Home

Sunday, 16 August 2026

அது ஒரு வசந்த காலம்

 

கடந்த அறுபதாண்டுகளாக தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவ். சிறுகதை, நாவல், குறுநாவல், அனுபவக்கட்டுரைகள், ஓவியம், திரைப்படம், கோட்டைகள் தொடர்பான கட்டுரைகள் என ஒவ்வொரு தளத்திலும் அவர் மிகச்சிறந்த படைப்புகளை எழுதியிருக்கிறார். அவற்றின் நீட்சியாக இப்போது தன் பள்ளிக்கால நினைவுகளை முன்வைத்து அவர் புக் டே இணையதளத்தில் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடரை எழுதி வருகிறார். அக்கட்டுரைகளின் ஒரு பகுதி இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

விட்டல்ராவ் அவர்களோடு உரையாடும் ஒவ்வொரு தருணத்திலும் அவருடைய நினைவாற்றலைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். ஒருவரோடு உரையாடிய நினைவைப் பகிர்ந்துகொள்ளும்போது, அந்த உரையாடல் எதைப்பற்றியது என்பதோடு,  அந்த உரையாடல் நிகழ்ந்த சூழலை ஒரு காட்சியைப்போல ஏராளமான தகவல்களோடு இணைத்துச் சொல்வது அவர் வழக்கம். அவற்றையெல்லாம் கேட்கும்போது, ஏதோ ஒரு சலனப்படத்தைப் பார்க்கிற உணர்வை அளிக்கும்.  இன்னும் கொஞ்சம் சொல்லமாட்டாரா என்று நினைக்கவைக்கும். அந்த அளவுக்கு அவர் உரையாடல்கள் சுவாரசியாமானவை.

வகுப்பறைக்கதைகள் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் விட்டல்ராவ் தன் பள்ளிக்கால அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். பள்ளிப்பருவத்தில் அவருக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்கள், ஆசிரியைகள், அவரோடு சேர்ந்து படித்த மாணவமாணவிகள், வகுப்பு நடவடிக்கைகள், அவர் விளையாடிய விளையாட்டுகள் பற்றிய பல தகவல்கள் மாறிமாறி வருகின்றன.  அரசு ஊழியராக இருந்த அவருடைய தந்தையார் அடிக்கடி இடமாறுதல் பெறுபவராக இருந்ததால், அவர் படித்த பள்ளிகளும் மாறிக்கொண்டே இருந்தன. அவருடைய பள்ளி வாழ்க்கையில் ஓமலூர், தர்மபுரி, மேட்டூர், மேச்சேரி, சேலம் என பல ஊர்களைச் சேர்ந்த பள்ளிகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்களுக்கு உகந்த மாணவராக இருந்திருக்கிறரர் விட்டல்ராவ். எங்கே போனாலும் ஒரு நண்பர் கூட்டத்தோடு அவர் நடமாடுகிறார்.

இப்போது பள்ளிகளில் மொழிப்பாட நூலை தமிழ் என்னும் பொதுப்பெயராலேயே அனைவரும் அழைப்பதைப் பார்க்கிறோம். ஆனால் விட்டல்ராவ் படிக்கிற காலத்தில் மொழிப்பாடப் புத்தகத்துக்குக்கூட தனியாக ஒரு பெயர் இருந்திருக்கிறது என்பது புதுமையான தகவல். முதல் வகுப்பு பாடப்புத்தகத்துக்கு ‘சித்திரத் தமிழ் வாசகம்’ என்பது பெயர். நான்காம் வகுப்பு பாடப்புத்தகத்துக்கு ‘சங்கத் தமிழ் வாசகம்’ என்பது பெயர். இப்படி பெயர் சூட்டும் வழக்கம் இப்போது இல்லை.

அந்தக் காலத்தில் பள்ளிப்படிப்பில் மிகச்சிறந்தவர்களாக விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ‘டபுள் ப்ரொமோஷன்’ என்னும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக இரண்டாம் வகுப்பில் மிகச்சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சியடைந்த மாணவமாணவிகளை பள்ளி நிர்வாகமே நேரிடையாக நான்காம் வகுப்புக்கு மாற்றிவிடுகிறது. விட்டல்ராவ் முதல் வகுப்பைப் படித்து முடித்ததும் நேரிடையாக மூன்றாம் வகுப்புக்குச் சென்றுவிடுகிறார்.  பிறகு எப்போதோ ஒரு காலகட்டத்தில் இந்த வசதி நீக்கப்பட்டுவிட்டது. இப்போது பள்ளியில் படிக்கும் மாணவிமாணவிகளுக்கு இந்தத் தகவல் தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை.

ஒன்றாம் வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியை, பாடங்களை மட்டும் நடத்தாமல் பிள்ளைகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் விளையாட்டுகளைச் சொல்லித் தருகிறவராகவும் இருந்ததை ஒரு கட்டுரையில் தன் நினைவிலிருந்து எழுதியிருக்கிறார் விட்டல்ராவ்.

முதலில் பிள்ளைகளை வட்டமாக உட்கார வைத்துவிட்டு ஆசிரியை நடுவில் நின்றுகொள்கிறார். பிறகு அவர் ஒரு பாட்டை ராகத்தோடு இழுத்துப் பாடுகிறார். பாட்டின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு மாணவருடைய தலையை வேகமாகத் தொட்டுச் செல்கிறது ஆசிரியையின் கை. பாட்டின் கடைசிச்சொல் யாருடைய தலைமீது கைவைக்கும்போது முடிகிறதோ, அவர் அவுட்டானதாகக் கருதப்படுவார். அவர் உடனடியாக எழுந்து வட்டத்தைவிட்டு வெளியே செல்லவேண்டும். அதுதான் விளையாட்டு விதி. கடைசியாக யார் எஞ்சுகிறாரோ, அவரே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்.

ஆசிரியையும் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடிய அந்தக் காட்சியை அழகான சித்தரிப்போடு விவரித்திருக்கிறார் விட்டல்ராவ். கற்பனை நயம் பொதிந்த அந்தப் பாடலுக்கு நேரிடையாக எந்தப் பொருளும் இல்லை. ஆனால் பாடிப் பார்க்கும்போது சுவையாக இருக்கிறது.

 

‘ஓ ஒன்னா டவ்வர டக்கர டை

யாவல் காவல் மஸ்கி டன்

கள்ளன் குள்ளன் டுவெண்டி ஒன்

யா ஊ மே ப்ளக்

ப்ளக்கத் தூக்கி மேலப் போட்டா

செட்டியார் வூட்டு நண்டு

நண்டத் தூக்கி மேலப் போட்டா

நாகரத்தினப் பாம்பு

பாம்பைத் தூக்கி மேலப் போட்டா

பஞ்சவர்ணக்கிளி’

 

கிளி என்று சொல்லும்போது கை யாருடைய தலையைத் தொடுகிறதோ, அவர் அவுட் என்று கருதப்படுவார். அவர் வட்டத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டின் ஆதி வடிவமாக இது இருக்கக்கூடும் மியூசிக்கல் சேர் விளையாட்டில் பாட்டு வெளியேயிருந்து இசைக்கப்படுகிறது. இந்த விளையாட்டில் மாணவமாணவிகளுக்கு நடுவில் நின்றுகொண்டு ஆசிரியையே பாடுகிறார். இந்தக் காலத்துப் பள்ளிப்பிள்ளைகள் இழந்த மகிழ்ச்சித்தருணங்களில் இதுவும் ஒன்று.

அந்தக் காலத்துப் பள்ளிகளில் மாணவர்கள் அருந்துவதற்கு பால் வழங்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அரசு பவுடராக அனுப்புவதை சரியான விகிதத்தில் தண்ணீரில் கலந்து சூடேற்றி பால் வழங்குவதும் ஆசிரியையின் பணியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவனும் வீட்டிலிருந்து தம்ளரோ செம்போ எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பாத்திரத்தில் ஊற்றும் பாலை சூடு தணிந்த பிறகு அருந்தவேண்டும். மாணவரான விட்டல்ராவ் வீட்டில் கொடுத்தனுப்பிய பாத்திரத்தை முதல்நாளே தொலைத்துவிடுகிறார். ஆத்திரம் கொண்ட அம்மா அடுத்தநாள் பாத்திரம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பாத்திரம் இல்லாமல் போனதால் அவர் பால் வாங்கச் செல்லவில்லை. ஆனால் அதைக் கவனித்துவிட்ட ஆசிரியை ஒரு தாளில் பால்பவுடரை வைத்து மடித்து “வீட்டுல கொண்டுபோய் கரைச்சிக்குடி” என்று சொல்லிக் கொடுத்தனுப்புகிறார். பாடம் நடத்துவதில் கண்டிப்பைக் காட்டும் ஆசிரியர் பழகும்போது மாணவமாணவிகளிடம் இரக்கமாகவும் நடந்துகொள்கிறார்.

அந்தக் காலத்துப் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் ஒன்றாக பாட்டுவகுப்பும் இருந்திருக்கிறது. வாரத்துக்கு ஒரு நாள் பாட்டு வகுப்பு. அதற்கென பயிற்சி பெற்ற ஒரு பாட்டு வாத்தியாரும் இருந்திருக்கிறார். விழா நாட்களில் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்து மேடையேற்றி பாட வைப்பது அவர் வேலை. அக்கச்சேரியில் அவரே எழுதி மெட்டமைத்துப் பாடும் பாடல்களும் இருக்கும். பிறர் எழுதிய பாடல்களும் இருக்கும். கிறித்துவப்பள்ளியில் பயின்ற காலத்தில் தம் வகுப்புக்குப் பாட்டு வாத்தியாராக வந்த மரியசூசை அவர்களைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையையே எழுதியிருக்கிறார் விட்டல்ராவ்.

ஒரு விழாவில் பலவிதமான பாடல்களுக்குப் பயிற்சி கொடுத்து மாணவமாணவிகளை மேடையேற்றிப் பாட வைக்கிறார் மரியசூசை. ஒவ்வொரு பாடலும் முடிவடைந்ததும் எல்லோரும் ரசித்து கைதட்டி உற்சாகமூட்டுகிறார்கள். வழிபாட்டுப்பாடல்கள், திரைப்படப் பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள் என பலவகையான பாடல்கள் இடம்பெறுகின்றன. மந்திரிகுமாரி படத்தில் இடம்பெற்ற உலவும் தென்றல் காற்றினிலே பாடல் பிரபலமாக இருந்த நேரம் அது. அந்தப் பாட்டைப் பாடவைக்க விரும்புகிறார் பாட்டு வாத்தியார். தலைமையாசிரியருக்கும் அந்த வகைமையிலும் ஒரு பாட்டு இருக்கட்டும் என்று தோன்றுகிறது. ஒருமுறை அந்தப் பாட்டின் வரிகளைப் படித்துப் பார்க்கிறார். அதில் இடம்பெறும் காதல் என்னும் சொல் அவரை யோசிக்க வைக்கிறது. அதே சமயத்தில் பிறர் ஆர்வத்தையும் குலைக்க அவர் விரும்பவில்லை அதனால் காதல் என்னும் சொல்லுக்குப் பதிலாக அன்பு என்ற சொல்லப் பயன்படுத்துமாறு ஒரு நிபந்தனையை விதித்துவிட்டு, அந்தப் பாடலைப் பாட அனுமதிக்கிறார். வேரு வழியில்லாமல் மரியசூசையும் அதே விதமாக அப்பாடலைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்.

ஐம்பதுகளில் இந்தியா முழுவதும் பஞ்சம் நிலவிய காலம்.  கோதுமை முதன்முதலாக எல்லாப் பகுதிகளிலும் அறிமுகமான காலம். தமிழ்நாட்டில் அதைப் பயன்படுத்தத் தொடங்கிய மக்களுக்கு அந்த உணவே பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒருவித ஒவ்வாமையோடு அந்தக் கோதுமை உணவை உண்ணுகிறார்கள். அந்த மன உணர்வை வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட ஒரு பாட்டை ஒரு மாணவன் நாட்டுப்புறப்பாடலின் வடிவத்தில் அந்த மேடையில் பாடுகிறான்.

 

‘எஞ்சாமி சொக்கலிங்கம் பேத்தியளே சொக்கலிங்கம் பேத்தியளே

எஞ்சாமி ரேஷன்கடை மாவெடுத்து, ரேஷன்கடை மாவெடுத்து

எஞ்சாமி எட்டுநாளா ரொட்டிசுட்டு, எட்டுநாளா ரொட்டிசுட்டு

எஞ்சாமி எட்டுநாளா ரொட்டியேதின்னு, எட்டுநாளா ரொட்டியேதின்னு

எஞ்சாமி வவுத்துநோவால் கஸ்டப்பட்டு, வவுத்துநோவால் கஸ்டப்பட்டு

எஞ்சாமி டாக்டர்கிட்ட காட்டப்போனா, டாக்டர்கிட்ட காட்டப்போனா

எஞ்சாமி ஆப்புரேசன் பண்ணச்சொன்னார், ஆப்புரேசன் பண்ணச்சொன்னார்

 

பார்வையாளர்களின் வரவேற்பைப்பெற்ற அப்பாடல் அன்றைய பாட்டுப்போட்டியில் முதல் பரிசையும் பெற்றது. இப்போது இப்படி ஒரு கலைநிகழ்ச்சியை எந்தப் பள்ளியில்லாவது நடத்த முடியுமா என்று தெரியவில்லை.

இப்படி இன்றைய வகுப்புகளில் காணக்கிடைக்காத பல செய்திகளை ஒவ்வொரு கட்டுரையிலும் சுவைபட எழுதியிருக்கிறார் விட்டல்ராவ்.

அந்தக் கால ஆசிரியர்களும் அரிதான மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். குட்டிக்குறளோன் என அனைவராலும்  அழைக்கப்படும் ஆசிரியரொருவர் வகுப்பறையில் மட்டுமல்ல, வெளியே பிறரிடம் பேசும்போதும் தூய தமிழிலேயே பேசுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒருமுறை அவர் தெருவில் நடந்துசெல்லும்போது அவருக்குப் பின்னால் ஒரு பசு வேகமாக வருவதை எதிரே வரும் மாணவனொருவன் பார்த்துவிட்டு ’ஐயா ஆ ஆ’ என்று சொல்கிறான். அவர் அந்த மாணவன் குரலை தன்னை எச்சரிக்கும் குரலாக எடுத்துக்கொள்ளவில்லை. தன்னிடம் எதையோ கேட்க வந்துவிட்டு அவன் தயங்குவதாக நினைத்துக்கொண்டு அப்படியே நிற்கிறார். அதற்குள் பின்னால் வந்த பசு அவரை முட்டி கீழே தள்ளிவிடுகிறது. விழுந்த வேதனையில் தூய தமிழை மறந்துவிட்டு கடுந்தமிழில் அந்த மாணவனை அவர் திட்டுகிறார். சில நாட்களுக்கு முன்பாக அவர் வகுப்பில் பாடம் எடுத்தபோது ஆ என்னும் சொல்லுக்கு பசு என்று பொருள் சொன்னதால், அந்த எண்ணத்தில் ஆ என்று சொன்னதாக விளக்கமளிக்கிறான் மாணவன். ஆசிரியர் அதற்குப் பிறகே நிதானநிலைக்குத் திரும்புகிறார்.

ஓர் ஆசிரியருக்கு மாணவர்கள் அனைவரும்  ஆளுக்குக் கொஞ்சம் சில்லறை போட்டு ஒரு சட்டை வாங்கி அன்பளிப்பாக அளிக்கிறார்கள். பாடம் நடத்தும்போதே பிரசவ வலி வந்துவிட்ட ஆசிரியைக்குத் துணையாக மாணவிகள் அவரோடு மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். தண்ணீர் இல்லாத ஊரில் ஊரார் அனைவரும் ஆற்றங்கரையோரமாக ஊற்றைத் தோண்டி தண்ணீர் எடுத்து குடத்தை நிரப்பிக்கொண்டு செல்லும் சமயத்தில் குடத்தோடு வந்த ஆசிரியைக்காக ஊற்றுத் தோண்டிக் கொடுக்கிறான் ஒரு மாணவன். விட்டல்ராவின் வகுப்பறைக்கதைகள் இப்படி பலவகையான மாணவ மாணவிகளையும் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

விட்டல்ராவின் வகுப்பறைக்கதைகள் ஒரு காலகட்டத்தைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்க்கவைக்கின்றன. இப்போது இருப்பதைப்போலவே அந்தக் காலத்திலும் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பாடம் நடத்திய ஆசிரியர்கள், தன் வருமானத்துக்குரிய வழியைப் பெருக்கிக்கொள்ளும் விதமாக டியூஷனுக்கு வருமாறு மாணவர்களுக்கு வலைவீசும் ஆசிரியர்கள் என இருபெரும் பிரிவுகளாக இருந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மாணவமாணவிகளும் இருந்திருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பிறரை வெறுக்கும் மாணவமாணவிகளும் இருந்திருக்கிறார்கள். சூழல்களும் வாழ்க்கை முறைகளும் மாறியிருக்கிறதே தவிர, மனிதர்கள் மாறவில்லை.

இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கும் ஒவ்வொரு வாசகரும் படித்துமுடிக்காமல் எழமாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அந்த அளவுக்கு ஒவ்வொருவரையும் காந்தமென ஈர்க்கும் இனிய அனுபவங்களின் தொகையாக ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. வகுப்பறைக்கதைகளைப் படித்துமுடிக்கும் ஒவ்வொரு வாசகரும் தத்தம் காலத்து வகுப்பறைகளை ஒருகணமேனும் நினைத்து, அக்காட்சிகளை மனத்துக்குள்ளேயே மீட்டி மகிழக்கூடும் என்பது என் நம்பிக்கை. விட்டல்ராவுக்கு என் வாழ்த்துகள். 

 

(24.07.2026 அன்று ஓசூர் புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தக நிலையக் கூடத்தில் விட்டல்ராவ் எழுதிய ‘வகுப்பறைக்கதைகள்’ புத்தகம் வெளியிடப்பட்டது. மூத்த எழுத்தாளர் விட்டல்ராவ் முன்னிலையில் நான் வெளியிட சித்தார்த்தன் சுந்தரம் பெற்றுக்கொண்டார். அந்தப் புத்தகத்துக்காக எழுதிய முன்னுரை)