Home

Friday 10 March 2017

பேதமையும் பிரியமும் - கட்டுரை

  
கலாப்ரியாவின் ”பிரிவுகள்”

எட்டுப் பிள்ளைகள் கண்முன்னால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் எப்போதோ ஒரு காலத்தில் பிறந்து சில நாட்களே உயிருடன் இருந்து, பிறகு மரணமெய்திவிட்ட  ஒன்பதாவது பிள்ளையை நினைத்துநினைத்து தினமும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டு அழும் அல்லது பேசிப்பேசி துயராற்றிக்கொள்ளும்  ஒரு தாய் எல்லா இடங்களிலும் இருப்பாள்அளவற்ற செல்வம் புரள்கிற நிலையில்கூட என்றோ ஒருநாள் தன் கவனக்குறைவால் பறிகொடுத்துவிட்ட சிறுதொகையின்  இழப்பைத் துயரத்துடன் பகிர்ந்துகொள்ளும் நண்பன் நம் எல்லாருக்குமே இருக்கக்கூடும்பிரிவு உறுதி என உணர்ந்த ஆணின் அல்லது பெண்ணின்  உறக்கத்தையும் உயிர்ப்பையும் பலிவாங்கிவிடுகிறது இழப்புணர்ச்சிஇழப்பின் வலி பெரிது. சின்னதோ பெரியதோ, வாழ்வில் எந்த இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.


சிற்றூர்களைவிட்டு நகரங்களிலும்  அயல்நாடுகளிலும் வசிக்க நேர்கிறவர்கள் மனம் முழுக்க அவர்களுடைய இளமைப்பருவ வாழ்க்கை நினைவுகள் மண்டிக்கிடக்கின்றனஊரில் வாழ முடியாத வாழ்வின் இழப்பை பழைய நினைவுகளை அசைபோட்டுஅசைபோட்டு ஈடுசெய்யப் பார்க்கிறார்கள்கதைகளிலும் திரைப்படங்களிலும் கலைஞர்களால் சித்தரிக்கப்படுகிற சிற்றூர்கள் இழந்துபோன வாழ்வையே மீண்டும்மீண்டும் பேசுகின்றனஇழந்துபோன செல்வத்தையும் அதை ஈட்டச் சென்ற இடத்தில் உயிரிழந்ததையும் விரித்துரைக்கும் சிலப்பதிகாரத்தையும் ஒரு வெற்றிக்காக பல அக்குரோணி சேனைகளையும் மாவீரர்களையும் சகோதரர்களையும் பலிகொள்கிற அவலத்தை முன்வைக்கிற பாரதக்கதையையும் எளிதில் மறந்துவிட முடியாது.   இழப்பு மிகவும் துயரமானதுஇழந்துவிடுவோம் என்னும் உணர்வு துயரத்தை இன்னும் பதற்றம் மிகுந்ததாக மாற்றக்கூடியது.

துயரமும் பதற்றமும் மிகுந்த ஒரு காட்சிச்சித்தரிப்பு கலாப்ரியாவின் "பிரிவுகள்" கவிதையில் இடம்பெறுகிறதுஇக்கவிதையில் இடம்பெறுவது ஒரு குளம். இப்போது நீரற்று வறண்டு கிடக்கும் குளம்நீர் இல்லாமை குறித்து எவ்விதமான புகாரும் இல்லை. குறுக்கு வழியில் ஊரை எட்ட அது ஒரு நல்ல தடமாக உதவுகிறதுஆடுகள் மேயும் இடமாகவும் இருக்கிறது அக்குளம்மேலே பறக்கும் பருந்தின் நிழல் ஒரு சித்திரத்தைப்போல அதன் வறண்ட பரப்பில் காட்சி தருகிறதுநீரற்று இருப்பதுகூட ஒரு விதத்தில் ஒரு சில விஷயங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கிறதுமழைக்காலத்தில் குளம் நிரம்புவது இயற்கைநிரம்பித் தளும்பும்போது அதன் அழகு வேறொரு விதத்தில் ஈர்த்தபடி இருக்கக்கூடும்வண்டிகள் சுற்றுவழிப்பாதையில் செல்ல நேர்வதும் ஆடுகள் புல்மீது பரவிவிட்ட  நீர்ப்பரப்பை வெறுமையோடு பார்ப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றுகுளத்தில் நீர் நிரம்புவதால் ஏற்படும் நலன்களைவிட இழப்புகளைப் பெரிதாக நினைக்கும் மனத்தின் குரல் விசித்திரமானது.

குளத்தை ஒரு பெண்ணின் படிமமாக உருமாற்றி கவிதையை அணுகும்போது அக்கவிதை நமக்கு மேலும் நெருக்கமான ஒன்றாக மாறுகிறதுவறண்ட குளத்தருகே புல்லைத் தின்னும் ஆடு ஒரு மனம். குளத்தை நிரப்பி அதன் இருப்பையும் அழகையும் வசீகரம் மிகுந்ததாக மாற்றிவிடும் நீர் இன்னொரு மனம்குளத்தையொட்டி ஆடு திரியலாம். ஓடலாம்புல்தின்று அசைபோட்டு இளைப்பாறலாம். ஆனால் ஒருபோதும் குளத்தை ஆடால் நிரப்ப முடியாது. அது நீரால்மட்டுமே முடிகிற காரியம். அது நிரம்பும் காலத்தை உனர்ந்துவிட்டதாலேயே ஆடு ஒதுங்கி நின்று பிரிவாற்றாது இழப்பின் வலியை முன்வைக்கிறதுதுள்ளிக்குதிக்க அனுமதித்ததாலேயே குளத்துடன் நெருக்கம் பாராட்ட நினைத்தது ஆட்டின் பேதைமையன்றி வேறில்லை. ஆனால் பேதைமை இல்லாத பிரியம் உலகிலேயே இல்லை.


**

பிரிவுகள்

கலாப்ரியா

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காணமுடியாது
இன்று புல்லைத்
தின்றுகொண்டிருக்கும்
ஆடு - நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்கமுடியாது
இந்தக் குளத்தில்
நாளை
நீர் வந்துவிடும்