Home

Sunday, 2 January 2022

ரிஷான் ஷெரீப் – ஒரு நட்புப்பாலம்

     

     இலக்கியத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் பங்களிப்புக்கு முக்கியமானதொரு பங்கு உண்டு. பிறமொழிச் செல்வங்களைத் தேடித்தேடி எடுத்து மொழிபெயர்த்து தம் தாய்மொழி வாசகர்களுக்கு தொடர்ச்சியாக அவர்களே வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.  ஒரு படைப்பாளியாக ஓர் எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு முதன்மையிடம் உள்ளதோ, அதே அளவிலான முதலிடத்துக்கு மொழிபெயர்ப்பாளர்களும் தகுதியுள்ளவர்கள். ஒரு சூழலில் வாழ்கிறவர்களுக்கு, பிறமொழி இலக்கியங்கள் அந்தந்த மொழிகளுக்குரியவர்களுடைய வாழ்க்கைப்போக்குகளையும் எண்ணப்போக்குகளையும் உணர்வதற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன. தமிழகச்சூழலில், பாரதியார் தொடங்கி ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருசில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகி மற்ற மொழிகளின் இலக்கியவளத்தை தமிழ்வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாசகர்களாக நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவில் தமிழகத்துக்கு அப்பால் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒருசில ஆக்கங்களாவது மொழிபெயர்ப்பாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சியால் தமிழ்வாசகர்களின் வாசிப்புக்கு சீரான இடைவெளிகளில் கிடைத்துவருகின்றன. நேரடியாக மொழிபெயர்க்க வழியில்லாத அசாமிய மொழிப் படைப்புகள்  கூட ஆங்கிலம் வழியாக தமிழை வந்தடைந்திருக்கின்றன. இலங்கையிலும் இதேபோல தமிழுக்கும் சிங்களத்துக்கும் இடையிலான இலக்கியப் பரிமாற்றங்கள் அந்தக் காலத்திலிருந்தே தொடங்கி செயல்பட்டு வருகின்றன. சில படைப்புகள் நேரடியாகவே  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, சில படைப்புகள் ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

எண்பதுகளில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் செ.யோகநாதன் எனக்கு சென்னையில் அறிமுகமானார். ஒருமுறை, அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் காட்டிய நினைவு உள்ளது. அப்புத்தகத்தின் பெயர் சேதுபந்தனம். சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. கனகரத்தினம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். அதுபோலவே தமிழிலிருந்து சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைத் தொகுதிகளும் வந்திருக்கின்றன என்று அப்போது குறிப்பிட்டார். இரு தரப்பிலும் கசப்புகளும் நெருக்கடிகளும் பெருகியிருந்த காலம் அது. அப்படிப்பட்ட சூழலில் கூட இலக்கியப்பரிமாற்றம் தடையின்றித் தொடர்கிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது. இலக்கியப்பரிமாற்றங்கள் அரசியல் நிலைபாடுகளுக்கு அப்பாற்பட்டவை.  அவை நீடித்த மதிப்புள்ளவை. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அரசியல்சூழல்களில் மாற்றங்கள் நிகழக்கூடும். ஆயினும் இலக்கியப் பரிமாற்றங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கனகரத்தினத்துக்கு முன்பும் பின்பும் சில மொழிபெயர்ப்பாளர்கள் தம் பங்களிப்பைச் செலுத்தியிருக்கக்கூடும். நேரிடையாகத் தெரிந்துகொள்ள இயலாத நிலையில் என்னால் அதைப்பற்றி எதையும் குறிப்பிட இயலவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பாக திண்ணை எனும் இணைய இதழில்தான் ரிஷான் ஷெரீப்  என்னும் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன். சிங்கள மொழியில் எழுதிய கவிதைகளையும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். அது ஒரு நல்ல முயற்சி என்றே தோன்றியது.  அதே சமயத்தில் ரிஷான் ஷெரீப்பின் சொந்தப்படைப்புகளாக கவிதைகளும் சிறுகதைகளும் அவ்வப்போது இலக்கிய இதழ்களில் வெளிவந்தபடி இருந்தன. அகதிப்பட்சி என்னும் ஒரு கவிதையை இன்றளவும் நினைவில் வைத்திருக்கிறேன். அப்படைப்புகள் அனைத்தும் அவர் மீது ஒரு வாசக கவனத்தை உருவாக்கியிருந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் அவர் படைப்பிலக்கியத்துக்கு இணையாக மொழிபெயர்ப்பிலும் முனைப்போடு ஈடுபட்டிருந்தார்.

கடந்த பத்தாண்டுகளாக ரிஷான் ஷெரீப் சீரான வேகத்தில் சிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்புக்கு நல்ல முறையில் பங்காற்றி வந்திருக்கிறார். அவருடைய படைப்புகள் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வந்து கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்திருந்த அயல்பெண்களின் கதைகள் மிகச்சிறந்த சிங்களச்சிறுகதைகளைக் கொண்ட தொகுதி. இந்த ஆண்டுக்குரிய கொடையாக நமக்கு ‘வாக்குமூலம்’ கிடைத்திருக்கிறது.

வாக்குமூலம் தொகுதியில் பத்து கதைகள் உள்ளன. உதார ஸ்ரீருவன், ருவண் எம்.ஜயதுங்க, அஜித் பெரகும் திஸாநாயக, கே.டி.தர்ஷன, ஷக்திக சத்குமார, சரத் விஜேசூரிய என ஆறு எழுத்தாளர்கள் எழுதிய கதைகள். தலைப்புக்கதையான வாக்குமூலம் சிறுகதையை எழுதியவர் ருவண் எம்.ஜயதுங்க. தன்னிரக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்குக் கீழிறங்க வைக்கும் என்பதையும் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்களாக மாற்றும் என்பதையும் அவருடைய கதை நுட்பமாக உணர்த்துகிறது. அவரே எழுதிய இன்னொரு படைப்பான நாதனின் நேசமிகு விழிகள் சிறுகதையும் மிகவும் நுட்பமான தளத்தை உணர்த்தும் கதை. ‘சிங்களர்கள் எல்லாரும் மிருகங்கள்’ என்னும் சொற்களைக் கேட்டுக்கேட்டு வளரும் ஓர் இளம்பெண் உயிர் பிழைத்திருக்க சொந்த நாட்டைவிட்டு எங்கோ இடம்பெயர்ந்து, எப்படியோ வளர்ந்து, வாழ்வதற்காக ஏதோ ஒரு வேலை செய்து  சம்பாதித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் மிருகமாக மாறி வேட்டையாடும் தமிழனை ரத்தமும் சதையுமாக நேருக்குநேர் பார்த்துணரும் நெருக்கடியான தருணமே இச்சிறுகதை. இன அடையாளம் என்பது சுட்டிக்காட்டுவதற்கு ஒரு வசதியான சொல். அவ்வளவே. மிருகம் எல்லா மனிதர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறது. சிலர் அதை வளர்ப்பு மிருகத்தைப்போல பழக்கிப்பழக்கி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். சிலரோ அவ்வப்போது அதன் பசிக்கு இறைச்சியை அளித்து வேறுவிதமாக பழக்கிவைத்திருக்கிறார்கள். மன ஆழத்தில் கால்மடக்கி மறைந்து அமர்ந்திருக்கும் அந்த மிருகத்துக்கு மொழி, இன, மத, கால பேதமெதுவும் இல்லை. அது வெறும் மிருகம். அவ்வளவுதான். தன் அடையாளம் வெளியே புலப்பட்டுவிடாதபடி காலம் தோறும் வெவ்வேறு வேடம் போட்டுத் திரிந்து ஊரை ஏமாற்றிப் பிழைக்கிறது. தொகுப்பில் கச்சிதமாகச் சொல்லப்பட்ட சிறுகதைகளில் இதுவும் ஒன்று.

கால்நூற்றாண்டு காலம் என்பது மனிதவாழ்வில் முக்கியமான ஒரு பகுதி. பெண்கள் பள்ளிக்கே செல்லாத ஒரு காலம் இருந்தது.  வீட்டுக்கு அருகிலிருக்கும் தொடக்கப்பள்ளியில் எழுத்தறிவை மட்டும் பெற்றால் போதும் என்று மெல்ல மெல்ல ஒரு மாற்றம் வந்தது. அதைத் தொடர்ந்து பருவ வயதை அடையும் வரைக்கும் படிக்கலாம் என்ற மாற்றம் உருவானது. பள்ளிப்படிப்பை முடிப்பதும் கல்லூரிப்படிப்பை முடிப்பதும் இன்னும் சில ஆண்டுகள் கழிந்த பிறகே சாத்தியமாயிற்று. வேலைக்குச் சென்று பொருளீட்டுவது சாத்தியப்பட இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. படிப்போ, வேலையோ எதுவாக இருந்தாலும் திருமணத்தோடு சரி என்று முற்றுப்புள்ளி வைத்த காலம் மறைந்துபோக இன்னும் சில ஆண்டுகள் கடந்துவர வேண்டியதாயிற்று. நல்லவனோ கெட்டவனோ பெற்றோர் பார்த்துவைப்பவனை ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்துவதே ஒழுங்கான வாழ்க்கை என்று நம்பிய காலமும் இங்கே இருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. மரபை ஏற்பதும் துறப்பதும், அது எந்த அளவுக்குத் தேவை என்பதை ஆய்வு செய்து, அந்த ஆய்வுமுடிவிற்குத் தகுந்தபடி எடுக்கும் தீர்மானங்களாக மாறிவிட்டன. இன்று பெண்கள் மிகவும் தன்னம்பிக்கையோடு வலம்வருகிறார்கள். பெற்றோர் பார்த்து வைத்தவனாக இருந்தாலும் சரி, தானாக தேடிக் கொண்டவனாக இருந்தாலும் சரி, ஒழுக்கமற்றவனை நிராகரிக்கும் தன்னம்பிக்கை இன்றைய பெண்களின் அணுகுமுறையில் வந்துவிட்டது. தன்னம்பிக்கையோடு ஒழுக்கற்றவனை உதறிவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணை, பெற்றோரின் சொல்லுக்கும் மானத்துக்கும் அஞ்சி ஒழுக்கமற்றவனை ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் கண்ணீரோடு வாழ்ந்த அந்தக் காலப் பெண் நேருக்குநேர் பார்க்கும் அனுபவம் அழகான கதையாக மாறியிருக்கிறது.

இக்கதைகளைப்போலவே தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் ஒட்டி வாசகர்கள் அசைபோட்டுப் பார்க்க ஏராளமான செய்திகள் உள்ளன. நம் நாட்டுச்சூழல் சார்ந்தும் கதையின் கருக்களைப் பொருத்தி யோசித்துப் பார்க்கலாம். அந்தப் பார்வை கதையின் மீது மேலதிகமான வெளிச்சத்தைப் பாய்ச்சி துலக்கமாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அயலகத்தூதர் என்னும் பொறுப்பில் பணியாற்றுவதற்காக வெவ்வேறு நாடுகளுக்கு அதிகாரிகள் அனுப்பப்படுவதுண்டு. அரசியல் சார்ந்து இரு நாடுகளுடைய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் செழுமைப்படுத்த பாடுபடுவதே அவர்களுடைய பணிகளாகும். அதே நல்லிணக்கத்துக்காகவும் புரிந்துணர்வுக்காகவும் பண்பாடு சார்ந்து அமைதியாக, எவ்விதமான லாபத்தையும் கருதாமல் தன் போக்கில் பணியாற்றுபவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள். மண்ணுக்கு வளம் சேர்க்கும் உரத்தைப்போல மொழிக்கு வளம் சேர்ப்பவர்கள் இவர்கள். இலங்கை மண்ணில் வாழும் ரிஷான் ஷெரீப் தமிழுக்கு வளம் சேர்ப்பவர். தமிழுக்கும் சிங்களத்துக்கும் இடையில் ஒரு நட்புப்பாலமாக விளங்குபவர். அவரை மதித்துப் போற்றுவது நம் கடமை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(2022இல் நடைபெறவிருக்கும் புத்தகத்திருவிழாவை ஒட்டி வம்சி பதிப்பகம் வழியாக வெளியாக இருக்கும் தடைசெய்யப்பட்ட கதைகள் என்னும் தலைப்பைக் கொண்ட சிங்களச் சிறுகதைகளின் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)