Home

Sunday, 27 February 2022

கவிதை என்னும் கலை

  

     கவிதையுலகில் புறவுலகக் காட்சிகளைச் சித்தரிப்பது என்பது அழகான கலை. நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிற செடிகள், கொடிகள், மரங்கள், பாலங்கள், ஆறுகள் என எந்தப் புள்ளியிலிருந்தும் ஒரு கவிதையைத் தொடங்கலாம். அது ஒரு படைப்பாளியின் தேர்வு. ஆனால் அந்தப் புள்ளியை அவன்  கவிதைக்குள் முன்வைக்கும்போது, அந்தத் தேர்வு எந்த அளவுக்குச் சரியானது என்பதை நிறுவியிருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.

ஓர் ஓவியத்திலிருந்தே தொடங்குகிறேன். டாவின்சி தீட்டியகடைசி விருந்துஓவியத்தை அனைவரும் பார்த்திருப்போம். இயேசு தன் சீடர்களுடன் விருந்துண்ணும் காட்சிதான் அந்த ஓவியம். பல நண்பர்களின் வீட்டுக்கூடங்களில் அந்த ஓவியத்தின் நகல்கள் புகைப்படங்களாக இருப்பதைக் காணலாம். டாவின்சி அந்த உணவுண்ணும் தருணத்தை ஏன் தன் ஓவியத்துக்காகத் தேர்ந்தெடுத்தார்? இயேசு தம் சீடர்களுடன் உரையாடியபடி நடக்கும் காட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். மலைகளிலும் குன்றுகளிலும் ஏறி இறங்கும் காட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். மரத்தடியின் நிழலில் குழுவாக அமர்ந்து விவாதிக்கும் காட்சியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அதைப்போன்ற காட்சிகளையெல்லாம்  விலக்கி, அந்த ஓவியர் கடைசி விருந்துக் காட்சியைத் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது முக்கியமான கேள்வி.

உணவுமேசை என்பது உணவுகளைப் பரிமாறிக்கொண்டு உண்ணும் இடம் மட்டுமல்ல. அது அன்பை, நட்புணர்வை, நம்பிக்கையை, மதிப்பை என அனைத்தையும் பரிமாறிக்கொள்ளும் இடம். காலம்காலமாக நிலவும் அந்த மரபு முதன்முதலாக சிதறும் நெருக்கடியான தருணம் அது. அன்புக்கு சரிசமமாக  துரோகமும் நாற்காலியில் வந்து உட்காரும் தருணம் அது. வாழ்நாள் முழுதும் அன்பையே பறைசாற்றிவந்த ஒரு மாமனிதரும், அந்த அன்பின் மதிப்பையே உணராமல் காட்டிக்கொடுக்கப் போகும் இன்னொருவரும் இணைந்து ஒரே மேசையில் அமர்ந்திருக்கும் துரதிருஷ்டமான தருணம் அது. இனி ஒருபோதும் அமைவதற்கு வழியே இல்லாத மகத்தானதும் சோகமயமானதுமான தருணம். அந்த வரலாற்றுத்தருணத்தை இந்த மனிதகுலத்துக்கு நினைவூட்டும் வகையில் டாவின்சி அந்தக் காட்சியை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்.

இப்போது கவிதைக்கு வருகிறேன். செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு வரி. அந்த வரியை எழுதியவர் பெயர்கூடத் தெரியவில்லை. பெயர்தெரியாத அந்தக் கவிஞர் அந்தப் பழங்காலத்திலேயே ஒரு கவிதைக்குரிய கச்சிதமான வரையறையைப் பின்பற்றியிருக்கிறார் என்பது நம் மொழி செய்த பேறு. செம்புலப்பெயல்நீர் என்பது புறச்சித்திரம். அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பது அகச்சித்திரம். அகச்சித்திரத்தை அடையாளப்படுத்தவே அவர் அந்தப் புறச்சித்திரத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர். மனம் கலந்து இணைவதற்கு மழைநீரும் மண்ணும் கலந்து கரைந்து நிறம்மாறித் தளும்பி நிற்கும் காட்சியைவிட மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இன்றளவும் எழுதப்படவில்லை.

நண்பர் சிவசுவின் கவிதைத்தொகுதியைப் படித்துக்கொண்டிருந்த போது ஒரு வரியில் மனம் நின்றுவிட்டது. செம்புலப்பெயல்நீரார் வகுத்தளித்திருக்கும் வரையறையை நெருங்கிச் செல்லும் ஆற்றலை அந்த வரியில் என்னால் பார்க்கமுடிந்தது. ‘இரைதேடித் திரிந்த இடங்களில் இசைநிரப்பிச் செல்கின்றன பறவைகள்என்பதுதான் அந்த வரி. எப்போதோ ஒரு காலத்தில் படித்த வண்ணதாசனின்கனிவுஎன்னும் சிறுகதையில் இடம்பெற்றிருந்தஒன்ன வெட்டினா ஒன்ன நடணுமில்லையா?’ என்ற உரையாடலை நினைத்துக்கொண்டேன். ’நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக மொட்டைமாடியைத் தந்தது வீடுஎன்றும்இரண்டடி இடத்தையே எடுத்துக்கொண்டு உயர்ந்து தன் அன்பை விரித்திருந்தது மரம்என்றும் நீண்டு செல்லும் தேவதேவனின் கவிதைவரிகளையும் நினைத்துக் கொண்டேன். ஒன்றை எடுத்துக்கொண்டு இன்னொன்றை வழங்குவது என்பதே மிகச்சிறந்த நாகரிகம். வண்ணத்துப்பூச்சிகள் மலர்களிலிருந்து உரிமையுடன் தேனை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன. அவையே அம்மலர்களிலிருந்து மகரந்தத்தூள்களைச் சுமந்து சென்று மற்றோர் இடத்தில் சேர்க்கின்றன. மரங்கள் கூட கரிமல வாயுவை எடுத்துக்கொண்டு  ஆக்சிஜனை வழங்குகின்றன. மண்ணுலகில் எங்கெங்கும் எடுத்தலும் கொடுத்தலும் ஓர் இணைசெயல்பாடாகவே நிகழ்ந்துவருகின்றன.

இத்தகு வாசிப்பு, மனிதர்களான நாம் நம் வாழ்வில் இந்த வரையறையை நீதி உணர்ச்சியோடு  ஏன் கடைபிடிக்கவில்லை என்னும் கேள்வியை  நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது. ஒருவித சுயவிமர்சனத்தை நேர்மையுடன் எதிர்கொள்ளவேண்டிய சூழலையும் உருவாக்குகிறது. நம்மைப்பற்றி நாமே மதிப்பிட்டுக்கொள்ள இந்த வரி ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. ஒரு பறவைக்கு இருக்கும் ஞானம்கூட மனிதனாகிய நமக்கு இல்லையென்றால், நம்மை ஆறறிவுள்ளவர்களாக நாம் எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும்?

இறகின் நிரம் இரத்தம்என்ற கவிதையில் சிவசு சித்தரித்திருக்கும் காட்சியும் நம் ஆழ்கவனத்தைக் கோரும் காட்சி. மாஞ்சருகுகளிடையில் ஒரு நீலச்சிறகு விழுந்துகிடக்கிறது. அதன் அழகில் மயங்கி அதை எடுக்கக் குனிகிறார் ஒருவர். தற்செயலாக அவர் பார்வை அந்த இறகுக்கு அருகிலேயே வெவ்வேறு வண்ணங்களில் விழுந்திருக்கும் பல இறகுகள்மீது படர்கிறது. அவையனைத்தும் யாரோ பறவையைக் கொன்று உதிர்த்த இறகுகள் என்பது தாமதமாகவே அவருக்குப் புரிகிறது. உதிர்த்த இறகுகளும் உறிக்கப்பட்ட இறகுகளுமாக கலந்து கிடக்கிறது அந்த நிழல்வெளி. வலிமையான ஒரு தருணத்தையே இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார் சிவசு. தீதும் நன்றும் அழகும் களங்கமும் இணைந்த இந்த உலகத்தை இத்தருணம் மேலதிகமான எந்த விளக்கமும் தேவைப்படாமல் சித்தரித்திருக்கிறார் சிவசு.

கட்டாலமரம்என்னும் நீண்டதொரு சித்தரிப்பில் ஒரு சித்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. ஊர்க்கடைசியில் விழுதுவிட்டு நிழல்பரப்பி நிற்கிறது ஓர் ஆலமரம். அதற்கு அருகில் எப்போதோ ஓங்கி நின்று பட்டுப்போன ஒரு பனைமரம் ஆலமரத்தோடு ஒட்டிக்கொண்டு தலைசாய்த்திருக்கிறது. உயிர்த்திருக்கும் ஆலமரம் தன்னை அண்டிவரும் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் அணில்களுக்கும் கால்நடைகளுக்கும் அன்னையென அடைக்கலம் தருகிறது. அவையனைத்தும் உயிர்த்திருப்பவை. பட்டுப்போன பனைமரமோ உயிரற்ற ஒன்று. உயிரில்லாத அம்மரத்தையும் ஆலமரத்தின் தாய்மை தாங்கிக்கொள்கிறது. தாய்மைக்கு பேதமில்லை. தன்னையே வெட்ட வந்தவனுக்கும் நிழல்தரும் அந்த மரம். தாய்மையின் இலக்கணம் அந்த மரம்.

தாய்மை என்பது பிள்ளை பெற்று, சந்ததியை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைக் குறிக்கும் சொல் மட்டுமல்ல. தாய்மை என்பது பெரும்கருணை. ஒருவகையில் இறைமை. ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமல்ல, எல்லா உயிரியக்கத்துக்கும் ஆதாரமான ஒன்று. பட்டமரத்தைத் தாங்கி நிற்கும் ஆலமரத்தின் தோற்றம் நாம் நம் வாழ்க்கையில் யாரையாவது தாங்கியிருக்கிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது.

மனத்தை உறையவைக்கும் மற்றொரு காட்சியை துடிப்பும் அமைதியும்என்னும் கவிதையில் காணமுடிகிறது. மண்வெட்டியால் கொத்தும்போது தற்செயலாக வெட்டுப்பட்டு இருதுண்டுகளாகி விழுகிறது ஒரு மண்புழு. துடிக்கும் அத்துண்டுகளை எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு குருவி சட்டென தன் அலகுகளிடையில் கொத்திக்கொண்டு மரக்கிளைக்குப் பறந்துபோய்விடுகிறது. உயிர்த்திருப்பதும் உயிர்துறப்பதும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை அதிசயம் என்று சொல்வதா, அவலம் என்று சொல்வதா? காற்றில் படபடக்கும் அரச இலை கிளியாகவும் கிளியின் சிறகசைப்பு அரச இலையாகவும்  மாயத்தோற்றம் காட்டும் கணத்தைச் சித்தரிக்கும் வரியிலும் அழகு நிறைந்திருக்கிறது. மாயக்காட்சிகளும் கனவுகளும் நம்மை வாழவைக்கும் விசைகள் அல்லவா?

வாழ்நாள் முழுதும் கவிதைக்குரிய கணங்களை சிவசுவின் கண்கள் தொடர்ந்து கண்டடைந்தபடியே இருக்கவேண்டுமென்பது என் வேண்டுகோள். அந்தத் தேடலும் பயணமும் மட்டுமே ஒரு படைப்பாளியின் மனத்துக்கு நிறைவை அளிக்கும். கவிஞரே ஓவியராகவும் இருப்பதால், இத்தொகுதியில் தன் கவிதைகளுக்கு தானே ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். கோடுகள் நளினத்தோடும் அழகோடும் உள்ளன.. சிவசுவுக்கு வாழ்த்துகள்.

(ஓவியக்கவிஞர் சிவசு எழுதிய ழ என்னும் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை )