Home

Sunday 30 January 2022

குழந்தை - சிறுகதை

      ”இந்த கொழந்தைய வச்சிகினு யாராச்சும் ஆம்பளையோ பொம்பளையோ இங்க கடைப்பக்கம் வந்தாங்களா? கொஞ்சம் பாத்து சொல்றீங்களா?” என்று கேட்டபடி கைபேசியைக் காட்டினான் தயாளன். அந்தப் படத்தை  ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு தலையசைத்தபடி உதட்டைப் பிதுக்கினார் கடைக்காரர்.

     பொம்பளங்ககிட்ட கேட்டுப் பாருங்க சார். கொழந்த மூஞ்சிலாம் அவுங்களுக்குத்தான் நல்லா ஞாபகம் இருக்கும்

சுப்பராய பிள்ளை தோட்டத்தில் தொடங்கி  ஜப்பர்பாய்தோட்டம், அய்யனார் நகர், அருந்ததிபுரம் வரைக்கும் படத்தைக் காட்டி விசாரித்துவிட்டான் தயாளன். அதுவரை ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை.

கடையிலிருந்து கிழக்கே பிரிந்துசென்ற பாதையில் இருபுறங்களிலும் வீடுகளைப் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான். பல வீடுகள் சாத்தியிருந்தன. ஒரு வீட்டு வாசலில் ஆறேழு பெண்கள் சேர்ந்து சத்தமாகப் பேசியபடி கம்பு புடைத்துக்கொண்டிருந்தனர். கம்பும் பதர்களும் அம்பாரமாக இரு பக்கங்களிலும் குவிந்திருந்தன. அவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டுவைப்போம் என்ற எண்ணத்தில் அவர்கள் அமர்ந்திருந்த வீட்டை நோக்கி நடந்தான்.

வாசல்ல புதுசா மாடு கட்டியிருக்குதே, ஒன் புருஷன்காரன் வாங்கியாந்தானா?” என்று கூட்டத்தில் ஒருத்தி  கேட்டாள். அவள் பதில் சொல்வதற்குள் இன்னொருத்திபசுவ மட்டும்தான் வாங்கியாந்தாரா? கன்னுக்குட்டி வரலையா?” என்றாள்.

நம்ம ஊட்டுக்கு வந்தப்பறம் போடற கன்னுக்குட்டிதான் ராசியானதாம். இன்னொரு ஊட்டுலேருந்து வர கன்னுக்குட்டிக்கு ராசியிருக்காதாம்

எந்த ஊடா இருந்தா என்னடி? ரெண்டுமே மாடு போடற கன்னுதானடி

அத ஏன் எங்கிட்ட வந்து கேக்கற? போய் ஒன் மாமங்காரங்கிட்டயே கேளு

தயாளன் நெருங்கிவந்து நிற்பதைப் பார்த்ததும் அவர்களுடைய உரையாடல் சட்டென நின்றுவிட்டது. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாக தன் கைபேசியிலிருந்த படத்தைக் காட்டினான் தயாளன்.

இந்த கொழந்தைய வச்சிகினு யாராச்சும் ஆம்பளையோ பொம்பளையோ நடமாடறத பாத்திருக்கீங்களா?

 

     என்ன விஷயம் சார்?” என்றபடி நெருங்கிவந்து கைபேசியில் இருந்த படத்தைப் பார்த்தாள் ஒருத்தி.

     யாரோ கோயில் வாசல்ல கொண்டாந்து உட்டுட்டு போயிட்டாங்க. ஆள் யாருன்னு தெரியலை. அதான் தேடறம்   

     த்ச்த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டினார்கள். கைபேசி ஒவொருவருடைய கைக்கும் மாறிமாறிச் சென்றது.

     எந்த ஊரு கோயில் சார்?”

இங்கதான். சாரம் சுப்பிரமணியர் கோயில்ல

எத்தன நாளாச்சி?”

ஆறு நாளாயிடுச்சி. சூர சம்ஹாரத்துக்கு மொதநாளு திருக்கல்யாணத்தன்னைக்கு கெடச்சிது. அன்னைக்கி கோயில்ல எக்கச்சக்கமான கூட்டம். அந்த நேரம் பார்த்து யாரோ கொண்டாந்து  விட்டுட்டு போயிட்டாங்க.

அவ்ளோ நாள் ஆயிடிச்சா? இனிமே தேடி கண்டுபுடிக்கறது ரொம்ப கஷ்டம் சார். ஏதோ ஒரு வேகத்துல செஞ்சவங்களா இருந்தாங்கன்னா, ஒரு நாளோ ரெண்டு நாளோ கழிச்சி அவுங்களே மனசு கேக்காம கோயில் வாசலுக்கு தேடி வந்திருப்பாங்க. வேணும்ன்னே செஞ்ச ஆளாயிருந்தா இந்நேரத்துக்கு இடம் மாறி போயிருப்பாங்க

     மறுபடியும் நாக்கு சப்புக்கொட்டினாள் அவள். “சினிமாவுலதான் இப்டிலாம் காட்டறாங்கன்னு பாத்தா வாழ்க்கையிலயும் இப்டி நடக்குது போல. எல்லாம் கலிகாலம்என்று பெருமூச்சு விட்டபடி ஒருத்தி சொன்னாள். “இந்த பிஞ்சு மூஞ்சிய பாத்தே பசியாத்திக்கலாம் போல இருக்குது. எந்த மூதேவி இத கொண்டாந்து கோயில் வாசல்ல போட்டுட்டு போனாளோ தெரியல. வச்சி வாழத் தெரியாத மடச்சி

கைபேசியில் இருந்த குழந்தையின் படத்தைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். ” தெரியலயே சார் . ஊருல உலகத்துல புள்ள இல்லயேன்னு ஆயிரம் பேரு கோயில்கோயிலா போறாங்க. வெரதம் இருந்து பரிகாரம் செய்றாங்க. அவுங்க யாருக்காவது இந்த கொழந்த பொறந்திருக்க கூடாதா?” என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கினாள்.  

இங்க குடு

அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் கைபேசியை வாங்கி, அதில் இருந்த படத்தைப் பார்த்தாள். ”கொழந்த அழகா இருக்குது சார். அம்மாகாரிய கண்டுபுடிக்க முடியலைன்னா எங்கிட்ட கொண்டாந்து உடு சார். எனக்கு நாலு ஆம்பள புள்ளைங்க. பொம்பள புள்ளயே இல்ல. எனக்கு பொறந்த புள்ளயா நெனச்சி இதயும் நானே வளத்துடுவேன்என்று சிரித்தாள். அவளுடைய பல்வரிசை பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

இன்னொருத்தி நெருங்கி வந்து அந்தப் படத்தையே சில கணங்கள் கூர்ந்து பார்த்தாள். பிறகு தயக்கமான குரலில் எங்கயோ பாத்தமாதிரிதான் இருக்குது. ஆனா எங்க பாத்தன்னுதான் ஞாபகத்துக்கு வரமாட்டுதுஎன்றாள்.

ஏய் தடிமாடு. ஒன்னு தெரியும்னு சொல்லு. இல்ல தெரியாதுன்னு சொல்லு. இந்த குட்டைய கொழப்பற வேலைலாம் வேணாம்என்று கண்டிப்பதுபோல சொன்னாள் சுவரோடு சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள். அவளும் கைபேசியை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிதெரியலை சார்என்றாள்.

ஒவ்வொருவரும் மனத்தில் தோன்றியதைச் சொன்னார்கள். கடைசியில் கைபேசி அவனிடமே திரும்பி வந்தது. திரையில் தெரிந்த குழந்தையின் முகத்தை அவனும் ஒரு முறை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் அணைத்து பைக்குள் வைத்துக்கொண்டான்.

வெளியூருல விசாரிச்சி பாரு சார். இங்கத்திய ஆளா இருக்க வழியில்ல. தெரிஞ்ச எடமாச்சேன்னு அவுங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும். வெளியூரு ஆளாதான் இருக்கணும். அவுங்கதான் தெகிரியமா சும்மா கோயிலுக்கு வரமாதிரி வந்து உட்டுட்டு போயிருக்கலாம்

தயாளன் தலையசைத்தபடி அதைக் கேட்டுக்கொண்டான். இந்தத் தேடல் வேட்டையில் இறங்கிய முதல் நாளிலேயே கோமதி சொன்ன சொற்கள் நினைவில் மோதின. “உங்களுக்கு எதுக்கு இந்த வேலையத்த வேலை?” என்று சலித்துக்கொண்டாள்.

கடந்த ஆறு நாட்களாக அவன் வீட்டில் தங்கும் நேரம் குறைந்துவிட்டது. குழந்தைகளோடு செலவிடும் நேரமும் குறைந்துவிட்டது. கைபேசியை எடுத்துக்கொண்டு சுப்பிரமணியர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் சுற்றி முதலில் விசாரணையைத் தொடங்கினான். பிறகு கோயிலிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருக்கும் பிள்ளைத்தோட்டம், கல்லறைப்பேட்டை, கொசப்பாளையம், காராமணிகுப்பம், புதுப்பாளையம் எல்லா இடங்களிலும் அலைந்தான். உருப்படியாக ஒரு துப்பும் கிடைக்கவில்லை என்றபோதும் நம்பிக்கை இழக்காமல் தட்டாஞ்சாவடி, கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், கோரிமேடு வரைக்கும் சென்று தேடல் வேட்டையை நடத்தினான்.

அவன் மனம் அக்குழந்தையின் தாய்க்கு ஒரு உருவத்தைக் கொடுத்துவிட்டது. அவள் ஏமாந்திருந்த ஒரு நேரத்தில் யாரோ ஒருவர் குழந்தையின் கழுத்தில் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவளிடமிருந்து திருடிச் சென்றுவிட்டார்கள். அவசரமாக நகையைக் கழற்றி எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் கொண்டுவந்து கிடத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். குழந்தை இங்கே இருப்பது தெரியாமல் அம்மாக்காரி வேறு எங்கோ அலைகிகிறாள். தேடல் வேட்டையில் அவளைக் கண்டுபிடித்தால் குழந்தையை அவளிடம் சேர்த்துவிடமுடியும். அப்படித்தான் அவன் நினைத்தான்.

தாய்வழி உறவில் அவனுக்கு ஒரு பெரியம்மா இருந்தாள். அவளுடைய பெற்றோருக்கு அவள் நேரடிக்குழந்தை இல்லை. கோவிலில் கண்டெடுத்து வளர்த்த குழந்தை. கண்ணுக்கு மறைவாக அவளைப்பற்றி சொந்தங்களில் வட்டத்தில் அருவருப்பாக பரிமாறிக்கொண்ட வார்த்தைகள் கத்தியைவிட கூர்மையானவை. அவை அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டன.

முயற்சிக்குப் பிறகு கிடைக்கும் தோல்விகளைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் முயற்சி மேற்கொள்ளாமலேயே கைவிட அவனுக்கு மனம் வரவில்லை.

காலையில் புறப்படும் சமயத்தில் கோமதிஎப்பவோ ஒரு நாளுதான் ஸ்டெஷன்ல உங்களுக்கு ஆஃப் குடுக்கறாங்க. கொஞ்ச நேரம் படுத்து ஏந்து ரெஸ்ட் எடுக்கக்கூடாதா? இன்னைக்கும்  வெளிய சுத்த கெளம்பணுமா?” என்று கேட்டாள். அவன் ஓய்வில்லாமல் அலையும் நேரங்களில் வழக்கமாக அவள் அப்படித்தான் சொல்வாள். காலையில் அந்தச் சொற்களுக்கு கூடுதலான அழுத்தம் இருந்ததைப்போலத் தோன்றியது.

இந்த கொழந்த மூஞ்சியில இத பெத்தவ மூஞ்சியும் சேர்ந்து தெரியுது கோமதி. அத நெனைக்கும்போதே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. படுத்தா கூட தூக்கம் வரமாட்டுது

கோமதி எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டபடி அவனையே பார்த்திருந்தாள். “என் கண்ணு முன்னாலயே நடந்த ஒரு விஷயத்தை தடுக்கமுடியாம கோட்டை உட்டுட்டேனேன்னு நெனச்சாவே, என் மேலயே எனக்கு எரிச்சலா இருக்குது.  என்னால நிம்மதியா ஒரு வாய் சோறு கூட சாப்ட முடியலை, தெரியுமா?என்றான்.

நேத்து மீன்கடைல உங்க ஸ்டேஷன் ரைட்டர பாத்தேன். அவரும் மீன் வாங்கத்தான் வந்திருந்தாரு. புள்ளைங்க படிப்பு பத்திலாம் விசாரிச்சாரு. கெளம்பற நேரத்துல எல்லா விஷயத்தயும் கதகதயா சொன்னாரு. அந்த கொழந்தைய பாதுகாப்பா ஹோம்ல விட்டுட்ட பிறகு வீணா எதுக்கும்மா கவலைப்படணும். இருக்கற வேலைய செய்யாம இதும் பின்னாலயே அலயறான். கொஞ்சம் எடுத்துச் சொல்லும்மான்னு சொன்னாரு

அவன் அவளை நெருங்கிச் சென்று அவள் தலையை மார்போடு சாய்த்துக்கொண்டு முதுகில் வருடிக் கொடுத்தான். கூந்தலிலிருந்து மல்லிகைப்பூவின் மணம் எழுந்தது. பிரியத்தோடு அவள் பின்கழுத்தில் முத்தமிட்டான். “கண்டுபுடிச்சே ஆவணும்னு ஸ்டேஷன்ல யாரும் சொல்லலைங்கறது உண்மைதான். என் நிம்மதிக்காக நானேதான் எல்லா எடங்களுக்கும் அலயறேன். பிரிஞ்சி போன அம்மாவயும் புள்ளயயும் சேத்துவைக்கணும்னு நெனைக்கறது தப்பா? கண்டதயும் நெனச்சி கொழப்பிக்காத கோமதி. இன்னும் ரெண்டு மூனு நாள். அவ்ளோதான். அதுக்குள்ள கெடைச்சா சரி. இல்லைன்னா விட்டுடறேன். போதுமா?” என்றான்.

பித்து புடிச்ச மாதிரி நீங்க அலையறத என்னால பாக்க முடியலை. வீட்டுல எங்கிட்டயும் கொழந்தைங்ககிட்டயும் நீங்க அன்பா பேசி எத்தன நாளாவுது தெரியுமா?”

சரிம்மா. சரிம்மா. அதான் சொல்றனே, சீக்கிரமா விட்டுடறேன். போதுமா?”

கண்களில் தளும்பிய நீர்த்துளிகளை துடைத்துக்கொண்டபடி அவனை அனுப்பிவைத்தாள் கோமதி.

உரத்த குரலில் ஒருத்தி எழுந்து நின்றுநான் ஒன்னு சொன்னா, கோவிச்சிக்காம கேப்பியா சார்?” என்று கேட்டபோது தயாளனின் நினைவுகள் கலைந்தன. உடனே அவள் பக்கமாகத் திரும்பிசொல்லுங்கம்மாஎன்றான்.

இதே லைன்ல நாலு ஊடு தள்ளி பொன்னம்மாக்கான்னு ஒருத்தர் இருக்கறாங்க. நல்லா குறி சொல்வாங்க. ஒங்களுக்கு நம்பிக்கை இருந்தா, ஒருதரம் அவுங்ககிட்ட என்ன விவரம்னு கேக்கலாம். காணாம போன ஆளுங்க இருக்கற தெச, எடம்னு எல்லாத்தயும் புட்டுபுட்டு வச்சிடுவாங்க.”

அதைக் கேட்டதும் தயாளன் முதலில் தயங்கினான். பிறகு எப்படிப்பட்ட தகவல் கிடைக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டான். “சரி பாக்கலாம்என்றான்.

ஆலோசனை சொன்னவளே உற்சாகமாக வா சார். நானே உங்கள அந்த அக்காகிட்ட அழச்சிட்டு போறேன்என்று முன்னால் நடந்தாள். தயாளன் அவளுக்குப் பின்னால் சென்றான். ஒருவரை அடுத்து ஒருவராக அங்கிருந்த ஆறேழு பேரும் பின்தொடர்ந்து வந்தனர்.

ஒரு பெட்டிக்கடையைக் கடக்கும் நேரத்தில் நின்று அவனிடம் “ஒரு இருவது ரூபாய்க்கு கற்பூரம் வெத்தல பாக்கு பழம் வாங்கிக்க சார்என்றாள். அவன்எதுக்கு?” என்று கேட்டபடி அவளைப் பார்த்தான். “தட்டுல காணிக்கையா வைக்கணும். அம்மன மனசுக்குள்ள நெனச்சி அக்கா பூசை செய்வாங்க சார். அப்ப அந்த பொம்பள இருக்கற தெச அக்காவுக்கு காட்சியா தெரியும்என்றாள். தயாளன் கடைக்காரரிடம் பணம் கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டான்.

அவர்கள் குறிப்பிட்ட பொன்னம்மாக்கா வீட்டில்தான் இருந்தாள். அழைத்து வந்தவளே சுருக்கமாக எல்லா விவரங்களையும் தெரிவித்தாள். கைபேசியில் இருந்த படத்தையும் ஒருமுறை காட்டினாள்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்ட பொன்னம்மாக்கா கூடத்திலேயே இருந்த விளக்கை ஏற்றிவிட்டு உட்கார்ந்தாள். விளக்கு மாடத்துக்கு மேல் சுவரோடு ஒட்டியதுபோல நீண்டிருந்த பலகையின் மீது அம்மனின் சிலை காணப்பட்டது. அதன் கழுத்தில் புதிய மாலை தொங்கியது. அந்த அக்கா தட்டில் கற்பூரம் ஏற்றி அம்மனுக்குக் காட்டினாள். அவள் விழிகள் அந்தச் சுடரிலேயே சில கணங்கள் பதிந்திருந்தன. தயாளன் எதுவும் புரியாமல் வேடிக்கை பார்த்தான்.

எதிர்பாராத கணமொன்றில் ஒரு விசித்திரமான ஓசை அந்த அக்காவிடமிருந்து வெளிப்பட்டது. அப்போது அவள் உடல் சிலிர்த்தது. பிறகு சிறிது நேரத்தில் அவள் உடலில் ஒரு தளர்வு உருவாக, மெதுவாக கண் விழித்தாள். முன்னால் வைக்கப்பட்டிருந்த கைபேசியில் தெரிந்த குழந்தையின் படத்தைப் பார்த்தபடி  அவள இனிமேல பிடிக்க முடியாது. அந்த முயற்சி வேணாம். விட்டுடு. அவ எல்லையை கடந்து போயிட்டாஎன்று சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டாள்.

பெண்கள் கூட்டம் அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தது. கைபேசியை எடுத்துவந்து அவனிடம் ஒப்படைத்தாள் ஒருத்தி. “நம்பிக்கையா ஏதாவது துப்பு கெடைக்கும்ன்னு நெனச்சிதான் அழச்சி வந்தேன். இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுங்கறமாரி சொல்லும்னு நெனைக்கலை சார். தப்பா எடுத்துக்காதஎன்று சொன்னாள். “அவுங்க சொல்லிட்டாங்கன்னு அப்டியே விட்டுடுவேனா என்ன? இன்னும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ அலைஞ்சி பாக்கறேன்என்று அவன் அங்கிருந்து புறப்பட்டான். ஆழ்மனத்திலிருந்து ஏதோ ஒரு விசை அவனைச் செலுத்தியது.

அப்படி உருவான ஒரு நம்பிக்கையின் தூண்டுதல்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் செலுத்திக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் ஒருநாள் ஸ்டேஷனுக்குப் புறப்படும் முன்பாக நெல்லித்தோப்பு பக்கம் சென்றுவிட்டான். பாதையின் இரு புறங்களிலும் ஏராளமான கடைகள். கைபேசிப் படத்தைக் காட்டி  இந்த மாதிரி ஒரு கொழந்தைய வச்சிகிட்டு யாராச்சும் ஒரு அம்மா இந்த பக்கம் வந்தத பாத்திருக்கீங்களா?” என்று கேட்டபடி ஒவ்வொரு கடையாக அவன் ஏறி இறங்கினான். உருப்படியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. நேரம் போனதுதான் மிச்சம்.

ஸ்டேஷனுக்கு தாமதமாகச் செல்ல அதுவே காரணமாகிவிட்டது. வாசலில் ஜீப் நிற்பதைப் பார்த்ததுமே இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார் என்பது புரிந்துவிட்டது. தெரு திருப்பத்திலேயே அவனைப் பார்த்துவிட்ட கந்தசாமி முகப்புக்கு ஓடிவந்து நின்றுஎங்க போயிட்ட நீ? உள்ள அந்த ஆள் வாள்வாள்னு கத்தறான்.  உன்னத்தான் காணோம்காணோம்ன்னு தேடறான். போய் என்னன்னு கேளு. போஎன்றார்.

இதோ...” என்று அவன் இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஓடி சல்யூட் வைத்தான்.

எங்கய்யா போய் தொலைஞ்சே நீ?..... ஒரு அவசரத்துக்கு எப்ப கூப்ட்டாலும் ஆளே கெடைக்கமாட்டேங்கறியே....நீ எதுக்கு அந்த கொழந்த கேஸ் பின்னாலியே சுத்திகிட்டிருக்கே? ஒனக்கென்ன மரை கழண்டு போச்சா? இங்க செய்யறதுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குது. அத உட்டுட்டு........” என்று கூவினார் அவர்.

இல்லை சார். செய்றேன் சார்..”

என்ன செய்வே? எல்லாத்தயும் ஒவ்வொன்னா சொன்னாதான் செய்வியா? நீயா எதயும் பாத்து கத்துகிட்டு செய்யமாட்டியா?”

செய்றேன் சார்...”

நெல்லித்தோப்பு மார்க்கெட் பக்கம் கவர்னர் அம்மா வராங்களாம். நீயும் கந்தசாமியும் ஒடனே அங்க போங்க.”

எஸ் சார்

அவன் சல்யூட் அடித்துவிட்டு வெளியே வந்தான். கந்தசாமி வண்டியோடு வெளியே காத்திருந்தார். எதுவும் பேசாமல் மெளனமாக வந்து அவருடைய வண்டிக்குப் பின்னால் உட்கார்ந்தான்.

இப்ப நீ எதுக்கு உம்முனு வர தயாள்? அந்த ஆளு என்ன புதுசாவா நம்மள திட்டறாரு? எப்பவும் ஒரே ராகம், ஒரே பல்லவிதான?”

        வண்டியை ஸ்டார்ட் செய்யும் முன்பாக தயாளனைத் திரும்பிப் பார்த்தார். அவர் கண்களைப் பார்த்ததும் அவன் மெளனமாக தலையைக் குனிந்துகொண்டான். கந்தசாமியும் எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினார்.

கோவில் வாசலில் கண்டெடுத்த குழந்தையை மகாலட்சுமி இல்லத்தில் ஒப்படைக்கச் செல்லும்போது அதே வண்டியில் கந்தசாமியுடன் சென்றதை நினைத்துக்கொண்டான். நல்ல வழியில பெத்தாளோ, கெட்ட வழியில பெத்தாளோ, யாருக்கு தெரியும்? கொண்டாந்து கோயில் வாசல்ல போட்டுட்டு போயிட்டா மகராசி. இங்க நம்ம உயிருதான் போவுதுஎன்று சலிப்புடன் முணுமுணுத்துக்கொண்டே டி.வி.எஸ்.ஸை ஓட்டினார் கந்தசாமி. அப்போது அது அரைகுறையாக தயாளனின் காதில் விழுந்தது.

     இன்றுபோலவே அன்றும் எதுவும் பேசாமல் மெளனமாகவே உட்கார்ந்திருந்தான் தயாளன். ஒருமுறை இடதுதோள் பக்கமாகத் திரும்பி உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். அடர்த்தியான தலைமுடி. காதுகளே தெரியவில்லை. ஒட்டிப்போயிருந்த கன்னத்தில் பெரிய கருப்புப்பொட்டு. கழுத்தில் கருப்புக்கயிறுகளும் தாயத்தும். நடக்கும்போது மார்போடு உரசிய சின்ன கால்பாதங்களை மெதுவாக அழுத்திக்கொடுத்தான். நெளிவதுபோல  உடல் அசைந்தது. விரல்கள் குண்டுமல்லி அரும்புகளைப் போல இருந்தன. ஒரு கணம் தன் சின்ன மகளின் பாதங்களை நினைத்துக்கொண்டான். 

     மகாலட்சுமி இல்லம் விடுதியின் முன்னால் டி.வி.எஸ்.ஸை நிறுத்தும்போதே போனமா வந்தமான்னு சீக்கிரமா வந்து சேரு தயாள். சும்மா வழவழன்னு பேசிட்டே நிக்காதஎன்றார் கந்தசாமி.  குழந்தையைத் தோளோடு தாங்கியபடியே பின்னிருக்கையிலிருந்து இறங்கினான் தயாளன்.

இல்லத்தின் வாசலில் நின்றிருந்த பெண்மணி அவனைப் பார்ததும் நெருங்கிவந்து வாங்க வாங்க. நீங்க வருவீங்கன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாருஎன்று சொல்லிவிட்டு குழந்தையை அவராகவே என் தோளிலிருந்து பிரித்து தன் தோளுக்கு மாற்றிக்கொண்டார். “இந்த மகாராணிதான் இன்னைக்கு புது கெஸ்டா?” என்று புன்னகையுடன் குழந்தையின் கன்னத்தைத் தொட்டு அசைத்தாள். அப்போதும் அந்தக் குழந்தை கண் திறக்கவில்லை.   

நல்லா தூங்குது போல

ஆமாம். விடிஞ்சதேலிருந்து பயத்துல அழுது அழுது அதுக்கு தொண்ட தண்ணியே வத்தி போச்சி மேடம். டீக்கடையில பால் வாங்கி ஆத்தி குடிக்க வச்சேன். அப்படியே அசந்து தூங்கிடுச்சி  குழந்தையை பக்கத்தில் இருந்த சோஃபாவில் கிடத்திவிட்டு சுவரையொட்டி நின்றிருந்த அலமாரியிலிருந்து ஒரு பெரிய பேரேட்டை எடுத்துவந்து தயாளனின் முன்னால் திறந்துவைத்தாள் மேடம். அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் தேவையான விவரங்களை எழுதினான் தயாளன். பிறகு  ஸ்டேஷனிலிருந்து கொண்டுசென்ற கடிதத்தை சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான்.

புறப்படுவதற்கு முன்பாக அந்தக் குழந்தையை ஒருமுறை பார்த்தான். “ரொம்ப நேரமா தூங்குது. சீக்கிரம் எழுந்துரும்னு நெனைக்கறேன். எழுந்ததும் பசிக்கும், பாத்துக்குங்க...”

அந்த மேடம் அவனை அன்போடு பார்த்து புன்னகைத்தாள். ”நாங்க பாத்துக்குவம் சார். இந்த இல்லத்துல இதுமாதிரி முப்பது குழந்தைங்க இங்க இருக்காங்க என்றாள்.

தயாளன் தன் பையிலிருந்து கைபேசியை எடுத்து அந்தக் குழந்தையை வெவ்வேறு கோணங்களில் நாலைந்து படங்கள் எடுத்தான்.  பிறகு குழந்தையை நெருங்கி வந்து அதன் தலைமுடியை விரல்களால் கோதினான். கன்னத்தை மெல்லத் தட்டி அசைத்தான். ஒரேஒரு கணம் திகைத்ததுபோல குழந்தையின் உடல் சிலிர்த்து அடங்கியது. அதன் மூடிய விழிகளைப் பார்த்தபடியே என்னைக்காவது ஒருநாள் நேரம் இருக்கும்போது வந்து பாக்கறேன் மேடம்என்று சொல்லிவிட்டு விடைபெற்றான். 

கவர்னர் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் வரைக்கும் அவன் மெளனமாகவே இருந்தான். பழைய நினைவுகள் புரண்டபடியே இருந்தன.

ஸ்டேஷனில் அடுத்தடுத்து நெருக்கடி மிக்க வேலைகளே ஒவ்வொரு நாளும் அவனைத் தேடி வந்தன. ஓய்வே இல்லாமல் அலைந்தான். தன் துப்பு துலக்கும் வேலைகளை சில நாட்களுக்கு நிறுத்திவைத்தான்.

கோமதி கூட ஒருநாள் கேட்டாள் என்னாச்சி உங்களுக்கு? அந்த கொழந்த விஷயத்த அப்படியே விட்டுட்டீங்களா?  அதப்பத்தி முழுசா கண்டுபுடிக்காம தூக்கம் வராதுன்னு சொன்னதயெல்லாம் மறந்துட்டீங்களா?”

போதும்ன்னு நானாதான் நிறுத்திகிட்டேன் கோமதி. என்னதான் முட்டி மோதினாலும் நமக்குன்னு ஒரு எல்லை இருக்கும்தானே? என் எல்லை எதுன்னு எனக்கு புரிஞ்சிட்டுது.  அதான் என்னால முடிஞ்ச வரைக்கும் செஞ்சி பாத்துட்டு விட்டுட்டேன்

அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து வேலையை முடித்துக்கொண்டு புறப்படுகிற சமயத்தில் கந்தசாமி வந்துவண்டியில ஏறு தயாள். ஒரு எடத்துக்கு ஒன்ன கூப்ட்டும் போறேன்என்றார்.

எங்கண்ணே?”

ஒரு முக்கியமான ஆள பாக்க போறோம். பேசாம வண்டியில ஏறு

யாரு, சொல்லுங்க்ணே

போற எடத்துல நீயா தெரிஞ்சிக்குவ, பேசாம வா

தெரிந்துகொள்ள பரபரப்பாக இருந்தாலும் தயாளன் வண்டியில் அமைதியாகவே அமர்ந்துவந்தான். கால்மணி நேரம் வாயையே திறக்கவில்லை. இந்திரா நகர் கெஸ்ட் ஹவுஸ்க்குப் பக்கத்தில் ஒரு நெட்சென்டருக்கு முன்னால் வண்டி நின்றது.

இருவரும் அந்த சென்டருக்குள் சென்றனர். கந்தசாமியைப் பார்த்ததும் கடையில் அமர்ந்திருந்த இளைஞன்வாங்க மாமாஎன்றபடி மரியாதையைத் தெரிவிக்கும் விதமாக எழுந்துவந்தான். ”உக்காருடா, உக்காருஎன்றபடி அவனுக்கு எதிரில்  இருந்த நாற்காலிகளில் இருவரும் அமர்ந்தனர்.

 தம்பி எனக்கு தூரத்து சொந்தம். பேரு ராமலிங்கம். பி முடிச்சிருக்காப்புல. கம்பெனி வேலைக்கு போக இஷ்டமில்லாம இப்படி சென்டர் நடத்தறான். பக்கத்துலயே ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் சென்டர் கூட வச்சிருக்கான்என்று தயாளனிடம் சொன்னார். ”இவரு தயாள். எங்க ஸ்டாஃப். வேலையில ரொம்ப சின்சியர்என்று அவனுக்கு தயாளனை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

ராமலிங்கம், அந்த கொழந்த கேஸ்ல துப்பு கெடைக்காம முழிச்சிட்டிருக்கறவரு இவருதான். நீ என்கிட்ட என்னென்னமோ சொன்னியே, அதயெல்லாம் அவருக்கு சொல்லு

கந்தசாமி தன்னை அந்த இடத்துக்கு அழைத்துவந்த காரணத்தை அப்போதுதான் தயாளன் புரிந்துகொண்டான். சட்டென ஒரு நம்பிக்கையின் விசை அவனுக்குள் மீண்டும் படரத் தொடங்கியது.

போட்டாவ பத்திரிகையில விளம்பரம் குடுத்து தேடறது, தெருத்தெருவா அலைஞ்சி ஒவ்வொரு ஆளா விசாரிக்கறது எல்லாம் ஓல்ட் ஃபேஷன்ஸ். இந்த காலத்து டிஜிட்டல் டெக்னாலஜில புதுவிதமா தேடறதுக்கும் கண்டுபுடிக்கறதுக்கும் பல வழிகள் இருக்குது சார். ஒங்க வேலைய ரொம்ப சீக்கிரமாவே முடிச்சிடலாம்

உண்மையாதான் சொல்றீங்களா?” என்று வியப்போடு கேட்டபடி கைபேசியை எடுத்து குழந்தையின் படத்தை ராமலிங்கத்திடம் காட்டினான். அவன் ஒருகணம் அப்படங்களை ஒவ்வொன்றாக நிதானமாக தள்ளிப் பார்த்துவிட்டு, ஒரே கணத்தில் கைபேசியிலிருந்த படங்களை தனக்கு அருகிலிருந்த மடிக்கணினிக்கு மாற்றிக்கொண்டான்.

இப்ப ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்சப்னு நெறய விஷயங்கள் கம்ப்யூட்டர் உலகத்துல இருக்குது சார். ஒரு செய்திய ஒரே நொடியில ஒரு கோடி பேருக்கு கொண்டுபோய் சேத்துரும். மனுஷன் துப்பறிஞ்சி சொல்றத விட ஆயிரம் மடங்கு வேகமா கண்டுபுடிக்கறதுக்கு ஒத்தாசையா இருக்கும்

நிஜமா கண்டுபுடிச்சிட முடியுமா?” ஆச்சரியத்தோடு மறுபடியும் கேட்டான் தயாளன். அவன் இருக்கையின் விளிம்புக்கே நகர்ந்துவிட்டான். ராமலிங்கம் கணிப்பொறித் திரையில் எதையோ புரட்டியபடி நான்கு விரல்களையும் மடக்கி கட்டைவிரலை மட்டும் உயர்த்தி புன்னகைத்தான்.

இங்க பாருங்க சார். முதல்ல என் ஃபேஸ் புக்ல இந்த சேதிய போட போறேன். என் நட்பு வட்டத்துல பாண்டிச்சேரியில மட்டும் நாலாயிரம் பேரு இருக்காங்க. யாரு வழியிலாவது நமக்கு ஒரு துப்பு கெடைச்சிடும். கெடைக்காம போக வழியே இல்ல”

“அவ்ளோ உறுதியா எப்படி சொல்றீங்க? ஒருவேளை கெடைக்காம போனா....?”

இங்க நூத்துக்கணக்கான வாட்சப் க்ரூப் இருக்குது. வாடகைக்கு வீடு தேடறவங்க. வாடகைக்கு வீடு குடுக்கறவங்க. வியாபாரம் செய்றவங்க. ஸ்போர்ட்ஸ் பீப்பள், வீட்டு வேலைக்கு ஆள் சப்ளை செய்யற ஏஜென்சிங்கன்னு எக்கச்சக்கமான க்ரூப் இருக்குது. எல்லா க்ரூப்லயும் இந்த படத்த போடலாம். ஏதாவது ஒரு க்ரூப்ல நமக்குத் தேவையான ஒரு க்ளூ கெடைக்கும்

தயாளனுக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் மனம் அப்போதே அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்ததுபோல பரபரத்தது.  ராமலிங்கத்தின் பேச்சும் வேகமும் தயாளனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஏராளமான சந்தேகங்களைக் கேட்டு பதில்களைப் பெற்றுக்கொண்டான்.

ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு மாலை நேரத்தில்  நெல்லித்தோப்பு பள்ளிக்கூட மைதானத்தில் மினிஸ்டர் மீட்டிங் பாதுகாப்பு டூட்டிக்காக கந்தசாமியும் தயாளனும் வந்திருந்தார்கள். இரண்டு மணிக்கு தொடங்கவேண்டிய மீட்டிங் மினிஸ்டர் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால் நாலு மணிக்குத் தொடங்கி ஐந்தரைக்கு முடிந்தது. மினிஸ்டர் வாகனமும் காவல்துறை வாகனமும் புறப்பட்டுச் சென்றன. கூட்டம் கலைவதற்காகக் காத்திருந்த  சமயத்தில் கந்தசாமியின் கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. ராமலிங்கத்தின் பெயரைப் பார்த்ததுமே அவர் முகத்தில் வெற்றிப்புன்னகை அரும்பியது. அழைப்பை ஏற்று உரையாடி முடித்ததும் அந்தப் புன்னகை இன்னும் பல மடங்காக விரிந்தது.

“ஒரு சின்ன துப்பு கெடைச்சிருக்காம். உடனே வாங்கன்னு கூப்புடறான் ராமலிங்கம். வா தயாள். வந்து வண்டியில ஏறுஎன்றார் கந்தசாமி.

பரபரப்புடன் தயாளன் வண்டியில் பின்னிருக்கையில் உட்கார்ந்தான். வண்டி போன வேகத்தில் எதையுமே நினைக்கமுடியவில்லை. இரு புறங்களிலும் கடந்துசெல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

கடையில் மடிக்கணினியில் எதையோ படித்துக்கொண்டிருந்தான். ராமலிங்கம். இருவரும் படியேறி வருவதைப் பார்த்ததும்வாங்க வாங்கஎன்றபடி இருக்கையிலிருந்து எழுந்தான்.

பன்னெண்டு க்ரூப்ல கொழந்த படத்த போட்டிருந்தேன் மாமா. வாடகை வீடு ப்ரோக்கர் ஒருத்தரு மட்டும் தெரியும்ங்கற மாதிரி ஒரு சேதி போட்டிருந்தாரு. உடனே அவர கூப்ட்டு கேட்டேன். நேருல வாங்க பேசலாம்ன்னு சொன்னாரு.”

அப்படியா? எடம் எதுன்னு கேட்டியா?”

குயிலாப்பாளையம்தான். வண்டியில போயிடலாம்

பல நாள் தேடல் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதை நினைத்து தயாளனுக்கு ஒருபக்கம் ஆறுதலாக இருந்தது. அது எப்படி இருக்குமோ என நினைத்து மற்றொரு பக்கம் அச்சமாகவும் இருந்தது.

குயிலாப்பாளையத்தை அடைந்ததும் தொலைபேசியில் சொன்ன வழிக்குறிப்பின்படி வண்டியைத் திருப்பி இருபுறமும் பார்த்தபடி மெதுவாகச் சென்றான் ராமலிங்கம். தொலைவில் ஒரு பிள்ளையார் கோவில் தெரிந்தது.

அதான் அவரு சொன்ன அடையாளம் மாமா. அங்க அரசமரத்தடியில உக்காந்திருக்காரே, அவராதான் இருக்கணும். வாங்க...”

வண்டியை ஓட்டிச் சென்று மரத்துக்கு அருகில் நிறுத்தினான். “இங்க செல்லதுரைன்னு வீட்டு ப்ரோக்கர்.......” என்று தொடங்கியதுமே அவர் கோவில் திண்ணையிலிருந்து இறங்கியபடி “வாங்க, வாங்க. ராமலிங்கம்தான? நான்தான் செல்லதுரை...” என்றார் அவர்.

வண்டிகளை ஓரமாக நிறுத்திவிட்டு மூன்று பேருமே இறங்கி செல்லதுரையைப் பார்த்து புன்னகையுடன் வணக்கம் சொன்னார்கள்.

இவரு பெரிய மாமா. அவரு சின்ன மாமா. ரெண்டு பேருமே போலீஸ்காரங்க. ஆஸ்பத்திரியில ஒரு அம்மா கோமாவுல இருக்காங்க. பஸ் ஸ்டேண்ட்ல பேச்சுமூச்சில்லாம கெடக்கறாங்கன்னு யாரோ கொண்டாந்து சேத்துருக்காங்க போல. யாரு எந்த ஊருன்னு ஒரு தகவலும் இல்ல. இந்த கொழந்த மட்டும் பக்கத்துல இருந்திருக்குது. தகவல் தெரிஞ்சா சொல்லுங்கன்னு ஆஸ்பத்திரிகாரங்க ஸ்டேஷன்ல கூப்ட்டு சொன்னாங்களாம். என்கிட்ட தகவல் வந்தது. அதனாலதான் படத்த வாங்கி க்ரூப்ல போட்டன்

எல்லாவற்றையும் தலையசைத்தபடி பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் செல்லதுரை. “அந்த கொழந்த மூஞ்சி எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது சார். அந்த அம்மாவுக்கு நான்தான் வாடகைக்கு வீடு பாத்து குடுத்தேன். ஆனா அது ஒழுங்காவே வாடகை குடுக்கலை. அந்த  வீட்டு ஓனர் ஒவ்வொரு மாசமும் என்கிட்ட வந்து நிப்பாரு. அப்ப, என்ன ஏதுன்னு விசாரிக்க போன நேரத்துல இந்த குழந்தைய அடிக்கடி பாத்திருக்கேன். அதனாலதான் போட்டாவுல பார்த்ததுமே சட்டுனு ஞாபகம் வந்துடுச்சி

அந்த அம்மா உடம்புக்கு ஏதாச்சிம் பிரச்சினையா?”

உடம்புக்கு என்ன சார் பிரச்சின? எல்லாப் பிரச்சினையும் மனசுக்குத்தான். புள்ளய குடுத்துட்டு புருஷன்காரன் ஓடிட்டான். ஒத்த பொம்பளயால என்ன செய்யமுடியும்? இங்க புளிமண்டியில ஏதோ வேலை செஞ்சிதான் அது பொழப்ப நடத்துச்சி....”

சொந்தக்காரங்க வேற யாரும் இங்க இல்லயா?”

இருக்காங்க சார். சிவகாமி நகர்ல தொரக்கண்ணுன்னு மாட்டுத்தரகர் ஒருத்தர் இருக்காரு. அவருக்கு இந்தப் பொண்ணு ஏதோ தூரத்துச் சொந்தம்னு சொன்னாரு. அவரு சொல்லித்தான் நான் வீடு பாத்து குடுத்தேன். அப்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆன புதுசு...”

அவர பாக்கலாமா?”

தயாளன் அவசரமாகக் கேட்டான். செல்லதுரையின் முகம் தளர்ந்து தயக்கத்தைக் காட்டியது. “அந்த ஆளு கொஞ்சம் மொரட்டுத்தனமான ஆளு. நான் உங்க கூட வந்து எட்டி நின்னு வீட்ட மட்டும் காட்டறேன். ஆனா கூட வரமுடியாது. நீங்களா விசாரிக்க போறமாதிரி போய் பேசி பாருங்க.....”

சரி சரி. எடத்த காட்டுங்க. அது போதும்என்றபடி வண்டிக்கு அருகில் சென்றார் கந்தசாமி. செல்லதுரை அவரைத் தடுத்துவண்டிங்கள்லாம் இங்கயே இருக்கட்டும் சார். ரெண்டு தெரு தள்ளித்தான் அவர் வீடு. நடந்தே போயிடலாம்என்றார்.

எல்லோருமே நடக்கத் தொடங்கினர். ஒரு குளத்தைச் சுற்றிக்கொண்டு நடந்தார்கள். குளத்தில் தண்ணீர் இருப்பதே தெரியவில்லை. ஒரு போர்வையால் போர்த்தியதுபோல ஆகாயத்தாமரை பரவி மூடியிருந்தது. அதையொட்டி இடிந்துபோன ஒரு மண்டபம்.

அந்தத் திருப்பத்துக்கு வந்ததும் செல்லத்துரை நின்றுவிட்டார். “அதோ, அங்க ஒரு முருங்கமரம் தெரியுது பாருங்க. பக்கத்துல வேலி போட்ட வீடுதான் அவரு வீடுஎன்று சுட்டிக்காட்டினார். அப்போது கந்தசாமி தயாளனின் தோளைத் தொட்டுதயாள். நீ மட்டும் போய் பேசிட்டு வாஎன்று சொன்னார். அவன் திகைத்து குழப்பத்துடன் அவரை ஏறிட்டான். “திடீர்னு ஏன்ணே இப்டி?” என்று தயங்கினான். ”கூட்டத்த பாத்து அந்த ஆளு மெரண்டுட்டா உண்மைய தெரிஞ்சிக்க முடியாம போகலாம் தயாள். நான் சொல்றத கேளு. போய்வாஎன்று சொல்லிவிட்டு சட்டென்று திரும்பி நடந்தார். ”போங்க போங்க. தகிரியமா போங்கஎன்று ராமலிங்கமும் செல்லதுரையும் சைகை காட்டினார்கள்.

பதற்றம் தெரியாதபடி இயல்பாக அந்த வீட்டுக்கு அருகே சென்ற தயாளன் ஒருகணம் அதன் சுற்றுப்புறத்தைக் கவனித்தான்.

ஒருபக்கம் மாட்டுத்தொழுவம். வைக்கோல்போர். பூவரச மரத்தடியில் ஒரு கன்றுக்குட்டி கட்டப்பட்டிருந்தது. வாசலில் கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தபடி இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேலிப்படலைத் திறந்தான் தயாளன். அந்தச் சத்தம் கேட்டுயாரு?” என்று ஒருவர் திரும்பினார். பெரிய மீசை வைத்திருந்தார். உறுதியான உடல். வெற்று மார்பில் ஒரு துண்டுமட்டும் தொங்கியது.

தொரக்கண்ணு...”

நான்தான். வாங்க. வந்து இப்படி உக்காருங்க. ரெண்டு நிமிஷம். இவர அனுப்பிட்டு வரேன்என்று எதிர்ப்புறத்தில் இருந்த இன்னொரு கயிற்றுக்கட்டிலைக் காட்டினார்.

தயாளன் அமர்ந்தபிறகு, வந்தவருடன் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தார் துரைக்கண்ணு. ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு அவர் எழுந்து சென்றார். அதற்குப் பிறகு தயாளனின் பக்கம் திரும்பிசொல்லுங்க சார், என்ன சேதி? என்ன வேணும். பசுவா, காளையா, கன்னுக்குட்டியா?” என்று கேட்டார்.

தயாளன் எதுவும் பேசாமல் கைபேசியை எடுத்து குழந்தையின் படத்தை அவர் முன்னால் காட்டினான். அதைப் பார்த்ததும் ஒரே ஒருகணம் அவர் முகம் திகைப்பில் இருண்டது. கண்கள் இலக்கில்லாமல் அலைபாய்ந்தன. மறுகணமே அக்கறையில்லாத ஒரு பார்வையுடன்  மீண்டுயாருது சார் கொழந்த? எங்க இருக்குது? ஏன் என்கிட்ட காட்டறீங்க?” என்று அடுத்தடுத்து கேட்டார்.

இங்க பாருங்க தொரக்கண்ணு. நான் போலீஸ்காரன்தான். ஆனா போலீஸ் முறையில விசாரிக்கறதுக்காக இங்க வரலை. இந்தக் கொழந்தைக்கு அம்மா இருக்காங்களா இல்லயா? எங்க இருக்கறாங்க?  எங்க மறச்சி வச்சிருக்கீங்க? எதுக்காக மறச்சி வச்சிருக்கீங்க?”

நான் யாரயும் மறைச்சி வைக்கலயே சார். இது.... இது.. இது யாருன்னே எனக்குத் தெரியாது சார்

சொல்லும்போதே அவருக்கு நாக்கு குழறியது. சட்டென கட்டிலை விட்டு எழுந்து நின்று துண்டை எடுத்து பலமுறை உதறி போட்டுக்கொண்டார்.

தொரக்கண்ணு. நான் மறுபடியும் சொல்றேன். நீங்க உண்மைய சொன்னா, பிரச்சினை இங்கயே முடிஞ்சிடும். பொய் சொல்ல ஆரம்பிச்சிங்கன்னா, உங்களுக்கும் கஷ்டம். இந்தக் கொழந்தைக்கும் கஷ்டம்

தயாளன் ஒவ்வொரு சொல்லாக நிதானமான குரலில் சொன்னான். துரைக்கண்ணுஎனக்கு எதுவும் தெரியாதுஎன்பதையே மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருந்தார். தயாளன் அந்தக் குழந்தையின் படத்தை அவர் பார்க்கும் விதமாக கைபேசியைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

திடீரென உயர்ந்து ஒலித்த அவர் குரல் மெல்ல மெல்ல மங்கி  சட்டென பிசிறு தட்டியது. ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து தரையைப் பார்த்தபடி சில கணங்கள் அமர்ந்தார். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டார். நிமிர்ந்தபோது அவர் கண்கள் தளும்பியிருந்தன. “கொழந்தை உயிருக்கு.......” என்று மெதுவாக இழுத்தார். “நீங்க மொதல்ல  உண்மைய சொல்லுங்க தொரக்கண்ணுஎன்றான் தயாளன்.

“நல்லவன்னு நம்பி யாரோ ஒரு நாதாரிய கட்டிகிட்டு வந்திடுச்சி சார் அந்த பொண்ணு.  கமுனாட்டி பையன் ஏமாத்தி புள்ளய குடுத்திட்டு ஓடிட்டான். அந்த கொழந்தய வளர்க்க அது பட்ட துன்பம் மாதிரி யாரும் பட்டிருக்க முடியாது. வேற எவனுக்காவது கட்டி வைக்கலாம்னு பாத்தா, வரவன்லாம் இந்த கொழந்தயால வேணாம் வேணாம்னு போயிட்டானுங்க. எவ்ளோ காலம்தான் அதுவும் ஒத்தயில கஷ்டப்படும்? குயிலாபாளையத்துலயே தெரிஞ்ச வழியில ஒரு பையன் கெடைச்சான். பம்பாய்ல வேலை. நான் சொன்னதும் சரின்னு ஒத்துகிட்டான். ஆனா அவனும் கொழந்தை இல்லாம வரச்சொல்லுங்க, நான் இன்னைக்கே பம்பாய்க்கு அழச்சிட்டு போயி ராணி மாரி வச்சி காப்பாத்தறேன்னு சொன்னான். எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை....”

பதிலை எதிர்பார்ப்பவரைப்போல ஒருகணம் தயாளனின் முகத்தையே அவர் பார்த்தார்.

கொழந்தய பாத்தா ஒன் எதிர்காலம் பாழா போயிடும், அவன்கூட கெளம்பி போன்னு நான்தான் அந்த பொண்ண அனுப்பி வச்சேன். கொழந்தய நெனச்சிதான் அதுக்கு ரொம்ப கவலை. பத்து நாளா அழுது அழுது அதுங் கண்ணே வீங்கி போச்சி. அது கோயில்ல திருவிழா சமயம். ஒரே சத்தம். ஒரே கூட்டம். சாமி குடுத்த கொழந்தய சாமிகிட்டயே குடுத்துட்டு வரேன்னு தூக்கிட்டு போயி ஒரு மறைவுல உட்டுட்டு வந்துட்டுது. ரெண்டு பேரயும் சென்னைக்கு போற பஸ்ல ஏத்தி அனுப்பிவச்சிட்டேன்....”

சொல்றதெல்லாம் உண்மைதான? எங்கிட்ட கத கட்டற வேலைலாம் வேணாம்

அந்த முருகன் மேல சத்திமா உண்மைதான் சார். நம்புங்க சார்

இப்ப எங்க இருக்காங்க?”

பம்பாய்லதான் இருக்காங்க சார்

பம்பாய்ல எங்க?”

அதெல்லாம் எதுக்கு சார்? கண்காணா எடத்துல எங்கயோ நிம்மதியா இருக்குது..”

அந்தப் பெண்ணின் துயரக்கதையைக் கேட்டு மனம் வேதனையில் ஆழ்ந்தது. இத்தனை காலம் தான் நினைத்ததுபோல குழந்தை திருடப்படவில்லை என்பதை நினைத்து ஆறுதலாக இருந்தது. மனபாரமெல்லாம் சட்டென வடிந்துவிட்டது.

நல்லதுதான் பண்ணியிருக்கீங்க தொரக்கண்ணு. நீங்க ஒன்னும் கவலைப்படவேணாம். சும்மா தெரிஞ்சிக்கலாம்னுதான் விசாரிச்சேன்என்று சொல்லிவிட்டு கைபேசியை பைக்குள் வைத்துக்கொண்டு எழுந்தான் தயாளன்.

சார், கொழந்தைஎன்றபடி துரைக்கண்ணுவும் கட்டிலைவிட்டு எழுந்தார்.

அதெல்லாம் எதுக்கு? கண்காணா எடத்துல அதுவும் நிம்மதியா இருக்குது..”

முதலில் திகைத்து, பிறகு மெல்ல மெல்ல தெளிந்து துண்டை உயர்த்தி கண்களைத் துடைத்தபடி புன்னகைத்தார் துரைக்கண்ணு. தயாளனுடன் கூடவே நடந்து வேலிப்படலைத் திறந்துவிடும்வரை மீசையைத் திருகியபடி புன்னகைத்துக்கொண்டே இருந்தார்.

 

( பேசும் புதிய சக்தி – ஜனவரி 2022 )