Home

Sunday, 6 February 2022

வன்முறை என்னும் உடனுறை தெய்வம்

  

ஒரே குடியைச் சேர்ந்த நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்ளும் தருணத்தில் இருவரையும் சந்தித்து அறிவுரை கூறும் ஒளவையாரின் பாடலொன்று புறநானூற்றில் இருக்கிறது. அப்பாடலில் ”ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே, இருவீர் வேறல் இயற்கையும் அன்றே” என்று துணிவோடு சுட்டிக்காட்டுகிறார் ஒளவையார். இறுதியாக, இயலாமையின் விளிம்பில் நின்றபடி “ஊரில் இருப்பவர்கள் ஏளனத்துடன் பார்த்து சிரிப்பதற்குத்தான் இந்தப் போர் வழிவகுக்கப் போகிறது” என்று சொல்லிவிட்டுப் போகிறார். குடிகளின் மனநிலையைத் துறந்து உலகம் தழுவிய மானுட மனநிலைக்கு மாறிவிட்டவர் ஒளவையார். அவர் சொல் அந்தக் குடிகளின் தலைவர்களுக்கு உறைக்கவில்லை. ‘அன்புக்கு அன்பு, ரத்தத்துக்கு ரத்தம்’ என்னும் ஆதிமனநிலையிலேயே அவர்கள் உறைந்திருக்கிறார்கள். அதற்காக எல்லா நெறிகளையும் மீறிச் செல்ல அவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள்.

புறநானூற்றுக்காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரைக்கும் இவ்விதமான தருணங்கள் எல்லாக் குடிகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. ஒளவையாரை ஒத்தவர்களும் மீண்டும் மீண்டும் பிறந்து இயலாமையின் விளிம்பில் நின்றபடி சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அல்கொஸாமா நாவலைப் படித்து முடித்தபோது கனகராஜ் சுப்பிரமணியனின் எழுத்துகளின் ஊடாக ஒளவையாரின் குரலைக் கேட்கமுடிந்தது.

அரபுச்சமூகத்தைச் சேர்ந்த பதூவன், ஹதரி, கறுப்பு அரபி என மூன்று முக்கியப்பழங்குடிகளின் தொல்கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சேகரித்து நாவலில் முன்வைத்திருக்கிறார் கனகராஜ். சில கதைகள் அவர்கள் மதச்சட்டகத்துக்குள் வந்ததற்குப் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. சில கதைகள் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை.

மூன்று குடிகளில் பதூவன்கள் உயர்குடித் தகுதி உடையவர்கள். அவர்கள் ரத்த உறவையே பெரிதென மதிப்பவர்கள். காற்றில் தடம் மாறிக்கொண்டே இருக்கும் மணற்குன்றுகளைப்போல பாலைவனத்தில் ஒட்டகங்களோடு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள். தீராத விசுவாசம், பெருந்தன்மை, சுயமரியாதை, கெளரவத்துக்காக உயிரையே கொடுப்பது என எழுதப்படாத சட்டங்களை பல தலைமுறைகளகப் பேணி வருபவர்கள். ஒரே இடத்தில் தங்கி விவசாயம் செய்து குடும்பங்களைப் பெருக்கி தலைமுறை தலைமுறையாக நிலைத்துவிட்டவர்கள் ஹதரிகள். இவ்விரு குழுக்களுக்கும் அடிமைவேலை செய்து உயிர்வளர்ப்பவர்கள் கறுப்பு அரபிகள்.

பல நூற்றாண்டுகளாக அலைந்த இந்த நாடோடிக் குழுக்கள் மெல்ல மெல்ல ஒரே இடத்தில் நிலைத்து சமூகமாக வாழத் தொடங்கினார்கள். இஸ்லாம் மதம் அந்த மண்ணில் உருவாகி நிலைத்தபோது, அதை அனைவரும் தழுவிக்கொண்டனர்.  மதம் வலியுறுத்தும் அன்பின் மீதும் ஒற்றுமையுணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் வன்முறைவிருப்பத்தை அவர்களால் முற்றிலும் கைவிடமுடியவில்லை. வன்முறை என்பது ஒருவித பழங்குடி மனநிலை. அந்த மனநிலையிலிருந்து அவர்களால் வெளிவரவே முடியவில்லை.

பதூவன் குழுவைச் சேர்ந்த சுஜா என்கிற சுஜா இபின் சகர் அல் சோபி அல் சொதரி நாவலின் ஒரு முக்கியச் சரடு. அவர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவன் நாயிஃப். அவன் முலாகிம் என்னும் கூட்டத்தைச் சேர்ந்த இன்னொருவனைக் கொலை செய்துவிட்டான்.  ஆனால் முலாகிம் கூட்டத்தினர் பதூவின் குழுவினரைப்போல கொலைவெறி கொள்ளவில்லை. மாறாக காவல்நிலையத்தில் புகார் செய்கின்றனர். அவர்கள் கொன்றவனைக் கண்டுபிடித்து நீதித்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அங்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதித்தனர். உடனே முலாகிம் கூட்டத்தினரைப் பழிக்குப்பழி வாங்க தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சுஜா.

இந்தக் காத்திருப்பின் ஊடாக, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த அரபுப்பழங்குடிகளின் கதைகள் சின்னச்சின்ன சித்திரங்களாக நகர்ந்துசெல்கின்றன. எல்லாமே வாழும் விழைவையும் மனிதமனத்தின் ஆழத்தில் உறங்கும் வன்முறையென்னும் விதையையும் பறைசாற்றுபவை.

சுஜாவின் முப்பாட்டன் அகமத். மூன்று பிள்ளைகளின் தகப்பன். ஒட்டகப்பிரியர். பதூவிகள் தம்  வாழ்விலிருக்கும் வன்முறையை உதறிவிட்டு வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ளவர். அந்த எண்ணத்தை சுற்றியிருக்கும் அனைவரிடமும் விதைப்பவர். ஒருமுறை துருக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில்  தன் மகனை இழந்தவர். அந்த மரணம் சார்ந்து ஆற்ற வேண்டிய சடங்குகளில் மூழ்கியிருந்ததால் அவரால் பாலைவனத்தின் பக்கமே ஐந்து   நாட்களுக்குச் செல்லமுடியவில்லை. அந்த ஐந்து நாட்களும் அவர்மீது மிகவும் நெருங்கிப் பழகிய ஒட்டகம் இரையெடுக்காமல் பட்டினி கிடந்தது.  ஆறாம் நாள் பாலைவனத்துக்கு வந்த பிறகே அவர் அச்செய்தியை அறிந்தார். ஓடிச் சென்று அந்த ஒட்டகத்தின்  கழுத்தை அணைத்து கண்ணீர் சொரிந்தார். அப்படிப்பட்ட அன்பான ஒட்டகம் ஒரு சமயத்தில் குடற்புண்ணால் வேதனையுடன் துடித்தது. எந்த மருந்தும் அதைக் குணப்படுத்த முடியவில்லை. அதன் துயரத்தைக் காணப் பொறுக்காமல் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார் அகமத்.

சில நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற கவிதை கூறல் நிகழ்ச்சியில் அவர் மகன் பாடுவதற்குச் சென்றான். அவன் பாடலுக்கு அந்த அரங்கத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. கூட்டத்தில் யாரோ ஒருவன் அவனுடைய மூதாதையர் நடத்தையைப்பற்றி கேவலமாகக் குறிப்பிட்டு எள்ளி நகையாடினான். மகனின் கவிதையைக் கேட்பதற்காக மாறுவேடத்தில் அரங்கத்துக்குச் சென்றிருந்த அவன் அப்பா அகமத் கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த இளைஞனின் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சி கொலை செய்துவிட்டார். வன்மத்தைவிட்டு மதம் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என காலமெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தவரா இவர் என்று அதிர்ச்சியில் உறைந்து நின்றான் மகன்.

அகமத்தின் தாத்தா சகர். பாலைவனத்தில் பேரீச்சங்கன்றுகளை நட்டு வளர்த்துவந்தார். ஒருமுறை யாரோ புகுந்து அக்கன்றுகளை பிடுங்கி வீசி நாசம் செய்துவிட்ட்டனர். மேலும் தோட்டத்துக்குக் காவலாக இருந்த கறுப்பு அடிமை ஒருவரையும் கொலை செய்துவிட்டனர். அதே நேரத்தில் சகர் தன் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு தோட்டத்தில் நடந்தது எதுவுமே தெரியாது. விருந்தில் எல்லாக் குழுக்களும் கலந்துகொண்டன. விருந்து நடக்கும்போதே, அவருடை ய சின்ன மகன் ஹுசைன் குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவனின் கழுத்தை வெட்டிவிட்டான். அதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் சகர். பதூவிக்களின் எழுதாத சட்டத்தின்படி நடைபெற்ற ஒரு  கொலைக்கு ஈடாக, கொன்றவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் இருவர் கொல்லப்பட வேண்டும். வேறு எதையும் யோசிக்கத் தோன்றாத சகர் தன் மகனையும் அவனுக்கு அருகில் நின்றிருந்த சிறுவனையும் இழுத்து தன் இடுப்பில் இருக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டார்.

அந்த இரண்டாவது சிறுவனை சகர் தன் மகன் என நினைத்துவிட்டார். சில கணங்களுக்குப் பிறகே அவன் தன் மகனல்ல என்பதும் முலாகிம் என்னும் வேறொரு குழுவை சேர்ந்த சிறுவன் என்பதும் அவருக்குத் தெரிகிறது. பெரிய அளவில் போர் மூண்டுவிடுமோ என அஞ்சிய சகருடைய உறவினர்கள் அவரை குதிரை மீது உட்காரவைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டே தப்பித்துவிடுகின்றனர். நடந்த உண்மையைத் தெரிந்துகொண்டதும் பழிக்குப் பழி வாங்க முலாகிம் கூட்டத்தினர் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதற்குள் தோட்டத்தைச் சிதைத்தவர்கள் முலாகிம் கூட்டத்தவரே என்னும் செய்தியும் பரவிவிட, பதூவிக்களும் எதிர்த்துப் போரிட தயாரானார்கள்.

இப்படி சில தலைமுறைகளின் கதைகள் நாவலெங்கும் நிறைந்துள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் இனப்பெருமையில் திளைக்கும் மனிதர்களையும் அவர்களுடைய நடத்தையினால் விளையும் பூசல்களையும் கனகராஜ் மாறிமாறிக் காட்டியபடி செல்கிறார். மலருக்கடியில் இருக்கும் முள்ளாக அவர்கள் ஆழ்நெஞ்சில் வன்முறை மறைந்திருக்கும் புள்ளியை மிகச்சரியாக  அடையாளப்படுத்துகிறார் கனகராஜ்.

கதைமாந்தர்களுக்கு இணையாக இந்த நாவல் முழுக்க ஜின்னுகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மண்ணுலகப்பாத்திரங்களா அல்லது வேறொரு உலகத்தைச் சேர்ந்த பாத்திரங்களா என உய்த்துணரமுடியாதபடி இரு இடங்களிலும் ஜின்னுகள் இடம்பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலும் கவிதைகள் இவ்விரு உலகங்களுக்கிடையான இணைப்புப்பாதையாக இருக்கிறது. அந்த மாயத்தன்மையை கலையழகு குன்றாமல் நாவலெங்கும் கையாள்கிறார் கனகராஜ். அரேபியாவில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து உயிர்துறந்தவன் தமிழ்நாட்டுக் கிராமத்து ஆழ்துளைக்கிணற்றிலிருந்து வெளியேறிச் செல்வது நல்ல கற்பனை. பதூவிக் குழுவின் மூத்த தலைமுறைக்கதைகள் துண்டுதுண்டாகச் சிதறி நிகழ்கால மனிதனான சுஜா வழியாக வெளிப்படுகின்றன.  பொய்யாக திருட்டுப்பட்டம் சுமத்தி சகோதரனாலேயே அறைக்குள் வைத்து பூட்டப்பட்டிருக்கும் ராஜேந்திரனின் கனவில் அரேபியனான சுஜா வருகிறான். அரேபியனான சுஜாவின் கனவில் கேரேஜ் சிப்பந்தியான ராஜேந்திரன் வருகிறான். இப்படி கனவுகளும் நிகழ்காலச்சித்தரிப்புகளும் இணைந்து நாவல் வாசிப்பை சுவாரசியமாக்குகிறது.

அரபிக்குடிகளின் கதைகளை முன்வைக்கும் இழைகளுக்கு இடையில் வேலை தேடி அரேபியாவுக்குச் சென்று தங்கியிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை வேறுசில இழைகளாக சித்தரிக்கிறார். அந்த இழைகளிலும் வன்முறை அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரே குடியைச் சேர்ந்த சகோதரர்கள் அவர்கள்.  ஆயினும் ஒருவரை ஒருவர் சிதைக்கப் பார்க்கின்றனர். தமிழ்மண்ணில் அவர்கள் குடும்ப வரலாற்றிலும் வன்முறையின் தடங்களும் ரத்தக்கறையும் நிறைந்திருக்கின்றன. ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொள்வதும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பதும் தொடர்கதைகளாக உள்ளன. பகைவனுக்கும் அருளுவாய் நன்னெஞ்சே என்று பாடும் மண்ணைச் சேர்ந்த உறவினர்களே ஒருவரையொருவர் வார்த்தைகளால் குதறிக்கொள்கிறார்கள்.

மனிதர்கள் இப்படி ஒருவரை ஒருவர் குதறிச் சிதைத்துக்கொள்பவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்பது ஒரு மாயப்புதிராகவே இருக்கிறது. கனகராஜின் நாவல் இச்சமூக உருவாக்கத்தைப்பற்றிய பல கேள்விகளுக்கான விடைகளை யோசிக்கத் தூண்டுகின்றன.

மனிதகுலம் ஒரு சமூகமென திரண்டெழுந்து நின்ற வரலாறு அவ்வளவு உவப்பானதல்ல. தனிமனிதர்களாக வாழ்ந்தவர்கள், ரத்த உறவுகொண்ட குழுக்களாக விரிந்து, பிறகு இடம்சார்ந்த குழுக்களாக மேலும் விரிவடைந்து, ஒரு சமூகமாக உருமாறிய காலகட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு எல்லையே இல்லை. ரத்தத்தில் கால் நனைத்தபடியே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து, மனிதகுலம் இத்தனை தொலைவுக்குக் கடந்து வந்திருக்கிறது. உடனுறை தெய்வம் போலவே மனிதமனத்தின் ஆழத்தில் வன்முறைநாட்டமும் உறைந்திருக்கிறது.

ஒரு நிலப்பரப்பில் தன்னை ஆற்றலுடன் நிலைநிறுத்துக்கொண்ட ஒரு சமூகம் ஆற்றல் குறைந்த பிற சமூகங்கள் மீது படையெடுத்துச் சென்று வென்று தன்னுடன் இணைத்துக்கொண்டன. தொல்குடிச்சமூகம் தனக்கே உரிய நெறிமுறைகளோடும் வன்முறைகளோடும் நீடிக்கத் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மதங்கள் உருவாகின. அவை சமூகத்தை மறுசீரமைப்பு செய்தன.  எல்லா மதங்களும் இணைந்து வாழ்வதையும் அன்பையும் போதித்தன. ஆனாலும், மதம் என்னும் கட்டமைப்புக்குள் வந்த பிறகு கூட, குடிகளுக்கு தமக்கிடையே உள்ள பேதங்களை மறக்கத் தெரியவில்லை. ஆழ்மனத்தில் உயர்வுதாழ்வு கருதி மதிப்பிடும் அளவுகோலை அப்படியே வைத்திருந்தார்கள். அதைக் காப்பாற்ற ஆவேசத்துடன் வன்முறையில் ஈடுபட்டனர். ஒருபுறம் மதங்கள் கற்பிக்கும் அன்பையும் பேசிக்கொண்டு, மறுபுறம் ஆழ்மனத்தூண்டலின் விசையால் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதையொட்டி அவர்களிடம் எவ்விதமான கூச்சமும் இல்லை. மற்றவர்கள் பார்த்து சிரிக்கத்தக்க அளவில் நடந்துகொள்கிறோமே என்கிற சங்கடமும் இல்லை.

அல்கொஸாமா என்பது ஒருவகை மலர். குளிர்காலம் முடிந்து மழை தொடங்கியவுடனே மலர்ந்து மணக்கும் மலர். நாவலில் வன்முறை தொடர்பான  சிந்தனையுடன் நடக்கும் மனிதர்களுக்கு நடுவில் அல்கொஸாமா பூத்துக் குலுங்கும் காட்சிகள் நடுநடுவே இடம்பெறுகின்றன. பாலைவனத்துக்கு நடுவில் அரிய மலர்களின் நறுமணம் பாத்திரங்களின் கண்களையும் நெஞ்சையும் நிறைக்கின்றன. மாறிக்கொண்டே இருக்கும் மணற்குன்றுகள் நிறைந்த பாலைவனத்தின் வெம்மையையும் குழப்பத்தையும் இந்த மலர்களின் தோற்றம் மாற்றிவிடுகின்றன.

சதுரம் போன்ற சிறு நிலப்பகுதியொன்றில் பூத்திருக்கும் அல்கொஸாமா மலர்களைப் பார்க்கும் கண்கள் பாலைவனம் முழுக்க அல்கொஸாமா பூத்துக் குலுங்கும் ஒரு காட்சியை ஒரு கணமேனும் கற்பனை செய்து பார்த்து, ஒருவித ஏக்கத்தில் திளைக்கும். ஒருவகையில் அல்கொஸாமா மலர்த்தோட்டத்துக்கான ஏக்கமும் வன்முறையற்ற அன்புமயமான உலகத்துக்கான ஏக்கமும் ஒன்றே என நினைக்கத் தோன்றுகிறது.

 

(அல்கொஸாமா. நாவல். கனகராஜ் பாலசுப்பிரமணியன். எழுத்து பிரசுரம், ஆறாவது அவென்யு, அண்ணா நகர், சென்னை -40. விலை. ரூ.320 )

 

(27.01.2022 அன்று புக்டே இணையதளத்தில் வெளியான கட்டுரை)