Home

Sunday, 26 April 2026

அழுத்தமான கேள்வி

 

இரண்டாயிரமாவது ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கடலூரைச் சேர்ந்த நண்பர் வளவ.துரையன் தம்முடைய இலக்கிய அமைப்பின் சார்பாக என் படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னுடைய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் சார்ந்து அவர் அமர்வுகளை ஒழுங்கு செய்திருந்தார். கடலூரைச் சேர்ந்த சில பேச்சாளர்களும் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம் என அருகிலிருந்த நகரங்களிலிருந்து வந்திருந்த சில பேச்சாளர்களும் ஒவ்வொரு அமர்விலும் விரிவாக உரையாற்றினார்கள்.

அவர்களில் ஒருசிலர் மட்டுமே எனக்கு அறிமுகமானவர்கள். பிறர் புதியவர்கள்.  அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டவர்களிலும் பல புதிய வாசகர்கள் இருந்தனர். நிகழ்ச்சி மாலையில் முடிந்ததும் அனைவரும் தேநீர் அருந்தினோம். அப்போது ஓர் இளம் தம்பதியினர் என்னை நெருங்கிவந்து தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.  தமக்கு வாசிக்கக் கிடைத்த என்னுடைய சில புத்தகங்களைப்பற்றி அவர்கள் சுவாரசியமாக சிறிது நேரம் உரையாடினர். அவர்களுடைய ஆர்வமும் விரிவான வாசிப்பனுபவமும் நினைவிலிருந்து கதைகளின் பல பகுதிகளை அவர்கள் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் ரகுராமன் – ஜெயஸ்ரீ தம்பதியினர்.

ரகுராமன் வங்கியில் பணிபுரிபவர். ஜெயஸ்ரீ ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் பணிபுரிபவர். அவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே நெருங்கிவந்து உரையாடலில் பங்கேற்ற நண்பர் வளவ.துரையன் அத்தம்பதியினரின் வாசிப்பனுபவங்களைப்பற்றி இன்னும் கூடுதலான தகவல்களைத் தெரிவித்தார். அப்படித்தான் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அந்த நட்பு இன்று வரையில் தொடர்கிறது.

தொடக்கத்தில் ஜெயஸ்ரீயிடமிருந்து ஒவ்வொரு வாரமும் எனக்குக் கடிதம் வரும். அந்த வாரத்தில் அவர் படித்த ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றியோ அல்லது ஏதேனும் ஒரு சிறுகதையைப்பற்றியோ தம் வாசிப்பு அனுபவத்தைக் குறிப்பிட்டு எழுதுவார். அப்படைப்புகள் சார்ந்து அவர் மனத்தில் எழும் கேள்விகளையும் தெரிவிப்பார். அக்கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நான் உடனடியாக அவருக்கு ஒரு கடிதம் எழுதுவேன். சில சமயங்களில் அப்போது புதிதாக வெளிவந்த புத்தகத்தைப்பற்றியோ அல்லது நான் பார்த்த நாடகங்கள் அல்லது திரைப்படங்கள் பற்றியோ விரிவாக எழுதுவேன்.  ஏதோ ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாக அக்கடிதங்கள் அமைந்திருக்கும். கைபேசி இன்னும் வராத காலம் அது. கடிதம் ஒன்றே கருத்துப் பரிமாற்றத்துக்குத் துணையாக இருந்த காலம். மூன்று நான்கு ஆண்டுகள் இப்படி தொடர்ச்சியாக நான் அவருக்குக் கடிதங்களை எழுதினேன்.

அக்காலத்தில் தன் கடிதங்களில் வாசிப்பனுபவம் சார்ந்து பகிர்ந்துகொள்ளும் விதமாக ஜெயஸ்ரீ எழுதிய பல பகுதிகளில் படைப்பூக்கத்தோடு எழுதப்பட்ட பல வரிகளைப் படித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். ஒரு சங்கதியைக் கவனிக்கும் விதத்திலும் அதை எழுத்தின் வழியாக முன்வைக்கும் விதத்திலும் அவருக்கே உரிய ஒரு தனித்தன்மை இருப்பதையும் அவருடைய பார்வைக்கோணம் ஒரு படைப்பாளிக்கே உரிய நுட்பத்துடன் இருப்பதையும்   என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைக் கண்டுணர்ந்த அன்றே சொந்த எழுத்து முயற்சிகளில் அவர் இறங்கவேண்டும் என்று அவருக்குத் தெரிவித்தேன்.

ஆயினும் ஜெயஸ்ரீக்குள் ஏதோ ஒரு தயக்கம் தடுத்தபடி இருந்தது. அதனால் நானே ஒரு மாற்றுவழியைக் கண்டுபிடித்து, படித்தவற்றில் பிடித்த புத்தகங்களைப்பற்றி வாசிப்பனுபவக்கட்டுரையை எழுதும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அப்போது அவருக்கு நல்ல மேடைப்பேச்சு அனுபவம் இருந்தது. அவர் பணிபுரிந்த நிறுவனம் சார்ந்த தொழிற்சங்கத்தின்பால் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக செய்திகளைத் தொகுத்துக்கொள்வதிலும் அவற்றை நேர்த்தியாக முன்வைப்பதிலும் அவருக்கு ஒரு பயிற்சி தானாகவே கைகூடியிருந்தது. அந்தப் பயிற்சியின் உதவியோடு அவர் மிகவும் கச்சிதமான வடிவத்தோடு புத்தக அறிமுகக்கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.  அவை அச்சிதழிலும் இணைய இதழிலும் சீரான இடைவெளியில் வெளிவந்தன.

தம் எழுத்து முயற்சிகளுக்கு பிரசுர சாத்தியம் இருப்பதை உணர்ந்துகொண்டதும் அவரே வேகமாகச் செயல்படத் தொடங்கினார். எழுதி எழுதி மொழி பழகிய பிறகு அவருடைய படைப்புமனம் தாமாகவே படைப்பு முயற்சியில் இறங்கியது. அவர் எழுதிய முதல் சிறுகதை கோவை ஞானி தன்னுடைய தமிழ்நேயம் பத்திரிகை சார்பாக நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றது. கோவை ஞானி அவரைப் பாராட்டி ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அந்த வெற்றியும் பிரசுரமும் அவரை மேன்மேலும் ஊக்கம் கொள்ள வைத்தன. பிறகு எவ்விதமான புறத் தூண்டுதலுக்கும் அவசியமின்றி அவருக்குள் படைப்பூக்கம் நிறைந்து வரும் தருணத்தில் அவராகவே எழுதத் தொடங்கிவிட்டார். (கெடுவாய்ப்பாக, அந்த முதல் சிறுகதையின் கையெழுத்துப் பிரதியோ அல்லது அச்சுப்பிரதியோ அவரிடம் இல்லை. என்னிடமும் இல்லை.)

எழுதத் தொடங்கி ஏராளமான ஆண்டுகள் ஓடிவிட்டபோதும், ஜெயஸ்ரீக்குத் தான் எழுதியவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கும் எண்ணம் இப்போதுதான் எழுந்துள்ளது. அவர் எழுதிய பத்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி  அவருடைய முதல் நூலாக வெளிவருவதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

எதார்த்த வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முனைப்போடு பாடுபடும் பெண்கள் ஜெயஸ்ரீயின் சிறுகதைகளில் நிறைந்திருக்கிறார்கள். அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண், வங்கியில் பணிபுரியும் பெண், குடும்பப்பொறுப்புகளை நிறைவேற்றப் பாடுபடும் பெண், படித்த பெண், படிக்காத பெண் என பலவிதமான பெண்களின் உலகத்தை ஜெயஸ்ரீயின் சிறுகதைகள் சித்தரிக்கின்றன. எதிர்பாராத வகையில் வாழ்வில் துயரம் கவியும் தருணங்களில் கூட  தன்னிரக்கத்தில் ஆழ்ந்து சுருங்கிவிடாதவர்களாகவும் மன உறுதியுடன் எதிர்கொண்டு அத்துயரத்தை வெற்றிகொள்ள முற்படுகிறவர்களாகவும் அப்பெண்கள் இருக்கிறார்கள். எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த போதும் அப்பெண்கள் ஒரு தருணத்தில் கூட தம்  நேர்நிலையான இயல்பை இழப்பதில்லை. எழு, எதிர்கொள் என்பதே ஜெயஸ்ரீ சித்தரிக்கும் பெண்களின் பார்வையாக இருக்கிறது.

பல இடங்களில் அப்பெண்கள், கொஞ்சம் கூட பொறுப்பில்லாத, வக்கிரம் நிறைந்த, மகளிடம் கூட தவறாக நடக்க முனையும் அளவுக்குப் போதையில் அமிழ்ந்திருக்கிற கணவன்மார்களிடம் சிக்கித் தவிக்கிறவர்களாகவும்  இருக்கிறார்கள். அத்தகு மோசமான சூழல்களில் கூட அப்பெண்களின் நெஞ்சில் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும்   எப்படியாவது மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்குத் தகுதியுள்ளவர்களாக வளர்த்து ஆளாக்கும் கனவுகளே நிறைந்திருப்பதை ஜெயஸ்ரீ தன் படைப்புகள் வழியாக வெளிப்படுத்துகிறார். அழுக்குப் படிந்த தரையைத் தண்ணீர்விட்டுக் கழுவித் தூய்மை செய்துவிடுவதுபோல, அப்பெண்கள் கசப்பான அனுபவங்களைக் கழுவித் தள்ளிவிட்டு அடுத்த வேலைகளில் ஈடுபட்டு தம்மை மறந்துவிடுகிறார்கள்.

சாவித்திரி சத்தியவான் என்றொரு சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. கணவன் மனைவி இருவருமே வங்கி ஊழியர்கள். நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வகைகளில் சூழல் சாதகமாக இருந்தபோதும் சூது, மது என தீய வழிகளில் இறங்கி உல்லாசமாக இருக்க விரும்பும் கணவனின் நடத்தையால் குடும்பம் வேகவேகமாக கீழ்நோக்கிச் சரிந்துசெல்கிறது. மனைவியின் எச்சரிக்கைச்சொற்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகின்றன.  வங்கியில் பணம் கையாடல்  விவகாரத்தில் பலமுறை சிக்கிக்கொள்கிறான் அவன். ஒவ்வொரு முறையும் கடன் வாங்கியும்  நகையை விற்றும் பணத்தைத் திரட்டி எடுத்துச் சென்று கட்டி அவனை மீட்டெடுக்கிறாள் மனைவி.

ஒரு கட்டத்தில் அவளால் மீட்கமுடியாத அளவுக்கு அவன் பெருங்குற்றத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்ல நேர்கிறது. வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்கிறது. ஒரு குறிபிட்ட நாளில் அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வர உள்ளது. அவள் நீதிமன்றத்துக்குச் சென்று அவனைக் காப்பாற்றப் போகிறாளா அல்லது இயற்கையாகவே அளித்திருக்கும் தண்டனையை அவன் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடப் போகிறாளா என்கிற கேள்வியோடு அன்றைய பொழுது விடிகிறது. அந்தக் கேள்வியோடுதான் ஜெயஸ்ரீ தன் சிறுகதையை முன்னெடுத்துச் செல்கிறார். அவள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இயற்கையின் வழியில் குறுக்கிட வேண்டாம் என முடிவெடுத்து இறந்துபோன மகன் நினைவாக சிறார் இல்லத்துக்குச் செல்ல முடிவெடுக்கிறாள்.

’வீட்டால் திருத்த முடியாதவனை ஊர் திருத்தும், ஊரால் திருத்த முடியாதவனை உலகம் திருத்தும்’ எனக் கிராமத்தில் புழங்கும் சொல்லாடல் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் புழுங்கிப்புழுங்கித் தவிக்கும் ஒரு பெண் இதைவிட ஒரு சிறந்த முடிவை எடுக்கமுடியாது.

தலைப்புக்கதையான ராகமாலிகையில் இடம்பெறும் சீதா பாடும் ஆற்றல் கொண்டவளாக இடம்பெற்றிருக்கிறாள். அவளுடைய குரலின் இனிமையால் கவரப்படும் பாலா அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாடவைத்து மகிழ்கிறாள். ’நானொரு விளையாட்டுப் பொம்மையா’ என்னும் பாடலை சீதா மனமுருகிப் பாடுவதாக ஒரு குறிப்பு சிறுகதையில் இடம்பெற்றுள்ளது. தொடுதிரை என்பது இன்னொரு சிறுகதை. அக்கதையில் இடம்பெறும் மதுமதி என்பவரும் பாடும் ஆற்றல் நிறைந்தவர். அவரும் ஒரு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பாடும்போது ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா’ என்னும் பாடலைத்தான் பாடுகிறார்.

இது ஒரு தற்செயலான ஒற்றுமைதான். ஆயினும் பாடும் பெண்கள் அப்பாடலை ஏன் உடனடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான உளவியல் கேள்வி.

இன்றைய சமூகத்தில் உள்ள குடும்ப அமைப்பும் உறவு அமைப்பும் பெண்ணின் மதிப்பையும் பெருமையையும் கிஞ்சித்தும் உணராத அல்லது மதிக்கவே மதிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பது கசப்பான உண்மை. அந்தக் கசப்பையே இனிப்புச்சாறாக நினைத்து விழுங்கி ஒரு புன்னகையால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மீறி வந்து நிற்கும் பெண்ணின் நெஞ்சில் தான் ஒரு விளையாட்டுப்பொம்மையாகத்தான் மதிக்கப்படுகிறோம் என்கிற  வேதனையின் பாரம் நிறைந்திருக்கிறது. அந்த வேதனையை வெளிப்படுத்தி சிறிது நேரமாவது தன் மனப்பாரத்தை இறக்கி வைத்து லேசாக்கிக்கொள்கிற முயற்சியாகவே பெண்கள் அப்பாடலைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கடவுளை முன்னிலைப்படுத்திப் பாடப்படும் பாடல் என்பதால் அந்த வருத்தத்தின் இழையை அவர்களால் எளிதாக மறைத்துக்கொள்ளவும் முடிகிறது. பாடத் தெரிந்த பெண்கள் அப்பாட்டின் வழியாக தன் மனப்பாரத்தைக் கரைத்துக்கொள்ள முயற்சி செய்யும்போது பாடத் தெரியாத பிற பெண்கள் தமக்குகந்த வழிகளில் அந்த மனப்பாரத்தைக் கரைத்துக்கொள்கிறார்கள். ’நானொரு விளையாட்டுப்பொம்மையா’ என்னும் கேள்வி சீதாவோ, மதுமதியோ அல்லது பிற கதைகளில் இடம்பெறும் பெண்களோ எழுப்பும் கேள்வி மட்டுமல்ல.  சிறுகதை எழுத்தாளரான ஜெயஸ்ரீ இந்தத் தமிழ்ச்சமூகத்தின் முன்வைத்திருக்கும் கேள்வி. இதற்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?

தன் முதல் சிறுகதைத்தொகுதியின் வழியாக தமிழ்ச்சிறுகதை உலகில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் ஜெயஸ்ரீக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

 

(எஸ்.ஜெயஸ்ரீ அவர்களுடைய ராகமாலிகை என்னும் சிறுகதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை)