Home

Sunday 13 February 2022

கரைந்த மனிதர்களின் கதைகள்

  

உத்தலாகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் ஸ்வேதகேது. அவர்களுக்கு இடையே நிகழும் உரையாடல் தருணங்கள் சாந்தோக்கிய உபநிடதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குப் புலப்படாத ஆன்மாவைப்பற்றியும் கண்ணால் காணக்கூடிய உலகத்தைப் பற்றியதுமான ஒரு கேள்விக்கு விடையளிக்கும் விதமாக உத்தாலகர் தன் மகனிடம் அருகிலிருந்த ஆலமரத்தைச் சுற்றி விழுந்து கிடந்த பழங்களில் ஒன்றைக் கொண்டு வருமாறு சொன்னார். மகன் எடுத்து வந்து கொடுத்ததும் அப்பழத்தை உடைக்கும்படி சொன்னார். அவன் உடைத்ததும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார் உத்தாலகர். “சிறுசிறு விதைகள் உள்ளன தந்தையே” என்றான் மகன். அடுத்து அதையும் உடைக்குமாறு சொன்னார் உத்தாலகர். அவன் உடைத்து நசுக்கியதும் “அதில் என்ன காணப்படுகிறது?” என்று கேட்டார். ”எதுவுமே இல்லை” என்றான் மகன். உத்தாலகர் புன்னகையுடன் “எதுவுமற்றதாகக் காட்சியளிக்கும் அதற்குள் ஒரு பெரிய ஆலமரமே இருக்கிறது மகனே. விழவேண்டிய இடத்தில் விழுந்து முளைத்துவிட்டால் ஒரு பெரிய மரத்தையே அது உருவாக்கிவிடும்” என்றார்.

வாழ்க்கைக்கான வழியைத் தேடும் மக்கள் நசுக்கி வீசப்பட்ட விதைகளென  ஒரு மாநகரத்துக்குள் வந்து குவிகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வந்து நிலைபெறும் இடத்தின் தன்மை சார்ந்து மெல்ல மெல்ல முளைத்து மரமாகிறார்கள். அவரவர் தன்மைக்கேற்ப ஆலமரமாகவோ, வேப்பமரமாகவோ, முள்மரமாகவோ, மாமரமாகவோ , மழைமரமாகவோ மாறுகிறார்கள்.

அவர்கள் தம் சொந்த வாழ்நிலங்களில் ஏன் நசுக்கப்படவேண்டும், ஏன் வீசப்படவேண்டும் என்பவை முக்கியமான கேள்விகள். சிலப்பதிகாரத்தில் புகார் நகரத்தின் சிறப்பைச் சொல்லும்போது இளங்கோவடிகள் ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்று குறிப்பிடுகிறார். புகார் நகரத்தில் வாழும் மக்கள் காலம்காலமாக அதே ஊரில் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வாழ்கிறார்கள் என்றும் இடப்பெயர்வு என்பதே அவர்கள் வாழ்வில் ஏற்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்ட விரும்புகிறார். அது உண்மையாகவே இருக்கலாம். அந்தக் காலத்தில் அது சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் சிக்கல் நிறைந்த இன்றைய  காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. பசியும் பிணியும் பகையும் தன்மானமும் வாழ்க்கை நெருக்கடிகளும் அவமானங்களும் வாய்ப்பில்லாத சூழல்களும் ஒவ்வொருவரையும் ஊரைவிட்டு வெளியேற்றியபடியே இருக்கின்றன. அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு நகரம் அல்லது மாநகரம் தன்னை நாடி வரும் அனைவரையும் ஒரு பேரன்னையாக வாரி அணைத்துக்கொள்கிறது.  அந்தப் புதிய இடத்தில் அவரவரால் பற்றிக்கொள்ள முடிந்த விழுதைப் பற்றிக்கொண்டு தம் ஆற்றலால் விசைகொண்டு மேலே செல்ல முயற்சி செய்கிறார்கள் அவர்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பொள்ளாச்சிக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து பெங்களூருக்கு வந்தவர் குமாரவேல். பட்டப்படிப்புக்குப் பிறகு அவருக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருந்தது. பிரம்மச்சாரி இளைஞனாக தங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட இடம் கோரமங்கலா. அங்கே வாடகைக்கு அறையெடுத்து தங்கிக்கொண்டு அரசுப் பேருந்தில் வேலைக்குச் சென்று வந்தார். அதற்குப் பிறகு மிதிவண்டி வாங்கினார். அடுத்து சில ஆண்டுகள் கடந்ததுமே ஸ்கூட்டர் வாங்கினார். வங்கியில் வேலை செய்யும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதே கோரமங்கலாவில் வாடகைக்கு இரு அறைகள் கொண்ட பெரிய வீடாக பார்த்து குடியேறினார். மனத்தில் கிராமத்தைச் சுமந்துகொண்டு வாழும் அவருக்கும் ஆங்கிலப்பண்பாட்டில் ஊறியிருந்த அவர் மனைவிக்கும் கருத்து முரண்பாடுகள் முளைத்தபடியே இருந்தன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி அவர்கள் சேர்ந்தே வாழ்ந்தார்கள்.

அப்போது பெங்களூரு நகர வளர்ச்சிக் குழுமம் கோரமங்கலாவின் பல பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து நிலங்களை வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து அனைவருக்கும் வழங்கியது. ஏறத்தாழ நானூறு ஐநூறு மனைகள். எங்கெங்கோ புரட்டி கடன் வாங்கி குமாரவேலும் ஒரு மனையை வாங்கி வீடு கட்டினார். ஒரு கார் வாங்கினார். குழந்தைகளை நல்ல தரமான பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்தார். பெரியவள் பெண். மருத்துவத்தில் பல மேல்நிலைப் படிப்புகளைப் படித்துவிட்டு வேலை பார்த்துவந்தார். திருமண வயதைக் கடந்தபோதும் அவளுக்கு அவரால் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அவளுடைய சுதந்திர எண்ணப்போக்குக்கும் அவருடைய நகர்சார் சிந்தனைக்கும் இடையில் நிரப்ப முடியாத பள்ளம் இருந்தது. அது அவருக்கு பெரிய மனக்குறை. மகனோ சற்றே ஆரோக்கியக்குறைவு உடையவன். அவனும் பேருக்கு ஏதோ படித்துவிட்டு கல்லூரி அலுவலகத்தில் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துவைத்தார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவளாக அவள் இல்லை. பூசல்களால் அமைதியைக் கெடுப்பவளாகவே இருந்தாள்.

அதற்குள் அவர் முதுமையின் தொடக்க எல்லைக்கு வந்துவிட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற நேரத்தில்தான் அவருக்கு தன் ஆற்றலின் எல்லைகள் புரியத் தொடங்கின. உடல் உறுப்புகளின் செயல்திறன் குறையத் தொடங்கிவிட்டன. விருப்பமான உணவுகளை விரும்பும் நேரத்தில் விரும்பும் அளவு சாப்பிடமுடியாத சூழல். தன் அந்திமக்காலம் தொடங்கிவிட்டது என உள்ளுணர்வு உணர்த்துவதை அவரால் உணரமுடிந்தது. ஒரு காலத்தில் அவசரம் அவசரமாக பறந்துகொண்டிருந்த தெருக்களில் நிதானமாக நடப்பதும் நான்கு பக்கங்களிலும் வேடிக்கை பார்ப்பதைத் தவிர அவருக்கு வேலை எதுவும் இல்லை.

ஒருநாள் நடையில் அவருக்கு தன் நாற்பதாண்டு கால பெங்களூரு வாழ்க்கையும் ஒரு காட்சித்தொகுப்பென சட்டென அவருடைய கண்முன்னால் விரிகிறது.  அந்த இறந்தகாலம் என்னும் தேனை நினைவுகளில் வழியவிட்டு துளித்துளியாக சுவைக்கிறார் குமாரவேல். ஒரு கிராமமாக நகரத்தைவிட்டு ஒதுங்கியிருந்த கோரமங்கலா. அரசின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்டு நகரத்தின் ஓர் .உறுப்பாக இணைந்துகொண்ட கோரமங்கலா. கணினிநகரமாக பெங்களூரு உருமாறிய போது தன் வடிவத்தையும் மாற்றிக்கொண்ட கோரமங்கலா. எல்லா உலக வணிக நிறுவனங்களின் கிளைகளையும் தன் நிழலில் தாங்கி நின்ற கோரமங்கலா. இந்திராநகரையும் எலெக்ட்ரானிக் சிட்டியையும் இணைக்கும் சாலை உருப்பெற்றதும் புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நின்ற கோரமங்கலா. இப்படி காலம்தோறும் மாறிக்கொண்டே வந்த கோரமங்கலாவின் எல்லா வடிவங்களையும் அவர் மனம் அசைபோட்டு ஒருவித நினைவேக்கத்தில் மூழ்குகிறது.

அந்தக் காலத்தில் சந்தித்துப் பழகிய மனிதர்களின் முகங்களும்  இடங்களும் சித்திரங்களாக அவர் மனத்தில் அசைகின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்த நகரத்தை அடைந்தவர்கள் அவர்கள்.  ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வேலையைச் செய்து பாடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தனர்.  சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கினர். சிலர் வேறு இடம் தேடிச் சென்றனர். சிலரோ எங்கே சென்றனர் என்னும் விவரமே தெரியாமல் கண்காணாமல் போய்விட்டனர். அவர்களுடைய கதைகளை ஒவ்வொன்றாக அசைபோடுகிறார் குமாரவேல். ஒவ்வொருவருடைய கதையும் ஒரு குறுவரலாறாக உள்ளது. அந்தக் குறுவரலாறுகளின் தொகுப்பில் அவருடைய குறுவரலாற்றுக்கும் ஏதோ ஒரு பக்கத்தில் இடமிருக்கிறது.

கோரமங்கலாவின் வரலாறு என்ன என்னும் கேள்விக்கு பெங்களூரு வைத்திருக்கும் விடை என்பது வேறு. தகவல்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்த அந்த விடையில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட, இந்தக் குறுவரலாற்றுத்தொகுப்பிலும் இன்னொரு விதமான உண்மை இருக்கிறது. இவ்விரண்டு உண்மைகளும் ஒன்றையொன்று நிரப்பிக்கொள்பவை. ஆதிக்குடி போல கோரமங்கலாவின் தொடக்க காலத்திலிருந்தே அதைப் பார்த்து வருகிற ஒருவரால் மட்டுமே தொகுக்கமுடிந்த வரலாறு இது.

வாணியம்பாடியைச் சேர்ந்தவர் உசேன். நண்பரின் ஆலோசனையைக் கேட்டு கோரமங்கலாவுக்கு வந்து பிரியாணிக்கடை தொடங்குகிறார். அவர் குடும்பமே அதற்காக உழைக்கிறது. பிரியாணியின் சுவையால் வாடிக்கையாளர்கள் பெருகி, வருமானமும் பெருகுகிறது. எதிர்பாராத விதமாக அவர் மனைவிக்கு கருப்பைநீக்க அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. சேமிப்பு எல்லாவற்றையும் கரைத்த பிறகே அந்த நெருக்கடியிலிருந்து அவர் மீண்டு வருகிறார். இரு வார காலம் தொடர்ச்சியாக கடை மூடியே இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிதறிவிடுகின்றனர். மீண்டும் கடை திறந்தபோது அவருக்கு வியாபாரமே இல்லை. அந்தக் கடையை மூடினாலும் மனம் தளராத அவர் அருகிலிருக்கும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு தேநீர் விநியோகம் செய்து பிழைக்கிறார். சாலையோரமாக மேசை போட்டு பழங்களை நறுக்கி கிண்ணங்களில் நிரப்பி விற்பனை செய்கிறார். ஏதோ ஒரு கட்டத்தில் அந்த வியாபாரமும் நின்றுவிடுகிறது. அவர் கோரமங்கலாவை விட்டே சென்றுவிடுகிறார்.

ராமன் ஒரு கட்டடத்தொழிலாளி. ஒரு குடிசையில் மனைவியோடும் குழந்தைகளோடும் வசிக்கிறான். மூன்றாவது பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் மனைவி இறந்துவிடுகிறாள். மூன்று குழந்தைகளோடு ஊருக்குத் திரும்பிச் சென்ற ராமன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியின் தங்கையை மணந்துகொண்டு கோரமங்கலாவுக்கே திரும்பி வருகிறான். தொடர்ச்சியாக அவனுக்கும் கட்டிட வேலை கிடைக்கிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களும் அதே நகரத்தின் வெவ்வேறு இடங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். வயது கடந்துபோனாலும் ஒரு தொழிலாளியாக கோரமங்கலாவின் சுற்றுப்புறத்திலேயே நடமாடிக்கொண்டிருக்கிறான் ராமன்.

இராணுவத்தில் ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு காலுவப்பட்டியிலிருந்து கிளம்பி வந்தவன் பாலகிருஷ்ணன். அதே தேர்வுக்கு வந்திருக்கும் ஆஸ்டின் டவுனைச் சேர்ந்த இருதயராஜும் அவனும் நண்பர்களாகிறார்கள். இருவரும் தேர்வு பெற்று இராணுவத்துக்குச் செல்கிறார்கள். ஓய்வு பெற்று பெங்களூருக்கே திரும்பி வருகிறார்கள். இருதயராஜ் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்துகிறார். பாலகிருஷ்ணன் ஓட்டல் நடத்துகிறார். இருதயராஜ் வாழ்க்கை நேர்க்கோடு போல ஒரே திசையில் செல்கிறது. பாலகிருஷ்ணன் வாழ்க்கை கொஞ்சம் வளைந்து வளைந்து செல்கிறது. அவர் மனைவி இறந்துவிடுகிறார். ஓட்டலில் வேலைசெய்ய வந்த பெண்ணை அவர் மறுமணம் செய்துகொள்கிறார். ஓட்டல் வேலை சலித்தபோது, அந்த இடத்தை வாடகைக்குக் கொடுத்தவரிடமே நேர்மையாக ஒப்படைக்கிறார். பாலகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காவிட்டாலும் கூட வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத சூழலில் சலித்துக்கொள்கிறார் இருதயராஜ். ஒருநாள் எதிர்பாராத விதமாக வந்து தாக்கிய நெஞ்சுவலியால் அவர் உயிர் பிரிந்துவிடுகிறது.

ஏர்ஃபோர்சில் பதினைந்து ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஓய்வு பெற்று பெங்களூருக்கு வந்து மைக்கோ கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீசராக இணைந்தவர் ராமகிருஷ்ணன் மாமா. கோரமங்கலாவிலேயே நீண்ட காலமாக வசிப்பவர். பெங்களூரிலேயே பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டவர். யாராக இருந்தாலும் உதவி செய்யத் தயங்காதவர். அன்பான மனிதர். கிரிக்கெட் ரசிகர். நாற்பது ஆண்டுகளாக குமாரவேலுவுடன் நட்பில் இருந்தவர். பிள்ளைகள் பெரியவர்களாகி வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அப்பாவுடைய அணைக்கும் போக்குக்கு மாறாக விலக்கும் போக்கு கொண்டவர்கள் அவர்கள். அப்பாவுக்கு இல்லாத சாதி மேட்டிமைப்பார்வை அவர்களிடம் நிறைந்திருக்கிறது. செய்தியே வெளியே தெரியாதபடி, அப்பாவுக்கு சதாபிஷேகம் செய்கிறார்கள். அவருடைய மரணச்செய்தியைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு ஓடி நின்றபோது, அங்கிருந்த ஒருவரும் குமாரவேலுவைப் பொருட்படுத்தவே இல்லை. மாமாவின் மரணம் குமாரவேலுவை நிலைகுலைய வைக்கிறது.

இப்படி ஏராளமான மனிதர்கள். எல்லோருமே குமாரவேலுவை வசீகரித்த மனிதர்கள். பழைய பேப்பர் கடை நடத்தும் தணிகாசலம். ஐந்து பெண் பிள்ளைகளோடு செஞ்சியிலிருந்து வந்து பலகாரக்கடை நடத்தும் ஐயாசாமி. ஹார்ட்வேர் கடை வைத்துப் பிழைக்கும் அமானுல்லாகான். எலெக்ட்ரிக் வேலை தெரியாமலேயே எலெக்ட்ரிசியனாக வேலை செய்யும் பாலா. அனந்தப்பூரிலிருந்து வந்து லாண்டரி கடை வைத்து, தொழில் நல்ல நிலையில் சீராகச் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத தீவிபத்தால் எல்லாவற்றையும் இழந்து சோகத்தில் மூழ்கும் வாசு. கறிக்கடைக்காரர் சத்தார்கான். பழைய இரும்புக்கடை நடத்தும் தண்டபானி. வேலைக்காரி காணாமல் போன காரணத்துக்காக காவல்நிலையம் வரைக்கும் சென்றதில் மனம் சோர்ந்துபோகும் அஞ்சனப்பா தம்பதி. தன் பதவிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தெரிந்தவர்களுக்கு உதவி செய்யும் லீலா அக்காவின் அகாலமரணம். தேங்காய் வியாபாரம் செய்யும் திப்டூர்காரன். பாரத் கல்சுரல் சென்டர் உருவாக காரணமான ஆலத்தூர் வெங்கடராம ஐயர். அவர் வீட்டு மாட்டுக்கு வைத்தியம் பார்த்து அவருடைய மனத்தில் இடம்பிடித்த தண்டபானி. கோரமங்கலாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இப்படி ஏராளமான மனிதர்கள். ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வீடுகள் நின்றிருக்க மற்ற இடங்களெல்லாம் வெட்டவெளியாக காட்சியளித்த கோரமங்கலா, சில ஆண்டுகளிலேயே நிற்க இடமில்லாத அளவுக்கு வீடுகளாலும் மனிதர்களாலும் நிறைந்துவிடுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு கி.ராஜநாராயணன் கோபல்லபுரம் என்னும் நாவலை எழுதினார். இடப்பெயர்வு காரணமாக ஓர் ஊரிலிருந்து வெளியேறி இன்னொரு ஊருக்கு குடியேறிய மனிதர்கள் இணைந்து அந்தக் கிராமத்தை உருவாக்குகிறார்கள். கிட்டத்தட்ட சகதேவனின் அந்திமம் நாவலும் அதே தன்மையையே கொண்டிருக்கிறது. பல திசைகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் ஏராளமான மனிதர்கள் ஒரு நகரின் ஒரு பகுதியில் குடியேறி அதற்கொரு முகத்தையும் உயிரையும் கொடுக்கிறார்கள். ஆனால் வரலாறு அவர்கள் அனைவரையும் முகமற்றவர்களாகவே வடிகட்டி வீசிவிடுகிறது. முகமற்ற மனிதர்களுக்கு முகத்தைக் கொடுக்கிறது அந்திமம் நாவல்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட உத்தாலகர், ஸ்வேதகேது உரையாடலில் வேறொரு பகுதியும் சுவாரசியமானது. உத்தாலகர் ஒருநாள் ஒரு பிடி உப்பை எடுத்து மகனிடம் கொடுத்து எதிரில் வைக்கப்பட்டிருந்த குடத்தில் போடச் சொன்னார். மகனும் அப்படியே செய்தான். மறுநாள் காலை ”நேற்று குடத்தில் போட்ட உப்பை எடுத்து வா” என்று சொன்னார். ”தண்ணீரில் உப்பு கரைந்துவிட்டது” என்றான் மகன். ”குடத்தில் மேற்பகுதியில் இருக்கும் தண்ணீரில் ஒரு கை அள்ளிச் சுவைத்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்” என்றார் உத்தாலகர். மகனும் அவ்வாறே அள்ளிப் பருகிவிட்டு தண்ணீர் கரிப்பதாகச் சொன்னான். தலையசைத்துக்கொண்ட உத்தாலகர் “குடத்தின் நடுப்பகுதியிலிருந்தும் அடிப்பகுதியிலிருந்தும் இதேபோல ஒரு கை அள்ளிச் சுவைத்துப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்” என்றார். அவர் சொன்ன விதமாகவே செய்து சுவையைச் சோதித்துப் பார்த்த மகன் ”எல்லாப் பகுதிகளிலும் தண்ணீர் கரிக்கிறது தந்தையே” என்றான். தொடர்ந்து அவனாகவே “தண்ணீரில் கரைத்த உப்பு எங்கும் போகவில்லை. வேறு வடிவத்தில் அப்படியே இருக்கிறது தந்தையே” என்று புதியதொரு உண்மையைக் கண்டுணர்ந்துகொண்ட உற்சாகத்துடன் சொன்னான். உத்தாலகர் அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

தண்ணீரில் உப்பு கரைவதுபோலவே, இந்தப் பெருநகரத்தை நாடி வருபவர்களும் அந்த நகரத்தோடு கரைந்துபோகிறார்கள். நேற்றுவரை கரைந்துபோன மனிதர்களை விரைவில் கரைந்துபோகவிருக்கும் தன் அந்திமத் தருணத்தில் வாழும் குமாரவேல் அசைபோடுவதாக இந்த நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.  அவர்களோ, அவர்களுடைய பங்களிப்போ நம்முடைய பார்வைக்கு நேருக்குநேர் தெரியாவிட்டாலும் அவர்கள் நகரத்தில் கரைந்திருக்கிறார்கள். மையத்திலோ, விளிம்பிலோ எங்கோ ஓரிடத்தில் இருக்கிறார்கள்.

 

( அந்திமம் – நாவல். ப.சகதேவன். யாவரும் பதிப்பகம். 24, கடை எண் -  எஸ்.ஜி.பி.காம்ப்ளெக்ஸ், வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை – 600 042. விலை. ரூ.560 )

 

(29.01.2022 புக்டே இணையதளத்தில் வெளியான கட்டுரை)