Home

Sunday 13 February 2022

பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை

  

பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.

1978-79 காலகட்டத்தில் தருமபுரி அரசு கல்லூரியில் பணியாற்றிய போது, கவிஞர் பழமலய் தருமபுரியைப்பற்றிய வரலாற்று விவரங்களைக் கேட்டறிந்து தொகுக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் சுற்றியலைந்திருக்கிறார். இரண்டாயிரம் நூற்றாண்டுக்கு முன்பாகவே அழிந்துபோன கோட்டையின் பெயர் ஊருக்குள் இன்னும் நிலவுவதைக் கேட்டு அவருக்குள் ஒருவித ஆர்வம் மூண்டிருக்கிறது. அந்தக் கோட்டை எங்கே இருந்தது என்பதையாவது பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆவலோடு விவரம் தெரிந்தவர்களிடம் கேட்கிறார். அவர்கள் சுட்டும் திசையில் நடந்தபோது, மலைத்தொடரைப் பார்ப்பதுபோல இருந்த ஏரிக்கரையின் பக்கம் வந்து நின்றுவிடுகிறார். வெட்டவெளியாக விரிந்திருந்த அவ்விடத்தில் வெகுநேரம் அலைபாய்ந்த அவர் கண்கள், அபூர்வமான ஒரு தருணத்தில் நிலத்தோடு நிலமென ஒட்டிக் கிடந்த கோட்டையின் அடிச்சுவரைப் பார்த்துவிடுகின்றன. இரண்டாயிரம் ஆண்டு பழமையான கோட்டையின் வேர். அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனையும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அது. பரவசம் மிக்க அக்கணத்தை ஒரு புனைவுப்படைப்புக்கே உரிய நேர்த்தியோடும் சொற்சிக்கனத்தோடும் எழுதியிருக்கிறார் பழமலய்.

பெருஞ்சேரலால் அழிந்துபோன தகடூரை கொஞ்சம் கொஞ்சமாக பல நூற்றாண்டுகளாக உழைத்து மக்கள் மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். குடியிருப்புகள் உருவாகின்றன. இன்னொரு ஏரி வெட்டப்படுகிறது. இன்னுமொரு ஊரும் உருவாகிறது.  பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் புதிய தகடூர் முழுமையடைகிறது.

ஒவ்வொரு நாளும் அலைந்து அலைந்து தகவல்களைத் திரட்டி, அன்றன்றே பழமலய் சிறுசிறு கட்டுரைகளாக எழுதி வைத்ததன் விளைவே இப்புத்தகம். தான் சந்தித்த வரலாற்று மனிதர்களைப்பற்றிய தகவல்கள், கோவில்கள், குளங்கள், சிற்பங்கள் என தெரிந்துகொண்ட தகவல்கள், பார்த்த இடங்களைப்பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரு வரலாற்று ஆய்வாளரைப்போல ஒன்றுவிடாமல் அவர் தொகுத்திருக்கிறார்.  அவை ஒவ்வொன்றையும்  வரலாற்று நிகச்சிகளோடு அழகாக இணைத்துக் காட்டி ஒரு வெளிச்சத்தை உணரவைக்கிறார். 334 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் 144 கட்டுரைகள் உள்ளன. இது தருமபுரியின் மண்ணையும் மக்களையும் பற்றிய மிகச்சிறந்த சமூக ஆவணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கவிஞரும் தமிழாசிரியருமான பழமலய்க்கு தருமபுரி நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

மல்லிகார்ஜுனர் கோவில் முன்மண்டபத்தில் தொங்கும் தூணொன்றைப் பார்த்ததாகச் சொல்கிறார் பழமலய். ஏழடி உயரம் கொண்ட தூண். தரையில் நிற்பதுபோலத் தோற்றமளித்தாலும் உண்மையில் தரையைத் தொடாமல் நிற்கும் அதிசயமான கல்தூண் அது. பாபிலோனின் தொங்கும் தோட்டத்தைப்போல, அது தொங்கும் தூண். அம்பாள் கோவில் அடிமேடையை பதினெட்டு யானைகள் தாங்கி நிற்கின்றன. தென்கரைக்கோட்டையிலும் சூளகிரியிலும் இசைத்தூண்கள் உள்ளன. அதியமான் கோட்டை சோமேசுவரர் கோவிலின் முன்னால் உள்ள ஒரு கல்வளைவுக்குள் புகுந்துவரும் மாலைக் கதிரொளி, குறிப்பிட்ட நாளில் சிவலிங்கத்தின் மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்திமுகம் என்னும் ஊரில் தரைமட்டத்திலிருந்து பதினைந்து அடி ஆழத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இப்படி தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணகிரியில் சையத்பாட்சா மலையில் இரு உடல்களுக்கு நான்கு சமாதிகள் அமைந்திருப்பதைப் பார்த்து, அதன் பின்னணியாக இருந்த வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டு எழுதிவைத்திருக்கிறார் பழமலய். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணகிரியை ஆண்டு வந்த கிருஷ்ணராஜாவும் அக்பரும் சண்டையிடுகின்றனர். ஏறத்தாழ ஆறுமாத காலம் தொடர்ந்து போர் நடைபெற்றபோதும், ஒருவராலும் முழு வெற்றியை அடையமுடியவில்லை. அப்போது அக்பரின் கனவில் தோன்றிய தெய்வம் “உன் படையிலுள்ள சையத் பாட்சா, சையத் அக்பர்: ஆகிய இருவரால் மட்டுமே கிருஷ்ணராஜாவை வெல்லமுடியும்“ என்று தெரிவிக்கிறது. அதையே இறைவனின் கட்டளையாகக் கொண்டு அக்பர் அவ்விருவரையும் சண்டைக்கு அனுப்பினார். போரின் தொடக்கத்திலேயே இருவருடைய தலைகளும் சீவப்பட்டன. ஆயினும் தலையற்ற உடல்கள் எதிரிகளோடு மோதியபடி மலைமீது ஏறின. எதிரிப்படையைச் சேர்ந்த வீரர்கள் அதைக் கண்டு அஞ்சி பின்வாங்கினர். பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அத்தலைகளுக்கு மலையடிவாரத்திலும் தலையற்ற உடல்களுக்கு மலையுச்சியிலும் தனித்தனியாக சமாதிகளை எழுப்பினார்.

அதியமான் கோட்டை காளிக்கு பங்குனி விழாவின்போது எருமைக்கிடாவை பலியாகக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அதையொட்டி பல இடங்களில் விசாரித்த பழமலய் அந்தப் பலியுடன் தொடர்புடைய பல கதைகளைத் திரட்டி ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் பதிவு செய்திருக்கிறார். அவர் கேட்டுப் பதிவு செய்திருக்கும் கர்ணகி கதை சுவாரசியமானது. மதுரையை எரித்த கர்ணகி வழியில் தென்பட்ட எல்லா ஊர்களையும் எரித்துக்கொண்டே வந்தாளாம். அவளைத் தடுக்க யாராலும் முடியவில்லை. எங்கோ ஒரு ஊரில் அவளுக்காக வெட்டிவைக்கப்பட்ட பொய்க்குழியில் இடறி விழுந்துவிட்டாள். மக்கள் அவளை அப்படியே கட்டிப் போட்டு விடுகிறார்கள். அவள் காளியாக மாறி விடுகிறாள். ஆண்டுக்கு ஏழு எருமைக்கடா பலி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து அவளை அமைதிகொள்ளச் செய்கிறார்கள் மக்கள். பொதுவாக எருமையின் ஆண்கன்றுகளையே பலிகொடுக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். மைசூர் என்பது மகிஷங்களின் ஊர். அதாவது எருமையூர். எருமைக்கடா சிங்கத்தையும் எதிர்த்து நின்று விரட்டியடிக்கும் ஆற்றலை உடையது. வெல்ல முடியாதது. கூற்றுவனுக்கு அதுவே ஊர்தி. அம்பாளின் ஊர்தி சிங்கம். அவள் சிங்கத்தின் மீது அமர்ந்து வந்து எருமையைக் கொல்கிறாள். தேவி எருமைவீரனைக் கொல்வதுபோன்ற கோலம் இந்தக் கருத்தை ஒட்டி உருவாகியிருக்கலாம். காளிக்கு எருமைக்கடா பலியிடும் சடங்கின் பின்னணியைப் புரிந்துகொள்ள பழமலய் சேகரித்திருக்கும் கதை உதவியாக இருக்கிறது.

தருமபுரி மக்களிடம் உரையாடும்போது தெரிந்துகொண்ட சில புதுமையான பழமொழிகளை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பழமலய். அவை அந்த வட்டாரத்துக்கே உரியவை. ‘கலகலவென்று இருக்கிற ஆலமரத்தை நம்பலாம். உம்மென்று இருக்கிற புளியமரத்தை நம்பக்கூடாது’, சக்களத்தி பிள்ளை தாகத்திற்கு உதவினால் தவத்திற்கு யார் போவார் வருணமலை’ ‘படுவது யானைப்பாடு படுப்பது முயல்படுக்கை’, ‘கோழியும் போய் குரல்வளையும் போன கணக்கு’, ‘அவரைக்கொல்லை மேய்ந்த மாடும் அடுத்தவனிடம் போனவளும் ஒன்று’, ’பாவம் என்று பழந்துணி தந்தானாம், வீட்டிற்கு முன்னாலேயே இழுத்து இழுத்து முழம் போட்டுப் பார்த்தானாம்’ ஒவ்வொரு பழமொழியும் உருவான பின்னணிக்கதை அருமையாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நரசையர் என்பவர் அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆங்கிலேயரைப்போலவே அவரும் மக்களைச் சுரண்டி செல்வத்தைச் சேர்த்திருக்கிறார். ஓய்வுபெற்று வீட்டோடு முடங்கியிருந்த ஓய்வுக்காலத்தில் அவர் மனம் மாறியது. தான் செய்த பாவத்துக்கு மாற்றாக தருமபுரியிலேயே ஒரு பெரிய குளம் வெட்டினார். அது அவர் பெயராலேயே நரசையர் குளம் என்று அழைக்கப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் முள்ளிக்காடு என்னும் சிற்றூரில் ஒரு காலத்தில் யாரோ நாடோடிப் பெண்ணொருத்தி இரட்டைப்பிள்ளை பெற்றெடுத்தாள். இரண்டும் இறந்துவிட்டன. அக்குழந்தைகளைப் புதைத்த இடத்தில் இரு செடிகளை நட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அவை வளர்ந்து மரங்களானபோது மக்கள் அவற்றை ராமர் மரம் – இலட்சுமணர் மரம் என்று அழைக்கத் தொடங்கினார்கள் வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி வந்தபோது, இராமர் மரத்தை வீழ்த்தி இழுத்துச் சென்றுவிட்டது.

ஊர் சார்ந்தும் இடம் சார்ந்தும் பழமலய் சேகரித்திருக்கும் கதைகள், மக்களுக்கு தம் இடங்களை பிறர் முன்னிலையில் மிக உயர்ந்ததாகக் காட்டிக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன. பாண்டவர்களில் ஒருவரான தருமர் ஒரு காலத்தில் அந்த ஊரில் தங்கியிருக்கிறார். விடிந்ததும் கோவிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு பூசை செய்திருக்கிறார். தருமர் வந்து தங்கிய ஊர் என்பதாலேயே அந்த ஊர் தருமர்புரி என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை நீள்கிறது. இன்னொரு கதையில் காசி ராஜாவின் மகன் தர்மாங்கதன் வருகிறான். அவன் வேட்டைக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒரு முனிவரின் சீற்றத்துக்கு இலக்காகி சாபம் பெறுகிறான். முனிவரின் சாபம் அவனை பாம்பாக மாற்றிவிடுகிறது. அழுது புலம்பிய மனைவியிடம் அந்தப் பாம்பை மடியில் கட்டிக்கொண்டு நாடெங்கும் எல்லாக் குளங்களிலும் மூழ்கி தீர்த்தமாடி வருமாறும், ஏதேனும் ஒரு குளத்தில் அவனுக்கு மனிதவடிவம்  மீண்டும் வரும் என்றும் தெரிவிக்கிறார். அதன்படியே குளம்தோறும் மூழ்கியபடி செல்கிறாள் மனைவி. தென்னாட்டில் பிரம்மாகுளத்தில் மூழ்கியபோது தர்மாங்கதன் மீண்டு வருகிறான். செய்தியை அறிந்த அரசன் அவனைச் சந்தித்து, அவனைத் தன் சேனாதிபதியாக வைத்துக்கொள்கிறான். வாரிசு இல்லாத அந்த அரசாட்சிப் பொறுப்பு, அரசனையடுத்து அவனிடம் வந்து சேர்கிறது. தர்மாங்கதன் ஆட்சி செய்த ஊருக்கு  தர்மபுரி என்று பெயர் வழங்கலாயிற்று.

தர்மபுரியைச் சுற்றியும் உள்ள கோவில்களில் காணப்படும் சிற்பங்களைப்பற்றிய தகவல்களையும் ஒன்றுவிடாமல்  பழமலய் தொகுத்துள்ளார். சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள இராமாயண, பாரதக் கதைக்காட்சிகளின் சிற்பங்களுடைய அழகையும் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின் நேர்த்தியையும் சுருக்கமாக முன்வைத்திருக்கிறார். எல்லாக் கோவில்களிலும் பாவை விளக்கேந்திய பெண்சிற்பங்களையே நாம் பார்த்திருப்போம். பழமலய் தருமபுரியில் தான் பார்த்த பாவை விளக்கேந்திய ஆண்சிற்பத்தைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். கோவிலூரில் குந்திக்கு ஒரு கோவில் எழுப்பப்பட்டிருக்கும் செய்தியையும் சேகரித்திருக்கிறார். காரிமங்கலத்தில் காணப்படும் நவகண்டச்சிற்பம், மதகுப்பட்டன் நினைவுச்சின்னம், கழுதைக்குறத்திக்கல், நடுகற்கள் என எல்லாத் தகவல்களையும் திரட்டித் தொகுத்திருக்கிறார்.

ஒருமுறை திப்புசுல்தான் தருமபுரிக்கு வந்திர்க்கிறார். அப்போது ராஜாபேட்டை என்னும் பகுதியில் ஒரு முகமதியப் பெரியவர் தங்கியிருக்கிறார். ஞானி. அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பிவைக்கிறார் திப்பு. “அவரால் எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் திப்புவை இங்கு வரச் சொல்” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார் ஞானி. பிழையை உணர்ந்த திப்பு உடனடியாக அவரைப் பார்க்கப் புறப்பட்டார். சந்தித்து உரையாடிய பிறகு தன் அன்பளிப்பாக ஞானிக்கு ஒரு வைரக்கல்லைக் கொடுத்தார். ஞானி தனக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து “இந்தா கற்கண்டு” என்று கொடுத்துவிட்டார். சிறுவனும் ஆவலோடு வாங்கித் தின்றுவிட்டான். அதைப் பார்த்து திகைத்து நின்ற திப்பு ஞானியின் மேன்மையை உணர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு தருமபுரிக்கு வரும்போதெல்லாம் அந்த ஞானியைச் சந்திக்காமல் சென்றதில்லை. அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் ‘அலிசா காதர் அவுலியா தர்கா’ என வழங்கிவருகிறது. டேகிஷ்பேட்டை மசூதிக்கு அருகில் இருந்த அந்தத் தர்காவைத் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தை பழமலய் பதிவு செய்திருக்கிறார்.

ஆங்கிலேயர் காலத்தில் பள்ளிகளில் பாடப்பட்ட ‘லாங் லிவ் கிங்’ என்னும் ஆங்கிலப்பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்தப் பாடல் தமிழிலும் சில பள்ளிகளில் பாடப்பட்டது என்னும் செய்தி பழமலயின் குறிப்புகள் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. தருமபுரி அவ்வைநகர் தெருவில் வசித்துவந்த எண்பது வயதுகொண்ட கிறித்துவர் தம்மிடம்  அந்தத் தேசிய கீதத்தைப் பாடிக் காட்டியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ‘கர்த்தாவே, ராஜனை, எங்கள் நல் வேந்தனைக் காப்பாற்றுமே. வெற்றி கம்பீரமும் கீர்த்த் பிரதாபமும் தீர்க்காயுள் ஆட்சியும் நீர் ஈயுமே’ என்று சில வரிகளையும் அவர் கொடுத்திருக்கிறார்.

தருமபுரியைப்பற்றி கண்ணால் கண்ட, காதால் கேட்ட ஒவ்வொரு சிறுசிறு தகவலையும் அர்ப்பணிப்புணர்வுடன் அலைந்து திரட்டித் தொகுத்திருக்கிறார் பழமலய். இரு ஆண்டுகள் தனக்குக் கிட்டிய ஓய்வுப்பொழுதுகளிலெல்லாம் நடந்து சென்றும் மிதிவண்டியில் சென்றும் பேருந்தில் பயணம் செய்தும் தகவலுக்காக ஒரு தேனீயைப்போல அலைந்திருக்கிறார்.

தருமபுரி வட்டாரத்தைச் சேர்ந்த முக்கியமான சுதந்திரப்போராட்ட ஆளுமையான தீர்த்தகிரி முதலியாரின் சந்ததியினரைச் சந்தித்து அவர் அளித்த தகவல்களையெல்லாம் தொகுத்திருக்கிறார் பழமலய். பாரதியார் மீது முதலியாருக்கு இருந்த ஈடுபாடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்மக்களை தனக்குச் சொந்தமான வேறொரு இடத்துக்குக் குடியேறச் செய்து  அந்தப் பகுதிக்கு பாரதிபுரம் என்று பெயர் சூட்டியது, விவேகாநந்தரை தருமபுரிக்கு அழைத்துவந்து உரையாற்ற வைத்த செய்தி ஆகியவை அனைத்துமே இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. சுப்பிரமணிய சிவாவின் சமாதியைப் பார்ப்பதற்காக பாப்பாரப்பட்டிக்குச் சென்ற பழமலய் அச்சமாதியின் முன் விழுந்து வணங்கிய குறிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்தியாகியின்  பாரதமாதா கோவில் கனவு, அதற்கு சுபாஷ் சந்திரபோஸ் அடிக்கல் நாட்டிய அளவிலேயே ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவேறியது.   

இறுதியாக, தமக்கு முன்னால் தருமபுரி பற்றி எழுதிய பெரியவர்களை நினைவுகூர்ந்தபடி தம் குறிப்பேட்டை நிறைவு செய்திருக்கிறார் பழமலய். தருமபுரியின் துரதிருஷ்டமோ அல்லது தமிழர்களின் துரதிருஷ்டமோ, 1978ஆம் ஆண்டிலேயே அவர் இப்படி ஓடி ஓடிச் சேகரித்து எழுதிய குறிப்புகள்  அனைத்தும் நூலாக்கம் பெறாமல் கையெழுத்துப் பிரதியாகவே தங்கிவிட்டன. செலவு கூடிய வேலை என்பதால், முந்நூற்றுச் சொச்சம் பக்கங்களையுடைய புத்தகத்தை வெளியிடுவது அவருக்கும் சாத்தியமற்றுப் போயிருக்கலாம். அந்த பிரதியைத் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளுமாக அவர் எழுதிய பதினாறு நூல்கள் வெளியான பிறகே, பதினேழாவது நூலாக அது வெளியானது. அதையும் பழமலய் தன் சொந்தச் செலவிலேயே வெளியிட நேர்ந்தது. மேலும் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தகடூர் இலக்கியப் பேரவையைச் சேர்ந்த நண்பர்களின் கூட்டுமுயற்சியால் இப்போது மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. இது தருமபுரி மக்களுக்கு பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை. சமீபத்தில் ஒசூர், மாயவரம், மதுரை, திருநெல்வேலி, சேலம், வெம்பூர் என ஒவ்வொரு இடம்சார்ந்தும் குறுவரலாறுகள் எழுதப்பட்டு வரும் சூழலில், தருமபுரியைப்பற்றிய பழமலயின் புத்தகம் இன்னும் சிலருக்கு இத்திசையில் எழுதுவதற்கான மன எழுச்சியை ஊட்டக்கூடும்.

 

((தருமபுரி மண்ணும் மக்களும் – த.பழமலய். திருவள்ளுவர் பொத்தக இல்லம், 51.25, எல்.எஸ்.என்.வளாகம், ஆறுமுக ஆசாரித் தெரு, தருமபுரி – 636701. விலை. ரூ.330)

 

(புக்டே – இணையதளத்தில் 02.02.22 அன்று வெளிவந்த கட்டுரை)