28.12.1915 அன்று எஸ்.பி.சின்ஹா தலைமையில் பம்பாய் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர் நிலைமையைப்பற்றிய ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றுவதற்கு காந்தியடிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவுக்குத் திரும்பியிருந்தார். அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த திலகர் அந்த மாநாட்டில் முக்கிய விருந்தாளியாக பங்கேற்றார். திலகரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பல்வேறு ஊர்களிலிருந்து மக்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணம் திலகர் அன்று சிறப்புரையாற்றினார்.
திலகரின் உரைக்குப் பிறகு
காந்தியடிகள் மேடைக்கு அழைக்கப்பட்டார். தமக்குக் கிடைத்த குறுகிய நேரத்துக்குள் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும்
இந்தியர்களின் நிலைமை பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார் காந்தியடிகள். அத்தகவல்களின்
அடிப்படையில் வைசிராயாக இருந்த ஹார்டிங் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாக காங்கிரஸ்
உடனடியாக ஒரு கடிதம் எழுதவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். ஒலிபெருக்கி இல்லாத அன்றைய சூழலில் காந்தியடிகளின் பணிவான குரலும்
மனப்பூர்வமாக வெளிப்பட்ட சொற்களும் பிரச்சினையை தெளிவாக எடுத்துரைத்த முறையும் அங்கு
கூடியிருந்த அனைவரையும் ஈர்த்தன. அன்றைய அவருடைய உரையை ஓர் இளம்பெண்ணும் முன்வரிசையில் அமர்ந்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். காந்தியடிகளை
நேரில் பார்த்து அவருடைய உரையைக் கேட்பதற்காகவென்றே அவர் லக்னோவிலிருந்து புறப்பட்டு
வந்திருந்தார்.
அவர் பெயர் ராஜகுமாரி
அம்ருத் கெளர். அவருடைய தந்தையாரான ஹர்ணம்சிங் ஆலுவாலியா லக்னோவில் சீக்கிய
அரசகுடும்பத்தில் பிறந்தவர். காதல் காரணமாக மதம் மாறி, கிறித்துவப்
பாதிரியாரான கோலக்நாத் சட்டர்ஜி என்பவரின் இளைய மகளான பிரிசில்லா என்பவரை அவர் மணந்துகொண்டார். மதமாற்றத்தின்
காரணமாக அவருக்கு ஆட்சியுரிமை மறுக்கப்பட்டது. அதைப்பற்றி
கவலைப்படாமல் அவர் ராஜகுடும்பத்தைவிட்டு வெளியேறி மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார். அவர்களுக்குப்
பிறந்த எட்டு பிள்ளைகளில் ஒருவர் ராஜகுமாரி அம்ரித் கெளர்.
தன் ஒரே மகளின் எதிர்காலம்
ஒளிமயமானதாக இருக்கவேண்டும் என்னும் காரணத்தால் இளம்பருவத்திலேயே அவரை இங்கிலாந்தில்
டோர்செட் என்னும் நகரில் உள்ள செர்போர்ன் மகளிர் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தார்
ஹர்ணம்சிங். அங்கு தொடக்கக்கல்வியை முடித்ததும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
சேர்ந்து பட்டப்படிப்பையும் முடித்தார் அம்ருத் கெளர். கல்வியில்
மட்டுமன்றி இசையிலும் விளையாட்டிலும் வல்லவராக விளங்கினார் அவர். பட்டப்படிப்பை
முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்து பெற்றோருடன் தங்கியிருந்த நேரத்தில்தான், தன் தந்தையாரை
அடிக்கடி சந்திக்க வந்த கோகலேயின் சொற்கள் வழியாக காந்தியடிகளின் பெயரை முதன்முதலாக தெரிந்துகொண்டார். தென்னாப்பிரிக்காவில்
அகிம்சை வழியில் காந்தியடிகள் நிகழ்த்திய போராட்டங்களைப்பற்றியும் அரசியலுக்கு அப்பால்
சமூக வாழ்வையொட்டி அவருக்கு இருந்த தனித்துவமான பார்வையைப்பற்றியும் ஒவ்வொரு சந்திப்பிலும்
சொல்லிக்கொண்டே இருந்தார் கோகலே. ஒருநாள் பேச்சோடு பேச்சாக ”இந்தியாவில் எதிர்காலத்தில்
மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கப்போகும் ஒரு மனிதரை நீ வெகுவிரைவில் பார்ப்பாய்” என்று கோகலே
சொன்ன சொற்கள் அம்ருத் கெளரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து, அவரைப் பார்க்கும்
ஆவலைத் தூண்டியபடி இருந்தது.
எதிர்பாராத விதமாக 19.02.1915 அன்று கோகலே
இயற்கையெய்தினார். அவருடைய மரணத்துக்குப் பிறகு காந்தியடிகளைப்பற்றிய செய்திகளைத்
தெரிவிக்க ஒருவரும் இல்லாத சூழலில் அம்ருத் கெளர் தானாகவே செய்தித்தாட்களில் காந்தியடிகளைப்பற்றிய
தகவல்களை அடிக்கடி தேடிப் படித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார். பம்பாய்
மாநாடு பற்றிய செய்தியைப் பார்த்ததும் லக்னோவிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். அன்றைய தினம்
காந்தியடிகளுடைய உரையை மட்டுமே அம்ருத் கெளரால் கேட்க முடிந்ததே தவிர, அவரைத் தனிப்பட்ட
வகையில் சந்தித்து உரையாட இயலாமல் போய்விட்டது.
1919இல் சுதந்திரத்துக்குப் போராடும் இந்தியர்களை அடக்கவும் ஆங்கில
அரசுக்கு எதிரான முயற்சிகளை நசுக்கவும் ரெளலட் சட்டத்தை அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அதைக் கண்டிக்கும்
வகையில் நாடெங்கும் அகிம்சை வழியில் ஊர்வலங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்துமாறு
கோரிக்கை விடுத்தார் காந்தியடிகள்.
06.04.1919 அன்று பம்பாயில் செளபாத்தி
கடற்கரையில் அவர் தலைமையில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டு அமைதியான வழியில்
தம் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைக் கண்டு அரசு நிர்வாகம் திகைத்தது. அரசு கொண்டுவந்த
ரெளலட் சட்டம் எல்லா மதத்தினரையும் ஒன்றிணைந்து போராட வைத்துவிட்டது என்றும் ஒரு காந்திக்குப்
பதிலாக இம்மண்ணில் நூற்றுக்கணக்கான காந்திகள் உருவாக வழிவகுத்துவிட்டது என்றும் பத்திரிகைகள் எழுதின.
பம்பாய் மாகாணத்துக்கு
வெளியே தில்லிக்கும் பஞ்சாபுக்கும் சென்று, அங்கிருக்கும்
நிலையை அறிந்துகொள்ள காந்தியடிகள் விரும்பினார். அதற்காக
அவர் எட்டாம் தேதி ரயில் வழியாக பயணத்தைத் தொடங்கினார். ஆனால் பாதிவழியில்
ஒரு நிறுத்தத்தில் அவரை ரயிலிலிருந்து அதிகாரிகள் இறக்கினார்கள். பஞ்சாப்
மாகாணத்துக்குள் நுழைய அவருக்கு தடைவிதித்திருப்பதாக அறிவித்தனர்.
அதே நேரத்தில் அமிர்தரஸ்
நகரத்தைச் சுற்றி பல்வேறு இடங்களில் வெளிப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு மிரட்சியுற்ற
பஞ்சாப் அரசு தற்காலிகமாக மாநிலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துவிட்டது. ஜாலியன்வாலா
பாகில் வைசாக பண்டிகையை ஒட்டி கூடியிருந்த மக்களை எதிர்ப்பாளர்கள் எனக் கருதிய ஜெனரல்
டயர் தன்னிச்சையாக முடிவெடுத்து பொதுமக்களைச் சுட்டு வீழ்த்தினார். பத்து நிமிடங்களுக்கும்
மேலாக நீடித்த அந்தத் துப்பாக்கிச்சூட்டில் ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். இரண்டாயிரத்துக்கும்
மேலானோர் படுகாயமடைந்தனர்.
பஞ்சாபுக்குச் செல்ல
தனக்கு விதித்திருந்த தடையை விலக்கவேண்டுமென தொடர்ச்சியாக அரசுக்கு காந்தியடிகள் எழுதிக்கொண்டே
இருந்ததன் விளைவாக, 22.10.1919 அன்று அரசு அந்தத் தடையை விலக்கியது. மறுநாளே
அவர் பஞ்சாபுக்குப் புறப்பட்டுச் சென்றார். படுகொலையில்
பாதிக்கப்பட்டோருடைய குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடினார். உண்மையைக்
கண்டறியும் குழுவொன்றை அவரே உருவாக்கி, நடந்ததை நடந்தவாறு தகவல்களைத் திரட்டித்
தொகுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஓய்வின்றி அல்லும்பகலும் அவர் பொதுமக்களைச் சந்தித்தபடியே இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒருநாள்
ஹரன்சிங்கின் வேண்டுகோளை ஏற்று அவருடைய வீட்டுக்குச் சென்றார் காந்தியடிகள். அப்போது
அம்ருத் கெளர் உடல்நலம் குன்றி படுக்கையில் இருந்தார். ஆயினும்
மரியாதை நிமித்தமாக படுக்கையிலிருந்து எழுந்து
வந்து காந்தியடிகளுடன் உரையாடினார். அவருக்கு காந்தியடிகளைப்போலவே அரசியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்காக
பாடுபட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் ஹரன்சிங்குக்கு அவர் நேரடி அரசியலில்
ஈடுபடுவதில் விருப்பமில்லை. அதே சமயத்தில் பிற வழிகளில் மக்களுக்குச் சேவையாற்றுவதை அவர்
தடுக்கவுமில்லை.
அன்றைய உரையாடல் எப்படியோ
அந்நியத்துணி எரிப்பையொட்டித் திரும்பியபோது, அம்ருத்
கெளர் தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த அந்நிய ஆடைகளையெல்லாம் விலக்கிவிட்டு கதராடைகளை அணியத் தொடங்கவேண்டும் என்று
அமைதியான குரலில் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். மேலும் அவர்
தன்னிடமிருக்கும் ஆடம்பரமான அந்நிய ஆடைகளையெல்லாம் குவித்து எரித்துவிடவேண்டும் என்றும்
சொன்னார். காந்தியடிகளின் கொள்கையைப்பற்றி அம்ருத் கெளருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த
போதும் நேரடியான அவருடைய பேச்சு அவரை ஒருகணம் திகைக்கவைத்தது.
ஒரு காலத்தில் தன்னிடம்
ஏராளமாக அந்நியத்துணிகள் இருந்தன என்றபோதும் தற்சமயம் இந்தியப்பட்டாடைகளை மட்டுமே வாங்குவதாகத்
தெரிவித்தார் அம்ருத் கெளர். “இந்திய ஆடைகள் என்றபோதும் அவையும் ஆடம்பரமானவை அல்லவா?” என்று கேட்டார்
காந்தியடிகள். ”இருக்கலாம், ஆனால் அணியத்தக்க துணிகளை எரிப்பது மிகப்பெரிய தவறு” என்று அம்ருத்
கெளர் வாதாடினார். “அடிமைத்தனத்தின் அடையாளமாக இவை இருக்கும் நிலையில் வேறென்ன செய்ய
முடியும்? ஒருவேளை உங்களால் எரிக்க முடியாவிட்டால் என்னிடம் கொடுக்கவும். நான் அவற்றை
தென்னாப்பிரிக்காவில் வாழும் ஏழை இந்தியருக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்
காந்தியடிகள். பிறகு அமைதியான குரலில் ”முதலில்
இராட்டையில் நூல் நூற்கவும் தறியில் நெசவு செய்யவும் பழகுங்கள். கதராடைகளை
அணிய முயற்சி செய்யுங்கள். அதுவே இந்த நாட்டுக்கு நாம் ஆற்றும் முதன்மையான சேவை” என்று சொல்லிவிட்டு
புறப்பட்டுச் சென்றார்.
காந்தியடிகள் தொடர்ச்சியாக
இரண்டு மாத காலம் அமிர்தசரஸிலேயே தங்கி, பல இடங்களுக்குச் சென்று வந்தார். இந்திய தேசிய
காங்கிரஸ் தன் முப்பத்துநான்காவது மாநாட்டை அமிர்தரசரஸிலேயே மோதிலால் நேருவின் தலைமையில்
நடத்தத் தீர்மானித்தது. துப்பாக்கிச் சூட்டை ஒட்டி நிகழ்ந்த கலவரம் காரணமாக சிறையில்
அடைக்கப்பட்டிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் விடுதலை பெற்று வந்து மாநாட்டில் பங்கேற்றனர். இதற்கிடையில்
இராட்டையில் நூல் நூற்கும் முயற்சியில் ஈடுபட்டார் அம்ருத் கெளர். தொடக்கத்தில்
அது அவருக்குத் துன்பமளிப்பதாகவே இருந்தது. ஆயினும்
காந்தியடிகளின் சொற்கள் அவர் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டே இருந்ததால், மிகவிரைவில்
நூல்நூற்கக் கற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நூற்ற நூலை தன்னைச் சுற்றி வசிக்கும் ஏழைப் பெண்களுக்குக்
கொடுத்துவிடுவதை அவர் வழக்கமாக்கிக்கொண்டார். அதை அவர்கள்
ஆடையாக நெய்து பயன்படுத்தினர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏழை மக்களுடன் தொடர்ந்து பழக இது
உதவியாக இருந்தது. கதர் வழியாக மக்கள் இணைவதை அவர் தன் சொந்த அனுபவம் வழியாகவே
உணர்ந்தார்.
இந்தியாவில் நிலவும்
சுகாதாரக் குறைபாடுகளை அகற்றுவதை மிகமுக்கியமான பணியாகக் கருதினார் அம்ருத் கெளர். குடும்பப்பெண்கள் தம் உடலைப் பேணுவதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பதைப் பார்த்து
அவர் மிகவும் வருந்தினார். குறைந்தபட்சமாக தம் வீட்டிலுள்ள பெண் பணியாளர்களுக்கும் தன்
ஊரைச் சேர்ந்த பெண்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் சுகாதாரச் சீர்கேடுகளைப்பற்றி
தொடர்ந்து பேசிப் புரியவைத்தார். சுகாதாரமின்மையே பெண்களின் இளவயது மரணங்களுக்கும் பிள்ளைப்பேற்றின்போது
நிகழும் மரணங்களுக்கும் காரணம் என்று எடுத்துரைத்தார். வீடும் சுற்றுப்புறமும்
வீதிகளும் சுகாதாரமாக இருந்தால் மட்டுமே மனிதர்கள் நோயற்று வாழமுடியும் என்பதை அவர்
செல்லும் இடங்களிலெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தார். நாளடைவில்
அவருடைய தொடர் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. பெண்கள்
நலவாழ்வு, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் சார்ந்து அம்ருத்
கெளருக்கு ஏராளமான கனவுகள் இருந்தன.
காந்தியடிகளின் ஆசிரமத்தில்
சேர்ந்துகொள்ள அம்ருத் கெளர் விரும்பியபோதும், காந்தியடிகள் அதை ஏற்க மறுத்தார். உடல்நலம் குன்றியிருக்கும் தம் பெற்றோரைக் கவனிப்பதே அம்ருத் கெளருடைய முதல்
கடமை என்று தெரிவித்தார். 1924இல் அவர் தாயார் மறைந்தார். 1930இல் அவருடைய
தந்தையாரும் மறைந்தார். அதற்குப் பிறகே அவர் ஆசிரமத்துக்கு வந்தார். 12.03.1930 அன்று சபர்மதி
ஆசிரமத்திலிருந்து தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்தில் 78 பேர்களில்
ஒருவராக அம்ருத் கெளரும் இணைந்துகொண்டார். சத்தியாகிரகத்தின்
முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டபோது அம்ருத் கெளரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
உப்பு சத்தியாகிரகத்துக்காக
சபர்மதி ஆசிரமத்திலிருந்து ஆனந்த், ஜம்புசுர், ப்ரோச், டாமன் வழியாக 241 மைல்கள் தொலைவு நடந்து சென்ற
பயணத்தில் கிராமத்துப் பெண்களின் நிலைமையைக் கண்டு அம்ருத் கெளரின் மனம் வருந்தியது. அவர்களுடைய
அறியாமையைப் போக்கி அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதை தன் தலையாய
கடமையெனக் கொண்டார். சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டின்
செயலராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு
மனப்பூர்வமாகச் செயல்பட்டார். பெண்கள் முன்னேற்றம் சார்ந்த பல கருத்துகளை அந்த மாநாட்டின்
வழியாக பிரச்சாரம் செய்தார். . சுற்றுப்புற சுகாதாரத்தைப்பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையைப்பற்றியும்
ஒவ்வொரு மேடையிலும் தொடர்ந்து எடுத்துரைத்தார். பெண்களிடம்
நவீன மருத்துவ முறைகள் மீது நம்பிக்கையை உருவாக்கப் பாடுபட்டார்.
சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு
ஆணும் பெண்ணும் அருகிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று, அங்கு வசிக்கும்
ஏழை மக்களிடம் சுற்றுப்புறத் தூய்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தினமும் ஒருசில மணி நேரங்களை ஒதுக்கவேண்டும்
என்று அவர் செல்லும் இடங்களிலெல்லாம் எடுத்துரைத்தார். பொதுப்பாதைகளைத்
தூய்மையாக வைத்துக்கொள்தல், பெண்களுக்கு படிக்கவும் எழுதவும் கற்பித்தல், நூல் நூற்கவும்
நெசவு செய்யவும் கற்பித்தல், குழந்தை வளர்ப்பு போன்ற அம்சங்களையொட்டி, அனைவரும்
புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகப் பேசினார். பெண்கள்
பள்ளிகளை நாடெங்கும் தொடங்கி பெண்கள் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தால், பெண்களின்
மனத்தில் படிந்திருக்கும் அறியாமை தானாகவே அகன்றுவிடும் என்றும் குறிப்பிட்டார். சிறுவயதுத்
திருமணமும் பலதாரத் திருமண முறையும் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரானவை என்றும் அவை
உடனடியாக நிறுத்தப்படவேண்டிய சமூகக்கொடுமைகள் என்றும் எடுத்துரைத்தார்.
1931 முதல் 1933 வரை பல மாதர் சங்கங்களின் தலைவராக அம்ருத் கெளர் செயல்பட்டார். 1932இல் உருவாக்கப்பட்ட
அரசியலமைப்பு மற்றும் வாக்குரிமை சீர்திருத்தத்துக்காக நடைபெற்ற லோத்தியன் குழுவில்
பெண்கள் அமைப்பின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அம்ருத் கெளர் தம் கருத்துகளை முன்வைத்தார். அரசியலமைப்பு
சட்டத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
1937இல் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டுக்கு தலைமைப் பொறுப்பையேற்று
அம்ருத் கெளர் ஆற்றிய சாதனைகள் மகத்தானவை. இந்த மாநாட்டில்தான்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அறுபது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்
என்றொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அம்ருத் கெளர் ஆசிரமத்துக்குத்
திரும்பியதும் காந்தியடிகள் தன் ஆங்கிலமொழிச் செயலாளராக அவரை அமைத்துக்கொண்டார். இந்தியப் பத்திரிகைகளுக்கும் நண்பர்களுக்கும் அயல்நாட்டு நண்பர்களுக்கும்
எழுதும் ஆங்கிலக் கடிதங்களை அவர் சொல்லச்சொல்ல குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, செம்மையான
மொழியில் கடிதங்களாக எழுதி அவருடைய கையொப்பத்தைப் பெற்று அஞ்சல் செய்வதுதான் அம்ருத்
கெளருடைய வேலையாக இருந்தது. ஏற்கனவே குஜராத்தி, இந்தி மொழிகளில்
எழுதப்படும் கடிதங்களைக் கவனித்துக்கொள்ளும் செயலாளர்களாக மகாதேவ தேசாய், பியாரிலால்
போன்றோர் இருந்தனர். ஆங்கிலக் கடிதங்களுக்கான பொறுப்பை மட்டும் அம்ருத் கெளர் ஏற்றுக்கொண்டார். கடிதம், கட்டுரை, பத்திரிகைத்
தலையங்கம் என ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்கங்களை எழுதிக்கொண்டே இருந்தார் காந்தியடிகள். குறித்த
நேரத்தில் அனைத்தையும் தட்டச்சு செய்து முடிக்கவேண்டும். இதனால் ஒவ்வொரு
நாளும் குறிப்பிட்ட நேரத்துக்கும் கூடுதலாக கெளர் வேலை செய்தார்.
தொடக்கத்தில் காந்தியடிகள்
கெளரிடம் பரிவுடன் நடந்துகொண்டாலும் தவறு என வரும்போது கண்டிப்பாகவும் நடந்துகொண்டார். ஒருமுறை
காந்தியடிகள் ஒரு துண்டுத்தாளில் எதையோ எழுதி அம்ருத் கெளரிடம் அளித்து ஒருவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு
சொன்னார். அம்ருத் கெளர் தவறுதலாக அதை வேறொருவரிடம் கொடுத்துவிட்டார். அக்கணம்
சிறிதும் கனிவின்றி கெளரை கடுமையாக திட்டிவிட்டார். அத்தகைய
கடுமையை எதிர்பார்க்காத அம்ருத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீர்
அவரை எவ்விதத்திலும் அசைக்கவில்லை. கண்ணீர் என்பது துக்கத்தின் வெளிப்பாடல்ல, நம்மிடமிருக்கும்
சினமும் ஆணவமுமே கண்ணீராக வெளிப்படுகிறது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மற்றொரு முறையும் இதே
போன்ற ஒரு பிழை நிகழ்ந்துவிட்டது. மேடையில் இருந்தபடி ஒரு துண்டுத்தாளில் வேகமாக எதையோ எழுதி, அருகிலிருந்த
அம்ருத் கெளரிடம் கொடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். அம்ருத்தும்
அத்தாளை அவரிடம் எடுத்துச் சென்று கொடுத்தார். அவரும் அதைப்
படித்துவிட்டு காந்தியடிகளை நெருங்கி வந்து பேசிவிட்டுச் சென்றார். கூட்டம்
முடிந்து ஆசிரமத்துக்குத் திரும்பிய பிறகு காந்தியடிகள் கெளரிடம் அந்தத் துண்டுக்கடிதத்தைக்
கேட்டார். அதை அந்த நபரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை என்று
தயக்கத்துடன் தெரிவித்தார் கெளர். அதைக் கேட்டு ஏமாற்றத்துடன் தன் குடிசைக்குச் சென்றார் காந்தியடிகள்.
அடுத்த நாள் அதிகாலை
அம்ருத்துக்கு காந்தியடிகள் ஒரு கடிதமெழுதி அனுப்பியிருந்தார். அன்று அவர்
பிறந்தநாள். அக்கடிதத்தில் ஒரு இலட்சியச் செயலாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப்பற்றி சுருக்கமாக சில அம்சங்களைத் தெரிவித்திருந்தார். கெளர் ஒரு
இலட்சியச் செயலாளராக மலரவேண்டும் என்ற எண்ணத்திலேயே தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுவதாகவும்
சுருக்கமாக குறிப்பிட்டிருந்தார். அக்கடிதமே
அம்ருத் கெளருக்கு அவர் அளித்த பிறந்தநாள் பரிசு. அக்கடிதத்தை
பெரியதொரு புதையலைப்போல கருதி மனம் மகிழ்ந்த அம்ருத் கெளர், அதற்குப்
பிறகு தன் பணியில் ஒரு குறையும் நேராதபடி நடந்துகொண்டார். ஏறத்தாழ
பதினேழு ஆண்டுகள் காந்தியடிகளின் செயலாளராக பணியாற்றினார் அம்ருத் கெளர். அந்தக் காலத்தில்
கெளருக்கு அவர் பலமுறை கடிதங்கள் எழுதி அனுப்பினார். கெளர் மீது
அவர் மிகவும்
அன்பு கொண்டிருந்தார். மடல் எழுதும் மனநிலைக்கு உகந்தபடி அன்புள்ள சகோதரி, அன்புள்ள
புரட்சிவாதி, அன்பான முட்டாள், அன்பு அம்ருத் என அம்ருத் கெளரை பலவிதமாக
வேடிக்கையாக விளித்து எழுதுவது அவர் பழக்கமாக இருந்தது.
வடமேற்கு எல்லைப்புற
மாகாணமான கைபர் பாக்துங்க்வாலா பகுதியில் 1937இல் தேர்தல்
அறிவிப்பை ஒட்டி சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதைத் தீர்த்துவைப்பதற்காக
இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் நல்லெண்ணத் தூதராக அம்ருத் கெளர் பன்னு என்னும்
பகுதிக்குச் சென்றார். ஆனால் ஆங்கிலேய அரசு அவர் மீது இராஜதுரோகக் குற்றம் சுமத்தி
அவரைக் கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை
வழங்கியது. தண்டனையைக் கண்டு கலங்காமல் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்
கெளர்.
சமூகப்பணிகளில் அவர்
ஓய்வின்றி தொடர்ந்து
ஈடுபட்டு வந்ததால் அவருடைய
உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டது. 1942இல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தபோது
கூட, அம்ருத் கெளர் உடல்நலக்குறைவின் காரணமாக சிம்லாவுக்கு அருகில்
கல்காவுக்குச் சென்றிருந்தார். ஆயினும் காந்தியடிகளின் அறிவிப்பை அறிந்துகொண்டதும் கல்காவில்
காந்தியின் குரலுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார். அவரைக் கைது
செய்த அரசு அம்பாலாவில் தனிமைச்சிறையில் அடைத்தது. தம்முடன்
ஒரு இராட்டையையும் பகவத் கீதையையும் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. ஒரு மாத
காலத்துக்குப் பிறகு அவர் அச்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அறிவியல் வழியில் பெண்களுக்குரிய கல்வித்திட்டத்தை வகுத்து செயல்படுத்தும் நோக்கத்துடன் ’அனைத்திந்திய பெண்கள் கல்வி நிதி’ என்னும் அமைப்பை 1929இல் காந்தியடிகள் உருவாக்கி செயல்படுத்திவந்தார். அவருடைய ஆலோசனையின்படி நாற்பதுகளில் அதன் தலைமைப்பொறுப்பை அம்ருத் கெளர் ஏற்றுக்கொண்டார். அதற்காக எண்ணற்ற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அவர் பயணம் செய்யவேண்டியிருந்தது. பெண்களுக்கு கல்வியறிவோடு உறுதியான உடல்நலம், தூய்மை, சத்துணவு, குடும்பநலம், குழந்தைகள் நலம் போன்றவற்றைப்பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டும் வகையில் கல்வித்திட்டத்தை வகுக்க அவர் பாடுபட்டார். மேலும் பெண்கள் தமக்குரிய உரிமைகளைப்பற்றிய தெளிவான பார்வையையும் பெறுவதற்கும் இத்திட்டம் உதவவேண்டும் என நினைத்தார். அவர் நீண்ட காலம் தொடர்ந்து தலைமைப்பொறுப்பில் இருந்ததால், அவருடைய எண்ணங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்.
இதே காலகட்டத்தில் லேடி
இர்வின் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். 1942இல் அவர் சிறைக்குச் சென்றபோது அப்பொறுப்புகளிலிருந்து அவர் வெளியேறினார். 1945இல் லண்டனிலும் 1946இல் பாரிசிலும் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார அமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் மருத்துவத்தில் அக்கறை கொண்ட அம்ருத் கெளர் 1946இல் தலைநகரான தில்லியில் ஒரு செவிலியர் கல்லூரியை உருவாக்கினார்.
1947இல் இந்தியா சுதந்திரம்
பெற்றதும் நேருவின் தலைமையில் ஆட்சி அமைந்தது. அவருடைய முதல் அமைச்சரவையில் அம்ருத் கெளர் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சுகாதார அமைச்சராகப் பணியாற்றி வரும் காலத்திலேயே அவர் உலக சுகாதார சபையில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பணிக்காலத்தில்தான் தொழிலாளர் நலத்துக்காக அனைத்திந்திய தொழிலாளர் காப்புறுதித்திட்டமும்(
All India Employees State Insurance Scheme) நடுவண் அரசு தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய சுகாதார பணித்திட்டமும் (Central Governement
Employees Contributed health Services Scheme ) நடைமுறைக்கு வந்தன. அமைச்சராக பணியாற்றியபடியே அம்ருத் கெளர் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.
1947இல் அனைத்திந்திய சமூகப்பணியாளர் குழு என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1948இல் நடைபெற்றது. அதில் தலைமையுரை ஆற்றிய அம்ருத் கெளர் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கையாளவேண்டிய வழிமுறைளைப்பற்றிக் கூறிய கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை. சமூகப்பணிக்கென உருவாக்கப்பட்ட துறை சார்ந்த பணியாளர்கள் ஒருபக்கமாகவும் தன்னார்வலக் குழுக்களின் பணியாளர்கள் இன்னொரு பக்கமாகவும் பரஸ்பர புரிதலுடன் ஒரே நோக்கத்துடன் பணிபுரிந்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதில் மூன்றாவது பக்கமாக நின்று பணியாற்ற முன்வருபவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். சமூகப்பணியில் எப்போதும் அர்ப்பணிப்புணர்வு கொண்டவர்களே முன்வரிசையில் நிற்பவர்கள். அத்தகையோர் பெரும்பாலும் தனிமனிதர்களே. அத்தகையோரை கண்டடைந்து சேவைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ளும்போதுதான் அத்திட்டம் கூர்மை பெறும். இப்படிப்பட்ட மூன்று விசைகளையும் ஒருங்கிணைத்து ஆற்றும் பணிகளால் மட்டுமே ஒரு குழு வெற்றி பெறும். அம்ருத் கெளரின் ஆலோசனை வெற்றியை ஈட்ட நினைக்கும் சமூகக்குழுக்களுக்குச் சொல்லப்பட்ட அமுதமொழி.
சுதந்திர
இந்தியாவில் நேருவின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) நிறுவுவதில் அம்ருத் கெளர் பெரும்பங்கு வகித்தார். மக்களுக்கு தரமான மருத்துவத்தை வழங்கும் சிறந்த மருத்துவமனையும் மருத்துவக்கல்லூரியும் இணைந்த வளாகமாக அதை உருவாக்க நினைத்தார் அவர். அதற்குரிய கட்டிடத்துக்கான இடம் தில்லியில் தேர்வு செய்யப்பட்டு 1952இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் மருத்துவப்படிப்பைப் படிக்கும் மாணவர்கள் உலகத்தரத்துடன் மருத்துவக்கல்வியில் முதுநிலை பட்டப்படிப்பை இந்தியாவிலேயே படிக்க துணைசெய்யும் வகையில் 1956இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதற்கு இசைவாக மத்திய சுகாதார அமைச்சராக விளங்கிய அம்ருத் கெளர் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றினார். நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு ஜெர்மனி, சுவீடன் போன்ற பல நாடுகளிலிருந்து பல உதவிகளைப் பெற்று இந்நிறுவனத்தை விரிவுபடுத்தினார். மருத்துவக்கழகத்தின் பணியாளர்களுக்கான விடுமுறை இல்லத்தை சிம்லாவில் கட்டுவதற்கு அரசு முடிவெடுத்ததும் அம்ருத் கெளர் சிம்லாவின் தனக்கும் தன் சகோதரர்களுக்கும் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
அம்ருத்
கெளர் பத்தாண்டு காலம் சுகாதார அமைச்சராக பணியாற்றினார். இந்திய காசநோய் கழகமும் மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆய்வு நிறுவனமும் அவருடைய பதவிக்காலத்தில்தான் முதல் முறையாக உருவாக்கப்பட்டன. அம்ருத் கெளரின் சமூக சேவையைக் கெளரவிக்கும் விதமாக, மருத்துவரும் மிகச்சிறந்த சமூக சேவகருமான ரெனெ சேன்ட் பெயரால் இரண்டாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறந்த சமூக சேவகருக்கான நினைவுப்பரிசை பெல்ஜியம் நாடு வழங்கியது. 12.05.1956 அன்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தன் 209வது பட்டமளிப்பு விழாவில் மதிப்புறு முனைவர் பட்டத்தை அளித்துப் பாராட்டியது.
காந்தியடிகளின் ஒரே ஒரு சொல்லுக்கான ஆடம்பரமான வாழ்க்கையை உதறிவிட்டு எளிய வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் தன்னை தகவமைத்துக்கொண்டவர் ராஜகுமாரி அம்ருத் கெளர். சமூகத்தில் நிலவிய அவலங்களை நீக்குவதற்காக உண்மையான அக்கறையோடும் உறுதியோடும் அவர் பாடுபட்டார். அம்ருத் கெளர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் தருணத்தில் காந்தியடிகள் நவகாளிப் பயணத்தில் இருந்தார். அங்கிருந்து அவர் அம்ருத் கெளருக்கு எழுதிய சுருக்கமான ஒரு கடிதத்தில் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்றும் ஒரு சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், களங்கம் நிறைந்ததாக கடலை நினைத்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டு எழுதினார். அவர் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்த சொற்களே அவை. ஆனால் அத்தருணத்தில் அம்ருத் கெளரின் மனத்துக்கு விசையூட்டும் அசரீரிச் சொற்களாகத் தெரிந்தன. அந்த உறுதியோடும் நம்பிக்கையோடும் அம்ருத் கெளர் இறுதிக்கணம் வரைக்கும் செயல்பட்டுக்கொண்டே இருந்தார்.
(சர்வோதயம்
மலர்கிறது – டிசம்பர் 2021)