Home

Sunday, 19 December 2021

ஆக்கூர் அனந்தாச்சாரி : நிழலில்லாத மனிதர்

  

08.09.1920 அன்று கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை முன்வைத்து காந்தியடிகள் நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் இன்றைய சூழலில் நாம் மூன்றுவிதமான மோகங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். சட்டமன்றத்துக்குச் சென்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இணையாக அமர்ந்துகொள்ள நினைப்பது முதல் மோகம். அநீதியைப்பற்றியும் நேர்மையின்மையைப்பற்றியும் கவலைப்படாத அரசாங்கத்தின் நீதிமன்றங்களில் வாதாடி நீதியை நிலைநாட்டிவிட முடியும் என்று வழக்கறிஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டாவது மோகம். அரசு வேலைகளில் அமர்வதற்கென தகுதிப்படுத்தும் படிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடங்களில் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைவதற்காக பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்லூரிகளுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்புவது மூன்றாவது மோகம். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த மூன்றில் ஏதோ ஒரு மோகத்தில் மூழ்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது.  இந்த மோகங்களிலிருந்து விடுபடும் வரைக்கும் கிலாபத் பிரச்சினைக்கும் பஞ்சாப் படுகொலைப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லைஎன்றார்.

தொடர்ந்துபள்ளிக்கூடங்களின் துணையின்றி, நம்மால் நம் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியறிவை அளிக்கமுடியும். வழக்குமன்றங்களுக்குச் செல்லாத காரணத்தால் எந்த வழக்கறிஞரும் பசிக்கொடுமைக்கு ஆளாகப் போவதில்லை. சட்டமன்றத்துக்குச் செல்லாததால், பிரச்சினைகளுக்கு நடுவில் மக்கள் ஒருபோதும் நிரந்தரமான அமிழ்ந்திருக்கவும் போவதில்லை. எல்லாமே ஒரு மாயை. அந்த மாயையிலிருந்து விடுபட்டு கல்விக்கூடங்களையும் நீதிமன்றங்களையும் சட்டமன்றங்களையும் நாம் துணிவுடன் துறக்கவேண்டும். அது ஒருவகையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நம்மை நாமே துண்டித்துக்கொண்டு விடுதலையாக நிற்பதற்கு இணையான முயற்சியாகும். அதற்கு மாறாக, இவற்றின் மீது நாம் ஆர்வம் காட்டி, ஒவ்வொரு களத்திலும் ஒத்துழைக்கத் தொடங்கினோமெனில், அது அரசு தன் வலிமையை பல மடங்காகப் பெருக்கிக்கொள்வதற்கே வழிவகுக்கும். எனவே மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலிருந்து வெளியேறவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றங்களிலிருந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் மக்கள் தம்முடன் ஒத்துழைக்கவில்லை என்பதை அரசாங்கம் உணரும் தருணம் உருவாகும்என்று குறிப்பிட்டார்.

அடுத்தடுத்த நாட்களில் அவருடைய உரையின் சாரத்தை இந்தியப்பத்திரிகைகள் அனைத்தும் வெளியிட்டன. உள்ளூர்த் தலைவர்கள் அதைப்பற்றி விரிவாக மக்களிடையில் எடுத்துச் சொல்லி புரியவைக்க முயற்சி செய்தனர். அன்று அதைக் கேட்டு, பாதியிலேயே படிப்பைத் துறந்து கல்லூரிகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியேறினார்கள். அவர்களில் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த இளைஞரும் ஒருவர் காந்தியடிகளின் கோரிக்கையில் பொதிந்திருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டு உடனடியாக பள்ளியைவிட்டு வெளியேறினார் அவர். நகரத்தில் நடைபெற்ற பல்வேறு ஒத்துழையாமைப் போராட்டங்களில் கலந்துகொண்டார். அவற்றால் விளைந்த துன்பங்களை மன உறுதியுடன் எதிர்கொண்டு சமாளித்தார். அவர் ஆக்கூர் அனந்தாச்சாரியார்.

1921ஆம் ஆண்டில் பல்வேறு காலகட்டங்களில் யங் இந்தியா இதழில் எழுதிய நான்கு கட்டுரைகள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்திருப்பதாக குற்றம் சுமத்தி விசாரணைக்குப் பிறகு காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒத்துழையாமையின் அவசியத்தையும் காந்தியடிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும் நாடெங்கும் ஏராளமான கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் தேசியக்கொடியை ஏந்திச் செல்வதை அரசு தடை செய்தது. தேசியக்கொடி ஏந்துவதை தண்டனைக்குரிய குற்றமாக அரசு அறிவித்தது. அதை எதிர்த்துகொடி சத்தியாகிரகம்என்னும் பெயரில் நாகபுரியில் மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டத்தை ஜம்னாலால் பஜாஜ் 1923இல் நடத்தத் திட்டமிட்டார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து திரண்டு வந்த தொண்டர்கள் அந்த சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்கள். ஆர்வத்தின் காரணமாக ஆக்கூர் அனந்தாச்சாரியார் தம் நண்பர்களுடன் நாகபுரிக்குச் சென்று கொடி சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைபுகுந்தார். தண்டனைக்காலம் முடிந்து விடுதலையானதும் அவருடன் சிறையிலிருந்த ஜம்னாலால் பஜாஜுடன் தில்லிக்குச் சென்று மெளலானா அப்துல் கலாம் ஆசாத் தலைமையேற்று நடத்திய காங்கிரஸ் பேரவை மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு தமிழகத்துக்குத் திரும்பினார்.

வாலாஜா பகுதியில் செங்காடு என்னும் ஊரில் கெளதம ஆசிரமம் என்னும் பெயரில் ஒரு ஆசிரமத்தை ஏற்படுத்தி அங்கு வசதியற்ற குழந்தைகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும் கல்விப்பயிற்சியைப் பெற ஏற்பாடு செய்தார் அனந்தாச்சாரியார். ஒருமுறை ஆசிரமத்தில் கொடியேற்று விழாவை நடத்தினார். செங்காட்டைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். முதன்முதலாக கொடியேற்றும் நேரத்தில் கொடிமரம் சாய்ந்துவிட்டது. அதைச் சரிப்படுத்தி நிமிர்த்திவைத்து மெதுவாக கொடியேற்றிய சமயத்தில் மறுபடியும் கொடிமரம் நிலைகுலைந்து சரிந்தது. மூன்றுமுறைகள் இப்படியே சரிந்து சரிந்து விழுந்தன. கூட்டம் மனக்குழப்பத்தில் மூழ்கியிருக்கும் போதே காவல்துறை அதிகாரிகள் வண்டியில் வந்து அனந்தாச்சாரியை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதனால் அனந்தாச்சாரி மீண்டும் ஒராண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் என்பது எளிய செயலல்ல. கூட்டம் பற்றிய அறிவிப்புகளைத் தெரிவிக்கும் அழைப்பிதழ்களை அச்சடிக்க அச்சகத்தினர் மறுத்தார்கள். தண்டோராப் போட்டு பறைசாற்றக்கூட வர மறுத்தனர். அப்போது அனந்தாச்சாரியாரோடு ஜமதக்னி என்னும் மற்றொரு காந்தியத் தொண்டரும் தங்கியிருந்தார். இருவரும் சேர்ந்து செய்தித்தாட்களில் கருத்த மையைக் கொண்டு பெரிய எழுத்துகளில் செய்திகளை விளம்பரமாக எழுதி எடுத்துச் சென்று ஊர் முழுதும் ஒட்டினர். மற்ற தொண்டர்களோடும் சிறுவர்களோடும் ஊர்முழுதும் ஊர்வலமாகச் சென்று  நேரிடையாகவே அறிவித்துவிட்டுத் திரும்பினார்கள். இத்தனை சிரமங்களுக்குப் பிறகே ஒரு கூட்டத்தை நடத்தமுடியும். ஒருநாள் ஒரு கூட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியின் காரணமாக இந்தியர்கள் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டு உணர்ச்சிமயமான குரலில் சொன்னார். கூட்டத்தில் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பார்வையாளர் ஆவேசத்துடன் எழுந்து தன் கைத்தடியை உயர்த்திஅந்தத் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருந்த ஆளை எனக்குக் காட்டுங்கள். இந்தத் தடியாலேயே அடித்து நொறுக்கிவிடுகிறேன்என்று சத்தம் போட்டார். அங்கே மறைந்திருந்த உளவுத்துறையினர் அனந்தாச்சாரியார் பேசியதையும் அங்கு நிகழ்ந்ததையும் இணைத்து ஒரு புகாராக காவல் துறையினரிடம் கொடுத்தார்கள். அனந்தாச்சாரியார் மறுபடியும் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.

தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையடைவதும் பிறகு ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு நிகழும் போராட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் சிறைக்குச் செல்வதும் அனந்தாச்சாரியார் வாழ்வில் தொடர்ந்து நடைபெற்றபடியே இருந்தன. ஏறத்தாழ இருபது முறைகளுக்கும் மேல் அவர் சிறைக்குச் சென்றார். ஒருசில தருணங்களில் ஒரே தண்டனைக்காலத்தை வெவ்வேறு சிறைகளில் கழித்த அனுபவமும் அவருக்கு இருந்தது. தண்டனை பெற்று வரும் கைதியை சிறைக்குள் அனுமதிக்கும் முன்பாக ஒவ்வொரு கைதிக்கும் அம்மை ஊசியும் தொற்றுநோய் தடுப்பு ஊசியும் போட்டு அனுப்பவேண்டும் என்பது முக்கியமான சிறைவிதி. மீண்டும் மீண்டும் சிறைத்தண்டனை பெற நேர்ந்ததால் அனந்தாச்சாரியாரின் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊசித்தழும்புகள் உருவாகியிருந்தன.

1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது தேசமெங்கும் வெவ்வேறு நகரங்களில் வாழ்ந்த தொண்டர்கள், தம் வாழிடத்துக்கு அருகில் இருந்த கடற்பகுதிக்குச் சென்று உப்பு காய்ச்சினர். திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரைக்குச் சென்று உப்பையெடுக்கும் போராட்டத்தை ராஜாஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்னால் தமிழகமெங்கும் பயணம் செய்து உப்பு சத்தியாகிரகத்தின் முக்கியத்துவம் பற்றி கூட்டங்களில் உரைநிகழ்த்தினார். வேலூரில் அவர் ஆற்றிய உரையைக் கேட்டு எழுச்சிகொண்டார் அனந்தாச்சாரியார். அதுவரையில் தான் நடத்திவந்த கெளதம ஆசிரமத்தை தற்காலிகமாக கலைத்துவிட்டு தன் நண்பர்களுடன் சத்தியாகிரகத்துக்காக குடியாத்தத்தை நோக்கிப் புறப்பட்டார். அவர்கள் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக நடந்தே சென்றனர். ஒவ்வொரு இரவிலும் ஒவ்வொரு ஊரில் தங்கி சொற்பொழிவாற்றி மக்களை ஊக்கப்படுத்தினர்.

இறுதியாக குடியாத்தத்தை அடைந்து மக்கள் கூடியிருந்த திடலுக்குச் சென்றார் அனந்தாச்சாரியார். ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தபோதிலும் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தனியாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தனியாகவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து மனம் வருந்தினர். காந்தியடிகள் தலைமையில் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து  இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்று தன் உரையைத் தொடங்கினார் அனந்தாச்சாரியார். ஆனால் நாம் அனைவரும் மதங்களின் அடிப்படையிலும் சாதிகள் அடிப்படையிலும் வேறுபாடு காட்டி பிரிந்திருக்கும் வரையில் நம்மால் விடுதலையைப் பெறவே முடியாதென்றும் அந்தப் பிரிவினையையே ஒரு காரணமாகக் காட்டி ஆங்கில அரசு நம் விடுதலையை முடிந்தவரையில் தள்ளிப்போடும் என்றும் தெரிவித்தார். நாம் நம் விடுதலையை விரைவில் காண விழைகிறோமா அல்லது தள்ளிப் போட விழைகிறோமா என அங்கு கூடியிருந்த மக்களிடமே நேரிடையாகக் கேட்டார்.  அந்தக் கேள்வியின் உட்பொருளைப் புரிந்துகொண்ட பொதுமக்கள் தாமாகவே ஒருவரையொருவர் நெருங்கி அமர்ந்து கொள்ளத் தொடங்கினர். குடியாத்தம் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நாள். அன்றிரவு குடியாத்தத்தில் தங்கி மற்ற தொண்டர்களோடு உரையாடினார் அனந்தாச்சாரியார்.

தாண்டி, வேதாரண்யம் போல சென்னையிலும் உப்பு காய்ச்சும் திட்டத்தை மேற்கொண்டிருந்தார் பிரகாசம். ராயப்பேட்டையில் இருந்த உதயவனம் என்னும் கட்டடம் சத்தியாகிரக ஆசிரமமாக செயல்பட்டது. ஸ்ரீபாதசங்கர் என்பவர் வழியாக பிரகாசம் அனுப்பிய செய்தி குடியாத்தத்தில் அனந்தாச்சாரியாருக்குக் கிடைத்தது. செய்தி கிடைத்ததும் உடனடியாக தன் தொண்டர்களோடு சென்னைக்குப் புறப்பட்டு வரும்படி அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே தன்னோடு இருந்த நூறு தொண்டர்களோடு அனந்தாச்சாரியார் புறப்பட்டுச் சென்று உதயவனம் ஆசிரமத்தை அடைந்தார். இரு தினங்கள் கழித்து சென்னையில் நாகேஸ்வரராவ் பந்துலு என்பவரின் தலைமையில் உப்பு காய்ச்சப்பட்டது. பிரகாசமும் அனந்தாச்சாரியாரும் அவருடைய தொண்டர்களும் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தனர். எதிர்பாராதவிதமாக குதிரைப்படை வீரர்கள் கூட்டத்துக்கு நடுவில் புகுந்தார்கள். சிலர் கீழே விழுந்தார்கள். விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு ஓடின குதிரைகள். ஆயினும் அங்கிருந்து ஒரு தொண்டர்கூட, அந்த இடத்தைவிட்டு அகலவில்லை. காவல்துறையினர் விரைந்துவந்து பிரகாசத்தையும் நாகேஸ்வரராவ் பந்தலுவையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பிரகாசத்தைத் தொடர்ந்து நடராஜன் என்பவர் சத்தியாகிரகத்துக்குப் பொறுப்பேற்று நடத்தினார். அடுத்தநாள் அவர் தலைமையில் அனந்தாச்சாரியாரும் அவர் நண்பர்களும் ஏனைய தொண்டர்களும் உப்பு காய்ச்சுவதற்காக ஹைகோர்ட் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். நீதிமன்ற வாசலுக்கு எதிரில் குதிரைப்படையோடு வந்த போலீஸ் கமிஷனர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். இரண்டு நிமிடங்களில் கலைந்துசெல்ல வேண்டும், இல்லையென்றால் தடியடிக்கு ஆணை கொடுக்கப்படும்என்று அறிவித்தார். ஒருவரும் அந்த இடத்திலிருந்து அசையாமல் உறுதியோடு நின்றனர். அதைக் கண்டு சீற்றம் கொண்ட காவல்படையினர் அவர்களை அடித்து நொறுக்கினர். அன்று யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் சில நாட்களுக்குப் பிறகே, அவர்கள் அடிபட்ட காயங்கள் ஆறின. அதற்குப் பிறகே ஒவ்வொருவரும் நடமாடுவதற்குரிய சக்தி திரும்பியது.  எதிர்பாராமல் ஒருநாள் காவல் துறையினர் அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றிக்கொண்டு ஆசிரமத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டனர். நீதிமன்றம் அனந்தாச்சாரியாருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது. அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அனந்தாச்சாரியாருக்கு செக்கிழுக்கும் வேலை கொடுக்கப்பட்டது.  அரசியல் கைதிகளை குற்றவாளிக் கைதிகளைப்போல நடத்தக்கூடாது என்று அனந்தாச்சாரியார் எடுத்துரைத்தபோதும் காவல் அதிகாரி காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. பிரிட்டன் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி, இந்திய அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி என்னும் பார்வை எள்ள்ளவும் நியாயம் கொண்டதாக இல்லை.  கையில் வைத்திருந்த பிரம்பால் முதுகு வீங்கும் அளவுக்கு அடித்து செக்குக்கு அருகில் இழுத்துச் சென்று தள்ளிவிட்டான். அரசியல் கைதிகள் நடத்தப்படவேண்டிய விதம் தொடர்பாக சிறைவிதிகளில் அப்போதுதான் ஒரு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் கல்கத்தாவைச் சேர்ந்த  ஓர் இளைஞர். பெயர் யதீந்திரநாத் தாஸ். லாகூர் சதிவழக்குடன் அவரைத் தொடர்புபடுத்தி  அரசாங்கம் சிறையில் வைத்திருந்தது. இந்தியாவில் அரசியல் கைதியான அவரை, பிரட்டனில் உள்ள ஓர் அரசியல் கைதிக்கு இணையாகவே நடத்தவேண்டும் என்று அவர் காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டார். ஆடை வழங்குதல், உணவளித்தல், வேலை செய்தல் அனைத்து நடவடிக்கைகளிலும் ஆங்கிலேய கைதிகளைப்போலவே இந்தியக்கைதிகள் நடத்தப்படவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டார். அரசு அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததால், அதை வலியுறுத்தி 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். அதற்குப் பிறகே பிரிட்டன் பாராளுமன்றம் சிறை தீர்திருத்தத்தைக் கொண்டுவந்தது. ஆயினும் இந்தியச் சிறையில் பணிபுரியும் அதிகாரிகள் புதிய சீர்திருத்தம் பற்றிய புரிதல் எதுவும் இல்லாமலேயே இந்தியக் கைதிகளை மோசமான முறையில் நடத்தினர். தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் விளைவாக, அவருக்கு வேறு வேலை வழங்கப்பட்டது. புதிய ஆடைகளும் புதிய வகை உணவும் வழங்கப்பட்டன.

காந்திஇர்வின் ஒப்பந்தப்படி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்ற அனைவரும் விடுதலை பெற்றனர். அந்த ஒப்பந்தப்படி உப்புக் காய்ச்சவும் கள்ளுக்கடைகள் , துணிக்கடைகள் முன்னால் நின்று மறியல் செய்யவும் இந்தியர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான அனந்தாச்சாரியார் அரக்கோணத்தில் தன்னிச்சையாக ஒருசில தொண்டர்கள் சேர்ந்து கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செய்தியை அறிந்து, உடனே அங்கு விரைந்து சென்றார். இம்மாதிரியான போராட்டங்களில் தனி ஆளாக இறங்குவதில் இருக்கும் ஆபத்துகளை அந்த இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார். சாராய முதலாளிகளால் அத்தகு மறியல்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். சத்தியாகிரக அமைப்பின் வழியாக மறியலில் இறங்குவதே நல்ல பயனைத் தரும் என அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொன்னார். அந்தப் பகுதியில் காங்கிரஸ் உறுப்பினர்களைச் சேர்த்து ஒரு பெரிய அமைப்பாக்கி, அதை மாவட்ட காங்கிரஸ் அமைப்புடன் சேர்த்துவிட்டார். காங்கிரஸ் சார்பாக சத்தியாகிரக போராட்டம் நடைபெறவிருக்கிறது என அனைவருக்கும் அறிவித்தார். தெருத்தெருவாக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தி தம் கருத்துக்கு ஆதரவைத் திரட்டினார். பொதுமக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றார்கள். ஒரு போராட்டம் என்பது எவ்வகையிலும் துன்பம் அளிக்காததாக இருத்தல் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அரக்கோணத்தில் உள்ள எல்லாக் கடைகளின் வாசல்களிலும் போராட்டம் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. விற்பனையாகாத கள்ளுக்குடங்களும் சாராயக்குடங்களும் தேங்கின. கள்ளும் சாராயமும் இலவசமாகக் கிடைக்குமெனச் சொல்லி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க முயற்சி செய்தனர் கடைமுதலாளிகள். எண்ணிக்கையில் குறைவானவர்கள் மட்டும் கடைக்கு வந்து இலவசமாகக் கிட்டிய சாராயத்தை அருந்தினார்கள். முதலாளிகளுக்கு நன்றிக்கடனாக சத்தியாகிரகத் தொண்டர்கள் முகத்தில் சாராயத்தைக் கொப்பளித்து துப்பி அவமதித்தனர். அவர்களைச் சுற்றிவந்து ஆட்டமிட்டனர். அந்த நிலையில் கூட பொறுமையைக் கடைபிடித்த சத்தியாகிரகிகள் போராட்டக்களத்திலிருந்து விலகாமல் அங்கேயே நின்றிருந்தனர். தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருமுறை ராஜாஜி அரக்கோணத்துக்கு வருகை புரிந்து சொற்பொழிவாற்றிவிட்டுச் சென்றார்.

திடீரென கடையை நாடி வரும் சாராயப்பிரியர்களின் எண்ணிக்கை பெருகியது. முதலில் வெட்கம் காரணமாக வராமல் ஒதுங்கியிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கிவிட்டனர். தனக்கு நேரும் இழப்பைவிட கடைகளைத் தக்கவைத்துக்கொள்வதே மிகமுக்கியம் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர் முதலாளிகள். சத்தியாகிரகிகளின் எண்ணிக்கை கொஞ்சம்கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.  அத்தருணத்துக்காகவே காத்திருந்த காவல்துறையினர் எஞ்சியவர்களை கைது செய்து சிறையிலடைத்தது. போரட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.

மிகச்சிறந்த தமிழ் மேடைநாடகக் கலைஞரும்  பாடகருமான கிட்டப்பா அனந்தாச்சாரியாருக்கு நெருங்கிய நண்பர். அவருடன் சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் ஒருமுறை செங்கோட்டைக்குச் சென்றார் அனந்தாச்சாரியார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இரு நண்பர்களும் மனம்விட்டுப் பேசி மகிழ்ந்திருந்தனர். அதற்குள் அனந்தாச்சாரியாரின் வருகையை எப்படியோ அறிந்துகொண்ட உளவுத்துறை அவரைப் பின்தொடர்ந்து வந்துவிட்டது. உளவுத்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் கிட்டப்பாவை நேரில் சந்தித்து அனந்தாச்சாரியாருக்கு அடைக்கலம் கொடுப்பது அரசாங்கத்தை எதிர்ப்பது போன்ற எண்ணத்தைக் கொடுத்துவிடும் என்றும் அவர் எப்போதும் துப்பாக்கியும் கையுமாகத் திரிகிற ஆளென்றும் கட்டுக்கதைகளைச் சொல்லி அச்சத்தை விதைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கிட்டப்பாவுக்கு உளவுத்துறையினரின் சொற்களில் நம்பிக்கையில்லை என்றபோதும், தன்னால் தன் நண்பரின் அமைதியான வாழ்க்கையில் புயல் வீசிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் விரைவிலேயே செங்கோட்டையைவிட்டு அனந்தாச்சாரி வெளியேறிவிட்டார். குற்றாலத்தில் அவரை வழிமறித்து சோதனையிட்ட உளவுத்துறையினர் அவரிடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு, தொடர்ந்து பயணம் செய்ய அனுமதித்தனர்.

வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திரும்பிவந்த காந்தியடிகளை அரசாங்கம் 04.01.1932இல் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரைத் தொடர்ந்து பல தலைவர்கள் பல நகரங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எங்கெங்கும் மறியல்களும் கைதுகளும் தொடர்கதைகளாகின. வாலாஜாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட அனந்தாச்சாரியாரும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு அங்கிருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கல்லுடைக்கும் வேலையும் கம்பளிநூல் நூற்புவேலையும் கொடுக்கப்பட்டது. சொல்லொணாத் துயரங்களுக்குப் பிறகு அவர் 1934இல் விடுதலை பெற்று பெல்லாரியிலிருந்து ஊருக்குத் திரும்பினார்.

எண்ணற்ற முறைகள் சிறைபுகுந்ததாலும் சரியான உணவில்லாததாலும் அனந்தாச்சாரியாரின் உடல்நலம் நலிவடையத் தொடங்கியது. அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். அவரால் முன்புபோல அதிக அளவில் அலையமுடியவில்லை. அதனால் காந்திய நிர்மாணப்பணிகளில் ஒன்றான இந்தி மொழியை அறியாதோர்க்கு இந்தியைக் கற்பிக்கும் வேலையிலும் தாழ்த்தப்பட்டோர் சேவையிலும் ஈடுபட விரும்பினார். அவர் சிறையில் அடைபட்டிருந்த தருணத்தில் அவருடைய நண்பரான கிட்டப்பா இயற்கையெய்திவிட்டார். அந்தத் துயரம்  அவர் மனத்தை வாட்டியது. அவர் நினைவாக, கிட்டப்பா இந்தி வித்யாலயம் என்கிற பெயரில் செங்கோட்டையில் ஒரு மையத்தைத் தொடங்கி மாணவமாணவிகளுக்கு இந்தி மொழியைக் கற்பிக்கத் தொடங்கினார். முதல் ஆண்டிலேயே ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவமாணவிகளுக்கு இந்தியில் பயிற்சியளித்து தேர்வெழுத அனுப்பிவைத்தார்.

ஒருமுறை காங்கிரஸ் வேலையாக வெளியூர்களில் அலைந்துதிரிந்த அனந்தாச்சாரியார் தன் கிராமத்துக்குத் திரும்பி வந்தார். அதற்கு முதல்நாள் இரவில் அவருடைய பாட்டி இறந்துவிட்டார். அதற்கு மூன்று நாட்கள் முன்புதான் அவருடைய சித்தப்பாவும் இறந்துபோயிருந்தார். பாட்டிக்குரிய இறுதிச்சடங்குகளைச் செய்யும் கடமை அனந்தாச்சாரியாருக்கு இருந்தது. தகனத்தை மட்டுமன்றி, அதைத் தொடர்ந்து செய்யவேண்டிய சடங்குகளையும் அவரே முன்னின்று சடங்குகளை நடத்தவேண்டும் என ஊரார் அவரிடம் கேட்டுக்கொண்டனர். பாட்டியின் மறைவையொட்டி ஊரில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து பதின்மூன்றாம் நாள் விருந்தளிக்கும் தன் விருப்பத்துக்கு ஊரார் சம்மதித்தால், பாட்டியின் இறுதிச்சடங்குகளைக் குறைவில்லாமல் செய்ய தானும் சம்மதிப்பதாக நிபந்தனை விதித்தார் அனந்தாச்சாரியார். தாழ்த்தப்பட்டோர் விவகாரங்களில் அவருக்குள்ள ஈடுபாடுகளை அறிந்த ஊரார் அந்த நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்தனர். பாட்டியின் இறுதியாத்திரையை எந்தக் குறைவுமின்றி நடத்தினார் அனந்தாச்சாரியார். பிறகு தன் விருப்பத்தின்படி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து விருந்தளித்தார்.

1939இல் சென்னை மாகாண ஆலயப் பிரவேசச் சட்டத்தை இராஜாஜியின் தலைமையிலான அமைச்சரவை இயற்றியது. சாதி இந்துக்களைப் போலவே தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கோவில்களுக்குள் சென்று வழிபடும் உரிமைக்கு இச்சட்டம் வழிவகுத்தது. வாலாஜா வட்டத்தைச் சேர்ந்த ஒரு தாசில்தாருக்கு அச்சட்டத்தை தன் வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. அந்த மாத இறுதியில் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார். கடைசிக்கட்டத்தில் அங்கு செல்வாக்குள்ள உயர்சாதியினரின் கசப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகிவிடக் கூடாதென அவர் நினைத்தார். அதை உணர்ந்துகொண்ட அனந்தாச்சாரியார் அந்த அதிகாரியை நேருக்கு நேர் சந்தித்து ஆலயப் பிரவேசச்சட்டத்தை  நடைமுறைக்குக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண்டார். அதற்குப் பிறகும் அவர் மழுப்பி மழுப்பி பதில் சொல்வதைக் கண்டதும் அவருடைய நிலைபாட்டை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கப் போவதாக உறுதியான குரலில் சொன்னார். அதைக் கேட்ட தாசில்தார் அஞ்சி அன்றே வாலாஜா வட்டத்தில் ஆலயப்பிரவேசச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துவிட்டார்.

அன்று அனந்தாச்சாரியாரே முன்னின்று ஊரிலிருந்த தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் ஊர்வலமாக அழைத்துவந்தார். அவர்களுக்குப் பாதுகாப்பாக பிராமண வகுப்பைச் சேர்ந்த தாசில்தாரும் இருபது காவலர்களும் வந்தார்கள். தேர்த்திருவிழாவைப்போல ஊரே நின்று வேடிக்கை பார்க்க, அனைவரும் கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கினர். அதைக் கண்டு பதற்றமடைந்த மேல்சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் அனந்தாச்சாரிக்கும் இடையில் இருந்த நட்பையும் தொடர்பையும் துண்டிக்கும் வகையில் அனந்தாச்சாரி மீது அவதூறைப் பரப்பினார்கள். அனந்தாச்சாரி தான் நடத்திவந்த இந்திப்பள்ளிக்கு நன்கொடை பெறுவதற்காக ஆலயப்பிரவேசத்தை  ஒரு விளம்பரமாகப் பயன்படுத்திக்கொண்டார் என்று பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். அந்தத் தகவலைக் கேட்டு நிலைகுலைந்து கண்ணீர் விட்டு அழுதார் அனந்தாச்சாரியார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அவரைப் புரிந்துகொண்டு திரும்பிச் சென்றார்கள்.

அவர் அமைதியாக ஒதுங்கி செயல்பட விரும்பினாலும் சுதந்திரப்போராட்டம் அவரை அடிக்கடி முன்னணிக்கு இழுத்துவந்தது. 1942இல் தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கியபோது சென்னைக்குச் சென்று அதில் கலந்துகொண்டு சிறைபுகுந்துவிட்டார். விடுதலை பெற்றதும் கிட்டப்பா இந்தி வித்யாலயத்தை வாலாஜாவில் நிறுவி நடத்தத் தொடங்கினார். 15.08.1947 அன்று இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும், வாலாஜாபேட்டை நீதிமன்றத்தில் தேசியக்கொடியை ஏற்றி விழா கொண்டாடும் ஏற்பாடுகளைச் செய்தார். அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியேற்றி உரையாற்றியவர் அவருடைய நெருங்கிய நண்பர் ஜமதக்னி. எண்ணற்ற தருணங்களில் இருவருக்கும் சிறைத்தண்டனையை தீர்ப்பாக வழங்கிய நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் ஏற்றிய கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

வாலாஜாபேட்டையில் நகரத்துக்குக் கிழக்கே ஒரு பாழடைந்த சத்திரம் இருந்தது. அந்த இடத்தைப் புதுப்பித்து ஆதரவில்லாத ஏழைக்குழந்தைகளும் தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளும் தங்கி கல்வி பயிலும் வகையில் ஒரு ஆசிரமத்தை உருவாக்க நினைத்தார் அனந்தாச்சாரியார். உடனே அச்சத்திரத்தை நிர்வகித்து வருபவரிடம் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தப்பத்திரம் எழுதி வாங்கினார். அவருக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தவர் அவருடைய இளம்வயது நண்பரான கல்யாணராம ஐயர். அங்கு உருவான ஆசிரமத்துக்கு இருவரும் தீனபந்து ஆசிரமம் என்று பெயர் சூட்டினர். இன்றுவரை தொடர்ந்து இயங்கிவரும் அந்த ஆசிரமம் அனந்தாச்சாரியார், கல்யாணராம ஐயர் இருவரும் இந்த மண்ணுக்கு அளித்த அரிய கொடை.

ஒருமுறை அனந்தாச்சாரியாரின் நண்பர்கள் அவருடைய தியாகத்தைப் போற்றும் விதமாக அவருக்கு  மணிவிழா நடத்தினார்கள். அச்சமயத்தில் நண்பர்கள் ஒரு தொகையைத் திரட்டி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அந்தத் தொகையை அதே மேடையில் ஆசிரமத்துக்கு நன்கொடையா வழங்கிவிட்டார் அனந்தாச்சாரியார். தன் இறுதிக்காலம் வரைக்கும் அந்த ஆசிரமத்திலேயே வாழ்ந்து மறைந்தார்.

ஒருவருடைய பேரும் புகழும் நிலைத்திருப்பதற்கு அவருடைய மதமோ, சாதியோ, அவர் சார்ந்த இயக்கமோ, கொள்கையோ, அவர் எழுப்பிய முழக்கங்களோ ஒருபோதும் துணையாக விளங்குவதில்லை. மாறாக அவர் ஆற்றிய கடமைகளும் கடுமையான உழைப்பும் நேர்மையும் தியாகமும் மட்டுமே துணையாக விளங்கும். தன் தியாகத்தால் தன்னை நிறைத்துக்கொண்டவர் அனந்தாச்சாரியார். வேறு எதைப்பற்றியும் சிந்தனையே இல்லாதவர். வாழ்க்கையின் தினசரித் துயரத்துக்கு தன்னை ஒருநாளும் இரையாக்கிக்கொள்ளாத மாமனிதர்.