Home

Sunday, 8 March 2026

அரங்கசாமி ராஜா : கல்மேல் எழுத்தான வாழ்க்கை

 

1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து  மக்களை ஒன்றிணைத்தது. ‘காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மிகமிக அறிவீனமான திட்டமாகும்’’ என வைசிராய் ரீடிங் பிரபுவின் கூற்றை மக்கள் பொய்யாக்கினார். சூறாவளிச்சுழலென எங்கும் நிற்காமல் காந்தியடிகள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களிடையில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி உரையாடியபடி இருந்தார். நீதிமன்றங்களை விலக்குவது, சட்டமன்றங்களை விலக்குவது, வெளிநாட்டுத்துணிகளை விலக்குவது ஆகிய மூன்று விலக்குகளும் அவருடைய தாரகமந்திரங்களாக இருந்தன.

தொடக்கத்தில் அந்த இயக்கத்தை ஏளனம் செய்தவர்கள் நாளுக்கு நாள் அதன் வலிமையும் வேகமும் பெருகுவதைக் கண்டு வாய் பேச முடியாதவர்களானார்கள்.  ஒத்துழையாமை  இயக்கம் தொடர்பாக காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளேயே சில தலைவர்கள்  மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்தனர். 31.12.1920 அன்று நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். நீண்ட நேர விவாதங்களுக்குப் பிறகு  அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அத்தீர்மானத்தின் கருத்தை மக்களிடையில் பரப்புவதற்காக காந்தியடிகள் உடனடியாக இந்திய அளவில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

அப்பயணத்தின் ஒரு பகுதியாக 21.09.1921 அன்று காந்தியடிகள் மதுரைக்கு வந்து சேர்ந்தார். தமிழகத்தில் பயணம் செய்த பல இடங்களில் இராட்டையில் நூல் நூற்பவர்கள் கூட கதராடை அணியாமல் அயல்நாட்டுத்துணிகளை அணிந்திருப்பதைப் பார்த்து அவர் மிகவும் மனம் வருந்தினார். அதற்குக் காரணம் கேட்டபோது “கதர் உடுத்திக்கொள்ளலாம் என்றால் போதுமான கதர் கிடைப்பதில்லை. அப்படியே கதர் கிடைத்தாலும் அதை வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை” என்று அவர்கள் கூறிய பதில் அவரை வாட்டியபடி இருந்தது. ’கதர் கிடைக்காவிட்டால் இடுப்புவேட்டியோடு நிறைவடைய வேண்டுமே தவிர அயல்நாட்டு ஆடைகளை அணியக்கூடாது’ என்னும் கொள்கையை உடைய காந்தியடிகள், அச்சொற்களை பிறருக்குச் சொல்வதற்கு முன்பாக, அக்கொள்கைக்கு முன்னுதாரணமாக தானே இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். 22.09.1921 அன்று காலையில் காந்திப்பொட்டல் என்னும் இடத்தில் நடைபெற்ற செளராஷ்டிரப் பெருமக்களின் கூட்டத்துக்கு உரையாற்றச் சென்றபோது இடுப்புவேட்டியுடன் தோன்றி உரையாற்றினார். அவரைச் சந்திப்பதற்காக ராஜபாளையத்திலிருந்து சென்ற இளைஞரொருவர் காந்தியடிகளின் உரையையும் ஆடை மாற்றத்துக்கான காரணத்தையும் கேட்டு மனம் நெகிழ்ந்தார். அன்றுமுதல் தானும் மேலாடை அணிவதில்லை என உறுதிபூண்டார். அவர் பெயர் அரங்கசாமி ராஜா.

அன்று கூட்டம் நிறைவடைந்ததும் காந்தியடிகளைச் சந்தித்து உரையாடினார் அரங்கசாமி ராஜா. அப்போது அவர் கதர் சட்டையும் வேட்டியும் அணிந்து தோளில் துண்டு போட்டிருந்தார். ராஜபாளையம் மக்களின் சார்பாக கதராடைகளை காந்தியடிகளுக்கு அன்பளிப்பாக அளித்தார். அதை வாங்கித் தொட்டுப் பார்த்த காந்தியடிகள் அந்தக் கதர்த்துணியின் மென்மையையும் வெண்மையையும் கண்டு வியந்து பாராட்டினார். அங்கிருந்தவர்களிடம் ராஜபாளையம் கதரைப்போல அனைத்து ஊர்களிலும் கதர் நெய்யப்படுமெனில் கதருக்கு நல்ல மதிப்பு ஏற்படும் என்று எடுத்துரைத்தார். காந்தியடிகளின் சொற்களால் ஊக்கம் பெற்ற அரங்கசாமி ராஜா கதரின் பெருமைகளையும் சுதேசி ஆர்வத்தையும் தேச விடுதலைக்கான நாட்டத்தையும் தன்னால் முடிந்த அளவில் எங்கெங்கும் பரப்பவேண்டும் என்ற முடிவோடு ராஜபாளையத்துக்குத் திரும்பினார்.

காந்தியடிகளைச் சந்தித்த அனுபவம்  பொதுவாழ்க்கையின் மீது அரங்கசாமி ராஜா கொண்டிருந்த நம்பிக்கையை வலிமையடையச் செய்தது. உண்மையில், அவருடைய பொதுவாழ்க்கை 1916ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆரம்பமாகிவிட்டது. திலகரும் அன்னிபெசன்ட் அம்மையாரும் ஹோம்ருல் இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் அவர்களுடைய உரைகளையும் கட்டுரைகளையும் செய்தித்தாள் வழியாக வாசித்து இந்தியா சுயநிர்வாக உரிமையை அடையவேண்டும் என்ற கொள்கையின் மீது அவர் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டார். அத்தலைவர்களுடைய கருத்துகள் பொதுமக்களிடையில் பரவும் வகையில் பல்வேறு கூட்டங்களில் தொடர்ச்சியாக உரையாற்றத் தொடங்கினார்.

அப்போது அவர் கொடிக்குளம் பண்ணையாரிடம் வேலை செய்துவந்தார். அரங்கசாமி ராஜாவின் அரசியல் ஈடுபாட்டை அறிந்ததும் அந்தப் பண்ணையார் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். அதைப்பற்றி கவலைப்படாத அரங்கசாமி ராஜா தன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்குத் திரும்பி வந்து பிரம்மஞான சங்கத்தை ஏற்படுத்தி ஹோம்ரூல் இயக்கத்தையும் தொடங்கி தன் வயதையொத்த இளைஞர்களைத் திரட்டத் தொடங்கினார். அவருடைய முயற்சியின் பலனாக அவருக்கு இளைஞர்களின் ஆதரவு கிடைத்தது. ஆங்காங்கு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து விடுதலைப் பிரச்சாரம் செய்வதிலும் ஊரில் சீர்திருத்தப்பணிகளைச் செய்வதிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டார்.

அன்னிபெசன்ட் அம்மையாருடன் அரங்கசாமி ராஜாவுக்கு நேரடித் தொடர்பும் இருந்தது. ஆங்கிலேய அரசு தயாரித்திருந்த இந்திய அரசியல் திட்டங்களில் மாறுதல் தேவையா என்பதை ஆய்வு செய்யும் நோக்கில் லண்டனில் இந்தியச் செயலராக இருந்த மாண்டேகு இந்தியாவுக்கு வந்தபோது, மக்களுக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தங்களைப் பட்டியலிட்டு அச்சிட ஏற்பாடு செய்து, அவற்றை ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்று செயலரிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்தார். அரங்கசாமி ராஜா தனக்கு வந்த அச்சுப்படிவங்களில் பொதுமக்களின் கையெழுத்தைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அம்மையாருக்கு அனுப்பிவைத்தார்.

ஹோம்ரூல் இயக்கத்தின் செல்வாக்கு பெருகுவதைக் கண்ட ஆங்கிலேய அரசு 16.06.1917 அன்று அன்னிபெசன்ட் அம்மையாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அதைக் கண்டிக்கும் விதமாக ராஜபாளையத்தில் முதன்முறையாக ஒரு கண்டன ஊர்வலத்தை நிகழ்த்தினார் அரங்கசாமி ராஜா.  அதனால் காவல்துறை அவரைக் கைது செய்து ஆறு மாத காலம் சிறையில் அடைத்தது. தண்டனைக்காலம் முடிந்து விடுதலை பெற்ற தருணத்தில் கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ்  மாநாடு நடைபெற்றது. அச்சமயத்தில் சிறையிலிருந்து விடுதலையான அன்னிபெசன்ட் அம்மையாரே அந்த மாநாட்டுக்குத் தலைமையேற்று உரையாற்றினார். அந்தத் தலைமையுரையைப் பெற்று ராஜபாளையத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அரங்கசாமி ராஜா, அக்கூட்டத்தில் அந்த உரையை வாசிப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சை வழியிலான போராட்டமுறையால் ஈர்க்கப்பட்ட அரங்கசாமி ராஜா, ராஜபாளையத்தில் இயங்கிவந்த ஹோம்ரூல் இயக்கத்தினரோடு காந்தியடிகளின் இயக்கத்தில் இணைந்து பாடுபடத் தொடங்கினார். அந்த வட்டாரத்தில் அப்போது பேச்சாற்றலில் புகழ்பெற்றிருந்த கே.ஜி.சிவசாமி ஐயர், சாத்தூர் வக்கீல் சுப்பிரமணிய நயினார், அனுமந்த ராவ் ஆகியோரை அழைத்துவந்து மக்களிடையில் விழிப்புணர்ச்சியைத் தூண்டும்வண்ணம் உரையாற்ற கூட்டங்களை ஏற்பாடு செய்தார். மக்கள் ஆதரவு பெருகியதும் ராஜபாளையத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் கிளையைத் தொடங்கினார் அரங்கசாமி ராஜா.

03.03.1920 அன்று ராஜபாளையத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் உரையாற்றுவதற்கு சத்தியமூர்த்தி அவர்களை அழைத்துவந்தார் அரங்கசாமி ராஜா. அவருடைய பேச்சு பொதுமக்களைக் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிவடைந்ததும் சத்தியமூர்த்தியுடன் அரங்கசாமி ராஜாவும் பிற நண்பர்களும் அரசியல் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர்.  அப்போது சத்தியமூர்த்தி தான் அணிந்திருந்த பூநூலைக் கழற்றி “இனி இந்த அடையாளம் நமக்கு வேண்டாம். நாம் அனைவரும் பாரதத்தாயின் புதல்வர்கள். அந்த ஓர் அடையாளமே நமக்குப் போதும்” என்று அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அரங்கசாமி ராஜாவும் தான் அணிந்திருந்த பூநூலைக் கழற்றி அவருடன் இணைந்து நின்றார்.

அடுத்த மாதத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு ராஜாஜியை அழைத்துவந்தார் அரங்கசாமி ராஜா. ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றியும் தீண்டாமை பற்றியும் மதுவிலக்கு பற்றியும் எடுத்துக் கூறிய ராஜாஜி அடுத்து செய்யவேண்டிய செயல்களைப்பற்றியும் மக்களுக்கு ஆலோசனை கூறினார். இப்படி அரங்கசாமி ராஜா ஏற்பாடு செய்த தொடர் சொற்பொழிவுகளால் ராஜபாளையம் வட்டாரத்தில் தேசபக்தி பரவியது.

31.12.1920 அன்று நாக்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்கு அரங்கசாமி ராஜாவின் தலைமையில் பி.எஸ்.சின்ன வெங்கிட்ட ராஜா, பெருமாள் ராஜா, அழகராஜா ஆகியோர் காங்கிரஸ் பிரதிநிதிகளாகச் சென்று கலந்துகொண்டனர். மாநாட்டில் காந்தியடிகள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் விதிமுறைகள், நடைமுறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. நிர்மாண வேலைத்திட்டம் வகுக்கப்பட்டது. மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய அனைவருக்கும் ராஜபாளையத்தில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணிக்கவேண்டும் என்னும் காந்தியடிகளின் கோரிக்கையை ஏற்று நாடெங்கும் எதிர்ப்புக்குரல் பரவியது. அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு முன்னால் தொண்டர்கள் திரண்டு நின்று எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். பொது இடத்தில் அயல்நாட்டு ஆடைகளைக் குவித்துத் தீயிட்டுக் கொளுத்தினர். அதன் தொடர்ச்சியாக, அரங்கசாமி ராஜா புதுப்பாளையம் மதுரை ராஜா கடைத்தெரு மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். தம் வீட்டிலிருந்த அயல்நாட்டுத் துணிமணிகளைச் சேகரித்து எடுத்துவந்து அந்த மைதானத்தில் குவித்தார். பிற தொண்டர்களும் தத்தம் வீடுகளிலிருந்து கொண்டுவந்த துணிமணிகளைக் குவித்தனர். அவை அனைத்தும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இனி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை மட்டும் அணிவோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தன்னிச்சையாக அக்கூட்டத்தைக் கூட்டியதற்காக காவல்துறையினர் அரங்கசாமி ராஜாவைக் கைது செய்தனர். அவருக்கு ஒரு வார கால தண்டனை கிடைத்தது.

விடுதலை பெற்ற அரங்கசாமி ராஜா ராஜபாளையத்தில் கதர் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் இராட்டையில் நூல் நூற்கும் பயிற்சியை அனைவருக்கும் கொடுக்க முனைந்தார். அனைவருக்கும் ஆவல் இருந்தாலும் அந்த வட்டாரத்தில் ஒருவருக்கும் இராட்டையைப் பயன்படுத்தும் நுட்பத்தைப்பற்றிய தெளிவு இல்லை. தொடர்முயற்சிக்குப் பிறகு காட்டுவிநாயகர் கோவில் தெருவில் வசித்துவந்த கருப்பாயி அம்மாள் என்னும் மூதாட்டியை அவர் கண்டுபிடித்தார். அந்த மூதாட்டிக்கு இராட்டையில் நூல் நூற்கும் பயிற்சி இருந்தது. அரங்கசாமி ராஜாவின் வேண்டுகோளை ஏற்று அவரே ஆசிரியராக இருந்து ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நூல்நூற்கும் கலையைக் கற்றுக்கொடுத்தார்.

அன்றுமுதல் ஒவ்வொரு வீட்டிலும் இராட்டை சுழலும் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது. படிப்படியாக எல்லாப் பெண்களும் பருத்தி அறைக்கவும் பஞ்சு வெட்டவும் நூல் நூற்கவும் கற்றுக்கொண்டபோதும் ஒருவருக்கும் துணியாக நெய்யத் தெரியவில்லை. நெசவுவேலை தெரிந்த இருவர் மட்டும் ஆரம்பத்தில் நூலைப் பெற்று துணியை நெய்து கொடுத்தனர். பிறகு தயக்கத்தின் காரணமாக, நெய்து கொடுக்க மறுத்தனர். வேறு வழியின்றி அரங்கசாமி ராஜா தன் சொந்தச் செலவில் ஒரு தறிக்கூடத்தை நிறுவி நெசவு வேலையில் தேர்ச்சி பெற்றவர்களைக் கண்டுபிடித்து அழைத்துவந்து கதர் நெசவைத் தொடங்கினார். நெய்த துணிகளைச் சந்தைப்படுத்தி விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்தார். தொடக்கத்தில் சிற்சில இன்னல்களை எதிர்கொண்டாலும் அவையனைத்தையும் காலப்போக்கில் வெற்றிகொண்டு கதர் உற்பத்தியில் ராஜபாளையத்தைச் சிறந்து விளங்கச் செய்தார்.

காந்தியடிகள் மதுரைக்கு வந்து சென்ற பிறகு யங் இந்தியா பத்திரிகையில் அவர் எழுதி வெளிவந்த மூன்று கட்டுரைகளின் உள்ளடக்கக்குறிப்புகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருப்பதாகக் குற்றம் சுமத்தி காவல்துறை அவரைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது. விசாரணைக்குப் பிறகு 10.03.1922 அன்று அவருக்கு ஆறாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து தேசமெங்கும் தொண்டர்கள் கண்டனக்கூட்டங்கள் நடத்தினர். ராஜபாளையத்தில் அரங்கசாமி ராஜாவின் தலைமையில் கண்டன ஊர்வலமும் கூட்டமும் நடைபெற்றன. அச்செயலை அரசுக்கு எதிரானதாக கருதிய காவல்துறை அவரையும் அவரோடு முக்கிய பங்கு வகித்த ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. சில மாத கால தண்டனைக்குப் பிறகு அனைவரும் விடுதலை பெற்றனர்.

1925ஆம் ஆண்டில் நான்காவது தாலுகா அரசியல் மாநாடு ராஜபாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய எஸ்.சீனிவாச ஐயங்கார் அரங்கசாமி ராஜாவின் அர்ப்பணிப்புணர்வையும் மக்களின் உளப்பூர்வமான விடுதலை வேட்கையையும் மனம் திறந்து பாராட்டிப் பேசினார். கட்சிப்பொறுப்புகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்க விரும்பிய அரங்கசாமி ராஜா அந்த மாநாட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி தலைவராக பி.எஸ்.குமாரராஜாவும் செயலராக பி.எஸ்.சுப்பராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரங்கசாமி ராஜாவின் தொடர்முயற்சிகளால் நகரத்தில் கதர்த்துணிகளுக்கு ஆதரவு பெருகியது. கதர் வியாபாரிகளும் பெருகினர். எதிர்பாராதவிதமாக, தேசிய உணர்வில்லாத லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிகர்களும் கலந்துவிட்டனர். அவர்களுடைய செயலால் கதரின் சிறப்பு குறைந்தது. அதனால் மக்களிடையே இருந்துவந்த ஆதரவும் குறைந்தது. கதர்த்துணிகள் விற்பனையாகாமல் வீடுகளில் தேங்கத் தொடங்கின. ஆங்கிலேயரை விரட்டும் ஆயுதமாக நம்பப்பட்ட ராட்டைகளின் பணி நின்றதும் கதர் ஊழியர்கள் கவலையில் மூழ்கினர். அதைக் கண்டு மனவேதனைப்பட்ட அரங்கசாமி ராஜா வீடுவீடாகச் சென்று கதரை ஆதரிக்கும்படி வேண்டினார். ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்தும் ஒரு பயனும் ஏற்படவில்லை.

12000 ரூபாய் மதிப்புள்ள கதர் விற்பனையாகாமல் தேங்கியிருந்தது. நூல் நூற்பவர்கள் ஒவ்வொருவராக நூல் உற்பத்தியைக் கைவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தொடங்கினர். அதனால் காந்தியடிகளின் வழியில் உடனடியாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் அரங்கசாமி ராஜா. கதர்ப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் தேவையான நன்கொடைகளை அளிப்பதாகவும் உண்ணாவிரத முயற்சியைக் கைவிடுமாறு பலரும் அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர். ஆயினும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் அரங்கசாமி ராஜா. மூன்று வார உண்ணாவிரதத்துக்குப் பிறகு பல நண்பர்கள் கூடி ஒருங்கிணைந்து அவருடைய கோரிக்கையை நிறைவேற்றியதால் மகிழ்ச்சியோடு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தக்க நேரத்தில் அவருடைய உயிரைக் காப்பாற்றிய நண்பர்கள் சுப்பராஜா, சின்ன வெங்கட ராஜா உள்ளிட்ட அனைவரும் தேங்கிவிட்ட கதர்த்துணிகளை வகைவாரியாகப் பிரித்து மூட்டையாகக் கட்டி தலையில் தூக்கிச் சென்று தெருத்தெருவாக அலைந்து விற்பனை செய்தனர்.

காந்தியடிகள் வகுத்த நிர்மாணப்பணிகளில் ஒன்றான தீண்டாமை ஒழிப்பிலும் அரங்கசாமி ராஜா முன்னணியில் நின்று உழைப்பவராக இருந்தார். அந்தக் கொள்கையை முன்வைத்து ஊருக்கு அருகில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும்  கம்மாப்பட்டி என்னும் இடத்துக்குச் சென்று, அங்கு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு தேச விடுதலை பற்றிய விழிப்புணர்வையும் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அதுவரை அவருக்கு ஆதரவாக இருந்த பலர் அவரைவிட்டு விலகிச் சென்றனர். சிலர் புதிதாக வந்து இணைந்தனர். அவர் வீட்டில் பறந்துகொண்டிருந்த கொடியை யாரோ ஒருவர் கிழித்தெறிந்தார். வீட்டுச் சுவரில் சாணியடித்து அசிங்கப்படுத்தினர். ஆயினும் அந்நடவடிக்கைகளால் கிஞ்சித்தும் மனம் தளராத அரங்கசாமி ராஜா தீண்டாமைக்கொள்கையில் உறுதியாக நின்று தன் கடமையை ஆற்றினார்.

மதுவிலக்குப் பிரச்சாரத்திலும் அரங்கசாமி ராஜா முக்கியப் பங்காற்றினார். இளைஞர்களோடு இணைந்து ஊர்வலமாகச் சென்று கள் விற்பனையாகும் தெருமுனையிலோ அல்லது கடைக்கு அருகிலோ  நின்றுகொள்வார். கள் அருந்துவதால் நேரும் தீமைகளை விளக்கிப் பேசுவார். பிறகு கள் அருந்தச் செல்பவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டும் மன்றாடிக் கெஞ்சியும் அவர்களிடம் குடிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்வார். அச்சொற்களுக்குக் கட்டுப்பட்டு கள் அருந்தாமல் திரும்பிச் சென்றவர்களும் இருந்தனர். போகிற மாதிரி போக்கு காட்டிவிட்டு திரும்பி வந்து கள் அருந்துபவர்களும் இருந்தனர்.

ஒருநாள் அரங்கசாமி ராஜா பல இளைஞர்களோடு ஊர்வலமாகச் சென்று பனைமரங்கள் சூழ்ந்த பகுதியை அடைந்தார். அங்கிருந்த கள் இறக்கும் தொழிலாளர்களிடம் மரமேறி கள் இறக்கவேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். பலர் அவருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு மரமேறாமல் திரும்பிச் சென்றனர். ஒரே ஒரு தொழிலாளி மட்டும் கள் இறக்காமல் திரும்பிப் போகமாட்டேன் என பிடிவாதமாகக் கூறினார். உடனே அரங்கசாமி ராஜா ‘அப்படியானால் என்னை வெட்டிவிட்டு பின் மரமேறி கள் இறக்கலாம்’ என ஒரு பனைமரத்துக்கு அருகில் சென்று இரு கைகளாலும் மரத்தைத் தழுவியபடி நின்றார். அவருடைய செயலைக் கண்டு கோபமுற்ற தொழிலாளி சட்டென தன் கையிலிருந்த தடியால் அரங்கசாமி ராஜாவை அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அடிபட்ட வேதனையில் அரங்கசாமி ராஜா சில நாட்கள் படுத்த படுக்கையாகவே இருந்தார். உடல்நலம் சீரானதும் மீண்டும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் இறங்கினார். ஒருநாள் அதே தோப்புக்கு மீண்டும் சென்று போராட்டத்தைத் தொடங்கினார். ஏற்கனவே மரத்தின் மீதிருந்த தொழிலாளிகள் அவரைக் கண்டதும் வேகமாகக் கீழே  இறங்கி வெளியேறினர். ஒருவர் மட்டும் இறங்கும் மும்முரத்தில் பிடி நழுவி கீழே விழுந்துவிட்டார். உடனே அவ்விடத்துக்கு ஓடிச் சென்று விழுந்தவரைத் தூக்கி நிறுத்தி முதலுதவி செய்யத் தொடங்கினார் அரங்கசாமி ராஜா.

சில நாட்களுக்கு முன்னால் அவரைத் தாக்கி வீழ்த்திய அதே ஆள்தான் அடிபட்டுக் கிடப்பவர் என்பதைக் கண்டுகொண்ட பிற இளைஞர்கள் அவருக்கு உதவவேண்டாம் என அரங்கசாமி ராஜாவிடம் கேட்டுக்கொண்டனர். பகைவருக்கும் அருளவேண்டும் என்னும் காந்திய வழியில் நம்பிக்கை கொண்ட தன்னால் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவாமல் வரமுடியாது எனத் தெரிவித்துவிட்டு, முதலுதவியைத் தொடர்ந்து செய்தார் அரங்கசாமி ராஜா. பிறகு அவரைத் தன் தோளில் தூக்கிச் சென்று அவருடைய வீட்டில் இறக்கிவிட்டார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியரை வரவழைத்து மருத்துவம் செய்வித்த பிறகே அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அடிபட்டவரும் பிற தொழிலாளர்களும் கண்ணீருடன் கையெடுத்து வணங்கி அவருக்கு விடைகொடுத்தனர். ஒருசிலர் கள் இறக்கும் தொழிலை விட்டுவிடுவதாகவும் வாக்களித்தனர்.

கதர்த்திட்டத்தை விளக்கும் பொருட்டு நாடு தழுவிய அளவில் 1927ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட காந்தியடிகள் வட இந்தியப்பயணத்தை முடித்துக்கொண்டு பம்பாய் வழியாக கர்நாடகத்துக்கு வந்தபோது அவருடைய உடல்நிலை பாதிப்புக்குள்ளானது. மைசூரிலேயே ஏறத்தாழ நான்குமாத காலம் தங்கி ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு செப்டம்பர் மாதவாக்கில் தமிழ்நாட்டுக்கு வரக்கூடும் என்ற செய்தி பரவத் தொடங்கியதுமே, அவரை எப்படியாவது ராஜபாளையத்துக்கு வரவழைத்துவிட வேண்டும் என நினைத்த அரங்கசாமி ராஜா தன் கோரிக்கையை ராஜாஜியிடம் முன்வைத்து காந்தியடிகளின் பயணப்பட்டியலில் ராஜபாளையத்தையும் இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ராஜாஜியும் மதுரை, பரமக்குடி, விருதுநகர் வழியே நீண்டு செல்லும் பயணத்தில் ராஜபாளையத்தையும் இணைத்துக்கொண்டார்.

04.10.1927 அன்று ரயில் வழியாக ராஜபாளையத்தை அடைந்தார் காந்தியடிகள். அரங்கசாமி ராஜாவும் குமாரசாமி ராஜாவும் ரயில் நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்று அழைத்துவந்தனர். குமாரசாமி ராஜாவின் இல்லத்தில் காந்தியடிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை நேரில் காணவந்த பலரும் தாம் நூற்ற கதர் சிட்டங்கள், கதராடைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து அவரிடம் அன்பளிப்பாக அளித்தனர். கதர் உற்பத்தியைத் தீவிரப்படுத்தும் திட்டத்தோடு ‘காந்தி கதர் வஸ்திராலயம் லிமிடெட்’ என்னும் பெயரில் உருவாக்கிய நிறுவனத்தைத் தொடக்கிவைக்குமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார் அரங்கசாமி ராஜா. நிறுவனத்தின் புத்தகத்தைக் கேட்டு வாங்கிய காந்தியடிகள் அதன் முதல் பக்கத்தில் மோகன்தாஸ் காந்தி என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

அரங்கசாமி ராஜா காந்தியடிகளுக்கு கலையம்சம் பொருந்திய குத்துவிளக்கு ஒன்றைப் பரிசாக அளித்தார். பழையபாளையம் பெத்துராஜா அவருக்கு ஒரு கைத்தடியைப் பரிசாக அளித்தார். காந்தியடிகள் அவ்விரண்டு பொருட்களையும் பெற்றுக்கொண்டு அதே இடத்தில் அவற்றை ஏலத்துக்கு விட்டார். தான் அன்பளிப்பாக அளித்த குத்துவிளக்கை அரங்கசாமி ராஜாவே அதிக விலை கொடுத்து வாங்கி, அவருடைய நினைவாக வைத்துக்கொண்டார். கைத்தடியை சேத்தூர் ஜமீன்தார் சேவகப்பாண்டியன் அவர்கள் அதிக விலை கொடுத்து பெற்றுக்கொண்டார். அன்று மாலை காந்தியடிகள் நாயக்கன்பேட்டைக்குச் சென்று பெண்கள் நூல்நூற்பதை கவனமாகப் பார்வையிட்டார். பிறகு கொண்டன் ஏரி கண்மாய் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். கதரைப்போல வாழ்க்கையை எளிதாக்கக்கூடியது வேறெதுவும் இல்லையென்றும் கதர் ஏழைகளையும் பணக்காரர்களையும் இணைக்கும் பாலம் என்றும் காந்தியடிகள் தம் உரையில் குறிப்பிட்டார்.

ஆங்கிலேய அரசு இந்தியாவில் விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். 12.03.1930 அன்று காந்தியடிகளின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளைக் கொண்ட குழு சபர்மதி ஆற்றங்கரையிலிருந்து தண்டியை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டது. அதேபோன்ற ஒரு சத்தியாகிரகத்தைத் தமிழகத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்ட ராஜாஜி திருச்சியிலிருந்து நடைப்பயணமாகச் சென்று வேதாரண்யம் கடற்கரையில் உப்பு அள்ளும் திட்டத்துடன்  13.04.1930 அன்று வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் புறப்பட்டுச் சென்று அந்தச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டனர். ராஜபாளையத்திலிருந்து அரங்கசாமி ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒரு குழு திருச்சிக்குச் சென்று போராட்டக்குழுவுடன் இணைந்துகொண்டது.

வேதாரண்யம் கடற்கரையை அடைந்ததும் முதல்நாள் ராஜாஜி தலைமையில் உப்பு அள்ளப்பட்டது. காவல்துறையினர் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவ்வண்ணம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவினர் ஓர் அணியாகச் சென்று உப்பை அள்ளி கைதானார்கள். பிறிதொரு நாளில் காலை நேரத்தில் அரங்கசாமி ராஜாவின் குழுவினர் உப்பை அள்ளி கைதானார்கள். அரங்கசாமி ராஜாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்கியது. சட்ட ஒழுங்குப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி அரசு நேரு உள்ளிட்ட பெரிய தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கத் தொடங்கியது. காந்தியடிகள் பம்பாய்த் துறைமுகத்தில் வந்தடைந்ததும் அவரையும் 04.01.1932 அன்று கைது செய்து எரவாடா சிறையில் அடைத்தது. காங்கிரஸ் கட்சியை சட்டவிரோதமான கட்சி என்று அறிவித்து தடை செய்தது.

அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து தேசமெங்கும் கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, ராஜபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அரங்கசாமி ராஜாவும் பிற தேசபக்தர்களும் 06.01.1932 அன்று நகரம் முழுக்க ஒருநாள் அடையாள கதவடைப்பு நடத்த முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டனர். அதை அறிந்துகொண்ட காவல்துறை ஐந்தாம் தேதி நள்ளிரவு முதல் ராஜபாளையம் நகரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடையுத்தரவு விதிப்பதாக அறிவித்தது. அடுத்த நாள் காலையில் நகரத்தில் ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அறிவித்த கதவடைப்புக்கு வழியின்றிச் செய்தது காவல்துறை. அதைக் கண்ட அரங்கசாமி ராஜா எட்டாம் தேதி கதவடைப்புப்போராட்டம் நடைபெறும் என உடனடியாக அறிவித்தார். அதையும் நிகழவிடாமல் தந்திரமாகத் தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர். அவர்களுடைய அடக்குமுறை மக்களிடையில் அச்சமூட்டுவதற்கு மாறாக புதிய எழுச்சிக்கு வித்திட்டது.

கதவடைப்புப்போராட்டத்தை நடத்த முடியாத நிலையில் அரங்கசாமி ராஜா 13.02.1932 அன்று மாலையில் ஒரு கண்டன ஊர்வலத்தை எவ்விதமான அறிவிப்புமின்றி தன்னிச்சையாகத் தொடங்கினார்.  ஜவகர் மைதானத்திலிருந்து  தொடங்கிய அந்த ஊர்வலத்தில் எண்ணற்றோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் காவல் நிலையத்தைக் கடந்தபோது சிவகாசி துணையாட்சியர் தலைமையில் காவலர்கள் அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி தொண்டர்களை மிருகத்தனமாகத் தாக்கினர்.

ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடத்திவந்த அரங்கசாமி ராஜாவின் கையிலிருந்த தேசியக்கொடியைப் பிடுங்க முயற்சி செய்தார் ஒரு காவலர்.  கொடியை இறுகப் பற்றியபடி வந்தே மாதரம் என முழக்கமிட்டபடி இருந்தார் அரங்கசாமி ராஜா. ஆத்திரம் கொண்ட காவலர்கள் அவரை ரத்தக்காயங்கள் ஏற்படும் அளவுக்கு அடித்து வீழ்த்தினர். ஒரு காவலர் அரங்கசாமி ராஜாவை எட்டி உதைத்துக் கீழே தள்ளி அவரை மிதித்தபடி அவருடைய கையிலிருந்த கொடியைப் பிடுங்கி கிழித்தெறிந்தார். அரங்கசாமி ராஜா தன்னுணர்விழந்து விழுந்தார். அடிபட்டு விழுந்த அவரையும் பிறரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்று ஊருக்கு வெளியே இருந்த மம்சாபுரம் காட்டுப் பகுதியில் வீசிவிட்டுத் திரும்பினர் காவலர்கள்.

நினைவு திரும்பிய அரங்கசாமி ராஜாவும் பிற தொண்டர்களும் அடிபட்ட கோலத்துடன் மெதுவாக நடந்து ஊருக்குத் திரும்பி வந்தனர். மனவலிமை மிக்க அரங்கசாமி ராஜா தொண்டர்களைத் திரட்டிக்கொண்டு காந்தியடிகளின் கைதைக் கண்டனம் செய்தபடி காவல் நிலையத்தின் வழியாகவே மறுபடியும் ஊர்வலமாகச் சென்றார். அதைக் கண்ட காவல்துறை ஆய்வாளர் எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பவர் அரங்கசாமி ராஜாவே என்பதைப் புரிந்துகொண்டு கடும் சீற்றத்துடன் அவரை நெருங்கித் தாக்கத் தொடங்கினார். அவருடைய கால்களைக் கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை காவல்துறை வாகனத்தின் பின்பகுதியில் இறுக்கிக் கட்டினார். பிறகு ஆத்திரத்தோடு வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்லத் தொடங்கினார். கயிற்றில் கட்டப்பட்ட அரங்கசாமி ராஜா தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்படார்.

அப்போதும் சீற்றம் தணியாத ஆய்வாளர் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்து, அரங்கசாமி ராஜாவை பரண்மீது தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு வதைத்தார். இறுதியில், காவல் நிலையத்துக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களின் ஆரவாரத்துக்கு அஞ்சி அரங்கசாமி ராஜாவை மருத்துவமனையில் சேர்த்தார். எப்படியோ தீவிரமான  மருத்துவத்துக்குப் பிறகு அரங்கசாமி ராஜா உயிர் பிழைத்தார். அதற்குப் பிறகு, நகரத்தில் நடைபெற்ற எல்லாவிதமான செயல்களுக்கும் அவரே காரணம் என குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். அவருக்கு ஒன்றரை ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் இயக்கத்தை அரசு தடைசெய்துவிட்ட காரணத்தால், காவல்துறையினர் தெருவோரக் கம்பங்களில் பறக்கும் காங்கிரஸ் கொடியை இறக்கிப் பறிமுதல் செய்யத் தொடங்கினர். அரங்கசாமி ராஜாவுக்கு நெருக்கமான தொண்டர்கள் காவலர்களை அலைக்கழிக்கக் கருதி முதலில் ஒருவருக்கும் தெரியாமல் சக்கராஜா கோட்டையில் காங்கிரஸ் கொடியைப் பறக்கவிட்டனர். செய்தி அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் அக்கொடியை இறக்கிப் பறிமுதல் செய்து எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்கள் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்த தொண்டர்கள் மீண்டும் இன்னொரு புதிய கொடியை அதே இடத்தில் பறக்கவிட்டனர். காவல்துறையினர் மீண்டும் வந்து புதிய கொடியையும் பறிமுதல் செய்தனர். காவல்துறையை அலைய வைக்க நினைத்த தொண்டர்கள் குறுகிய காலத்தில் முன்னூற்று இருபத்தேழு முறை கொடிகளைப் பறக்கவிட்டனர்.

அரங்கசாமி ராஜா திருச்சி சிறையில் இருந்த சமயத்தில், பி.கே.தத் என்பவர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 08.04.1929 அன்று பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர் அவர். கைகால்களில் சங்கிலி பூட்டப்பட்ட நிலையில் பிறந்த மேனியாக அறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவர். மனிதாபிமானமற்ற அச்செயலைக் கண்டு மனம் கொதித்த அரங்கசாமி ராஜா அதற்கொரு முடிவு கட்ட நினைத்தார்.

தத் அவர்கள் அணிந்துகொள்ள உடனடியாக உடைகள் வழங்கப்படவேண்டும் என்றும் அவருடைய கைகால்களில் பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளை நீக்கவேண்டும் என்றும் இரு கோரிக்கைகளை முன்வைத்து ஓர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவருடைய உண்ணாவிரதத்தை நிறுத்த காவல்துறை அதிகாரிகள் பல வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தனர். எதுவும் பலிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தத் அவர்களுடைய கால்விலங்குகள் நீக்கப்பட்டு அவர் அணிந்துகொள்ள ஆடைகளும் வழங்கப்பட்டன. அதற்குப் பிறகே அரங்கசாமி ராஜா தன் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

1934ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட முடிவெடுத்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் குழுவைக் கூட்டிய அரங்கசாமி ராஜா காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.குமாரசாமி ராஜாவைத் தேர்ந்தெடுத்து அறிவித்தார். அவர் வெற்றி பெற முழுமையாகப் பாடுபட்டார்.

1935ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் காங்கிரஸ் தன் பொன்விழாவைக் கொண்டாடியபோது, அந்த விழாவின் நினைவாக அரங்கசாமி ராஜா தன் மனைவியின் பெயரில் அவர் வசித்த தெருவிலேயே ஒரு பொதுக்கிணறை வெட்டி மக்களின் பயன்பாட்டுக்குக் கொடுத்தார்.

நாற்பதாவது தமிழ் மாகாண அரசியல் மாநாட்டை ராஜபாளையம் நகரில் நடத்துவது என பொதுக்குழு தீர்மானித்து அறிவித்ததும் அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கிவிட்டார் அரங்கசாமி ராஜா. பல ஊர்களிலிருந்து எண்ணற்றோர் வந்து கலந்துகொள்ளக் கூடிய அம்மாநாட்டை சேத்தூர் சேவுகப்பாண்டிய உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் மாபெரும் பந்தல்களை உருவாக்கி 30.12.1938, 31.12.1938 ஆகிய இரு தேதிகளிலும் வெற்றிகரமாக நடத்திமுடித்தார். மாநாட்டுக்கான பந்தல்வேலை நடைபெற்று வந்த சமயத்தில் பந்தலின் மேலிருந்து மூங்கில்கள் சரிந்து கீழே நின்றிருந்த மேற்பார்வையாளரான மாடசாமி ராஜா என்பவர் மீது விழுந்துவிட்டன. அவர் உடலில் அடிபட்டு பலமான காயங்கள் ஏற்பட்டன. அங்கேயே சிறிது தொலைவில் பந்தல் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த அரங்கசாமி ராஜா உடனடியாக ஓடோடி வந்து மாடசாமி ராஜாவை ஒரு வண்டியில் ஏற்றி வைத்தியரிடம் அழைத்துச் சென்று உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். அவர் குணம்பெற்று வழக்கமான நடமாட்டத்துக்குத் திரும்பும்வரை ஒவ்வொரு நாளும் அவருடைய வீட்டுக்குச் சென்று அவர் நலனை விசாரித்துவந்தார்.

15.08.1947 அன்று இந்தியா விடுதலையடைந்த நாளில்  ராஜபாளையம் நகரமே கொண்டாட்ட நகரமாகத் திகழ்ந்தது. ராஜபாளையத்தில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியை நிறுவியவரும் கதர் இயக்கத்தை வளர்த்தவரும் இளைஞர்கள் உள்ளத்தில் எழுச்சியை ஊட்டியவரும் தன்னலம் கருதாமல் சமூகப்பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான அரங்கசாமி ராஜாவை ஊரார் அனைவரும் கூடி கெளரவித்தனர். அவரை ஒரு யானை மீது ஏற்றி அமரவைத்து நகரத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துவரச் செய்து அவருக்கு மலர்மாலைகளும் கதர் மாலைகளும் பொன்னாடைகளும் அணிவித்துப் பெருமை செய்தனர்.

காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட 30.01.1948 அன்று, அவரைக் கொன்றவர் ஓர் இஸ்லாமியர் என்றொரு தவறான செய்தி எப்படியோ நகரமெங்கும் பரவி, எங்கெங்கும் கலவரச் சூழலை உருவாக்கிவிட்டது. ராஜபாளையம் நகரில் மதக்கலவரம் மூண்டு, இஸ்லாமியர் வசிக்கும் பகுதியில் கொள்ளை, தீயிடல் போன்ற வன்முறைகள் நிகழத் தொடங்கிவிட்டன. இதனைக் கேள்விப்பட்ட அரங்கசாமி ராஜா தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் கலவரம் நடைபெற்ற இடத்துக்கு ஓடினார். கலவரத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரையும் கையெடுத்து வணங்கி, அவர்கள் கேள்விப்பட்ட செய்தி பொய்யான செய்தியென மீண்டும் மீண்டும் சொன்னபடி இருந்தார். அவருடைய சொற்களைச் செவிகொடுத்துக் கேட்க விரும்பாத கலவரக்குழுவினர் அவரையும் அடித்து வீழ்த்தினர். எப்படியோ காலையில் தொடங்கிய கலவரத்தை  மாலைப்பொழுதுக்குள் பிற இடங்களில் பரவாதபடி தடுத்து நிறுத்தினார் அரங்கசாமி ராஜா. காந்தியடிகளின் வழியில் மக்களுக்குத் தொண்டு செய்வதையே தன் கடமையெனக் கொண்டு வாழ்ந்த அரங்கசாமி ராஜா எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, 07.05.1950 அன்று அவர் மறைந்தார்.

 

 

(அரங்கசாமி ராஜா ராஜபாளையத்தில் 28.07.1886 அன்று பிறந்தார். தந்தையார் பெயர் இந்துகூரி பூபால்ராஜா. தாயார் பெயர் லட்சுமி அம்மாள். தொடக்கத்தில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு பணியாற்றினார். காந்தியடிகளின் வருகைக்குப் பிறகு, அவருடைய அகிம்சைக்கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்து தொண்டாற்றினார். ராஜபாளையத்தில் காங்கிரஸ் கிளையை அவரே முதன்முதலாகத் தொடங்கி, அதன் கருத்துகளை மக்களிடையில் பரப்பினார். கதர் உற்பத்தியில் ராஜபாளையம் சிறந்து விளங்க அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே முக்கியக் காரணமாகும். காந்தியடிகள் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உடல்நலக் குறைவின் காரணமாக 07.05.1950 அன்று மறைந்தார். அரங்கசாமி ராஜாவுடைய தியாக வாழ்க்கையை உலகத்தார் புரிந்துகொள்ளும் வண்ணம் ராஜபாளையத்தில் அவருடைய திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு அவர் பிறந்து நூறாண்டு நிறைவடைவதை ஒட்டி, எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் அவர் தொடர்பான தகவல்களைப் பெருமுயற்சி செய்து தேடியெடுத்துத் தொகுத்து ‘காந்தி இ.பூ.அரங்கசாமி ராஜா வாழ்க்கை வரலாறு’ என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டார்.)

 

(சர்வோதயம் மலர்கிறது – பிப்ரவரி 2026)