முதலாம் உலகப்போரில் இந்தியரை ஈடுபடுத்தும்போது அளித்த வாக்குறுதிகளையெல்லாம் போர் முடிந்ததும் பிரிட்டன் அரசு புறக்கணிக்கத் தொடங்கியது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் சுதந்திரத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கக்கூடும் என எதிர்பார்த்து, முன்னெச்சரிக்கையாகத் தன்னை ஆயத்தம் செய்துகொள்வதற்கு இசைவாக, இந்தியாவில் நிலவும் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளைப்பற்றி ஆய்ந்து அறிக்கையளிக்கும் வகையில் ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் இந்தியாவெங்கும் பயணம் செய்து தன் அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரையை ஏற்ற அரசு, உடனடியாக அதையே சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்தது.
அதைத் தொடர்ந்து, உடல்நலம் குன்றிய நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த காந்தியடிகள் பம்பாய்க்கு வந்து சத்தியாக்கிரக சபையைத் தொடங்கினார். சத்தியாகிரக உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்து பெறும் வேலையைத் தீவிரப்படுத்தினார். அதை முன்வைத்து இந்தியாவெங்கும் பயணம் செய்து ரெளலட் சட்டத்தின் தீய விளைவுகளை மக்களிடம் எடுத்துரைத்து சத்தியாகிரகத்துக்கு ஆதரவைத் திரட்டினார்.
அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் தமிழகத்துக்கு
18.03.1919 அன்று வந்தடைந்தார். எல்லா ஊர்களிலும் மக்களிடையில் உரையாற்றியபடி
27.03.1919 அன்று தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு
ரயிலிலேயே மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அந்த ரயில் சாத்தூர் நிலையத்தில் நிற்கும்போது
அவரைச் சந்திப்பதற்காக ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களிடையில்
ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஒரு தொண்டர் படையும் இருந்தது. அதற்கு முதல்நாள்தான்
பள்ளியிறுதித் தேர்வை எழுதிமுடித்த ஓர் இளைஞரும் அக்கூட்டத்தில் இருந்தார். பள்ளிப்பருவத்திலேயே
ஹோம்ரூல் இயக்கத்தின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கெடுத்தவர் அவர். மதுரைக்கு தாகூர்
வருகை புரிந்தபோது அவரைச் சந்தித்த அனுபவமும் அவருக்கு இருந்தது.
அதிர்ஷ்டவசமாக, அன்று நிலையத்துக்கு வந்த ரயிலில் காந்தியடிகள்
பயணம் செய்த பெட்டி அந்த இளைஞர் காத்திருந்த இடத்துக்கு நேரெதிர வந்து நின்றது. அதனால் அனைவருக்கும் முன்பாக காந்தியடிகளை
அவர் பார்த்து மகிழ்ந்தார். அவரிடம் கையெழுத்து பெறும் பொருட்டு அந்தப் பெட்டியின்
வாசலுக்கு ஓடினார். எதிர்பாராத விதமாக, காந்தியடிகளுக்கு முன்பாக வாசலுக்கு வந்த தி.சே.செள.ராஜன்
அவர் வைத்திருந்த நோட்டை வாங்கி ஊக்கமூட்டும் வகையில் ஏதோ ஒரு வாசகத்தை எழுதி கையெழுத்திட்டுக்
கொடுத்தார். அச்சமயம் காந்தியடிகள் தோன்றி அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து சில
நிமிடங்கள் உரையாற்றினார். சத்தியாகிரக தினத்தை எப்படி நடத்தவேண்டும் என்பதைப்பற்றி
சுருக்கமாக எடுத்துரைத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் அந்த இளைஞர் தன் நெஞ்சில்
பசுமரத்தாணியெனப் பதியவைத்துக்கொண்டார். அந்த இளைஞர் பி.எஸ்.குமாரசாமி ராஜா. அன்றுமுதல்
காந்திய வழியில் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுப்பதும் அவர் வகுத்தளித்த நிர்மாணப்பணிகளில்
ஈடுபடுவதும் தன் வாழ்வின் தலையாய கடமையென அவர் தனக்குள் முடிவெடுத்தார்.
ராஜபாளையத்தில் அப்போது மீனாட்சி சகாய வித்யானந்த சபை என்ற பெயரில்
ஓர் அமைப்பு செயல்பட்டுவந்தது. பொதுமக்களிடையில் விழிப்புணர்வூட்ட அந்த அமைப்பின் வழியாக
ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்ய குமாரசாமி ராஜா திட்டமிட்டார். ஒரு புதுமையான முயற்சியாக,
தன் வயதையொத்த இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு பாடல்கள் பாடியபடி ஊரெங்கும் ஊர்வலமாகச்
சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் செய்தியை அறிவித்துப் பரப்பினார். 18.05.1919 முதல்
20.05.1919 வரை மூன்று நாட்களும் மாலை வேளையில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு
குமாரசாமி ராஜா தலைமையேற்க, ராஜபாளையத்தைச் சேர்ந்த அரங்கசாமி ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூரைச்
சேர்ந்த பேச்சாளரான சிவஸ்வாமி ஐயர், சீனிவாச ஐயங்கார் மூவரும் ஒவ்வொரு நாளும் ஒருவராகப்
பேசி மக்களிடையில் எழுச்சியூட்டினர்.
ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையும் அதைத்
தொடர்ந்து காந்தியடிகள் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியும் மக்களை ஆவேசம் கொள்ளவைத்தது.
ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடெங்கும் காங்கிரஸ் மாநாடுகள்
நடைபெற்றன. தமிழ் மாகாண காங்கிரஸ் அரசியல் மாநாடு 23.08.1919, 24.08.1919 ஆகிய நாட்களில்
திருச்சியில் நடைபெற்றது. அப்போது ராஜாவின் மனைவி ஸ்ரீரங்கம்மாள் நோய்வாப்பட்டு படுத்த
படுக்கையாக இருந்தார். ஆயினும் காங்கிரஸ் இயக்கச் செயல்பாடுகளில் தீராத ஆர்வம் கொண்ட
குமாரசாமி ராஜா ராஜபாளையத்திலிருந்து திருச்சிக்குச் சென்று இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும்
கலந்துகொண்டதோடு, அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினார்.
மூன்று மாத காலம் தொடர்ச்சியாக மருத்துவம் அளித்தபோதும், நவம்பர் மாதத் தொடக்கத்தில்
ஸ்ரீரங்கம்மாளின் உயிர் பிரிந்தது.
மனைவியின் பிரிவுத்துயர் தாளாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்
குமாரசாமி ராஜா. பத்திரிகைகளையும் புத்தகங்களையும் தொடர்ந்து வாசிப்பதன் வழியாக அந்தத்
துயரத்திலிருந்து படிப்படியாக மீண்டுவந்தார். 1920ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராஜபாளையத்தில்
நடைபெற்ற தொடர்கூட்டங்களில் ஹனுமந்தராவ், நாராயணராவ், சுப்பிரமணிய சர்மா ஆகியோர் ஆற்றிய
உரைகளைக் கேட்டபிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினார். சென்னைக்குச் சென்று அன்னிபெசன்ட் அம்மையார், வாடியா,
சத்தியமூர்த்தி, நரசிம்மராவ் போன்றோரைச் சந்தித்து உரையாடிவிட்டு கோகலே ஹாலில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இந்து சுதேசி கண்காட்சியிலும் பங்கேற்ற பிறகு ஊருக்குத் திரும்பினார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்று ராஜபாளையத்துக்கு வருகை புரிந்த சத்தியமூர்த்தி
காங்கிரஸ் அலுவலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றினார். நாட்டில் நிலவும் தீண்டாமையை
ஒழிப்பது தொடர்பாகவும் ஆங்கிலேய ஆட்சியை அகற்றவேண்டிய தேவை தொடர்பாகவும் சத்தியமூர்த்தி
விரிவாகப் பேசினார். அவருடைய உரைவீச்சின் விளைவாக அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர்
தம் உடலில் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவதாக உறுதிமொழி
ஏற்றனர். அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புக் கூட்டங்களில்
பங்கேற்று பொதுமக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் குமாரசாமி ராஜா உரையாற்றினார்.
சில மாதங்களுக்குப் பிறகு ராஜாவின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து,
மறைந்த ஸ்ரீரங்கம்மாளின் தங்கையான ருக்மிணி அம்மையாரை அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
குமாரசாமி ராஜா இல்வாழ்க்கையில் ஈடுபட்டபடியே பொதுவாழ்விலும் ஈடுபட்டு உழைத்துவந்தார்.
ஒவ்வொரு நாளும் தொண்டர்களைத் திரட்டிக்கொண்டு ஊர்வலமாகச் சென்று அயல்நாட்டுத் துணிகளை
விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் நின்று புறக்கணிப்பு முழக்கங்களை எழுப்பினார்.
கொண்டநேரி கண்மாய், பிரண்டகுளம், கடம்பன்குளம், மேல ஆவரம்பட்டி, மலையப்பட்டி, மேலூர்,
சென்னங்குளம், கருங்குளம் போன்ற ஊர்களில் அமைந்திருந்த கள்ளுக்கடைகளில் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டார்.
குமாரசாமி ராஜா தலைமையேற்று வருவதைக் கண்டதும் அப்பகுதி மக்கள்
ஓடோடிச் சென்று ஒளிந்துகொள்வதும், அவர் மறியலை முடித்துக்கொண்டு காங்கிரஸ் அலுவலகத்துக்குத்
திரும்பியதும் கடைக்குச் சென்று கள் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதை அறிந்ததும்
அலுவலகத்துக்குச் செல்லாமல் அவர்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதிகளுக்குச் செல்வதை
வழக்கமாக மாற்றிக்கொண்டார் குமாரசாமி ராஜா. குடிசைகளில் வாழும் பெண்களிடம் தம் கணவனையும்,
சகோதரர்மார்களையும் கள்ளருந்தச் செல்லாதபடி தடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அத்திட்டம்
ஓரளவு வேலை செய்தது.
கள்ளுக்கடைகளில் வருமானம் குறையத் தொடங்கியதும் கடைக்காரர்கள்
காவல்துறையில் புகார் செய்தனர். உடனடியாக காவல்துறையினர் அமைதியாக மறியல் செய்பவர்களை
ஆர்ப்பாட்டம் செய்து குழப்பம் விளைவித்ததாகக் கூறி கைது செய்தனர். குமாரசாமி ராஜாவும்
பிற தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசி தேசியவாதிகள் மீதான நடவடிக்கைகளை
ரத்துசெய்யும்படி கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் விடுதலை பெற்றனர். நாளுக்குநாள்
அதிகரித்த மறியலின் விளைவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில் கடை ஏலம் எடுக்க ஒருவரும் முன்வராததால்,
தாமாகவே அவை மூடப்பட்டன. வருவாய் இழப்புக்குக் காரணமான தேசியவாதிகளைப் பழிவாங்க பிரிட்டன்
அரசு தக்க தருணத்துக்காகக் காத்திருந்தது.
ராஜபாளையத்தில் 20.08.1921 அன்று அரங்கசாமி ராஜா என்பவரைத் தலைவராகக்
கொண்டு ஹரிஜன் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அவ்வமைப்பின் செயலாளராக குமாரசாமி ராஜா
பொறுப்பேற்றார். இருவருடைய இடைவிடாத உழைப்பின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சார்ந்து
அறுபதுக்கும் மேற்பட்ட சிற்றூர்களில் இச்சங்கத்தின் கிளைகள் உருவாகின. தாழ்த்தப்பட்டோர்
வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வது,
சிறார்கள் படிப்பதற்கு ஏதுவாக கல்விநிலையங்களை உருவாக்குவது, விடுதலைப் போராட்டத்தின்
அவசியத்தை உணர்த்துவது, கூட்டுறவு இயக்கப்பணிகளில் இணைத்துக்கொள்வது என பல விதங்களில்
சங்கங்கள் செயல்பட்டன.
பிற நிர்மாணப்பணிகளைப்போலவே ராஜபாளையத்தில் கதர்ப்பணிகளை மேற்கொள்வதற்கான
முயற்சியிலும் பிற தலைவர்களோடு இணைந்து குமாரசாமி ராஜா ஈடுபட்டார். முதலில் ஆண், பெண்
இருபாலருக்கும் நூல் நூற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் நூலாக நூற்ற பருத்தி சிட்டங்களை
வணிகர்களிடம் விற்பனை செய்யவிடாமல் அரசு தடுத்தது. இதனால் ஒருபுறம் சிட்டங்கள் குவிந்திருக்க,
மறுபுறம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க ராஜபாளையத்திலேயே
கைராட்டின நூல் நெசவுத்தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் கதர் உற்பத்திக்காக
தொடங்கப்பட்ட முதல் தொழிற்சாலை ஆகும்.
1921 அன்று கிலாபத் இயக்கத்துக்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக
தென்னிந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் அலி சகோதரர்களோடு மதுரைக்கு வந்தார்.
அப்போது குமாரசாமி ராஜாவும் பிற தலைவர்களும் அவரைச் சென்று சந்தித்து, தம் தொழிற்சாலையில்
நெய்யப்பட்ட கதராடைகளை அன்பளிப்பாக அளித்தனர். காந்தியடிகளிடம் குமாரசாமி ராஜா இரு
ஆண்டுகளுக்கு முன்பாக சாத்தூர் ரயில்நிலையத்தில் சந்தித்த தருணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
குமாரசாமி ராஜாவின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் கண்ட காந்தியடிகள் அவரைப் பாராட்டினார்.
நாடெங்கும் ஒத்துழையாமை இயக்கம் பரவி மக்கள் ஆதரவும் அரசு எதிர்ப்பும்
திரண்டு உருவாகிவந்த நிலையில் 05.02.1922 அன்று உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்னும்
இடத்தில் விடுதலை இயக்கத் தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அது வன்முறையில் முடிய, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைக் கண்டு திகைத்த
காந்தியடிகள் உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவைத்தார். மூன்று வாரங்கள் உண்ணாவிரதத்தை
மேற்கொண்டார்.
காந்தியடிகளே அப்படுகொலைக்குக் காரணமானவர் என குற்றம் சுமத்தி
ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதையொட்டி நாடெங்கும் கண்டனக்கூட்டங்கள்
நடைபெற்றன. ராஜபாளையத்தில் அரங்கசாமி ராஜாவின் முயற்சியால் நடைபெற்ற கண்டன ஊர்வலத்திலும்
கூட்டத்திலும் குமாரசாமி ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.
1927ஆம் ஆண்டில் மேற்கொண்ட தமிழகச் சுற்றுப்பயணத்தின்போது காந்தியடிகள்
04.10.1927 அன்று ராஜபாளையத்துக்கு வந்தார். கதர் உற்பத்தியை விரிவாக்கும் நோக்கத்துடன்
குமாரசாமி ராஜா தொடங்கிய காந்தி கதர் வஸ்திராலயம் என்னும் தொழிற்சாலையை காந்தியடிகள்
தொடங்கிவைத்தார். அவர் தன் உரையில் “இந்த அமைப்பு லாபநோக்கத்துக்காகத் தொடங்கப்படவில்லை.
மாறாக, தேசியவாதிகளையும் ராட்டினத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தும் ஏழை தியாகிகளுக்காக
தொடங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டபோது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது” என்று
குறிப்பிட்டார். அமைப்பின் பேரேட்டில் தன் வருகையைப் பதிவு செய்யும் விதமாக எம்.கே.காந்தி
என்று கையெழுத்திட்டார்.
அதே ஆண்டில் நவம்பர் 21 அன்று ராஜபாளையத்திலேயே காங்கிரஸ் அரசியல்
மாநாடு நடத்தப்பட்டது. பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் தலைமையேற்க, குமாரசாமி ராஜா உள்ளிட்ட
பலரும் உரையாற்றினர். ராஜாவின் உற்சாகம் நிறைந்த செயல்பாடுக்களைக் கவனித்த மாகாண காங்கிரஸ்
நிர்வாகத்தினர் அவரை செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர். இதனால் டிசம்பர்
24-29 அன்று நடைபெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு குமாரசாமி
ராஜாவுக்குக் கிடைத்தது. அதன் வழியாக பல தேசியத்தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை
அவர் பெற்றார்.
1929ஆம் ஆண்டில் கல்கத்தாவில் அகில இந்திய கதர் கண்காட்சி நடைபெற்றது.
ராஜபாளையம் கதர் வஸ்திராலயமும் அக்கண்காட்சியில் கலந்துகொண்டது. வஸ்திராலயம் தயாரித்த
ஆடைகளுக்கு முதல் பரிசு கிடைத்தது. ராஜபாளையம் கதருக்கு தேசிய அளவில் உயர்ந்த கெளரவம்
கிடைத்தது. அதன் பிறகு நாட்டிலுள்ள அனைத்து கதர் இயக்கங்களும் சர்வோதயம் என்னும் பெயரில்
ஒருங்கிணைந்து இயங்கத் தொடங்கியது. கதர் வஸ்திராலயம் சர்வோதயத்தின் கிளையாக மாறி இயங்கத்
தொடங்கியது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகா அரசியல் மாநாடு குமாரசாமி ராஜாவின்
அரசியல் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தொம்பக்குளம் பகுதியில் 26.10.1929, 27.10.1929 ஆகிய இரு தினங்களாக நடைபெற்ற மாநாட்டில்
பங்கேற்பதற்காக பல ஊர்களிலிருந்து ராஜாஜி, முத்துலட்சுமி ரெட்டி, காமராஜர், கோபால்
நாயுடு, ஆர்.கே.நாயுடு போன்ற பல முக்கியமான தலைவர்கள் வந்தனர். அனைவரோடும் நெருங்கிப்
பழகிய குமாரசாமி ராஜா அவர்களுடைய நட்பைப் பெற்றார்.
12.03.1930 அன்று காந்தியடிகள் தண்டி யாத்திரையைத் தொடங்கியதும்,
அதேபோன்ற யாத்திரையைத் தமிழகத்தில் நடத்தும் எண்ணம் ராஜாஜியின் நெஞ்சில் உதித்தது.
திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் நடந்து சென்று வேதாரண்யம் கடற்கரையில் உப்பு
காய்ச்சும் திட்டத்தை அவர் வகுத்தார். தமிழகத்தில் வசிக்கும் பல்வேறு பகுதிகளிலிருந்து
நூறு சத்தியாகிரகிகளைத் திரட்டினார். 13.04.1930 அன்று திருச்சியில் தி.சே.செள.ராஜனுடைய
இல்லத்திலிருந்து சத்தியாகிரகிகளின் குழு தன் நடைப்பயணத்தைத் தொடங்கியது.
அந்த யாத்திரை 28.04.1930 அன்று கும்பகோணத்தை அடைந்தது. ராஜபாளையத்திலிருந்து குமாரசாமி ராஜா பிற தொண்டர்களை அழைத்துச் சென்று
கும்பகோணத்தில் யாத்திரைக்குழுவை வரவேற்றார். ராஜாஜி அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அவர்கள்
பகுதிகளின் நிலவரங்களைக் கேட்டறிந்துகொண்டார். ராஜபாளையத்திலிருந்து சென்ற குழுவிலிருந்த
அரங்கசாமி ராஜா யாத்திரைக்குழுவுடன் இணைந்துகொள்ள, ஏனையோர் ராஜபாளையத்துக்குத் திரும்பினர்.
ராஜபாளையத்திலும் சுற்றுப்புறத்தில் உள்ள சிற்றூர்ப்பகுதிகளிலும் கள்ளுக்கடை மறியல்களும்
அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன. தொண்டர்களுக்கு ஊக்கமூட்டும்
விசையாக குமாரசாமி ராஜா பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார்.
வட்டமேசை மாநாட்டின் விளைவாக எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில்
28.12.1931 அன்று இந்தியாவுக்குத் திரும்பினார் காந்தியடிகள். அடுத்த நாளே சட்டமறுப்பு
இயக்கம் தொடங்கப்பட்டது. அரசு நேருவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதைக் கண்டித்து
நாடெங்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜாவின் தலைமையில்
கண்டனக்கூட்டம் நடைபெற்றது. ”பொதுமக்கள் அனைவரும் ஆங்கிலேய அரசுக்கு வீட்டு வரி, நிலவரி,
தொழில்வரி என எதையும் செலுத்தவேண்டாம். பூரண சுதந்திரம் என்னும் குறிக்கோளை மனத்தில்
வைத்து நாம் பாடுபடுவோம். காந்தியடிகள் வகுத்தளித்த சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியான
வரிகொடா இயக்கத்துக்கு நாம் நம் ஆதரவை அளிப்போம். அரசுக்கு வரி கொடுக்காமல் நம் எதிர்ப்பைப்
புலப்படுத்துவோம்’ என்று அவர் மக்களிடையில் முழங்கினார். ராஜபாளையத்தில் மட்டுமன்றி,
அதைக் கடந்து சென்று வாடிப்பட்டி, சோழவந்தான்,
மேலக்கால், சிவகிரி, வாசுதேவநல்லூர், சேத்தூர், முகவூர், தொம்பக்குளம், ஆலங்குளம்,
கீழராஜகுலராமன் போன்ற பகுதிகளிலும் கூட்டங்களை நிகழ்த்தி மக்களிடையில் மன எழுச்சியைத்
தூண்டும் வண்ணம் உரை நிகழ்த்தினார். அதற்கிடையில் காந்தியடிகள் கைதாகிவிட்ட செய்தி
நாடெங்கும் பரவியது. இதனால் கண்டனக்கூட்டங்கள் மேலும் தீவிரமடையத் தொடங்கின. அரசு நிர்வாகம்
தடையுத்தரவு விதித்திருந்த போதும் தடையை மீறி நகர வீதிகளில் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
ராஜபாளையம் வட்டாரத்தில் காங்கிரஸ் செயல்பாடுகள் தொடர்வதை விரும்பாத
அரசு 05.01.1932 அன்று ராஜபாளையம் காங்கிரஸ் கமிட்டிக்குத் தடை விதித்தது. அடுத்த நாள் மாலையில் தடையை மீறி ராஜபாளையம் மைதானத்தில்
கூட்டத்தை நடத்தினார் குமாரசாமி ராஜா. கூட்டம் நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்றது.
07.01.1932 அன்று காலையில் குமாரசாமி ராஜாவின் இல்லத்துக்குச் சென்ற காவல் துறையினர்
அவரைக் கைது செய்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஓராண்டு காலம்
சிறைத்தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக்
கட்டத் தவறினால் ஆறுமாத காலம் கூடுதலாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
குமாரசாமி ராஜா முதலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் அவருக்கு சமையலறைப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
சிறைவாசம் கடுமையாக இருந்தபோதிலும் கே.சந்தானம், அவினாசிலிங்கம், என்.எம்.ஆர்.சுப்பராமன்,
திருமலாராவ், டாக்டர் சாஸ்திரி என அங்கிருந்த பல தலைவர்களோடு நெருங்கி உரையாட அது ஒரு
வாய்ப்பாகவும் அமைந்தது. வேலை நேரம் போக எஞ்சிய
நேரத்தை அவர் புத்தகங்களை வாசிக்கவும் நண்பர்களோடு உரையாடவும் பயன்படுத்திக்கொண்டார்.
ஹரிஜன சேவா நிதி திரட்டும் பொருட்டு 1934இல் ஒரு சுற்றுப்பயணத்தைத்
தொடங்கினார் காந்தியடிகள். மலபார், திருவாங்கூர் வழியாக அவர் திருநெல்வேலிக்கு வந்து
25.01.1934 அன்று சங்கரன்கோவிலை அடைந்தார். அவர் அங்கு உரையாற்றி முடித்ததும் குமாரசாமி
ராஜாவும் பிற நண்பர்களும் அவரை காரிலேற்றிக்கொண்டு ராஜபாளையத்துக்கு அழைத்து வந்தனர்.
குமாரசாமி ராஜாவின் வீட்டிலேயே காந்தியடிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பிறகு அனைவரும் அதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட
திடலுக்குச் சென்றனர். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே காந்தியடிகள்
உரையாற்றினார். “உங்களுடைய உள்ளத்திலிருந்து தீண்டாமை அறவே அகலவேண்டும். இல்லாவிடில்
உங்களுடைய வரவேற்புரைகளோ, நீங்கள் அளிக்கும் பணமுடிப்புகளோ எனக்கு எவ்விதமான மனநிறைவையும்
அளிக்காது. தீண்டாமை ஒழிப்பில் நாம் அனைவரும் இணைந்து பாடுபடவேண்டும்” என்று அவர் தம்
உரையில் குறிப்பிட்டார்.
ராஜபாளையம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விருதுநகருக்குச் செல்லவேண்டும்
என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. அவரை அழைத்துச் செல்ல காமராஜரும் முத்துசாமியும்
காத்திருந்தனர். அவர்கள் புறப்படத் தயாரான சமயத்தில் எதிர்பாராத விதமாக மழையின் வேகமும்
காற்றின் வேகமும் அதிகரிக்கத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் மழையிலேயே நிதானமான வேகத்தில் அவர்களுடைய வண்டிகள்
புறப்பட்டன. குமாரசாமி ராஜாவே காரை ஓட்டினார்.
இரண்டு மணி நேர பயணத்துக்குப் பிறகுதான் அவர்கள் சிவகாசியை அடைந்தார்கள்.
காந்தியடிகள் பேசுவதற்காக பள்ளிக்கூட மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தச்
சூழலிலும் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். மழையின் காரணமாக எங்கெங்கும்
சேறாகிவிட்ட நிலையில் கூட்டம் நிகழவிருந்த இடத்தை நெருங்கமுடியவில்லை. காந்தியடிகளால்
காரிலிருந்து இறங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஜன்னல்
வழியாக காந்தியடிகள் மக்களைப் பார்த்து கையசைத்து ஒன்றிரண்டு சொற்கள் பேசினார். பணமுடிப்பை
அளிக்கவேண்டியவர் எப்படியோ கூட்டத்தினரிடையே நீந்திவந்து அவரிடம் கொடுத்தார். அனைவரும்
அந்தக் காரைச் சூழ்ந்திருந்ததால் காரைத் திருப்பமுடியாதபடி இருந்தது. எத்தனையோ முறை வழிவிட்டு விலகி நிற்கும்படி கேட்டுக்கொண்டாலும்
அங்கிருந்த ஒருவரும் அதைப் பொருட்படுத்திக் கேட்கும் மனநிலையில் இல்லை. முட்டிமோதி
முன்னேறி வந்தனர். ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுமையிழந்த குமாரசாமி ராஜா காரைவிட்டு
இறங்கி, சரிந்திருந்த பந்தலிலிருந்து ஒரு கம்பை உருவி சிலம்ப விளையாட்டுக்காரர்கள்
சுழற்றுவதுபோல சுழற்றத் தொடங்கினார். அப்போது அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் எங்கோ
பறந்துபோய் விழுந்தது. காருக்கும் நான்கு பக்கங்களிலும் சேதமுண்டானது. ஆயினும் அக்கணத்தில்
மக்கள் அஞ்சி விலகி நிற்க, பாதையில் சற்றே இடைவெளி உருவானது. உடனே ஓடிச் சென்று காரை
எடுத்து விரைவாகத் திருப்பி லாவகமாக அந்த இடத்தைக் கடந்தார்.
குமாரசாமி ராஜாவின் துணிச்சலைப் பார்த்து வியப்படைந்த காந்தியடிகள்
அவருடைய சமயோசித நடவடிக்கையைப் பாராட்டினார். விருதுநகர் கூட்டத்தையும் மதுரை கூட்டத்தையும்
முடித்துக்கொண்டு காந்தியடிகளுடன் தங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் ராஜபாளையத்துக்குத்
திரும்பினார் குமாரசாமி ராஜா.
1934ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்திய சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்மாகாணத்துக்கு
ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் சுயராஜ்ஜியக் கட்சி மூன்று இடங்களையும் காங்கிரஸ்
கட்சிக்கு நான்கு இடங்களையும் பிரித்துக்கொண்டன. ராஜாஜியின் தலைமையில் அமைந்த குழு
அவினாசிலிங்கம், தி.சே.செள.ராஜன், முத்துரங்க முதலியார், குமாரசாமி ராஜா ஆகியோரை வேட்பாளராக
அறிவித்தது. 10.11.1934 அன்று நடைபெற்ற தேர்தலில் குமாரசாமி ராஜா வெற்றி பெற்று டில்லி
மத்திய சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லிக்குச் சென்ற உறுப்பினர்கள்
ஏழு பேரும் முதல் கூட்டத்தை முடித்துக்கொண்டு
கிங்ஸ்வே மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வார்தாவிலிருந்து வந்திருந்த
காந்தியடிகளைச் சந்தித்து உரையாடினர். ஒவ்வொருவருடைய வட்டாரத்திலும் நடைபெறும் கதர்ப்பணிகள்
பற்றியும் ஹரிஜன சேவை பற்றியும் காந்தியடிகள் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
1935ஆம் ஆண்டு காங்கிரஸ் பொன்விழா ஆண்டாக நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
குமாரசாமி ராஜா அந்த விழாவை ராஜபாளையத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில்
ஏற்பாடு செய்திருந்தார். சென்னைக்கு வந்திருந்த இராஜேந்திர பிரசாத்தை சிறப்பு விருந்தினராக
ராஜபாளையத்துக்கு அழைத்து வந்தார் குமாரசாமி ராஜா. கதர் வஸ்திராலயத்தின் செயல்பாடுகளைக்
கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
1937ஆம் ஆண்டில் மாகாணங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அத்தேர்தலில்
பங்கேற்க காங்கிரஸ் முடிவெடுத்தது. மூத்த தலைவர்கள் தமிழகமெங்கும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களை
நடத்தி மக்கள் கருத்தையும் ஆதரவையும் தெரிந்துகொண்டனர். சென்னை சட்டமன்றத்துக்கான வேட்பாளர்
பட்டியலில் குமாரசாமி ராஜாவின் பெயரும் இருந்தது. அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து
மத்திய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி சென்னைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தமிழ்மாகாண சபையின் பிரதமராக இராஜாஜி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இராஜாஜியின் தலைமையில்
அமைந்த அமைச்சரவை பல நல்ல செயல்களுக்கான முன்னோடித்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தத்
தொடங்கியிருந்த சமயத்தில் உலக அரங்கில் இரண்டாம் உலகப்போர் மூண்டுவிட்டது. பிரிட்டன்
அரசு இந்தியாவின் தேசியத்தலைவர்களோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக இந்தியப்படையையும்
போரில் ஈடுபடுத்தியது. லின்லித்கோ பிரபுவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக ஏழு
மாகாணங்களில் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் உடனடியாகப் பதவி விலகியது. அதைத் தொடர்ந்து தனிநபர் சத்தியாகிரகப்
போராட்டத்தைக் காந்தியடிகள் தொடங்கினார்.
போருக்கெதிரான முழக்கங்களுடன் நாடெங்கும் தலைவர்கள் ஊர்வலமாகச்
சென்றனர். மதுரை – தென்காசி சாலையில் ஏராளமான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற குமாரசாமி
ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர். அவருக்கு ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையும்
முந்நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தொகையைச் செலுத்தத் தவறினால் தண்டனைக்காலம் மூன்று மாத காலம் கூடுதலாகும் என
தீர்ப்பளித்தது நீதிமன்றம். குமாரசாமிராஜா முதலில் வேலூர் சிறையிலும் பிறகு திருச்சி சிறையிலுமாக தன்
தண்டனைக்காலத்தைக் கழித்தார்.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே குமாரசாமி ராஜாவுக்கு
தமிழ் மாகாண காங்கிரஸுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டதும்,
கட்சியை பொதுமக்களிடையில் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் மலபார், கேரளம், ஆந்திரம், தமிழகம்
என எல்லாப் பகுதிகளுக்கும் தீவிரமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஆதரவைத் திரட்டினார்.
காந்தியடிகள் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றும் முழக்கத்தோடு
1942இல் ஆகஸ்டு புரட்சியைத் தொடங்கினார். இன்னொரு பக்கம் கருணையற்ற காவல்துறை நகரமெங்கும்
வலம் வந்து காலம் காலமாக இயக்கத்தில் செயல்பட்டுவந்த பெரும்பாலானோரைக் கைது செய்து
கண்காணாத இடங்களில் சிறையில் தள்ளத் தொடங்கியது. நீண்ட கால சிறைவாசத்தின் காரணமாக பலர்
உயிரிழந்தனர். உயிர் ஊசலாட விடுதலை பெற்றவர்கள் விடுதலைக்குப் பிறகு உயிரிழந்தனர்.
நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையடைந்த சத்தியமூர்த்தி சிறிது காலத்திலேயே மண்ணுலகைவிட்டு
மறைந்தார்.
இந்தியாவில் இடைக்கால அரசை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளும்வகையில்
1946இல் பிரிட்டன் அரசு ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அதற்கிணங்க, நேருவின் தலைமையில்
02.09.1946 அன்று இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது. இப்புதிய அமைப்பின்படி உடனடியாக
அனைத்து மாகாண சட்டமன்றங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி மறைவைக்குப்
பிறகு அவருடைய சீடரான காமராஜருக்கும் ராஜாஜிக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்தன.
மாகாண கட்சித்தலைவராக இருந்த குமாரசாமி ராஜாவின் வேலைச்சுமை
பெருகியது. வேட்பாளர் தேர்வை முடிவு செய்வதே பெரும்பாடாகிவிட்டது. சொந்தத் தொகுதியான
ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியிலேயே அவர் வேட்புமனு செய்தார். அடுத்த நாளே தமிழகம்,
ஆந்திரம், கேரளம் என மாகாணத்தில் மூலைமுடுக்கெங்கும் அலைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
எதிர்பாராத விதமாக அவருடைய சொந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து
ஒருவரும் போட்டியிடவில்லை. அதனால் தேர்தலுக்கு முன்பே அவர் வெற்றி பெற்ற வேட்பாளராகிவிட்டார்.
அதனால் முழு கவனத்தையும் கட்சிப்பணிகளில் செலுத்தி சென்னையிலேயே தங்கியிருந்தார்.
தலைவர்களின் சூறாவளிப் பிரச்சாரத்தின் காரணமாக தமிழ் மாகாணத்
தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியாக வெற்றி பெற்றது. ஆயினும் சட்டமன்றத் தலைமைப் பொறுப்பை
யார் ஏற்பது என்பதில் போட்டி எழுந்தது. ராஜாஜியும் பிரகாசமும் முதல்வர் பதவிக்குப்
போட்டியிட்டனர். ஒருவரும் பின்வாங்கத் தயாராக இல்லாத நிலையில் தேர்தல் தவிர்க்கப்படமுடியாத
ஒன்றாகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே வாக்களித்து தம் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர்.
148 வாக்குகளைப் பெற்ற பிரகாசம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ராஜாஜிக்கு 38
வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கட்சித்தலைவராக தன் கடமை முடிவுற்றது என்ற நிறைவுடன் குமாரசாமி
ராஜா ராஜபாளையத்துக்குத் திரும்பினார். ஆயினும் அமைச்சர் பட்டியலைத் தயார் செய்த பிரகாசம்
குமாரசாமி ராஜாவுக்கு விவசாயத்துறைக்கு அமைச்சர்
பொறுப்பைக் கொடுத்து மீண்டும் சென்னைக்கே அழைத்துக்கொண்டார். வேறு வழியில்லாமல் அவர்
சென்னைக்குக் குடிபெயரவேண்டியதாயிற்று.
இந்தியாவெங்கும் நிலவிவந்த பஞ்சத்தின் காரணமாகவும் உணவு இறக்குமதிக்கு
இருந்த தட்டுப்பாட்டின் காரணமாகவும் நாடெங்கும் உணவுப்பற்றாக்குறை இருந்தது. உணவுப்பற்றாக்குறையைத்
தீர்ப்பதுதான் விவசாயன் அமைச்சரான குமாரசாமி ராஜாவின் முதல் சவாலாக இருந்தது. தீவிரமான
உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் பல திட்டங்களைத் தீட்டினார். துங்கபத்ரா அணைத்திட்டம்,
பவானி அணைத்திட்டம், காந்திக்கோட் அணைத்திட்டம், வைகை அணைத்திட்டம் என பல திட்டங்களுக்குச்
செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. அதற்கான வேலைகளும் வேகமாக நடைபெற்றன. போதிய நிதி இல்லாத
நிலையிலும் விவசாய வளர்ச்சிக்காக நிறைய நிதியை ஒதுக்கி பாடுபட்டார் குமாரசாமி ராஜா.
ஓராண்டு கால கடும் உழைப்பின் விளைவாக, பிரிட்டன் அரசு கால உற்பத்தியை விட பல மடங்கு
கூடுதலான உற்பத்தியைச் சாதித்திருந்தாலும் பற்றாக்குறையின் எல்லையைக் கடக்கமுடியவில்லை.
வேளாண்மைத் துறை ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக கோவையில் ஆய்வுநிறுவனத்தைத் தொடங்கிவைத்தார்.
சற்றே உடல்நலம் குன்றி குமாரசாமி ராஜா மருத்துவமனையில் தங்கியிருந்த
போது முதல்வர் பிரகாசம் சட்டமன்றத்தில் விவசாயப்பொருட்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக
யாரிடமும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அது பிற உறுப்பினர்களிடையில்
ஒருவித அதிருப்தியை எழுப்பி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் சென்றுவிட்டது.
ஓராண்டு காலம் மட்டுமே முதல்வராகப் பணியாற்றிய
அவர் வாக்கெடுப்பில் அவர் தோல்வியுற, அடுத்த முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
பதவியேற்றார்.
அந்நிலையில்தான் 15.08.1947 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.
நள்ளிரவு நேரத்தில் செங்கோட்டையில் நேரு கொடியேற்றி சுதந்திரத்தை நாட்டுமக்களுக்கு
அறிவித்தார். அடுத்த நாள் அதிகாலையில் ராஜபாளையத்தில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்திருக்க
ஜவஹர் மைதானத்தில் சுதந்திரக்கொடியைப் பறக்கவிட்டார் குமாரசாமி ராஜா. அதைத் தொடர்ந்து
அக்கம்பக்கத்திலிருந்த பல ஊர்களுக்குச் சென்று கொடியேற்றி மக்களிடையில் எழுச்சியூட்டும்
வகையில் உரையாடிவிட்டுத் திரும்பினார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களும் இரண்டாண்டு காலம் மட்டுமே
பதவியில் நீடித்தார். மக்களிடையில் அவர் நல்ல பெயரை ஈட்டினார் என்றபோதும் காங்கிரஸ்
கட்சியினரிடையே நிலவிய அதிருப்தியின் விளைவாக அவர் தாம் வகித்துவந்த முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டிய
ஒரு சூழல் ஏற்பட்டது. ஆகவே முதல்வர் பதவிக்குப் புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய
நெருக்கடி உருவானது. இதையொட்டி காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்களிடையில் விவாதம் நிகழ்ந்தது.
அந்தப் பதவிக்குப் பக்தவத்சலம் பொருத்தமானவராக இருப்பார் என
காமராஜர் கருதினார். அந்த முடிவில் அதிருப்தி கொண்ட சி.சுப்பிரமணியம், தினமணி ஆசிரியர்
டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் குமாரசாமி ராஜாவின் பெயரை முன்மொழிந்தனர். சிறிது நேர
விவாதத்துக்குப் பிறகு காமராஜர் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார். ஆயினும் அவரைச் சம்மதிக்கவைப்பது
உங்களுடைய பொறுப்பு என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அச்சமயத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த குமாரசாமி ராஜா அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார் என அவர்
கருதினார். பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் சூழ்ந்திருக்கும் அரசியல்வாதிகளுடன் இணைந்து
நேர்மையாகப் பணிசெய்வது இயலாத செயல் என்னும் எண்ணத்தால் குமாரசாமி ராஜா தொடக்கத்தில்
எவ்வளவோ மறுத்துப் பார்த்தார். ஆயினும் நண்பர்கள்
தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். அன்றைய ஆந்திரப்பிரதேசமும் கன்னியாகுமரி நீங்கலாக விரிந்திருக்கும்
சென்னை ராஜதானியில் தெலுங்கு மொழியினரும் ஏற்றுக்கொள்ளும்
வகையில் உள்ள தமிழரால் மட்டுமே நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்யமுடியும் என்றும் ஏற்கனவே
அமைச்சராக இருந்து மக்களின் மனத்தைப் புரிந்துவைத்திருக்கும் அனுபவம் அவருக்குத் துணையாக
இருக்கும் என பலவிதமாக எடுத்துரைத்து அவரை ஏற்றுக்கொள்ள வைத்தனர். அடுத்தநாளே சட்டப்பேரவை
கூடி குமாரசாமி ராஜாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தது. உடல்நலம் குணமடைந்து திரும்பியதும்
06.04.1949 அன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் முழுமையாக ஆட்சி
செய்தார்.
குமாரசாமியின் ஆட்சிக்காலத்தில்தான் 1950ஆம் ஆண்டில் அரசு புதிய
கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குழந்தைகளுக்குக்
கட்டாயக்கல்வி, முதியோர் கல்வி என முறையாகச் செயல்படுத்தப்பட்டது. தமிழறிஞரான பெ.தூரனிடம்
தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதிகளைக் கொண்டுவரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
1952இல் புதிய இந்திய அரசியல் சட்டத்தின்படி நாடு முழுதும் பொதுத்தேர்தல்
நடைபெற்றது. அந்நேரத்தில் பஞ்சத்தைச் சமாளிப்பதற்காக ரேஷன்முறை நடைமுறைக்கு வந்து மாகாணமெங்கும்
காங்கிரஸ் கட்சி ஒருவித கசப்பைச் சம்பாதித்திருந்தது. அந்தக் கசப்பு அன்றைய தேர்தல்
முடிவில் எதிரொலித்தது. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் 152 இடங்களில் மட்டுமே காங்கிரஸ்
வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியே இல்லாமல்
வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரசாமி ராஜா அத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
சூழல் ஏற்பட்டது. மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அன்றைய பிரதமரான நேரு
குமாரசாமி ராஜவை வற்புறுத்தினார். ஆயினும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு
அப்பதவியில் தொடர்வதைத் தன் மனசாட்சி விரும்பவில்லை என எடுத்துரைத்து அந்த வேண்டுகோளை
மறுத்துவிட்டார். அதற்குப் பிறகு இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ள,
குமாரசாமி ராஜா தன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்குத் திரும்பினார்.
ஒருமுறை திருச்சூரில் ஒரு நூற்பாலையைத் திறந்துவைக்க வருமாறு
காரைக்குடியைச் சேர்ந்த வள்ளல் அழகப்பா அவர்களிடமிருந்து
குமாரசாமி ராஜாவுக்கு ஒரு கடிதம் வந்தது. தான்
எவ்விதமான பொறுப்பிலும் இல்லாத நிலையில் தன்னை அழைப்பதற்கான காரணம் புரியவில்லை என்று
ஆலை நிர்வாகத்துக்குப் பதில் கடிதம் எழுதி அனுப்பினார் குமாரசாமி ராஜா. கறைபடியாத கரங்களுக்குச்
சொந்தக்காரரான நீங்கள் தான் அந்த ஆலையைத் திறக்கவேண்டும் என வலியுறுத்தி மீண்டும் கடிதம் எழுதி அனுப்பினார் அழகப்பா. நட்பின்
கோரிக்கைக்கு இணங்கி குமாரசாமி ராஜாவும் திறப்புவிழாவில் கலந்துகொண்டு திரும்பினார்.
1954இல் நேரு அவரை அழைத்து ஒரிசா மாநிலத்தின் கவர்னராக நியமித்தார்.
இறுதிக்காலம் வரை அப்பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் நீரிழிவு நோயின் கடுமையால்
நலிவுற்று 15.03.1957 அன்று சென்னையில் மறைந்தார்.
பி.எஸ்.குமாரசாமி
ராஜா 08.07.1898 அன்று ராஜபாளையத்தில் பூசப்பாடி சஞ்சீவி ராஜாவுக்கும் இலட்சுமி அம்மாளுக்கும்
மகனாகப் பிறந்தார். பிறந்த எட்டாவது நாளிலேயே அவருடைய தாயாரையும் மூன்று வயதில் தந்தையாரையும்
இழந்து சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் வளர்ப்புத்தாயாக
இருந்த சிற்றன்னையும் மறைந்துவிட அவருடைய பாட்டியே அவருக்கு எல்லாமாக இருந்து வளர்த்தார்.
காந்தியடிகளின் பாதையில் பயணம் செய்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு முறை
சிறைக்குச் சென்றார். ராமநாதபுரம் ஜில்லாபோர்டு தலைவராகவும் பிரகாசம் அமைச்சரவையில்
விவசாய அமைச்சராகவும் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் ஒரிசா மாநில ஆளுநராகவும்
பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜபாளையத்தில் தம்முடைய வீட்டை காந்தி கலை மன்றமாக உருமாற்றி
நாட்டுக்குக் கொடையாக வழங்கினார். அது பெரிய நூலகமாகவும் கலை இலக்கிய, இசை நிகழ்ச்சிகள்
நடைபெறும் கலையரங்கமாகவும் திகழ்ந்துவருகிறது. கடுமையான நீரிழிவு நோயின் காரணமாக சென்னையில்
15.03.1957 அன்று மருத்துவமனையில் மறைந்தார். அடுத்தநாள் அவருடைய உடல் ராஜபாளையத்துக்குக்
கொண்டுவரப்பட்டு ஊராரின் இறுதி மறைவுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. 1998இல் அவருடைய
நூற்றாண்டையொட்டி வரலாற்றுத்துறை முனைவர் வெங்கட்ராமன் ‘தேசாபிமானி பி.எஸ்.குமாரசுவாமி
ராஜா’ என்னும் பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டார்.
(சர்வோதயம் மலர்கிறது – நவம்பர்
2025)
