Home

Sunday, 12 April 2026

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.


முதலில் அவர் சொந்தமாக எழுதிய புத்தகங்களையும் மொழிபெயர்த்த புத்தகங்களையும் ஆண்டுவாரியாகப் பட்டியலிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அடுத்த நாளே அவருடைய வீட்டுக்குச் சென்று மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற (டாக்டர் ரகுராமன்) அவருடைய மகனைச் சந்தித்தேன். பிறகு அவரும் நானும் பாதுகாப்பாக வைத்திருந்த புத்தகப்பெட்டிகளைத் திறந்து, ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் ஒரு தாளில் வரிசைப்படுத்தி எழுதினோம். பிரசுரமான புத்தகங்கள் மட்டுமன்றி, பத்திரிகையில் வெளிவந்த சில அச்சுப்பிரதிகளின் தொகுப்பும் சில கையெழுத்துப் பிரதிகளும் இருந்தன. ஒவ்வொன்றும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு பைண்டிங் செய்யப்பட்டிருந்தது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டுக்குலையாமல் இருந்த அவற்றின் தோற்றத்தைக் காண வியப்பாக இருந்தது. அவற்றையெல்லாம் பாதுகாப்பாகத் திரட்டி வைத்த பெருமைக்குரியவர் தன் தந்தையே என்றார் ரகுராமன்.

நான் ஒரு பிரதியை எடுத்துப் பிரித்தேன். அது தாராசங்கர் பானர்ஜி என்னும் வங்க எழுத்தாளர் எழுதிய சப்தபதி என்னும் நாவலின் மொழியாக்கம். 1960இல் காவேரி என்னும் மாத இதழில் ஏழு மாத காலம் அந்த நாவல் தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது. காவேரி அறுபதுகளையொட்டி கும்பகோணத்திலிருந்து வெளிவந்த முக்கியமான பல்சுவை இலக்கிய இதழாகும். இவ்விதழின் தொகுப்புகளை கலைஞன் பதிப்பகம் நூலாகவும்  வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஓவியரொருவர் சித்திரம் தீட்டியுள்ளார். அந்தத் தொடர்கதை பிற்காலத்தில் புத்தகமாக வந்ததா இல்லையா என்பது தெரியவில்லை.

தாராசங்கர் பானர்ஜி என்னும் பெயரைப் பார்த்ததும், அந்த நாவலைப் படிக்கவேண்டும் என்னும் ஆவல் எழுந்தது. அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வரும்போது அந்தப் பிரதியையும் எடுத்துக்கொண்டேன். குறைவான பக்க அளவுள்ள புத்தகம் என்பதால் அன்று இரவே அதைப் படித்துவிட்டேன். நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

முதல் அத்தியாயத்தில் நமக்கு அறிமுகமாகிறவர் ஒரு பாதிரியார். மலைசூழ்ந்த கிராமங்களுக்கு நடுவில் அவர் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். எல்லாப் பாதிரியார்களும் வெள்ளை நிற உடைகளை அணிந்திருக்கும்போது அவர் மட்டும் காவி நிறத்தில்  உடை உடுத்தியிருக்கிறார். அது ஒரு விசித்திரமான தோற்றத்தை அவருக்கு அளிக்கிறது. அது மட்டுமல்ல, அவர் அந்த வட்டாரத்தில் உள்ள எந்த மாதா கோவிலோடும் தொடர்புகொண்டவரல்லர். எந்த மதப்பிரச்சாரத்திலும் அவர் ஈடுபடவும் இல்லை. அவர் மருத்துவம் தெரிந்தவர். அதனால் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கிறார். ஒரு மிதிவண்டியில் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு அவராகவே சென்று நோயாளிகளைச் சந்தித்து மருத்துவம் பார்த்து குணப்படுத்துகிறார். அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பித்துக்குளி பாதிரியார் என அழைத்தாலும் அவர் மீது அனைவரும் அன்பும் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள்.

அவர் எங்கிருந்து அந்த மலைப்பகுதிக்கு வந்தார், ஏன் அங்கேயே தங்கிவிட்டார் என்கிற விவரங்கள் எதுவுமே அங்கிருந்த மக்களுக்குத் தெரியாது. அவருடைய மருத்துவத்தொண்டு அங்கிருந்த பல உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால், பாதிரியார் மீது அனைவருக்கும் நல்ல மதிப்பு இருக்கிறாது. வெளியூர்க்காரர் என்றபோதும் அவரைத் தம் ஊர்க்காரராகவே அனைவரும் நினைத்து மதிப்பளித்துப் பழகுகிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. வங்காளத்தின் விளைச்சல் எல்லாம் போர்முனைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் செயற்கையாக உருவாக்கிய பஞ்சத்தில் வங்க மக்கள் பசியும் பட்டினியுமாகத் திரிகிறார்கள். கிராமத்துப் பாதைகள் வழியாக இராணுவ வாகனங்களும் ஆங்கிலேயர்களின் வாகனங்களும் செல்லத் தொடங்குகின்றன. எங்கேயாவது கிராமத்தினரைப் பார்த்துவிட்டால் அவர்கள் தம் கையிலிருக்கும் சில்லறைகளையும் பழத்துணுக்குகளையும் தோல்களையும் அவர்களை நோக்கி வீசிவிட்டுச் சிரிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அவற்றின் மீது பாய்ந்து விழுந்து சேகரித்து கைக்குக் கிடைத்த மிச்சம்மீதியை உட்கொள்கிறது. அதிகாரிகள் அங்கே ஒரு விமான தளத்தையும் உருவாக்கிவிடுகின்றனர். படைமுகாமும் உருவாக்கப்பட்டுவிடுகிறது.

நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருவதற்காக கிராமங்களிடையில் மிதிவண்டியில் செல்கிற சமயத்தில் அச்சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து கவலை கொள்கிறார் பாதிரியார். ஒருநாள் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, அந்த வீட்டு வாசலில் ஒரு வாகனம் வந்து நிற்கிறது.  ஒரு வெள்ளைக்காரன் சைகையாலே அவரிடம் அவசரமாக தண்ணீர் கொண்டுவருமாறு கேட்கிறான்.  வாகனத்தில் ஒரு பெண் அரைகுறையாக பிதற்றியபடி மயங்கிய நிலையில் சாய்ந்திருப்பதை பாதிரியாரும் பார்க்கிறார். அவளுக்குத்தான் உதவி தேவைப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறார். உடனே தண்ணீரை எடுத்துச் சென்று கொடுக்கிறார். அவள் தண்ணீரை வாங்கி அருந்துவதற்குள் மயங்கி விழுந்துவிடுகிறாள்.

சுயநினைவிழந்த அவளை வாகனத்திலிருந்து கீழே இறக்கி கட்டிலில் படுக்கவைத்து சோதித்துப் பார்க்கிறார் பாதிரியார். போதையும் வெயிலும்தான் மயக்கத்துக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்கிறார். அந்த வெள்ளைக்காரன் அவளை அருகிலிருக்கும் கடற்கரையில் சந்தித்ததாகவும் அவள் அப்போதே தன்னோடு கிளம்பி வந்துவிட்டதாகவும் சொல்கிறான். பாதிரியார் அளித்த முதல் உதவியைத் தொடர்ந்து அவளுக்கு நினைவு திரும்புகிறது. அக்கணமே அந்த வெள்ளைக்கார இளைஞனும் அவளும் சண்டையிடத் தொடங்கிவிடுகின்றனர். சிறிது நேரத்திலேயே இருவரும் புறப்பட்டுச் சென்றுவிடுகின்றனர்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் பாதிரியாரும் தம் இருப்பிடத்துக்குப் புறப்படுகிறார். அந்தப் பெண்ணின் முகம் அவரை அமைதியிழக்க வைத்துவிடுகிறது. அவருக்குத் தெரிந்த முகம் அது. பல ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவரோடு சேர்ந்து படித்தவள் அவள். பெயர் ரீனா ப்ரவுன். அவன் பெயர் கிருஷ்ண சந்திரன் என்கிற கிருஷ்ணேந்து. கல்லூரியில் ஒரு நாடகப்பயிற்சியின் போது நெருங்கிப் பழகத் தொடங்கி ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கியவர்கள் அவர்கள். ஆனால் அந்தக் காதல் நிறைவேறவில்லை.

அவள் ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் மகள். இன்னொரு வெள்ளைக்காரனுக்காக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவள். அவன் பெயர் கிளேடன். அவனும் அவர்கள் படித்த கல்லூரியில்தான் படித்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணேந்துவும் அவனும் நெருங்கிய நண்பர்கள் அவன். ஒருவகையில் ரீனாவுடன் நெருங்கிப் பழக அவனே காரணம்.

கிருஷ்ணேந்து கல்கத்தாவை அடுத்திருந்த ஒரு கிராமத்தில் வாழும் ஒரு பிராமண அர்ச்சகரின் மகன். அவன் குடும்பம் இறைநம்பிக்கையில் மூழ்கிய குடும்பமென்றாலும் அவனுக்கு ஆன்மிகம் சார்ந்து எவ்விதமான நம்பிக்கையும் இல்லை. ஒரு நாத்திகனாகவே அவன் வாழ்கிறான். சாதி, மதம் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ரீனாவைக் கைப்பிடிக்க தனுக்கு எவ்விதமான தடையும் இல்லை என அவன் நினைக்கிறான்.

மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு, நண்பரொருவரின் மருத்துமனையில்  மருத்துவராகப் பணிபுரியத் தொடங்குகிறான் கிருஷ்ணேந்து. எதிர்பாராத விதமாக மறைந்துபோன தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கிராமத்துக்குச் செல்கிறான் அவன். அங்கே சில நாட்கள் தங்கியிருந்து புறப்படுவதற்கு முன்னால் தன்னுடைய காதலைத் தன் தந்தையாரிடம் தெரிவிக்கிறார். பழைமைவாதியான அவனுடைய தந்தையார் கிருஷ்ணேந்துவின் காதலை ஒரு அத்துமீறலாகவே பார்க்கிறார். மதம் மாறித் திருமணம் செய்துகொள்வதை அவர் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.  ஆயினும் அவனுடைய சுதந்திரத்தில் தலையிட தனக்கு விருப்பமில்லை என்றும் தன் விருப்பம்போல அவன் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் பதில் சொல்லி அனுப்பிவிடுகிறார்.

கிருஷ்ணேந்துவைப்போலவே ரீனாவும் தன் பெற்றோரிடம் முறையாக தம் காதலைத் தெரிவிக்கிறாள். ஒரு கிறித்துவனை மட்டுமே தன் மருமகனாகத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் அவள் காதலை நிராகரிக்கிறார்.  ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த கிளேடனுனான சம்பந்தத்தைத் தொடரவே அவருக்கு விருப்பமாக இருக்கிறது. தந்தையின் முடிவை ஏற்றுக்கொள்ள விரும்பாத ரீனா வீட்டைவிட்டு வெளியேறி தொலைதூரமான ஒரு இடத்துக்குச் சென்றுவிடுகிறாள்.

எதிர்பாராத விதமாக கிளேடனின் பெற்றோர் முழுக்கமுழுக்க வெள்ளைக்காரத் தம்பதியினருக்குப் பிறந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்காகவே காத்திருக்கிறார்கள் என்னும் செய்தியும் வெள்ளைக்கார ஆணுக்கும் இந்தியப் பெண்ணுக்கும் பிறந்த மணமகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தியும் அவரை வந்தடைகின்றன. அந்த முடிவு அவரை நிலைகுலைய வைக்கின்றது.

அந்தக் கணத்தில்தான்  தன் காதலைத் தெரிவிப்பதற்காக ரீனாவின் வீட்டுக்கு வருகிறான் கிருஷ்ணேந்து.  ரீனா வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட செய்தியை அறிந்து வேதனைப்படுகிறான். ரீனாவின் தந்தை அவன் கிறித்துவனாக மதம் மாறினால் அவளைத் திருமணம் செய்துகொள்வதில் தனக்கு எதுவும் தடையில்லை என்று தெரிவிக்கிறார். காதலுக்காக அவன் மதம் மாற சம்மதிக்கிறான். தன் மதமாற்றம் ரீனாவுக்கு மகிழ்ச்சியளிக்கும் என அவன் எதிர்பார்க்கிறான். ஆதலால், தேவாலயத்தில் முறையான வழிபாட்டுக்குப் பிறகு அவன் கிறித்துவத்தைத் தழுவுகிறான். தானே ரீனாவைச் சந்தித்து செய்தியை சொல்லி அழைத்து வருவதாக அவள் தங்கியிருக்கும் நகரத்துக்கு ஆவலுடன் செல்கிறான். ஆனால் ரீனாவுக்கு அவன் மதம் மாறிய செய்தி பிடிக்கவில்லை. அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். கிருஷ்ணேந்து ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்படுகிறான்.

ஏமாற்றமும் வெறுப்பும் ரீனாவை கொஞ்சம்கொஞ்சமாக அழிக்கின்றன.  மதம், நம்பிக்கை, சடங்குகள், கடவுள் சார்ந்த எல்லா பற்றுகளையும் அவள் துறந்துவிட்டு மனம்போன போக்கில் சென்றுவிடுகிறாள். அவளுடைய முடிவைக் கேள்விப்பட்டு தொடக்கத்தில் திகைக்கும் கிருஷ்ணசாமி பிறகு மெல்ல மெல்ல பக்குவமடைகிறான். காதல் தோல்வியைக் கடந்துசெல்லும் வகையில் சேவை வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.

தன் மருத்துவ அறிவை, மருத்துவமே எட்டிப் பார்க்காத மலைவாழ் மக்களுக்காகப் பயன்படுத்தும் விதத்தில் நகரங்களைத் துறந்து மலைப்பகுதிக்கு வந்து சேர்கிறான். பொருள் செறிந்த தியாக வாழ்க்கையின் வழியாக காதல் தோல்வியிலிருந்து நாளடைவில் விடுபடுகிறான். அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிறான்.

குறிப்பிட்ட ஒரு மதத்துக்காக அல்லாது ஒட்டுமொத்தமான மானுடகுலத்துக்காக வாழ்வதையே ஒருவன் தன் இலட்சியமாகக் கொள்ளவேண்டும் என்கிற தெளிவு அவனுக்கு அமைதியை அளிக்கிறது. அந்த அமைதியால் ஏற்படும் மனநிறைவு அவனை வலிமைமிக்க மனிதனாகவும் பெருமைகொண்ட மனிதனாகவும் வாழவைக்கிறது.

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில்தான் ரீனா – பாதிரியார் சந்திப்பு மீண்டும் ஏற்படுகிறது. இப்போது ரீனா பழையபடி பக்தியில் மூழ்கியவளல்ல. முற்றிலுமாக நாத்திகத்தின் பக்கம் சாய்ந்துவிட்டவள். மது, போதை என வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவள். தன் பெற்றோரைப் பழிவாங்குவதாக நினைத்து, தனக்குத்தானே தீமையைத் தேடிக்கொண்டவள். அவளுக்காகப் பிரார்த்தனை செய்வதைத் தவிர, பாதிரியாருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

ஒருசில ஆண்டுகளிலேயே அங்குள்ள சூழலின் காரணமாக பாதிரியாரின் உடலில் தொழுநோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. எந்த நோயிலிருந்து அங்கு வாழ்ந்த பல பேரை அவர் காப்பாற்றினாரோ, அதே நோய்க்கு அவரே இரையாகிவிடுகிறார். ஒருநாள் அங்கு வாழ்ந்த அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு  அங்கிருந்து புறப்படுகிறார். கும்பகோணத்தை மையமாகக் கொண்ட ஒரு தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையத்துக்குச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு அந்த மலைக்கிராமத்திலிருந்து வெளியேறிவிடுகிறார்.

மையத்தில் அவரே ஒரு அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார். ஒருபக்கம் பிறருக்கு அவர் மருத்துவம் செய்கிறார். இன்னொரு பக்கம் தனக்குத் தேவையான மருத்துவத்தையும் பெற்றுக்கொள்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மையத்துக்கு ஒரு தம்பதியினர் வந்து பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்று விசாரிக்கிறார்கள். முதலில் அவர்கள் யார் என்பது பாதிரியாருக்குப் புரியவில்லை. It is the cause, it is the cause, my soul என்கிற பழைய ஒத்தெல்லோ நாடக வரியொன்றை அந்தப் பெண் மெல்ல முணுமுணுக்கிறாள். அதைக் கேட்டதும் வந்திருப்பவர்கள் கிளேடனும் ரீனாவும் என்பது அவருக்குப் புரிகிறது. அவர்கள் மீண்டும் சந்தித்த கதையையும் மனம் மாறி திருமணம் செய்துகொண்ட கதையையும் தெரிவிக்கின்றனர். கண்ணீருடன் அவர்களுக்கு ஆசி வழங்கி அனுப்பிவைக்கிறார் கிருஷ்ணேந்து என்கிற பாதிரியார்.

தியாக வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலுக்கு தாராசங்கர் பானர்ஜி மரபான வழியில் சடங்கு சார்ந்த சப்தபதி என்னும் தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை உடனடியாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து அதைப்பற்றியே யோசித்தபடி இருந்தேன். ஒருநாள் அதற்கு விடை கிடைத்தது. நெருப்பை சாட்சியாக வைத்து ஒரு பெண்ணோடு ஏழு அடிகள் எடுத்துவைத்து, ஒவ்வொரு அடிக்கும் ஒரு வாக்குறுதியை அளிக்கும் மரபான சடங்குதான் சப்தபதி என்று அழைக்கப்படுகிறது. இச்சடங்கின் வழியாக இந்தப் பிறவியிலும் மறுபிறவியிலும் ஒருபோதும் பிரிக்கமுடியாத அளவுக்கு இல்வாழ்க்கையைத் தொடங்கும் இருவருக்குமிடையில் வலுவானதொரு உறவு ஏற்பட்டுவிடுகிறது என்பதுதான் அச்சடங்கின் பொருள்.

இல்லற வாழ்க்கைக்குரிய சப்தபதியை தாராசங்கர் பானர்ஜி தியாக வாழ்க்கைக்கும் உரிய ஒன்றாக மாற்றியமைக்கிறார். ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ தனதாக்கிக்கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக நிற்கும் இலட்சிய வாழ்க்கையைவிட, ஒட்டுமொத்தமாக மனித குலத்தையே தனதாக்கிக்கொண்டு அதன் உயர்வுக்காகவும் நலனுக்காகவும் காலமெல்லாம் வாழ்ந்து துணைநிற்கும் இலட்சியம் மிகமிகப்பெரியது என்பதைத்தான் இத்தலைப்பின் வழியாக தாராசங்கர் பானர்ஜி  சொல்லாமல் சொல்கிறார் என்று தோன்றுகிறது. இது இல்வாழ்க்கைக்கான சப்தபதி அல்ல. தியாக வாழ்க்கைக்கான சப்தபதி.

சரத்சந்திரரின் தேவதாஸ் நாவலைத் தொடர்ந்து காதல் தோல்வி கதைகள் இந்தியாவெங்கும் எழுதப்பட்டன. காதல் தோல்வி என்றதுமே அந்தப் பயணம் மரணத்தை நோக்கியதாக இந்தியப் புனைவுலகம் கட்டமைத்தது. எல்லா மொழிகளிலுமே அந்தக் கருத்தாக்கம் பரவி, எங்கெங்கும் நீக்கமற நிறையத் தொடங்கியது. அப்போதுதான் தாராசங்கர் பானர்ஜியின் படைப்புகள் இன்னொரு வடிவத்தை முன்வைக்கத் தொடங்கின.

காதல் தோல்வியை மன உறுதியோடு எதிர்கொண்டு அதைவிட உயர்ந்த தியாக வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் உயர்ந்ததொரு கொள்கை தாராசங்கர் பானர்ஜியுடைய படைப்புகள் வழியாக அனைவரையும் சென்று சேர்ந்தது. தியாகத்தின் வழியாக இன்னொரு சிறந்த வாழ்க்கையை வாழ முடியும் என்பதை தாராசங்கர் பானர்ஜியின் படைப்புகள் உலகுக்கு உணர்த்தின.

1953இல் வெளிவந்த அவருடைய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவல் மிகச்சிறந்ததொரு செவ்வியல் படைப்பு. அந்த நாவலில் இடம்பெறும் ஜீவன் மஷாய் என்னும் பாத்திரமும் ஒரு மருத்துவர். அவருடைய குடும்பம் மூன்று தலைமுறைகளாக பாரம்பரிய வைத்தியசாலையை நடத்தி வருகிறது. அந்தத் தருணத்தில் அறிமுகமான அலோபதி மருத்துவத்தின் பெருமை நாடெங்கும் வேகமாகப் பரவி பாரம்பரிய வைத்தியத்தின் பெருமை மெல்ல மெல்ல கீழிறங்கத் தொடங்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை மீண்டும் இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு நெருக்கடியான தருணத்தில் ஜீவன் மஷாய் அந்த வைத்தியசாலையின் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.

மஷாய் உயிருக்குயிராகக் காதலித்த மஞ்சரி என்னும் பெண் வேறொரு பண்ணையாரைத் திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறார். காதல் தோல்வியால் மஷாய் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகிறார். குடும்பத்தினரே ஏற்பாடு செய்து நடத்திவைக்கும் திருமணமும் அவருக்கு ஆறுதலை அளிக்கவில்லை. தன் காதல் தோல்வியையும் இல்லறத்தோல்வியையும் இதயத்தின் ஆழத்தில் புதைத்துவிட்டு, வைத்தியசாலையின் பெருமையை நிலைநாட்டுவதையே தன் பிறவிக்கடமையாக நினைத்து, அந்த முயற்சியில் ஈடுபட்டு அல்லும்பகலும் உழைக்கிறார். இறுதியில் அவருடைய உழைப்புக்கு வெற்றி கிடைக்கிறது. அவர் வாழ்ந்த தியாக வாழ்க்கையை பொருள் செறிந்த ஒன்றாக இந்த உலகம் பார்க்கிறது.

ஆரோக்கிய நிகேதனத்தின் வழியில் 1958இல் அவர் எழுதிய சப்தபதி என்னும் நாவல் ஆங்கிலக்கல்வி வழியாக அடைந்த மருத்துவப்படிப்பின் வழியாக மலைவாழ் மக்களுக்குச் சேவை புரியும் கிருஷ்ணேந்து என்கிற பாதிரியாரும் இந்த உலகில் மகத்தானதொரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டார். காதலின் மதிப்பைவிட தியாகத்தின் மதிப்பு உயர்வானது என்பதை அவருடைய படைப்புகள் இந்த உலகுக்கு உணர்த்தியவண்ணம் உள்ளன.

1953இல் வெளிவந்து சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆரோக்கிய நிகேதனம் தமிழுக்கு த.நா.குமாரசாமி வழியாக 1972இல் வந்தது. ஆயினும் இரண்டாவதாக 1958இல் தாராசங்கர் பானர்ஜி எழுதி வெளிவந்த சப்தபதி 1960ஆம் ஆண்டிலேயே தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்துவிட்டது. அதற்கான பெருமை முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களையே சேரும்.

 

(சப்தபதி – வங்க நாவல். மூலம்: தாராசங்கர் பானர்ஜி. தமிழில்: சரஸ்வதி ராம்நாத். 1960)

 

(அம்ருதா – ஏப்ரல் 2026)