Home

Friday 10 March 2017

மனநிறைவும் மனச்சுமையும் - கட்டுரை


வண்ணநிலவனின் "குளத்துப்புழை ஆறு"
 

      முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது அதன் அழகில் மனம் பறிகொடுத்து அப்படியே ஒருகணம் நின்றுவிட்டேன்தொடர்ந்து பார்த்தபடியே இருக்கும் ஆசையில் யாருக்கும் தொந்தரவு தராதவகையில் நடைபாதையை விட்டுவிலகி நின்று பார்க்கத் தொடங்கினேன்திரும்பிய கணத்தில் கைக்குட்டை விற்கிற ஒரு சிறுமியின்மீது பார்வை படிந்ததுபயணியர் அனைவரும் வளாகத்தில் நுழைந்த கணத்திலிருந்து தாஜ்மகாலின்மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருக்க, அவள் பார்வை மட்டும் அந்தப் பயணிர்மீதே இருந்தது. "மூணு ரூபாய்க்கு ஒன்னு, பத்து ரூபாய்க்கு நாலு" என்று மந்திரம்போல திரும்பத்திரும்பச் சொன்னபடி புதுப்புதுப் பயணியரை நாடி நடந்துகொண்டே இருந்தாள்பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்திழுக்கிற உலக அதிசயம் அவனை ஒரு விழுக்காடு அளவுகூட அசைக்கவில்லைஅந்தத் திசையைக்கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லைகைக்குட்டைகளை வாங்கும் முகத்தை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிப்பதிலேயே அவள் பார்வை குறியாக இருந்தது


      திரும்பி நடந்தபோது தாஜ்மகாலைக் கண்டு களித்த நினைவுகளுக்கு இணையாக அவள் நினைவும் வந்தபடி இருந்ததுபசி வந்திடப் பத்தும் பறந்துபோம் பாட்டை ஒருமுறை மனம் சொல்லிக்கொண்டது. பசியை அண்டவிடாமல் இருப்பதற்கும் அண்டிவிட்ட பசியைத் துரத்துவதற்கும் அச்சிறுமி நடத்தும் போராட்டம் வேதனையானதுவயிறு குளிர்ந்தால்தான் மனம் வேறு திசையில் திரும்பும்அக்கினியாக கொழுந்துவிட்டு எரியும் வயிற்றோடு மனத்தை எந்தப் புள்ளியின்மீதும் குவிக்கமுடிவதில்லைஇதற்குப் பிறகு பல இடங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை பல முறை பார்க்க நேர்ந்ததுண்டுகண்களைக் கவரும் சிற்பங்களைக் கொண்ட கோயில் வளாகங்ளக், மலைப்பாதைகள், பழங்கால கோட்டை வாசல்கள், கடற்கரைகள், அடிவாரங்கள், அருவிக்கரைகள்ஆற்றங்கரைகள் எல்லா இடங்களிலும் கண்நிறைய பற்றியெரியும் பசியோடு பொம்மைகளையும் கைக்குட்டைகளையும் பஞ்சுமொட்டுகளையும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் வாங்கிக்கொள்ளச் சொல்லி விடாமல் பின்தொடர்கிற சிறுமிகளையும் சிறுவர்களையும் பெண்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறதுசம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்த மனநிறைவும் அதற்கு நிகரான மனபாரத்தையும் சுமந்தபடி ஊர் திரும்புவது வழக்கமாகிவிட்டது.

       வண்ணநிலவனின்  "குளத்துப்புழை ஆறு" கவிதையை நினைத்துக்கொள்ளும்போது இந்தத் தனிப்பட்ட அனுபவங்கள் தாமாகவே புரண்டெழுகின்றன. ஆற்றைப்பற்றிய விவரத்தைச் சித்தரிக்கும்போது ஆற்றை ஓர் அடையாளமாக மாற்றிவிடுகிறார் வண்ணநிலவன். இந்த நாட்டின் ஆயிரமாயிரம் சுற்றுலாத்தலங்களின் குறியீடாக உருமாற்றப்படுகிறதுஆற்றில் ஏராளமான மீன்கள். கரைவரைக்கும் தாராளமாக நீந்திவந்து தலையைக் காட்டும் மீன்கள். ஆண்டவன் குடியிருக்கும் கரையோரம் என்பதால் யாரும் அவற்றைத் தூண்டில்போட்டு இழுப்பதில்லை. பிடிப்பதுமில்லைசுதந்திரமாக கொழுகொழுவென வளர்ந்து ஆற்றில் வளையவளைய நீந்துகின்றன. ஆவலுடன் நாடிவந்த பக்தர்கள் அந்த மீன்களுக்கு இரையாக கடலை வாங்கிப் போடுகிறார்கள்அது ஒரு பழக்கம். ஆற்றங்கரையோரம் பக்தர்களை நச்சரித்து கடலை விற்கும் மலையாளச் சிறுமிகளும் வளையவளைய வருகிறார்கள்ஒருபுறம் ஆற்றில் ஆனந்தமாக நீந்தும் மீன்கள்இன்னொருபுறம் பக்தர்களிடையே கடலைவிற்பனைக்காக புகுந்துபுகுந்து வரும் சிறுமிகள்மீன்களைப் பார்த்து உல்லாசமாகச் சிரித்துக் களிக்கவேண்டிய வயதில் வசைகளையும் எரிச்சல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் ஆட்களைப் பின்தொடர்ந்து கடலைவிற்றுத் திரியும்படி அமைந்துவிட்டது அவர்கள் வாழ்க்கைஆலயத்தை நாடிவரும் பக்தர்களுக்குக் கிட்டும் மணிகண்டன் அருள் அதே ஆலயத்தில் கடலைவிற்கிற சிறுமிக்குக் கிட்டாமல் போனதன் காரணம் புதிரானது

       சிறுமியின் வீடு எங்கே இருக்கக்கூடும் என்று கவிதையில் இடம்பெறுகிற ஒரு வினா முக்கியமானது. யாரிடமும் கேட்டு பதில் பெற முடிகிற வினா அல்ல இதுதனக்குள்ளேயே கேட்டுக்கொள்வதுபோன்ற ஒரு முணுமுணுப்பு. பிறகு அதற்கான பதிலும் கட்டி எழுப்பப்படுகிறதுமணிகண்டன் ஆராதனை மணியோசை கேட்கும் தொலைவுக்குள்ளேயே தென்சரிவுத் தேக்கு மரங்களிடையே அவள் வீடு இருக்கட்டும் என்கிற விழைவையே விடையாக கட்டமைத்துக்கொள்கிறது. அல்லும் பகலும் கடலை கடலை என்று பக்தர்கள் பின்னாலேயே அலைகிற சிறுமியின் கவனம் ஏதேனும் ஒரு கணத்தில் மீன்மீதோ அல்லது மணிகண்டன்மீதோ திரும்ப அந்த அருகாமை துணையாக இருக்கக்கூடும். தன் குழந்தைமையை அவள் அக்கணத்தில் மீண்டும் கண்டடையக்கூடும். இது ஒரு கோணம். மணிகண்டன் அருள்வளையத்துக்குள்ளேயே இருப்பதில் சிறுமியின் வாழ்வில் ஒரு சின்ன மலர்ச்சி என்றேனும் ஒருநாள் நேரக்கூடும் என்னும் நம்பிக்கை இன்னொரு  கோணம்

      மனச்சுமையை வெளிப்படையாக சிதறவிடாமல் நுட்பமாக உணரும்வகையில் கட்டமைக்கப்பட்டிருப்பதே இக்கவிதையின் வெற்றி. "குளத்துப்புழை ஆறு இந்நேரத்தில் இவ்வரிகளை எழுதும் இந்நேரத்தில்கூட ஓடிக்கொண்டிருக்கும்..." எனத்தொடங்கும் அமைப்பைக் கூர்ந்து கவனிக்கும்போது பெருமூச்சின் மிச்சத்தையும் தவிர்க்கமுடியாத வேதனையையும் உணரமுடியும். இந்நேரத்தில்கூட என்று சொல்லும்போது அந்த அழுத்தம் இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்நேரத்தில்கூட அந்த ஆறு ஓடலாம், ஆற்றில் மீன்கள் ஆனந்தமாக நீந்தலாம். பக்தர்கள் பார்த்து மகிழலாம். ஆனால் இவை எதையுமே கவனிக்காமல் "கடலை.....கடலை" என சுழன்று சுழன்று விற்பதற்காகத் திரிகிற சிறுமிகளும் இருக்கலாம். மாறாத காட்சியாக இந்த அமைப்பு தொடர்வதை ஒட்டி எழுகிற மனச்சுமையை இந்தப் புள்ளிதான் உணர்த்துகிறது.

**

குளத்துப்புழை ஆறு

வண்ணநிலவன்

குளத்துப்புழை ஆறு
இந்நேரத்தில்
இவ்வரிகளை எழுதும்
இந்நேரத்தில்கூட
ஓடிக்கொண்டிருக்கும்.
தோணிகள் ஓட்டமுடியாத
குளத்துப் புழையாற்றின்
கரைகளில் மீன்களுக்குக்
கடலை வாங்கச் சொல்லி
கொஞ்சும் மலையாளத்தில்
நச்சரிக்கும் சிறுமியின் வீடு
எந்தச் சரிவில் இருக்கும்?
எனக்கு ஏனோ
வடபுறத்தைவிட
தென்புறமே பிடிக்கிறது
அதனால் அவர்களின் வீடு
தென்சரிவிலேயே
உயரமான தேக்கு
மரங்களினூடே
மணிகண்டனின் ஆராதனை
மணியொலி கேட்கும் தூரத்தில்
இருக்கட்டும்
குளத்துப் புழையாறு
நூறாயிரம்
கிருஷ்ண சுக்ல பட்சங்கள்
கடந்தும் ஓடுகிறது
கால நினைவற்றுத்
திளையும் மீன்களோடும்
தென்சரிவுத்

தேக்கு மரங்களோடும்