பழுத்து உதிர்ந்த வாதுமை இலையின் நிறத்திலிருந்த விடுதியறைக்கதவின் மீது பதிக்கப்பட்டிருந்த எண்களைப் பார்த்து உறுதிசெய்துகொண்டு அழைப்பு மணியை அழுத்திய ஒன்றிரண்டு நொடிகளுக்குள்ளேயே உயரமான ஒருவர் கதவைத் திறந்து “எஸ்?” என்றபடி என்னைப் பார்த்தார். செதுக்கியதுபோன்ற இறுகிய முகம். ஒரு விரலில் நீலக்கல் மோதிரம் மின்னியது. ”பச்சையப்பன் சார்தான?” என்ற என் கேள்விக்கு அவர் தலை மட்டும் அசைந்தது. நான் உடனே அவருக்கு வணக்கம் சொன்னேன்.
“நான் மணவாளன். ரியல் எஸ்டேட்
துரைசாமி அனுப்பி வச்சார். வீராம்பட்டணத்துல செல்வகுமார் சார்
வீட்டுக்கு அழச்சிட்டு போவணும்னு சொன்னாரு...”
“செல்வகுமார்னா அவர் சொன்னார்? நான் தனலட்சுமி
வீட்டுக்குத்தான போகணும்னு சொல்லியிருந்தேன்” என்று குழப்பத்துடன் அவர் என்னைப் பார்த்தார்.
“செல்வகுமார் சார் வீடும் தனலட்சுமி அக்கா வீடும் ஒன்னுதான் சார். செல்வகுமார் சார்
ஒய்ஃப்தான் தனலட்சுமி அக்கா”
பச்சையப்பன் பதிலொன்றும் சொல்லாமல் என் முகத்தையே ஒரு கணம் உற்றுப் பார்த்தார். பிறகு “உள்ள வா” என்றார். அவர் அப்படி
சட்டென ஒருமையில் அழைப்பார் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அக்கணமே அங்கிருந்து திரும்பி ஓடிவிடலாமா என்று தோன்றியது.
“துரைசாமிகிட்ட வேலை செய்ற ஆளா நீ ?”
“இல்லைங்க. அவரு எங்க
சித்தப்பா”
“ஓ” என்றபடி
என்னைப் பார்த்து தலையை மேலும் கீழுமாக அசைத்தார். பிறகு அறைக்கட்டிலில்
சாய்ந்து காலை நீட்டிக்கொண்டிருந்த பெண்மணியிடம் “மிச்சத்த வந்து பேசிக்கலாம் ரேவதி. அரகொறயா யோசிச்சி
எதுவும் முடிவு பண்ண வேணாம். தோ,
ஆள் வந்தாச்சி. ஒரு எட்டு
போய் பார்த்துட்டு வரலாம், கெளம்பு?” என்றார்.
அந்தப் பெண்மணி “போலாம், போலாம். நமக்கு காரியம் ஆவணும்ன்னா கழுதையானாலும் காலை புடிச்சித்தான ஆவணும்” என்றார். அலுப்புடன்
பெருமூச்சு விட்டபடி கட்டிலிலிருந்து இறங்கி நிலைக்கண்ணாடியின் பக்கம் நடந்து புடவை மடிப்புகளைத் திருத்தி ஒப்பனையைச் சரிபார்க்கத் தொடங்கினார். “வந்து ரெண்டு நாளாவுது. ஒரு வேலையும்
நடக்கலை. எனக்கு எப்படா
திருச்சிக்கு திரும்பிப் போவோம்னு இருக்குது. காலையில பெரியவளும்
சின்னவளும் பேச ஆரம்பிக்கும் போதே எப்பம்மா வர எப்பம்மா வரன்னு கேட்டுதுங்க” என்றார்.
“வந்த வேலை முடியாம எப்படி கெளம்பறது? எதுவா இருந்தாலும்
போய்வந்து பேசிக்கலாம், கெளம்பு. பக்கத்து அறையில
அண்ணன் அண்ணிகிட்டயும் சொல்லிட்டு வரேன். அவுங்களும் வர்றதா
சொன்னாங்க. அம்மாவயும்
ஒரு வார்த்த கேக்கணும்” என்றபடி பச்சையப்பன்
திரும்பினார். என்னைப் பார்த்து “இங்கயே நில்லு” என்பதுபோல சைகை காட்டிவிட்டுச் சென்றார்.
கண்ணாடியைப் பார்த்து காதோரமாக விலகியிருந்த முடிக்கற்றைகளை சீர்செய்துவிட்டு நாற்காலியை நோக்கி நடந்தபடி “வீராம்பட்டணத்துல என்ன செய்றாரு
ஒங்க சாரு?” என்று கேட்டார் ரேவதி. அவர் என்னைத்தான்
கேட்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அதற்குள் அவர்
அதே கேள்வியை இரண்டாவது முறை கேட்டுவிட்டார். நான் சற்றே பதற்றம் கொண்டு “செல்வகுமார் சார பத்தி கேக்கறீங்களா? வீராம்பட்டணம் அவரு இருக்கற எடம்தாங்க. மேட்டுப்பாளையத்துலதான் வேலை செய்றாரு”
“என்ன வேலை?”
“ஏதோ ஐடி கம்பெனியிலன்னு சொல்வாரு”
அவருடைய பார்வை ஒருகணம் மூடியிருந்த வாசல் கதவைப் பார்த்தது. பிறகு அவசரமாக “ஆள் எப்படி?” என்று கேட்டார்.
“சாரு ரொம்ப தங்கமான மனுஷன்ங்க. அவுரு மாதிரியான
ஆளுங்க உலகத்துல ஆயிரத்துல ஒருத்தர்தாங்க இருப்பாங்க”
“என்ன, ஓவரா பில்டப்
கொடுக்கற?” என்று கேட்டபடி புருவத்தைச் சுருக்கினார் அவர்.
“பில்டப்லாம் இல்லைங்க மேடம். உண்மையத்தான் சொல்றேன். போன வருஷம் பத்து நாளா விடாம காத்துமழை அடிச்சிதே, ஞாபகம் இருக்குதுங்களா? அப்ப கடலோரத்துல மக்கள்லாம் ரொம்ப தவியா தவிச்சிட்டாங்க. அப்ப செல்வகுமார் சார்தான் எங்க எங்கயோ அலஞ்சி மூட்டை மூட்டையா அரிசி தானமா வாங்கிவந்து எல்லாருக்கும் பிரிச்சி கொடுத்தாரு. அவருக்கு இருக்கற பெரிய மனசு யாருக்கும் வராதுங்க?”
அவர் வருஷாவருஷம் நடத்தும் ரத்தமுகாம் பற்றிச் சொல்ல நினைத்து தொடங்குவதற்குள் கதவைத் திறந்துகொண்டு பச்சையப்பன் வந்துவிட்டார். அவருக்குப் பின்னால் அவருடைய சாயலிலேயே இன்னொருவர் வந்தார். வெள்ளை வெளேரென்று
பேண்டும் சட்டையும் போட்டிருந்தார். காதோர முடிக்கும் மீசைக்கும் கருநிறச் சாயம் பூசியிருந்தது.
“அண்ணே, துரைசாமின்னு ஒருத்தரு
வந்து பார்ப்பாருன்னு நேத்து சாயங்காலம் நம்ம ராஜவேலு சொன்னாரே, அவரு அனுப்பிவச்ச
ஆளு இது”
பச்சையப்பன் என்னைச் சுட்டிக்காட்டி சொல்லிக்கொண்டே நடந்து சென்று நாற்காலியில் உட்கார்ந்தார். நான் அந்த வெள்ளைச்சட்டைக்காரரின் பக்கம் திரும்பி வணக்கம் சொன்னேன். அவர் எதுவும்
பதில் சொல்லாமல் தலையை அசைத்தபடி ஜன்னலோரமாக இருந்த
ரவிவர்மாவின் ஜடாயு வதம் புகைப்படத்துக்கு அருகில் சென்று நின்றார்.
“கண்டிப்பா போய் பாத்துதான் ஆவணுமா பச்சையப்பா?”
“போய் பார்த்தாதாண்ணே நமக்கு காரியம் நடக்கும்”
வெள்ளைச்சட்டைக்காரர் ஒரு கணம் எதையோ யோசித்தபடி மீசையின் மீது விரல்வைத்து தேய்த்தபடி இருந்தார். பிறகு த்ச்
என்று நாக்கு சப்புக்கொட்டியபடி “பத்து வருஷமா ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு நாமளே வெட்டி ஒதுக்கி வச்ச பொண்ணுகிட்ட, இப்ப நாமளே போய் பேசணும்னா, மனசு ஏத்துக்க
மாட்டுதுடா. எந்த மூஞ்சிய வச்சிகிட்டு நாம அங்க போய் பேசறது, சொல்லு” என்றார். அவரால் கோர்வையாக பேசவே முடியவில்லை. ஒவ்வொரு சொல்லையும் கசப்பும் சலிப்புமாகச் சொன்னார்.
”ஏன் இந்த மூஞ்சிக்கு என்ன கேடு? இந்த மூஞ்சிய
வச்சிகிட்டே பேசலாம். நம்மள
கைநீட்டி கொற சொல்ற தகுதி யாருக்கும் இல்ல” என்று அவரோடு சேர்ந்து வந்த பெண்மணி சொன்னார். அந்தக் குரலின்
தோரணையிலேயே அவர் அந்த வெள்ளைச்சட்டைக்காரரின் மனைவி என்பது புரிந்தது.
சில நொடிகளில் ஓரு ஊன்றுகோலின் உதவியுடன் உடல்பருத்த வயதான ஒரு அம்மா மெதுவாக உள்ளே வந்தார். அவர் தலைமுடி
முழுக்க வெளுத்திருந்தது. அவரை அழைத்துச் சென்று கட்டிலில் சாய்ந்தவாக்கில் அமரவைத்தபடி “ஒங்க பெரிய புள்ளகிட்ட நீங்கதான் பேசணும் அத்த. முன்னாலயும் போவ
உடமாட்டறாரு. பின்னாலயும் போவ உடமாட்டறாரு. வழவழன்னு இழுத்துகிட்டே இருக்கறாரு” என்றார் வெள்ளைச்சட்டைக்காரரின் மனைவி.
“அவன் எப்பவுமே இப்படித்தான்டி சந்தனக்கிளி. ஒரு காரியத்த செய்ய நூறு தரம் யோசிப்பான்” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த அம்மா. தொடர்ந்து “என்ன சொக்கலிங்கம்? என்ன பிரச்சினை ஒனக்கு? நான் ஆரம்பத்திலேருந்தே
அந்த ஓடுகாலி சிறுக்கி கையெழுத்தும் வேணாம், காலெழுத்தும் வேணாம். நாம பாட்டுக்கு நம்ம இஷ்டத்துக்கு வித்துட்டு போயிட்டே இருக்கலாம்னு சொல்லிட்டே இருந்தேன். நீதான் அந்த
சட்டம், இந்த சட்டம்னு
எதைஎதையோ சொல்லி என் வாய அடைச்ச. இப்ப ஆளு
இருக்கற எடம் எதுனு தெரிஞ்சாச்சி. போய் பார்த்து ஒரு வார்த்த கேக்கறதுக்கு ஏன் தயங்கற? போய் கேளு. ஒத்துபட்டு வந்தா சரி. இல்லைன்னா
போடி இவளேன்னு வந்து சேரு. நீ என்ன
உறவு கொண்டாடவா போற? ஒரு
கையெழுத்துதான கேக்க போற?”
சொக்கலிங்கம் என அழைக்கப்பட்ட அந்த வெள்ளைச்சட்டைக்காரர் ஒருகணம் அந்த அம்மாவையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு பெருமூச்சு விட்டபடி “உறவே வேணாங்கறவங்களுக்கு என் கையெழுத்து மட்டும் எதுக்குன்னு கேட்டா, என்னால எந்த
மூஞ்சிய வச்சிகினு பதில் சொல்ல முடியும்? கொழப்பிக்கறேன், கொழப்பிக்கறேன்னு
ஆளாளுக்கு சொல்றீங்களே, ஏன் கொழப்பிக்கறேன்னு இப்ப புரியுதா?” என்று சொன்னார்.
”அந்த ஓடுகாலிக்கு பதில் சொல்றதுக்கு நீ ஏன்டா கொழப்பிக்கணும்? ஆமா, கையெழுத்துக்குத்தான்
வந்தேன்னு தைரியமா சொல்லு. ஏன்,
தலைய சீவிடுவாளா அவ?” என்று சீற்றத்துடன்
கேட்டார் அந்த அம்மா.
“சீவுமோ, சீவாதோ, அதெல்லாம்
எனக்கு தெரியாது. பதில் சொல்ல
முடியாம நின்னா, அது நமக்கு
அசிங்கமா இருக்காதா? நான் அதத்தான்
யோசிக்கறேன்.”
“அவ நம்ம எல்லாரயும் ஏற்கனவே அசிங்கப்படுத்தனவதான. இப்ப என்ன புதுசா அசிங்கம் வரப்போவுது? நம்ம கூட்டத்த விட்டு வேற கூட்டத்து ஆளுதான் வேணும்ன்னு என்னைக்கு அவ வீட்டவிட்டு எறங்கி போனாளோ, அன்னைக்கே எல்லா
அசிங்கமும் வந்தாச்சி. தெருவுல தல
நிமுந்து நடந்த ஒங்கப்பாவ ஒரே நாள்ல தல குனிஞ்சி நடக்க வச்சவ அவ. ஞானப்பிரகாசம் குடும்பத்துல இந்த மாதிரி ஒரு கேவலமான விஷயம் நடக்கலாமான்னு என் காதுல உழறமாதிரி தெனந்தெனமும் பேசி காறித் துப்பனாங்க. அவள நெனச்சாவே என் வயிறெல்லாம் எரியுது. இன்னும் இருபது
முப்பது வருஷம் இருக்கவேண்டிய ஆளு அல்பாயுசுல போய் சேர அந்த ஓடுகாலி நாய்தான்டா காரணம்”
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். சொக்கலிங்கம் உரத்த
குரலில் ”அம்மா” என்று
அழுத்தமாகக் கூப்பிட்ட பிறகுதான் அவர் நிறுத்தினார். ”இப்ப நடக்க போற விஷயத்த பத்தி பேசுன்னு சொன்னா, என்னைக்கோ நடந்த
கதைய ஆரம்பிக்கற?” என்றபடி அவரை முறைத்துப் பார்த்தார். பிறகு
பச்சையப்பன் பக்கம் திரும்பி வேகமாக “வாடா, போவலாம்” என்று
சொல்லிவிட்டு பெண்மணிகளைப் பார்த்து “கெளம்புங்க கெளம்புங்க” என்றார்.
அந்த அம்மா அக்கணமே பச்சையப்பன் பக்கம் திரும்பி “இங்க பாருங்கடா. அப்பா எழுதன உயிலு ரொம்ப தெளிவா இருக்குது. என் காலத்துக்குப்
பிறகு நான் சம்பாதிச்ச வீடு என் ரெண்டு ஆம்பள புள்ளைங்களுக்குச் சொந்தமாகணும்னு எழுதி வச்சிருக்காரு. வேற யாருக்கும் இதுல பங்கு இல்லை, புரியுதா?” என்றார்.
“யாரும் இப்ப இங்க வந்து பங்கு குடுன்னு நிக்கலைம்மா. புரியுதா, நீயா கற்பனையில
பிரச்சினைய உண்டாக்கிக்காத. கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு இரு. நாங்க
போய்ட்டு சீக்கிரமா வந்துடறோம்” என்றபடி மேசை மீது இருந்த டி.வி.ரிமோட்டை எடுத்து அந்த அம்மாவுக்கு அருகில் வைத்தார்.
“போனமா வந்தமான்னு சீக்கிரமா வந்து சேரணும். புரியுதா? அந்தக்
கிரிச கெட்டவ வீட்டுல ஒரு வாய் தண்ணி கூட வாங்கிக் குடிக்கக்கூடாது. அது நம்ம வம்சத்துக்கே அசிங்கம்” என்றபடி அந்த ரிமோட்டை எடுத்தார் அந்த அம்மா.
இனி புறப்பட்டுவிடுவார்கள் என்று தோன்றியதால், நான் உடனடியாக அறையைவிட்டு வெளியே வந்தேன். என்ன மாதிரியான
சங்கடத்தில் என் சித்தப்பா என்னை சிக்கவைத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. தனலட்சுமி அக்கா வீட்டுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவையும் பகையையும் தெளிவாகத் தெரிந்துகொண்டேன்.
அவர்கள் மின்னேற்றிக்காக பொத்தானை அழுத்துவிட்டு காத்திருந்த வேளையில் நான் வேகவேகமாக படியிறங்கி கீழே வந்து வாசல் பக்கமாகச் சென்று நின்றேன். சில கணங்களில்
அவர்களும் வாசலுக்கு வந்துவிட்டனர். சொக்கலிங்கம் தன் கைபேசியிலிருந்து காரோட்டியிடம் பேசி வாசல் பக்கமாக வருமாறு சொன்னார்.
பெரிய கார். பின்னால் இரண்டு
பின்னிருக்கை வரிசைகள் இருந்தன. சொக்கலிங்கமும் சந்தனக்கிளியும் பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டனர். பச்சையப்பனும்
ரேவதியும் நடு இருக்கையில் அமர்ந்தனர். நான்கு பேரும் உள்ளே சென்று அமர்ந்த பிறகு நான் டிரைவர் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன். ”எங்க திரும்பணும், எப்படி போவணும்னு டிரைவருகிட்ட சொல்லிட்டே வா. அவரு
திருச்சிகாரர். பாண்டிச்சேரியில எந்த இடமும் அவருக்கு தெரியாது” என்றார் பச்சையப்பன். “சரிங்க சார்” என்று தலையசைத்தபடி
டிரைவரிடம் திசை விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தேன். ரத்னா திரையரங்கத்துக்கு
அருகில் வலது பக்கமாகத் திரும்பி வண்டி பிரதான சாலையில் ஓடத் தொடங்கியது.
“சித்தப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கறதுதான் வேலையா? இல்ல,
வேற ஏதாவது செய்யறியா?”
எதிர்பாராத விதமாக அவர் கேட்ட கேள்வி சுருக்கென்று தைக்கிறமாதிரி இருந்தது. “சித்தப்பா வேலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கெடையாது சார். நான் இ.பி.யில
லைன்மேனா இருக்கறேன்” என்று இறுக்கத்துடன் பதில் சொன்னேன்.
“அப்படியா? டெம்பரவரியா, பர்மனெண்டா?”
“நாலு வருஷமா டெம்பரவரியாதான் வச்சிருக்காங்க. சீக்கிரம் பர்மனெண்டாய்டும் சார்”
“மாசத்துக்கு என்ன தராங்க?”
பதில் சொல்லும் ஆர்வத்தையெல்லாம் அக்கணத்தில் நான் இழந்துவிட்டேன். சித்தப்பாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டேன். அடங்கிய குரலில் “அஞ்சாயிரம் வரும்” என்றேன். “திருச்சியில
அமேசான் டீலர்ஷிப் ஒன்னு எடுக்கப் போறேன். ரெண்டு மூனு
வாரத்துல கைக்கு வந்துடும். நிறைய டெலிவரி
ஆளுங்க தேவைப்படும். மாசத்துக்கு பத்தாயிரம் கொடுக்கறேன். வரியா?” என்றார் அவர்.
அந்தோணியார் சர்ச் சிக்னலுக்கு அருகில் மூன்று சாலைகள் சந்திப்பில் வண்டி நின்றது. பச்சையப்பனின் நேரடி
கேள்வி திகைப்பூட்டியது. திரும்ப வேண்டிய திசையை டிரைவரிடம் தெரிவித்த பிறகு மெதுவாக அவர் பக்கம் திரும்பி ”வீட்டுல கலந்து
பேசிட்டு சொல்றேன் சார்” என்று பதில்
சொன்னேன். “சரி சரி, அவசரமில்லை. பொறுமையாவே பதில் சொல்லு” என்றார் அவர்.
“ஒரு வேலைய வேணும் வேணாம்னு பதில் சொல்றதுக்கு கூட வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லுது பாரு, இதுதான் ஒரு புள்ளைக்கு லட்சணம். இந்த
புத்தி அந்த காலத்துல உங்க தங்கச்சிக்கு இருந்ததா? அப்பா, அம்மா, அண்ணனுங்க எல்லாரயுமே அவ கால்தூசுக்கு சமம்னு நெனச்சி உதறிட்டு போனா. மாப்பிள்ளைய தானா
தேடிகிட்டு வீட்டவிட்டு வீராப்பா போனவ பின்னால இப்ப நாம தேடிகிட்டு போவறம். கலிகாலம்டா சாமி”
பின்னிருக்கையில் அமர்ந்து ஜன்னல் பக்கமாக வேடிக்கை பார்த்தபடி தனக்குத்தானே கசப்புடன் பேசினார் ரேவதி. பதில் எதுவும்
பேசாமல் பச்சையப்பன் அமைதியாக அவரைப் பார்த்தார். இடுப்பில் ஒரு குழந்தையைத் தூக்கியவண்ணம் ஒரு சிறுமி தன் வயிற்றைத் தட்டிக் காட்டி கைநீட்டியபடி நின்றிருந்த வாகனங்களுக்கு நடுவே செல்வதும் ரேவதி தன் நெற்றியில் விரலால் அடித்துக்கொள்வதும் கண்ணாடி வழியாகத் தெரிந்தன. அவருக்கு யாரும்
பதில் சொல்லவில்லை. சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறியதும் வண்டி புறப்பட்டது.
”இங்க பாரு ரேவதி, பத்து வருஷமா
நம்ம வீட்டுல நல்லது கெட்டதுன்னு எவ்ளோ நடந்திருக்குது. எதுக்காவது நாம அத வான்னு ஒரு வார்த்த கூப்ட்டிருக்கமா?”
“கூப்ட்டம்னு யாரு சொன்னா இப்ப?”
“நம்ம ரெண்டு புள்ளைங்களுக்கு மஞ்சள் நீர் சுத்தினோம். திருச்சியில வீடு வாங்கி கம்பெனி தெறந்தோம். எதுக்காவது தெரியப்படுத்தனமா?”
“இல்ல”
“அண்ணிக்காக அண்ணன் சென்னைக்கு போய் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செஞ்சாரு. ஜப்பான், ஜெர்மனின்னு
ரெண்டு தரம் வெளிநாட்டுக்குப் போய் வந்தாரு. எந்த சந்தர்ப்பத்துலயாவது
நாம அதுக்கு சொல்லி அனுப்பியிருக்கமா?”
”இல்ல. இல்ல.
போதுமா?”
“நல்லா யோசிச்சி பாரு. அப்பா ஹார்ட்
அட்டாக்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னால செத்த சமயத்துல கூட நாம தகவலே கொடுக்காமதான எடுத்தும் போயி எரிச்சிட்டு வந்தோம்? அதுவும் ஒதுங்கிடுச்சி. நாமளும் ஒதுங்கிட்டம். இப்ப இந்த வீட்ட விக்கணும்கற பேச்சு வந்ததாலதான் இன்னைக்கு தேடிப் போய் பாக்கணும்ங்கற நெலமைக்கு வந்திருக்கம். விக்க வேண்டிய அவசியம் இல்லைன்னா, நாமளும் அத
போய் பாக்கவேண்டிய அவசியமே வந்திருக்காது”
“அந்த வாங்கற பார்ட்டிக்கு வேற வேலையே இல்லையா? கணக்குலயே இல்லாதவகிட்ட கையெழுத்து கேக்கறான்? பேசி கீசி
அவன சரிகட்ட முடியாதா? அதக்கூட செய்யமுடியலைன்னா, இந்த ரியல் எஸ்டேட்காரங்கள்ளாம் எதுக்கு இருக்கணும்? வெறும் கமிஷன் வாங்கறதுக்கு மட்டும்தான் அந்த ராஜவேலு வருவாரா?”
“யாரா இருந்தாலும் அத கேக்கத்தான் செய்வாங்க ரேவதி. அத மொதல்ல
புரிஞ்சிக்க. ஒருத்தவங்களுக்கு மூனு புள்ளைங்கன்னு சொன்னா, மூனு பேரும்
கையெழுத்து போட்டாதான் அந்த கெரயத்துக்கு மதிப்பு. சட்டம் அதத்தான்
ஏத்துக்கும்.”
“பத்து கையெழுத்து கூட வாங்கிக்குங்க. வேணாம்னு சொல்லலை. ஆனா பணத்துல
பங்குங்கற பேச்சுக்கே இடம் கெடயாது. அத மட்டும்
புரிஞ்சிக்குங்க. அது அந்த காலத்துலயே உங்க அப்பா எடுத்த முடிவு” என்று பின்னிருக்கையிலிருந்து
சந்தனக்கிளி சொன்னார்.
“நல்லா உறைக்கற மாதிரி எடுத்துச் சொல்லுங்கக்கா. அப்பதான் இவரு மண்டையில ஏறும்”
“உங்க அப்பா உயிரோட இல்லாம இருக்கலாம். ஆனா அவரு வார்த்தைக்கு இன்னும் உயிரு இருக்குது. அது ஞாபகத்துல
இருக்கட்டும்”
பச்சையப்பன் சிறிது நேரம் யோசனையில் மூழ்கியிருந்தார். மரப்பாலத்தை வாகனம் கடந்து செல்லும்போது அவர் கண்கள் தன்னிச்சையாக வேடிக்கை பார்த்தன. பிறகு பெருமூச்சுவிட்டபடி
“நம்ம ரெண்டு குடும்பத்துல ஏதாவது ஒரு குடும்பம் இங்க தங்கியிருந்தா இந்த கொழப்பமே இருந்திருக்காதுண்ணி. நீங்க ஒரு பக்கம் போயிட்டிங்க. நாங்களும் இன்னொரு பக்கம் போயிட்டம். ஆள் நடமாட்டம்
இல்லாத வீட்ட இன்னும் எவ்ளோ காலத்துக்கு ஒத்த வாட்ச்மேன வச்சிட்டு காப்பாத்த முடியும்? நாம
தேடி போகாமலேயே ஒரு பார்ட்டி இந்த வீட்டுக்காக நம்மள தேடி வந்திருக்குது. நாம கேக்கற தொகைய கொடுக்கவும் தயாரா இருக்குது. இதுதான் சரியான
நேரம்னு தள்ளி உடறதுதான் புத்திசாலித்தனம்” என்றார்.
“புத்திசாலித்தனமோ முட்டாள்தனமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாங்கற
பணத்துக்கு ரெண்டு பங்குதான் கணக்கு. மூனாவதா ஒரு பங்குங்கற பேச்சுக்கே எடமில்லை” என்று சந்தனக்கிளி
அம்மையாரின் குரல் தீர்மானமாக ஓங்கி ஒலித்தது.
தொடர்ந்து ”காலம் முழுக்க இது பாழடஞ்ச பங்களாவா நின்னாகூட எனக்கு கவலையில்ல. அவளுக்கு மட்டும்
ஒத்த பைசா கூட போவக்கூடாது, புரியுதா?” என்று
சொன்னார்.
வீராம்பட்டணம் வந்துவிட்டது. கடற்கரைக்குச் செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பச் செய்து குறுகிய தெருக்களூடாக அழைத்துச் சென்று ஒருபக்கம் வேப்பமரமும் இன்னொரு பக்கம் முருங்கை மரமும் நின்றிருந்த வீட்டு வாசலில் நிறுத்தச் சொன்னேன். முதலில் நான்
இறங்கி அவர்கள் இறங்குவதற்கு உதவி செய்தேன்.
புடவையைச் சரிசெய்தபடி அக்கம்பக்கத்தில் வரிசையாக இருந்த வீடுகளின் பக்கம் பார்வையை ஓட்டிவிட்டு முகத்தைச் சுளித்தபடி “எல்லா வீடும் பன்னிக்குடிசை மாதிரி சின்னச்சின்னதா இருக்குது. இதுக்குள்ள எப்படித்தான்
மனுஷங்க இருக்காங்களோ?” என்றார் சந்தனக்கிளி. அவர்
குரலைக் கேட்டு சொக்கலிங்கம் சற்றே உரத்த குரலில் கண்டிப்பதுபோல ”என்ன பேசறம், எங்க பேசறம்னு
ஒரு விவஸ்தையே கெடையாதா ஒனக்கு?” என்று சொல்லிவிட்டு முறைத்தார். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு நடக்கத் தொடங்கிய சந்தனக்கிளி கீழே விழுந்திருந்த சாணக்குவியலைப் பார்த்து முகம்சுளித்தபடி “அசிங்கம் அசிங்கம்” என்றபடி விலகி
நடந்தார்.
“வீடு பூட்டியிருக்குது. யாரும் இல்லையா?” என்று கேட்டபடி பச்சையப்பன் பேச்சை மாற்றினார்.
“ஞாயித்துக்கெழமதான? வீட்டுக்குள்ளதான் இருப்பாங்க சார். வாங்க போவலாம்” என்றபடி வாசல்படலைத் தள்ளி ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். எனக்குப் பின்னால் அனைவரும் வந்தார்கள். உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.
”உள்ள
ஆள் இருக்காங்க சார். சத்தம் கேக்குது பாருங்க” என்றபடி பச்சையப்பனைப்
பார்த்து புன்னகைத்தேன். அவர் சிரிக்கவில்லை. வீட்டின் உயரத்தையும் அகலத்தையும் அளவு பார்ப்பதுபோல திரும்பத்திரும்பப் பார்த்தபடி இருந்தார்.
“இது என்ன, அவருக்கு சொந்த
வீடா?”
“இல்ல சார், வாடகைக்குத்தான் இருக்காங்க”
படியேறிச் சென்று கதவோரமாக பதித்திருந்த அழைப்புமணியை அழுத்தினேன். ”அம்மா வந்துட்டாங்க, அம்மா வந்துட்டாங்க” என்றபடி சிறுவர்கள் ஓடிவரும் சத்தம்
உட்பக்கத்திலிருந்து கேட்டது. மறுகணமே கதவைத்
திறந்தபடி “அம்மா” என்றபடி
இரண்டு சிறுவர்கள் வெளிப்பட்டனர். மறுகணமே எங்களைப் பார்த்த குழப்பத்தில் அவர்கள் குரல் சட்டென அடங்கியது. பெரியவன் மட்டும்
அங்கேயே நின்றிருக்க, சின்னவன் சட்டென பின்வாங்கி “அப்பா, உங்கள தேடி
யாரோ வந்திருக்காங்க” என்று சத்தமிட்டபடி அறையின் பக்கம் ஓடினான்.
சில கணங்களில் செல்வகுமாரின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு வெளியே வந்து “இங்க பாரு” என்றான். கூட்டமாக இருந்ததால்
பொதுவாக ”வாங்க வாங்க” என்று வணங்கிய
கைகளுடன் வரவேற்றார் செல்வகுமார். இரு சிறுவர்களும் ஆளுக்கொரு பக்கம் இடுப்புடன் ஒட்டிக்கொண்டனர். ஒரு குழப்பமும் திகைப்பும் அவர் கண்களில் படிந்திருந்தாலும் அவை வெளிப்பட்டுவிடாதபடி புன்னகைத்தார். அந்தக் கும்பலில் என் முகத்தைப் பார்த்த பிறகே அவருடைய முகத்தில் ஒரு வெளிச்சம் படர்ந்தது. ”என்ன மணவாளன்? எப்படி இருக்கீங்க?” என்று கேட்டபடி என் தோளில் கைவைத்தார்.
“நல்லா இருக்கேன் சார். எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான் சார். உள்ள போய் உக்கார்ந்து பேசலாம்”
”வாங்க, உள்ள வாங்க” என்றபடி வாசலில் நின்றிருந்தவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் செல்வகுமார். எல்லோரும் காலணிகளை வாசல் கதவோரமாக உதறிவிட்டு வீட்டுக்குள் சென்றனர். பெரிய சோஃபாவில்
இரு பெண்மணிகளும் உட்கார்ந்துகொண்டனர். பச்சையப்பனும் சொக்கலிங்கமும் தனித்தனியாக இரு சோஃபாக்களில் அமர்ந்தனர். அவர்களுடைய
கண்களைப் பார்க்கும்போதெல்லாம் செல்வகுமாரின் கண்களில் ஒருவித குழப்பம் படிந்து விலகுவதை என்னால் உணரமுடிந்தது. செல்வகுமார் ஒரு தட்டில் தண்ணீர் நிறைந்த தம்ளர்களைக் கொண்டுவந்து ”எடுத்துக்குங்க” என்றபடி நடுவில் வைத்தார். நான் மட்டும்
ஒரு தம்ளரை எடுத்து தண்ணீரைப் பருகினேன். சொக்கலிங்கத்தின் கண்கள் கூடத்தில்
அங்குமிங்கும் அலைந்தன. சுவரில் தொங்கிய
புகைப்படங்களையும் காலண்டரையும் மாறிமாறிப் பார்த்தன. பச்சையப்பனின் பார்வை
சுவர் அலமாரி அடுக்குகளில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் வரிசையின் மீது பதிந்திருந்தது.
”ஏசி இல்லயா இங்க? ஒரே புழுக்கமா
இருக்குதே. ஏசி இல்லாம
எப்படித்தான் உங்களால இருக்கமுடியுதோ, தெரியலை” என்றபடி நொடிக்கொரு
தரம் உஃ ப் உஃப் என்று ஊதிக்கொண்டார் ரேவதி. பச்சையப்பன் அவரைப்
பார்த்து ஒரு கணம் முறைத்ததும் ரேவதி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
அனைவருடைய கவனத்தையும் திருப்பும் வகையில் “இவுங்க எல்லாருமே பாண்டிச்சேரிகாரங்கதான் சார்” என்று பேச்சைத் தொடங்கினேன். ”ஆனா இப்ப இங்க இல்ல. ஒரு குடும்பம்
திருச்சியில இருக்குது. இன்னொரு குடும்பம்
சென்னையில இருக்குது. நம்ம தனலட்சுமி
அக்காவ பாத்து பேசணும், வீடு தெரியாதுன்னு
சித்தப்பா மொதலாளிகிட்ட சொன்னாங்க போல. அவரு
காலையில நீ போய் வீட்ட காட்டிட்டு வாடான்னு என்கிட்ட ராம் இன்டர்நேஷனல்ல ரூம் நெம்பர் குடுத்துனுப்பி வச்சாரு.......” என்று தொடங்கினேன். சொல்லிக்கொண்டிருக்கும்போதே கைச்சைகையால் என்னை நிறுத்தினார் செல்வகுமார். சொக்கலிங்கத்தைப் பார்த்து “நான் செல்வகுமார். தனலட்சுமி ஹஸ்பென்ட். என்ன விஷயமா
இருந்தாலும் நீங்க எங்கிட்ட தாராளமா சொல்லலாம்” என்று நேரடியாகக்
கேட்டார்.
பச்சையப்பன் தயங்கி “தனலட்சுமி வீட்டுல
இல்லயா? எப்ப வரும்? பேசும்போது தனலட்சுமியும் இருந்தா நல்லா இருக்கும்” என்றார்.
”ஞாயித்துக்கெழம வீட்டுல இருக்கிற நாள்தான். ஒரு ஃபங்க்ஷன் ஏற்பாடுன்னு திடீர்னு ஸ்கூல்ல வரச் சொல்லிட்டாங்க. அதுக்காக போயிருக்கு. சாயங்காலம்தான் வரும். நீங்க எதுவா
இருந்தாலும் எங்கிட்ட சொல்லலாம்” என்றார் செல்வகுமார்.
சொக்கலிங்கமும் பச்சையப்பனும் ஒருவரையொருவர் ஒருகணம் பார்த்துக்கொண்டனர். அதற்குள் “சொல்லுங்க சொல்லுங்கன்னு
அவரே கேக்கறாரு. நீங்க ரெண்டு
பேரும் புடிச்சிவச்ச புள்ளையாரு மாதிரி இப்படி வாய தெறக்காம உக்கார்ந்திருந்தீங்கன்னா என்ன அர்த்தம்? நீங்களே சொல்றீங்களா, இல்ல நானே சொல்லட்டுமா” என்று முறைத்தார் ரேவதி. “சொல்றன், சொல்றன். அவசரப்படாத” என்றபடி அவர் பக்கம் கையைக் காட்டித் தடுத்தார் பச்சையப்பன்.
“எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியலைங்க தம்பி, நான் பச்சையப்பன். அவரு சொக்கலிங்கம். நீங்க எங்கள பார்த்திருக்க மாட்டீங்க. நாங்க ரெண்டு
பேரும் தனலட்சுமிக்கு அண்ணன்ங்க”
ஒரு வேகத்தில் தொடங்கிவிட்டாரே தவிர, பச்சையப்பனால் தொடர்ந்து
பேசமுடியவில்லை. சற்று நிறுத்தி மூச்சு வாங்கினார். பிறகு ”ஒங்க ரெண்டு பேரு கல்யாணத்துல அப்பாவுக்கு சம்மதமில்ல. அதனால் உறவு அப்படியே அறுந்துபோச்சி. பத்து வருஷம் போன வேகமே தெரியலை. நாங்க யாரும்
இப்ப பாண்டிச்சேரியில இல்ல. ஆளுக்கொரு ஊருல
இருக்கோம். யாரும் இல்லாம
வீடு பாழா போவுது. அதான் வித்துடலாம்ன்னு
ரெண்டு மூனு பேருகிட்ட சொல்லி வச்சிருந்தம். இப்ப வாங்கறதுக்கு
ஒரு ஆளு ரெடியா இருக்காரு. ஆனா அவரு
பத்தரப்பதிவுல ஞானப்பிரகாசத்துக்குப் பொறந்த மூனு புள்ளைங்களும் சேர்ந்து கையெழுத்து போடணும்னு சொல்லி கட்டாயப்படுத்தறாரு. அதான் இப்ப பிரச்சின.”
“இதுல என்ன சார் பிரச்சினை?” என்று சிரித்தார் செல்வகுமார். “பத்தரத்துல தனலட்சுமி வந்து கையெழுத்து போடணும். அவ்ளோதான? என்னைக்கு
வந்து போடணும்னு சொல்லுங்க, அன்னைக்கு வந்து
போடும். நான் சொன்னா
தனலட்சுமி கேக்கும்”
அக்கணத்தில் நான்கு பேர் முகத்திலும் நிம்மதியும் வெளிச்சமும் படர்வதைப் பார்த்தேன். நான் அண்ணாந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த தனலட்சுமி அக்கா படத்தின் பக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
“கேக்கும். அதெல்லாம் சரிதான். ஆனா.....” என்று எதையோ
சொல்லத் தொடங்கி சரியாக சொல்லவராமல் தடுமாறினார் பச்சையப்பன்.
“பங்குக்கு வந்து நிக்குமோன்னு நெனச்சி தடுமாறாதீங்க. எதுவும் வேணாம்னு அன்னைக்கு சொன்ன வார்த்தையிலதான் என் தனலட்சுமி என்னைக்கும் நிக்கும்.”
பேச்சு தானாக ஒரு புள்ளியில் நின்றுவிட்டது. யாருக்கும் பேச்சே எழவில்லை. செல்வகுமார் சுவரில் தனலட்சுமி
அக்காவின் படத்தைப் பார்த்தபடி அடங்கிய குரலில் “உங்ககிட்ட ஒரே
ஒரு விஷயம் மட்டும் சொல்லணும்ன்னு தோணுது. தயவுசெஞ்சி உங்க மேல
குத்தம் சுமத்தணும்னு சொல்றதா நெனச்சிக்கவேணாம். என் மனசுல இருக்கிற
பாரத்த எறக்கறதுக்காக சொல்றேன். தனலட்சுமி அப்பா சாவு தகவல எங்க
யாருக்குமே நீங்க சொல்லி அனுப்பலை. இந்த வீராம்பட்டணத்துல நாங்க
ஏதோ ஒரு மூலையில இருக்கறோம். நாங்களாவும் தெரிஞ்சிக்க வழியில்லாம
போயிட்டுது. திடீர்னு ஒருநாள் ஏதோ ஒரு பஸ்க்கு பின்னால ஒரு கண்ணீர்
அஞ்சலி போஸ்டர பார்த்துட்டுதான் எங்களுக்கு விஷயம் தெரிஞ்சிது. எல்லாத்தயும் மறந்துட்டு பைத்தியம் புடிச்சமாதிரி அப்பா அப்பான்னு கதறி அழுதுச்சி
தனலட்சுமி. ஒரு ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போனோம். ஊடு பூட்டியிருந்திச்சி. நீங்க எல்லாரும் ஊரவிட்டு போயிட்டீங்கன்னு
அக்கம்பக்கத்துல சொன்னாங்க. செத்தவங்க மூஞ்சிய கடைசியா ஒரு தரம்
பாக்க வழியில்லாம போவறதுதான் உலகத்துலயே பெரிய சங்கடம். பாறாங்கல்ல
முழுங்கறமாதிரி அந்த சங்கடத்த என் தனலட்சுமி முழுங்கிட்டுது” என்றார்.
பேச்சு நின்றதும் சிறிது நேரம் மெளனம் நீடித்தது. சொக்கலிங்கம் எழுந்து செல்வகுமாரின் தோளைத்
தொட்டு “சாரி, பழச மனசுல வச்சிக்காதீங்க”
என்றார். விழியோரத்தில் திரண்ட கண்ணீர்த்துளியைத்
துடைத்தபடி செல்வகுமார் புன்னகைக்க முயற்சி செய்தார்.
ரேவதியும் சந்தனக்கிளியும் “சரி, அப்ப
நாங்க கெளம்பறம்” என்றபடி எழுந்து
நின்றனர். ”ரொம்ப நன்றி, தேதி குறிச்சதும்
எப்ப, எங்க வரணும்னு
சொல்லி அனுப்பறேன்” என்று கைகூப்பியபடி பச்சையப்பனும் எழுந்து நின்றார்.
“என்ன அவசரம்? ஒரு டீ
சாப்ட்டுட்டு போவலாமே?” என்று செல்வகுமார் அவர்களை நிறுத்தினார். எழுந்திருக்க மனமில்லாதவராக உட்கார்ந்திருந்த சொக்கலிங்கம் வெளியேறுகிறவர்களை அமைதியாகப் பார்த்து பெருமூச்சு விட்டபிறகு செல்வகுமாரின் பக்கம் திரும்பி “நீங்க போடுங்க
தம்பி, நான் சாப்படறேன்” என்று மெதுவாகச் சொன்னார்.
“போடவேண்டிய அவசியமே இல்ல. தனலட்சுமியே போட்டு
ஃபிளாஸ்க்ல வச்சிட்டு போயிருக்கு” என்றபடி சமையலறைக்குள் சென்றார்.
சொக்கலிங்கத்தின்
பார்வை மீண்டும் மீண்டும் சுவரில் இருந்த படங்கள் மீதே பதிந்து திரும்பின. குழப்பமும் பதற்றமும்
விலகி அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திருப்பதைப் பார்த்தேன்.
அப்போதுதான் நாற்காலியைப் பிடித்தபடி நின்றிருந்த சிறுவர்களை அவர் ஊன்றிப் பார்த்தார். இருவருடைய தோள்களையும் இரு கைகளால் அழுத்தி “அப்படியே எங்க
அப்பா மூஞ்சிய உரிச்சி வச்சிருக்குது” என்று என்னிடம் முணுமுணுத்தார். அவருடைய உதடுகளில் புன்னகை படர்ந்தது. “என்னடா படிக்கறீங்க?” என்று அவர்களிடம் கேட்டார். ஒருவன் “ஃபோர்த்
ஸ்டேண்டார்ட்” என்றான். இன்னொருவன் “தேர்ட்
ஸ்டேண்டர்ட்” என்றான்.
அவர் தலையசைத்துக்கொண்டே “ஒங்க பேரு?” என்று கேட்டார். பெரியவன் ”ஞானசுந்தரம்” என்றான். சின்னவன் “பிரகாஷ்ராஜ்” என்றான். ஒருகணம் திகைத்து
பின்வாங்கி, பிறகு புன்முறுவலோடு அவர்கள் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். “நல்லா இருங்கடா, நல்லா இருங்கடா” என்றார்.
அதற்குள் செல்வகுமார் டீ கோப்பைகளோடு வெளியே வந்தார். ஒரு கோப்பையை
பெரியவரிடமும் இன்னொரு கோப்பையை என்னிடமும் கொடுத்தார்.
“அப்பா பேரத்தான் வைக்கணும்னு தனலட்சுமிக்கு ஒரு ஆசை. ஞானப்பிரகாசம்ங்கற
பேரய ரெண்டா பிச்சி ஆளுக்கொன்ன வச்சிடுச்சி. ஆனாலும் எந்த புள்ளையையும் பேர் சொல்லி கூப்பிடாது. அப்பா அப்பான்னுதான் அவனுங்கள கூப்புடும்”
வெற்றுக் கோப்பையை மேசை மீது வைத்த சொக்கலிங்கம் “பிள்ளைங்க இருக்கிற வீட்டுல நாங்க இப்படி வெறும் கையோடு வந்தது பெரிய தப்பு. ஏதோ கொழப்பம். நீங்க தப்பா எடுத்துக்க வேணாம்” என்றபடி மணிபர்சை
எடுத்து இரண்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து பிள்ளைகளிடம் கொடுத்தார். அவர்கள் சட்டென பின்வாங்கினர். ”அதெல்லாம் எதுக்கு சார்? வேணாம் சார்” என்று செல்வகுமாரும் தடுமாறினார். “இருக்கட்டும், என் திருப்திக்காக இத எடுத்துக்கணும்” என்றபடி தனலட்சுமியின் படத்தைப் பார்த்தபடியே மேசையின் மீது வைத்தார். பிறகு பிள்ளைகளின்
கன்னத்தைத் தட்டிவிட்டு வெளியே நடந்தார். நானும் அவசரமாக
செல்வகுமாரிடம் விடைபெற்றுக்கொண்டு பின்னால் ஓடினேன்.
புறப்படுவதற்கான தயார்நிலையில் வண்டி திரும்பியிருந்தது. எல்லோரும் ஏற்கனவே வண்டிக்குள் அமர்ந்திருந்தனர். நான் டிரைவர் பக்கத்தில் அமர்ந்தேன். சொக்கலிங்கம் பின்னிருக்கைக்குச் சென்றார்.
“என்ன, கொஞ்சல் கெஞ்சல்லாம்
முடிஞ்சிதா? ஒரு வாய் தண்ணி கூட குடிக்கக்கூடாதுன்னு உங்கம்மா சொன்னத மறந்துட்டீங்களா? ஒரு வேளை டீ குடிக்கலைன்னா உயிரா போய்டும்?” என்று சத்தம் போட்டார் சந்தனக்கிளி.
வாசலில் நின்று கையசைத்த பிள்ளைகளைப் பார்த்து நானும் சொக்கலிங்கமும் மட்டும் கையசைத்தோம். மற்றவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். வண்டி ஓடத் தொடங்கியதும் ”டிரைவர், மொதல்ல ஜன்னல க்ளோஸ் பண்ணிட்டு ஏசிய போடுப்பா. புழுக்கம் தாங்கலை” என்றார் ரேவதி.
(புரவி – நவம்பர் 2021)