Home

Monday 27 December 2021

நினைவேக்கத்தின் இனிமை - கட்டுரை

 

நம் நாடு விடுதலையடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நம் நகரங்களும் கிராமங்களும் அப்போது இருந்ததைவிட இன்று பல மாற்றங்களுடன் வளர்ந்துவிட்டன. நம் வாழ்க்கைச்சூழலிலும் கருத்துநிலைகளிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய புகைப்படத் தொகுப்பையோ அல்லது பழைய நாட்குறிப்பையோ அல்லது பழைய புத்தகத்தையோ பார்க்கும்போது, அந்த மாற்றங்கள் துல்லியமாகப் புலப்படுவதை உணரலாம்.

இன்று பெருநகர மாநகராட்சியாக உயர்த்தப்பட்டிருக்கும் நகரம் சேலம் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக ஐந்தாவது இடத்தில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம். இது சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது. சேர + அரையன் என்பதன் திரிபே சேர்வராயன் ஆகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். ஏத்தாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டில் இந்த நகரம் சாலிய சேரமண்டலம்  என்றே குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, பிறகு மதுரைக்கும்  மைசூருக்கும் இடையில் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஹைதர் அலியின் கட்டுப்பாட்டுக்குச் சென்று, இறுதியாக கிளைவ்  காலத்தில் ஆங்கிலேயர் வசமாகிவிட்டது. அவர்கள் அந்த நகரத்தில் கோட்டை கட்டி இராணுவத்தளமாக மாற்றிக்கொண்டனர்.

பொதுவாக ஒரு நகரத்தின் கதையைச் சொல்பவர்கள் இப்படி வரலாற்றுத் தரவுகளை இணைத்தும் தொகுத்தும் சொல்வதுதான் வழக்கம். ஒரு நகரத்தின் வரலாற்றைப் புறவயமாகப் புரிந்துகொள்ள அது ஒரு வழிமுறை. எளிய நகர மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச்சித்திரங்கள் வழியாகப் பார்ப்பது இன்னொரு வழிமுறை. ஆய்வாளர்கள் முதல் வழிமுறையைப் பின்பற்றும்போது, எழுத்தாளர்களுக்கு இரண்டாவது வழிமுறை உகந்ததாக உள்ளது. எழுத்தாளர்கள் தீட்டிக் காட்டும் மனிதர்கள் இப்போது மறைந்துபோயிருக்கலாம். அந்த இடங்களும் உருமாறிப் போயிருக்கலாம். அந்த வாழ்க்கை முறையே வழக்கொழிந்துபோயிருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆவணத்தில் அவர்கள் இடம்பெற்றவுடன் அவர்கள் காலத்தின் அடையாளமாக மாறிவிடுகிறார்கள்.

விட்டல்ராவ் புதிதாக எழுதி சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் புத்தகத்தை தாராளமாக நாம் ஒரு சமூக ஆவணமாக எடுத்துக்கொள்ளலாம். நாற்பதுகளை ஒட்டிய சேலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நாம் இந்தப் புத்தகத்தில் காணமுடியும். ஏராளமான எளியவர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பல இடங்களில் ஒரு சிறுவனாக அன்று தான் கண்ட மனிதர்களையும் காட்சிகளையும் ஒரு புனைகதைக்கே உரிய மொழியில் அழகாகச் சித்தரித்துள்ளார் விட்டல்ராவ்.  இந்தப்  பார்வைக்கோணம் இந்தப் புத்தகத்துக்கு ஒருவித தனித்துவத்தை அளிக்கிறது. ஒரு பக்கம் அவருடைய தன்வரலாற்றின் சித்திரங்களையும் இன்னொரு பக்கம் நகரம் சார்ந்த கதைகளையும் நம்மால் பார்க்கமுடிகிறது.

இடமாற்றம் தொடர்பான அரசு ஆணை காரணமாக மனைவி, பிள்ளைகளோடு சேலத்துக்கு வருகிறார் ஒருவர். சேலம் அக்குடும்பத்துக்கு முற்றிலும் புதிய நகரம். அலுவலக வழியில் அறிமுகமான ஒரே ஒரு நண்பர் மட்டுமே சேலத்தில் அவருக்குத் தெரிந்த ஒரே முகம். அவர் ஊட்டிய தைரியத்தில்தான் அக்குடும்பம் சேலத்துக்கு வந்து சேர்கிறது. அப்போது சேலத்தில் பெரிய சத்திரங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு எட்டணா வாடகைக்கு அங்கு அறைகள் கிடைக்கின்றன. தொடக்கத்தில் அந்தச் சத்திரத்தில் சில நாட்கள் தங்கியிருக்க ஏற்பாடு செய்கிறார்  நண்பர். பிற்பாடு ஊருக்குள் வாடகைக்கு வீடு கிடைத்ததும் குடும்பம் அங்கே குடிபோகிறது. ஏற்கனவே ஒரு கோவில் வழிபாட்டுக்காக அப்படி வந்து சத்திரத்தில் தங்கிச் சென்ற அனுபவம் இருந்ததால் அந்தக் குடும்பம் தைரியமாக சேலத்துக்கு வந்து சேர்கிறது. அந்தக் குடும்பத்தில் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவனொருவன் இருக்கிறான். அவன் பார்வை வழியாகவே சேலம் அனுபவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. மலை, கோவில், கடைத்தெரு, திரையரங்குகள், தெருக்கள் திருவிழா அனைத்தும் அச்சிறுவனின் நினைவுத்தொகுப்பாக உள்ளன.

ஒரு காலத்தில் நகரத்தின் மையத்தில் ரயில் தண்டவாளப்பாதைகள் சாலையின் குறுக்கே சென்றன. ரயில்கள் நகரத்துக்குள் வரும்போதும் நகரைவிட்டுச் செல்லும்போதும் சாலை மூடப்படுவதால் ஒவ்வொர் நாளும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் முன்னேறிச் செல்லமுடியாமல் நின்று தடுமாறின.  போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக தண்டவாளப்பாதைகளின் மேல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டது. வாகனங்கள் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் நடந்து செல்லும் மனிதர்களுக்கு புதிதாக பிரச்சினை உருவானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏறி இறங்கவேண்டியிருந்தது. விளையாட்டாகவும் வேதனயோடும் அவர்கள் அந்தப் பாலத்தை ‘ஏத்துமதி இறக்குமதி’ என்ற சொல்லால் குறிப்பிடத் தொடங்கினார்கள். கசப்பை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அச்சொல் மெல்ல மெல்ல மக்களிடையில் வேகமாகப் பரவி அந்த அடைமொழியே அந்த இடத்துக்குரிய அடையாளமாக மாறிவிட்டது. “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வந்து நில்லு” “ஏத்துமதி எறக்குமதிகிட்ட வண்டிய நிறுத்து” என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய நாவிலும் படிந்து ஒரு வரலாற்றுச் சொல்லாகிவிட்டது.

இன்னொரு சம்பவம். திருவிழாவுக்குச் சென்ற குடும்பம் கோயிலிலிருந்து வீட்டுக்கு குதிரைவண்டியில் திரும்பிவருகிறது. வண்டிக்குள் ஏறியவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், வண்டிக்காரரால் வண்டியைச் சரியாக ஓட்டமுடியவில்லை. முன்பாரம் அதிகமாக இருக்கும்போது பின்னால் செல்லும்படியும் பின்பாரம் அதிகமாக இருக்கும்போது முன்பக்கம் நகரும்படியும்  மாறிமாறிச் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டுகிறார் வண்டிக்காரர்.  பிரயாணிகளும் அதற்கு இசைவாக மாறிமாறி உட்கார்கிறார்கள். அவர்களும் வண்டியில் ஏறி அனுபவம் இல்லாதவர்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் வண்டிக்காரரின் கட்டுப்பாட்டை மீறி வண்டி குடைசாய்ந்துவிடுகிறது. பயணிகள் கீழே விழுந்துவிடுகிறார்கள். ஒரு கதைத்துணுக்கு போல சித்தரிக்கப்பட்டிருக்கும் இக்காட்சி நாற்பதுகளுக்கே உரிய சித்திரம்.

திருவிழாவையும் பொருட்காட்சியையும் முன்னிட்டு ஊருக்கு வரும் சர்க்கஸ் ஊர் மைதானத்தில் முகாமிடுகிறது. ஊருக்குள் சர்க்கஸ் நடக்கப் போகிறது என்பதை ஊர்மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக விலங்குகளை ஏற்றிய வண்டிகளை ஊரின் முக்கியத் தெருக்கள் வழியாக ஓட்டிச் செல்கிறார்கள். யானைகளும் குதிரைகளும் நடந்துவருகின்றன. சர்க்கஸ் ஊழியர்கள் தனியாக வண்டியில் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி வருகிறார்கள். இந்திப்பாடலையும் மேனாட்டு இசைப்பாடலையும் பாடியபடி சர்க்கஸ் பேண்ட் குழுவும் வருகிறது. சர்க்கஸ் குள்ளர்களும் பஃபூன்களும் ஆரவாரத்தோடு பாட்டுப் பாடியபடி வருகிறார்கள். விசித்திரமான அமைப்பிலிருக்கும் பலவண்ணக் குல்லாய்களை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பின்னாலேயே ஓடிவரும் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் பாடுகிறார்கள். அப்பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பிள்ளைகளும் குதித்துக்கொண்டே திரும்பப் பாடுகிறார்கள். ‘ஒத்தைக்குல்லா சந்திலே ரெட்டைக்குல்லா முக்கிலோ சேலம் சிவப்பு, செவ்வாப்பேட்டை கருப்பு, ஒடைச்சா பருப்பு, தின்னா கசப்பு’ என்னும் பாடல் அவர்கள் நடந்து செல்லும்  திசையிலெல்லாம் ஒலிக்கிறது. ஊரே திரண்டு சர்க்கஸ் பார்க்கப் போகிறது. சர்க்கஸ் முடிந்ததும் மக்கள் வெளியேறும் சமயத்தில் ஒரு புதுவிதமான இசை ஒலிக்கிறது. ”கதம் கதம் படாயே ஜா, படாயே ஜா குஷி கெ கீதெ காயா ஜா காயா ஜா” என்ற வித்தியாசமான இசை அனைவரையும் ஈர்க்கிறது. அனைவரும் அப்பாடலை ஆர்வத்துடன் நின்று கேட்கிறார்கள். பாடல் விவரங்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மியின் நடைப்பயிற்சிக்குரிய பாட்டு அது. நேதாஜியின் ராணுவப்பாடல் இங்கேயும் பொதுமக்கள் கேட்கும் வகையில் பாடப்பட்டது என்பதற்கு விட்டல்ராவ் சித்தரித்திருக்கும் இக்காட்சியே ஒரு வரலாற்றுச் சான்று.

சுதந்திரத்துக்குப் பிறகு நெசவாளர்கள் வாழ்க்கையை வறுமை சூழ்ந்தது. நெசவுக்குத் தேவையான நூல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நெய்த துணிகள் விற்பனையாகவில்லை. கூலிக்கு நெய்வதற்குக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்பம் குடும்பமாக நெசவாளர்கள் கிராமங்களை விட்டு வெளியேறி சேலத்தை நோக்கி வந்தனர். கஞ்சிக்காக பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் செல்லும் நிலை உருவானது. இளம்வயதில் தன் வீட்டைத் தேடி வந்த ஒரு நெசவாளர் குடும்பத்தைப்பற்றிய உருக்கமான சித்திரமொன்றை விட்டல்ராவ் ஒரு கட்டுரையில் தீட்டியிருக்கிறார்.

வாசலில் வந்து நின்ற குடும்பம் வயிற்றையும் பச்சைக்குழந்தையையும் தொட்டுக் காட்டி உதவி கேட்கிறது. ”எங்க குடும்பத்திலயும் ஏழு பசங்க இருக்குது. நாங்களும் கஷ்டத்திலதான் இருக்கிறோம்” என்று தெரிவிக்கிறார் அம்மா. ”வடிச்ச கஞ்சியாவது குடு தாயி” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள் அவர்கள். தொடர்ந்து அன்று இரவு திண்ணையில் படுத்துறங்க அனுமதி கேட்கிறார்கள். அக்கா அதை அனுமதிக்காமல் அனுப்பிவிட முயற்சி செய்கிறாள். ஆனால் அப்பா குறுக்கிட்டு அக்காவைத் தடுக்கிறார். தங்கிக்கொள்ள அனுமதி கொடுக்கிறார். ஓர் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரும் குவளையும் கொண்டுவந்து அவர்கள் அருகில் வைத்துவிட்டுச் செல்கிறார். அக்காவுக்கு அதில் உடன்பாடில்லை. அவர்கள் இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு சென்றுவிடக் கூடும் என்று அக்கா விவாதிக்கிறாள். யாரையும் அப்படி அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது எனு எடுத்துச் சொல்கிறார் அப்பா. பஞ்சத்தின் காரணமாகத்தான் அவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார்களே தவிர, அவர்கள் எப்பொருளையும் எடுத்துச் செல்லும் பழக்கமுள்ளவர்கள் இல்லை என்று அவளுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்கிறார். விடிந்ததும் குடும்பமே எழுந்துவந்து வாசல் திண்ணையைப் பார்க்கிறது. வந்தவர்கள் திண்ணையில் இல்லை. காலையிலேயே எழுந்து சென்றுவிட்டார்கள். அந்தத் தண்ணீர்ச் செம்பும் குவளையும் கூட வைத்த இடத்தில் வைத்த நிலையிலேயே இருக்கிறது. ஒருவாய் தண்ணீர் கூட அந்தச் செம்பிலிருந்து யாரும் எடுத்துப் பருகவில்லை. அக்காட்சியைப் படிக்கும்போது மனம் கரைந்துபோகிறது.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டரும் நியூ சினிமா தியேட்டரும் அந்தக் காலத்தில் மிகப்பெரிய திரையரங்குகள். நூறு நாள் ஓடிய பல சாதனைப்படங்கள் அந்தத் தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கின்றன. இப்போது இரண்டு அரங்குகளும் இல்லை. எப்போதோ இடிக்கப்பட்டு வணிகவளாகங்களாக மாறிவிட்டன.

ஹிண்டு மாடர்ன் கஃபேயும் தேவபிரகாஷ் விடுதியும் நாற்பதுகளில் சேலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இடங்கள். இவையிரண்டும் ராகவேந்திர ராவ் என்ற எளிய மனிதர் உருவாக்கியவை. ஒரு சமூக நாவலைப்போன்ற அவருடைய வாழ்க்கைச்சம்பவங்கள் படித்த கணத்திலேயே நெஞ்சில் இடம்பிடித்துவிட்டன. மூத்த மகனுக்கு தான் நடத்திய ஓட்டலை அளிக்கும் தந்தையார் இளையமகனான ராகவேந்திர ராவிடம் ஐயாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து பிழைக்க வழி தேடிக்கொள்ளும்படி அனுப்பிவைத்துவிட்டார். பம்பாய் பக்கம் சென்ற ராவ் சில ஆண்டுகள் பல இடங்களில் அலைந்து பலவிதமான இனிப்பு வகைகளையும் தோசை வகைகளையும் செய்வதற்குக் கற்றுத் தேர்ந்து சிறந்த சமையல்கலைஞராக உருவானார்.

உடனே சேலத்துக்குத் திரும்பி கையிலிருக்கும் பணத்தை முதலீடாகப் போட்டு சின்ன ஓட்டலொன்றை முதலில் தொடங்கினார். முதலாளியாகவும் தொழிலாளியாகவும் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். அவர் கடையின் சிற்றுண்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் தாமாகவே அமைந்தார்கள். வருமானம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகியது.  அடுத்த நடவடிக்கையாக அவர் நகரத்திலேயே ஒரு நல்ல இடத்தைப் பார்த்து புதிதாக வேறொரு ஓட்டலைத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப் பிறகு, ஓட்டலுக்குப் பக்கத்தில் கோயம்பத்தூர் லாட்ஜை போக்கியத்துக்கு எடுத்து நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. உடனே அதை எடுத்து ’ஹிண்டு மாடர்ன் கஃபே’ என்று பெயர் மாற்றி வெற்றிகரமாக நடத்தினார். போர்டிங் அண்ட் லாட்ஜிங் அவருக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் சம்பாதித்துக்கொடுத்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க வந்த நடிகநடிகையர் அனைவரும் அங்கேயே தங்கியதால் விரைவிலேயே பிரபலமானது.

பக்கத்தில் விற்பனைக்கு வந்த இடத்தை வாங்கி புதியதொரு கட்டடத்தை சொந்தமாகவே கட்டியெழுப்பி விடுதியை அங்கே மாற்றினார். அவர் வருமானம் பெருகிக்கொண்டே சென்றது. உடனே திரைப்படங்களை வாங்கி விநியோகிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். குளிர்சாதன வசதியோடு தேவபிரகாஷ் என்னும் விடுதியை உருவாக்கி அதையும் வெற்றிகரமாக நடத்தினார். செர்ரி ரோடில் அவர் வாழ்ந்த இடத்துக்கு அவர் பெயரே பெரிய அடையாளமாக மாறியது. தொடங்கியதில் இருந்து ஏறுமுகமாக அமைந்த அவருடைய வாழ்க்கை ஒரு தொன்மக்கதையைப்போல அமைந்திருக்கிறது. ஓர் எளிய மனிதன் வசதி மிக்க ஆளுமையாக வளர்ச்சி பெற்று ஒரு நகரத்தின் முகமாக மாறுவது என்பது சாதாரண விஷயமல்ல.

செவ்வாய்ப்பேட்டையில் செளராஷ்டிர மொழியைப் பேசும் நெசவாளர்கள் ஆண்டுதோறும் நடத்திய இசைவிழா, அங்கு நடைபெற்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதசுரக்கச்சேரி, சேலம் ஜெயலட்சுமியின் தமிழிசைக்கச்சேரி, பித்துக்குளி முருகதாஸின் பஜனையிசை ஆகிய செய்திகளைப் படிக்கும்போது, அவரோடு சேர்ந்து நாமும் அந்த இசையரங்கின் வாசலில் நிற்பதைப்போலவே உள்ளது. ஊற்றுப்பேனா பழுது பார்ப்பவர்களைப் பற்றிய பகுதியைப் படிக்கும்போது, ஊற்றுப்பேனாவே வழக்கொழிந்துவிட்ட இக்காலத்தில் ஒருவித நினைவேக்கத்தை எழுப்புகிறது. ஒருவகையில் இத்தொகுதியில் உள்ள பன்னிரண்டு கட்டுரைகளையும் சேலம்வாழ் நினைவுகள் என்று குறிப்பிடலாம். மனிதர்களைப் பேசுவதன் வழியாக இத்தொகுதி நகரத்தைப்பற்றிப் பேசுகிறது.

 

(ஓர் அன்னாடு காச்சியின் சேலம் – விட்டல்ராவ், சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை – 83. விலை. ரூ.150)

 

(புக் டே இணையதளத்தில் 23.12.2021 அன்று வெளியானது)