வெகுநேரம் சாளரத்தின் வழியாகத் தெரிந்த நீல வானத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வாசவதத்தை ஒருகணம் திரும்பி அருகில் மஞ்சத்தில் உறங்கும் உதயணனைப் பார்த்தாள். உறவாடிய களைப்பில் துயிலில் ஆழ்ந்திருந்தான் அவன். நிலா வெளிச்சத்தில் அவன் கட்டிலில் கிடந்த தோற்றம் துண்டாக்கிக் கிடத்தப்பட்ட ஒரு மரத்தைப் போலிருந்தது. வெப்பமாக உணர்ந்தாள். காற்று போதுமானதாக இல்லை. கலைந்த மார்க்கச்சைச் சரிப்படுத்தியபடி மஞ்சத்திலிருந்து எழுந்தாள். அவள் நிழல் பக்கத்துச் சுவரில் மிக நீண்ட ஒரு மரம்போலத் தெரிந்தது. சத்தமில்லாமல் அறை¬யை விட்டு வெளியே வந்தாள்.
வாசலில் உட்கார்ந்திருந்த காவல் தோழிகள் அவசரமாக எழுந்து நின்றர்கள். “அரசி, தங்களுக்கு......?”
என்று இழுத்தார்கள். “ஒன்றும் தேவையில்லை. தூக்கம் வரவில்லை. எழுந்தேன்” என்றபடி பின்புறத் தோட்டத்துக்கு நடந்தாள். வேகவேகமாகப் பந்தங்களோடு பின்தொடர
வந்தவர்களையும் “வேண்டாம். பகல் போல
நிலா பொழிகிறது. பயம் இல்லை” என்று பதில் சொல்லி நிறுத்தினாள். தோழிகள் ஒன்றும் புரியாமல் அதே இடத்தில்
தயங்கி நின்றுவிட்டார்கள்.
தோட்டத்தைக் கடந்து குளத்தங்கரைக்கு வந்தாள் வாசவத்தை. மிகப்பெரிய தட்டுபோல
நிலவொளியில் குளம் மின்னியது. கரையோரத்து மரங்களிலிருந்து காற்றின் வேகத்தில்
இலையும் பூவும் உதிரும் போதெல்லாம் அலைகள் நெளிந்தன. பவழ மல்லிகையின் வாசமும்
தாழம்பூவின் வாசமும் காற்றில் கலந்து வந்தன. கரையையொட்டிய வேப்பமரத்திலிருந்த வந்த
பழமணம் அடர்த்தியாக இருந்தது. குளத்தைத் தொடர்ந்து தோப்பும் தோப்புக்கு மறுபுறம்
கோட்டையும் நீலத்திரையில் தீட்டப்பட்ட ஒரு சித்திரம்போலத் தெரிந்தது-. கோட்டை
மதில் மீது சீரான இடைவெளியில் எரியும் தீப்பந்தங்கள் புள்ளிகளாகத் தெரிந்தன.
அவள் ஒரு வேப்ப மரத்தடியில் உட்கார்ந்தாள். மஞ்சத்தில் மல்லாந்து உறங்கும்
உதயணனின் சித்திரம் மனத்திலெழுந்ததும் ஒருவிதக் கசப்பு படர்வதை உணர்ந்தாள். தன் மன
அமைதி கரைந்து ஒருவித எரிச்சலும் இயலாமையும் படர்ந்ததில் வருத்தமுற்றாள். இது
மூன்றாவது முறை. ஒவ்வொரு முறையும் எங்காவது ஒரு பெண்ணிடம் மயங்கி விழுந்து
கிடப்பதும் அரச காரியங்களைக்கூட மறந்து திரிவதும் பிறகு ஏதோ ஞாபகம் வந்ததைப்போல
ஓடி வருவதும் செல்லப் பிராணியைப்போல குழைந்து குழைந்து உபசரிப்புகளால் பிரியத்தை
வெளிப்படுத்துவதும் மனம் குளிர்ந்த நேரத்தில் அவளையும் அரசியாக்கிக் கொள்ள
ஒப்புதலைப் பெறுவதும் அவனுக்கு ஒரு வாடிக்கையான விளையாட்டுப்போல ஆகிவிட்டது.
கச்சிதமாக ஆடப்படுகிற ஒரு விளையாட்டுப்போல அவனுக்கு அந்தக் கலை கைவந்துவிட்டது.
கூச்சம் என்பது அவன் மனத்தில் சுத்தமாக இல்லை. அவனை மன்னிப்பதும் அரவணைத்துக் கொள்வதும்
தவறான விஷயங்களாக மாறிவிட்டன. ஒன்றையடுத்து ஒன்றாக எல்லாமே கோணலாகிவிட்டது.
சிக்கல் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக கூடுதலாகிவிட்டது- பழசையெல்லாம் தொலைத்து
புதுப்பிறவி, புதுவாழ்வு என்று
மாற்றிக்கொள்ளவேண்டும். ஆனால் அது சுலபமாக இல்லை. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் போல குடும்பத்தில் ஒரு காலும் குலாவும் பெண்களைத் தேடுவதில்
ஒரு காலுமாக ஊன்றிக்கொண்டிருப்பவனை வைத்துக்கொண்டு எதையும் மாற்றமுடியாது என்று
திட்டவட்டமாகப் புரிந்துவிட்டது-.
ஸாங்கிருத்யாயனி என்கிற சந்நியாசப் பெண்ணுடன் அவன் சுற்றிக்கொண்டிருப்பதாகக் காலையில்தான் செய்தி கிடைத்தது. ஆறு
மாதமாகத் தொடர்கிற கள்ள உறவு. காதுக்கு முதலில் செய்தியை எட்டவைத்துவிட்டு பிறகு
நேரில் வந்து ஆழம் பார்ப்பது அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது. சந்நியாசிப்
பெண்ணையும் அவனையும் அவள் மனம் ஒரு கணம் பொருந்திப் பார்த்தது- “ஸாங்கிருத்யாயனி, ஸாங்கிருத்யாயனி” என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். மனசின் அடியிலிருந்து ஒரு சின்ன வெறுப்பு
குபீரென்று பொங்கி வந்தது. திடீரென்று உடைந்து அழுது விடுவோமோ என்று தோன்றியது.
உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
இதயம் வேகவேமாகத் துடித்து அடங்கியது. அவள் கட்டுப்பாட்டை மீறிக் கண்களில் ஒரு
துளி கண்ணீர் பொங்கித் திரண்டது. நீலத் திரையில் தோன்றிய வானின் சித்திரம்
மங்கியது-. ஒரு கணம் கண்களை மூடித் திறக்க, கண்ணீர்த் துளி கன்னத்தில் உருண்டு வழிந்தது. “ஸாங்கிருத்யாயனி” என்று அவள் வாய் முணுமுணுத்தது. “ஆணை மயக்கும் கைகாரிக்குச் சந்நியாசினிக் கோலம் எதற்கு?”
என்று கேட்டுக்கொண்டாள்.
மாலையில் எப்படியெல்லாம் குழைந்தபடி வந்தான். “வாசவதத்தை..... வாசவதத்தை.....” என்று குளிரக்குளிரக் கூப்பிட்டபடி அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிட்டான்.
அத்தனை தோழிகளுக்கும் நடுவில் அவன் வேகவேமாக வந்து தோளைத் தொட்டு அணைத்தபோது ஒரு
கணம் கூச்சத்தில் சுருங்கிப் போனாள். உடனே அவன் கைகளை வேகமாக உதறினாள். அதைச்
சிறிதும் கவனிக்காதவன்போல “ஏன் வாசவததை, இப்படி மெலிந்து போய்விட்டாய்?”
என்று ஆசை வார்தைகளைக் கொட்டினான். மறுபக்கம் திரும்பி “என்ன தோழிகளோ நீங்கள்?- அரசியின் உடல் இப்படி ஆகும் வரை என்னதான் செய்துகொண்டிருப்பீர்களோ? அவருக்கு வேளா வேளைக்கு உணவு கொடுப்பதைவிட அப்படி என்ன பெரிய வேலையோ
உங்களுக்கு?” என்று தோழிப்
பெண்களிடம் செல்லமாகச் சலித்தான். அவர்கள் அவசரமாக ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக
நாணம் படர வெளியேறிக்கொண்டிருந்தார்கள். ஆறு மாதத்துக்குப் பிறகு வருகிறவனுக்கு
எதுதான் ஒழுங்காகத் தெரியும் என்று எரிச்சலாக வந்தது. அப்போதே அவன் அடுக்கிக்
காட்டப் போகும் காரணங்களைக் காது கொடுத்துக் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தாள்.
சிரித்துக்கொண்டே அவள் தோளில் முகம் புதைத்துக் கன்னத்தில் முகம் புதைக்கக்
குனிந்தபோது “விரிசதை எப்படி
இருக்கிறாள்? சுகம்தானே?”
என்று கேட்டாள். உதயணன் முகம் ஒருகணம் அதிர்ச்சியைக் காட்டியது. தொடர்ந்து “அவளைப் பார்ப்பதுண்டா? ஒருவேளை இங்கே வருவதைப்போல அங்கேயும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தானா?”
என்று குத்தினாள். சமாளித்துச் சிரித்தபடி ஏதேதோ சொல்லிப் பேச்சின் திசையை
மாற்றி மீண்டும் தோளில் முகம் பதித்து உள்ளங்கையை எடுத்துத் தன் கன்னத்தோடு
ஒட்டிக்கொண்டான். மறுகணமே அக்கையைத் தடவி முத்தமிட்டான். அவள் மீண்டும் “பத்மாவதி எப்படி இருக்கிறாள்? அவள் உண்டாகியிருப்பதாக் கேள்விப்பட்டேனே, உண்மையா?” என்றாள் அமைதியாக.
அவன் உள்ளூர உடைந்து போய் ஒருகணம் தன்னைத் தானே திரட்டிக்கொள்வது தெரிந்தது.
முகத்தில் படிந்த வேர்வையைத் துடைத்தபடி தடுமாறினான் அவன். “என்ன வாசவதத்தை, என் மீது கோபமா?”
என்றபடி மடிமீது விழுந்து விட்டான். இது மூன்றாவது முறை என்று அவள் மனம்
சுட்டிக் காட்டியபடி இருந்தது. ஒவ்வொரு முறையும் வேகவேகமாக இரண்டு கேள்விகள்
கேட்டுவிட்டு பிறகு வாடி வதங்கிக் கீழே விழுகிறவனை ஏன் வாரி எடுத்துக் கொள்கிறோம்
என்று ஆச்சரியம் கொண்டாள். பழைய நாட்களைப்போல இந்த முறை அனுமதித்து விடக்கூடாது
என்கிற பிடிவாதம் ஊறி இருந்தது. நெஞ்சில் ஒரு பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறவள்போல
எச்சரிக்கை எச்சரிக்கை என்று மனம் பதறியபடி இருந்தது. அதே நேரத்தில் தன் மனம் கொள்ளும்
பதற்றத்தை நினைத்து வேடிக்கையாகவும் இருந்தது.- உண்மையிலேயே உதயணனை உதறிவிட்டுச்
செல்லும் தைரியமும் மனப்பக்குவமும் தனக்கு இருக்கிறதா என்பது அவள் மனத்தில்
இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே ஊசலாடியது. அதற்கு அவள் மனம் ஒரு போதும் தெளிவாக
விடையை யோசித்து வைக்கவில்லை. ஒரு தெள்ளத் தெளிவான விடை கைவசம் இல்லாத நிலையில்
போலிக் கோபத்தைப் பல்வேறு சொற்களால் புனைந்து வெளிப்படுத்துவது எல்லாம் ஒரு
பாவனையோ என்கிற எண்ணம் எழுந்தபோது அவள் மனத்தில் சுயவெறுப்பு பலமடங்காகப்
பெருகியது. காலம் முழுக்க அவனைக் கட்டிவைக்க முடியாத இயலாமையே இந்தப் போலிக்
கோபத்துக்குக் காரணம் என்று தோன்றியது. தன் அடிமனத்தில் புதைந்திருப்பது அந்த
எண்ணம்தானோ என்று ஒரு முறை கேட்டுக்கொண்டாள்.
உட்கார்ந்த இடத்திலிருந்து நகர்ந்து குளத்தை நெருங்கினாள். வாசவத்தை.
கால்களைக் குளத்தில் நனைத்தாள். கால் தண்டையில் நிலவொளி பட்டு மின்னியது.
தண்ணீரின் குளுமை அவளுக்கு உடனடியாக ஒரு சுதந்திரத்தை வழங்கியது. தன் மனம் அதன்
எல்லா எண்ணங்களிலிருந்தும் விலகி நிற்பதை உணர்ந்தாள். ஏதாவது புதுசாக
யோசிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொலைவில் கோட்டை மீது அசையும் ஒளிப்புள்ளிகளைப்
பார்த்தாள். மிகப்பெரிய கோட்டை கண்ணுக்குப் புலப்பட்ட ஒரு பக்கத்தைத் தவிர்த்து மற்ற மூன்று பக்கங்களிலும் அடர்ந்த
காடு மறைத்துக்கொண்டிருந்தது. வத்ஸ தேசத்தைப் பற்றிய கற்பனை அவளுக்குச் சந்தோஷம்
தந்தது. சொந்த உஜ்ஜயனி தேசத்தைவிட வத்ஸ தேசம் பல விதங்களில் அவளுக்கு
ஆனந்தத்தையும் கிளர்ச்சியையும் வழங்கிய இடம் என்று நினைத்தாள். உஜ்ஜயனி
தேசத்திலிருந்து நளகிரி யானை மீது ஏறி உதயணனோடு நாடு கடந்து வந்த நாட்கள் தந்த
ஆனந்தமும் பரவசமும் அவள் அடிமனத்தில் இன்னும் மெருகு குலையாமலேயே இருப்பதாகத்
தோன்றியது. ஆனால் உதயணன் அதே பழைய ஆசையுடனும் நெருக்கத்துடனும் இல்லை என்கிற
எண்ணம் எழுந்ததும் எல்லாம் வடிந்துவிட்டது. அவன் காதல் ஒரு பெரிய நெருப்புக்
குண்டம்போல சதா எரிந்தபடி இருக்கிறது. வாசவத்தை என்னும் ஒரு பெண்ணின் நெருக்கம்
என்னும் குளுமையால் அந்த நெருப்பை அணைக்க முடியவில்லை. பத்மாவதி, விரிசிதை என்று மேலும்மேலும் பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த எண்ணம் எழுந்ததும் அவள் மனம் உற்சாகத்தை இழந்து வெறுமையுற்றது. தொலைவில்
ஒளிப்புள்ளிகள் சட்டென ஒரு கோணத்தில் ஒரு சந்நியாசியினிப் பெண்ணின் கழுத்தில்
புரளும் மணிமாலையை ஞாபகப்படுத்தியது. சந்நியாசினிப் பெண்ணின் பிம்பம் மனசில்
எழுந்ததுமே ஸாங்கிருத்யாயானியின் தோற்றமும் கூடவே கசப்புடன் மிதந்தது. சீ என்று
தண்ணீர்ப்பரப்பை ஓங்கி அடித்தாள். அலைகள் அங்குமிங்குமாகச் சிதறின. அவள் பிம்பம்
நொறுங்கித் துண்டுதுண்டாக ஏறுமாறாகச் சிதைந்தது. தன் பிம்பத்தைத் தானே சிதைப்பது
ஒருவித சுயவதைத் திருப்தியைத் தந்தது. பிம்பம் மீண்டும் கூடிவரும் கணம் வரை
காத்திருந்து மறுபடியும் எரிச்சலுடன் வேகமாக நீர்ப்பரப்பை அடித்தாள்.
சில கணங்களுக்குப் பிறகு அவள் செய்கை சிறுபிள்ளை விளையாட்டுபோலத் தோன்றியது.
இந்த முறை அவன் தவறை அனுமதிக்கவே கூடாது. காலம் காலமாக இந்தத் தவறுகளுக்கெல்லாம்
சேர்த்துவைத்து வருந்துகிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும். இனி ஒருமுறை வேறொரு
பெண்ணை அவன் நாடிச் செல்ல அனுமதிக்கவே கூடாது. அப்படித்தான் அவன் நினைத்திருந்தாள்.
எனினும் வாசவதத்தை என்கிற அவனுடைய கொஞ்சும் குரலும் குழைவும் ஒவ்வொரு முறையும்
அவளைத் தடுமாற வைத்துவிடுகிறது. சில கணங்களுக்குப் பிறகுதான் உண்மையிலேயே வாசவத்தை
என அழைத்தபடி உதயணன் தன்னருகில் நிற்பது தெரிந்தது. குளத்திலிருந்து படக்கென்று
கால்களை எடுத்தபடி “என்ன?”
என்றாள். “தனியாக என்ன செய்கிறாய்
வாசவத்தை?” என்று கேட்டான் அவன்
அக்கறை தொனிக்கும் குரலில். அவள் மனம் சட்டென்று கோபமுடன் “உட்காரக்கூட உரிமை இல்லையா எனக்கு?” என்று சூடாகக் கேட்கவேண்டும் என்ற ஒரு கணம் எண்ணியது. உடனே தனக்குள்
பொறுமையைக் கற்பித்தபடி “ஒன்றுமில்லை. தூக்கம் வரவில்லை” என்றாள். “திடீரென்று தூக்கம்
கலைந்து எழுந்து பார்த்தபோது மஞ்சத்தில் நீ இல்லையென்றதும் பதறிப் போனேன்.
தேடிக்கொண்டு வெளியே வந்தபோதுதான் காவல் பெண்கள் நீ பின்பக்கத் தோட்டத்தின¢ திசையில் சென்றதாகச் சொன்னார்கள். உடனே ஓடி வந்தேன். உன்னை நேரில் பார்த்த
பிறகுதான் மனம் நிம்மதியுற்றது” என்றான் உதயணன். அருகில் அமர்ந்து அவள் கால்களை எடுத்துத் தன் மடியில்
வைத்துக்கொண்டான். ஈரம் மின்னும் அவள் கால்களைத் தடவித் தந்தான். கால் தண்டைகளை
ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டு ஓசையெழுப்பி ரசித்தான்.
“இந்த இருளில் இந்தக் கீதம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது தெரியுமா?”
அவன் அவள் கால் தண்டைகளை மறுபடியும் அசைத்து ஓசையுண்டாக்கினான்.
“உங்கள் கோஷவதி வீணையின் நாதத்தை விடவா?-” வாசவத்தை கிண்டலுடன் கேட்டாள்.
“கோஷவதி வீணையின் இசை யானையைத்தான் மயக்கும். உன் தண்டையொலி மனத்தை
மயக்குகிறது. இயற்கையையே மயக்குகிறது.” அவன் கிறங்கிப்போய்ச் சொன்னான். குனிந்து அவள் பாதத்தில் முத்தமிட்டான். ஈரம்
படர்ந்த குதிரைமுகத் தசையில் நாவால் தடவினான். பிறகு மெல்லப் பற்களால் கடித்தான்.
“அப்படியென்றால் அடுத்தமுறை யானையைப் பிடிக்கச் செல்லும்போது தண்டைகளையே
எடுத்துச் செல்லுங்கள்.” அவள் இன்னும் கிண்டல் மாறாதவளாகச் சொன்னாள்.
“அதுசரி, இதில் இருப்பவை என்ன
பரல்கள்?”
“ஏன்? மாணிக்கம்.
உஜ்ஜயனியின் மாணிக்கம்.”
அவள் மெல்லமெல்ல தனக்குள் பொங்கும் கிண்டல் உணர்வையும் கோபத்தையும்
தணித்துக்கொள்ள முயற்சி செய்தாள். தன் விருப்பத்தைய மீறித் தன் மனத்தில் மூளும்
இந்த முயற்சியை அறிந்து எரிச்சல் கொள்ளவும் செய்தாள்.
அவன் அவளை மடியில் சாய்த்துக்கொண்டான். கடந்த ஆறு மாதமாக அவனைக் கேட்கவேண்டும்
என்று எவ்வளவோ கேள்விகளை யோசித்து வைத்திருந்தாள். எல்லாமே அந்தச் சூழலுக்குப்
பொருத்தமற்றுத் தோன்றின. ஏதாவது ஒரு வார்த்தை நாக்கின் விளிம்பு வரை வந்து பிறகு
எச்சிலோடு எச்சிலாகக் கரைந்துவிடும். மனசின் இந்த ஆடத்திலிருந்து தப்பிக்க வழியே
இல்லை எனத் தோன்றியது. இது மூன்றாவது முறை. மூன்று பெண்கள் அவள் வாழ்வில் பங்கு கொள்ள
வந்துவிட்டார்கள். இவர்களையெல்லாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்று சலிப்புத்
தோன்றியது. பட்டத்து அரசி என்கிற ஸ்தானத்துக்குத் குந்தகம் நேர்ந்துவிடுமோ எனத்
தன் மனம் அஞ்சுகிறதோ என்று பதற்றத்துடன் எண்ணினாள். “எப்படி இருக்கிறாள் உங்கள் சந்நியாசினி ராணி-?” அவள் பொறுமையாகத் தொடங்கினாள
“அவளுக்கு உன் மீது மிகுந்த மரியாதை உண்டு வாசவதத்தை. நீ என்றால் அவளுக்குத் தெய்வம்
போல.”
“அப்படியென்றால் தெய்வம் அவளுக்கு என்னவாக வேண்டுமாம்?”
“உனக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடுகிறேன் வாசவதத்தை” அவன் குரல் சற்றே பிசிறியது.
“என் விருப்பத்தையறிந்தா அவளோடு பழகத் தொடங்கினீர்கள்? என் சம்மதத்தைக் கேட்டா அவளோடு ஆறு மாதமாக ரகசியமாக வாழ்ந்தீர்கள்?”
கட்டுப்பாட்டை மீறி சீற்றம் தனக்குள் பொங்குவதை அறிந்தாள் வாசவத்தை. சட்டெனத்
தன் பார்வையை நிலத்தை நோக்கித் திருப்பினாள். சில கணங்களுக்குப் பிறகு குளத்தின்
பக்கம் திருப்பினாள். ஊன்றிய கைகளை எடுத்தபோது அருகில் உதிர்ந்து கிடந்த சில
வேப்பம் பழங்கள் உருண்டு குளத்துக்குள் சரிந்தன. அவை மேலே மிதக்கக் கூடும் என்றும்
அலைகள் நெளிந்து நெளிந்து அவற்றைக் கரை ஒதுக்கக்கூடும் என்றும் நினைத்தாள். அதற்கு
மாறாக, அவை குளத்தில்
மேற்பரப்பில் ஒரே ஒரு கணம் தென்பட்டு பிறகு மூழ்கின.
“நான் ஏன் இந்த உறவைத் தவிர்க்கச் சொல்கிறேன் தெரியுமா?”
மனம் சற்றே அமைதியுற்ற நிலைக்குத் திரும்பிய பிறகு கேட்டாள் அவள். அவன் பதில்
சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவள் அடுக்கடுக்காக எல்லாவற்றையும் சொல்லிவிட நினைத்தாள். பல ஆண்டுகளாக
ஒவ்வொரு நாளும் அவன் முன் கொட்டுவதற்கென்று யோசித்து வைத்த சொற்களஞ்சியத்தைத்
திறந்து காட்ட முனைந்தாள். திடுமென அவன் மௌனம் அவளுக்குத் தயக்கத்தைக் கொடுத்தது.
உடனே அவள் மனம் கூம்பியது. அந்தரங்கமான உணர்வோடு தன் எண்ணங்களின் ஆழத்துக்கு
அவனால் ஒருபோதும் வர முடியாது என்று தோன்றியது. தடுமாற்றத்துடன் உதட்டைக் கடித்தாள்.
அதே நேரத்தில் பறவையொன்றின் விசித்திரமான சத்தமொன்று கேட்டது. சட்டென்று பேச்சை
மாற்றும் பொருட்டு “என்ன அது பறவையின்
சத்தம் இந்த நேரத்தில்?” என்று கேட்டாள். உதயணன் பறவையின் சத்தம் வந்த திசையில் ஒருகணம் பார்த்தான்.
“காலம் தாழ்ந்து கூட்டுக்குத் திரும்பிய பறவை அது வாசவதத்தை. இருட்டில் தன்
கூடு எந்தப் புறத்தில் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுகிறது பாவம். தன் கூடு
என்று எண்ணி வேறொரு கூட்டை நெருங்கிச் செல்ல, அக்கூட்டிலிருக்கும் பறவைகள் விரட்டுகிறது போலும். இளைப்பாற இடமின்றி அலைபாய்கிறது.”
தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனவன் சட்டென நிறுத்தினான். ஒருகணம் திகைப்புற்று
வாசவதத்தையைப் பார்த்தான். அவள் தீர்க்கமாக அவனையே பார்த்தபடி இருந்தாள். ஒருவர்
மன ஓட்டத்தை ஒருவர் புரிந்துகொண்டதைப்போலத் தடுமாறினார்கள். சற்றே மிரண்டவன்போல
நிலைகுலைந்தான் உதயணன்.
படபடவென்று சிறகுகளை அடித்தபடி வௌவால்கள் மேலே பறந்தன. கோட்டையில்
மணியடிக்கும் ஓசை கேட்டது. தொடர்ந்து ஒரு திசையிலிருந்து தொடங்கி மறு திசையின்
கோடி வரைக்கும் அந்த ஓசை தொடர்ந்தது. காவல் வீரர்கள் சமிக்ஞை மணியடித்துக் கொள்கிறார்கள்
என்று நினைத்தான் உதயணன். உடனே நேரக் கணக்கும் புரிந்தது.
“கண்விழித்தால் உடம்பு கெடாதா வாசவதத்தை”? என்று கேட்டான் உதயணன்.
“எந்த இரவு தூங்கினேன், இந்த இரவில் கண்விழித்தால் புதுசாக உடல்கெட?”
அவன் மெதுவாகத் தலையை அசைத்தான். பிறகு மெல்லிய குரலில் “உன் தந்தை அனுப்பிய இயந்திர யானையை உனக்கு நினைவிருக்கிறதா வாசவதத்தை?”
என்று கேடடான். அவன் அவளிடமே பல முறை சொல்லிய கதைதான். ஒவ்வொரு முறையும்
புதுசாகச் சொல்கிற மாதிரி சொல்வது விந்தையாக இருந்தது. ஒரு வேளை, ஒவ்வொரு பெண்ணிடமும் இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பானோ என்று தோன்றியதும் அவள்
இதயத் துடிப்பு அதிகரித்தது- எந்தப் பெண்ணிடம் சொன்னோம், அல்லது சொல்லவில்லை என்கிற நினைவுகூட இல்லாமல் இப்படித் தடுமாறுகிறானே என்று
எண்ணிக் குறுகுறுப்படைந்தாள்.
“அப்போது அது இயந்திர யானை என்று எனக்குத் தெரியாது வாசவதத்தை. உயிர் யானை
என்று நம்பிப் பின்னாலேயே வீணையை மீட்டியபடி சென்றேன். நாதத்தில் மயங்கியதைப் போல அசைந்தசைந்து
அது பின்னால் நகர்ந்தபடி இருந்தது. காட்டின் அடர்ந்த பகுதி வரைக்கும் அது
இழுத்துக்கொண்டு போனது. யானையின் தோற்றக் கவர்ச்சி என்னைக் கட்டியிழுத்தது-. அதன்
நிறம். அதன் மத்தகம். அதன் வாகு. என் மனம் காந்தத்துக்குக் கட்டுப்பட்ட இரும்புத்
துண்டுபோல இழுபட்டுப் போனது. புதர்களுக்கு நடுவில் சட்டென யானையின் வயிற்றுக்
கதவுகளைத் தள்ளித் திறந்துகொண்டு ஆட்கள் பாய்ந்து வந்து என்னைச் சிறைப்படுத்தி
விட்டார்கள்.”
வெகு ரசனையுடன் சொல்லி முடித்தான் அவன். அந்த இயந்திர யானையின் பின்னால் அவன்
இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் சித்திரம் அவள் மனத்தில் எழுந்தது. அவன் கைகள் அவள்
கூந்தலைச் சரிசெய்தபடி இருந்தது.
நீலவானம் அழகாக விரிந்திருந்தது. எதையும் சொல்ல முடியாத மௌனத்துடன் நிலா
ஊர்ந்து செல்வது போலிருந்துது. காற்று குளுமையாக வீசியது. உடைக்கமுடியாத தன்
மௌனத்தை அவன் முன் உடைத்துக் கொட்டிவிடலாமா என்று நினைத்தாள். உடனே நெஞ்சு
உலர்ந்தது போலிருந்தது. அவன் மடியிலிருந்து எழுந்து அவனைத் தழுவிக்கொண்டாள். சில
கணங்களுக்குப் பிறகு விலகி உட்கார்ந்தாள். அவள் கண்கள் தளும்பியிருந்தன.
“என்ன வாசவதத்தை-”
அவள் மௌனம் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் மௌனமாக அவன் கண்களை
எதிர்கொண்டாள். காற்றில் அவள் தலைமுடி பறந்தலைந்தது. குளுமையான
காற்றடித்துக்கொண்டிருந்த நிலையிலும் தன் மார்புக்குள் வெப்பம் பரவுவதை உணர்ந்தாள்.
வயிற்றில் இனம்புரியாத கொதிப்பையறிந்தாள். அவனால் தன்னைப் புரிந்துகொள்ளவே
முடியாது என்கிற எண்ணம் மேலும்மேலும் அவளுக்கு உறுதிப்பட்டுக்கொண்டே இருந்தது.
காற்றின் வேகத்தில் அடித்து வரப்பட்ட சருகுகள் குளத்தில் விழுந்தன. ஒரே
நேரத்தில் பல இடங்களில் குமிழிகள் எழுந்து வளையம் வளையமாக அலைகள் பரவின. அவள்
குளத்தையே வேதனையுடன் பார்த்தாள்.
“போகலாமா?”
மறுபடியும் பேச்சைத் தொடங்கினான் உதயணன். அவள் “வேண்டாம்” என்று முதலில் மறுத்தாள்.
பிறகு எழுந்தபடி “சரி” என்றாள். “ரொம்பவும்
குளிர்க்காற்று அடிக்கிறது” அவன் பொதுவாகச் சொன்னான்.
“ஏன் ஒரு மாதிரி வருத்தமாக இருக்கிறாய் வாசவதத்தை?-”
உதயணன் தயக்கத்துடன் கேட்டான்.
“இல்லையே, நன்றாகத்தானே
இருக்கிறேன்.”
அவள் வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு சொன்னாள்.
“நான் வரும்போது இருந்ததைப்போல இப்போது இல்லை நீ....” முனகலாகச் சொன்னான் அவன். கைத்தாங்கலாக அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.
இருவரும் அறையை நோக்கி நடந்தார்கள்.
தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டிவிடச் சரியான தருணம் என்று தோன்றியது.
எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தேடினாள். அதற்குள் நெஞ்சில் வெப்பம்
ஏறியது. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது போலத் தோன்றியது. அந்தக்
குளிரிலும் அவள் உடல் வியர்ப்பது உதயணனுக்கு வியப்பாக இருந்தது. “வாசவதத்தை, என்ன செய்கிறது உனக்கு? உண்மையைச் சொல்” என அவள் முகவாயை
நிமிர்த்திக் கேட்டான். அவள் சிரமத்துடன் தன்னைத் திரட்டிக்கொண்டு “அரசே” என்றாள்.
“என்ன வாசவதத்தை, எதுவாக இருந்தாலும்
தைரியமாகச் சொல்.”
அதற்குள் வாசல் வந்தது. காவல் பெண்கள் மரியாதையுடன் வணங்கிப் பாதையில்
வெளிச்சம் படும்படி எண்ணெய்ப் பந்தங்களைப் பிடித்தார்கள்.
இருவரும் அறைக்குச் சென்றார்கள். கூடவே வந்த தாதி தீபத்தை ஏற்றப் போனாள். “வேணாமடி இப்படியே இருக்கட்டும்” என்றாள் வாசவதத்தை. திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தாதி வெளியே சென்றாள்.
மஞ்சத்தில் சாய்ந்ததும் ஒருக்களித்துப் படுத்தாள் வாசவதத்தை. அவளை மார்போடு
அணைத்தபடி படுத்துக்கொள்ள முயன்றான் உதயணன். சில கணங்களுக்கு அவள் தலைமுடியை
வருடிக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு கழுத்தை வளைத்து முன்நெற்றியில் முத்தம்
பதித்தான்.
“வாசவதத்தை, என்னமோ சொல்ல வந்தாயே, என்ன அது?”
“ஒன்றுமில்லை.”
மீண்டும் பல கணங்கள் கழிந்தன. உதயணன் தயங்கி “ஸாங்கிருத்யாயனியை அவள் ஊருக்கே அனுப்பி விடட்டுமா வாசவதத்தை?”
என்று தயக்கத்துடன் கேட்டான்.
ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது வாசவதத்தையிடமிருந்து. பிறகு “இருக்கும் ராணிகளோடு மற்றொருத்தியாக இருந்து விட்டுப் போகட்டுமே. விடுங்கள்
அரசே” என்றாள். கண்மூடிய
நிலையிலேயே நிமிராமல் நிதானமாகச் சொன்னாள் வாசவதத்தை.
அவள் நிமிர்ந்து ஒருவேளை தன்னைப் பார்க்கக்கூடும் என்று பல கணங்களாக
எதிர்பார்த்தபடி காத்திருந்தான் உதயணன்.
(பிரசுரமாகாதது - 2001)