Home

Sunday 9 January 2022

பூ - சிறுகதை

 தொட்டிப்பாட்டையில் பிணம் அறுக்கிற ஆஸ்பத்திரியைத்தாண்டி முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் செல்லம்மா ஆயாவின் குடிசை. ஒன்பது பிள்ளை பெற்றும் ஒன்று கூட உருப்படி இல்லாமல் போன மகாராணி கதைதான் ஆயாவின் கதையும். ஆயாவுக்கு ஆறு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சுற்று வட்டாரத்தில் உள்ள பதினெட்டு கிராமங்களுக்குள்ளேயே எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தார்கள். மனசு வைத்தால் பட்டத்து ராணி மாதிரி ஆயாவை உட்காரவைத்துச் சோறு போட முடியும். என்னமோ எல்லோருக்கும் ஒரு உதாசீனம். ஒரு அலட்சியம். ஒண்டிக்கட்டை ஜீவனம்தான் தனக்கு லபித்தது என்று ஆயாவும் அடங்கிக்கிடந்தாள். பிள்ளைகள்பற்றி யாராச்சும் பிரஸ்தாபித்தால் கூடஎன்னமோ உடுங்கம்மா. மாரியாத்த புண்ணியத்துல எல்லோரும் சௌக்கியமா இருந்தா சரிதான். ஏதோ எங்கட்ட இருக்கிற வரிக்கும் இந்தத் தோட்டம் சோறு போடும்என்றாள்.

குடிசைக்குப் பின்பக்கம் வேலிக்கு நடுவில் வால் மாதிரி நீண்டிருந்த இடம்தான் தோட்டம். இங்கும் சட்டிபானை கழுவ, குளிக்க, துணியலச என்று வசதி கருதி ஒரு மூலையில் சின்ன கீற்றுத்தடுப்பு வைத்திருந்தாள். பாக்கி இடத்தில் கனகாம்பரம் புதர்மாதிரி பூத்து மண்டிக் கிடந்தது. டிசம்பர் செடிகளும் மல்லிகைக் கொடியும் கூட இருந்தது. வருஷம் முழுக்க பூக்களுக்குக் குறைச்சல் இல்லை. ஏதாவது ஒன்று பூத்துக் கொழித்தது. கூடை பூவானாலும் சரி, முறம் பூவானாலும் சரி தினசரி மூன்று ரூபாய் என்கிற கணக்கில் ரங்கம்மா வந்து பறித்துக்கொண்டு போனாள். ஆயாவின் ஜீவனம் இந்த மூன்று ரூபாயில்தான் ஒட்டிக் கிடந்தது.

ரங்கம்மா தினந்தோறும் காலையில் வந்தாள். வரும்போதே, பழைய சோறோ கூழோ ஏதாச்சும் தூக்குவாளியில் போட்டு வந்து கொடுத்தாள். பெருக்காமல் கிடக்கிற பட்சத்தில் வாசலையும் வீட்டையும் கூட்டினாள். கூட்டும்போதே நாலு நிமிஷம் நின்று நெருக்கமாய்ப் பேசினாள். அதற்குப் பிறகு பூப்பறித்துக் கொண்டு ஆயாவின் கையில் மூனு ரூபாய் தந்துவிட்டுப் போனாள்.

காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டதும் ஆயாவுக்குத் தோட்டவேலைதான். பெருக்கிச் சுத்தம் செய்தாள். புல்லைச் செதுக்கி ஓரம் தள்ளினாள். தெருமுனையில் இருக்கிற குழாயடியில் இருந்து சின்னக் குடத்தில் தண்ணீர் சுமந்துவந்து செடிகளுக்கு ஊற்றினாள். மதர்த்துக்கிடக்கிற செடிகளைப் பார்க்கப்பார்க்க ஆயாவுக்கு மனசு குளிர்ந்தது. தோட்டம் ஆயாவுக்கு வயிற்றில் பிறந்த பிள்ளைமாதிரி. இன்னொரு கோணத்தில் கோயில்மாதிரி.

**

ஆயாவின் உலகத்தில் இன்னொரு அங்கம் கறுப்பு என்கிற நாய். குழாயடியில் விளக்குக் கம்பத்தின் கீழே அனாதையாய்க் கத்தியபடி இப்பவோ எப்பவோ என்று கிடந்த குட்டியைத் தூக்கிவந்து தொண்டை குளிர நீராகாரம் வைத்தாள் ஆயா. பிழைத்தெழுந்த நாய் ஆயாவுடன் சிநேகிதமாகியது. சதா காலமும் ஆயாவுடனேயே தோட்டத்தில் அலைந்தது. ஆடு மாடு புகுந்துவிடாமல் காவல் காத்தது. ஆயா அதற்குக் கறுப்பு என்று பெயர்வைத்துக் கூடவே வைத்துக் கொண்டாள்.

கறுப்புக்கென்றே ஆயா ஒரு ரூபாய் கொடுத்து அகலமான ஒரு சட்டி வாங்கினாள். குடிசைக்குள்ளேயே ஒரு மூலையில் சட்டியை வைத்தாள். தான் சாப்பிட உட்காரும் போதே கறுப்புக்கும் சட்டியில் சோறுவைத்தாள். தின்று முடித்ததும் தண்ணீர் ஊற்றினாள். கடைசியில் தனது தட்டையும் கறுப்புவின் சட்டியையும் சேர்த்துக் கழுவிவந்து அதனதன் இடத்தில் வைத்தாள்.

கறுப்புக்காக அலுமினியத்தட்டு ஒன்று வாங்கவேண்டும் என்பது ஆயாவின் ஆசை. விலை விசாரித்தபோது பத்து ரூபாய்க்குக் கிட்டத்தட்ட சொன்னார்கள். ஏறிக் கிடந்த விலைதான் ஆயாவை யோசிக்கவைத்தது. சட்டிச்சோறு தின்றே கறுப்பு வளர்ந்து பெரிதாகியது. திடகாத்திரமான சரீரம். கறுத்த நிறம், சற்றே உடம்பில் அடர்ந்து புஸ்ஸென்று கிளம்பி நிற்கும் குறுமயிர். காதை ஆட்டிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் எழுந்து நிற்கிற கறுப்பின் தோற்றம் யாரையும் ஒரு கணம் கலங்கடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வளர்கிற கறுப்பின் தோற்றம் ஆயாவுக்குப் பெரிய ஆறுதல். இனிமேல் எந்தக் கவலையுமில்லாமல் ஆடுமாடு பயமின்றித் தோட்டத்தைக் காப்பாற்றிவிடமுடியும் என்கிற நம்பிக்கையினால்.

சாயங்காலம் ஐந்துமணி. வாசலில் காலை நீட்டியபடி வெற்றிலையையும் பாக்கையும் சின்ன கையுரலில் இட்டு நசுக்கி உருண்டையாய்ச் சுரண்டி வாயில் செலுத்தி கூடவே ஒரு துண்டு புகையிலையையும் இணுக்கிப் போட்டு அதக்கினாள். சாறு தொண்டைக்குழியில் இறங்கஇறங்க தள்ளாமைக்கு ரொம்பவும் ஆறுதலாய் இருந்தது. சற்றே கண்ணை மூடினாள்.

ஆயா... லாரி அடிச்சி ஒன் கறுப்பு செத்திடுச்சிஇரைக்க இரைக்க வாசலில் வந்து ஒரு பையன் கூவினான். ஆயா திடுக்கிட்டு எழுந்தாள். மென்ற வெற்றிலையைத் துப்பினாள்.

இன்னாடா சொல்ற?’

ஆமா ஆயா, சத்தரத்துல வந்து பாரு.. ஒன் கறுப்பு  செத்து கெடக்குது

கறுப்புதானா? நல்லா பாத்தியா?’

ஆமாஆயா

அவசரம் அவசரமாய் ஓடினாள் ஆயா. சத்திரத்து மூலையில் மகிழமரத்தடியில் குடல் பாதி வெளிவந்து செத்துக் கிடக்கிற கறுப்பை இழுத்துப் போட்டிருந்தார்கள். ஆயாவுக்கு அடிவயிறு எரிந்தது. தாங்கமுடியாமல் அழுகை முட்டியது. ஒரு பிள்ளையின் சாவுக்கு அழுகிற மாதிரி ஒப்பாரி வைத்தாள்.

**

தண்ணீர்க்குடம் தூக்குவது சிரமமாய் இருந்தது. கொஞ்சம்கொஞ்சமாய் அடியெடுத்து நடந்து வரவேண்டி இருந்தது. கையும் காலும் தெம்புடன் இருக்கும்போதே செத்துப்போகவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் குடத்தை இடுப்பில் வைக்கும்போது பிரார்த்தித்தாள். ஒவ்வொரு நாளைக் கழிப்பதும் சாவிலிருந்து தப்பித்துக்கொண்ட வெற்றியாகவே மனசுக்குள் நினைத்தாள். சுள்ளென்று உறைத்த முன்வெயில் களைப்பை அதிகமாக்கியது.

குடிசைக்குள் நுழைந்து தோட்டத்துக்கு வந்து குடத்தை இறக்கினாள் ஆயா. கைகளில் சின்ன வெடவெடப்பை உணர முடிந்தது. ஆயாசத்தில் கண்ணை மூடித் திறந்தாள். வெளிச்சத்தில் இருந்து உள்ளே வந்ததில் எல்லாமே மங்கலாய்த் தெரிந்தது. தனக்கு முன் சிறிது தூரத்தில் கனகாம்பரங்களுக்கு நடுவில் ஓர் இருண்ட கரிய உருவம் தெரிந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பதற்றத்துடன் பார்த்தாள். வெறிபிடித்தமாதிரி கருத்த மாடு ஒன்று பரக்கப்பரக்கச் செடிகளைத் தின்று நாசம் செய்வது தெரிந்தது. பாதிக்கும் மேலான செடிகள் நரம்புக் கோலமாய் குளம்புகளுக்குக் கீழ் மிதிபட்டு மடங்கிக் கிடந்தது. வேரோடு தரையைப் பிளந்துகொண்டு கிடந்தன சில செடிகள். ஆயாவின் வாய் அவளை அறியாமலேயேஐயய்யோஎன்று அலறியது. ஆத்திரம் மூண்டு நெஞ்சு கொதித்தது. சூ சூ என்று அதட்டிக்கொண்டே முன்னால் அடி எடுத்து வைத்தாள். கூச்சலுக்கும் அதட்டலுக்கும் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் மும்முரமாய்ச் செடிகளை இழுத்துத் தின்றது மாடு. வேலியோரம் கிடந்த மண்கட்டிகளையும், கற்களையும் எடுத்து வீசினாள். எதற்கும் அசையாத மாட்டின் போக்கு ஆத்திரம் தர பக்கத்தில் கிடந்த அரிவாளை எடுத்து வீசினாள். கண நேரத்தில் அரிவாள் மாட்டின் உப்பலான வயிற்றில் ஒரு கீறு கீறிவிட்டு கிழே விழுந்தது. ரத்தம் குபுக்கென்று வழிந்தது. வலியில் கூவியது மாடு.

ரத்தத்தைப் பார்த்ததும் நிதானப்பட்டாள் ஆயா. அவசரத்தில் என்ன காரியம் செய்துவிட்டோம் என்று நொந்து கொண்டாள். பயத்தில் உடம்பு நடுங்கியது. நெருங்கி காயத்தை நோட்டமிட்டாள். தண்ணீர்ப்பானையில் பொத்தல் விழுந்தமாதிரி இருந்தது. குனிந்து ஓரமாய்க் கிடந்த சாணியில் ஒரு கை அள்ளி காயத்தில் அப்பினாள். எரிச்சலின் உடம்பை உதறியது மாடு. மீண்டும்மீண்டும் சாணியை அள்ளி காயத்தில் அப்பினாள். ஒரு சில நிமிஷம் கழித்து ரத்தம் நின்றது. காயத்தோடு ஒட்டி நிற்கிற மாதிரி சாணியை நன்றாக அழுத்தி அதக்கினாள். தலைப்பக்கம் நெருங்கி, கழுத்தைப் பிடித்து மெல்ல நீவினாள். மாட்டின் கண்களில் இருந்து சூடான கண்ணிர் வழிந்து ஆயாவின் கையில் தெறித்தது. மிகவும் வருத்தமாய் உணர்ந்தாள் ஆயா.

கறுப்பு  சோறு தின்னும் சட்டியில் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி மாட்டுக்கு வைத்தாள். நிதானமாய் குடித்த மாடு ஆசுவாசமாய் உணர்ந்ததுபோல தலைமை நிமிர்த்தியது. ‘பா...பா...பா...’ என்று மெதுவாக நடத்தி சிதைக்கப்பட்ட வேலி வழியாகவே வெளியே அனுப்பினாள்.

அழிந்து பாழாய்க் கிடக்கும் தோட்டத்தைப் பார்க்க பார்க்க வருத்தத்தில் நீண்ட பெருமூச்சு பெருகியது. மலைத்து நின்றாள் ஆயா.

(பிரசுரமாகாதது -1989)

4. இழப்பு