வண்ணநிலவனின் கதைகளைப்பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு வந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்து தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக்கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப்படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
வண்ணநிலவன் கதைகள் அன்பால் நிறைந்தவை
என போகிற போக்கில் ஒற்றைச்சொல்லை உதிர்த்துவிட்டுச் செல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அவர்கள் அது எத்தகைய அன்பு என்று உணரவோ, ஆய்வுசெய்யவோ முற்படுவதில்லை. வண்ணநிலவன்
கதைகளில் காணப்படும் அன்பு என்பது, அன்பு மிகுந்த சூழலில் பிறந்து, அன்பார்ந்த மனிதர்களுடன்
பழகி, கணந்தோறும் அன்பில் திளைத்து, எட்டிய தொலைவெங்கும் அன்பான மனிதர்கள் மட்டுமே
நிறைந்த வாழ்க்கையில் பரிமாறிக்கொள்ளும் அன்பல்ல. அந்த அன்பு, அன்பு என்பதையே மறந்துவிட்ட ஓர் இருண்ட சூழலில் உழன்றுகொண்டே இருப்பவனின் வேட்கைக்கு
எங்கிருந்தோ கிடைக்கும் ஒரு வாய் தண்ணீர்.
மனிதனையும் மிருகமாக்கி வதைக்கும் வறுமையில் சிக்கி மீட்சியின்றி வாடிக் கிடப்பவனின்
கண்முன்னால் விழுந்து கிடக்கும் மணல்படிந்த நாவற்பழம். புறக்கணிப்புகளையும் அவமானங்களையும்
மட்டுமே எல்லாத் திசைகளிலும் பெற்று குறுகி நிற்பவன் முன்னால் வந்து நிற்கும் கனிவான
முகம்.
இந்த உலகம் நாம் எண்ணியிருப்பதைப்போல
ஈரமே இல்லாத பாலைவனமல்ல, பாகுபாடு பாராது அனைவருக்கும் நீர்சுரந்தளிக்கும் ஊற்றுகளையும்
அங்கங்கே தக்கவைத்திருக்கிறது என்னும் உண்மையை உணர்த்துகின்றன வண்ணநிலவனின் கதைகள்.
அவநம்பிக்கைகளில் சிக்கி சரிந்துவிழாதவண்ணம் மனிதர்களை தாய்மையுணர்வுடன் பெருகித் தழுவும்
தெய்வத்தையே அவர் கதைகள் அன்பென காட்சிப்படுத்துகின்றன.
வண்ணநிலவனுடைய சிறுகதைகளை வேகவேகமாக
அசையும் காட்சிகளாக மனத்தில் நகர்த்திப் பார்க்கும்போது, அவருடைய ஆரம்பக்காலச் சிறுகதையொன்றில்
இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி உடனடியாக நினைவுக்கு
வருகிறது. பள்ளிப்படிப்பை மட்டும் முடித்த ஒருவன் வேலை தேடிப் போன முயற்சியில் தோற்று
சங்கடமான மெளனமும் கசப்பும் கொண்ட மனநிலையுடன் நள்ளிரவில் குனிந்த தலையுடன் வீட்டுக்குத்
திரும்பிக்கொண்டிருக்கும் காட்சியுடன் அக்கதையை ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன். ஒரு டீக்கடையின்
முன்னால் கரித்தண்ணீர் குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது. கால் படாமல் அதைத் தாண்டும்போது
செருப்பு அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும் அறாத செருப்பையும் குனிந்து கையில்
எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குகிறான். ஒரு குட்டையைக் கூட அவனால் வெற்றிகரமாகத் தாண்டமுடியவில்லை.
வாழ்க்கையை அவன் எப்படித் தாண்டி வெற்றிபெற முடியும்? அவன் அணிந்திருக்கும் செருப்புகளே
அவனுக்குத் தடையாக அமைந்துவிடுகின்றன. அவனுடைய குறைந்தபட்ச கல்வித்தகுதியே அவனுடைய
மிகப்பெரிய தடை. தோற்றவன் என எந்த இடத்திலும் அவனைப்பற்றி வெளிப்படையாக வண்ணநிலவன்
குறிப்பிடவில்லை என்றபோதும், இப்படி மாற்றிமாற்றி யோசிக்கும்போது தோல்வியடைந்தவனின்
உலகத்தையே அவர் எழுதிச் செல்வதாகத் தோன்றியது. ஒருவகையில், அவருடைய ஒட்டுமொத்த கதையுலகமே
தோல்வியடைந்தவர்களின் உலகம் என்றுதான் சொல்லவேண்டும். எங்கோ, எப்படியோ கிட்டும் ஒரு
துளி தேனின் சுவையில் தோல்விகளால் விளைந்த கசப்பை மறந்து அவர்களும் வாழத் தொடங்குகிறார்கள்.
தமிழ்நாட்டு வாழ்க்கையின் – குறிப்பாக
நெல்லை மாவட்ட வாழ்க்கையின் - பலவிதமான கோலங்களை தன் கதைப்பரப்புக்குள் கொண்டுவரும்
முயற்சியில் வண்ணநிலவன் அடைந்திருக்கும் வெற்றி மிகமுக்கியமானது. நாற்பதுகளின் இறுதியில்
சுதந்திரம் பெற்ற இந்தியா தன்னைத்தானே நிலைநிறுத்திக்கொள்ள அடுத்த பத்து பதினைந்து
ஆண்டுகள் கடுமையாகப் போராடி வெற்றியை அடைந்தது. புதிய கல்வி. புதிய அதிகார அமைப்பு.
புதிய வாழ்க்கைமுறை. சமூகத்தில் ஒரு புதிய நடுத்தட்டு உருவாகிவந்தது. பழைய நடுத்தட்டைச்
சேர்ந்த சிலருக்கு கல்வியின் வழியாக உருவான புதிய நடுத்தட்டுப் பிரிவினரோடு இணைந்துகொள்வது
எளிதாக இருந்தது. கல்வியைத் தொடரமுடியாதவர்களும் கல்வியையே தொடாதவர்களும் புதுமையுடன்
இணையமுடியாமல் அந்தரத்தில் உழன்றார்கள். அது ஒரு இக்கட்டான காலகட்டம். தொடக்கநிலைச்
சங்கடங்களை ஏதேதோ வகைகளில் எதிர்கொண்டு கடந்து எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவர்களும்
எப்படியோ முட்டிமோதி புதிய நடுத்தட்டு வரிசைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். வாய்ப்புகளையும்
வாழ்க்கையையும் தொலைத்த அல்லது பலிகொடுத்துவிட்டு கையறுநிலையில் நின்ற அறுபதுகளின்
காலகட்டம் மிகவும் கசப்பும் வலியும் நிறைந்த ஒன்று. அதன் இலக்கியச் சாட்சியமாக நிற்பவை
வண்னநிலவனுடைய சிறுகதைகள்.
அக்காலகட்டம் ஊட்டிய கசப்புகளால் ஒருவர்
தீராத வன்மத்தின்பால் திசைதிரும்பியிருக்கலாம். மிக வேகமாக ஒருவர் அத்தகு முடிவையே
எடுத்திருக்கமுடியும். ஆனால் அக்கசப்புகள் அனைத்தையும் விழுங்க உதவும் ஒரு துளி தேனாக
அன்பைப் பற்றிக்கொண்டு மீண்டுவந்தனர் அவர்கள். வண்ணநிலவன் சிறுகதைகளில் காணும் அன்பில்
நாம் அந்த அன்பின் இனிமையையே உணர்கிறோம். இப்பின்னணியோடு அவருடைய கதைகளை வாசிக்கும்போதுதான்
அவர் கட்டியெழுப்பிய அன்பின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
வண்ணநிலவனின் சிறுகதைகளில் நாம் காணும்
அறுபதுகளின் சித்திரங்களைப் பார்க்கும்போது ஓர் ஓவியத்தொகுப்பைப் புரட்டிப் பார்த்த
அனுபவம் கிடைக்கிறது. சில்பியின் ஓவியத்தொகுப்பைப்போல, ஓவியர் மணியனின் ஓவியத்தொகுப்பைப்போல
வண்ணநிலவனின் சொல்லோவியங்கள் காட்சியளிக்கின்றன.
காரைவீடு என்றொரு சிறுகதை.
அதிகாலையில் எழுந்து பேச்சியம்மன் படித்துறைக்குக் குளிக்கச் செல்வதற்குப் புறப்படுகிறார்
குடும்பத்தலைவர். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ அவர் ஆசையாகக் கட்டிய வீடு அது. ஆனால்
அவர் கனவில் கொஞ்சம்கொஞ்சமாக மண் விழுகிறது. தொடக்கத்திலேயே அவருடைய மனைவி உயிர்நீத்துவிடுகிறாள்.
வளர்ந்து திருமணம் செய்துகொண்டு வாழும் இரு பிள்ளைகளில் ஒருவரும் திறமைசாலி இல்லை.
ஏதோ ஒரு நெருக்கடிக்காக அவர் அந்த வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அன்று காலையில்தான்
விற்பனைப்பத்திரத்தில் அவர் கையெழுத்து போடவேண்டும். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் அவர்
அந்தக் காரைவீட்டின் திண்ணைகளைப் பார்ப்பதுபோல ஒரு காட்சியைச் சித்தரித்திருக்கிறார்
வண்ணநிலவன். ரெட்டை சாய்மானத்திண்ணை. சுண்ணாம்பால் மழமழவென உருவாக்கப்பட்ட திண்ணை.
எப்போதும் வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பதுபோன்ற உணர்வைத் தரும் குளிர்ச்சியான திண்ணை.
இருபுறமும் சாய்மானத்திண்ணைகளைக் கொண்ட ஒரு காரைவீட்டின் ஓவியத்தையே வண்ணநிலவனுடைய
சிறுகதை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது.
கரையும் உருவங்கள் என்பது
இன்னொரு சிறுகதை. பள்ளியிறுதி தேர்ச்சி பெற்று வேலை தேடும் தம்பி. பெரியவளாகி பத்து
ஆண்டுகளுக்கும் மேல் திருமணம் செய்துவைக்க வழியில்லாமல் வீட்டிலேயே அடைந்துகிடக்கும்
அக்கா. வேலையைத் தேடிக்கொள்ள முடியாத இயலாமையால் சொந்த வீட்டுக்கே அந்நியனைப்போல வரும்
தம்பியை அமைதிப்படுத்தி உணவுகொடுத்து அமைதிப்படுத்துகிறாள் அக்கா. அக்காவும் தம்பியும்
அன்பில் கரையும் அத்தருணம் இலக்கியப்பரப்பில் ஒரு பொன்னான சித்திரம். இருளில் கூடத்தைக்
கடக்கும்போது கைபட்டு ஓசையெழுப்பும் ஊஞ்சலைப்பற்றி குறிப்பிடும்போது வண்ணநிலவன் வெறும்
ஊஞ்சலென எழுதாமல் ஒரு காலத்தில் சகோதர சகோதரிகளோடு கூடியமர்ந்து பஸ் விளையாட்டு விளையாடி
மகிழ்ந்த ஊஞ்சல் என்னும் கூடுதல் தகவலோடு எழுதிச் செல்கிறார். இன்றும் பலருடைய வீடுகளி
ஊஞ்சல் உண்டு. ஆனால் பஸ் விளையாட்டு விளையாடத்தான் தம்பிகளும் தங்கைகளும் இல்லை.
ஒரு வேனில்காலத்தில் என்னும்
சிறுகதை வேட்டைக்கு எடுத்துச் செல்வதற்காக வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை இளைஞரொருவர்
தேங்காய் எண்ணெய் போட்டு துடைத்து தயாராக்கும் காட்சியை விரிவாக முன்வைக்கிறது. தனிமனிதர்
துப்பாக்கி வைத்திருப்பதும் காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவதும் சமூகக்குற்றமாக
மாறிவிட்ட இன்றைய சூழலில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிலவிய காலகட்டத்தின் குறுக்குவெட்டுத்
தோற்றத்தை முன்வைக்கும் இச்சிறுகதையை அரியதொரு ஆவணமென்றே கருதலாம்.
கடன் என்பது வண்ணநிலவனின்
முக்கியமான கதைகளில் ஒன்று. வாடகை வீட்டுக்கு முன்பணம் கொடுக்க தன் அத்தையிடம் வட்டிக்கு
ஆயிரம் ரூபாய் கடன் வாங்குகிறான் ஒருவன். வட்டிக்கு ஆசைப்பட்ட அத்தை தன் பிள்ளைகளுக்குக்
கூடத் தெரியாமல் கொடுக்கிறாள். ஆனால் ஒரே மாதத்தில் திருப்பித் தருவதாகச் சொன்ன தொகையை
ஓராண்டாகியும் அவனால் திருப்பிக் கொடுக்கமுடியவில்லை. சங்கடத்தில் அவளைப் பார்ப்பதையே
தவிர்த்து ஊருக்குள் நடமாடுகிறான். எதிர்பாராத விதமாக ஒருநாள் அத்தை மரணமடைந்துவிடுகிறாள்.
அவளுக்குக் கடன்பாக்கி இருக்கிறது என்பதையே அவன் மறைத்துவிடுகிறான். ஆனால் ஆழ்துயிலில்
அவளுக்குக் கடன்பட்ட எண்ணம் கனவாக வந்து அவனை ஒவ்வொரு நாளும் அலைக்கழித்தபடி உள்ளது.
பொருள் கடன், நன்றிக்கடன் என்பதையெல்லாம் கடந்து ஒரு நிரந்தரக் குற்ற உணர்வாக அது அவன்
நெஞ்சில் பதிந்துவிடுகிறது.
இக்கதையில் அத்தையின் மரணச் செய்தியை
ஓர் ஆள் வழியாகத் தெரிவிக்கப்படுவதாக வண்ணநிலவன் காட்சிப்படுத்துகிறார். வாசலில் அவன்
தயங்கித்தயங்கி நிற்கும் காட்சி. ஆள் கதவருகே வந்ததும் பொறுமையாகத் தெரிவிக்கும் காட்சி.
தண்ணீரையோ, தேநீர் அருந்த பணமோ கொடுக்க முன்வரும்போது மறுக்கும் காட்சி. எல்லாவற்றையும்
அவர் ஒவ்வொரு கட்டமாக சொல்லி காட்சிகளை நகர்த்துகிறார். கடைசியாக தூதாக வந்தவன் அடுத்த
ஊருக்குச் செல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றுச் செல்கிறான். மரணச்செய்தியை
ஆட்கள் வழியாக உறவுக்காரர்கள் பரிமாறிக்கொண்ட ஒரு தகவல் பரிமாற்ற காலகட்டத்தின் சித்திரத்தை
இக்கதையில் பார்க்கமுடிகிறது.
சைக்கிள் கேரியரில் சோடா கலர் பாட்டில்கள்
நிறைந்த கனத்த பைகளை இருபுறமும் தொங்கவிட்டு கடைக்காரர்களைத் தேடிப்போகும் இளைஞனொருவனை
கெட்டாலும் மேன்மக்கள் என்னும் கதையில்
பார்க்கலாம். ஆல்பம் போன்ற புத்தகத்தை விரித்து டிசைன்களைக் காட்டி ஆர்டர் பிடித்து அட்வான்ஸ் வாங்கும் விற்பனையாளனை
மீண்டும் என்னும் கதையில் பார்க்கலாம்.
பொருட்காட்சியில் பெண்ணின் தலையும் பாம்பின்
உடலும் கொண்ட அபூர்வ உயிரனத்தை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தி பொருளீட்டும்
குடும்பத்துக்கு இடம்கொடுத்த பொருட்காட்சி வண்ணநிலவன் சிறுகதையுலகத்தில் இன்னும் வாழ்கிறது.
ஆடிய கால்கள் என்றொரு
சிறுகதை. திரைப்பட நடனப்பாடல்களுக்கு ஊரெங்கும் ரசிகர்கள் நிறைந்திருந்த தருணத்தில்
அதே நடனத்தையும் பாடலையும் மேடையில் நிகழ்த்திக் காட்டிய கலைஞர்களுக்கு வரவேற்பு இருந்தது.
நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது. ஆனால்
அதெல்லாம் ஒரு காலகட்டத்தோடு சரி. தொலைக்காட்சியின் வருகை அனைத்தையும் சிதைத்து சீர்குலைத்தது.
ஆடுவதை நிறுத்திய ரஞ்சிதம் கூடை முடைந்து சந்தையில் விற்றுப் பிழைக்கத் தொடங்கிவிடுகிறாள்.
ஆடுவதை நிறுத்தமுடியாத சிதம்பரம் பசியையும் பட்டினியையும் ஏற்று கடைத்தெருவில் மற்றவர்களின்
சீண்டுதலுக்கு இலக்காகி, இரந்துண்ணும் வாழ்க்கையை வாழ்கிறான்.
அரைநூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும்
வண்ணநிலவனுடைய எண்ணற்ற சிறுகதைகளில் அறுபதுகளையொட்டிய காலகட்டத்தின் பின்னணி அழுத்தமான
நிறத்துடன் அமைந்திருக்கிறது. எந்த முயற்சியும் இல்லாமலேயே அவருடைய பாத்திரங்கள் காலூன்றி
நிற்கும் நிலமென அக்காலகட்டம் அவர் கதைகளில் வீற்றிருக்கிறது.
வரலாற்றின் போக்கில் நெடிதுயர்ந்த தோற்றத்துடன்
கோவில் கருவறையில் தெய்வத்தை தினந்தோறும் நேரில் சென்று மனிதன் வணங்கியது ஒரு கட்டம்.
வீட்டிலேயே கருவறையை உருவாக்கி, சிற்பமாகவோ ஓவியமாகவோ தெய்வத்தை நிலைநிறுத்தி வணங்கியது
இன்னொரு கட்டம். பயணங்கள் பெருகியபோது, கைப்பெட்டியில் ஒரு படமாக மாற்றி எடுத்துச்
சென்றது அடுத்த கட்டம். அதுவும் மாறி மணிபர்சுக்குள் ஒரு கையடக்கப் படமாக எடுத்துச் சென்றது பிறிதொரு கட்டம்.
வெவ்வேறு வடிவிலென்றாலும், தெய்வத்தை தன்னோடு சுமந்தபடி செல்வது மனிதனின் இயல்பாகிவிட்டது.
வண்ணநிலவனின் சிறுகதைகளில் தன்னிச்சையாக
வெளிப்படும் காலகட்டத்தின் சுவடுகளைப் படிக்க நேரும்போதெல்லாம், காலகட்டத்தை ஒரு தெய்வமாக
மாற்றி தன்னோடு எடுத்துச் செல்கிறவராகத் தோற்றமளிக்கிறார். காலத்தை தெய்வமாக்கி, அத்தெய்வத்தை
தன் கதைகளில் வீற்றிருக்க வைக்கும் மாபெரும் கலைஞன் வண்ணநிலவன்.
(27.11.2022
அன்று வண்ணநிலவனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டதையொட்டி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
இதே கட்டுரை 04.12.2022 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்தது)