Home

Sunday 20 February 2022

சென்றுகொண்டே இருக்கிறேன் - நேர்காணல்களின் தொகுப்பு

 

2016ஆம் ஆண்டில் பொங்கல் நாளன்று பதாகை இணைய இதழின் நண்பர்கள் என் படைப்புகளை முன்வைத்து ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வெளியிட்டனர். அதையொட்டி விரிவானதொரு நேர்காணலும் அவ்விதழில் வெளியானது.  அந்த நேர்காணலைப் படித்த நண்பர் கே.பி.நாகராஜன் “எல்லாக் கேள்விகளும் நான் கேட்க நினைத்த கேள்விகளைப் போலவும் எல்லாப் பதில்களும் எனக்காகவே சொல்லப்பட்ட பதில்களைப் போலவும்  இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

இலக்கிய வாசிப்புக்குள் அப்போதுதான் அவர் அடியெடுத்து வைத்திருந்தார். ஒட்டகம் கேட்ட இசை கட்டுரைத்தொகுதியைப் படித்துவிட்டு முதன்முதலாக கடிதம் எழுதி எனக்கு நண்பரானவர் அவர்.  அக்காலத்தில் அவர் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும்  ஏதாவது ஒரு கேள்வி இருக்கும். அதற்கு எழுதும் பதிலுக்காக அவர் ஆவலோடு காத்திருப்பார். ஒரு நீண்ட தொடர் நேர்காணலைப்போலவே எங்கள் கடிதப்போக்குவரத்து அமைந்திருந்தது. அந்த நேரத்தில் வெளிவந்த பதாகை நேர்காணல் அவருடைய மனத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது.


அதற்குப் பிறகு, வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இதழ்களில் ஏற்கனவே வெளிவந்திருந்த என்னுடைய சில நேர்காணல்களை அவராகவே இணையத்திலிருந்து  தேடியெடுத்துப் படிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு, அவை அனைத்தும் அப்படியே சிதறிப் போய்விடாத வகையில் தொகுத்து நூலாக்கிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார். ஒரு விதையைப்போல அவர் சொல் அன்று என் நெஞ்சில் விழுந்து பதிந்தது. எனக்கும் அத்திட்டம் பிடித்திருந்தது. ஆயினும் உடனடியாகச் செயல்பட முடியாதபடி அலுவலக வேலை நெருக்கடிகளில் நான் சிக்கியிருந்தேன். போதிய நேரமின்மையால் அம்முயற்சியில் இறங்காமல் தாமதித்தேன். இப்படியே இரண்டு ஆண்டுகள் கரைந்துவிட்டன.

26.05.2018 அன்று பி.கே.சிவக்குமார், கோ.ராஜாராம், சுந்தரமூர்த்தி, மகாலிங்கம், வெற்றிவேல் போன்றோரின் முயற்சியால் சென்னையில் என் படைப்புகளைப்பற்றிய  கருத்தரங்கமொன்று நடைபெற்றது. அத்தருணத்தை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நண்பர் பவுத்த அய்யனாரும் நானும் உரையாடி ஏற்கனவே  தீராநதி இதழில் வெளிவந்திருந்த நேர்காணல் ஒரு தனி பிரசுரமாக அச்சிட்டு வழங்கப்பட்டது. புத்தக வடிவத்தில் அதைப் பார்த்ததும் நண்பர் கே.பி.நாகராஜனுக்கு மீண்டும் பழைய கனவு அரும்பத் தொடங்கிவிட்டது.

முன்புபோல இப்போது வேலை நெருக்கடி எதுவும் இல்லை. வேலையிலிருந்து ஓய்வு பெற்றாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பொருளில்லை என்று எனக்கும் புரிந்தது. நானும் அவரும் இணைந்து நேர்காணல்களின் பழைய பிரதிகளைத் தேடத் தொடங்கினோம்  முதலில் நேர்காணல் வெளிவந்த இதழ்களின் பெயர்களை நினைவிலிருந்து எழுதித் தொகுத்துக்கொண்டோம். இணையம் வழியாக தேடித் தொகுக்க முடிந்த அனைத்து நேர்காணல் பிரதிகளையும் நாகராஜனே தொகுத்து முடித்துவிட்டார். ஆனால் அச்சிதழ்களைத் தேடுவதுதான் பெரிய சவாலாக இருந்தது. பல ஆண்டு காலமாக சேமித்துவைத்திருந்த பழைய பத்திரிகைத் தொகுப்புகள் எதுவும் அப்போது என்னிடம் இல்லை. வீடு மாற்றும் நேரத்தில் எல்லாத் தொகுதிகளையெல்லாம் நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டேன். எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதை இன்னொருவர் வழியாக மட்டுமே இனி பெறமுடியும் என்ற நிலையில் திகைத்து நின்றுவிட்டேன்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த நண்பர் மருதசாமியிடம் ஒருநாள் உரையாடிக்கொண்டிருந்த போது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் படித்த எழுத்தாளர்களின் நேர்காணல்கள் அனைத்தையும் தனியாக  வெட்டியெடுத்துத் தொகுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அக்கணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அத்தொகுப்பில் என்னுடைய நேர்காணல் இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு வாரத்துக்குள் தேடிப் பார்த்துவிட்டுச் சொல்வதாகத் தெரிவித்தார். சொன்னதுபோலவே ஒரு வாரத்துக்குப் பிறகு தொலைபேசியில் அழைத்து தன்னிடம் இருக்கும் தொகுதியில் இரண்டு நேர்காணல்கள் இடம்பெற்றிருப்பதாகச் சொன்னார். ஒன்று புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல். இன்னொன்று தமிழ் அரசி இதழில் வெளிவந்த நேர்காணல். எல்லாமே தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்தவை. அவற்றை உடனடியாகப் பிரதியெடுத்து அவரே நேரிடையாக பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்துவிட்டார்.

மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற தருணத்தில் மூத்த நண்பர் வளவ.துரையன் ஒரு நேர்காணல் எடுத்ததும் மொழிபெயர்ப்புகளுக்காகவே நடத்தப்படும் திசையெட்டும் இதழில் அந்த நேர்காணல் வெளிவந்ததும் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பிரதியும் என்னிடம் இல்லை. வளவ.துரையனிடம் விசாரித்தேன். அவரிடமும் இல்லை. நானும் அவரும் வெவ்வேறு நண்பர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தோம். ஒருநாள் வளவ.துரையன் தொலைபேசியில் அழைத்து நேர்காணல் வெளிவந்த இதழ் எழுத்தாளர் எஸ்ஸார்சியிடம்    (கனவு மெய்ப்படும் – நாவலாசிரியர்) இருப்பதாகவும் அவரே நேரிடையாக விசாரித்து உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அன்றே நான் எஸ்ஸார்சியைத் தொடர்புகொண்டு பிரதியைப் பெற்றுக்கொண்டேன்.

சொல்புதிது இதழுக்காக நண்பர் ஜெயமோகன் ஒரு நேர்காணலை எடுத்தார். ஆனால் அந்தத் தொகுப்பும் என்னிடம் இல்லை. வைத்திருக்கக்கூடும் என்று நான்  நம்பிய பல நண்பர்களை அழைத்து விசாரித்தேன். பாதுகாத்துவைக்கவில்லை என்பதையே அனைவரும் பதிலாகச் சொன்னார்கள். இதற்கிடையில் தற்செயலாக எங்கள் வீட்டு நூலகத்தின் புத்தகத்தாங்கியில் இருந்த ஒரு பழைய கோப்பில் நானே அந்த நேர்காணலின் கையெழுத்துப்பிரதியைக் கண்டுபிடித்தேன். ஆனால் வெளிவந்த மாதம், ஆண்டு விவரம் எதையும் நான் குறித்துவைக்கவில்லை. என் தேடல் தொடர்பான செய்தியை வளவ.துரையன் வழியாகத் தெரிந்துகொண்டு ஒருநாள் புதுவை பொறியியல் பேராசிரியர் க.நாகராஜன் என்னை தொலைபேசியில் அழைத்தார். அந்த இதழை வெகுகாலமாக தான் பாதுகாத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துவிட்டு தேவையான விவரங்களையும் சொன்னார். அடுத்தநாள் அந்த இதழை எனக்கு விரைவஞ்சலில் அனுப்பிவைத்துவிட்டார்.  

புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே உதகையில் உள்ள குரு நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் கவிதை முகாம்களையும் கலந்துரையாடல்களையும் ஜெயமோகன் நடத்திவந்தார். அப்போது அந்த அரங்குகளில் நானும் கலந்துகொள்வது வழக்கம். ஒருமுறை மரபும் இலக்கியமும் என்னும் தலைப்பில் நண்பர்களிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அன்று கேட்கப்பட்ட கேள்விகளையும் நான் அளித்த பதில்களையும் தனியாக ஒரு சுவடியில் எழுதிவைத்திருந்தேன். என்னுடைய தேடலின்போது அந்தச் சுவடியும் கிடைத்தது. அமைதியும் குளிரும் சூழ்ந்த நித்யா அரங்கமும் அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த அவருடைய நூலகமும் வட்டமாகச் சூழ்ந்து அமர்ந்திருந்த நண்பர்களின் முகங்களும் நினைவில் எழுந்தன. சில கணங்கள் அந்த நினைவேக்கத்தின் இனிமையில் திளைத்திருந்தேன். அந்த வினா விடைப் பகுதியையும் இத்தொகுதியில் சேர்த்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

தற்செயலாக இன்னொரு கோப்பில் மற்றொரு வினா விடைப்பகுதியையும் கண்டெடுத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் நானும் நண்பர் சகதேவனும் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு எங்கெங்கோ சுற்றியலைந்து கிரீஷ் கார்னாடின் நாடகங்களில் மையம் கொண்டது. அன்று நான் அவருடைய கேள்விகளுக்கு அளித்த பதில்கள் அவருக்கு மிகவும் நிறைவளித்தன. அவற்றை ஏதேனும் ஒரு வரிசையில் தொகுத்துப் பதிவுசெய்ய வேண்டும் என விரும்பினார். பிறகு அவரே ஒரு ஆலோசனையையும் வழங்கினார். ஒவ்வொரு நாடகமும் என்னைக் கவர்ந்த விதத்தையும் மொழிபெயர்த்ததற்கான காரணத்தையும் விரிவாக எழுதிக் கொடுக்கும்படி சொன்னார். அதன் விளைவாக அந்த வாரத்திலேயே பலிபீடம் நாடகத்தை முன்வைத்து அவருக்கு என் பதிலை எழுதிக் கொடுத்துவிட்டேன். பிறகு ஏதேதோ வேலை நெருக்கடிகளின் விளைவாக, அடுத்தடுத்து நான் எழுத வேண்டிய பதில்களை எழுதவில்லை. எப்படியோ அந்த இழை அறுந்துவிட்டது. இப்போது அந்தப் பதிலைப் படிக்கும்போது பிற பதில்களை எழுதாமல் விட்ட குறையை உணர்கிறேன். இருக்கும் ஒரு பதிலையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தொகுதியில் அதையும் இணைத்துக்கொண்டேன்.

ஏறத்தாழ இதே நேரத்தில்தான் வேலூரிலிருந்து நண்பர் ஸ்ரீவத்ஸன் எங்கோ பழைய புத்தகக்கடையில் கிடைத்த புத்தகத்தில் படித்ததாகச் சொல்லி குங்குமம் இதழில் எப்போதோ வந்த ஒரு சிறு நேர்காணலின் ஒளியச்சுப்பிரதியை அனுப்பிவைத்தார். நான் கேட்காமலேயே என் தேடலை அறிந்தவரைப்போல அவர் அந்த நேர்காணல் பிரதியை அனுப்பிவைத்த நேர ஒற்றுமையை நினைத்தால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. இந்த மூன்றுமே இந்த முயற்சியைத் தொடங்கும்போது நான் வைத்திருந்த உத்தேசப்பட்டியலில் இல்லாதவை. இவை இத்தொகுதியில் இருக்கவேண்டும் என்பது ஊழின் விருப்பம் போலும்.

கே.பி.நாகராஜன், மருதசாமி, வளவ.துரையன், எஸ்ஸார்சி, புதுவை நாகராஜன், ஸ்ரீவத்ஸன் ஆகியோர் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன். இவர்களுக்கு இணையாக இன்னொரு நண்பனின் நினைவும் நெஞ்சில் எழுகிறது. அவன் பெயர் துரைராஜ். பள்ளியில் என்னோடு படித்தவன். அவனுக்கு ரசூல் என்று பட்டப்பெயர் சூட்டி அழைத்துவந்தோம். நூலக வாசிப்பில் என்னைப் போலவே ஆர்வம் கொண்டவன். புகுமுக வகுப்புக்குப் பிறகு நான் கல்லூரிக்குச் சென்றபோது, அவன் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சியை முடித்தான். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயரைப் பதிந்த ஒருசில மாத இடைவெளியிலேயே அவனுக்கு தற்காலிக வேலை கிடைத்தது. இரண்டு மாதம், மூன்று மாதம் என விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்குப் பதிலாக பணியாற்றும் வாய்ப்பு. அதை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு பல பள்ளிகளில் அவன் வேலை செய்தான். அடுத்த கல்வியாண்டிலேயே அவனுக்கு நிரந்தர வேலை் கிடைத்துவிட்டது. நான் பட்டப்படிப்பை முடிக்கும் முன்பேயே அவன் மாதச் சம்பளம் வாங்கத் தொடங்கிவிட்டான். விடுப்பில் நானும் மற்றொரு நண்பனான பழனியும் அவனைச் சந்திக்கச் செல்வோம். அப்போது எங்களுக்கு கடையில் சிற்றுண்டியும் தேநீரும் வாங்கிக் கொடுப்பான் பேருந்து நிலையத்துக்கு அருகில் என்.சி.பி.எச். நடத்தும் புத்தகக்கண்காட்சிக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை எங்களுக்கு வாங்கிக்கொடுப்பான். அவனும் படிப்பான்.

ஏதோ காரணத்தால் படிக்கும் பழக்கத்தை அவனால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. “புதுசா என்ன கதை எழுதியிருக்கே, என்ன புத்தகம் எழுதியிருக்கே?” என்று கேட்டு புத்தகத்தை வாங்கிக்கொள்வானே தவிர, அதைப் படிக்கமாட்டான். ஆனால் என்னமோ புத்தகத்தைத் தினமும் படிப்பவனைப்போல மேசையிலேயே வைத்திருப்பான். தன்னைச் சந்திக்க வருகிறவர்களிடம் “இந்த எழுத்தாளர் யார் தெரியுமா? என் க்ளாஸ்மெட்” என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வதாக பிறகு கேள்விப்பட்டேன்.

அவனை எப்படியாவது வாசிப்பின் திசையில் மீண்டும் அழைத்து வந்துவிட வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு புத்தகத்தை அவனுக்குச் சமர்ப்பணம் செய்து அந்தப் பிரதியை அவனிடம் கொடுத்தேன். இன்னொரு தருணத்தில் ஊரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்ற போது, அவனை அழைத்துச்சென்று பெற்றுக்கொள்ள வைத்தேன். அத்தருணங்களில் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தானே தவிர, அப்புத்தகங்களை அவன் படிக்கவே இல்லை. ”என்னடா படிச்சியா?” என்று நானும் சந்திக்கும்போதெல்லாம் அவனைக் கேட்கும்போதெல்லாம் அவன் சாமர்த்தியமாக ஒரு சிறு புன்னகையோடு நழுவிவிடுவான்.

எப்படியோ மதுவின் பாதையில் அவன் சென்றுவிட்டான் என்னும் செய்தி மிகவும் தாமதமாகவே எனக்குக் கிடைத்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் தொடர்பிலிருந்து அவன் விலகிவிட்டான். உடல் தளரும்போதாவது மனம் மாறி மதுவின் பாதையிலிருந்து மீண்டும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு நாங்களும் அவனைச் சந்திக்கச் செல்லவில்லை. ஒரு காலத்தில் ‘மண்கட்டியை காற்று அடித்துப்போகாது’ புத்தகத்தை இரவோடு இரவாகப் படித்ததுபோலவே என் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேசுவான் என என் ஆழ்மனத்தில் ஒரு கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவனுடைய மறைவுச்செய்தி வந்த தருணத்தில் அந்தக் கோட்டை சுக்குநூறாக நொறுங்கிப் போனது.

அவன் படிக்காத என் புத்தகங்கள் அவனுடைய மேசை மீதோ அல்லது சட்டமிட்டு மாலையிட்ட அவனுடைய புகைப்படத்தின் முன்னாலோ இன்றும் இருக்கக்கூடும். நான் படிக்கவேண்டும், எழுதவேண்டும் என உளமார நினைத்த இளம்பருவத்துத் தோழன் அவன். உரையாடல்களால் நிறைந்த இத்தொகுதியை அவன் நினைவுக்கு வணக்கத்துடன் சமர்ப்பணம் செய்வதில் என் மனம் சற்றே ஆறுதலடைகிறது.

இத்தொகுதியில் உள்ள நேர்காணல்களை எடுத்த திருஞானசம்பந்தம், சிபிச்செல்வன், கவிப்பித்தன், அப்பணசாமி, ஜெயமோகன், என்.சொக்கன், வளவ. துரையன், அப்சல், கே.ஆர்.மணி, சகதேவன், பவுத்த அய்யனார், க.பஞ்சாங்கம், மதுமிதா, கே.ஜே.அசோக்குமார், கிரிதரன் ராஜகோபாலன், எஸ்.செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நண்பர்களுக்கும், நேர்காணல்களை வெளியிட்ட  திண்ணை, ஆறாம் திணை, சிஃபிதமிழ், பதாகை, சொல்வனம், வாசகசாலை ஆகிய இணைய இதழ்களுக்கும் புதிய பார்வை, தீராநதி, தமிழ் அரசி, சொல்புதிது, திசையெட்டும், குங்குமம், பேசும் புதிய சக்தி ஆகிய அச்சிதழ்களுக்கும் என் அன்பும் நன்றியும். என் மனைவி அமுதாவின் ஒத்துழைப்பும் அன்பும் என்னுடைய எல்லா எழுத்து முயற்சிகளிலும் துணையாக விளங்குபவை. அவரையும் இந்தக் கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.  இந்த நேர்காணல் தொகுதியை ஒரு விதையாக நண்பர் நாகராஜன் என் நெஞ்சில் ஊன்றிய கணத்திலேயே அதற்கு நீரூற்றி, உரம்வைத்து ஒவ்வொரு நாளும் அதை வளர்த்துக்கொண்டே வந்தவர் என் நண்பர் சந்தியா நடராஜன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி

 

29.12.2021                                        மிக்க அன்புடன்

பெங்களூரு                                          பாவண்ணன்