Home

Sunday 30 January 2022

மூன்று கனவுகளும் மேலுமொரு கனவும்

 

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கக் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிராட்டஸ்டண்ட் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த சீர்திருத்தச் சமயக்குழுவினரும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தம் எண்ணற்ற சமயப்பரப்பாளர்களை ஆசிய நாடுகளுக்கு சமயப்பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பிவைத்தனர். அவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மெல்ல மெல்ல கிறித்துவத்தை அறிமுகப்படுத்தி, கிறித்துவ நம்பிக்கைகளை வேரூன்றச் செய்வதையே தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு இயங்கினர். எல்லா நாடுகளிலும் தொடர்யுத்தங்களால் நேர்ந்த சீரழிவுகளிலும் விளங்கிகொள்ள முடியாத நோய்களிலும் சிக்கித் தவித்த எளிய மக்களிடையில் சமயப்பரப்பாளர்களுடைய வருகை ஒரு மருந்தாக அமைந்தது. மதமாற்றங்கள் எளிதாக அமைவதற்கு அந்த வரலாற்றுத்தருணமே ஒரு தொடக்கப்புள்ளியானது.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்குள் ஊடுருவி கொஞ்சம்கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்ஸ்  தேசத்தைச் சேர்ந்த கத்தோலிக்கச் சமயப்பரப்பாளர்கள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட திபெத்தை இலக்காகக் கொண்டிருந்தனர். ஆனால் சீன எல்லைகளால் சூழப்பட்ட திபெத்தை ஒருவராலும் நெருங்கிச் செல்ல முடியவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற அபின் யுத்தங்களால் சீனாவுக்கும் பிரான்ஸ் தேசத்துக்கும் இடையிலான அரசியல் உறவு மோசமடைந்திருந்தது. பிரெஞ்சு சமயப்பரப்பாளர்களால் சீனாவுக்குள் நுழையவே முடியவில்லை. முயற்சி செய்யும்போதெல்லாம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

திபெத்துக்குள் செல்வதற்கான மாற்று வழிகளை சமயப்பரப்பாளர் அமைப்பு தேசப்படங்களை வைத்துக்கொண்டு சிந்திக்கத் தொடங்கியது. அப்போது இந்திய எல்லையில் இருந்த அசாம் வழியாக மலைத்தொடர்களைக் கடந்து செல்வது மட்டுமே, திபெத்துக்குள் செல்வதற்கான ஒரே வழியாகத் தோன்றியது. அங்கே பாதைகள் இருக்குமா, ஊர்கள் இருக்குமா என்பதைப்பற்றியெல்லாம் எந்த விவரமும் தெரியாது. காட்டையும் மலைத்தொடர்களையும் கடந்து சென்றால் திபெத்தை அடையலாம் என்பது மட்டுமே புரிந்தது. திபெத்துக்குச் செல்லும் முதல் சமயப்பரப்பாளராக கிரிக் என்னும் இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். திபெத்துக்குச் சென்று கிறித்துவத்தை வேரூன்றச் செய்யும் பணியை பிரான்ஸ் கிறித்துவ மையம் அவரிடம் ஒப்படைத்தது.  மாதக்கணக்கில் கப்பலில் பயணம் செய்து இறுதியாக அந்தப் பாதிரியார் பிரம்மபுத்திரா நதியை வந்தடைகிறார். அதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி.

பிரம்மபுத்திராவுக்கு அருகில் காடும் மலைகளுமென விரிந்த அசாமில் எண்ணற்ற பழங்குடிகள் வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொரு குடியும் தன்னை தனித்தன்மை மிக்க குடியென நினைத்து பெருமிதத்தில் திளைக்கிறது. மற்றவர்களைவிட தனது நம்பிக்கைகளும் மரபுகளும் மட்டுமே உயர்வானது என பறைசாற்றிக்கொள்கிறது. குடிகளிடையில் ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைகின்றன. மிக்லுண்கள் எனப்படும் அயல்நாட்டினரை தம் எல்லைக்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது என்பதில் மட்டுமே அவர்களிடையில் ஒத்த கருத்து இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல்ரீதியாக அந்த மலைப்பகுதியை கிழக்கிந்திய கம்பெனி தன் கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவந்த போதும், அவர்களைத் தமக்கு இசைவானவர்களாக மாற்றும்பொருட்டு அவர்களோடு அரசு அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியபடி இருக்கிறது. ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் தரைப்பகுதியான பள்ளத்தாக்கிலேயே நடக்கிறதே தவிர, ஆட்சி நடத்துபவர்களால் மலையின் மீது ஏறிச் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பழங்குடித் தலைவர்களே மலையிலிருந்து கீழே இறங்கி பள்ளத்தாக்குக்கு வந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு அயல்நாட்டினர் மீது வெறுப்பும் விலக்கமும் அவர்களுக்கு இருக்கிறது. இது நாவலின் மற்றொரு புள்ளி. இந்த மலைக்குடிகளின் பகுதிகளூடே பயணம் செய்து, அசாமைக் கடந்து எப்படியாவது திபெத்துக்குச் சென்று கிறித்துவத்தை வேரூன்றச் செய்யவேண்டும் என்பதே கிரிக் பாதிரியாருடைய பெருங்கனவு.

பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வாழும் எண்ணற்ற பழங்குடியினத்தினரிடையே அபோர் என்பது ஒரு பிரதானமான பழங்குடியினம். மிஷ்மி என்பது இன்னொரு பழங்குடியினம். பிரம்மபுத்திரா நதிக்கு மேலேயும் திபெத்துக்குக் கீழேயும் அசாமின் வெவ்வேறு பகுதிகளில் அந்த இனத்தினர் வாழ்கிறார்கள். எந்த இனமும் மற்றொரு இனத்துடன் திருமண உறவை வைத்துக்கொள்ளாத இறுகிய சூழலில் அபோர் இனத்தைச் சேர்ந்த கிமூர் என்னும் இளம்பெண்ணும் மிஷ்மி இனத்தைச் சேர்ந்த கஜின்ஷாவும் காதல் வசப்படுகிறார்கள். மரபை மீறிய அந்தக் காதலும் வாழ்க்கையும் நாவலின் பிறிதொரு புள்ளி.

மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்லும் கதைச்சரடுகளின் தொகுதியாக கருங்குன்றம் நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாவலை எழுதிய மமாங் தய் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். கல்வி கற்று ஆட்சியர் பணிக்குத் தேர்வு பெற்றவர். ஆயினும் எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஒருசில ஆண்டுகளுக்கும் மேல் அந்தப் பணியில் அவர் தொடரவில்லை. பழங்குடியினரைப்பற்றி பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளும்   வரலாற்றின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் இத்தகு ஒரு கதைக்கருவை மையமாக்கி நாவலாக எழுதத் தூண்டிவிட்டது. மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தியின் இயல்பான மொழியோட்டம் நாவல் வாசிப்பை மனத்துக்கு நெருக்கமாக்குகிறது.

கருங்குன்றம் அசாமின் மேல் எல்லையாக படர்ந்திருக்கும் அழகிய மலைத்தொடர். எல்லா மாற்றங்களுக்கும் சாட்சியாக அது உச்சியில் நின்றிருக்கிறது. காலத்தின் சாட்சியாக உயரத்தில் நின்று தனக்குக் கீழே நடப்பவை அனைத்தையும் அது கவனித்துக்கொண்டிருக்கிறது.

நாவலில் தொடக்கத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படும் மூன்று கனவுகளும் நிறைவேறாக்கனவுகளாக கருகிப் பொசுங்கிவிடுகின்றன. காலத்தின் ஊழ் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, அசாம் வழியாக திபெத்துக்குள் அடியெடுத்து வைத்து மதத்தைப் பரப்பும் கனவோடு வந்த இளம்பாதிரியார் மனவலிமை மிக்கவர். ஆழ்ந்த இறைநம்பிக்கையும் உள்ளவர். இறையூழியம் செய்வதற்காகவே தான் பிறந்ததாக நினைப்பவர். அதற்காகவே எண்ணற்ற துன்பங்களை ஏற்றுக்கொண்டவர். ஆரம்பத்தில் அந்தப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் அனைவரும்  அவருக்கு வழிசொல்ல மறுக்கிறார்கள். அங்கே இங்கே என்று அலைய வைக்கிறார்கள். வழிகாட்டுவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பணம் வாங்கிக்கொண்டு நடுக்காட்டில் விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஏமாற்றுவார்கள் என்று தெரிந்தும்கூட, அடுத்த முறை அவர்கள் உதவி செய்வதாகச் சொல்லிக்கொண்டு நெருங்கும்போது, கிரிக் அவர்களை விலக்குவதில்லை. நம்பிக்கையோடு மீண்டும் அவர்களோடு பயணத்தைத் தொடர்கிறார். ஆனாலும் அவரால் அந்த மலைத்தொடரையும் காட்டுப்பகுதிகளையும் கடந்து செல்ல இயலவில்லை. மீண்டும் மீண்டும் காடுகளுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி அலைந்து திரிகிறார் பாதிரியார். ஒரே ஒரு முறை கருங்குன்றத்தை நெருங்கிவிட்ட சூழலில், கெடுவாய்ப்பாக சீன அரசின் நிர்வாகியால் அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார். தோல்வியடைந்தபோதும் சற்றும் மனம் தளராமல் முற்றிலும் புதியதொரு திசையில் பயணத்தைத் தொடர்ந்து கருங்குன்றத்தைக் கடந்துவிடலாம் என்று நினைக்கிறார் கிரிக்.  மற்றொரு வழிகாட்டிக் குழுவுடன் காட்டு வழிகளில் பயணத்தை மீண்டும்  தொடங்குகிறார். எதிர்பாராத விதமாக குடிகளிடையில் சிக்கி உயிரிழக்கிறார். கருங்குன்றத்தைக் கடக்க நினைக்கும் அவருடைய கனவும் கிறித்துவத்துக்கு தொண்டு செய்ய விரும்பும் கனவும் கருங்குன்றத்தின் மடியிலேயே கரைந்துபோகின்றன.

கீழ் எல்லையில் மெபோ கிராமத்தில் வசிக்கும் அபோர் குடியைச் சேர்ந்த கிமூர் மேல் எல்லையில் தாவு பள்ளத்தாக்கில் வசிக்கும் மிஷ்மி குடியைச் சேர்ந்த கஜின்ஷாவை மரபுக்கு எதிராகக் காதலிக்கிறாள். காதல் காரணமாக தன், குடியிருப்பை விட்டு வெளியேறி கஜின்ஷாவைக் கைப்பிடித்து புதிய எல்லைக்குள் நுழைகிறாள். கைப்பிடித்த காதலனோ காதலுக்கும் கடமைக்கும் இடையில் ஊசலாடுகிறான். ஒருபுறம் தந்தையின் வழியில் அயல்நாட்டினரின் காலடி படாது மலைப்பிரதேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறான். மற்றொரு புறம், நம்பிக்கையூட்டி மற்றொரு குடியிலிருந்து அழைத்து வந்த பெண்ணை மனம் கலங்காமல் காபாற்ற வேண்டும் என்ற உறுதியும் அவனிடம் இருக்கிறது.

ஆனால் வாழ்க்கையில் அவன் சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன. அவனுடைய முனைப்பையும் உறுதியையும் பிழையான திசையில் திருப்பிவிட நினைப்பவர்களே இறுதிக்கட்டத்தில் அவனைச் சுற்றி சேர்கிறார்கள். இறுதியில் கிரிக்கைக் கொன்ற கொலைப்பழி அவன் மீது விழுகிறது. ஆங்கிலேயரின் இருட்டுச்சிறையில் வதைபட்டு மனம் குமுறுகிறான். கருங்குன்றத்தின் மடியில் ஆசை மனைவியுடன் ஆனந்தமயமான வாழ்க்கையை வாழ நினைத்தவனின் கனவு அக்குன்றின் அடிவாரத்திலேயே பொசுங்கிச் சாம்பலாகிவிடுகிறது. கருங்குன்றத்தைக் கண்ணால் கூட பார்க்கமுடியாத தொலைவிற்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டு இருட்டறையில் தள்ளப்படுகிறான்.

கருங்குன்றத்துக்குக் கீழே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வாழும் குடிகள் தம்மிடையில் நிலவும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காத்து அயல்நாட்டினரின் காலடிகள் ஒருபோதும் குன்றின் நிலப்பகுதியில் பதிந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும் என்பதுதான் தலைமைப்பொறுப்பில் உள்ள ஒவ்வொருவருடைய விருப்பமாக இருக்கிறது. அந்த இலட்சிய விருப்பம், ஒவ்வொருவரையும் இயக்கும் தனி விருப்பங்களால் அடிபட்டுவிடுகின்றன.  மனிதர்கள் தன்னலத்துக்கு ஆட்பட்டு, எளிய லாபக்கணக்குக்காக வெகு எளிதாக துரோகம் இழைப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். தனியொரு விருப்பம் கூட்டுவிருப்பமாக செயல்வடிவம் பெறாத நிலையில் ஒற்றுமைக்கனவு பொசுங்கிச் சாம்பலாகிவிடுகிறது.

யாரோ ஒருவர் தூண்டிவிட, யாரோ ஒருவர் மறைந்திருந்து கிரிக்கைக் கொல்ல, அந்தக் கொலைப்பழி கஜின்ஷாவின்மீது விழுந்துவிடுகிறது. கிரிக் பாதிரியார் மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் வந்தவர் என்பது எல்லாக் குடிகளும் அறிந்துவைத்திருக்கும் உண்மையே. குன்றைக் கடந்து செல்லும் வழி தெரியாமல் காட்டுப்பாதைகளின் குறுக்கும் நெடுக்கும் அவர் அலைந்து திரிவதை அவர்கள் பலமுறை பார்த்திருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்ட பல குடியினர், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவரை நெருங்கி குணம்பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆயினும் அவர் கொல்லப்படுவதை அனைவரும் மெளன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் கொலையையே ஒரு திருப்புமுனையாகக் கொண்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு அடியெடுத்து வைத்ததாக காரணத்தை முன்மொழிந்தபடி ஆங்கிலேய அரசு அதிரடியாக காட்டுக்குள்ளும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்குக்குள்ளும் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துவிடுகிறது. மூன்று கனவுகள் பொசுங்கிய இடத்தில் ஆங்கிலேயரின் அரசியல் கனவு உண்மையாகவே மலர்ந்துவிடுகிறது. அந்த மாற்றத்துக்கும் சாட்சியாக நிற்கிறது கருங்குன்றம்.

நாவலின் முதல் அத்தியாயத்தில் கிமூர் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மலையில் ஏறி நிற்கும் காட்சியை விவரிக்கிறார் மமாங் தய். மலையில் அடர்ந்திருக்கும் காட்டின் ஊடே பார்வையைச் செலுத்தி கண்ணுக்குத் தெரியும் புள்ளி வரைக்கும் ஏதாவது புதுமையாகத் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அயல்மனிதர்கள் யாரேனும் மலையை நெருங்குகிறார்களா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளும் கண்காணிப்புப்புள்ளி அந்த இடம். எங்கோ ஒரு புள்ளியில் புகைமண்டலம் தெரிகிறது. ஒருகணம் காட்டில் எங்காவது தீப்பிடித்திருக்குமோ என ஐயமெழுகிறது. மறுகணம் அயல்மனி்தர்கள் நெருங்கி வந்து அங்கே முகாமிட்டிருப்பார்களோ எனவும் ஐயமெழுகிறது. மீண்டுமொரு முறை பார்க்க நினைத்து பார்வையைத் திருப்புவதற்குள் மூடுபனி எழுந்து திசையை மறைத்துவிடுகிறது. அதே நேரத்தில் சூரியன் கடைசிக் கதிரொளியைப் பாய்ச்சிவிட்டு குன்றின் மடியில் மறைந்துவிடுகிறது. ஒருவித இயலாமையுடன் மலையிலிருந்து திரும்புகிறாள் கிமூர்.

முழு நாவலையும் படித்த பிறகு மீண்டும் ஒருமுறை நாவலின் முதல் பகுதியைப்  படிக்கும்போது, நாவலின் ஊடே அக்காட்சிக்கு வேறொரு பொருள் தொனிக்கிறது. அந்த அஸ்தமனக்காட்சி மனிதர்களின் கனவுகள் அனைத்தும் பொசுங்கிச் சாம்பலாகப் போவதை முன்கூட்டியே மறைமுகமாக உணர்த்துவதுபோலத் தோன்றுகிறது.  எல்லாம் மறைந்து கருங்குன்றமெங்கும் பனியும் இருளும் கவியப்போகிறது என்பதை சொல்லாமல் சொல்லி அக்காட்சி உணர்த்தி விடுகிறது.

 

( கருங்குன்றம் – ஆங்கில மூலம்: மமாங் தய். தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, சாகித்திய அகாதெமி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. விலை. ரூ.290 )

 

( 20.01.2022 அன்று புக்டே – இணையதளத்தில் வெளியான கட்டுரை