இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் உடல்நலம் குன்றி 01.08.1920 அன்று மறைந்தார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகள் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையில் திலகருக்கு அஞ்சலி செலுத்தி தன் உரையைத் தொடங்கினார். திலகரின் அர்ப்பணிப்புணர்வையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள். திலகர் மூட்டிவிட்டுச் சென்ற சுதந்திரக்கனல் நாடெங்கும் பரவி வெற்றி கிட்டும் வகையில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் விரிவாக முன்வைத்தார்.
நடக்கவிருந்த தேர்தலை அனைவரும் புறக்கணிக்கவேண்டும் என்பதை முதன்மையான நோக்கமாக காந்தியடிகள் அந்த மேடையில் அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்தார். அப்போது அவர் ஒரு கிரேக்கப் பழமொழியை தன் நினைவிலிருந்து சொன்னார். ‘கிரேக்கர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், குறிப்பாக அவர்கள் ஏதேனும் ஒரு பரிசுப்பொருளோடு சந்திக்க வரும்போது இருமடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்பதுதான் அந்தப் பழமொழி. தேர்தல் என்பதே இந்தியர்களுக்கு பிரிட்டன் விரித்திருக்கும் சூழ்ச்சி வலை. அதை சலுகை என்னும் பெயரில் பரிசென வழங்க நினைக்கிறது ஆங்கிலேய அரசு. தேர்தலில் வெற்றி பெற்றதும் பதவியேற்கும் ஒவ்வொருவரும் அரசரின் பேரால் விசுவாசப் பிரமாணம் எடுக்கவேண்டிய சூழல் வரும். அப்படி விசுவாசப் பிரமாணம் எடுத்த ஒருவர் மனமுவந்து அரசையோ, அரசின் நடவடிக்கைகளையோ ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. நம் கால்களை நாமே சங்கிலியால் கட்டிக்கொள்வதற்கு இணையான செயல் அது. அரசு அளிக்கும் அன்பளிப்பைப் புறக்கணித்து தேர்தலிலிருந்து அனைவரும் விலகி நிற்பதே இக்கணத்துக்குப் பொருத்தமான நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.
எவ்விதத்திலும் அரசின் உதவியைப் பெறுவதும் கூடாது, அளிப்பதும்
கூடாது என்பது ஒத்துழையாமை இயக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும் என்று தெளிவுபடுத்திய காந்தியடிகள் மாணவர்கள் கல்விச்சாலைகளை விட்டு வெளியேறவேண்டுமென்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறி ஒத்துழைப்பதை நிறுத்தவேண்டும் என்று அறிவித்தார். மணிக்கணக்கில் நீண்ட அந்த உரையைக் கேட்டவர்களில் அப்போதுதான் சட்டப்படிப்பை படித்துவிட்டு வழக்கறிஞராக தன் பெயரை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்துவிட்டு சி.எஸ்.வேங்கடாச்சாரி என்னும் மூத்த
வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றுவந்த ஓர் இளைஞரும் இருந்தார். காந்தியடிகளின் ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கிப் புரிந்துகொண்ட அந்த இளைஞர், அக்கணத்திலேயே அவர் காட்டும் வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவெடுத்தார். வழக்கறிஞர் பதவியைத் துறந்து போராட்டப்பாதையில் இறங்கினார். அவர் பெயர் கே.சந்தானம்.
மறுநாள் காலை கிலாபத்து அலுவலகத்துக்கு வந்திருந்த காந்தியடிகளைச்
சந்திக்கச் சென்றார் சந்தானம். அப்போது அவருடன் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, ஜி.ஏ.நடேசன், யாகூப் ஹஸன், இராஜாஜி போன்றோர் இருந்தனர். காந்தியடிகளுக்கு அருகில் சென்று வணக்கம் சொன்ன சந்தானம் ”இன்றைய வாழ்க்கைச்சூழலில் அரசின் சலுகைகளையும் ஆதரவையும் ஒருவர் உதறுவது என்பது எளிதான செயலல்ல. அப்படிப்பட்ட நிலையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு வழக்கறிஞர்களிடமிருந்தும் அரசு ஊழியர்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் பெரிய அளவில் ஆதரவு கிட்டும் என உண்மையிலேயே உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் “அதைப்பற்றி என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் எதிர்பார்த்த அளவில் மகத்தான ஆதரவு கிட்டுமெனில் அரசு நம் கோரிக்கைக்குப் பணிந்துவரும், நாம் நம் இலக்கை அடைவோம். அது மட்டும் உறுதி. நடப்பதற்கு சாத்தியமற்றது என உலகிலே எதுவுமில்லை” என்று சொல்லிவிட்டு சந்தானத்தின் கண்களைப் பார்த்து புன்னகைத்தார். மறுகணமே “நீங்கள் இன்னும் பயிற்சியைத் தொடங்காத இளம்வழக்கறிஞர் அல்லவா? உங்களுக்குள்ள ஆரம்ப மனத்தடையைக் கடந்து இந்த இயக்கத்தோடு இணைவதில்
உங்களுக்கு ஏதேனும் சிரமமுள்ளதா?” என்று நேரிடையாகவே கேட்டார். அந்தக் கேள்வி பல குழப்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்தது.
அன்றைய தினம் மாலையில் தன்னைப்போலவே முடிவெடுத்திருக்கும் வேறு சில நண்பர்களுடன் மீண்டும் காந்தியடிகளைச் சந்தித்த சந்தானம் இயக்கத்தில் இணைய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் காந்தியடிகள் அவசரப்பட வேண்டாம் என்றும் இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகும் இதே உறுதி நீடிக்குமெனில் தாராளமாக வந்து இணையலாம் என்றும் சொன்னார். ஆனால் அவருக்கு அருகில் நின்றிருந்த இராஜாஜி அவர்களுடைய மன உறுதியைப் புரிந்துகொண்டு காந்தியடிகளின் மலபார் பயணத்தில் சந்தானத்தையும்
இணைத்துக்கொண்டார். அப்பயணம் முழுக்க நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காந்தியடிகளைச் சந்தித்து எண்ணற்ற கேள்விகளைக் கேட்பதையும் அவர் தொண்டர்களின் ஐயங்களையெல்லாம் போக்கி சலிப்பில்லாமல் பேசிக்கொண்டே இருப்பதையும் அருகிலிருந்து கண்டு வியப்பில் மூழ்கினார் சந்தானம். சென்னைக்கு திரும்பி வந்ததும் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என காந்தியடிகளிடம் தெரிவித்தார். காந்தியடிகள் அவரிடம் கதர்ப்பிரிவில் இணைந்து தொண்டாற்றும்படி சொல்லிவிட்டுச் சென்றார்.
அடுத்தடுத்து கல்கத்தா, நாக்பூர் போன்ற நகரங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டு திரும்பிய சமயத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று அலிகார் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்களுக்காக ஜாமியா மிலியா தேசிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. உடனே சந்தானம் அங்கு சென்று, கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக பணியில் இணைந்தார். சில மாதங்கள் பணியாற்றிவிட்டு தமிழகத்துக்குத் திரும்பிய சந்தானம் கள்ளக்குறிச்சி கதர் மையத்தின் பொறுப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். கள்ளக்குறிச்சியில் தங்குவதற்கு இடமெதுவும் கிட்டாத காரணத்தால் பஞ்சுமூட்டைகள் அடுக்கிவைக்கிற இடத்திலேயே தங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்த மாநாட்டில் காந்தியடிகள் நாடு முழுதும் காங்கிரஸ் ஊழியர்கள் எல்லாவிதமான எதிர்ப்பாணைகளுக்கும் அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வரவேண்டுமென்றும் தெரிவித்தார்.
தமிழகத்துக்குத் திரும்பி வந்ததும் மாநாட்டின் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்லும் வகையில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மாவட்ட அதிகாரிகள் நகரின் எந்தப் பகுதியிலும் கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தார். தடையை மீறி கூட்டத்தில் உரையாற்றிய சந்தானம் அகிம்சையின் அவசியத்தைப் பற்றியும் போராட்டத்தின் அவசியத்தைப்பற்றியும் மாநாட்டு நிகழ்ச்சிகளைப்பற்றியும் எடுத்துரைத்தார். உரையை முடித்துக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கியதும் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை செய்த நீதிபதி அவருக்கு ஆறு மாத கடும்காவல் தண்டனை விதித்து திருச்சி சிறைக்கு அனுப்பினார். அது அவருக்கு முதல் சிறையனுபவம்.
தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை பெற்று வெளியே வந்த சமயத்தில் அடுத்த காங்கிரஸ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் கயா நகரில் நடைபெற்று வந்தன. ஆர்வம் காரணமாக சந்தானம் கயாவுக்குச் சென்றார். தேர்தலில் பங்கு பெறுவது பற்றிய விவாதமே அந்த மாநாட்டில் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது, இறுதியில் அத்தீர்மானம் தோல்வியடைந்தது. அதுவே காங்கிரஸ் இயக்கத்தில் பிளவு உருவாகி, சுயராஜ்ஜியக்கட்சி உதயமாக காரணமானது. அதற்கிடையில் ர்தோலியில் வரிகொடா இயக்கம் நடைபெற்று வந்தபோதே, செளரிசெளரா என்னும் இடத்தில் காவலர்களுக்கம் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் மோதல் உருவாகி, பல காவலர்கள் கொல்லப்பட்டனர். அந்நிகழ்ச்சியைக் கேட்டு அமைதியிழந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாகக் கைவிடுவதாக அன்றே அறிவித்தார். அந்தக் கலவரத்தையே காரணமாகக் காட்டி காந்தியடிகளைக் கைது செய்து ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது அரசு.
1923இல் நவம்பர் மாதத்தில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்றதும் இராஜாஜியைச் சந்திப்பதற்காக சென்னைக்கு வந்தார் சந்தானம். அவர்
சந்தானத்தை திருப்பூர் கதர் மையத்துக்குச் சென்று பணியாற்றும்படி அனுப்பிவைத்தார். பஞ்சின் வெவ்வேறு தரநிலைகள் பற்றியும் நூல்கள் பற்றியும் தெளிவுறத் தெரிந்துகொள்ள சந்தானத்துக்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. திருப்பூரில்
நூல்நூற்பவர்கள், நெசவாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரோடும் நல்லுறவோடு
உழைத்துவந்தார் சந்தானம். அவர் திருப்பூரில் இருந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ பதினைந்து லட்சம் கெஜம் கதர் உற்பத்தியாக அவர் காரணமாக இருந்தார்.
அது அந்தக் காலத்தில் மிகப்பெரிய சாதனை. திருப்பூரில் நெசவான கதரை பம்பாய்க்கு அனுப்பி நல்ல விலைக்கு விற்று கிளைக்கு இலாபம் கிடைக்குமாறு செய்தார் சந்தானம். ஆயினும் கதர் மையத்தின் தலைவராக இருந்த ஈ.வே.ரா.வுடன் உருவான கசப்பான அனுபவத்தின் விளைவாக அவரால் திருப்பூரில் நீடித்திருக்கமுடியவில்லை.
அங்கிருந்து வெளியேறிய சந்தானத்துக்கு திருச்செங்கோட்டில் இராஜாஜி நடத்திவந்த காந்தி
ஆசிரமம் அடைக்கலமானது. அங்கும்
நூல்நூற்றலும் கதர் நெசவும் நடைபெற்றன. தன் திருப்பூர் அனுபவத்தின் விளைவாக நாள்தோறும் கதர் உற்பத்தியை அவரால் மிக எளிதாகப் பெருக்கமுடிந்தது. சொந்த ஊரிலிருந்து தன் மனைவியையும் குழந்தைகளையும் திருச்செங்கோட்டுக்கே அழைத்துவந்து விட்டார். ஆசிரமத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிலேயெ அனைவரும் தங்கிக்கொண்டனர். ஆசிரமத்தில் உள்ள பள்ளியிலேயே அவருடைய பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். ஆசிரமத்தில் தனியாக வசித்தபோது அவருக்கு மாதசம்பளமாக முப்பது ரூபாய் கிடைத்தது. குடும்பத்தை அழைத்துவந்த பிறகு அது எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆசிரமத்தில் தங்கியிருந்த ஐந்தாண்டு காலமும் தமிழகத்திலும் வடமாநிலங்களிலும் இருந்த எல்லா கதர் மையங்களோடும் அவர் நல்லுறவைப் பேணி வந்தார்.
1930இல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தை அறிவித்தார். பயிற்சி பெற்ற சத்தியாகிரகிகள் மட்டுமே அவர் தேர்ந்தெடுத்த குழுவில் இருந்தனர். சபர்மதி ஆசிரமத்திலிருந்து எழுபத்தொன்பது தொண்டர்களுடன் இருநூற்று நாற்பது மைல் தொலைவிலிருந்த தண்டி கடற்கரையை நோக்கி 12.03.1930 அன்று அவர் நடக்கத் தொடங்கினார். தொடர்ச்சியாக இருபத்துநான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு அந்த அணி தண்டியை அடைந்தது. அந்த யாத்திரையைப் பார்ப்பதற்காக திருச்செங்கோட்டிலிருந்து
புறப்பட்ட இராஜாஜியோடு சந்தானமும் கலந்துகொண்டார். வழியெங்கும் அந்தக் குழுவுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர்கள் உற்சாகம் கொண்டனர்.
அந்த உற்சாகத்தின் விளைவாக தண்டி யாத்திரையைப் போலவே தமிழகத்திலும் ஒரு யாத்திரையை நடத்தவேண்டும் என இராஜாஜியின் மனம் திட்டமிட்டது. உடனே
ஊருக்குத் திரும்பி நண்பர்களுடன் கலந்தாலோசித்து 14.04.1930 திருச்சியிலிருந்து வேதாரண்யம் கடற்கரையை நோக்கிச் செல்லும் ஒரு யாத்திரையைத் தொடங்கினார் அவர். மதுரையிலிருந்து
இருபத்துநான்கு பேரும் தஞ்சாவூரிலிருந்து எழுவரும் திருச்சியிலிருந்து ஐவரும் கோவையிலிருந்து நால்வரும் இராமநாதபுரத்திலிருந்து பன்னிரண்டு பேரும் சென்னையிலிருந்து பதினொன்று பேரும் நெல்லையிலிருந்து பதினைந்து பேரும் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒருவரும் பம்பாயைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்பது பேரும் வேலூரிலிருந்து ஒருவரும் திருச்செங்கோடு ஆசிரமத்திலிருந்து ஒன்பது பேரும் அந்த யாத்திரையில் பங்கெடுத்தார்கள். சந்தானமும் அந்தக் குழுவில் ஒருவர். அந்த யாத்திரையை தன் நிர்வாகத்திறமையால் வெற்றிகரமாக சாத்தியமாக்கியவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை. இந்த யாத்திரையில் வழிநடைப்பாட்டாக பாடுவதற்கு ஏற்றவகையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு பாடலை இயற்றியளித்திருந்தார்.
23.04.1930
அன்று சத்தியாகிரகக்குழு வேதாரண்யத்தை அடைந்தது. மறுநாள் முதல், நகரத்தில் பல்வேறு இடங்களிலும் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் கூட்டங்களை நடத்தி உப்பு சத்தியாகிரகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி அவர்கள் மக்களிடையில் எடுத்துரைத்தனர். இறுதியில் 30.04.1930 அன்று அதிகாலையில் மூன்று தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற இராஜாஜி அகஸ்தியம்பள்ளி கடற்கரையில் தடையை மீறி உப்பெடுத்தார். அவரைப் பின்தொடர்ந்துவந்து காத்திருந்த காவலர்கள் அவரை உடனடியாக கைது செய்தனர். இராஜாஜியைத் தொடர்ந்து தொண்டர்களை வழிநடத்தும் பொறுப்பு சந்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொண்டர்களுடன் கடற்கரையில் ஊர்வலமாகச் சென்ற சந்தானம், அங்கிருந்த உப்பளத்திலிருந்து உப்பை எடுத்துக்கொண்டு வந்து தங்குமிடத்தில் குவித்துவிட்டு, அக்குவியலைச் சுற்றி அமர்ந்துகொண்டு முழக்கமிட்டனர். காவலர்கள் ஒவ்வொருவரையும் இழுத்துச் சென்று கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பத்து நிமிட நேரம் விசாரணை என்கிற பெயரில் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, உடனடியாக ஒன்பது மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தொண்டர்கள் அனைவரும் ஒரே சிறையில் உள்ளனர் என நினைத்து ஆறுதலடையும் சமயத்தில் அவர்களிடமிருந்து சந்தானத்தை மட்டும் பிரித்து கண்ணனூர் சிறைக்கு அனுப்பிவிட்டனர்.
காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைகளில் அடைபட்டிருக்கிற தொண்டர்கள் அனைவரும் ஆறு மாத முடிவிலேயே விடுதலை செய்யப்பட்டனர். கண்ணனூர்
சிறையிலிருந்து வெளியே வந்த சந்தானம் உடனடியாக திருச்செங்கோடு ஆசிரமத்துக்குச் சென்று குடும்பத்தைக் காணவேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். அவர்
ஆசிரமத்தை அடைந்த நேரத்தில் திருப்பூரிலிருந்து வந்த பெண் சத்தியாகிரகிகள் குழுவொன்று அவருக்காக காத்திருந்தது. அவர்கள் திருப்பூரில் தொடங்கவிருந்த சத்தியாகிரகத்தைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மறைந்த வ.வெ.சு.ஐயரின் துணைவியார். மற்றொருவர் கோவை தொழிலதிபர் ஒருவருடைய மனைவி. தொண்டர்கள் கோரிக்கையை தட்டமுடியாமல் அவர்களோடு புறப்பட்டு திருப்பூருக்குச் சென்றார் சந்தானம். எதிர்பாராத விதமாக காவல்துறை அவரை திருப்பூரில் கைது செய்து ஆறுமாத தண்டனை விதித்து சேலம் சிறைச்சாலையில் அடைத்தது.
சந்தானம் சிறையிலிருந்த சமயத்தில் ஆசிரமத்தில் தங்கியிருந்த அவர் மனைவி அங்கிருந்த ஒரு பெரிய தரைக்கிணற்றில் கால் தடுக்கி விழுந்து இறந்துவிட்டதாக செய்தி வந்தது. மனைவியின் மறைவு அவரை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியது. சொந்தத் துயரத்தைவிட, வரித்துக்கொண்ட கொள்கையையே முக்கியமெனக் கருதிய அவர் பரோலில் செல்ல மறுத்துவிட்டார். ஆசிரமத்திலிருந்த அவருடைய நண்பர்கள் குழந்தைகளை தம் பொறுப்பில் சிறிதுகாலம் வைத்திருந்துவிட்டு, பிறகு சந்தானத்தின் மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிள்ளைகளை அவரிடம் ஒப்படைத்தனர்.
தண்டனைக்காலம் முடிந்ததும் திருச்சிக்குச் சென்று குழந்தைகளைச் சந்தித்தார் சந்தானம். அங்கு தங்கியிருந்தபடியே அவர் அரசியல் வேலைகளைக் கவனித்துவந்தார். சுதந்திரப் போராட்டச் செய்திகளை சின்னச்சின்ன துண்டுப்பிரசுரங்களாக எழுதி,
கையால் இயக்கி நகலெடுக்கும் எந்திரத்தின் உதவியால் எண்ணற்ற பிரதிகளை உருவாக்கி பொதுமக்களிடயில் விநியோகித்து வந்தார். அந்தச் செய்தி எப்படியோ காவல்துறைக்கு எட்டிவிட்டது. அவரைத்
தொடர்ந்து கண்காணித்துவந்த காவலர்கள் ஒருநாள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆறு மாத தண்டனை விதித்து கடலூர் சிறைக்கு அனுப்பிவைத்தார். கடலூர் சிறையில் இருக்கும்போது, அவருடைய
சகோதரர் சென்னையில் வீட்டுக்கு அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து மறைந்துவிட்ட செய்தி அவரைத் தேடி வந்து ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அவருடைய மனைவியையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.. தண்டனைக்காலம் முடிந்து விடுதலையானதும் தன் சகோதரனின் மனைவியைச் சந்தித்து ஆறுதல் சொல்லி குடும்பத்தின் எல்லாப் பொறுப்புகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டு, மாமனார் வீட்டிலிருந்த தன் பிள்ளைகளையும் சென்னைக்கு அழைத்துவந்து அனைவரும் ஒரே இடத்தில் தங்கும்படி செய்து, பிள்ளைகள்
கல்வி கற்க வழிசெய்தார்.
அத்தருணத்தில் உடனடியாக அவருக்கு ஊதியம் கிட்டும் ஒரு வேலை தேவையாக
இருந்தது. குழம்பிய மனத்துடன் என்ன செய்வதெனப் புரியாமல் வழக்கறிஞராக இருந்த பழைய நண்பரான பாஷ்யம் என்பவரைச் சந்திக்கச் சென்றார். தற்செயலாக அவருடைய வீட்டில் இராஜாஜியையும் செய்தித்தாள் துறையில் பேர்போன சதானந்தன் என்பவரையும் சந்திக்க நேர்ந்தது. வரதராஜுலு நாயுடுவால் தொடங்கப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழை அப்போதுதான் வாங்கியிருந்தார் சதானந்தன். அந்த அலுவலகத்தில் ஏற்கனவே செய்திப்பிரிவில் வேலை செய்துவந்த ஊழியர்கள் அனைவரையும் விலக்கிவிட்டு, புதியவர்களைச் சேர்த்திருந்தார். ஆனால் அவரால் இதழுக்கு ஒரு நல்ல ஆசிரியரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேர்மையாக உழைக்கக்கூடிய யாரேனும் ஒருவரைப் பரிந்துரைக்குமாறு இராஜாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். உடனடியாக இராஜாஜி சந்தானத்தின் பக்கம்
கையைக் காட்டி “இவரையே ஆசிரியராக வைத்துக்கொள்ளுங்கள். இவர் அந்த வேலைக்குப் பொருத்தமானவர். இவரை நான் நன்றாக அறிவேன்” என்று பரிந்துரைத்தார். இராஜாஜியின்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு சந்தானத்தையே ஆசிரியராக நியமித்துவிட்டார் சதானந்தன்.
ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில மாதங்களிலேயே தெளிவான வாதங்களை முன்வைக்கும் எளிய கட்டுரைகளாலும் உண்மைத்தன்மை மிக்க செய்திகளாலும் மெல்ல மெல்ல பத்திரிகையை அனைவரும் விரும்பிப் படிக்கும் பத்திரிகையாக மாற்றினார் சந்தானம். அவருடைய உழைப்பின் விளைவாக விற்பனை பெருகியது. தொடங்கிய
காலம் முதல் மாலைப்பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்த முறையை மாற்றி முதன்முறையாக காலைப்பத்திரிகையாக கொண்டுவந்து
வெற்றி பெற்றார். பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றியபடி காங்கிரஸ் வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். சென்னை மாகாண காங்கிரஸ் அமைப்பிலும் தேசிய காங்கிரஸ் அமைப்பிலும் அவர் உறுப்பினராக நீடித்தார். முக்கியமான எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று தன் கருத்துகளை தயங்காமல் முன்வைத்தார்.
விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யும் ஒரு கோரிக்கையை அவர் காங்கிரஸ் விவாத அரங்குகளில் முதன்முறையாக ஒரு தீர்மானமாகக் கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஏன் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதற்கான காரணங்களை தன் பத்திரிகைக் கட்டுரைகளிலும் எழுதினார் சந்தானம். இராஜாஜியின் தலைமையில் மாகாண அமைச்சரவை அமைந்தபோது, இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
1939
வரைக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டார் சந்தானம். அவருடைய தலையங்கக்கட்டுரைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டன. எதிர்பாராத விதமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பொறுப்பிலிருந்து சதானந்தன் விலகிக்கொள்ள, கோயங்கா புதிய பொறுப்பாளரானார். அப்போது சந்தானமும் வேலையிலிருந்து விலகி வெளியே வந்துவிட்டார்.
ஜெர்மனியில் இட்லர் பதவிக்கு வந்ததும் முசோலினியுடன் கூட்டு வைத்துக்கொண்டதும் இரண்டாவது உலகப்போர் உறுதியாக நிகழக்கூடும் என்று உலகநாடுகள்
அனைத்தும் கருதின. லண்டனில் இருந்த பிரிட்டன் அரசும் இந்தியாவின் வைசிராயாக இருந்த லின்லித்கோவும் தன்னிச்சையாக உலகப்போரில் இந்தியா பங்கேற்கும் என அறிவித்தனர். இது காங்கிரஸ் தலைவர்களை திகைப்பில் ஆழ்த்தியது. எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி அறிவிக்கப்பட்ட அந்த முடிவை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை. மாகாண ஆட்சிப்பொறுப்பில் உள்ள எல்லா காங்கிரஸ் அமைச்சரவையும் இந்திய சட்டசபையில் உள்ள உறுப்பினர்களும் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறவேண்டும் என அறிவித்தது.
இம்முடிவில் இராஜாஜிக்கு உடன்பாடு இல்லை என்றபோதும் தலைமையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பதவியை உதறிவிட்டு வெளியேறினார். அப்போது தில்லியில் சட்டசபை உறுப்பினராக இருந்த சந்தானமும் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். அதைத்
தொடர்ந்து காந்தியடிகள் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கினார். நாட்டுமக்கள் அனைவரும் அந்த இயக்கத்தில் பங்கேற்று சிறை செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதில் எப்பொருளும் இல்லை எனக் கருதிய இராஜாஜி காங்கிரஸிலிருந்தே விலகினார். அதைத் தொடர்ந்து சந்தானமும் காங்கிரஸிலிருந்து விலகினார்.
சென்னையிலிருந்து கிராமத்துக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என சந்தானம் திட்டமிட்டிருந்த சமயத்தில் காந்தியடிகளின் இளைய மகனான தேவதாஸ் காந்தியிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. அப்போது அவர் தில்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக வேலை செய்துவந்தார். அது 1943ஆம் ஆண்டு. கேரளத்திலும், ஒரிசாவிலும் வங்காளத்திலும் கடுமையான பஞ்சம் நிலவிய காலம். அந்த இடங்களுக்கு நேரிடையாகச் சென்று பார்த்து உண்மை நிலவரங்களைப்பற்றிய தகவல்களோடு கட்டுரை எழுதித் தருமாறு சந்தானத்திடம் கேட்டுக்கொண்டார். காலத்தின் கட்டளையாக அதைக் கருதிய சந்தானம் உடனடியாக அந்த இடங்களுக்குச் சென்று தகவல்களைத்
திரட்டி கட்டுரைகளை எழுதிக் கொடுத்தார். அதன் விளைவாக அவருக்கு இணை ஆசிரியர் பதவியை வழங்கிய அந்தப் பத்திரிகை அவரை தில்லிக்கு அழைத்துக்கொண்டது.
1945இல் அம்பேத்கர் ’காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?’ என்றொரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை காங்கிரஸ் மீது நிகழ்த்தப்பட்ட நேரடியான தாக்குதலாகவே அனைவரும் கருதினர். அரிஜன சேவா சங்கத்தின் பொறுப்பாளராக இருந்த தக்கர்பாபா அப்புத்தகத்தை முன்வைத்து நடுநிலையான கருத்துரையை எழுதும்படி சந்தானத்திடம் கேட்டுக்கொண்டார். காங்கிரஸுக்கும் அரிஜன சேவா சங்கத்துக்கும் அந்தக் கருத்துரை உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். அதைத்
தொடர்ந்து அந்தப் புத்தகத்தைப் படித்துமுடித்த சந்தானம், அப்புத்தகம் முன்வைத்திருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான வகையில் விளக்கக்கட்டுரைகளை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலேயே தொடர்ந்து எழுதினார். பிறகு அக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அம்பேத்கரின் தாக்குதல் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு இன்னும் சில கூடுதல் கட்டுரைகளை இணைத்து தீண்டாமைக்கு எதிரான போர் என்னும் தலைப்பில் இரண்டாவது பதிப்பாக வெளியிட்டார்.
1946இல் நிலைமை சீரடைந்ததும் சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழுவால் அவர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தருணத்தில் சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற வரைவுக்குழுவிலும் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இதற்காக கே.எம்.முன்ஷியோடும் வி.கே.கிருஷ்ணமேனனோடும் இணைந்து அவர் பணியாற்றவேண்டியிருந்தது. பத்திரிகையின் இணையாசிரியராகப் பணிபுரிந்தபடியே நேரமொதுக்கி இவ்வேலைகளைச் செய்தார் சந்தானம்.
தொடக்கக் காலத்தில் குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றி தொடர்ச்சியாக பல விவாதங்கள் நிகழ்ந்தன. உலக நாடுகள் பின்பற்றும்
எல்லாவிதமான முறைமைகளைப் பற்றி ஆலோசிக்கப்பட்டன.
அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென பலரும் கருதினர். அப்படிப்பட்ட தேர்தல் முறையால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அமெரிக்க குடியரசுத்தலைவருக்கு இணையான அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ள வழிவகுக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கிட்டத்தட்ட ஆளும் கட்சிக்குப் பிடித்தமானவரையே குடியரசுத்தலைவராக முன்வைக்க வழிவகுக்கும் என்றும் கருத்துரைத்த சந்தானம் நாட்டிலுள்ள எல்லா மாநில, நாடாளுமன்ற, யூனியன் பிரதேச உறுப்பினர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் வழிமுறையே சிறப்பானதாக இருக்கும் என்ற எண்ணத்தை முன்வைத்தார். அதுவே சிறப்பான ஆலோசனை என வரைவுக்குழு ஏற்றுக்கொண்டது. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு
வந்த பிறகும் கூட, அதன் அடிப்படை நோக்கங்களை சிதைக்கவோ திசைதிருப்பவோ முயற்சிகள் நடைபெற்றபோதெல்லாம்,
அவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பவராக இருந்தார் சந்தானம்.
சுதந்திரத்துக்குப் பிறகான அமைச்சரவையில் அவர் ரயில்வே துறைக்கும் போக்குவரத்துத்துறைக்குமான
அமைச்சராகவும் 1952க்குப் பிறகு விந்தியப்பிரதேச (மத்தியப்பிரதேசம் உருவாவதற்கு முன்பிருந்த பகுதி) மாநிலத்தின் கவர்னராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். அப்போது மாநிலமெங்கும் கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கி, ஆட்சி நிர்வாகத்தின் சங்கிலிக்கண்ணிகளாக அவற்றை வடிவமைத்தார். எல்லா வளர்ச்சித்திட்டங்களும் அவற்றின் வழியாக நிறைவேறும்படி செய்து, பஞ்சாயத்துகளின் பொறுப்புகளையும் கடமைகளையும் சுட்டிக்காட்டினார்.
தில்லி மேலவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட சந்தானம் நல்ல முறையில் செயல்பட்டார். வங்காளம், அசாம் மாநில எல்லையில் நடைபெற்ற கலவரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்ட தருணத்தில் நாடே அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. அப்படிப்பட
நேரத்தில் நடுவண் அரசால் அனுப்பப்பட்ட உண்மை அறியும் குழுவில் சந்தானமும் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்தார். நடுநிலைமையோடு அவர் அளித்த அறிக்கை அனைவருடைய மனசாட்சியையும் தொட, இரு மாநிலங்களும் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பின.
நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த
சமயத்தில் இந்தியாவில் ஊழலை ஒழிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு
குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின்
தலைமைப்பொறுப்பு சந்தானத்துக்கு அளிக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு அவர்
அளித்த அறிக்கையின்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஊழல் கண்காணிப்பு ஆணையம்.
எழுபதுகளில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய நடத்தை
விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கும் சந்தானத்தின் பரிந்துரைகளே
காரணமாக இருந்தன.
எல்லாப்
பொறுப்புகளிலிருந்தும் விலகி சென்னையில் ஓய்வு பெற்று வரும் காலத்தில் 1968இல் தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின்
வேண்டுகோளுக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த மாதவன் அவரைச் சந்தித்து ஒரு
வேண்டுகோளை முன்வைத்தார். மாநிலமெங்கும் ஆய்வு செய்து கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவது
தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்படவிருக்கும் குழுவின் தலைமைப்பொறுப்பை
ஏற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். கிராம வளர்ச்சிக்கான திட்டம் என்பதால் அதை
மறுக்காமல் ஏற்றுக்கொண்ட சந்தானம் தன் குழுவுடன் தமிழகமெங்கும் பயணம் செய்து உண்மை
நிலவரத்தை அறிந்து,
அதன் அடிப்படையில்
பரிந்துரைகளை எழுதி அரசுக்கு அளித்தார்.
அவருடைய பல பரிந்துரைகள் மிகமிக முக்கியமானவை. கிராம கூட்டுறவு அமைப்புகள் அடிப்படையில்
முழுக்க முழுக்க தன் சொந்தக்கால்களில் நின்று நிலைக்கவேண்டிய அமைப்பாக இருக்கவேண்டும். நிதி கையாள்வது தொடர்பான கண்காணிப்பையும்
சீரான இடைவெளிகளில் நிகழ்த்தும் ஆய்வுகளையும் தவிர அரசு தலையீடு இருக்கக்கூடாது. கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் ஈடுபட்டிருக்கும்
ஒருவர் கூட்டுறவு அமைப்பில் இடம்பெறக்கூடாது. ஒருவர் இருமுறைகளுக்கு மேல் ஒரு பதவியில்
நீடிக்கக்கூடாது.
முக்கியமாக எந்தக்
கட்சியின் தலையீடும் இன்றி கிராம கூட்டுறவு அமைப்புகள் சுதந்திரமாக இயங்கும் தன்மையுடன்
இருக்கவேண்டும்.
எதிர்பாராத விதமாக, சந்தானம் தன் பரிந்துரைகளை அரசிடம் வழங்கும்
சமயத்தில், முதல்வர் அண்ணாதுரை மறைந்துவிட்டார். அமைச்சர் மாதவனும் வேறு துறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். அதனால் சந்தானம் வழங்கிய பரிந்துரைகள் போதிய
அளவு கவனிக்கப்படாமலேயே போய்விட்டன.
காந்தியக் கொள்கைகளை ஒட்டி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட
சத்தியாகிரகி, பத்திரிகையாளர், அரசமைப்புச்சட்ட நுட்பங்களை அறிந்தவர், மொழிபெயர்ப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,
மத்திய அமைச்சர், மாநில ஆளுநர் என தான்
தொட்ட துறைகளையெல்லாம் சிறக்கச் செய்தவர் சந்தானம். அவர் ஒரு பன்முக ஆளுமை. காந்தியக்கொள்கைகள்,
அரசமைப்புச்சட்டம், பொருளாதாரம் என பல துறைகள் சார்ந்து அவர் இருபதுக்கும்
மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதியிருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ்
பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்படவே இல்லை. சக்தி காரியாலயம்
வெளியிட்ட செல்வம் பொருளியல் துறையைப்பற்றிய மிகச்சிறந்த அறிமுக நூலாகும்.
இந்திய ஜனநாயக முறையை அமெரிக்காவிலும்
பிரிட்டனிலும் நிலவும் ஜனநாயக முறைகளோடு ஒப்பிட்டு சந்தானம் எழுதிய மக்களாட்சி
என்ற நூல் மிகச்சிறந்த ஆவணம். சத்திய சமாஜம் என்னும் தலைப்பில்
காந்தியைப்பற்றி ஒரு நல்ல அறிமுகப்புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். காளிதாசரின்
சாகுந்தலம் நாடகத்தையும் பவபூதியின் உத்தர இராம சரித்திரத்தையும்
சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
சுயராஜ்ஜியம்
என்பதை ஒவ்வொரு கிராமத்தையும் தன்னைத்தானே ஆண்டு நிறைவுகாணும் சுதந்திர அமைப்பாகவும்
அரசாங்கம் என்பதை கிராமங்களைக் கண்காணிக்கும்
அமைப்பாகவும் காந்தியடிகளால் முன்வைக்கப்பட்ட
கருத்தாக்கத்துக்கு சந்தானமும் முக்கியத்துவம் அளித்தார். தனக்கு வழங்கப்பட்ட எல்லாவிதமான பொறுப்பு
நிலைகளிலும் பணியாற்றும் காலத்தில் அந்தக் கருத்தாக்கத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாக
இருந்தார். கல்வி, தரமான மருத்துவ மனைகள், வணிகத்துக்குத் தேவையான சாலை இணைப்பு, விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள்
என அனைத்தையும் பொதுமக்களுக்கு
அளிப்பதை ஒவ்வொரு கிராம
பஞ்சாயத்தும் தம் கடமையென நினைத்து செயலாற்ற வேண்டுமென்றும் அரசு உருவாக்கும் சட்டங்கள்
அதற்கு உறுதுணை செய்யவேண்டுமென்றும் அவர் எதிர்பார்த்தார். அவை ஒவ்வொன்றும் அவருடைய காலத்திலேயே நிறைவேறின. ஓய்வுக்காலத்தில் Looking Back : Memoirs of
K.Santhanam என்ற தலைப்பில்
அவர் எழுதிய தன்வரலாற்று நூல் மிகமுக்கியமான ஓர் ஆவணம்.
(கிராம ராஜ்ஜியம் – டிசம்பர் 2021 இதழில் பிரசுரமான கட்டுரை
)