Home

Sunday, 23 January 2022

ஆறுதல் - சிறுகதை

அப்ரென்டிசாக இருக்கும் போதெல்லாம் காஷுவல் லீவு எடுக்கமுடியாது. அட்டென்டன்ஸ் போய்விடும். தேவைக்கு ஒருநாள் இரண்டுநாள் குறைச்சலாய் இருந்தாலும் பரீட்சைக்குப் போகமுடியாது. கஷ்டம்.  அடுத்த பரீட்சைக்குத்தான் அனுப்புவார்கள். அடுத்த பரீட்சைக்கு ஒரு வருஷம் ஆகும். வருஷ வருஷமாய் காத்திருப்பது ரொம்ப சிரமம். காத்திருக்கிறமாதிரி வீட்டு நிலைமை சரியில்லை. அதனால்தான் லீவ் எதுவும் இல்லாமல் மானேஜரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் தங்கராசு. ‘இதோட மூணு பர்மிஷன் ஆய்ட்டுது மிஸ்டர். அடுத்த தரம் வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டன்என்று மிரட்டிய பிறகுதான் இந்தப் பர்மிஷனைக்கூடத் தந்திருந்தார் மானேஜர்.

மூன்று பர்மிஷனும் இப்ப வந்திருக்கிற விஷயத்துக்காகவே வாங்கியதுதான் என்று நினைத்துக்கொண்டே பஸ்சைவிட்டு இறங்கினான். ஒவ்வொரு தரமும் பர்மிஷன் வாங்குவது சுலபம் இல்லை. போய் நின்றதும் வள்ளென்று விழுவார் மானேஜர். அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு சங்கல்பம் செய்தமாதிரி ஆள் நிற்கிற திசையை கண்டுகொள்ளவேமாட்டார். நாலைந்து நிமிஷம் நகர்ந்ததும் முகத்தை முகத்தைப் பார்ப்பார். ‘இன்னுமா இங்க நிக்கற?’ என்கிற பார்வை. சூப்பர்வைசரைக் கூப்பிட்டு பையன் எப்படி என்று ஜாதகம் கேட்பார். நல்லபடியாக சொன்னாலும் கேட்டுக்கொண்டே மறுபடியும் பேசுவார். புத்திமதியை நிறைய சொல்லுவார். தான் அப்ரென்டிஸாக இருந்தபோது பயந்த பயத்தையும் நடுங்கிய நடுக்கத்தையும் சொல்வார். அப்புறமாய்த் தான்சரி சரி போ. இதயே பழக்கமா வச்சிக்காதஎன்பார். இவ்வளவு பேச்சையும் கேட்டு திட்டையும் கேட்டு சகித்தபடி வாங்கிக்கொண்டு வருகிற பர்மிஷனில் வந்த காரியம் ஒவ்வொரு தரமும் தோல்வியிலேயே முடிவதுதான் கஷ்டமாய் இருந்தது.

இறங்கியதும் விறுவிறு என்று நடக்காமல் பஸ் புறப்பட்டுப்போக கடைசிப் புழுதி காற்றில் நெளிந்துநெளிந்து மறைவதை நிதானித்தபடி நின்றிருந்தான். நிதானமா, பயமா என்று தெரியாத குறிப்போடு இருந்தது முகம். பெருமூச்சோடு சுற்றிப் பார்த்தான். மீன் மார்க்கெட் பக்கம் நாலு கட்டைவண்டி நின்றிருந்தது. எதிர்த்த மாதிரி இருந்த பாலத்தில் கான்வென்ட் சீருடையோடு நாலைந்து பிள்ளைகள் வந்தன. ‘மொத்திருவன் மொத்திஎன்கிறமாதிரி பானையைத் தூக்கிக்கட்டி இரண்டு பெண்கள் குழாயடியில் சண்டை போட்டார்கள். பான்ஸ் பவுடர் பேக்டரியிலிருந்து சின்னதாய் தொடர்ந்து ஒரு சத்தம் வந்தபடி இருந்தது.

நடக்கத் தொடங்கினான். நடந்தபடி யோசிக்க நிறைய விஷயம் இருந்தது. அம்மா அப்பா பற்றி, தொட்டுக்க தொடைக்க என்று அப்பா நடத்துகிற சின்ன ஓட்டல்பற்றி, ‘காலி செய்யிங்க காலி செய்யிங்கஎன்று ராணுவ மிரட்டல் போடும் ஹைவேஸ் அதிகாரிகள்பற்றி, தையல் மிஷின் தைக்கிற ஜெயந்தி அக்காபற்றி நாலு சினிமாக்கதை பேசி ரெண்டு சிரிப்பு சிரித்துவிட்டு மனுஷத்தனமே இல்லாமல் கடன் சொல்லி துணி தைத்துக்கொண்டுபோகிற தெருஜனம்பற்றி. பழசும் அதிபழசுமாய்த் துணிகளை வாரிச் சொருகியபடி ஸ்கூல்போகிற இந்து தங்கச்சி பற்றி, மழமழவென்று தேக்குப் பலகை மாதிரி இருந்த தம்பி கிணற்றில் தவறி விழுந்து செத்ததுபற்றி, கஷ்டம் வந்த கதையை வாய்சலிக்காது சொல்லி மாய்கிற ஆயா பற்றி, மனசுக்கு ஆறுதலாய் பேசிச் சிரித்து உற்சாகம் ஊட்டுகிற விழுப்புரம் ஸ்நேகிதர்கள் பற்றி, பர்மிஷனுக்காக காரியத்தைச் சொன்னதும் ஒத்தாசை செய்கிற சூப்பர்வைசர்பற்றி நிறைய யோசிக்கமுடிந்தது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதாவது ஒரு யோசனையைப் பற்றிக்கொண்டு நடப்பது எப்போதும் தனக்கு சாத்தியமாய் இருப்பதை எண்ணி சோகமாய் சிரித்துக்கொண்டான்.

சுவர் முழுக்கதொழிற்கல்வி பயிலுங்கள்என்று தேர்தல் விளம்பரம் மாதிரி செவ்வகம்செவ்வகமாய் வெள்ளையடித்து எழுதி இருந்தார்கள். பக்கத்தில் இருந்த ப்ரைவேட் காலேஜின் வாசகம் அது. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் முறம் குப்பையைச் சுமந்துக்கொண்டு வந்து எதிர்த்த வீட்டுப்பெண் வாசலில் சரிய விட்டுப் போனாள். குக்குக்குக் என்று சின்னக் குஞ்சுகளோடு நாலு கோழிகள் ஓடிப்போய் அதை சீய்த்தன. சிரிப்பு வந்தது அவனுக்கு. சிரித்தான்.

கசப்பான சிரிப்பு. தொழிற்கல்விகூட சும்மாதான் என்று மூணு வருஷ அனுபவத்தில் திரிந்துதிரிந்து காயம்பட்ட இருதயத்தில் இருந்துவந்த சிரிப்பு. இந்த வாசலில் படித்து முத்ததும் அந்த வாசலை உத்தியோகத்துக்குத் திறந்துவிடுகிறமாதிரி நகாசுப் பேச்சுப் பேசி விளம்பரம் செய்கிற காலேஜைக் கண்டு எரிச்சலில் வந்த சிரிப்பு. அப்ரென்டிஸ் சேரக்கூட ஐந்நூறு அறுநூறு என்று லஞ்சம் தரவேண்டிய நிர்ப்பந்தத்தை நேரிடையாய்த் தரிசித்ததில் வந்த சிரிப்பு. அதற்குக்கூட லோ லோ என்று ராத்திரியும் பகலுமாய் நாய்மாதிரி கண்டவன் பின்னால் அலைந்ததை நினைத்துச் சலித்து வந்த சிரிப்பு.

அந்த மாதிரி நிர்ப்பந்தங்கள் இரண்டுதரம் தனக்கு நேர்ந்ததை நினைத்துப் பார்த்தான் தங்கராசு. ஒரு தரம் .டி. முடித்த கையோடு ரோடியர் மில்லில் சேர்ந்தபோது. இன்னொரு தரம் இப்போது இருக்கிற பெரியார் கார்பரேஷனில் சேர்ந்த போது மில்லைவிட்டு இந்த இடத்துக்குப் போனது, ஒரு கசப்பான அனுபவம். உற்சாகமாய் வேலைக்கு மில்லில் சேர்ந்து ஆறு மாசமாய் அப்ரெண்டிஸாய் இருந்தது. ஒரிஜினல் ஃபிட்டராகவே வேலை செய்து வேலை வாங்கி சந்தோஷமாய் இருந்தது. எல்லாமே கனவு என்கிற மாதிரி மில் சாத்தப்பட்டது. இதோ திறந்தாச்சு அதோ திறந்தாச்சு என்று நிர்வாகிகள் கண்ணாமூச்சி ஆட அப்ரெண்டிஸ் காலம் காலாவதியானது. அதற்குப் பிறகும் ஒன்றரை வருஷம் காத்திருந்துவிட்டு பெரியாரில் சேர்ந்தது எல்லாமே சடசடவென்று மூன்று வருஷங்கள் நடந்துவிட்ட சம்பவங்கள். இந்தச் சம்பவங்களும், அதன் பின்னணியில் ஏற்பட்ட அனுபவங்களும். நடுவில் நிஜமாய்ச் சந்திக்க சேர்ந்த வீட்டுக் கஷ்டங்களும் தான் .டி.. கூட ஒரு உபயோகமில்லாத படிப்பு என்று நினைக்கவைத்தது. சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மாதிரி பெரிய நகரங்களில் வசிக்கிறவர்களுக்கு அல்லது அங்குபோய் தங்கி வேலை பெற்றுக்கொள்கிறமாதிரி வசதியும். இருப்பிடமும் தேடிக்கொள்பவர்களும் வேண்டுமானால் இந்த படிப்பும் உத்தியோகமும் பக்கத்துப்பக்கத்துப் படிகளாக இருக்கலாம். ஆனால் தனது சம்பளம் கட்டாயமாய்த் தேவைப்படக்கூடிய ஒரு குடும்பத்தில் பிறந்தவனுக்குப் பத்துப்பைசா கூட லஞ்சம் தரமுடியாத கஷ்டஜீவனத்தில் பிறந்தவனுக்கு தாண்டவோ நீந்தவோமுடியாத காட்டாற்றின் கரைகள் என்றுதான் நினைத்தான். முதலைகள் வாய்திறந்து பம்மிக் கிடக்க சுழித்துச்சுழித்து ஓடுகிற காட்டாறு.          

மாசத் தொடக்கத்தில் திருவண்ணாமலை ரூட் பஸ் ஒன்றின் எஞ்சினைப் பழுது பார்த்துக்கொண்டு இருக்கும்போது சக்திதான் சொன்னான். டிசம்பர்க்குள்ளாக ஆலையைத் திறக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டிருக்கிற விஷயம், தொடர்ந்து சாத்தப்பட்ட சமயம் வேலை செய்த ஏழாயிரம் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு சின்னதாய் ஒரு செலவுத்தொகை கொடுப்பது. அரியர்ஸ் பட்டு வாடா செய்வது எல்லாம் சொன்னான்.

இன்னாடா மறுபடியும் அங்க போறியா?”

வேற வேல இல்லியா

சலிப்பாய் சொல்லித் தட்டுக்குள் இருந்து கழுவிய கருப்பு டீசலை அவன்மேல் தெளித்துச் சிரித்தான்.

இல்லடா. இன்னோர்தரம் அப்ரென்டிஸ் செஞ்சிட்டா கிரிகெட் ஹாட்ரிக் மாதிரி ரெகார்ட் ஆயிடும்ல.”

இன்னா சக்தி.. கிண்டலா?”

த்ச். சும்மா சொன்னன்டா

அப்புறம் கொஞ்ச நேரம் கழித்துத்தான் மில் சாத்தப்படும்போது தனக்கும் மூணு மாசச் சம்பள பாக்கி என்பதும், பாக்கிக்காக அக்கௌண்ட் ஆபீசர் பெர்சனல் மானேஜர் என்று அப்போதே அலைந்ததும், நிரந்தரமாய் இழுத்துப் பிடித்து சீல் வைத்தபின்பு எதுவும் செய்ய இயலாமல் விட்டுவிட்டதையும் நினைத்தான். அரியர்ஸ் என்று வைத்துக்கொண்டால் ஆயிரம் ரூபாய் வரும். இந்தக் கஷ்டத்தில் வெள்ளம் புரள்கிறமாதிரி. சட்டென்று சக்தியிடம் சந்தேகம்போல கொடுப்பார்களா மாட்டார்களா என்று கேட்டான்.

ஒன் காசு ஒனக்குக் குடுக்காம வேற யாருக்குக் குடுப்பான்?”

த்ச். சீரியசா சொல்லு சக்தி. குடுப்பானா?”

அட, குடுப்பாங்குறன்.”

அப்படியும் சந்தேகம் தீராமல் சூப்பர்வைசரிடம் விஷயத்தைச் சொன்னான். அவரும் சக்தி சொன்னதையே சொன்னார். அதற்குப் பிறகுதான் காஷுவல் லீவ் பிரச்சனை வந்தது. ஆலைக்குள் போனபோது முகம் கொடுத்துப் பேச நாதியில்லை. அவரைப்பார் இவரைப்பார் என்று விரட்டிய மணியமாய் இருந்தது. அது இல்லை இது இல்லை என்று பர்டிக்குலர்ஸ் கேட்டார்கள். கொடுத்தபோது சப்பையாய் மூக்குக் கண்ணாடி போட்ட ஒருத்தன்ஒனக்குல்லாம் அரியர்ஸ் கெடைக்காது போஎன்று சொன்னான். இதற்குள் சாயங்காலமாகி ஆபீஸ் சாத்திவிட்டார்கள். ஒருநாள் பர்மிஷன் வீண் என்று நொந்துகொண்டு அடுத்த நாள் வேலைக்கு போனபோது சூப்பர்வைசர் கேட்டார்.

இன்னா தம்பி ஆயிரம் ரூபா வாங்கிக்கற. ஒரு டீ காப்பி இல்லியா?’

சோகமாய் விஷயத்தைச் சொன்னான் இவன். அதிர்ச்சியாகிஸாரி ஸாரிஎன்று இவன் தோள் பக்கமாய் வந்து தட்டிக் கொடுத்தார். த்ச் த்ச் என்று நாக்கு சப்பு கொட்டிவிட்டு நகர்ந்தார். அப்புறம் அவராகவே அரைமணிநேரம் கழித்து தனியாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.

திருடனுங்க, நேரால்லாம் போனா அப்படிதா சொல்லுவாங்க தங்கராசு. நீ ஒன்னு செய்யி. நான் ஒர்த்தர்க்கு லெட்டர் தரன். மொதலியார்பேட்டைல இருக்காரு. அவுர்கிட்ட விஷயத்தை சொல்லு. எப்படியும் ஏற்பாடு செய்வாரு. மறுபடியும் ஒரு பர்மிஷன் வாங்கித் தந்து லெட்டர் தந்து அனுப்ப, ரொம்ப நம்பிக்கையுடன் அதிகாலையிலேயே புறப்பட்டு வந்து முதலியார்பேட்டையில் வீடு கண்டுபிடித்து ஆளைப்பார்த்தான் தங்கராசு. லெட்டரை வாங்கி வாசித்துவிட்டுகவலைப்படாதீங்க கேட்டுரலாம்என்று தைரியம் சொன்னார் அவர்.

தனியாய் வந்தபோது பேச்சு கொடுக்கக்கூட எரிந்து விழுந்த கண்ணாடிக்காரன் இப்போது குழைந்துகுழைந்து பேசினான். சௌக்கியம் விசாரித்தான். சிரித்துச்சிரித்து நெளிந்தான். ப்ரதர் முறை போட்டு அவரை தொட்டுத்தொட்டு பேசினான். கடைசியில் விஷயத்துக்கு வந்தான். ‘தம்பி... நீங்க வர வாரம் திங்கக்கெழம வாங்க. அதுக்குள்ளார ரெஜிஸ்டர் வந்துரும். பாத்துட்டு பட்டுவாடா செஞ்சிரலாம்.’

அப்புறம் இரண்டு பேரும் அரசியல் பேசினார்கள். ஏழாயிரம் தொழிலாளர்கள் போராட்டம் பற்றிப் பேசினார்கள். பாண்டிச்சேரி பொருளாதாரம் பற்றி பேசினார்கள். பிறகு பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டு பிரிந்தார்கள். வாசலில் வைத்துஅப்றமின்னா தம்பி.. அதான் திங்கக்கெழம வரச்சொல்லி இருக்காங்கல்ல. வந்து வாங்கிக்கஎன்று சொல்லிவிட்டு அவரும் போக இவனும் வந்துவிட்டான். அடுத்தநாள் சூப்பர்வைசரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னதும் சந்தோஷப்பட்டார். சந்தோஷத்தோடு மூன்றாவது பர்மிஷனும் கஷ்டப்பட்டு வாங்கித்தந்து போய்வா என்று அனுப்பி வைத்தார். சக்தியும்குட்லக்சொன்னான்.

நடக்கநடக்க மனசுக்குள் பயம் மாத்திரம் புரண்டுகொண்டே இருந்தது. அடிவயிறு ஒரு கலக்கு கலக்கியது. விஷயம் தெரியாமல் ஒரு ஈரம் தொண்டைக்குக் கீழே சுரந்தது.

ரயில்வே லைனைப் பார்க்கும்போது பழைய ஞாபகம் வந்தது. கேட்டை பிடித்தபடி இணையாய் மின்னலோடு நிள்கிற தண்டவாளக் கோடுகளைப் பார்த்தான். பக்கங்களில் நெடுக வளர்ந்திருக்கின்ற பூவரச மரங்களைப் பார்த்தாள். ரயில் புகை படிந்த மஞ்சள் பூக்களைப் பார்த்தான். ஹீக் ஹீக் என்று கூவிக் கூவி துள்ளுகிற குருவிகளைப் பார்த்தான். மூணு வருஷகாலம் நகர்ந்திருந்தாலும் இடம், குருவி, மரம், பூ எதுவும் மாறவில்லை என்று எண்ணிக் கொண்டான்.

வணக்கம் சார்.’’

நிமிர்ந்து பார்த்த கண்ணாடிக்காரர் ‘‘, நீயா தம்பி? சித்த ஒக்காரு வந்திடறன்’’ என்று வேறொரு புஸ்தகம் பார்த்தார். அதற்குப் பிறகு மாறிமாறி மூன்று புத்தகங்கள் பார்த்தார். அடுத்த மேசைக்குப் போய்ப் பேசிக்கொண்டு நின்றார். வெளியே, நாலைந்து சகாக்களோடு போய் டீக் குடித்துவிட்டு வந்தார். ‘சித்த நேரம்என்றது. ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நாற்பது நிமிஷ காலத்தை எட்டியும் அவராகவே கூப்பிடுவார் என்று நினைத்து ஒதுங்கிஒதுங்கிப் பார்த்துச் சலித்தான் இவன். பயம் வேறு மனசுக்குள் ஒரே குழப்பமாய் இருந்தது. மறுதரம் அருகில்போய் மெதுவாய்சார்என்றான்.

ச்சச்சசோ. ஒன்ன மறந்தே போயிட்டேன் பாத்தியா?’’

அசட்டுத்தனமாய்ச் சிரித்தார். அந்தச் சிரிப்பை ஆமோதிக்கிற மாதிரி அரைச்சிரிப்பாய் சிரித்துக்கொண்டான் இவனும்.

பேரு என்ன சொன்ன?”

தங்கராசு சார். டி. தங்கராசு.’’

டி. தங்கராசு, டி. தங்கராசு என்று உதட்டோரம் முணுமுணுத்த படியே பெரிய லெட்ஜரைப் புரட்டினார். கண்ணாடிக்காரர். வரிவரியாய் விரலை நகர்த்தினார். சட்டென்று இவன் பக்கம் நகர்ந்து. ‘ஒன் பேரு இல்லியே இதுல.’

ஒரு கணம் ரத்தம் உறைகிற மாதிரி இருந்தது.

சார், நல்லா பாருங்க சார், தங்கராசு, ஸன் ஆஃப் தணிகாசலம்.’’

சரி இல்லியே!’’

நல்லா பாருங்க சார். ஆறு மாசத்துல முணு மாசந்தா பேமண்ட் ஆச்சு. ஏப்ரல், மே, ஜூன் மூணு மாசத்துக்கு ஆவல சார். அரியர்ஸ் இருக்கும்.’’

நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம். பேரு இல்லியே.”

”நான் வாங்காத பணம் அரியர்ஸ் கணக்குல வந்திருக்கணும் இல்லையா சார்?”

”த்ச். இங்க பாரு தம்பி. சும்மா வேல கெடுக்கக்கூடாது. இந்த லெட்ஜர்ல இருக்கறவங்களுக்குதான் நான் குடுக்க முடியும். இல்லனா தரமுடியாதுகறாராய்ப் பேசிவிட்டு வேறொரு லெட்ஜரைப் புரட்டியது கண்ணாடி. அக்கறையாய் விசாரித்த பக்கத்து டேபிள்காரன்நீ ஒண்ணு, ரெகுலர் லேபர்ஸ்க்கே நெறய பேருக்கில்ல. அப்ரன்ட்டிஸ்ங்களுக்கு குடுத்துருவாங்களா? நல்ல ஆளுப்பா.. போ..’’ என்று வார்த்தையால் அடித்தான். கூட நின்றிருந்த இரண்டு பேர்கள் சிரித்தமாதிரியும் இருந்தது.

கண்ணுக்குள் முட்டுகிறமாதிரி சுரந்த கண்ணீரை ரொம்பவும் முயற்சி செய்தி அடக்கியபடி வெளியே வந்தான். ஹோவென்று மனசுக்குள் கூச்சல் போட்டது. ரெயில்வே கேட் வரை வந்து அதற்குமேல் நடக்க திராணி இல்லாதவன் மாதிரி கேட்டைப் பிடித்தான். இந்தக் கணத்துக்கு சக்தி பக்கத்தில் இருந்தால் ரொம்ப ஆறுதலாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.

(சிறுகதைக் களஞ்சியம் -1984)