கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் இளம் வாசகர் வட்டம், கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு நல்ல இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, அவர்களிடம் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவருகிறது. அப்பயிற்சியின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஒருசில மாணவமாணவிகள் இலக்கிய நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் ஒருசிலர் சொந்தமாக எழுதும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கற்பனைத்திறனும் எழுத்தாற்றலும் கைவரப்பெற்ற மாணவமாணவிகளின் சிறப்பான படைப்புகள் நூல்வடிவில் வெளியாகி பிறர் கவனத்தை ஈர்க்கின்றன.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால், தேர்ந்தெடுத்த மாணவப்படைப்பாளிகளின் பல்வேறு கதைகளைக் கொண்ட ஒரு தொகுதி ‘என் கனவின் கதை’ என்னும் தலைப்பில் தன்னறம் வெளியீடாக வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்நூல் தமிழ்ச்சூழலில் சிறப்பானதொரு முதல் முயற்சியாகக் கருதப்பட்டது.
அத்தொகுதியில் இடம்பெற்ற ஒருசில கதைகளை எழுதிய பைராகி என்கிற
அன்புச்செல்வன் இப்போது இளம் மாணவ எழுத்தாளராக வளர்ந்து தனியாகவே ஒரு சிறுகதைத்தொகுதியை
வெளியிடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் எழுதிய கதைத்தொகுதி கூவ்…கூவ் என்னும் தலைப்பில் இப்போது தன்னறம் வெளியீடாக வந்துள்ளது.
அவருடைய ஆர்வத்தை வளர்த்து ஒரு சிறுகதை ஆசிரியராக உருவாக்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள்
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
பைராகியின் ஒவ்வொரு கதையும் அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும்
வாசிப்புக்குப் பிறகு மனத்தில் நிற்கும் வகையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. புதுமையும்
கற்பனையாற்றலும் நிறைந்திருக்கிறது. ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் மையமாகக் கொண்டு கதை
பின்னும் கலையில் பைராகி அடைந்திருக்கும் தேர்ச்சியும் வளர்ச்சியும் மகிழ்ச்சியளிக்கின்றன.
ஒரு சின்ன உரையாடலைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘ஓட்டப்பந்தயம்’
சிறுகதை மிகப்பெரிய உண்மையின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. ஒரு காட்டில் ஒருநாள்
ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. நத்தை, முயல், சிறுத்தை ஆகிய மூன்றும் அந்தப் பந்தயத்தில்
கலந்துகொள்கின்றன. பந்தயம் தொடங்கியதும் வெற்றி பெறும் வேகத்தில் சிறுத்தை பாய்ந்தோடுகிறது.
அடுத்து அதைப் பின்தொடர்ந்து ஓடுகிறது முயல். அவற்றுக்குப் பின்னால் நிதானத்துடன் செல்கிறது
நத்தை. பந்தயத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் நத்தைக்கு ஊக்கமூட்டுவதாக நினைத்துக்கொண்டு
“வேகமாகப் போ, வேகமாகப் போ” என்று தூண்டிவிடுகிறார். ஆனால் நத்தை அவரைப் பார்த்து
“என் பலம் இவ்வளவுதான் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. நான் இந்த அளவுக்குத்தான் ஓடமுடியும்” என்று அமைதியாகப்
பதில் சொன்னபடி நகர்ந்துகொண்டே இருக்கிறது.
கதையை வாசித்து முடிக்கும் கணத்தில் பிராணிகளிடையில் நடைபெறும்
ஓட்டப்பந்தயத்தை மனிதர்கள் தன் உயர்வுக்காக ஓடும் பந்தயத்தோடு இணைத்து யோசிக்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையை ஒரு பந்தயமாக நினைக்கும் மனிதர்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் முந்தவே முயற்சி
செய்கிறார்கள். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இழக்கக்கூடாததையெல்லாம் இழக்கிறார்கள். ஆனால் தன் வலிமை என்ன, தன் இலக்கு என்ன என்பதையொட்டி
ஒரு தெளிவான சிந்தனை கொண்டவர்களிடம் இந்தப் பதற்றம் இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையை
ஒரு அனுபவமாகப் பார்க்கிறார்களே தவிர, ஒரு பந்தயமாக ஒருபோதும் பார்ப்பதில்லை. அத்தகையோரே
வாழ்க்கையை உண்மையாக வாழ்கிறவர்கள். அது பார்ப்பதற்கு நத்தை வாழ்க்கையாகத் தோற்றமளித்தாலும்
அது அளிக்கிற நிறைவுக்கு ஈடு இணையே இல்லை.
‘தொலைந்த மணி’ ஒரு நல்ல சிறுகதை. ஒருநாள் ஒரு கன்று தன் கழுத்திலிருந்த
மணியைக் காணவில்லை என்பதை உணர்கிறது. உடனே பசுவிடம் சென்று மணி காணாமல் போய்விட்ட செய்தியைத்
தெரிவிக்கிறது. மணி எப்படித் தொலைந்தது என்று பசு கேட்ட கேள்விக்கு மேயப்போன இடத்தில்
விழுந்திருக்கலாம் என்று கன்று பதில் சொல்கிறது. உடனே தொலைந்த இடத்துக்குச் சென்று
மணியைத் தேடி எடுத்துக்கொண்டு வருமாறு சொல்லி கன்றை அனுப்பிவைக்கிறது பசு.
முதல் நாள் மேய்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று தேடுகிறது கன்று.
எங்கும் கிடைக்கவில்லை. கடைசியாக வாழை மரத்தடியில் சேறு நிறைந்த பகுதியில் அந்த மணி
கிடப்பதைக் கண்டுபிடிக்கிறது. ஆனால் சேற்றில் இறங்கி எடுப்பதற்கு அதற்கு அச்சமாக இருக்கிறது.
கரையில் கிடந்த நீண்டதொரு கம்பை எடுத்து ஒரு
நுனியை வாயில் கவ்வியபடி மறுநுனியை மணியை நோக்கி நீட்டி எடுக்க முயற்சி செய்கிறது.
ஆனால் அதற்குத் தோல்வியே கிடைக்கிறது. வாழைமரத்தில் அமர்ந்தபடி அதைப் பார்த்த ஒரு குரங்கு அதற்கு உதவி செய்ய முன்வருகிறது. கன்றிடமிருந்த
கம்பை வாங்கி லாவகமாக மணியை நோக்கி நீட்டி கரைக்கு இழுத்து வந்து எடுத்துக் கொடுக்கிறது.
புறப்பட்டுச் சென்று நீண்ட நேரமாகியும் கன்று திரும்பி வரவில்லையே
என கவலைப்பட்டு பசு தேடிக்கொண்டு வருகிறது. தனக்கு குரங்கு செய்த உதவியைப்பற்றி பசுவிடம்
தெரிவிக்கிறது கன்று. ஒருவரிடம் உதவி கேட்கவும் ஒருவருக்கு உதவி செய்யவும் பெரிதும்
தயக்கம் நிலவுகிற இன்றைய நவீனச் சூழலில் உதவி செய்வதன் நிறைவையும் மகத்துவத்தையும்
சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறது இச்சிறுகதை.
‘இரண்டு பூனைகள்’ என்றொரு சிறுகதை. ஒரு சிறுவன் தன் அம்மாவோடு
கோவிலுக்குச் செல்கிறான். அம்மா கோவிலுக்குள் சென்றுவிட, சிறுவன் கோவிலுக்கு வெளியே
இருந்த பெரிய மேடையில் அமர்ந்துவிடுகிறான். அப்போது சிறிது தொலைவில் கூரையிலிருந்து
இரண்டு பூனைகள் தொப்பென்று விழுகின்றன. ஒன்று தாய்ப்பூனை. இன்னொன்று குட்டிப்பூனை.
இரண்டும் வெள்ளைவெளேரென இருந்தன. அதன் மீது செவ்வரி ஓடிய கோடுகள் அழகாக இருந்தன. அவற்றோடு
விளையாடும் நோக்கத்தோடு சிறுவன் அவற்றை நோக்கி நடந்து செல்கிறான். அவன் வருவதைக் கண்டதும்
குட்டிப்பூனை உடனடியாக அங்கிருந்து ஓடிவிடுகிறது. தாய்ப்பூனை மட்டும் அசையாமல் அவனையே
பார்த்தபடி அமர்ந்திருந்தது. அதன் அமைதியால் சீண்டப்பட்ட சிறுவன் அதற்கு அச்சமூட்டும்
வகையிலான அசைவுகளோடு அதை நோக்கி அடியெடுத்துவைக்கிறான். அதைக் கண்டதும் தாய்ப்பூனையும்
அங்கிருந்து ஓடிவிடுகிறது. பூனையோடு சேர்ந்து விளையாடி தனிமையை மறக்கலாம் என அவன் நினைத்திருந்த
திட்டம் நிறைவேறாமல் போய்விடுகிறது. திட்டம் சரியானதாக இருந்தாலும் அதற்கு உகந்த வழிகளில்
செயல்பாடுகள் அமையாதபோது நிராசை தவிர்க்கமுடியாததாகிறது.
’குளம்’ இத்தொகுதியின் மிகச்சிறந்த சிறுகதை. கதையின் முதல் பகுதியை
ஒரு மீன் சொல்கிறது. இறுதிப்பகுதியை ஒரு சிறுவன் சொல்கிறான். இரு பாதிகளும் அழகாக இணைந்து
ஒரு கதையாக மாறுகிறது.
முதலில் மீன் தான் வசிக்கும் குளம் அமைந்திருக்கும் சூழலைப்பற்றி
மிகவும் ரசனையோடு சொல்கிறது. குளக்கரையைப்பற்றியும் கரையோரச் செடிகளைப்பற்றியும் நடைப்பயிற்சி
செய்பவர்களுக்கான வட்டப்பாதையைப்பற்றியும் மனிதர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருக்கும்
நாற்காலிகள் பற்றியும் தெரிவிக்கிறது. பிறகு தான் வசிக்கும் குளத்தின் அமைப்பையும்
அழகையும் வர்ணிக்கிறது. எட்டுப் படிகள் கொண்ட படித்துறையில் எப்போதாவது ஒருவர் வந்து
தண்ணீரில் இறங்கி நின்று பொரி போடுவார் என்றும் அப்போது பதற்றமும் நடுக்கமும் கொண்ட
அவருடைய கால்களை நன்றியுடன் தீண்டி முத்தமிடுவதாகவும் விரிவாகவே சொல்கிறது. ஆனால் அக்கால்கள் யாருக்குச்
சொந்தமானவை என்பதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கிறது மீன்.
மறுபாதிக் கதையைச் சொல்லத் தொடங்கும் சிறுவன் தன் பெற்றோர் வீட்டில்
எப்போதும் சண்டை போட்டபடியே இருப்பார்கள் என்றும் எப்படியோ அது வளர்ந்து தன்னை நோக்கித்
திரும்பிவிடும் என்றும் தெரிவிக்கிறான். உடைந்த மனத்துக்கு ஆறுதல் தேடி வீட்டைவிட்டு
வெளியேறி அருகிலிருக்கும் குளத்துக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருப்பதாகவும்
தெரிவிக்கிறான். அப்போது வாங்கிச் செல்லும் பொரியை குளத்தின் படித்துறையில் நின்றபடி
மீன்களுக்குத் தூவிவிடுவது வழக்கமென்றும் அக்கணத்தில் நடுங்கும் தன் கால்களுக்கு மீன்கள்
முத்தமிட்டு ஆறுதலைக் கொடுக்கும் என்றும் சொல்கிறான்.
மீனை மனிதர்களால் பார்க்கமுடியும். ஆனால் மனிதர்களின் முகங்களை
மீன்களால் பார்க்கமுடியாது. குளத்தில் இறங்கி நிற்கும் பாதங்களை மட்டுமே அவை அறியும்.
முகத்தை அறியாவிட்டாலும் முத்தமிட்டு ஆறுதல் அளிக்கும் மீன்களின் மேலான பண்பை நினைத்தால்
மெய் சிலிர்க்கிறது.
’நாய்க்குட்டி’ இன்னொரு சிறப்பான சிறுகதை. ஒரு சிறுவன் விடுமுறைக்காக
தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறான். ஒருநாள் வீட்டுக்கு வெளியே தெருவில் ஒரு நாய்க்குட்டியைப்
பார்க்கிறான். தன் தாத்தாவின் அனுமதியோடு தனியாக அலையும் அந்தக் குட்டியை வீட்டுக்கு
எடுத்துவந்து குளிக்கவைத்து சுத்தப்படுத்தி வளர்க்கத் தொடங்குகிறான். நாய்க்குட்டியுடன்
விளையாடுவதே அவனுடைய தினசரி பொழுதுபோக்காக மாறிவிடுகிறது.
ஒருநாள் அந்த நாயின் காலில் முள் தைத்துவிடுகிறது. கால்நடை மருத்துவர்
அந்தக் குட்டிக்கு வைத்தியம் செய்து கட்டு போடுகிறார். அதற்கு அருகிலேயே அமர்ந்திருந்து
அதனுடன் விளையாடி வலியை மறக்கச் செய்கிறான். சில நாட்களிலேயே அந்தக் காயம் ஆறிவிடுகிறது.
அவனுடைய விடுமுறையும் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாத்தாவிடமும் நாய்க்குட்டியிடமும்
விடைபெற்றுக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறான் சிறுவன். ஒரு நட்பு உருவாகும்
விதத்தை மிகவும் இயற்கையாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் உணர்த்துகிறது சிறுகதை.
’பூங்கா’ கவித்துவம்
நிறைந்த சின்னஞ்சிறு கதை. ஒரு பூங்காவில் தொங்கி விளையாடும் வகையில் ஓர் இரும்புத்தண்டு
இரண்டு தூண்களிடையில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு சிறுவன் அந்த இரும்புத்தண்டைப்
பிடித்துத் தொங்கி விளையாடி மகிழ்கிறான்.
சிறிது தொலைவில் ஒரு மரத்தடியில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில்
அமர்ந்தபடி ஒரு தாத்தா, அவன் தொங்கி விளையாடுவதையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறார்.
அதைக் கவனித்துவிட்ட அச்சிறுவன் அவருக்கு அருகில் செல்கிறான். அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கிறான்.
தாத்தா அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறான். அவனைப்போல அவர் சிறுவனாக
இருந்த காலத்தில் இதே பூங்காவில் இதே இரும்புத்தண்டில் தொங்கி விளையாடிய அனுபவத்தை
அவனிடம் விவரிக்கிறார். ஒருநாள் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு அவசரமாக செல்லவேண்டுமே
என்கிற பதற்றத்தில் இறங்கும்போது கால் வழுக்கிக் கீழே விழுந்து எலும்பை உடைத்துக்கொண்டதாகவும்
சொல்கிறார். அதற்குப் பின் படிப்பதற்காக வேறு ஊருக்குச் சென்றுவிட்டதாகவும் மேற்படிப்பு,
வேலை என அலைந்ததில் காலம் ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
சிறுவயதில் காலை உடைத்துக்கொண்ட அனுபவத்துக்குப் பிறகு முதுமையெய்திய
வயதில்தான் அந்த ஊருக்குத் தன்னால் வரமுடிந்தது
என்றும் சொல்கிறார் தாத்தா. வீட்டுக்கு வந்ததுமே ஊஞ்சல் நினைவு வந்ததால் பூங்காவுக்கு
வந்ததாகவும் அவன் ஆடியதைப் பார்த்ததும் தான் அதே கம்பத்தில் ஆடிக் களித்த பால்ய காலம்
நினைவுக்கு வந்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். இயற்கையில் எதுவும் மாறவில்லை.
மனிதர்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி படித்து மகிழத்தக்க 27 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன.
எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டும் ஒரு படைப்பாளியாக பைராகி வளர்ந்துவருவார் என்பதற்கான
தடயங்களை இத்தொகுதியில் காணமுடிகிறது. பைராகிக்கு வாழ்த்துகள். அவர் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் வாழ்த்துகள்.
(கூவ்…கூவ்…. கதைகள். பைராகி, தன்னறம் நூல்வெளி,
குக்கூ காட்டுப்பள்ளி. புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை. விலை. ரூ.60)
(புக் டே – இணைய தளம் – 04.09.2026)
