Home

Sunday 27 February 2022

ராம் மனோகர் லோகியா : அசைக்க முடியாத நம்பிக்கை

 

            31.07.1921 அன்று பம்பாயில் பரல் என்னுமிடத்தில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ஆலைக்கு அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். அடுத்த நாள்  திலகரின் முதலாம் நினைவுநாள். எல்லோரும் அறிந்த திலகருடைய கூற்றான சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்என்னும் முழக்கத்தை காந்தியடிகள் முதலில் நினைவுபடுத்தினார். பிறகு திலகருடைய சுயராஜ்ஜியக் கனவை நிறைவேற்றுவதே இந்தியரின் முதல் கடமையாகும் என்று அறிவித்தார். தொடர்ந்து நம் வாழ்வை சுதேசிமயமானதாக மாற்றிக்கொள்வதன் வழியாக மட்டுமே நாம் சுயராஜ்ஜியத்தை அடையமுடியும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

     அடிப்படையில் நம்முடைய ஆழ்மன இச்சையே அயல்நாட்டு ஆடைகளின் மீது நாட்டத்தை விதைக்கிறது. அயல்நாட்டு ஆடைகளைத் துறப்பதும் தீயிட்டு எரிப்பதும் குறியீட்டுத் தன்மை வாய்ந்த செயல்களாகும். துணிகளை எரிப்பதன் வழியாக, நம் இச்சையையே நாம் எரிக்கிறோம். இச்சையை ஒழிப்பதன் வழியாக நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்கிறோம். அந்நிய நாட்டு ஆடை அணிகலன்களை அணியமாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்நிய நாட்டுத் துணிமணிகளைக் குவித்து தீயிட்டுக் கொளுத்தும் புனிதச்சடங்கில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அந்நிய ஆடைகளை ஒருவகையில் அடிமைத்தனத்தின் அடையாளம். என்று சொல்லலாம். அவற்றைத் துறப்பதன் வழியாக மட்டுமே சுதந்திரம் என்னும் ஆலயத்துக்குள் செல்லும் தகுதியை நாம் அடையமுடியும்.

     அயல்நாட்டு ஆடைகள் எரிப்பை  அகத்தூய்மையோடும் புறத்தூய்மையோடும் இணைத்துப் பேசிய காந்தியடிகளின் உரை அனைவரையும் கவர்ந்தது. அவர் உரையாற்றத் தொடங்கும்போதே அந்த உரையின் எழுத்துவடிவ நகல்கள் அங்கிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. காந்தியடிகளின் சொற்களைத் தனக்கிடப்பட்ட கட்டளையென நினைத்து செயல்படும் உத்தரப்பிரதேசத் தொண்டரொருவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அவர் பெயர் ஹீராலால். அவர் பன்னிரண்டு வயதே நிரம்பிய தன்னுடைய மகனையும் அந்தக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.  பம்பாயில் ஒரு வித்தியாலயத்தில் படித்துவந்த அவன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியதிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு சேர்ந்து மறியலில் ஈடுபடுவதும் கூட்டங்களில் பங்கேற்பதுமாக காலத்தைக் கழித்துவந்தான். அந்த மகன் பெயர் ராம் மனோகர் லோகியா.

     கூட்டம் முடிவுற்றதும் மேடையை நெருங்கிய ஹீராலால் காந்தியடிகளுக்கு வணக்கம் சொன்னார். ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் காந்தியடிகளும் அவரைப் பார்த்துப் புன்னகையோடு பேசத் தொடங்கினார். ஹீராலால் தன் மகனை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சுதேசியாக இருப்பதைப்பற்றிய காந்தியடிகளின் கருத்துகள் தன் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பினும் மனத்துக்குள் அசைபோட்டபடி இருந்தார் அம்மாணவர். அன்று காந்தியடிகள் அம்மாணவரிடம் சில சொற்கள் பேசிவிட்டு ஆசி வழங்கினார்.

     ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் இணைந்து பதினைந்து வயதில் மெட்ரிக் தேர்வில் முதல் வகுப்பில் தேறினார்  மாணவரான லோகியா. பிறகு காசியில் இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டமும் பெற்றார்.  நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் அப்போது அவருக்கு அறிமுகமாயினர். மேற்படிப்புக்கு அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பினார் அவர் தந்தையார். ஆயினும் நவீன கருத்துகளைத் தெரிந்துகொள்ளும் ஆவலால் அந்த மாணவர் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

     ஒருமுறை ஜெனிவாவில் சர்வதேசச் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து பிகானீர் அரசர் சென்றிருந்தார். கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்குள் எப்படியோ அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்டு சென்ற லோகியா பார்வையாளர் அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டார். அரசர் உரையாற்றுவதற்கு எழுந்ததும், லோகியா தன் இருக்கையின் மீது ஏறி நின்று அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சீட்டி ஒலியை எழுப்பினார். பிறகு அரசர் தமது எஜமானரான ஆங்கிலேயருக்குத்தான் பிரதிநிதியே தவிர, இந்திய மக்களின் பிரதிநிதியல்ல என்று உரத்த குரலில் அறிவித்தார். கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக காவலர்கள் அவரை  உடனடியாக வெளியேற்றினர். அடுத்த நாளே, சர்வதேசச் சங்கத்தின் தலைவருக்கு பத்திரிகை வழியாக ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதி வெளியிட்டார் லோகியா. அப்பத்திரிகையின் பிரதிகளை, அச்சங்கத்தின் வாசலில் நின்று பொதுமக்களுக்கு விநியோகித்தார். அநீதியைக் கண்டதும் குரலெழுப்பும் வேகம் அவர் மனத்தில் இயல்பாகவே நிறைந்திருந்தது.

     அத்தருணத்தில் இந்தியாவில் நடைபெற்ற தாராசனா உப்பு சத்தியாகிரகத்தில் லோகியவின் தந்தையான ஹீராலால் கலந்துகொண்டு தடியடிக்கு இரையாகி சிறையில் அடைபட்டார். உப்பு சத்தியாகிரகத்துக்குப் பிறகு மாறியிருக்கும் இந்திய அரசியல் சூழலை கடிதம் வழியாக லோகியாவுக்குத் தெரிவித்தார் ஹீராலால். உப்பு சத்தியாகிரகம் தொடர்பான கூடுதலான தகவல்களை லோகியா தன் சொந்த முயற்சியால் இன்னும் கூடுதலாகத் திரட்டித் தொகுத்துக்கொண்டார்.  உப்பு சத்தியாகிரகத்தின் பொருளியல்என்ற தலைப்பில் காந்தியடிகளின் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம்  பெற்றார்.

     1933இல் லோகியா இந்தியாவுக்குத் திரும்பியபோது, அவருடைய தந்தையார் விடுதலையாகி கல்கத்தாவில் வசித்துவந்தார். வியாபாரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். ’சர்க்கா சமிதிஎன்ற பெயரில் ஓர் அமைப்பையும் நடத்திவந்தார். கல்கத்தாவிலேயே ஏதேனும் வேலை தேடிக்கொள்ளும்படி லோகியாவிடம்  கேட்டுக்கொண்டார் அவர். ஆனால் லோகியாவுக்கோ வேலை செய்வதைவிட, அரசியலில் ஈடுபட்டு மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்ற ஆவலே அதிகமாக இருந்தது. அவர் தந்தையார் அதற்கு தடையொன்றும் சொல்லவில்லை.

     17.05.1934 அன்று பாட்னாவில் ஆச்சார்ய நரேந்திர தேவாவின் தலைமையில் சோஷலிஸ்ட்டுகளின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் லோகியாவும் கலந்துகொண்டார். அம்மாநாட்டில் காங்கிரஸ்க்குள்ளேயே இருந்துகொண்டு இயங்கும் வகையில் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவ முடிவெடுக்கப்பட்டது. அக்கட்சியின் அமைப்புக்குழுவில் லோகியாவும் சேர்ந்துகொண்டார்.

     காந்தியடிகளின் நிர்மாணப்பணிகளையொட்டி லோகியாவின் மனத்தில் அவநம்பிக்கையே இருந்தது. அந்நிய ஆட்சியை அகற்றும் மகத்தான திட்டத்துடன் இத்தகு சில்லறை வேலைகளை இணைத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் எண்ணினார். தன் கருத்துகளையெல்லாம் ஒரு நீண்ட கடிதமாக எழுதி காந்தியடிகளுக்கு அனுப்பினார் லோகியா. ’எதிர்த்தரப்பைப் புரிந்துகொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் பதிலை எதிர்பார்ப்பதில் பொருளில்லைஎன்று அக்கடிதத்துக்கு காந்தியடிகள் பதில் எழுதினார். ’என் சொற்கள் அலட்சியமாகவோ கடுமையாகவோ தோற்றமளிக்கலாம். ஆனால் என் சந்தேகங்கள் உண்மையானவை. அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் அவசியமாக பதில் அளிக்கவேண்டும்என்று வலியுறுத்தி மீண்டும் கடிதமெழுதினார் லோகியா. அக்கடிதத்துக்கு மிக விரிவாகவும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும் ஒரு மகனுக்கு கடிதமெழுதும் பிரியத்துடன் காந்தியடிகள் பதில் எழுதி அனுப்பினார். அனைவரையும் காந்தமென தம்மை நோக்கி ஈர்க்கும் காந்தியடிகளின் பண்பு அவரை வியப்பில் ஆழ்த்தியது.

     1936இல் லட்சுமணபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் அயல்நாட்டுப் பிரிவொன்றைத் தொடங்கும் திட்டத்துக்கு அந்த மாநாட்டில் அனுமதி கிடைத்தது. அந்தப் புதிய பிரிவின் செயலாளராக லோகியா பொறுப்பேற்றுக்கொண்டார். அயல்நாடுகளில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்பற்றிய பிரச்சாரத்தை சீரான வகையில் முன்னெடுத்துச் சென்று ஆதரவு திரட்டுவதற்காகவே இப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. எட்டே மாதங்களில் பன்னிரண்டு நாடுகளின் நட்பையும் நம்பிக்கையையும் பெற்று அந்த நோக்கத்தில் வெற்றியைச் சாதித்துக் காட்டினார் லோகியா. 1938இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், காங்கிரஸ் அலுவலகத்தில் எப்பிரிவிலும் வேலை செய்யக்கூடாது என்றொரு புதிய விதியை கட்சி நிர்வாகம் உருவாக்கியதைத் தொடர்ந்து, லோகியா அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

     இரண்டாவது உலகப்போருக்கான ஏற்பாடுகளில் உலகமே இறங்கியிருக்கும் தருணத்தில் 24.05.1939 அன்று இந்தியாவும் எதிர்வரும் யுத்தமும்என்னும் தலைப்பில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுக்காக லோகியா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தன் வழக்குக்காக அவரே வாதாடி மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுதலை பெற்றார். 

     01.09.1939 அன்று இட்லர் போலந்து மீது தாக்குதல் நிகழ்த்த, அதுவே போரின் தொடக்கமாக ஆகிவிட்டது. இரண்டுநாள் இடைவெளியில் பிரிட்டன் ஜெர்மனியின் மீது போர்ப்பிரகடனம் செய்தது. அந்த வார இறுதியில் காந்தியடிகள் வைசிராயைச் சந்தித்துவிட்டுத் திரும்பினார். அச்சந்திப்பைப்பற்றி அவர் பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில் தன் அனுதாபம் இங்கிலாந்து, பிரான்சு பக்கமே உள்ளதென்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இதுவரையில் ஒருவராலும் வெல்லப்பட முடியாது என கருதப்பட்டுவந்த லண்டன் அழிந்துவிடுமோ என அஞ்சுவதாகவும் பாராளுமன்றக் கூட்டத்துக்கும் வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கும் நேரக்கூடிய அழிவை தன்னால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

     காந்தியடிகளின் செய்தி சோகியாவுக்கு சீற்றத்தை மூட்டியது. உலகம் முழுமைக்கும் பொதுவான தலைவரான ஒருவர் பிரிட்டனுக்கு ஏற்படக்கூடிய அழிவைப்பற்றி மட்டும் கலக்கத்தை வெளிப்படுத்துவது பொருத்தமற்ற செயலென அவர் நினைத்தார். உடனே லோகியா காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பிரிட்டன் கட்டிடத்துக்கு ஏற்பட வாய்ப்புள்ள சேதத்தை ஒட்டி நீங்கள் அனுதாபத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அது போரால் உலகெங்கும் ஏற்படக் கூடிய அழிவின் ஒரு பகுதியாகவே பிரிட்டன் கட்டிடத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஜெர்மனியில் உள்ள மென்ஸீன் மியூசியத்தின் அழிவும் தங்கள் விழிகளில் கண்ணீரைச் சுரக்கச் செய்யும் என நான் நம்புகிறேன்என லோகியா குறிப்பிட்டிருந்தார். லோகியாவின் கடிதத்தை ஹரிஜன் இதழில் வெளியிட்டு உலகிலுள்ள எந்த நினைவுச்சின்னமாக இருந்தாலும் அது சேதமாவது தனக்குத் துயரத்தையே அளிக்கும்என்று குறிப்பிட்டார் காந்தியடிகள். அதைத் தொடர்ந்து லோகியாவைச் சந்திக்க நேர்ந்த தருணத்தில் அவருடைய இடித்துரைப்பைப் பாராட்டினார். தம் அறிக்கைகளை ஒட்டி லோகியா தன் மனத்தில் தோன்றும் கருத்துகளை தவறாமல் எழுதி அனுப்பவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

     1940இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி லோகியா கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்தது. அத்தண்டனையைக் கண்டித்து எழுதிய காந்தியடிகள், நீதிமன்றத்தில் லோகியா அளித்த வாக்குமூலத்தின் நகலை பத்திரிகையில் பிரசுரித்தார். சிறையில் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த லோகியா 1941 ஆம் ஆண்டின் இறுதியில் விடுதலை பெற்றார். விடுதலைக்குப் பிறகு காந்தியடிகளைச் சந்தித்த லோகியா  சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு தூண்டினார். சுதந்திரம் தொடர்பாக ஹரிஜன் பத்திரிகையில் லோகியா தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.

     08.08.1942 அன்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறுதீர்மானத்தை நேருவைக் கொண்டே முன்மொழிய வைத்தார் காந்தியடிகள். தீர்மானத்தை ஆதரித்து லோகியா பேசினார். இறுதியாக தீர்மானம் நிறைவேறியது. அடுத்த நாளே தேசமெங்கும் தலைவர்கள் அனைவரையும் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இத்தருணத்தை எதிர்பார்த்திருந்த லோகியாவும் அவருடைய நண்பர்களும் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பித்துச் சென்று ஆளுக்கொரு திசையில் தலைமறைவானார்கள்.

     துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் ஒருவருக்கும் தெரியாமல் விநியோகிக்கும் குழுவில் இயங்கினார் லோகியா. மேலும், உஷா மேத்தா என்பவருடன் சேர்ந்து, பம்பாயில் காங்கிரஸ் ரேடியோ என்ற ரகசிய வானொலியை, மூன்று மாதங்கள் வெற்றிகரமாக நடத்தினார். அதுமட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியின் மாதாந்திரப் பத்திரிக்கையான இன்குலாப்இதழை, அருண் ஆசாத் அலியுடன் இணைந்து வெளியிட்டார்.  அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருந்ததால் லோகியாவைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது..

     பம்பாயில் லோகியாவின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்துவிட்ட காவல்துறை, அவரைக் கைது செய்ய சுற்றிவளைத்தது. ஆயினும் லோகியா எப்படியோ மாறுவேடத்தில் தப்பித்து கொல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார். பின்பு, அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் சென்றார். அங்கு நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இறுதியாக அங்கிருந்து நாடு திரும்பிய சமயத்தில், 1944ல் பம்பாயில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். மாதக்கணக்கில் நீடித்த சிறைக்கொடுமைகளால் லோகியாவுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது.

     இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் ஆங்கிலேய அரசு 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறையிலிருந்த தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. ஆனால் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனைக்காலம் முடிவடையும் காலம் வரைக்கும் சிறையிலேயே வைத்திருந்தது.  11.04.1946 அன்றுதான் அவர்கள் விடுதலை பெற்றனர். இடைப்பட்ட காலத்தில் எதிர்பாராத விதமாக லோகியாவின் தந்தையார் மறைந்துவிட்டார். பரோலில் வெளியே வரும் திட்டத்தை லோகியா ஏற்றுக்கொள்ளாததால் தன் தந்தையாரின் இறுதிச்சடங்கில் கூட அவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது.

     நீண்ட கால சிறைவாசத்தால் அவருடைய உடல்நலம் குன்றிவிட்டது. சிறிது நாட்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தபோதும் அவருடைய உடல்நிலை தேறவில்லை. அதனால் எங்காவது அமைதியாக ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுக்கும்படி நண்பர்கள் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தினர். நீண்ட யோசனைக்குப் பிறகு அவருடைய நண்பரான டாக்டர் ஜூலியோ மென்ஜீஸ் என்பவரின் அழைப்பை ஏற்று கோவாவில் உள்ள அசோல்னா என்னும் சிற்றூருக்கு 10.06.1946 அன்று லோகியா சென்றுசேர்ந்தார். கோவா அப்போது போர்த்துகீசியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு எவ்விதமான உரிமையும் இல்லாத நகரமாக அது விளங்கியது. சாதாரண பொதுக்கூட்டத்தைக் கூட்டுவதற்குக்கூட மூன்று நாட்கள் முன்பாக ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டிய சூழல் நிலவியது. பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலுமாகவே ஒடுக்கப்பட்டிருந்தது. சாதாரணமாகவே உரிமைக்குக் குரல் கொடுக்கும் இயல்புடைய லோகியா, அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்று நண்பர்களிடம் தெரிவித்தார். பொதுச்சேவையில் ஈடுபாடு கொண்ட காகோட்கர் ஒரே வாரத்தில் பனஜி என்னும் இடத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்.  அவர்களிடம் லோகியா உடனடியாக தனிநபர் உரிமைக்காக அகிம்சை முறையில் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். அனைவரும் ஒருமித்த குரலில் ஒப்புதல் அளித்தனர்.    ஒரு வார இடைவெளியில் மட்காவ் என்னும் ஊரில் கூட்டம் நடைபெற்றது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். காவல் அதிகாரிகள் ரத்தம் கொதிக்க சுற்றி நின்று செய்வதறியாது தவித்தனர். மேடையில் அமர்ந்த லோகியாவை போலீஸ் கமிஷனரே நேரில் வந்து கைது செய்தார். அதற்குள் அன்று அவர் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் கையெழுத்துப் பிரதிகள் பொதுமக்களிடையில் விநியோகிக்கப்பட்டுவிட்டன.

     லோகியாவின் கைதைக் கண்டித்து கோவா முழுதும் பல்வேறு கூட்டங்களும் கண்டன ஊர்வலங்களும் தன்னிச்சையாக நடைபெற்றன. இதனால் காவல்துறை அதிகாரிகள் லோகியாவை கோவாவின் எல்லைக்கு அப்பால் கடத்திவிடுவது என முடிவெடுத்து கொலேம் என்னும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூழலின் நெருக்கடி காரணமாக, பொதுக்கூட்டம் நடத்தவோ, சொற்பொழிவு நிகழ்த்தவோ எதற்கும் இனிமேல் கோவா குடிமக்கள் அரசு அனுமதியைப் பெறத் தேவையில்லை, தகவலளவில் தெரிவித்தால் போதுமானது என அரசு அறிவித்தது. அதிகாரிகள் தன் வாகனத்திலேயே லோகியாவை கோவாவின் எல்லைக்கு அப்பால் அழைத்துச் சென்று விடுதலை செய்தனர். இன்னும் மூன்று மாத காலத்துக்குள் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் உறுதி செய்யப்படவில்லையென்றால், கோவாவில் மீண்டும் தன் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு இந்தியப் பகுதிக்குள் நுழைந்தார் லோகியா.

     மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில் மக்கள் உரிமை தொடர்பாக கோவா அரசு எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை உணர்ந்த லோகியா உடனடியாக அடுத்தகட்ட போராட்டத்துக்குத் தயாரானார். கோவாவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக கோவா நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக 21.09.1946 அன்று பம்பாயில் காந்தியடிகளைச் சந்தித்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட காந்தியடிகள் முதலில் லோகியாவின் தந்தையாரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தார். சிறையிலிருந்து விடுதலையானதும் தன்னை ஏன் வந்து சந்திக்கவில்லை என்று உரிமையுடன் கடிந்துகொண்டார். “ஹீராலால் இறந்துவிட்டால் என்ன? உனக்கு நான் இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்என்று தெரிவித்து அனுப்பிவைத்தார்.

     29.09.1946 அன்று கோவாவின் எல்லையிலேயே லோகியாவும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். செய்தியை அறிந்த  காந்தியடிகள் அக்டோபர் இரண்டாம் தேதி தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கோவா சிறையிலிருக்கும் லோகியா விடுதலைக்காக இந்திய வைசிராய் உடனடியாக கோவா அரசுடன் பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அவருக்குக் கடிதங்களை எழுதி, லோகியா விடுதலைக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்தார். இறுதியில் ஆறு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் நள்ளிரவில் லோகியாவை ஒரு வண்டியில் ஏற்றிவந்த கோவா காவல்துறை அதிகாரிகள் இந்திய எல்லையில் விடுதலை செய்துவிட்டுச் சென்றனர்.

     நேரிடையாக சட்டத்தை மீறினாலொழிய ஒருவரையும் சிறையில் வைக்கமுடியாது என்று சட்டமிருக்கும் நிலையில் தன்னைக் கோவா அரசு  கைது செய்து நாற்பது நாட்கள் சிறையில் வைத்தது சர்வதேசச் சட்டப்படி குற்றமாகும் என்று கோவாவின் பிரதம நீதிபதிக்கு லோகியா கடிதம் எழுதினார்.  கோவா அரசு தமக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டுமென்றும் தெரிவித்தார். அந்தக் கடிதத்தை முழுமையாக காந்தியடிகள் ஹரிஜன் இதழில் வெளியிட்டு ஒவ்வொரு அரசும் தம் குடிமக்களின் கெளரவத்துக்கு இழுக்கு நேராதபடி கெளரவமுடன் நடந்துகொள்ள வேண்டும்என்ற குறிப்பையும் எழுதினார். லோகியாவின் கடிதநகல் உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. .நா.சபையில் உறுப்பினராவதற்கு கோவா அரசு விண்ணப்பித்திருந்த சமயம் அது. லோகியாவின் கடிதவிவரங்களைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைகளை மறுக்கும் அரசை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று ஐ.நா.சபை தெரிவித்துவிட்டது. ரஷ்யா, அமெரிக்கா, போலந்து என பல நாடுகள் போர்த்துகீசிய அரசின் கொள்கையைக் கண்டித்தன. கோவா அரசுக்கு இந்த நிகழ்ச்சி பெருத்த பின்னடவைக் கொடுத்தது.

            1946ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் எதிர்பாராத விதமாக முஸ்லிம் லீக்கின் செயற்குழுவைக் கூட்டிய ஜின்னா பிரிட்டிஷ் தூதுக் குழுவின் திட்டத்துக்கு அளித்திருந்த ஒப்புதலைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். ஆகஸ்டு 16 முதல் முஸ்லிம் மக்களை நேரடி நடவடிக்கையில் இறங்கும்படி தூண்டினார். அன்றுமுதல் நாடெங்கும் பயங்கரக் கலவரங்களும் மதவாத வெறியும் தலைவிரித்தாடின. தற்செயலாக அதே நாளில் கட்சிக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிட்டகாங் சென்றிருந்தார் லோகியா. அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பாக அரங்கில் கலவரம் வெடித்தது. கலகக்காரர்கள் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் அஞ்சியோடினர். ஏற்கனவே திட்டமிட்டிருந்த எந்த நகரத்திலும் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. எல்லா இடங்களிலும் கலவரங்கள் நடந்தபடி இருந்தன. கல்கத்தாவுக்குத் திரும்பிய லோகியா தன் கட்சித்தொண்டர்கள் உதவியோடு ஓர் அமைதிக்குழுவை நிறுவினார். கலவரப்பகுதிகளுக்குச் சென்று அக்குழு அமைதி திரும்புவதற்குப் பாடுபட்டது.

     இந்து முஸ்லிம் கலவரங்கள் நடைபெறும் பகுதிகளில் அமைதியைக் கொண்டுவருவதற்காக காந்தியடிகளும் அப்போது நவகாளிக்குச் செல்வதற்காக கல்கத்தாவுக்கு வந்திருந்தார். அவரை லோகியா சந்தித்து அமைதி திரும்புவதற்கான வழிகளைப்பற்றி கலந்துரையாடினார்.  காந்தியடிகள் எக்காரணத்தை முன்னிட்டும் கல்கத்தாவைவிட்டுச் செல்லவேண்டாமென்றும் முஸ்லிம் நண்பர்களை அவர்களுடைய வீட்டுக்கே சென்று சந்திக்கும்படியும் லோகியாவிடம் கேட்டுக்கொண்டார்.

     அப்போது கல்கத்தா நகரமே இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. நகரத்துக்குள் முஸ்லிம் நண்பர்கள் ஒருவரையும் லோகியாவால் பார்க்கமுடியவில்லை. எல்லோரும் நகரத்தைவிட்டு வெளியேறியிருந்தார்கள். ஒருவரைப்பற்றியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. மனம் தளராத லோகியா ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக புறப்பட்டுச் சென்றார். முஸ்லிம்கள் அனைவரும் முகத்தில் வெறுப்புணர்ச்சியைத் தேக்கியபடி தன்னையே பார்ப்பதை உணர்ந்தார். விறைப்பாக இருப்பவர்களைக்கூட தணிந்து பேசவைத்துவிடும் ஆற்றல் கொண்ட உரையாடல்காரரான லோகியா எவ்விதமான பரபரப்பையும் காட்டாமல் அவர்களிடம் அன்பாகவே உரையாடினார். அவரே அறிவார் என்றபோதும் முஸ்லிம் மாணவர் சங்க விடுதிக்குச் செல்லும் வழி என்ன என்று இயல்பாக விசாரித்தவாறு தன் உரையாடலைத் தொடங்கினார். இறுதியில் அவர்களே லோகியாவோடு வந்து வழிகாட்டுவதாக விடுதி வரைக்கும் அழைத்துவந்தனர். இருட்டும் வரை அந்த விடுதியிலேயே அவர் தேடிச் சென்ற முஸ்லிம் நண்பரோடும் மற்றவர்களோடும் பேசி பொழுது போக்கினார். அவர்களுடைய வினாக்களுக்கெல்லாம் விடையளித்தார். பிறகு அவர்களே அவரை அங்கிருந்து முஸ்லிம் பகுதியினரின் எல்லை வரைக்கும் அழைத்துவந்தனர். அதே எல்லையின் மறுபக்கத்தில்  இந்து நண்பர்கள் பதற்றத்தோடு காத்திருப்பதை லோகியா கவனித்தார். இரு அணியினரும் ஒருவரையொருவர் பார்த்து உறைந்து நின்றனர். லோகியா அக்கணத்தில் வேகத்தோடும் விவேகத்தோடும் செயல்பட்டு இரு அணியினரிடையிலும் இருந்த மெளனத்தை உடைத்து நட்புடன் உரையாடச் செய்தார். இரண்டாகப் பிளந்துவிட்ட ஆகாயத்தை மீண்டும் இணைத்து நிறுத்த விழையும் காந்தியடிகளின் முயற்சியை அப்போது லோகியாவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

     கல்கத்தாவில் நிலவத் தொடங்கிய அமைதி சில மாதங்களிலேயே மீண்டும் குலைந்தது. காந்தியடிகள் தில்லியிலிருந்து உடனடியாக கல்கத்தாவுக்குச் சென்றார். அப்போது லோகியா கல்கத்தாவிலேயே இருந்தார். கலவரத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த டிராம் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு தொழிற்சங்கங்கள் வழியாக முயற்சி செய்யுமாறு லோகியாவிடம் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள். இரு பகுதிகளுக்கிடையிலான சீரான போக்குவரத்து இருபக்க இறுக்கங்களையும் தளரச் செய்யும் என அவர் நம்பினார். லோகியாவின் முயற்சிகளுக்கு உடனடியாக பலன் விளைந்தது. கலவரப் பிரதேசங்களில் வண்டிகள் ஓடத் தொடங்கின. 14.08.1947 அன்று இரவில் சிரத்தானந்தா பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் லோகியா உரையாற்றினார். கூட்டத்தைத் தொடர்ந்து லோகியாவின் தலைமையில் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்துக்களும் முஸ்லிம்களும் பழைய கசப்புகளை மறந்து ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். அந்த அமைதி சில நாட்கள் மட்டுமே நீடித்தது.

     31.08.1947 அன்று மீண்டும் கலவரம் வெடித்தது. காந்தியடிகள் தன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். கலவரப் பகுதிகளுக்கு துணிச்சலுடன் சென்ற லோகியா,  ஒவ்வொரு நாளும் கலவரக்காரர்களைச் சந்தித்து உரையாடினார்.  ஆயுதங்களோடு காந்தியடிகளிடம் சரணடையும் வகையில் அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்கினார். நான்கு நாட்களில் கலவரங்கள் அடங்கி அமைதி திரும்பியதும், காந்தியடிகள் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

     எதிர்பாராத விதமாக அச்சமயத்தில் தில்லியில் கலவரங்கள் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களை தில்லியில் குடியேற்றுவதில் ஏராளமான பிரச்சினைகள் முளைத்தன. அனைத்தையும் சமாளிக்க முடியாமல் அரசு நிர்வாகம் தடுமாறியது. அதனால் நகரெங்கும் அமைதி குலைந்தது. கல்கத்தாவிலிருந்து காந்தியடிகள் உடனடியாக தில்லிக்குப் புறப்பட்டார். லோகியாவும் அங்கு சென்றார். கலவரப் பகுதிகளுக்கு நேரில் சென்று, மக்களைச் சந்தித்துப் பேசி அமைதி காக்கும்படி மன்றாடினார்.

     1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பம்பாயில் தொழிலாளர் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர் நலன் தொடர்பான சில செய்திகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல காந்தியடிகளின் சொற்கள் உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் தில்லிக்கு வந்திருந்த தொழிற்சங்கத்தலைவரொருவர், அந்தச் சந்திப்புக்கு உதவும்படி லோகியாவிடம் கேட்டுக்கொண்டார். அவ்வாறே லோகியா 29.01.1948 அன்று காந்தியடிகளைச் சந்தித்து பம்பாய் கடையடைப்புப் போராட்டத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். கடையடைப்பைப்பற்றி மட்டுமன்றி, சோசலிஸ்ட் கட்சியைப்பற்றியும் காங்கிரஸ் கட்சியைப்பற்றியும் சில செய்திகளையும் மனம்விட்டுப் பேச வேண்டியிருக்கிறதென்றும் மறுநாள் மாலையில் தன்னைச் சந்திக்குமாறும் காந்தியடிகள் தெரிவித்தார். ”நானும் உங்களிடம் மனம்விட்டுப் பேசவேண்டியிருக்கிறதுஎன்று புன்னகையுடன் சொல்லிவிட்டுப் பிரிந்தார் லோகியா. அடுத்தநாள் மாலை அவரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காந்தியடிகள் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. அவருடைய அறையில் காந்தியடிகளின் உயிரற்ற உடலையே லோகியாவால் பார்க்கமுடிந்தது.

     காந்தியடிகளின் கொலையைத் தடுக்கத் தவறிய திறமையின்மைக்குப் பிராயச்சித்தமாக அரசு பதவி விலகி புதிய அரசுக்கு வழிவிடவேண்டுமென்று லோகியா ஓர் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையால் நாடு முழுதும்  ஒருவித சலசலப்பு எழுந்தது. அதுவரைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையிலிருந்த வேற்றுமை பெரிதானது. அடுத்து, இரு மாதங்களில் நடைபெற்ற நாசிக் மாநாட்டில் இரு கட்சிகளும் பிரிந்தன.

     சுதந்திர இந்திய அரசால் லோகியா மீண்டும் மீண்டும் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1949இல் நேபாள காங்கிரஸ் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லியில் ஊர்வலமாகச் சென்றபோது முதன்முறையாக இருமாத சிறைத்தண்டனை பெற்றார். அடுத்து 1950இல் விந்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற ஊர்வலமொன்றில் கலந்துகொண்டதற்காக சிறைக்குச் சென்றார். 1951இல் கர்நாடகத்தில் காகோடு என்னும் பகுதியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக்  குரலெழுப்பச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டு பெங்களூரில் சிறைவைக்கப்பட்டார்.

     பொதுமக்கள் தம் வாழிடங்களில் தமக்குத் தேவையான குளங்கள், கால்வாய்கள், கிணறுகள், சாலைகள் போன்றவற்றை தம் கூட்டுமுயற்சியால் தாமே உருவாக்கிக்கொள்வதற்குப் பாடுபடவேண்டும் என பல இடங்களில் லோகியா குறிப்பிட்டுவந்தார். சொன்னதோடு மட்டுமன்றி, முன்னுதாரணமாக அவரே மக்களைத் திரட்டி பணியாரி ஆற்றின் குறுக்கில் ஓர் அணைக்கட்டைக் கட்டினார். அது அவருடைய பெயராலேயே லோகியா சாகர் அணைக்கட்டு என்று இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.

     லோகியாவுக்கு தொடக்கத்திலிருந்தே விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு பற்றிய ஆர்வம் இருந்தது. நாட்டுமக்களின் ஒட்டுமொத்த உணவுத்தேவைக்காக உழைக்கும் விவசாயிகளும் ஒருவகையில் ராணுவ வீரர்களுக்கு நிகராக மதிக்கப்படவேண்டியவர்கள் என்று கருதினார் லோகியா. நிலமற்றோருக்கு நிலம் வழங்குதல், நில உடைமையாளர்களும் விவசாயிகளும் விளைச்சலில் சீராக பங்கிட்டுக்கொள்தல், நிலவரியைக் குறைத்தல் போன்ற அம்சங்களில் அவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். சமுதாயம் என்பது கிராமம், மாவட்டம், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய நான்கு தூண்களால் தாங்கப்படும் உறுதியான கட்டுமானமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.

            லோகியாவின் சோஷலிசச் சிந்தனைகள் அசலானவை. மனிதகுல முன்னேற்றம் தொடர்பான உண்மையான அக்கறையில் பிறந்தவை. காந்தியடிகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த லோகியா, காந்தியக் கருத்துகளை சோஷலிசச்சிந்தனையுடன் இணைத்து ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும் கனவைக் கொண்டிருந்தார். மக்களை அமைதியோடும் மதிப்போடும் வாழவைக்க, அக்கோட்பாடு உதவும் என்பதில் அவர் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

 

(சர்வோதயம் மலர்கிறது – ஜனவரி 2022)