1917ஆம் ஆண்டில் லண்டனில் ஒரு நாள் பகல்வேளையில் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணுக்கு தலைமையாசிரியரிடமிருந்து திடீரென ஓர் அழைப்பு வந்தது. உடனே அந்தப் பெண் அவருடைய அறைக்குச் சென்றார். அவரை ஏறிட்டுப் பார்த்த தலைமையாசிரியர் ”உங்கள் குடும்பம் நம் நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாக அரசுக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால் இதுவரை உனக்குக் கொடுத்து வந்த உதவித்தொகையை நிறுத்திவிட பள்ளிநிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இனி உனக்கு உதவித்தொகை கிடைக்காது” என்று அதிகாரத்துடன் தெரிவித்தார்.
தலைமையாசிரியரின்
சொற்களைக் கேட்டு திகைப்புடன் பள்ளியைவிட்டு வெளியேறி எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்துடன் லண்டன் தெருவில் நடக்கத் தொடங்கினார் அந்த இளம்பெண். அவர் பெயர்
கேதரின் மேரி ஹெய்லெமன் (Catherine Mary Heilemann). அவருடைய தாயார் லண்டனைத் தாயகமாகக் கொண்டவர். தந்தையாரோ சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்.
ஜெர்மனியைப் பூர்விகமாகக் கொண்டவர். முதல் உலகப்போரின்
காரணமாக, சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெர்மானியக்
குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதாலேயே லண்டன் சமூகத்தினரால் ஓர் இரண்டாம்தரக் குடிமகனைப்போல நடத்தப்பட்டு அடிக்கடி அவமானத்துக்குள்ளாகும் தன் தந்தையின் துயரை சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த காரணத்தால் லண்டனின் ஆதிக்க உணர்வின் மீது கேதரினுக்கு அளவற்ற வெறுப்பு பிறந்தது.
பதினாறு
வயதில் படிப்பை நிறுத்திவிட்ட கேதரின் வேலை தேடி பல அலுவலகங்களில் ஏறி இறங்கினார். செல்லும் இடங்களிலெல்லாம் அனைவரும் அவரை எதிரியாகவே பார்த்தனர். எந்த வேலையிலும் அவரால் நிரந்தரமாக நீடிக்க முடியவில்லை. வேலைகளையும் வசிப்பிடங்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார். எதிர்பாராத விதமாக, மிகவும் பாசத்தோடு அவரை வளர்த்த அவருடைய பாட்டி இறந்துவிட்டார். சிறையிலிருந்து விடுதலையான அவருடைய தந்தையாருடன் சில்லறை விஷயங்களுக்கெல்லாம் மோதல் ஏற்பட்டு கசப்பு வளர்ந்தது. வேறு வழியின்றி கேதரின் வீட்டைவிட்டு வெளியேறினார்.
உலகின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் லண்டனுக்கு படிக்க வந்திருக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஒருநாள் கேதரின் தற்செயலாகச் சென்றார். அங்கேயிருந்த சில
இந்திய மாணவர்களுக்கும் கேதரினுக்கும் இடையில் நல்ல நட்பு நிலவியது. அவர்களில் ஒருவர்
மோகன்சிங் மேத்தா. ஒருமுறை அவர்
தன் உரையாடலில் இந்தியாவில் நிகழும் சுதந்திரப்போராட்ட முயற்சிகளைப்பற்றியும் வன்முறையற்ற அகிம்சைவழிப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் காந்தியடிகள் பற்றியும் குறிப்பிட்டார். காந்தியடிகளைப்பற்றிய தகவல்கள் கேதரின் மனத்தில் ஒருவித ஆர்வத்தை ஊட்டின.
வெள்ளைக்காரர்கள்
தம் முதுகில் சுமக்கும் பாரமென இந்தியாவைக் குறிப்பிடும் சொற்களையே பள்ளிவகுப்புகளில் அடிக்கடி கேட்டு வளர்ந்த கேதரின் அன்றுதான் காலனியாதிக்கத்தின் உண்மையான பொருளைப் புரிந்துகொண்டார். வெள்ளைக்காரர்கள்
இந்தியாவைச் தன் சுரண்டல் மையமாக வைத்திருக்கிறார்கள் என்னும் பார்வை அவருக்குப் புதிதாக இருந்தது. இந்தியாவைப்பற்றியும் காந்தியடிகளைப்பற்றியும் மேலும் பல விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் ராஜாராம்
மோகன்ராய், தாகூர், சாந்திநிகேதன், சுவாமி தயானந்தர், திலகர் போன்றோரைப்பற்றியும்
காந்தியடிகள் உருவாக்கிய புதிய கல்விக்கொள்கையைப்பற்றியும் பல உண்மைகளை ஆர்வத்துடன் தெரிந்துகொண்டார்.
இராட்டையில்
நூல்நூற்பதையும் கதர் பயன்பாட்டை அதிகரிப்பதையும் அதிகாரத்துக்கு எதிரான போராட்ட முறைகளாக அறிமுகப்படுத்தும் காந்தியடிகளின் சிந்தனை அவருக்கு புதுமையாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அவருடைய கிராம சுயராஜ்ஜியப்
பார்வையும் மானுட உழைப்பை மதிப்பதற்றதாக்கும் எந்திரயுகத்தை நோக்கிய போக்கிலிருந்து உழைப்பை மதித்துப் போற்றும் திசைக்கு தேசத்தைத் திருப்பும் அணுகுமுறையும் கேதரினை மிகவும் கவர்ந்தன. சத்தியமும் அகிம்சையும்
பல சிக்கல்களிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்கும் என கேதரின் உறுதியாக நம்பத் தொடங்கினார்.
அன்றைய தினமே
அவர் காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆசிரமத்தில் சேர்ந்து
பணியாற்ற நினைக்கும் தன் விருப்பத்தை அக்கடித்ததில் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் ஆவலுடன் பதில்கடிதத்துக்காகக் காத்திருந்த கேதரினை காந்தியடிகளிடமிருந்து வந்த கடிதம் நிராசைக்குள்ளாக்கியது. அத்தருணத்தில்தான், சேவை புரியும் ஆர்வத்தின் காரணமாக உலகின் பல பாகங்களிலிருந்து ஆசிரமத்துக்கு வருகை புரிந்த பல பெண்கள் ஆசிரம விதிகளுக்குக் கட்டுப்பட முடியாததாலும் இந்திய வெப்பநிலை ஒத்துவராத காரணத்தாலும் விலகிச்
சென்றிருந்தார்கள். அதனால் இந்தியாவின் சூழல் குறித்து விரிவாக கேதரினுக்குக் கடிதமெழுதிய காந்தியடிகள் ஆசிரமத்துக்கு வருவதைப்பற்றி அவசரமாக முடிவெடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்தியாவுக்குச் சென்று சேவை செய்வது என்னும் தன் முடிவில் உறுதியாக இருந்த கேதரின், அங்கு
செல்வதற்கு முன்னர் சில அடிப்படைப்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது என நினைத்தார். அதனால் மருத்துவச் செவிலியராகப் பயிற்சி
பெறத் தொடங்கினார் அதைத் தொடர்ந்து வணிகவியல் வகுப்பில் சேர்ந்து ஒரு பட்டயப்படிப்பைப் படித்துத் தேறினார்.
காந்தியடிகளுக்கும் இர்வினுக்கும் இடையில் உருவான ஒப்பந்தப்படி 07.09.1931 அன்று தொடங்கிய இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் லண்டனுக்குச் சென்றிருந்தார். அவரைச் சந்தித்து தன் ஆவலையெல்லாம் தெரிவிக்க வேண்டுமென விரும்பினார் கேதரின். ஆனால் காந்தியடிகளின்
அடுத்தடுத்த வேலை நெருக்கடிகளுக்கு இடையில் சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்பே அமையவில்லை. ஒருமுறை கிழக்கு லண்டன் பகுதியில் கிங்க்ஸ்லே ஹால் என்னும் இடத்துக்கு வருகை தரவிருக்கிறார் என்று கிடைத்த செய்தியை நம்பி, அங்கே சென்று
நீண்ட நேரம் காத்திருந்தார். எதிர்பாராத விதமாக வேறொரு அவசரக் கூட்டத்துக்கு காந்தியடிகள் சென்றுவிட்டதால் அன்றைய தினம் அவர் கிங்க்ஸ்லேக்கு வரவில்லை. அதனால் காந்தியடிகளைச்
சந்திக்கும் வாய்ப்பு தவறியது.
இன்னொரு
முறை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகை தரவிருக்கும் செய்தியை அறிந்து, அங்கு சென்று
காத்திருந்தார் கேதரின். அன்றும் தவிர்க்கமுடியாத காரணத்தால் வேறொரு கூட்டத்துக்குப் புறப்பட்டுச் செல்லும் அவசரத்தில் காந்தியடிகள் யாரையும் சந்திக்காமலேயே சென்றுவிட்டார். பிறகு லண்டனைவிட்டு அவர் புறப்படும் வரைக்கும் கேதரின் மேற்கொண்ட எந்த முயற்சிக்கும் வெற்றி கிட்டவில்லை.
அதே
ஆண்டு இறுதியில் ஒருநாள் லண்டனில் படித்து இந்தியாவுக்குச் சென்றுவிட்டிருந்த பழைய நண்பர் மோகன்சிங் மேத்தாவிடமிருந்து கேதரினுக்கு ஒரு கடிதம் வந்தது. ராஜஸ்தானில் உதய்ப்பூரில்
அவரே ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அதன் ஆசிரியையாக கேதரின் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். கேதரினுக்கும் அது ஒரு நல்ல திட்டமாகத் தோன்றியது. உடனே குழந்தைகளுக்குக்
கற்பித்தல் தொடர்பான ஒரு குறுகியகாலப் படிப்பில் சேர்ந்து வெற்றிகரமாக படித்துத் தேர்ச்சி பெற்றுவிட்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
மோகன்சிங் தன் உதய்ப்பூர் பள்ளிக்கு வித்யாபவன் என்று பெயர் சூட்டியிருந்தார். கேதரின் அங்கு குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும் விடுதிக்காப்பாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். கல்வியின் வழியாக குழந்தைகளுக்கு சமூக சீர்திருத்தக் கருத்துகளைக் கற்றுத் தருவதில் கேதரின் மகிழ்ச்சியடைந்தார் என்றபோதும், தான் நினைத்திருந்த அளவுக்கு முற்போக்கானதாக
இல்லை என்னும் மனக்குறையும் அவருக்கு இருந்தது.
காந்தியடிகளின் ஆதாரக்கல்வித் திட்டத்தில் இருப்பதுபோல தாய்மொழிப்பயிற்சியையும் உடலுழைப்பு ஈடுபாட்டையும் வளப்படுத்தும் கல்விமுறை
சார்ந்த கனவில் இருந்த கேதரினுக்கு வித்யாபவனின் சூழல் சற்றே ஏமாற்றமளித்தது. அங்கு படித்த பிள்ளைகள் அனைவருமே உயர்தட்டு, நடுத்தட்டுக் குடும்பங்களைச்
சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அடித்தட்டு, ஏழைப்
பிள்ளைகள் ஒருவருமே இல்லை என்பது அவருக்கு உறுத்தலாக இருந்தது. தாய்மொழியைக் கற்றுத்
தருவதற்குப் பதிலாக
பிள்ளைகளுக்கு ஆங்கில மொழி கற்றுத்தரப்பட்டது. இராட்டையில் நூல்நூற்றல், நெசவு போன்ற உடலுழைப்பு சார்ந்த பயிற்சிகளுக்கு அங்கே இடமேயில்லை.
அதனால் பள்ளி நேரத்துக்குப் பிறகு கேதரின் சாதிமத வேறுபாடுகளைக் கடந்து ஊருக்குள் சென்று அனைவரையும் நேரில் சந்தித்து எல்லா ஏழைச் சிறார்களையும் திரட்டி கல்வி கற்பிக்கத் தொடங்கினார். மிக விரைவாக அவர் கற்றுக்கொண்ட இந்தி மொழிப்பயிற்சி மக்களுடன் நெருங்கி உரையாட பெரிதும் உதவியாக இருந்தது. அங்கு வசிக்கிற
கற்கும் வாய்ப்பில்லாத பெண்களையும் மறுபுறம் திரட்டி, அவர்களையும் கொஞ்சம்
கொஞ்சமாகப் படிக்கவைத்தார். மூத்த பெண்களிடம் உரையாடும்போது முகத்தைத் திரைபோட்டு மூடும் பழக்கத்தையும் பெண்குழந்தைகளுக்கு சிறு வயதிலே திருமணம் செய்யும் பழக்கத்தையும் கைவிடுமாறு எடுத்துச் சொல்லி மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக விளங்கினார். ஒரே சமயத்தில் கல்விப்பணிகளிலும் சீர்திருத்தப்பணிகளிலும் அவர் ஆர்வத்துடன் தொண்டாற்றினார்.
குழந்தைகளிடம் அவர் பழகும் விதத்தையும் அன்புடன் கற்பிக்கும் முறையையும் எவ்விதமான வேறுபாட்டுணர்வுக்கும் இடம்தராமல், அனைவரோடும் நெருங்கிப் பழகும் தன்மையையும் பார்த்த ஊரார் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் அவரை சரளா பெஹன் என்று அழைக்கத் தொடங்கினர். அன்று முதல் அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.
ஆதாரக்கல்வித்திட்டத்தின் பயிற்சி முறைகளைப்பற்றி நேரிடையாக அறிந்துகொள்வதற்காக 1935இல் பத்துநாள் தசரா விடுமுறையில் சரளா பெஹன் வார்தா ஆசிரமத்துக்குச் சென்றார். அதிகாலையில் நடைப்பயிற்சிக்குப்
புறப்பட்ட காந்தியடிகளை அன்றுதான் முதன்முறையாக நேரில் சந்தித்தார். இடுப்பு வேட்டியுடன் பருத்திச்சால்வையால் உடலைச் சுற்றி மூடியபடி நடந்துவந்த காந்தியடிகள் அவரைப் பார்த்ததும் ஒரு கணம் நின்று, “நீங்கள் ஆசிரமத்துக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? யார் நீங்கள்?” என்று கேட்டார். அவருக்கு வணக்கம்
சொன்னபடி சரளா பெஹன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனே அவர் புன்னகைத்தபடி “ஓ, இரண்டு
பெயர்களுடன் இருப்பவர் நீங்கள்தானா? உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். தொடர்ந்து “எத்தனை
நாட்கள் இங்கே தங்குவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்ட கேள்விக்கு, சரளா பெஹன் “பத்து நாட்கள்” என்று பதில் சொன்னார். உடனே காந்தியடிகள்
“அப்படியா, மிகவும் நல்லது. உங்கள் சேவையை ஏதேனும் ஒரு துறையில் நான் பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்று கேட்டார். “நிச்சயமாக” என்று புன்னகையுடன்
பதில் சொன்னார்.
சரளா பெஹனை கிராம சுகாதாரப் பணிகளிலும் ஆசிரமத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த
ஒரு சிறுமியைக் கவனித்துக்கொள்ளும் பணியிலும் ஈடுபடுத்தினார் காந்தியடிகள். மேலும் கூடைநிறைய பஞ்சை எடுத்துக் கொடுத்து அதிலிருக்கும் கொட்டைகளை நீக்கும் வேலையையும் கொடுத்தார். பஞ்சைப் பிரித்தெடுக்கும் வேலை பழகியதும் தக்களியிலும் இராட்டையிலும் நூல் நூற்கவும் தறியில் துணிநெய்யவும் சரளா பெஹனுக்கு பயிற்சியளிக்க மேரி பார் (Mary
Barr) என்பவரை ஏற்பாடு செய்தார். கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் நிர்மாணப்பணிகளைப்பற்றி அவருக்கு முழுமையான ஒரு தெளிவு கிடைத்தது.
ஆசிரமவாசம்
அவருக்கு முழுநிறைவை அளித்தது.
வழக்கமான கல்வித்திட்டம், ’கல்வியை அடுத்து உற்பத்தி’ என்னும் கொள்கை
சார்ந்ததாக இருக்கும் நிலையில் காந்தியடிகள் வகுத்தளித்த கல்வித்திட்டம் ‘உற்பத்தி வழியாகக் கல்வி’ என்னும் கொள்கையை
அடியொற்றியதாக இருப்பதைக் கண்டு சரளா பெஹனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
எதிர்காலத்தில்
தான் முன்னெடுத்துச் செல்லவேண்டிய திட்டத்தைப்பற்றிய தெளிவை அக்கணத்தில் அவர் பெற்றார். ஓர் அமைப்புக்குள்
நின்று தன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாறாக, ஒரு கிராமச்சூழலில்
பொதுமக்களிடையில் நின்று செயல்படுத்தும் கனவு அவரைத் தூண்டியது.
உதய்ப்பூருக்குத் திரும்பிய சரளா பெஹன், முதல் வேலையாக
பள்ளிப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். பிறகு, அகமதாபாத்துக்குச் சென்று புதிதாக
உருவாகியிருந்த நெசவுத்தொழிலாளர் குடியிருப்புக்குச் சென்று, ஆசிரமத்தில் பெற்ற
பயிற்சியின் அடிப்படையில் கல்விப்பணிகளையும் சுகாதாரப்பணிகளையும் மேற்கொண்டார். சில மாதங்களிலேயே அங்கு நிலவிய வெப்பச்சூழலின் காரணமாக, அவரை மலேரியா
நோய் தாக்கியது. ஆயினும் அவர்
ஆங்கில மருந்துகளை உட்கொள்ள மறுத்து இயற்கை மருத்துவமுறைகளையே தொடர்ந்து மேற்கொண்டார். அது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பலனை அளித்தது. ஆயினும் குணமடைவதற்கான
காலம் நீண்டுவிட்டது. அது அவரை மிகவும் பலவீனமாக்கிவிட்டது. தற்செயலாக அவரைச் சந்திக்க வந்த ஜம்னாலால் பஜாஜ் வழங்கிய ஆலோசனைக்கு இணங்க, சரளா பெஹன்
மீண்டும் வார்தா ஆசிரமத்துக்கே சென்றார். ஆசிரமத்தில் தங்கியிருந்த
அரியநாயகமும் ஆஷாதேவியும் அவரை நல்லவிதமாகப் பார்த்துக்கொண்டனர். அரியநாயகத்தின்
குடும்பம் அவரை நன்கு பார்த்துக்கொண்டது. அவர்களுடன் இணைந்து நிர்மாணப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டதில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
சரளா பெஹன் தினசரி அலுவல்களில் உற்சாகமாக இருந்தாலும் அவருடைய
உடல்நலம் சீராகவில்லை. அவரை மீண்டும் மலேரியா நோய் தாக்கியது. காந்தியடிகளின் நண்பரும் இயற்கை
வைத்தியருமான தின்ஷா மேத்தாவிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டார். தொடர்ச்சியான மூன்று மாத சிகிச்சையின் பலனாக அவர் உடல்நலம் சற்றே தேறியது. ஒருவேளை குளிர்ந்த
சூழலில் சிறிது காலம் வசித்தால் விரைவில் முழுமையாக உடல்நலம் தேறிவிடும் என காந்தியடிகளும் மற்ற நண்பர்களும் சரளா பெஹனுக்கு ஆலோசனை வழங்கினர். இமயமலை அடிவாரத்தில்
உள்ள உத்தர்காண்ட் பகுதியில் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த சனோடா என்னும் ஊரில் காந்தி ஆசிரமத்தையே அனைவரும் பரிந்துரைத்தனர். காந்தியடிகளுக்கும் அதுவே பொருத்தமான இடமாகத் தோன்றியது. அதன் விளைவாக
அனைவரிடமிருந்தும் சரளா பெஹன் விடைபெற்றுக்கொண்டு சனோடா ஆசிரமத்துக்குச் சென்று சேர்ந்தார். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் நிர்மாணப்பணிகளிலும் ஈடுபட்டு உழைத்தார்.
மலைவாசத்தின்
காரணமாக அவருடைய உடல்நலம் மெல்ல மெல்ல தேறியது.
மீண்டும்
பழைய தெம்புடன் நடமாடத் தொடங்கினார்.
சனோடாவிலிருந்து புறப்பட்டு குமான் மலைத்தொடரில் திபெத் எல்லைக்கருகில் அதிக அளவில் போட்டியா மக்கள் வசிக்கும் கெளசானி என்னும் இடத்திற்குச் சென்றார் சரளா பெஹன். இந்தி மொழியில்
ஏற்கனவே சரளா பெஹன் தேர்ச்சி பெற்றவர் என்பதால், அங்கு வசித்துவந்த
மக்களோடு அவரால் எளிதில் நெருங்கிப் பேச முடிந்தது. அங்கு நிலங்களில்
உழும் வேலையை மட்டுமே ஆண்கள் செய்தனர். மற்ற எல்லா
வேலைகளையும் பெண்களே செய்தனர். அவர்களிடம் மணிக்கணக்கில்
பேசிப் புரிய வைக்க முயற்சி செய்தாலும், சொந்த முன்னேற்றம் சார்ந்தும், சமூக முன்னேற்றம் சார்ந்தும் எவ்விதமான ஆர்வத்தையும் உருவாக்கமுடியவில்லை.
”நம்மைச் சுற்றியிருக்கும் சூழலை முதலில் நன்கு ஆய்வு செய்யவேண்டும். நிராசைப்படாமல் மக்களுடன் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் உரையாடிப் பழகவேண்டும். அச்சூழலில் நாம் ஆற்றுவதற்குப் பொருத்தமான செயல் என்ன என்பதைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு கிடைக்கும். பிறகு நம் செயல்களைத் திட்டமிட்டு செய்யத் தொடங்கலாம். அச்செயலில் தொடர்ச்சியாக இருபதாண்டு காலம் நம் வாழ்க்கையையே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். நாம் எதிர்பார்க்கிற
மாற்றத்தைக் காண்பதற்கு அது ஒன்றே சிறந்த வழி” என
ஏற்கனவே ஒருமுறை காந்தியடிகள் சொன்ன சொற்களை அப்போது சரளா பெஹன் நினைத்துக்கொண்டார்.
கெளசானியே தன் பணியிடம் என்பதை அவருடைய ஆழ்மனம் அவருக்கு உணர்த்தியது. அவருடைய பணிகளைப்பற்றி நன்கு அறிந்த அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் குன்றின் உச்சியில் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை ஆசிரமமாக வைத்துக்கொள்ள அவருக்கு வழங்கினார். இறந்துபோன தன் மனைவியின் நினைவாக அவரே அந்த ஆசிரமத்துக்கு லட்சுமி ஆசிரமம் என்று பெயர்சூட்டினார். சரளா
பெஹன் அந்த இடத்திலிருந்து தன் பணிகளைத் தொடங்கினார்.
08.08.1942
அன்று பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் ’செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். மறுநாளிலிருந்து நாடெங்கும் தேசியத் தலைவர்களை அரசு தேடித்தேடி கைது செய்து சிறையில் அடைத்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்களும்
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் நீட்சியாக ஒரு நாள், ஜார்கண்ட்டில் அல்மோரா
மாவட்டத்தைச் சேர்ந்த தெகாட், சலம்,
சுல்த் ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கலைக்க முயற்சி செய்தது. கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்து
தேடுதல் வேட்டை என்கிற பெயரில் கண்ணில் தென்பட்ட அனைவரையும் அடித்து வீழ்த்தியது. கால்நடைகள் கொல்லப்பட்டன. வீடுகளும் விளைந்து நின்ற வயல்வெளிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. ஏழைகள் சேமித்துவைத்திருந்த தானியமூட்டைகள் கொள்ளையிடப்பட்டன. சலம் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றதால், பெண்களும் குழந்தைகளும்
வனப்பகுதிக்குள் நுழைந்து தலைமறைவாக தங்கியிருந்து உயிர்பிழைத்தனர்.
’நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்கள் அரசியல் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது’ என்பது காந்தியடிகள் வகுத்தளித்த பொதுவிதி என்றபோதும், கண்ணுக்கு முன்னால் நடைபெறும் அட்டூழியங்களைப் பார்த்தபிறகு பொறுமையாக இருக்கமுடியாத சரளா பெஹன் வெளிப்படையாகவே அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தார். சனோடா ஆசிரமம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் அடைக்கலமாக விளங்கியது. காந்தி ஆசிரமத்தை ’ஆபத்தான இடம்’ என்றும் சரளா பெஹனை ’ஆபத்தான பெண்மணி’ என்றும் குறிப்பிட்டு அல்மோரா மாவட்ட நிர்வாகத்திலிருந்து குமான் கமிஷனருக்கு ஒரு புகார்க்கடிதம் சென்றது. சரளா பெஹனின்
தினசரிச் செயல்பாடுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டன.
02.09.1942
அன்று பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எண்ணற்ற காவலர்கள் அடங்கிய ஒரு குழுவே கிராமத்துக்குள் நுழைந்து காந்தி ஆசிரமத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த தொண்டர்களைத் தாக்கி கைது செய்தது. ஆசிரமம் இழுத்து
மூடப்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்த கிராமத்தினர் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது. ஒவ்வொருவருக்கும் வருமானத்தைவிட ஆறேழு
மடங்கு அதிகமான தொகையை அபராதமாக விதித்தது.
காவல்துறையின் அநீதியான நடவடிக்கைகளைப்பற்றி விவரங்களைச் சேகரித்து, விரிவாக ஒரு
ஆவணத்தை உருவாக்கிய சரளா பெஹன் நைனிடாலுக்குச் சென்று கமிஷனராக இருந்த ஆக்ஷன்
என்பவரைச் சந்தித்து நேரிடையாகக் கொடுத்தார். சிறையிலிருக்கும் அப்பாவி கிராமத்தினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். ஆனால், சரளா பெஹனின்
வேண்டுகோளை அந்தக் கமிஷனர் பொருட்படுத்தவில்லை. மாறாக, சரளா பெஹனையும் அவருடைய ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாக எச்சரித்து அனுப்பிவைத்தார்.
ஏமாற்றத்துடன் திரும்பிய சரளா பெஹன் நீதிக்கான தன் போராட்டத்தைத் தொடர எண்ணி நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மீது ஒரு வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு விசாரணை பல நாட்கள் நீண்டது.
சிறைக்கு
வெளியே கூடாரமடித்துத் தங்கி, விசாரணைக்குச் சென்றார்
சரளா பெஹன். சிறையில் அடைபட்ட
கிராமத்து விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடைய உணவுத் தேவைக்காக பவுராரி, கத்யூர், சலம், சுல்த் போன்ற பிற கிராமங்களில் அலைந்து தானியங்களையும் பணத்தையும் அன்பளிப்பாகப் பெற்றுவந்து பங்கிட்டுக் கொடுத்தார். பாரெய்லி, லக்னோ, ஆக்ரா
ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் வழங்கினார்.
சரளா பெஹனின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவந்த காவல்துறை, அவரை கெளசானியிலேயே
சிறிது காலம் வீட்டுச் சிறையில் அடைத்துவைத்தது. இரவு நேரங்களில் அனைவரும் உறங்கிய பிறகு வீட்டைவிட்டு வெளியேறி காட்டு வழியே பல மைல்கள் தொலைவு நடந்து சென்று கிராமத்தினரைச் சந்தித்திப் பேசிவிட்டுத் திரும்ப அவர் பழகிக்கொண்டார். காவலர்களால் அவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அதனால் நீதிமன்றத்தில்
அவரை நிறுத்திய காவல்துறை அவருக்கு மூன்று மாத கடுங்காவல் தண்டனையை வாங்கிக் கொடுத்தது.
சிறைவாசம், சிறையில் வாடும்
மற்ற கிராமத்தினரின் துன்பங்களை உணர்ந்துகொள்ள உதவியாக இருந்தது. விடுதலை பெற்றதும்
திரிவேதி என்னும் மற்றொரு தொண்டருடன் லக்னோ, வார்தா, பம்பாய்
போன்ற பல இடங்களுக்குச் சென்று சிறையில் வாடும் தொண்டர்களின் குடும்ப நலனுக்காக நிதி திரட்டினார். அந்தப் பயணத்தில் அவருக்கு ஏறத்தாழ நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் கிடைத்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
அத்தொகையைப் பிரித்துக்கொடுத்தார் சரளா பெஹன். காவல்துறையின் கண்காணிப்பு
அப்போதும் தன் மீது இருப்பதை உணர்ந்த சரளா பெஹன் பகலில் பயணம் செய்வதை விடுத்து பெரும்பாலும் இரவுப்பயணங்களையே மேற்கொண்டார்.
சரளா பெஹனின் அரசியல் சமூக நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறை அவரை மறுபடியும் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது. அன்று அவருடைய
வழக்கை விசாரித்தவர் ஓர் இந்திய நீதிபதி. விசாரணையின் போது
அவர் ’ஓர் ஆங்கிலப்
பெண்ணாக இருந்துகொண்டு, ஆங்கிலேய அரசுக்கு எதிராக இயங்குவதை நீங்கள் அவமானத்துக்குரிய செயலாக உணரவில்லையா?’ என்று கேட்டார். அதைக் கேட்டதும்
சற்றும் தயங்காத குரலில் சரளா பெஹன் ‘இந்தியராக இருந்துகொண்டு
ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதை நீங்கள் அவமானத்துக்குரிய செயலாக உணரவில்லையா?’ என்று
கேட்டு எதிர்வினையாற்றினார். நீதிபதி அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
விடுதலைக்குப் பிறகு சரளா பெஹன் தன் ஆசிரமப்பணிகளை மீண்டும் தொடர்ந்தார். கிராமப்பெண்களிடையில் கல்வியையும் கைத்தொழிலையும் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதில் அயராது பாடுபட்டார். சிறையில் அடைபட்டிருக்கும்போது, விடுதலை பெற்றதும் தன்னைச் சந்திக்க வருமாறு காந்தியடிகள் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்ததும் உடனே புனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். சிறைவாசத்தின்போதே கஸ்தூர்பா மறைந்துவிட, விடுதலை பெற்றுவந்த காந்தியடிகள் தீன்ஷா மேத்தா வைத்தியசாலையில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து ஆசிரமச் செயல்பாடுகளைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் அடைந்திருக்கும் வெற்றிகளைக் கேட்டு காந்தியடிகள் மகிழ்ச்சியடைந்து வாழ்த்தினார். ’இப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஒருவர் அடையும் வெற்றி தோல்விகளைவிட, இதையெல்லாம் செய்தோம் என்று ஒருவர் அடையும் மனநிறைவே வாழ்க்கைக்குப் பொருள்கொடுக்கக்கூடியது’ என்று தெரிவித்தார்.
புனாவிலிருந்து அகமதாபாத் சென்ற சரளா பெஹன், அங்கு மிருதுளா
சாராபாய் நடத்திவந்த விகாஸ் கிருஹ என்னும் ஆசிரமத்துக்குச் சென்றார். இளம்விதவைகள், கணவர்களால்
கைவிடப்பட்ட பெண்கள், வயது முதிர்ந்த
பெண்கள் ஆகியோருக்கான ஆசிரமம் அது. வெறும்
உறைவிடமாக மட்டுமன்றி, தன்னம்பிக்கையையும் கல்வியையும் வேலைவாய்ப்புக்கான பயிற்சியையும் ஒருங்கே அளிக்கும் பயிற்சி நிலையமாக அது விளங்கியது. அந்த முயற்சி சரளா பெஹனை மிகவும் கவர்ந்தது. அப்படிப்பட்ட பயிற்சி
நிலையம் ஒன்றை தன் மலைப்பகுதியிலும் அமைக்க அவர் விரும்பினார். மலைப்பகுதிகளில் இளம்வயதுத் திருமணங்கள் மிகுதியாக நடைபெற்றன. அதனால் இளம்வயது
விதவைகளும் மிகுதியாக இருந்தனர். அத்தகையோருக்கு ஒரு புது
வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும் என்று அவர் நம்பினார்.
நண்பர்
திரிவேதியுடன் மீண்டும் ஒரு சுற்றுப்பயணம் செய்து ஏறத்தாழ எழுபதாயிரம் ரூபாய் திரட்டி பொதுமக்கள் ஒத்துழைப்போடு தன் கனவு ஆசிரமத்தை நிறுவினார்.
1946இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அம்மாகாணத்தில் புதிய அரசை அமைத்தது காங்கிரஸ். அப்போது முதல்வராக
பொறுப்பேற்றுக்கொண்ட கோவிந்த் பல்லா பந்த் அவர்களைச் சந்தித்து அல்மோரா மாவட்ட மலைப்பகுதிகளில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறல்களை விரிவாக எடுத்துரைத்த சரளா பெஹன் கிராமத்தினரிடமிருந்து காவல்துறை பறித்தெடுத்துச் சென்ற சொத்துகளும் ஆபரணங்களும் திரும்பக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவரோ உள்துறை அமைச்சரான கித்வாயைச் சந்திக்கும்படி அனுப்பினார். பல கட்ட சந்திப்புகளுக்குப் பிறகு அவர் அபகரிப்புகளைப்பற்றிய தகவல்கள் எதுவுமே நிர்வாகத்திடம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். அத்தகவல்களைத் தானே தேடித் திரட்டிக் கொடுப்பதாக அமைச்சரிடம் தெரிவித்த சரளா பெஹன் ஓராண்டுக்கும் மேலாக புலன்விசாரணை அலுவலர்களோடு மலைப்பகுதிகளில் எல்லா இடங்களுக்கும் அலைந்தார். எல்லாக் கிராமத்தினரையும்
நேரிடையாகச் சந்தித்து தேவையான தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தி அமைச்சரிடம் அளித்தார். 1950இல் பறிமுதல் செய்யப்பட்ட எல்லாச் சொத்துகளும் கிராமத்தினருக்குத் திரும்பக் கிடைத்தன. அபராதமாக அப்போது
அவர்கள் செலுத்திய தொகையும் திரும்பக் கிடைத்தது. சரளா பெஹனின்
தொடர்முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியை கிராமத்தினர் அனைவரும் மனமாரப் பாராட்டினர்.
மலைவாழ் மக்களிடையில் சரளா பெஹன் உருவாக்கிய லட்சுமி
ஆசிரமம் ஆற்றிய சேவை மகத்தானது. நடைமுறைக்கு உகந்த
வகையில் கல்வி, கைத்தொழில், சுகாதாரம், கால்நடை வளர்ப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தமக்கான கல்வித்திட்டமாக வடிவமைத்துக்கொண்டார் சரளா பெஹன்.
அவருடைய இடையறாத உழைப்பின் விளைவாக, கல்விநாட்டமும் உழைக்கும் ஆர்வமும்
கொண்ட இளைய தலைமுறையினர் உருவாயினர். இருபதாண்டு கால நீடித்த உழைப்பின் விளைவாக அந்த ஆசிரமத்தில் வெற்றி மலர்ந்தது. 1962இல் ஆசிரமத்தின் பொறுப்பை தன் மாணவியான சரளா பட் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு, அன்றுமுதல் மற்ற பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து பிகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு தொண்டர்களுடன் பயணம் செய்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அன்பளிப்பாகப் பெற்று நிலமற்றவர்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டார். சம்பல் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு வினோபா முன்னெடுத்த கொள்ளையர் மறுவாழ்வு முயற்சியிலும் சரளா பெஹனும் இணைந்து பணியாற்றினார். இத்தொடர் முயற்சியின் விளைவாக, 1971, 1972 காலகட்டத்தில் ஏறத்தாழ நூற்று எண்பது கொள்ளையர் மனமாற்றமுற்று சரணடைந்தனர்.
சரளா பெஹனுக்கு இந்தி மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தது. தன் சுயசரிதையைக்
கூட அவர் இந்தி மொழியில்தான் எழுதி வெளியிட்டார். அவர் நல்ல மேடைப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். ஏறத்தாழ இருபத்திரண்டு
நூல்களை அவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதினார். இந்தியில் எழுதியவற்றில்
’காப்பாற்றுவதா அல்லது அழிப்பதா’ (Samrakshan ya Nash) என்னும் நூலும் ஆங்கிலத்தில் எழுதியவற்றில் ’அழிந்துகொண்டிருக்கும் நம் பூமிக்குப் புத்துயிரூட்டுதல்’ (Revive our Dying Planet) என்னும்
நூலும் முக்கியமானவை.
சர்வோதயப்பணிகளில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 1979இல் அவருக்கு ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளையின் சார்பில் விருதளிக்கப்பட்டது. அப்போது கிடைத்த பரிசுப்பணத்தைக் கொண்டு ஜார்க்கண்டில் தரம்கர் என்னும் இடத்தில் இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மையமொன்றை ‘பர்வதிய பர்யவரன்
சம்ரக்ஷன் சமிதி’
(PPSS) என்ற
பெயரில் தொடங்கினார் சரளா பெஹன். தன்னுடைய எல்லா உடைமைகளையும் சரளா பெஹன் இந்த அமைப்புக்கே அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு, இறுதிக்காலம் வரைக்கும் ஒரு சேவையாளராகவே தொண்டாற்றினார்.
(கிராமராஜ்ஜியம்
– ஜனவரி 2022)