள்வி. “அப்படித்தான் நீ நடந்துகொள்வாய் என்றால்  நீ என்னை நெருங்கவோ எடுத்து அணைத்துக் கொஞ்சவோ சம்மதிக்கமாட்டேன். நான் உன்னைவிட்டு விலகி காட்டுக்கே சென்றுவிடுவேன் அம்மாஎன்று தெரிவிக்கிறது. எல்லா உயிரும் தானே என நினைக்கும் அந்தக் குழந்தையின் எளிய சொற்களில் அடங்கியிருக்கும் அன்பை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அன்பு ஒரு வற்றாத மகாநதியென குழந்தைகள் நெஞ்சிலிருந்து பிறந்து கரைபுரண்டோடுகிறது.

அடுத்தவரைப்போல இருக்கவேண்டும் என்று கனவு காணாதவர்களே இருக்கமுடியாது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கணமேனும் அந்தக் கனவு பிறப்பது இயற்கை. குழந்தைகளிடம் அத்தகு கனவுகள் நிறைந்திருக்கின்றன. எப்போதும் கனவில் திளைத்திருக்கும் ஒரு குழந்தையை தாகூர் இன்னொரு கவிதையில் பார்க்கவைக்கிறார்.

இக்கவிதையும் ஒரு குழந்தையின் கோரிக்கையை முன்வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அது தினமும் பள்ளிக்குச் செல்லும் குழந்தை. காலையில் பள்ளிக்கு நடந்துசெல்லும் போதெல்லாம் அது தெருவில்வளையல், கண்ணாடி வளையல்என கூவிக்கூவி விற்றபடி செல்லும் ஒரு வியாபாரியைப் பார்க்கிறது. அந்த நடையும் அந்தக் குரலும் அவனுடைய சுதந்திரமும் அக்குழந்தைக்கு மிகவும் பிடித்துவிடுகின்றன. அக்கணத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு மாறாகவளையல், பட்டு வளையல்என்று உல்லாசமாகக் கூவியபடி தெருதோறும் செல்லும் வியாபாரியாக இருந்துவிட்டால் ஒவ்வொரு பொழுதும் எவ்வளவு இன்பமயமாக இருக்கும் என்று நினைத்தபடி கனவில் திளைக்கிறது.

மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், ஒரு வீட்டின் முன்பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில் ஒரு வேலைக்காரன் தன்னிடம் இருக்கும் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தி மண்ணைச் சீர்ப்படுத்திக்கொண்டிருக்கும் காட்சியை குழந்தை பார்க்கிறது. அவனுடைய ஆடை கலைந்து அழுக்கேறியிருக்கிறது. தலைமுடி கலைந்திருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றிய கவலை எதுவுமின்றி, அவன் சுதந்திரமாக மண்ணைக் கொத்திக்கொண்டே இருக்கிறான். யாரும் தடுக்காத அவனுடைய சுதந்திரமும் அந்த வேலையும் அக்குழந்தையை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. அக்கணத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு மாறாக தோட்டக்காரனாக மாறிவிட்டால் எவ்வளவு இன்பமயமாக இருக்கும் என்று நினைத்தபடி கனவில் திளைக்கிறது.

இரவு கவிந்ததும் அக்குழந்தைக்கு உணவு கொடுத்து நேரத்தோடு படுக்கையில் படுக்கவைத்துவிட்டுச் செல்கிறாள். உறக்கமில்லாத குழந்தை திறந்திருக்கும் ஜன்னல் வழியாக இருளில் வேடிக்கை பார்த்தபடி பொழுதுபோக்குகிறது. மனித நடமாட்டமே இல்லாமல் வெறுமை சூழ்ந்த தெருவில் கைவிளக்கை வீசிவீசி நடந்துவரும் இரவுக்காவல்காரன் மீது அதன் பார்வை பதிகிறது. காலடியில் நீண்டுவிழும் தன் நிழலே தனக்குத் துணையாக  தனித்து நடந்துசெல்லும் அவனுடைய தோற்றம் அக்குழந்தைக்கு வசீகரமாகக் காட்சியளிக்கிறது.  கைகளை வீசிவீசி நடக்கும் இரவுக்காவல்காரனாக மாறிவிட்டால் வாழ்க்கை எவ்வளவு சுவையுடையதாக இருக்கும் என்று நினைத்தபடி கனவில் திளைக்கிறது. குழந்தையின் களங்கமில்லாத ஒவ்வொரு கனவும் கவிதையின் அழகைப் பலமடங்காக அதிகரிக்கவைக்கிறது.

இன்னும் சில பக்கங்களுக்கு அப்பால் படகோட்டி என்றொரு கவிதை இருந்தது. இதுவும் ஒரு குழந்தை தன் தாயிடம் முன்வைக்கும் வேண்டுகோள் வகையிலேயே அமைந்திருந்தது அந்தக் குழந்தைக்கு ஊருக்கு வெளியே புரண்டோடும் ஆற்றின் மீது ஆசை இருக்கிறது. குறிப்பாக தனது ஊரின் பக்கமிருக்கிற கரையைவிட, ஒருபோதும் காணாத அக்கரையின் மீதான ஆசை அதிகம். அக்கரைக்கும் இக்கரைக்கும் மாறிமாறி ஓய்வில்லாமல் பயணம் செய்யும் படகுகள் மீதான ஆசையும் அதிகம்.  அந்த ஆசை, அக்குழந்தையின் மனத்தில் ஒரு படகோட்டியாக மாறிவிடும் ஆசையாக உருமாறிவிடுகிறது. அக்கணமே அது தன் தாயிடம்என் அன்புள்ள அம்மா, நான் வளர்ந்து பெரியவனானதும் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்லும் படகோட்டியாக இருக்கவே ஆசைப்படுகிறேன்என்று முறையிடுகிறது. காலை முதல் நண்பகல் வரைக்கும் படகோட்டும் களைப்பில் பசித்ததுமே ஓடோடி அம்மாவை நாடி வந்துவிடுவதாகத் தெரிவிக்கிறது. உணவுக்குப் பிறகு மீண்டும் படகோட்டச் சென்று இருள் கவியும் வேளையில் திரும்பிவிடுவதாக வாக்களிக்கிறது. அதுவரை முன்வைத்த எந்த வேண்டுகோளுக்கும் அம்மா ஒரு பதிலையும் கொடுக்கவில்லை. அது குழந்தையை வேறொரு கோணத்தில் யோசிக்கத் தூண்டுகிறது.  இறுதி முயற்சியாக பட்டணத்துக்குப் போய் தனியாக வேலை செய்து வாழும் அப்பாவைப்போல ஒருபோதும் அம்மாவை தனிமையில் விட்டுச் செல்லமாட்டேன் என நம்பிக்கையளித்துவிட்டு புன்னகைக்கிறது. அவ்வளவுதான் கவிதை. அம்மாவுக்குப் பிடித்ததை நுட்பமாகக் கண்டறிந்துவிடும் குழந்தையின் அறிவாற்றல் மகத்தானது. மேலும் சில பக்கங்களுக்கு அப்பால் காகிதப்படகுகள் என்ற தலைப்பில் மற்றொரு நல்ல கவிதை இருந்தது. இதுவும் ஒரு குழந்தையின் கூற்று. அக்குழந்தை ஒவ்வொரு நாளும் காகிதத்தில் படகு செய்து தன் வீட்டையொட்டி ஓடும் நீரோடையில் தினந்தோறும் மிதக்க விடுகிறது. அந்தப் படகில் தன் பெயரையும் தன் சிற்றூரின் பெயரையும் மறக்காமல் எழுதிவைக்கிறது. அப்படகு சென்று சேரும் தேசத்தில் யாராவது இந்தப் படகைப் பார்க்கக்கூடும் என அக்குழந்தை உறுதியாக நம்புகிறது. அப்போது அவர்கள் தன்னைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல்கள் உதவியாக இருக்குமென அது நினைத்துக்கொள்கிறது. அவர்களுக்கு அன்பளிப்பாக எதையாவது அனுப்பினால் நன்றாக இருக்குமே என நினைத்து, தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த மலர்களைப் பறித்தெடுத்துவந்து படகை நிரப்பிவைக்கிறது. மிதந்துபோகும் படகைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கிறது.

பெருமிதத்தில் மனம் விம்ம தற்செயலாக வானத்தைப் பார்க்கிறது அக்குழந்தை. அங்கே சின்னச்சின்ன மேகங்களைப் பார்க்கிறது. ஒரு கோணத்தில் அம்மேகங்கள் அனைத்துமே வானத்தில் மிதந்துபோகும் படகுகளைப்போலத் தெரிகிறது. வானத்தில் நீந்திச் செல்லும் அப்படகுகள், கீழே ஓடையில் செல்லும் தன் படகுகளுக்குப் போட்டியாக மிதந்து போவதாக நினைத்துக்கொள்கிறது. போட்டியில் தன் படகுகள் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறது. இரவில் உறங்கும்போது கூட அதே நினைவில் உறங்குகிறது அக்குழந்தை. இரவில் காணும் கனவிலும் படகுகள் மிதந்துசெல்லும் காட்சியே விரிகிறது. அந்தப் படகில் தேவதைகள் பயணம் செல்கிறார்கள். கனவுகள் நிறைந்த கூடைகளும் அதே படகில் அவர்களோடு செல்கின்றன.

 புத்தகத்தைப் படித்து முடித்ததும் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு முன்னால் அக்கவிதைகளைப் படித்த நினைவுகளும் கனவுகளும் விஸ்வரூபமெடுத்து நெஞ்சில் மோதித் தளும்பின. இறந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்  இடையில்  மனம் ஊசலாடியபடி இருக்க, தாகூர் தீட்டியிருக்கும் குழந்தைச் சித்திரம் மட்டுமன்றி, அக்கணம் வரைக்கும் எனக்குப் பார்க்கக் கிடைத்த எல்லாக் குழந்தைகளின் சித்திரங்களும் ஒருசேர அலைமோதத் தொடங்கின.

 

(அம்ருதா – நவம்பர் 2021 இதழில் வெளியான கட்டுரை)