Home

Showing posts with label வண்ணநிலவன். Show all posts
Showing posts with label வண்ணநிலவன். Show all posts

Sunday, 12 November 2023

கருணையினால் - கட்டுரை

 

மணிப்பால் மருத்துவமனையில் நண்பரொருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு அறையிலேயே வைத்திருந்தார்கள். பிறகுதான் வேறொரு சாதாரண தனி அறைக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்தது. செய்தி கிடைத்ததும் நானும் இன்னொரு நண்பரும் அவரைச் சென்று பார்க்கத் திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் வசிப்பதோ வேறுவேறு திசையில் என்பதால் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட வழியில்லை. அதனால் நண்பர் “நான் முதலில் வந்தால் நீங்கள் வரும்வரை வெளியே விடுதிக்கு அருகில் காத்திருக்கிறேன். ஒருவேளை நீங்கள் முதலில் சேர்ந்துவிட்டால் நான் வரும்வரைக்கும் காத்திருங்கள்” என்று தெரிவித்துவிட்டார்.

Sunday, 30 April 2023

இனிமையும் இனிமையின்மையும் - கட்டுரை

 

சில நாட்களுக்கு முன்பு நண்பரொருவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். கூடத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது பின்கட்டிலிருந்து பலாப்பழத்தின் இனிய மணம் வந்தது. “என்ன, பலாப்பழத்து வாசனை போல இருக்குதே? வாங்கிவந்தீங்களா? எங்க கிடைச்சது?” என்று கேட்டேன்.  “நான் வாங்கிவரலை. நேத்து ஊருலேர்ந்து அத்தை வந்தாங்க. அவுங்க வாங்கிட்டு வந்த பழம். அவுங்கதான் அறுத்து சுளை எடுக்கறாங்க” என்றார் நண்பர்.

Sunday, 25 December 2022

வண்ணநிலவன் : காலத்தைத் தெய்வமாக்கும் கலைஞன்

 

வண்ணநிலவனின் கதைகளைப்பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய  முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரண்டு வந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்து தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக்கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப்படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.

Friday, 10 March 2017

மனநிறைவும் மனச்சுமையும் - கட்டுரை


வண்ணநிலவனின் "குளத்துப்புழை ஆறு"
 

      முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது அதன் அழகில் மனம் பறிகொடுத்து அப்படியே ஒருகணம் நின்றுவிட்டேன்தொடர்ந்து பார்த்தபடியே இருக்கும் ஆசையில் யாருக்கும் தொந்தரவு தராதவகையில் நடைபாதையை விட்டுவிலகி நின்று பார்க்கத் தொடங்கினேன்திரும்பிய கணத்தில் கைக்குட்டை விற்கிற ஒரு சிறுமியின்மீது பார்வை படிந்ததுபயணியர் அனைவரும் வளாகத்தில் நுழைந்த கணத்திலிருந்து தாஜ்மகாலின்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருக்க, அவள் பார்வை மட்டும் அந்தப் பயணிர்மீதே இருந்தது. "மூணு ரூபாய்க்கு ஒன்னு, பத்து ரூபாய்க்கு நாலு" என்று மந்திரம்போல திரும்பத்திரும்பச் சொன்னபடி புதுப்புதுப் பயணியரை நாடி நடந்துகொண்டே இருந்தாள்பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்திழுக்கிற உலக அதிசயம் அவனை ஒரு விழுக்காடு அளவுகூட அசைக்கவில்லைஅந்தத் திசையைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லைகைக்குட்டைகளை வாங்கும் முகத்தை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிப்பதிலேயே அவள் பார்வை குறியாக இருந்தது

Thursday, 22 September 2016

ஒளி குன்றாத புள்ளிகள் - வண்ணநிலவனின் சிறுகதைகள்



 
காலை நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றிருக்கும்போது தினந்தோறும் ஒரு பெரியவரைப் பார்ப்பேன். இரண்டடிக்கு மூன்றடி அளவுள்ள பைகளை கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மிகமிக மெதுவாக நடந்து வருவார். இரண்டு பைகளிலும் எலுமிச்சை, தயிர்ச்சோறுப் பொட்டலங்கள். சுமை தாங்கமுடியாமல் இருபது முப்பது அடிகளுக்கு ஒருமுறை பைகளைத் தரையில் வைத்துவிட்டு சிறிதுநேரம் நிற்பார். இறுகிவிடும் கைவிரல்களைத் தளர்த்தி ஊதிவிட்டுக்கொள்வார். வலது கையால் இடதுதோளையும் இடதுகையால் வலதுதோளையும் மாறிமாறிப் பிடித்துக்கொள்வார். இரண்டு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் அழுத்தியபடி கழுத்தை அண்ணாந்து மடக்குவார். ஆசுவாசமடைந்த பிறகு மீண்டும் பைகளை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குவார்இரண்டுமூன்று கட்ட ஓய்வுகளுக்குப் பிறகு நிறுத்தத்துக்கு வந்து சேர்வார். நெற்றியில் முத்துமுத்தாகத் தேங்கி நிற்கும் வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தபிறகு வலிக்கும் கைகளை உதறித் தளர்த்திக்கொள்வார்இப்படி கைகளை உதறியும் கால்களை நீவிவிட்டுக்கொண்டும் கழுத்தை நிமிர்த்தித் திருப்பியும் சுமைவலியிலிருந்து சற்றே நிவாரணமடைந்து மீண்டும் சுமந்துசெல்ல முயற்சி செய்யும் முதியவர்களும் பெண்களும் சிறுவர்களும் நகரத்தில்  பல இடங்களில் பார்வையில் தினந்தோறும் பட்டபடி இருக்கிறார்கள்சுமைவலி என்பது ஒருவகையில் வாழும் வலிஅது அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. வாழும் வலியால் தவிப்பவர்கள் காலம்காலமாக நகரின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெரிய வெற்றியையும் பற்றிய கனவுகள் அவர்கள் நெஞ்சில் இல்லைநிம்மதியாக ஒருநாள் பொழுது கழிந்தால் போதும் என்று இருப்பவர்கள் அவர்கள்ஒவ்வொரு கணமும் வலியோடு வாழ்ந்து மறைபவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டக்கூடும். நகரத்துக்கோ அல்லது உலகத்துக்கோ, ஒருபோதும் அவர்கள் முகங்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் அவர்களுடைய தடங்கள் எழுத்துலகில் காணக்கிடைக்கின்றன. முக்கியமாக  வண்ணநிலவனின் கதைகளில்.