Home

Monday 20 March 2017

நான் கடவுள் - எஸ். வைத்தீஸ்வரனின் உரிமை



       "பூமியிலே நீ கடவுள் இல்லையென்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் பாரதியார்.   சர்வமத சமரசத்தை முன்னிட்டு நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியாக இந்த வரி சொல்லப்படுகிறது.  தன் கடவுள் அனைவரைவிடவும் உயர்வானவர் என்று பெருமையும் உரிமையும் பாராட்டும்போது மற்றவர்களின் கடவுளரைப்பற்றிய ஓர் இகழ்ச்சியுணர்வு பிறப்பதற்கான வழி தானாகவே உருவாகிவிடுகிறது. இகழ்ச்சியுணர்வு என்பது எந்த அளவுக்கு பிறழ்ந்த நிலையோ, அதே அளவுக்கு உயர்வுணர்வும் பிறழ்ந்த நலையே.  இயல்புநிலை என்பது நான்கடவுள் என்னும் உணர்வுநிலை.  அல்லது இறையம்சத்துடன் நான் இருக்கிறேன் என்னும் நிலை.  


        பாரதியார் இதை வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம் உண்டு.  ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்கும் உரியவராக கடவுளை உருவகித்துவைத்திருக்கிறோம் நாம். புத்தம்புதிதாக ஒன்று உருவாக்கப்படும்போது நிகழும் விளைவுகளில் சில நேர்மறையாகவும் இருக்கக்கூடும்.  சில எதிர்மறையாகவும் இருக்கக்கூடும்.  நேர்மறையானவற்றைக் காத்து முன்னெடுத்துச் செல்வதும் எதர்மறையானவற்றை அழித்து மறுஆக்கத்துக்கு வழிவகுப்பதும் நம் கடமை.  ஆக்கல், காத்தல், அழித்தல் ஒரு சுழற்சிச் செயல்முறை.  இடைவிடாத இந்தச் செயல்வேகமே மானுட குலத்தை முன்னோக்கி வளர வழிவகுக்கிறது.  இப்படிப்பட்ட செயலூக்கமும் கவனமும் நான்கடவுள் என்னும் உணர்வின் பின்னணியில் இயங்குகின்றன.  பெருமை பேசுவதற்கோ, தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கோ, உரிமையுணர்வுக்கோ இதில்  சிறிதும் இடமில்லை.


உரிமையுணர்வின் விளைவுகள் உயர்வானவையாக இருப்பதில்லை.  யான். எனது என்னும் தன்னல உணர்வுக்கே அவை இறுதியல் அடிகோலுகின்றன.  பிறரை எதிர்நிலைக்குத் தள்ளி  விலக்குகின்றன.  ஒரு புவிமாந்தனாக எல்லாரையும் நேசித்து அன்பில் கரைந்து நிற்பதே உயர்வான வாழ்க்கை.  உரிமையுணர்வு அதற்கு ஒரு தடையாக உள்ளது.

எதார்த்த வாழ்வில் ஒரு வீட்டை என்னுடையது என்று உரிமை பாராட்டுகிறோம்.  வீட்டையொட்டி நாம் வளர்த்த தோட்டத்தை என்னுடையது என்று உரிமை பாரட்டுகிறோம்.  தேவையையொட்டி நாம் அகழ்ந்தெடுத்த கிணற்றை என்னுடையது என்று உரிமை பாராட்டுகிறோம்.  உரிமை கொண்டாடத்தொடங்கும் மனநிலை உலகில் எதையும் விட்டுவைப்பதில்லை.  ஒரு கட்டத்தில் சாக்கடைக்குக்கூட உரிமைகொண்டாடத் தொடங்குகிறது.  உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்கிற துடிப்பு, அச்சாக்கடையைக்கூட யாரும் அண்டிவிடாமல் காக்கத் துடிக்கிறது. அப்படிப்பட்ட துடிப்பின் சித்திரத்தை எஸ்.வைத்தீஸ்வரனின் "உரிமை" என்னும் கவிதை முன்வைக்கிறது.

சாக்கடைக்கு உரிமை கொண்டாடும் ஒருவரையும் அவருடைய அதிகாரத்தை மீறி அதில் படுத்துப் புரளும் நாயையும் காட்டுகிறது கவிதை.  விரட்டும்போதெல்லாம் வெளியேறி ஓடி மீண்டும் வந்து சாக்கடையல் படுத்து சுகம் காண்கிறது நாய்.  சுகம் பழகப்பழக நகரக்கூட மனமில்லாமல் அதட்டும் குரலைப் பொருட்படுத்தாமல் சாக்கடைச் சுகத்தில் திளைக்கிறது.  என் வீட்டுச் சாக்கடையில் யாரோ ஒருவரின் நாய் எப்படி சுகம் காணமுடியும் என்னும் ஆத்திரத்தில் மனிதமனம் கொதிப்படைகிறது.  தடியெடுத்து அடித்து விரட்டுகிறான்.  குரைத்துக்கொண்டே அது உடலை உதறியபடி வெளியேறி ஓடும்போது சாக்கடைச்சேறு நாலாபுறங்களிலும் தெறிக்கிறது.  சேற்றின் ஒரு துளி அடித்து விரட்டுபவனின் உதட்டிலும் தெறிக்கிறது.

எள்ளல் தன்மை மிகுந்த காட்சியைச் சித்தரிக்கும் கவிதை 'என் வீட்டுச் சாக்கடைச் சகதி' என்று முடிவடைந்தாலும் "அது இனிக்கவா போகிறது?" என்றொரு கேள்வி மறைந்திருப்பதை படிக்கும்போது உணரலாம்.  அக்கேள்வியின் தொடர்ச்சியாக ஏராளமான எண்ண அலைகள் எழுந்து விரிவடைந்தபடி செல்கிறது.  இங்கு சாக்கடை என்பது எது?  சாக்கடை ஏன் உருவாகிறது? சாக்கடையைத் தேங்க விடுவது சுற்றுச்சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல என்பது மனிதனுக்குத் தெரியாத உண்மையா? தெரிந்தபிறகும் சாக்கடையைத் தேங்கவிடுவதன் உள்நோக்கம் என்ன?  சொந்தம் கொண்டாடும்  அளவுக்கு அதன்மீது ஈடுபாடு பிறந்தது எப்படி? தன் வீட்டு சாக்கடையில் அடுத்த வீட்டு நாய் படுத்துறங்குவதை பொறுத்துக்கொள்ளாத மனம் தன் வீட்டு நாய் படுத்துப் புரளநேர்ந்தால் பொறுத்துக்கொள்ளுமா?  இப்படி ஏராளமான கேள்விகள் தோன்றியவண்ணம் உள்ளன. 

தினசரி வாழ்வில் தண்ணீரின் பயன்பாடு தவிர்க்க இயலாதது.  பயன்படுத்தப்படும் தண்ணீர் கழிவாக வழிந்தோடுகிறது.  முத்தொழிலில் ஒன்றான அழித்தல் வழியாக இந்தக் கழிவை அகற்றுதல் முக்கியமானது.  கழிவு தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.  அது முறைப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தல் வேண்டும்.  நான் கடவுள் என்னும் உணர்வு வழியாக பெறுகிற செயலூக்கம் இதைத் தூண்டவேண்டும்.  அழகாக வாழ்வுக்கு இதுவே வழி.  துரதிருஷ்டவசமாக, மனிதமனம்  கடவுளுணர்வுக்கு எதிராகவே இயங்குகிறது.  யான், எனது என்னும் உரிமையை நிலைநாட்டத் துடிப்பது அதன் தொடக்கம்.  எனது வீடு, எனது தோட்டம், எனது கிணறு, எனது விளைச்சல் என்று தொடங்கி அழுத்தம் பெறும் உரிமையுணர்வு இறுதியில் எனது சாக்கடை என்று உரிமை பாராட்டும் எல்லைவரைக்கும் போகிறது.  எனது சாக்கடைச்சகதி என்பதாலேயே அது இனிப்பதில்லை என்று உணரும்போதாவது மனம் விழிப்புறவேண்டும்.  ஒருக்கால், அது மீண்டும்மீண்டும் எனது என்கிற உடைமையுணர்வுக்கே வலிமைசேர்க்கும் என்றால், நம் மனம் மீளமுடியாத எல்லையைத் தொட்டுவிட்டது என்பது பொருளாகும். உரிமை பாராட்டாமல் உயரும் உணர்வு கடவுளுணர்வு.  உரிமை பாராட்டி உருக்குலைவது மனித உணர்வு.

*

உரிமை

எஸ்.வைத்தீஸ்வரன்

அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒருநாள்
ஆளுயரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால்மடக்கிக்
குதித்தோட
அவன் வாய்க்குள்ளே
சள்ளென  சகதி விழுந்து தெறித்தது
அவன் வீட்டு சகதி


*

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து கவிதைக்களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமான கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன். படிமங்கள், உருவகங்கள் வழியாக கவிதை அனுபவத்தை மிக உயர்ந்த ஒன்றாக ஆக்கவல்லவை இவருடைய கவிதைகள். கண்ணில் படக்கூடிய மிக எளிய காட்சியை முன்வைத்து மிகப்பெரிய விஷயத்தை ஆராயும் கண்ணோட்டத்தை இவருடைய சிறப்பம்சமாகச் சொல்லவேண்டும்.