Home

Sunday 27 February 2022

மலையும் குறுமிளகும்

 

எளிமையான கவிமொழியைக் கொண்ட எளிமையான காட்சிச்சட்டகங்களைக் கொண்டிருக்கின்றன சந்திரா தங்கராஜின் கவிதைகள். ஆனால் அந்த எளிமை ஆழமானதாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அன்றாட வாழ்க்கையையும் அன்றாடச் சிந்தனையையும் அந்தக் காட்சிச்சட்டகங்கள் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. காட்சித்தொகுப்பாக அமைந்திருக்கும் அதே வேளையில், எளிதாகக் கடந்து செல்லமுடியாதபடி ஒவ்வொரு காட்சியிலும் மனத்தை அசைக்கும் புள்ளிகள் நிறைந்து தனித்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. கவிதையின் சாரமாக அமைந்திருக்கும் அந்தப் புள்ளிகள் சிற்சில தருணங்களில் பரவசமளிக்கின்றன. சிற்சில தருணங்களில் அமைதியிழக்க வைக்கின்றன.

சந்திரா தங்கராஜின் கவிதைகளில் வீடும் மிளகும் மீண்டும் மீண்டும் இடம்பெற்றபடி இருக்கின்றன. ஒருவருடைய வாழ்வில் வீடு  என்பது மண்ணுடன் நெருக்கமான தொடர்புடையது. அது பாதுகாப்பான வாழ்க்கைக்கான இடம். ஆனால் சொந்தமென சொல்ல கையகல மண் கூட இல்லாதவர்களுக்கு, வாழ்க்கையில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. காட்டையும் மலையையும் மட்டுமே நம்பி உயிர்வாழும் மனிதர்களுக்கு காட்டிலும் மலையிலும் நிரந்தரமாக ஓர் இடமில்லை என்பது மிகப்பெரிய துயரம். வாழ்வதற்காக இல்லாவிட்டாலும் சாவதற்காவது ஒரு நிலம் வேண்டும் என அவர்கள் மனம் தவித்தலைகிறது. ஆனால் மனிதர்களாலும் அரசு அமைப்புகளாலும் சட்ட விதிகளாலும் அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு விரட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். காட்டைவிட்டு வெளியேற முடியாத அவர்கள் காட்டை ஊடுருவிக்கொண்டு உட்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த இடப்பெயர்ச்சி பற்றிய சந்திரா தங்கராஜ் எழுதியிருக்கும் காடோடி என்னும் கவிதை வேதனையின் சித்திரமாக விரிந்திருக்கிறது.

 

அப்பாவிற்கு நீளமான கால்கள்

எப்போதும் கையில் விதைத்தவசங்களுடன்

காடோடிக்கொண்டே இருந்தார்

கூடவே நாங்களும்

 

‘சாவதற்கு ஒரு நிலம் வேண்டும் மகனே’

என்கிற அப்பத்தாவின் ஓயாத வேண்டுதலில்

அன்று மேற்குவழிப் பயணமானோம்

முகத்தில் பனிவெயிலை ஏந்தியபடி

தடிசங்காட்டுக்குள் நடந்தோம்

அம்மாவின் தலைக்கூடையிலிருந்த பருப்பலகை

காட்டை வேடிக்கை பார்த்தபடி வந்தது

அவள் இடுப்பிலிருந்து தங்கைன் நழுவிக்கொண்டே வந்தாள்

மரப்பொந்துக்குள் குஞ்சு பொரித்திருந்த இருவாட்சி

இணைவரவுக்காய் குரலெழுப்பிக்கொண்டிருந்தது

’மனுசங்க நடமாட்டம் இல்லாத எடத்தில்தான்

இருவாச்சி குஞ்சு பொரிக்கும்’ என்றார் அப்பா

 

அதற்கு மேல் நடக்கமுடியாத அப்பத்தா

மூட்டையைக் கீழிறக்கினாள்

அண்ணன் தன் எருமைக்கன்றுக்கு  புல்லறுக்கப் போனான்

நான் அத்திப்பழங்களை மண்ணூதித் தின்றுகொண்டிருந்தேன்

மூன்று கற்களைத் தேடியெடுத்து அடுப்புக்கூட்டினாள் அம்மா

அப்பா குடிசைபோட கம்புகளை வெட்ட

நடுவானில் சூரியன் அசையாது நின்றது

ஒரு குடும்பத்தின் வேதனையோடு ஒரு பறவையின் வேதனையும் இக்கவிதையில் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருபுறம் எங்கிருந்தோ விரட்டப்பட்டு காட்டின் உட்பகுதியை நோக்கி நடையாய் நடந்து மனித நடமாட்டமே இல்லாத இடமொன்றைப் பார்த்து குடிசை போடத் தொடங்குகிறார் ஒருவர். இன்னொரு புறம் மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் குஞ்சு பொரித்து வாழ்ந்து பழகிய இருவாட்சிப்பறவை, அந்த இடத்தைத் துறந்து நடமாட்டமற்ற மற்றொரு பகுதியைத் தேடி இடம்பெயர வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. ஒரே நேரத்தில் இரு இடப்பெயர்ச்சிகள். இங்கு நாம் யாரை நினைத்து நிம்மதி கொள்வது? யாரை நினைத்து வேதனை கொள்வது?

நடுவானில் அசையாது நின்று அனைத்தையும் பார்க்கும் சூரியன் வழிகாட்ட .காட்டுக்குள் இடம்பெயர்ந்து அமைந்த அந்தக் குடும்பம் தன் இருப்புக்காக ஒவ்வொரு நொடியும் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டிய சூழல். பெற்றெடுத்த குழந்தைகள் பசியின்றி வளர்வதற்காக தாயும் தந்தையும் ஓய்வில்லாமல் நிலத்திலும் மலையிலும் பாடுபடுகிறார்கள். காடோடி கவிதையின் தொடர்ச்சியைப்போல அமைந்திருக்கிறது குடும்பப்புகைப்படம் என்னும் கவிதை. அதில் நாம் பார்ப்பது, அவர்களுடைய முகங்களையோ புன்னகையையோ அல்ல, மாறாக அவர்கள் ஓய்வின்றி உழைக்கும் சித்திரங்களை. வலியை. வேதனையை. பிள்ளைகளை விளையாட அனுமதித்துவிட்டு, அவர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் சித்திரம் மனத்தை உருக்கும் வகையில் உள்ளது.

குடும்பப்புகைப்படத்தில்

அம்மா வெளிர்நீலப் புடவையில்

அழகாக இருப்பாள்

பூத்தோடும் வெள்ளைக்கல் இரட்டை மூக்குத்திகளும் எடுப்பாக

இருக்கும்

அப்பா மாலையானதும்

சுடுதண்ணீரில் குளித்து வெகுநேரம்

கண்ணாடி முன் நின்று தலைவாருவார்

என்னோடு மூன்று குழந்தைகள்

நாங்கள் நன்றாகத்தான் வாழ்ந்தோம்

அதற்காக அப்பா வாழ்நாள் முழுதும்

மூன்று குழிகளை வெட்டினார்

அதில் முப்பதாயிரம் முறை விழுந்தெழுந்தார்

278 தடவை அவருடைய

கழுத்துவரை மண் மூடியது

7063 முறை மேற்கு மலையில் சுமையுடன் ஏறினார்

மாடுபூட்டாமல் நிலம் உழுதார்

ஒற்றைத் தலைவலியோடு

நெற்கட்டுகளைச் சுமக்கும் அம்மா ஒருத்தியாய்

மூனு ஏக்கர் நிலத்தில் களையெடுப்பாள்

ஒரு மத்தியானம் நாங்கள் தட்டாமாலை சுற்றியதற்கு

அவள் பருத்திக்காட்டில் கிறுகிறுத்து விழுந்தாள்

 

எதார்த்தச் சித்தரிப்பின் வழியாக ஒரு வாசகனின் நெஞ்சை அசைக்கும் இத்தகு கவிதைகளுக்கு நேர் எதிரான வழிமுறையில் கற்பனையின் வழியாக வாசகனின் நெஞ்சைத் தொட்டு அசைக்கிற கவிதைகளையும் சந்திரா தங்கராஜின் தொகுப்பில் காணமுடிகிறது. பள்ளிக்கூடம் செல்லும் சிறுமியின் பயணத்தை விவரிக்கும்போது  சந்திராவின் கற்பனையாற்றல் தன்னிச்சையாக வெளிப்படுகிறது.

 

ஐந்துமைல் தொலைவு நடக்கவேண்டும்

சிறுமலைக்கு அப்புறம்தான் அவள் பள்ளிக்கூடம்

விரல்களால் மெதுவாய் மலையை அசைக்கிறாள் சிறுமி

அதுவொரு குறுமிளகென எம்பி மிதக்கிறது

இப்படித்தான் ஒரே எட்டில்

தினமும் மலையைக் கடக்கிறாள் மகாராணி

 

இதுவும் இடப்பெயர்ச்சியின் ஒரு துணைவிளைவாகவே உள்ளது. இடப்பெயர்ச்சியின் காரணமாக அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் குடிசை போட்டுக்கொண்ட இடம் எங்கோ தொலைவில் சென்றுவிட, ஒவ்வொரு நாளும் அந்த இடத்திலிருந்து பள்ளிக்கு நடந்து சென்று திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள் அச்சிறுமி. மலையை மெதுவாய் அசைத்து, உயர்ந்து அகன்ற அதன் உருவத்தையே ஒரு குறுமிளகென மாற்றி, அதை ஒரே எட்டில் மகாராணிபோல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கடந்து செல்கிறாள். மலையைக் குறுமிளகாக மாற்றமுற வைக்கும் மந்திரத் தருணத்தில் மாபெரும் துயரங்கள் எல்லாம் காற்றில் பஞ்சாகப் பறந்துவிடுகின்றன. ஒன்றை மற்றொன்றாக உருமாற்றி எளிதாகக் கடந்துபோகும் குழந்தைமையை இத்தொகுதியின் பல கவிதைகள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

 

டெய்சியும் ஜான்சனும் உன்னியும் நானும்

வட்டப்பாறையில் அமர்ந்து வெயில் காய்ந்தபடி

தூரத்து மாலையில் மேயும் மாடுகளை

எண்ணிக்கொண்டிருந்தோம்

ஒவ்வொரு முறையும்

எண்ணிக்கை பிசகிக்கொண்டிருந்தது

மாடுகளை ஒளித்துவைத்து மலையும்

மலையை ஒளித்துவைத்து மாடுகளும்

விளையாட்டு  காட்டின

 

குழந்தைமையை மையமாகக் கொண்ட மற்றொரு கவிதை இது. ஒரு காட்சிப்பிழை ஒரு பேரனுபவமாகவும் ஒரு புன்னகைத்தருணமாகவும் மாறும் அபூர்வத்தன்மையை இக்கவிதையில் பார்க்கமுடிகிறது. ஒருபுறம் சிறுவர்கள். இன்னொருபுறம் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் மாடுகள். மற்றொரு புறத்தில் உயர்ந்து சரிந்த மலை. தன் எண்ணிக்கைப்பிசகுக்கு சிறுவர்கள் கண்டுபிடித்துச் சொல்லும் காரணம் ஓர் அற்புதம்.  தன்னிச்சையாக அவர்கள் நாவில் பொங்கியெழும் கற்பனை நம்மைப் புன்னகைக்க வைக்கிறது.

மலையை விழுங்குதல் என்னும் கவிதையில் வதைமிக்க இன்னொரு இடப்பெயர்ச்சிக்காட்சி இடம்பெற்றிருக்கிறது. இங்கு இடம்பெயர வைப்பவர்கள் வனத்துறையினர். மலைப்பகுதியிலிருந்து அந்தக் குடும்பங்களை வெளியேற்றுவது ஒருவகையில் அதிகாரத்தின் வெற்றியாக இருக்கலாம். ஆயினும், எந்த அதிகாரத்தாலும் அசைக்கமுடியாத அளவுக்கு  அந்த மலைப்பகுதியும் மிளகுக்கொடிகளும் அக்குடும்பங்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துவிடுகின்றன.  

 

நுனிமூக்கில் மஞ்சல் நிறம்கொண்ட மைனாக்கள்

தேன்சிட்டுக் குருவிகள்

அவைகளின் கூவலில்தான் அன்றும் எழுந்தேன்

நான் நட்டு வைத்த தேக்கு மரத்திற்கு

பதினாறு வயதாயிருந்தது

அதைத் தழுவி முத்தமிட்டபோது

மிளகுக்காட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர் வனத்துறையினர்

 

என் பின்னங்கழுத்தைத் தள்ளிக்கொண்டிருந்த

அதிகாரியின் கையைத் தட்டிவிட்டு

மலையை ஒரே விழுங்காக விழுங்கி

குலுங்கும் வயிறுடன் அங்கிருந்து ஓடினேன்

அன்றிலிருந்து என் கண்களில் மலைநதி பாய்கிறது

கால்நரம்புகளில் பிணைந்திருக்கின்றன இலைகள்

 

அதிகாரத்துக்கு எதிரான மானுட இருப்பின் அடையாளமாக அந்த மலையும் மிளகும் இருக்கின்றன. அன்று அக்குடும்பங்கள் விழுங்கிவிட்டு வந்த மலையும் மிளகும் சந்திராவின் கவிதைகளில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டபடி இருக்கின்றன.

இடப்பெயர்ச்சியின் அலுப்பும் வாய்ப்பின்மையின் சலிப்பும் மனிதர்களை ஏதோ ஒரு கணத்தில் நகரத்தை நோக்கிச் செலுத்திவிடுகின்றன. வாழ்வின் திசையில் அது தவிர்க்கமுடியாத ஒரு பயணம். நகரத்தின் அங்காடித்தெருவுக்கு ஏதோ ஒரு தேவையை முன்னிட்டுத்தான் அவர்களுடைய முதல் பயணம் நிகழ்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அந்தப் பயணங்களை தன்னையறியாமலேயே விரும்பத் தொடங்கிவிடுகிறார்கள். காட்டுப்பகுதிகளுக்குள் இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்கள் நகரத்தெருக்களை நோக்கி இடம்பெயரத் தொடங்குகிறார்கள். திரும்பிச் செல்லும் வழியே மறந்துபோகும் அளவுக்கு அந்த இடப்பெயர்ச்சி ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனத்தை நிரப்பத் தொடங்கிவிடுகிறது. தவிர்க்கமுடியாத அம்மறதியின் சித்திரத்தை சந்திராவின் வசந்தகாலச் சிறுமி என்னும் கவிதை ஓர் அங்காடிக்காட்சியை முன்வைத்து உணர்த்துகிறது.

 

வசந்தகாலக் காற்றை ஊதி ஊதித் தள்ளுகிறாள் சிறுமி

காற்றின் வளையத்திற்குள் தொங்கியபடி

அவள் வந்து சேர்ந்தது நகரத்தின் அங்காடித் தெருவுக்கு

அச்சடித்தமாதிரி அவளைப்போல ஆயிரம் சிறுமிகள்

ஒருத்தி ரோஸ்நிற காலனிகளைக் கேட்டு அழுகிறாள்

ஒருத்தி காதை அறுத்தெரியும்

பெரிய சிமிக்கிகளைக் கைநீட்டுகிறாள்

இன்னொருத்தி தன்னைத் தடவிவிடும் கைகளைத் தட்டிவிட்டபடி

பளபளக்கும் நெயில் பாலிஷை எடுக்கிறாள்

சாஃப்டி ஐஸ் கடையின் முன்

முண்டியடித்து நின்றபடி பல சிறுமிகள்

விற்பனையாளர்களின் தாளநயமான அழைப்பில்

அவள் தவறவிட்டது இதைத்தான்

பறந்துகொண்டிருந்த வெள்ளைப்பலூன்கள்

சோப்புநுரை வளையங்கள்

அடுக்கிவைக்கப்பட்டிருந்த காமிஸ் புத்தகங்கள்

மக்காச்சோளம் வெந்த வாசனை

திரும்பிச் செல்லும் வழியை

என்றென்றைக்குமாக மறந்தவள்

கூட்ட நெரிசலில் மெல்லத் தொலைகிறாள்

சுவரெங்கும் வருடவாரியாக தேதிவாரியாக

காணாமல் போன சிறுமிகளின் புகைப்படங்கள்

எல்லாவற்றிலும் அவள் முகமே

 

’எனக்கு எவ்வித அச்சமும் இல்லை, வானில் நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன, அதில் ஒன்றைத் துணையாக்கிக்கொள்வேன்’ என்று தன்னிலை அறிவிப்பாக கவிதையொன்று இத்தொகுதியில் அமைந்துள்ளது.  நட்சத்திரங்கள் ஒரு மானசிகக்கவசமாக அவர்களோடு எப்போதும் இருக்கின்றன. அந்தக் கவசம் அவர்களுடைய நெஞ்சில் வாழும் காட்டுக்கும் கவசமாக இருந்து காப்பாற்றுகிறது.  எந்த ஊருக்குச் சென்று வாழ்ந்தாலும் காடோடிகளின் குடும்ப உறுப்பினர்கள் நினைவில் காட்டின் சித்திரங்களைப் புரட்டியபடியே  வாழ்கிறார்கள். நினைவுகளைக்  கொத்தும் கிளி கவிதை அத்தகு சித்திரங்களில் ஒன்று.

 

கட்டங்காப்பிக்கு எப்போதும் மிளகுக்காட்டின் சுவை

கோப்பையிலிருந்து சுருண்டு நெளியும் நீராவி

மிளகுக்கொடிகளாகி பால்க்கனி கம்பிகளில் படர்கின்றன

ஒவ்வொரு குறுமிளகிலும்

செளந்தர்யமாய் உன் நினைவுகள்

அதைக் கொத்திச் செல்லவே

வந்தமர்வதும் பறப்பதுமாக அலைக்கழிகின்றன பச்சைக்கிளிகள்

 

விலங்குக்காட்சிச்சாலையில் கூண்டுகளில் அடைபட்டிருக்கும் விலங்குகளைப்பற்றிய ஒரு கவிதையில் மலையாளக்கவிஞரான சச்சிதானந்தன் எழுதிய ‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்னும் வரி மிகவும் பிரபலமானது. மேற்குத்தொடர்ச்சிமலையில் வாழ்பவர்களின் கதைகளையும் அதைவிட்டு வெளியேறியவர்களின் கதைகளையும் தெரிந்துகொள்ளும் போது, தம் நினைவில் மலையையும் குறுமிளகையும் சுமந்திருப்பவர்கள் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.

 

(மிளகு – கவிதைத்தொகுதி. சந்திரா தங்கராஜ். எதிர் வெளியீடு. 96, நியு ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642002.  ரூ.170)

 

(21.02.2022 அன்று புக்டே இணையதளத்தில் வெளியானது)