Home

Friday 31 March 2017

இசையும் இரைச்சலும்- கல்யாண்ஜியின் "டவுன் ஹால் ரோட்"


காசியில் கங்கைக்கரையில் கண்ட காட்சி இன்னும் அப்படியே மனத்தில் உறைந்துகிடக்கிறது.  நகரின் பிரதான சாலையை விட்டு விலகியதும் ஒரு ரிக்ஷா அல்லது ஆட்டோ செல்கிற அளவுக்குமட்டுமே உள்ள குறுகலான சந்துகளே ஏராளம்.  எல்லாமே நீளம் குறைவான சந்துகள். ஏழெட்டு சந்துகள் வளைந்துவளைந்து திரும்பி நிற்கிற இடத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நின்றுகொண்டிருக்கும் ஓர் அரசமரம். மரத்தடியையொட்டி தாழ்வாக இறங்கும் படிகள்.  எதிரில் வேகமாக புரண்டோடும் கங்கை.  கரையோரத் தூணோடு இணைத்துக் கட்டப்பட்ட படகில் நின்றபடி கரையோரமாக உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட சுடுகாடுகளையும் சுற்றிக்காட்டுவதாகச் சொல்லி ஆட்களை அழைக்கிற படகோட்டி.  கரையிலேயே மூன்று ஆள் உயரத்துக்கு வைக்கோல்போர்போல அடுக்கப்பட்ட விறகுக் கட்டைகள்.  


மேல் படிக்கட்டில்  ஒரு பிணம். நடுப்படிக்கட்டில் ஒரு பிணம்.  இறுதிப் படிக்கட்டில் ஒரு பிணம்.  மேடையில் ஒரு பிணம் எரிந்துகொண்டிருந்தது.  ஒவ்வொரு பிணத்துக்கு அருகிலும் அவசரம்அவசரமாக இறுதிச் சடங்குக்கான மந்திரங்களைச் சொல்லி தட்சணை பெறும் புரோகிதர்கள்.  அணையாத சிதையில் தசை வெந்து கரியும் மணம். எல்லாரையும் தாண்டிக்கொண்டு படியிறங்கி உற்சாகமாக கங்கையில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள். "எந்தப் பக்கமும் திரும்பாம பின்னாலயே வாடி.." என்று இளம் மனைவியை எச்சரித்தபடி அணைத்தவண்ணம் அழைத்துச் சென்று தொலைவில் புராண காலத்தில் பார்வதியின் கம்மல் கங்கைக்குள் விழுந்த இடத்தைக் காட்டும் கணவன்.  பள்ளிக்கூடத்து ஆங்கிலப் பாட்டை ஓசைநயத்தோடு சொன்னபடி ஒவ்வொரு படியிலும் ஏறியும் இறங்கியும் ஆடும் குழந்தைகள்.  எதையுமே பொருட்படுத்தாமல் தெலைவில் ஏதோ ஒரு மேகத்தை உற்றுநோக்கியபடி புகைபிடித்தவாறு உட்கார்ந்திருக்கும் தாடிக்கார சாமியார்.  கேட்டவர்களுக்கும் கேட்காதவர்களுக்கும் சோற்றுப் பொட்டலங்களை தானமாகக் கொடுத்தபடி கடந்துபோகும் புரோகிதர்.  ஏதோ பரிகாரத்துக்காக கங்கையில் முழுக்குப் போட்ட வெள்ளை ஈரப்புடவையோடு மேலே அழைத்துச் செல்லும் தாயார்.  "கண்டதயும் நெனச்சி மனச பாரமாக்கிக்காத சிவராமா, உன் தாயாரோ உனக்கு மகளா வந்து பொறக்கப்போறா பாரு. இன்னும் ஒரு வருஷத்துக்குள்ளயே நடக்கும் பாருடா.." என அசரீரியாக ஒலிக்கும் ஒரு குரல்.  ஒரு மணிநேரத்துக்கும் மேலாக படியோரமாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  ஒருவித அச்சத்திலும் ஆச்சரியத்திலும் உறைந்திருந்தது என் மனம்.  பீதி விலகாமலேயே கங்கையில் குனிந்து முழுகி எழுந்தேன். ஈர உடலைத் துவட்டக்கூடத் தோன்றாமல் மீண்டும் ஒரு மணிநேரம் அதே படிக்கட்டில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன்.  என்னையறியாமல் வெளிப்பட்டுவிட்ட ஆழ்ந்த பெருமூச்சின் இறுதியில் ஒரு வரியை எழுதியது மனம்.  எல்லாக் குரல்களும் ஒரு சேர எழுப்பும் ஒலியின் கலவையே வாழ்க்கை.  ஒரு மந்திரத்தைப்போல மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டேன்.

ஒழுங்கு படுத்தப்பட்ட இசையைக் கேட்டுக்கேட்டு பழகிய  நம் மனம் அதையே உயர்வானது என்று நம்புவது இயற்கை.  அதில் லயிப்பது இன்பமாகத் தோன்றுகிறது.  அந்த இன்பத்தை இன்னும் இன்னும் மேலான அளவில் நுகர்வதற்கு அமைதியைத் தேடுகிறது.  அரவமற்ற இடத்தில் அந்த இசை இன்னும் இன்பம் தரக்கூடியதாக இருக்கிறது.  அப்படியொரு சூழல் எத்தனை பேருக்கு சாத்தியப்படும்? நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் பன்னிரண்டுக்குப் பத்தடி அளவுள்ள வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வாழ்வில் அரவமற்ற சூழல் தூக்கத்தில்கூட கிட்டாத நிலை என்பதுதான்  இன்றைய எதார்த்தம்.  மேலும்மேலும் ஓசைகள் காதில் விழுந்தபடியே இருக்கும் சூழலிலும் இசைக்கான நாட்டத்தை கைவிடாமல் வளர்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு இன்று நாம் ஆளாகிவிட்டோம். 

கல்யாண்ஜியின் "டவுன் ஹால் ரோடு" ஓசைகளும் இசையும் இணைந்த ஒரு கலவையான சித்திரத்தை முன்வைக்கிறது.  அந்தச் சாலையில் தள்ளுவண்டிக்காரர்கள் பழங்களை கூவிக்கூவி விற்கிறார்கள்.  கைக்குட்டையையும் சீப்பையும் விற்பவர்களும் நிற்கிறார்கள்.  ஜீன்ஸ்களையும் இடைவார்களையும் கொட்டி விலைசொல்லி அறிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.  அப்புறம் மதுபானக் கடைகள்.  இசை நாடாக்கள்.  இப்படி ஏராளமான விற்பனைகள்.  விற்கப்படாதது எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லாமே விற்கப்படுகின்றன.  தெருவில் நடமாடுகிற ஒவ்வொருவரையும் தன் வாடிக்கைக்காரர்களாக நினைக்கிற விற்பனைக்காரர்கள். பொருள்களின் பெயர்களையும் விலைகளையும் மாறிமாறிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  சகல ஓசைகளுக்கும் நடமாட்டங்களுக்கும் இடையே  புல்லாங்குழல் வாசிக்கிற பார்வையற்ற இளைஞன் ஒருவனும் இருக்கிறான்.  தன் குழலை ஊதி இசையை வெளிப்படுத்தி, தன் விற்பனைச்சரக்கின் தகுதியை உணர்த்தியபடி இருக்கிறான்.  ஓசைகளும் இசையும் அந்தச் சாலையை அதிரவைத்தபடி உள்ளன. 

குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் காட்சியில்  இரைச்சலும் இசையும் நிரம்பி வழிகிறது. எல்லாவற்றுக்கும் இந்த மண்மீது இடமுண்டு என்கிற மாபெரும் உண்மையை இத்தகு ஆரவாரத்துக்கு இடையிலிருந்துதான் நம் மனம் கண்டெடுக்கிறது.  தாமரைமலருக்கு எந்த அளவு இடமுண்டோ அதே அளவு பாசிக்கும் குளத்தில் இடமிருக்கிறது.  நச்சுமரத்துக்கு இடமுள்ள அதே காட்டுக்குள்தான் மூலிகை இலைகளுக்கும் கொடிகளுக்கும்  இடமிருக்கிறது.  அமுதத்துக்கும் இடமுள்ள பாற்கடலில் நஞ்சும் படர்ந்திருக்கிறது.   ஒன்றை உயர்வானதாகவும் இன்னொன்றைத் தாழ்வானதாகவும் மதிப்பிடுவது நம் மன அளவுகோல்கள்.  அளவுகோல்கள் மாறும்போது மதிப்பீடுகளும் மாறும்.  அளவுகோலே இல்லாத ஒரு மனம் எல்லாவற்றையும் கண்விரியப் பார்த்து ஒரே தரத்தில் பதியவைத்துக்கொள்கிறது.  நெருப்பையும் பூவையும் ஒரே மாதிரி புன்னகையோடு நோக்குகிற  குழந்தைபோல பார்க்கிற மனஅமைப்பு மனிதகுலத்துக்கும் வாய்த்தால் நல்லது.  நம் அறிவும் அனுபவமும் கல்வியும் கலைகளும் அந்த மன அமைப்பைச் சாத்தியப்படுத்திக் கொள்வதற்காகவே துணையாக இருக்கவேண்டும்.  மாறாக, அவை மதிப்பிடும் அளவுகோல்களை வகுத்துத் தருவதாக அமைந்துபோவது துரதிருஷ்டவசமானது.

கடைத்தெருக் காட்சியை நம் வாழ்வின் தளத்துக்கு மாற்றும் கணத்தில் அதன் படிமவலிமை இன்னும் மிகுதியாகிறது.

இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.  ஒருபக்கம் பார்வையற்ற புல்லாங்குழல் விற்பனையாளன்.  குழலூதி வாங்குபவர்களின் கவனத்தை இழுக்கிறான்.  இன்னொரு பக்கம் பார்வையுள்ள மற்ற விற்பனையாளர்கள்.  தம் சரக்குகளின் பெயர்சொல்லி நடமாடும் ஆட்களைப் பார்த்துக் கூவி அழைக்கிறார்கள்.  கலைஞனுக்கு தன்னை நோக்கி வருபவர்கள் யாரென்று தெரியாது.  தன்னை நோக்கி வருவார்களா என்பதும் தெரியாது.  தெருவில் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருப்பவர்கள் தன்னைப் பொருட்படுத்திக் கவனிக்கிறார்களா என்பதும் தெரியாது.  தன் இசை அவர்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதும் தெரியாது.  எந்தத் தெளிவும் இல்லாமல் எந்த முன்முடிவும் இல்லாமல் தனக்குத் தெரிந்த இசையைமட்டும் இந்த உலகத்தைநோக்கி வழங்குகிறான்.  இன்று முழுதும்கூட அவன் புல்லாங்குழல் விற்பனையாகாமல் போகலாம்.  ஆனாலும் அவன் மனம் தளர்ந்துவிடமாட்டான்.  நாளையும் இதே தெருவில் யாரென முகமறியா பார்வையாளர்கள் முன் குழலிசையோடு விற்பனைக்கு வருவான்.  விற்கமுடியாத சரக்கோடு, அவன் மாய்ந்துபோனாலும் நாளை இதே தெருவில் இன்னொரு கலைஞன் குழலிசைத்தபடி நிற்கக்கூடும்.  இந்த மண்ணில் தீராத காதலோடு இயங்கும் ஒரு கலைஞனின் இயக்கம் இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது.




*
டவுன் ஹால் ரோட்

கல்யாண்ஜி

தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள்
பச்சை வாழைப்பழம்
கூவிக்கூவி கைக்குட்டையையும் சீப்பும்
ஒரு பக்கத்தில் கனத்த நீல ஜீன்ஸ்கள்
ரகரகாமான இடைவார்கள்
இரண்டோ, நான்கோ மதுபானக் கடைகள்
இன்னொரு வரிசையில் இசை நாடாக்கள்
விடுதிகள் இவ்வளவு இருக்கும்போது
வேறு விற்பனைகளும் இல்லாமல் இராது
இத்தனை உரத்த நெரிசல்களுக்கு மத்தியில்
எந்தச் சேதாரமும் இன்றி
வழிந்துகொண்டிருக்கிறது
புல்லாங்குழல்கள்  குவத்துவைத்தபடி
பார்வையற்ற இசைஞன் வாசிப்பிலிருந்து
துயரம் நிறைந்த மதுமதி
சங்கீதம்

*

ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்துறையில் ஊக்கமுடன் இயங்கி வருபவர் கல்யாண்ஜி.  சின்னச்சின்னக் காட்சிகளை முன்வைத்து வெவ்வேறு தளங்களுக்கு எண்ணங்களை விரிவடையவைக்கிற ஆற்றலுள்ள கவிதைகளை எழுதுகிறவர்.  மீட்டப்படும் வீணையின் தந்திகளிலிருந்து அபூர்வமான இசை எழுந்து பரவுவதைப்போல உத்வேகம் மிகுந்த வரிகள்வழியாக வாசிப்பவர்கள் மனத்திலும் இசையை மீட்டிவிட இவருடைய கவிதைகள் முயற்சி செய்கின்றன.