காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர். மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.
இந்தியாவில் உள்ள எல்லா ஆறுகளையும் அருவிகளையும் தேடிச் சென்று
பார்த்து பெற்ற அனுபவங்களைத் தொகுத்து, அவர்
’ஜீவன்லீலா’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது தமிழில் பி.எம்.கிருஷ்ணசாமி
என்பவருடைய மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமியின் வெளியீடாக பல ஆண்டுகளுக்கு முன்பாக
வந்தது.
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அது. அந்தப் புத்தகம் ஊட்டிய
ஆர்வத்தின் விளைவாக அவர் வழியிலேயே நானும் பல ஆறுகளையும் அருவிகளையும் தேடிச் சென்று
பார்த்து மகிழ்ந்தேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோது, அவர் இமயமலைக்கு ஒரு
நடைப்பயணம் சென்றதைப்பற்றியும் அந்தப் பயண அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக எழுதியிருப்பதைப்பற்றியும்
படித்தேன்.
ஜீவன் லீலா கொடுத்த உற்சாகத்தில் அந்தப் புத்தகத்தையும் தேடிப்
படிக்கவேண்டும் என எனக்குள் ஆசை பெருகியது. உடனே அதைத் தேடத் தொடங்கினேன். எங்கும்
கிடைக்கவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு என் கைக்குக்
கிடைத்தது. உடனே அதை வாங்கிப் படித்துமுடித்தேன். அந்தப் பரவசத்திலேயே பல நாட்கள் திளைத்திருந்தேன்.
ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போது காகா காலேல்கருடன் இணைந்து நானும் நடந்து செல்வதுபோன்ற
எண்ணம் எழுந்தது. அப்போதே அப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் எண்ணம் ஒரு விதையாக
என் நெஞ்சில் விழுந்தது. முறையான அனுமதியைப் பெற்று, அடுத்த ஆறு மாதங்களில் அந்தப்
புத்தகத்தை ‘இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்து முடித்தேன்.
சாகித்திய அகாதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் என் மொழிபெயர்ப்பைப்
புத்தகமாக வெளியிட்டது. என்னைப்போலவே விட்டல்ராவும் பயணங்களில் விருப்பமுள்ளவர் என்பதாலும்
அந்தப் பயணநூல் அவருக்குப் பிடிக்கக்கூடும் என்ற எண்ணத்தாலும் அவருக்கு ஒரு பிரதியை
எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டுமூன்று வார இடைவெளிக்குப் பிறகு அவரைச்
சந்திக்கச் சென்றிருந்தபோது புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு
நடந்த நிகழ்ச்சிகள் நிறைந்த அப்புத்தகம் நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
“அந்தக் காலத்துல ஏ.கே.செட்டியாருடைய பயணநூல்களைப் படிச்சிருக்கேன்.
காகா காலேல்கர் புத்தகத்தைப் படிச்சதும் அதுதான் ஞாபகம் வந்தது. இமயமலையில அவரும் அவருடைய
நண்பர்களும் நடந்துபோகிற காட்சியை ஒவ்வொரு வரியிலயும் என்னால உணரமுடிஞ்சது”
வாசிப்பில் தனக்குப் பிடித்தமான பல இடங்களைக் குறிப்பிட்டு நீண்ட
நேரம் பேசினார் விட்டல்ராவ்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு “நான் உங்களுக்கு எஸ்.வி.எஸ்.ங்கற
ஓர் எழுத்தாளரைப்பத்தி சொல்லியிருக்கேன், இல்லையா? தக்கர்பாபா வளாகத்துல முதல்முதலா
நூலகத்தை உருவாக்கியவர்” என்று பேசத் தொடங்கினார்.
“சொல்லுங்க சார். எழுத்தாளர் எஸ்.வி.சுப்பிரமணியன்தானே? நல்லாவே
ஞாபகம் இருக்குது. நீங்களும் சா.கந்தசாமியும் அசோகமித்திரனும் ஆளாளுக்கு அம்பது நூறு
புத்தகங்களை எடுத்துட்டு போய் அந்த நூலகத்துக்கு அன்பளிப்பா கொடுத்ததா சொல்லியிருக்கீங்க”
என்றேன்.
“அவரேதான். அவரேதான்” என்று விரலை உயர்த்தினார் விட்டல்ராவ்.
“அந்தக் காலத்துல அந்த நூலகத்துக்கு இராஜாஜி நூலகம்னுதான் பேரு.
அந்த நூலகத்துல ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாள்ல் சாயங்கால நேரத்துல யாராவது
ஒருவர் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்திப் பேசற மாதிரி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்
எஸ்.வி.எஸ். அசோகமித்திரன், சா.கந்தசாமி, க.நா.சு.
எல்லாம் அந்தக் கூட்டத்துல பேசியிருக்காங்க.”
“சரி”
“ஒரு நாள் எஸ்.வி.எஸ். என்கிட்ட ஒரு புத்தகத்தைக் கொடுத்து இதைப்
படிச்சிட்டு அடுத்த வாரம் நீங்க பேசுங்கன்னு சொன்னாரு. ஏதாச்சிம் புது நாவலா இருக்கும்னு
நெனச்சி நானும் ரொம்ப ஆவலோடு அந்தப் புத்தகத்தை வாங்கிப் பிரிச்சேன்”
“என்ன புத்தகம் சார்?”
“நான் நினைச்ச மாதிரி நாவலோ, சிறுகதைத்தொகுதியோ கிடையாது. சபரிமலைக்குப்
போகிற பயணத்தைப் பத்திய புத்தகம். அதனுடைய தலைப்பு சபரிமலைப்பயணமா, அய்யப்பமலைப்பயணமாங்கறது
சரியா ஞாபகம் இல்லை. காகா காலேல்கருடைய இமயமலைப்பயணம்
மாதிரி அதுவும் ஒரு பயணநூல்”
“மொழிபெயர்ப்பா?”
“இல்லை இல்லை. நேரிடையாவே தமிழில எழுதன புத்தகம்தான். ஒரு கோயில்
பயணத்தைப்பத்தி நாம என்ன பேசறதுன்னு எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்தது. அதனால எஸ்.வி.எஸ்.கிட்ட
இது என்னமோ பார்க்கறதுக்கு பக்திப்புத்தகம் மாதிரி இருக்குது சார், இதைப் பத்தி நான்
எப்படிப் பேசறதுன்னு மெதுவா தயங்கித் தயங்கிக் கேட்டேன். அவரு சிரிச்சிகிட்டே என் தோளைத்
தட்டிக் கொடுத்தாரு. புத்தகத்துடைய தலைப்பைப் பார்த்து அப்படி ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க.
படிச்சி முடிச்சிங்கன்னா, நீங்களே பல பேருகிட்ட அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்னு சிபாரிசு
பண்ணுவீங்க. அந்த அளவுக்கு ரொம்ப சுவாரசியாமன புத்தகம்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாரு”
“அப்படியா? படிச்சி முடிச்சதும் உங்களுக்கு எப்படி தோணிச்சி?”
“சின்ன புத்தகம்தான் அது. நூத்திநாப்பது, நூத்தியம்பது பக்கம்தான்
இருக்கும். ரெண்டு நாள்லயே படிச்சிட்டேன். எஸ்.வி.எஸ்.சொன்னது நூத்துக்கு நூறு உண்மைன்னு
அப்பதான் புரிஞ்சது. அந்தப் புத்தகத்துல இருந்த ஒவ்வொரு கட்டுரையும் அற்புதமான அனுபவக்கட்டுரை.
ஒரு அனுபவக்கட்டுரையை எப்படி எழுதணும்ங்கறதுக்கு இலக்கணம் மாதிரி அமைந்த கட்டுரைகள்.
காகா காலேல்கர் கட்டுரையை படிக்கறபோது எனக்கு அந்த சபரிமலைப்பயணம் புத்தகம்தான் ஞாபகத்துக்கு
வந்தது”
“யாரு எழுதன புத்தகம் சார்?”
“பரந்தாமன்னு ஒரு எழுத்தாளர். அந்தக் காலத்துல துக்ளக் பரந்தாமன்னு
சொல்வாங்க”
ஒருகணம் அந்தப் பெயரை மனத்துக்குள் அசைபோட்டேன். நான் படித்த
எழுத்தாளர்களின் பட்டியலில் அந்தப் பெயர் இல்லை. “தெரியலை சார்” என்றேன்.
“அவரு பத்திரிகையிலயே அதிக காலம் இருந்ததால அதிகமா எழுதலை. ஒன்னு
ரெண்டு மட்டும்தான் எழுதியிருக்காரு. அவரு யாருன்னு சொன்னா, நீங்க ஆச்சரியப்படுவீங்க”
“யாரு சார்?”
“சுந்தர ராமசாமி இருக்காரே, அவருடைய தாய்மாமன்”
அதைக் கேட்டதும் என் மனம் சுறுசுறுப்படைந்தது. “அந்தப் பேரை
சுந்தர ராமசாமி ஒருசில கட்டுரைகள்ல குறிப்பிட்டிருக்கறாரு சார். அது ஞாபகம் இருக்குது”
என்றேன்.
”எனக்கும் அந்தப் புத்தகத்தைப் படிச்சி முடிக்கிறவரைக்கும் யாருன்னு
தெரியாது. அந்தப் பரந்தாமனும் அந்தக் கூட்டத்துலதான் இருந்தாரு. நான் பேசி முடிச்சதும்
அவரை அழைச்சி எஸ்.வி.எஸ்.தான் எனக்கு அறிமுகப்படுத்தினாரு. அப்பதான் அவர் தன்னை சுந்தர
ராமசாமியுடைய தாய்மாமன்னும் என்.எஸ்.கே.கிட்ட ஒரு காலத்துல வேலை செஞ்சயும் தற்சமயத்துல
துக்ளக்ல வேலை செய்யறதையும் சொன்னாரு ”
”சரி. புத்தக அறிமுகக்கூட்டம் எப்படி நடந்தது?” என்று கேட்டு
நான் மீண்டும் அவரைப் பழைய நினைவை நோக்கிச் செலுத்தினேன்.
“ஆமாம். நல்லா படிச்சி குறிப்புகள் எல்லாம் எடுத்து வச்சிகிட்டு,
ஒரு முக்கால் மணி நேரம் நான் அந்தப் புத்தகத்தைப் பத்தி பேசினேன். அந்த உரை எல்லாருக்கும்
பிடிச்சிருந்தது. எனக்கும் ஒப்புக்கொண்ட வேலையை திருப்தியா செஞ்சோம்னு ரொம்ப மனநிறைவா
இருந்தது”
“சபரிமலைப்பயணம் ஒரு புத்தகமா எழுதற அளவுக்கு ரொம்ப நீண்ட பயணமா
சார்?” என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன்.
“இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டுமூனு நாள்ல ஐயப்பன் கோவிலுக்குப்
போய்ட்டு வராங்க. ஆனா அந்தக் காலத்துல அந்த மாதிரியெல்லாம் இல்லை பாவண்ணன். நடந்துதான்
போகணும். நடந்துபோற பாதைக்குப் பெருவழிப்பாதைன்னு பேரு. கிட்டத்தட்ட அறுபது கிலோமீட்டர்.
காட்டு வழி. கல்லும் முள்ளும் நெறஞ்ச இடம். ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து
நடக்கணும். போய்ச் சேர ஒரு வாரம் ஆகிடும். அப்புறம் திரும்பி வர இன்னொரு வாரம். சபரிமலைப்பயணம்னு
சொன்னா அந்தக் காலத்துல கிட்டத்தட்ட ரெண்டு வாரப்பயணம்”
“முழுக்க முழுக்க நடைப்பயணம்தானா?”
“நடந்துதான் போயாகணும். சபரிமலைப் பயணத்துல அதுதான் விதி. எருமேலின்னு
ஒரு இடம். அந்த இடத்துலேர்ந்து நடக்க ஆரம்பிக்கணும். அது தெய்வம் மஹிஷியைக் கொன்னு
வீசிய இடம்னு ஒரு நம்பிக்கை. மஹிஷின்னா எருமை. உண்மையான பேரு எருமைவேலி. சொல்லிச் சொல்லி
நாக்குப் பழக்கத்துல எருமேலின்னு ஆயிட்டுது. அங்க ஒரு பெரிய சாமி உக்காந்திருப்பாரு.
அந்த இடத்துக்கு வரக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும் விபூதி பூசி ஆசீர்வாதம் செஞ்சி அனுப்பி
வைப்பார் அவர். அவருகிட்ட விபூதி பூசிக்காம நீங்க நடைப்பயணத்தைத் தொடங்கமுடியாது. அவரு
இருமுடியை இறக்கி வச்சிட்டாருன்னா, யாரா இருந்தாலும்
திரும்பிப் போகவேண்டியதுதான். அவருடைய ஆசியோடு அந்தப் பயணம் தொடங்குது”
“ஆச்சரியமா இருக்குது சார்”
“புத்தகத்துல இப்படி படிச்சி ஆச்சரியப்படறதுக்கு ஏராளமான செய்திகள்
இருந்தது. நடந்துபோற வழியில அழுதைன்னு ஒரு நதி உண்டு. அங்க பக்தர்கள் எல்லாரும் இருமுடியை
எறக்கி வச்சிட்டு குளிக்கறாங்க. குளிச்சி முடிச்சி எழுந்து வரும்போது அந்த நதியில மூழ்கி
ஒரு கல்ல எடுத்து மடியில கட்டிக்கறாங்க. அதை யாரும் கீழ போடக்கூடாது. சரணம் சரணம்னு
சொல்லிகிட்டே நடக்கணும். அடுத்ததா ஒரு குன்று வரும். அந்தக் குன்றுல அந்தக் கல்லை எடுத்து
வச்சிடணும். அது ஒரு சடங்கு.”
“சரி”
“அதுக்கப்புறம் ஒரு இடத்துல பத்ரகாளி கோயில் உண்டு. அங்க தரிசனத்தை
முடிச்சிகிட்டு மறுபடியும் நடக்கணும். வழியில கரிமலைன்னு ஒரு இடம் உண்டு. கரின்னு சொன்னா
யானைன்னு அர்த்தம். அந்த மலையைப் பார்க்கறதுக்கு ஒரு பெரிய யானை நின்னுட்டிருக்கற மாதிரி
இருக்கும். நடக்கறதுக்கு ரொம்ப கஷ்டமான பாதை. அதுவரைக்கும் ஐயப்பனுக்கு சரணம் சொல்லாதவங்க
கூட அந்தப் பாதையில நடக்க ஆரம்பிச்சதும் சரணம் சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. அந்த அளவுக்கு
சிரமமான பாதை.”
“சரி”
“அதுக்கப்புறம் இன்னொரு மலை. அதனுடைய உச்சியிலதான் ஐயப்பன் கோயில்.
அதுவும் ஏறிப் போகறதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமான
பாதை. கடைசியில பதினெட்டு படி கொண்ட அமைப்பு. அவ்வளவு படிகளையும் மூச்சை புடிச்சிகிட்டு
ஏறி நின்னு ஐயப்பனக் கும்பிடணும். தரிசனம் முடிஞ்சதும் போன மாதிரியே நடந்து திரும்பி
வரணும். ரெண்டு வார பயணம்ங்கறது சாதாரணமான காரியமில்லை. எல்லாராலயும் முடியக்கூடிய
விஷயமும் இல்லை. பெரிய சாதனைன்னுதான் சொல்லணும்.”
“நீங்க சொல்றத கேக்கறதுக்கே மலைப்பா இருக்குது. இது எல்லாமே
எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்துல நடந்துபோகிற பயணமா இருந்திருக்குதுங்கற விஷயம்
ரொம்ப முக்கியமா படுது. சபரிமலையா இருந்தா என்ன, இமயமலையா இருந்தா என்ன, நடந்துபோய்
நம்ம உடம்பையும் மனசையும் ஒரு அனுபவத்துக்கு பழக்கப்படுத்தறது அந்தக் காலத்துல ஒரு
பரவசமான அனுபவமாதான் இருந்திருக்கணும்.”
“ஆமாம். காகா காலேல்கர் மாதிரி பரந்தாமனும் அந்தப் பரவசத்தைப்
பத்திதான் சொல்றாரு. எஸ்.வி.எஸ். அழுத்தம் கொடுத்து சொல்லலைன்னா, நான் அந்தப் புத்தகத்தைப்
படிச்சிருக்கமாட்டேன். இப்படித்தான் ஒரொரு வாய்ப்பும் ஒரொருத்தர் வழியா நமக்கு வந்து
சேருது.”
ஒரு கணம் என்ன சொல்வது என்றே தெரியாமல் நான் அவருடைய முகத்தையே
பார்த்தபடி இருந்தேன். பிறகு “மனித வாழ்க்கையில அந்தக் காலத்துல என்னென்ன விதமான வகையில
பரவசங்கள் இருந்திருக்குது பாருங்க சார். அவுங்களும் அதைத் தேடிட்டு போயிருக்காங்க.
இன்னைக்கு நமக்கு இருக்கறது ஒரு தட்டையான வாழ்க்கை. நம்ம உடம்பும் சரி, மனசும் சரி
எதுக்குமே தயாரா இல்லை. அப்புறம் நம்ம வாழ்க்கையில எங்கேருந்து பரவசம் வரும்?” என்றேன்.
“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை பாவண்ணன். எதையும் தேடாம,
எதையும் இழக்காம, எதையுமே அடையமுடியாது” என்றார் விட்டல்ராவ்.
சில கணங்களுக்குப் பிறகு அவரே தொடர்ந்து “இந்தப் புத்தகத்துல
மறக்கமுடியாத ஒரு இடம் உண்டு. ரொம்ப கவித்துவமான இடம். அது இன்னும் என் மனசுல பசுமையா
பதிஞ்சிருக்குது.” என்று சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டினார்.
“என்ன சார், சொல்லுங்க”
“ஒரு இடத்துல காட்டு வழியில பரந்தாமன் சிக்கிக்கறாரு. அவரு போறது
சீசன் இல்லாத நேரங்கறதால அதிக அளவுல நடமாட்டமும் கிடையாது. துணைக்கு நடக்க ஆளும் கிடையாது.
அவரா மனம் போன போக்குல ஒரு பாதையில கொஞ்ச தூரம் நடக்கறாரு. மனசுல என்னமோ ஒரு குழப்பம்,
பத்து நிமிஷத்துல பொறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்துடறாரு. அப்புறம் அங்கேர்ந்து
பிரிஞ்சி போகக்கூடிய இன்னொரு பாதையில போறாரு. பத்து நிமிஷம் கழிச்சி அதுலயும் தொடர்ந்து
நடக்காம திரும்பி வந்துடறாரு. சரியான திசை தெரியாம தடுமாறி நிக்கறாரு.”
பதில் தெரிந்துகொள்ளும் ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்
“ஐயையோ. பாவம். அப்புறம் எப்படித்தான் வழியைக் கண்டுபிடிச்சாரு?” என்று கேட்டேன்.
“இருங்க, இருங்க சொல்றேன்” என்று தடுத்தாட்கொள்வதுபோல கையை உயர்த்திப்
புன்னகைத்தார் விட்டல்ராவ். பிறகு ”திடீர்னு
ஒரு மூலையிலேருந்து ஒரு குரல் கேக்குது. உடனே திகைச்சிப்போய் திரும்பிப் பார்க்கறாரு
பரந்தாமன். பக்கத்துல ஒரு மரத்தடியில தாடி வச்ச ஒரு பெரியவர் சிரிச்சிகிட்டே உக்காந்திருக்காரு.
இவ்வளவு நேரம் அவரை பரந்தாமன் கவனிக்கவே இல்லை. இப்படி அசையாம மரத்தோடு மரமா அவரு அங்க
உக்காந்திருப்பாருங்கற விஷயத்தை அவரால நம்பவே முடியலை. அந்த அதிர்ச்சியில இருந்து மீண்டு
என்ன சொல்றீங்க ஐயான்னு கேக்கறாரு. இந்தப் பக்கமா போற, அப்புறம் திரும்பி வர. அடுத்து
அந்தப் பக்கமா போற, அப்புறம் திரும்பி வர? உனக்கு எங்க போவணும்? உனக்கு என்ன பிரச்சினை,
ஏன் இந்த தடுமாற்றம்னு கேட்டாரு. பரந்தாமன் ஐயப்பன் தரிசனத்துக்காக போகறதா சொல்றாரு.
நீ அரைகுறையா நம்பிக்கை வச்சிருக்கிற ஆள் மாதிரி தெரியுது? ஏன் அப்படி இருக்க? எதுலயும்
முழுசா நம்பிக்கை வை. நீ முதல்ல போன பாதைதான் சரியான பாதை. போ. போ. அந்தப் பாதையிலயே
போ” என்று கையை நீட்டி அவர் போகவேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டறாரு. பெரியவருக்கு
நன்றி சொல்லிட்டு அந்தப் பாதையிலயே நடந்துபோன பரந்தாமன் கடைசியா கோயிலுக்குப் போய்
சாமியைப் பார்த்துட்டாரு.”
“சரியான நேரத்துல சரியான திசையை அவருக்கு உணர்த்தியிருக்காரு
அந்தப் பெரியவரு”
“ஆமாம். தரிசனத்துக்குப் பிறகு அந்த வளாகத்தை சுத்தி வரும்போது
அந்தப் பெரியவரை மறுபடியும் பார்த்ததா பரந்தாமன் குறிப்பிடறாரு. தனக்கு முன்னால அவர்
எப்படி கோவிலுக்குள்ள வந்தாருன்னு அவருக்குள்ள ஒரு குழப்பம். ஆச்சரியத்தோடு அவரு பக்கம்
திரும்பிப் பார்த்தாராம். அவரு பரந்தமானைப் பார்த்து போ போ போயிகிட்டே இருன்னு சொல்றமாதிரி
தலையை அசைச்சி சிரிச்சாராம். அந்த இடத்தைப் படிக்கும்போது எனக்கே மெய்சிலிர்த்துப்
போச்சி. பரந்தாமனுக்கு எப்படி இருந்திருக்கும், யோசிச்சி பாருங்க”
நான் ஒருகணம் அந்தக் காட்சியை என் மனத்திரையில் நிகழ்த்திப்
பார்த்தேன். அற்புதமான அனுபவமாக இருந்தது. அக்கணமே அந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் எழுந்தது.
”அந்தப் புத்தகம் இன்னும் உங்ககிட்ட இருக்குதா சார்? நீங்க சொல்றத கேட்கக்கேட்க அந்தப்
புத்தகத்தைப் படிக்கணும் போல இருக்குது” என்று கேட்டேன்.
அதைக் கேட்டதும் அவர் முகம் வாடியது. “ரொம்ப நாளா நான் அந்தப்
புத்தகத்தை பத்திரமா வச்சிருந்தேன் பாவண்ணன். ஒருநாள் என் மனைவிக்கு அறிமுகமான குடும்பத்தைச்
சேர்ந்தவங்க ஏதோ ஒருநாள் சபரிமலைக்குப் போறதைப் பத்தி பேசியிருக்காங்க. என் மனைவிக்கு
திடீர்னு வீட்டுல வச்சிருந்த பரந்தாமன் புத்தகம் ஞாபகம் வந்திட்டுதுபோல. உடனே அதை எடுத்து
சபரிமலைக்குப் போகறதுக்கு முன்னால இதையெல்லாம் தெரிஞ்சிகிட்டு போங்கன்னு சொல்லி அந்தப்
புத்தகத்தை அவுங்ககிட்ட கொடுத்து அனுப்பிட்டாங்க. எனக்கு அது தெரியாது. ரொம்ப நாள்
கழிச்சி நான் அதை வேற ஒரு காரணத்துக்காகத் தேடும்போது என் மனைவி இப்படி கொடுத்துட்டதா
சொன்னாங்க”
ஒரு கணம் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. “எந்தப் பதிப்பகம் அந்தப்
புத்தகத்தைப் போட்டாங்கன்னு நினைவு இருக்குதா சார்? தெரிஞ்சா, அவுங்ககிட்டயே அச்சில
இருக்குதா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம்” என்று கேட்டேன்.
உதட்டைப் பிதுக்கியபடி இல்லை என்பதுபோல தலையை அசைத்தார் விட்டல்ராவ்.
“சரியா ஞாபகம் இல்லை பாவண்ணன். எங்கயாவது பழைய லைப்ரரியில தேடிப் பார்த்தா கிடைக்கறதுக்கு
வாய்ப்பிருக்குது” என்றார்.
பரந்தாமன் என்னும் பெயரை மனத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்டேன்.
நண்பர்கள் வழியாக எப்படியாவது அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்றொரு நம்பிக்கை
எனக்குள் எழுந்தது.
“அந்தப் பரந்தாமனை அதுக்கப்புறம் நீங்க சந்திச்சீங்களா சார்?”
“ஆமாம். தக்கர்பாபா கூட்டம் நடந்து சில வருஷங்களுக்குப் பிறகு இன்னொரு சந்தர்ப்பத்துலயும் நான் அவரைப் பார்த்தேன்.
என் பேரும் முகமும் அவருக்கு நல்லாவே ஞாபகம் இருந்தது. வணக்கம் சொன்னவுடனேயே கண்டுபுடிச்சிட்டாரு?”
”அது எப்ப நடந்தது?”
“உங்களுக்கு எழுத்தாளர் மா.அரங்கநாதன் தெரியுமில்லையா? பொருளின்
பொருள் கவிதைங்கற தலைப்புல அந்தக் காலத்துல ஒரு புத்தகம் எழுதினாரு. அதுதான் அவருடைய
முதல் புத்தகம். அந்தப் புத்தகத்துக்கு ஒரு அறிமுகக்கூட்டத்தை நாங்க நண்பர்கள் சேர்ந்து
நடத்தினோம். அந்தக் கூட்டத்துக்கு பரந்தாமன் வந்திருந்தாரு. தாடியெல்லாம் வச்சிகிட்டு
வயசான தோற்றத்துல இருந்தாரு. ஆனா மலர்ச்சியான சிரிச்ச முகம். கூட்டம் முடிஞ்சதும் நேரா
அரங்கநாதன்கிட்ட போய் பாராட்டிப் பேசனாரு.
நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுதான்னு அரங்கநாதன் அவருகிட்ட கேட்க, உன்னை
எப்படிப்பா மறக்கமுடியும், நீ நாகர்கோவில் மா.சுப்பரமணியன் தம்பிதானன்னு கேட்டாரு பரந்தாமன்.
அரங்கநாதன் அமைதியா சிரிச்சிகிட்டே அவரைப் பார்த்தாரு.”
“உங்ககிட்ட பேசலியா?”
“நான் அரங்கநாதன் பக்கத்துலயே நின்னுட்டிருந்தேன். என்னைப் பார்த்ததுமே
கையைப் புடிச்சி அழுத்தி தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவிச்சாரு. அதுக்கப்புறம் கொஞ்ச
நேரம் பழைய கதைகளையெல்லாம் பேசியிருந்துட்டு கெளம்பிப் போயிட்டாரு. அவரு நடந்துபோறத
பார்க்கறபோது இருமுடியோடு கல்லும் முள்ளும் நிறைஞ்ச பாதையில் ஒரு பக்தர் நடந்துபோகிற
மாதிரி நெனச்சிகிட்டேன்.”
விட்டல்ராவ் சில கணங்கள் பேச்சின்றி அமர்ந்திருந்தார். அந்தக்
காட்சி அவர் கண்கள் முன்னால் நிழலாடுவதாக நான் நினைத்துக்கொண்டேன்.
இமயமலைப்பயணத்தில் தொடங்கிய எங்கள் உரையாடல் சபரிமலைப்பயணத்தில்
முடிவடைந்ததை ஒரு தற்செயல் என்றே சொல்லவேண்டும். ஆனந்தமான தற்செயல்.
(அம்ருதா
– மார்ச் 2026)