காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர். மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.
காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர். மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.
புதுச்சேரியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா. சாகித்திய அகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமி என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.
17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களை அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, ஐயா என உறவுச்சொற்கள் வழியாக அழைப்பதையும் உரையாடுவதையும் கண்டு மகிழ்ந்தார். சார், மேடம் போன்ற மேற்கத்தியச் சொற்களைவிட இத்தகு உறவுச்சொற்கள் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவில் இயல்பான வகையில் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். அவரே தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட வழிமுறை அது. அன்று மாலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அதையொட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்.