Home

Sunday 8 October 2017

கதவு திறந்தே இருக்கிறது -அழகிய சொல்லோவியங்கள்


கர்நாடகத்தின் ஹோஸ்பெட் அழகான ஊர். தண்ணீருக்குப் பஞ்சமில்லாத ஊர். எங்கெங்கும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும். தோப்புகளும்  நிறைந்திருக்கும். துங்கபத்திரை அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் ஊர் எல்லையிலேயே இருபெரும் பிரிவுகளாக இரு திசைகளில் சுழித்தோடும். பெரிய கால்வாயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கால்வாய்கள் உடல்நரம்புகளென ஊரெங்கும் புகுந்தோடி எங்கோ ஒரு புள்ளியில் மீண்டும் பெரிய கால்வாயோடு இணைந்துவிடும்படி கட்டமைக்கப்பட்டிருந்தன. நகரமக்களின் நீர்த்தேவையை அந்தச் சிறுகால்வாய்கள் தீர்த்துவைத்தன. குளிக்க, துணிதுவைக்க, கால்நடைகளை நீராட்ட என எல்லாத் திசைகளிலும் தனித்தனி துறைகள் உண்டு. அவை மேலும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்தோடி வயல்வெளிகளுக்கும் தோப்புக்கும் பாய்ந்து செல்லும். கால்வாய் ஓரமாக அமைதி தவழும் ஓரிடத்தில் நாங்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தோம்.


தூங்கி எழுந்ததும் உடல்தழுவிச் செல்லும் குளிர்ந்த காற்றில் மனம் தோய்ந்தபடி நடப்பதில் தொடங்கி, இரவு உணவுக்குப் பிறகு நண்பர்களோடு கதைகள் பேசியபடி தூக்கம் வரும் வரைக்கும் நடப்பதுவரை ஒவ்வொரு செயலிலும் துங்கபத்திரையோடு இணைந்ததாகவே எங்கள் பொழுதுகள் கழிந்தன. ஓடும் தண்ணீரில் சூரியோதயத்தையும் நிலவின் அழகையும் பார்ப்பது ஒருவித பரவசமான அனுபவம். குழந்தை உறங்கும் ஏணை அசைவதுபோல அவற்றின் பிம்பங்கள் நீர்ப்பரப்பில் அசைய அசைய மனம் ததும்ப நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்.

துங்கபத்திரை தனித்ததொரு நதியல்ல. துங்கா, பத்ரா என இரு நதிகள் தனித்தனியாக பிறந்து தனித்தனி திசைகளில் பயணம் செய்துவந்து ஷிமோகாவுக்கு அருகில் கூட்லி என்னும் சிற்றூரில் இணைந்து சங்கமமாகி துங்கபத்திரை என்னும் பெயரோடு பெருக்கெடுத்தோடி வருகிறது. இறுதியில் கிருஷ்ணா நதியோடு சங்கமமாகிவிடுகிறது. இனம் புரியாததொரு மன எழுச்சியில் மூன்று நாட்கள் விடுப்பெடுத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலையின் பக்கமாகச் சென்று சிக்கமகளூர் குன்றுகளில் ஏறி இறங்கி நதி உருவாகி தவழ்ந்துவரும் புள்ளியைக் கண்டு களித்து, அதைத் தொடர்ந்து துங்கபத்திரையின் எல்லா வடிவங்களையும் பார்த்துவந்தேன். திரும்பிய பிறகு சந்திப்பவர்களிடமெல்லாம் பித்து பிடித்தவனைப்போல அந்த அனுபவங்களைச் சொல்வதே என் முதல் வேலையாக இருந்தது.

ஒருநாள் தற்செயலாக எனக்கு அந்த ஊரில் அறிமுகமான ஸ்ரீகண்டையா என்னும் கன்னட இலக்கிய ஆர்வலரிடமும் என்னுடைய பிரயாண புராணத்தைச் சொன்னேன். அவருக்கும் அந்தத் துறையில் ஆர்வமிருந்தது. உடனே அவர் தான் சென்று பார்த்துவிட்டு வந்த கங்கை, யமுனை, பிரம்மபுத்திரையின் பயண அனுபவங்களைச் சொல்லி எனக்குள் கனவுகளை விதைத்தார். அக்கணமே நான் அவரை என் ஆசானாக வரித்துக்கொண்டேன். அவர் என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “துங்கபத்திரை போல இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான ஆறுகள் ஓடுகின்றன. நம்மைப்போலவே பித்துப் பிடித்த ஒரு பெரியவர் அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஓடியோடி எல்லா ஆறுகளையும் பார்த்துவிட்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்” என்று சொன்னபடி ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். அந்தப் புத்தகம் காகா காலேகர் எழுதிய ஜீவன் லீலா. குஜராத்தியிலிருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். ஒரு பெரிய புதையலைப் பார்ப்பதுபோல இருந்தது எனக்கு. புத்தகத்தில் காகா காலேகரின் புகைப்படத்தைப் பார்த்தபோது, கிட்டத்தட்ட அது தாகூரின் சாயலில் இருப்பதாகத் தோன்றியது. ”நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கெல்லாம் மூத்த முன்னோடி. ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு நாமும் இவரைப்போல புத்தகம் எழுதவேண்டும்” என்றார்.

அதற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துத்தான் நான் அந்தப் புத்தகத்தை தமிழில் தேடிப் படித்தேன். இன்றளவும் நான் விரும்பிப் படிக்கிற புத்தகங்களில் ஒன்றாகவே இது இருக்கிறது. இந்நூலில் இடம்பெற்றிருப்பவை வெறும் பயணத்தகவல்களோ, ஆறுகளைப்பற்றிய தகவல்களோ மட்டுமல்ல. மனிதவாழ்க்கைக்கும் ஆறுகளுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிபூர்வமான இணைப்பைப்பற்றிய ஆய்வை இந்த நூலில் நிகழ்த்துகிறார் அவர்.  ஒவ்வொரு ஆற்றையொட்டியும் ஒட்டியும் ஒரு தொன்மக்கதை உள்ளது. ஏதோ ஒருவகையில் தெய்வங்களோடு ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தருணத்தையும் தத்துவங்களோடு இணைத்துப் பார்க்கிற அரிய பார்வை காகா காலேல்கரிடம் உள்ளது. வாழ்க்கை அனுபவங்களின் பெருந்தொகையாகவே இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

காகா காலேல்கர் மகாராஷ்டிரத்தில் காலேலி என்னும் கிராமத்தில் 1885 ஆம் ஆண்டில் பிறந்தவர். தத்துவமும் சட்டமும் படித்துவிட்டு பெல்காம் நகரில் மராத்திய நாளிதழ் ஒன்றில் சிறிது காலம் பணிபுரிந்தார். பிறகு வரோதா நகரில் இருந்த கங்காநாத் வித்யாலயத்தில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். தேசப்பற்றை மறைமுகமாக ஊட்டும் இடமாக இருக்கிறது என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆங்கில அரசு அந்தப் பள்ளியை மூடியதைத் தொடர்ந்து, இந்தியாவின் பகுதிகளை நடந்தே அறியும் ஆவலில் இமயமலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஏறத்தாழ இரண்டாண்டுகள். பிறகு இமயத்தில் கிருபாளினியின் அறிமுகம் கிடைக்க, அவருடன் இணைந்து பர்மாவுக்குச் சென்று சேவை புரிந்தார். 1915-ல் காந்தியின் அறிமுகத்தைத் தொடர்ந்து சாபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்து சர்வோதயம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 

இதழ் தொடர்பாகவும் இயக்கவேலைகள் தொடர்பாகவும் இந்தியா முழுக்க  இடைவிடாமல் பயணம் செய்யும் வாய்ப்பு  அவரைத் தேடி வந்தது. இயல்பாகவே பயணங்களில் ஆர்வம் கொண்ட காலேல்கர் அந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஆறுகள் மீது தீராத காதல் கொண்டவராக, அவற்றைத் தேடித்தேடிப் பார்க்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. ஆறுகளை மட்டுமல்ல, அவை பிறக்கும் இடங்கள், தவழ்ந்து ஓடும் இடங்கள், அருவியாய்ப் பொழியும் இடங்கள், அவை தொட்டு இறங்கும் மலைகள், குன்றுகள், இறுதியாக சென்று சங்கமமாகும் கடல்கள் என எல்லா இடங்களையும் தேடிப் பார்ப்பவராக அவர் இருந்தார். ஜீவன் என்பதை வழக்கமான பொருளில் எடுத்துக்கொள்ளாமல் ’தண்ணீர்’ என்னும் பொருளில் எடுத்துக்கொள்கிறார் காலேல்கர். ஜீவன் லீலா என்பது தண்ணீரின் பலவிதமான லீலைகளை அடையாளப்படுத்துகிறது. தண்ணீர் மட்டுமே பாயுமிடங்களைக் குளிர்விக்கின்றது. பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றுகிறது. எல்லா உயிர்களும் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள தண்ணீரே வழிபுரிகிறது. தண்ணீரைப் பார்த்தவுடன் அதன் அருகில் செல்ல விருப்பம் ஏற்படுகிறது. அந்த விருப்பத்தின் விசையாலேயே இமயம் தொடங்கி குமரி வரைக்கும் உள்ள பல முக்கியமான ஆறுகளையும் அருவிகளையும் ஏரிகளையும் தேடிப் பார்த்திருக்கிறார் காலேல்கர்.

காலேல்கருடைய பயணங்கள் இந்த நாட்டின் கலைக்கோவில்களையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் கடல்களையும் ஆறுகளையும் கண்டு களிக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டவை அல்ல, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதற்கு நிகரான பக்தியும் நெருக்கமும் கொண்டவை. தாய்நாட்டின் ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் தனக்குத் தெரிந்திருக்கவேண்டும், அவற்றுடன் நெருக்கமானதொரு உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை விருப்பமே காலேல்கரை உந்திச் செலுத்திய சக்தியாகும். தன் புத்தகத்துக்கான முன்னுரைக்கு காலேல்கர் ‘நின்று கரம்குவித்துத் தொழுதல்’ என்று தலைப்பிட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். நீர்நிலைகளை அவர் தெய்வமெனவே கருதுகிறார். ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்கள் அவரைப் பொறுத்த அளவில் தெய்வ தரிசனத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணங்களுக்கு நிகரானவை என்றே சொல்லவேண்டும்.

புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி அது. சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. போகிற போக்கில் மழைத்தாரைகளை கடலைத் தொட்டு வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதிச் செல்வதைப் படிக்கும்போது உருவாகும் மன எழுச்சி மகத்தானது. இது 1952-ல் எழுதப்பட்டது. இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.

எழுபது கட்டுரைகளும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இலக்கியத்தரத்துடன் எழுதப்பட்டுள்ளன. கங்கையைப்பற்றிய கட்டுரையில் அவருடைய வர்ணனைச்சொற்கள் அருவியெனக் கொட்டுகின்றன. கங்கோத்ரிக்கு அருகில் உள்ள பனிமூடிய பிரதேசங்களில் விளையாட்டில் ஈடுபட்ட கங்கையின் வாலைப்பருவம், உத்திரகாசியில் வானளாவியுள்ள தேவதாரு மரங்களால் நிறைந்த காவியமயமான பிரதேசத்தில் இதன் குமரிப்பருவம், தேவப்பிரயாகை குன்றுகளில் குறுகிய பாதைகளில் ஒளிபொருந்திய அலகநந்தா நதியுடன் இணைந்து விளையாடும் விளையாட்டு, கான்பூரையொட்டிப் பாயும்போது அதன் சரித்திரப்புகழ் பெற்ற பிரவாகம், பிரயாகையில் உள்ள பெரிய ஆலமரத்தின் மீது பாய்ந்து அங்கே யமுனையோடு திரிவேணி சங்கமமாவது என ஒவ்வொரு கட்டத்தையும்  கவியுள்ளத்தோடு எழுதுகிறார் காலேல்கர். கங்கையைச் சகுந்தலையென்றும் யமுனையை திரெளபதையென்றும் புராணப்பாத்திரங்களாக மாற்றிக் குறிப்பிட்டு அவர்  எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமானது. கங்கை, யமுனை ஆகிய நதிகளோடு மட்டும் அக்கட்டுரை நின்றுவிடவில்லை. அயோத்தி நகர் வழியாக வரும் சரயு நதி, ராஜா ரத்திதேவனை நினைவூட்டும் சம்பல் நதி, முதலையோடு கஜேந்திரன் புரிந்த போரை நினைவூட்டும் சோணபத்ர நதி, கண்டகி நதி என அனைத்து சிறுநதிகளைப்பற்றிய குறிப்புகளையும் கொண்டிருக்கிறது.

கங்கையும் யமுனையும் சந்திப்பதுபோல நெருங்கி, பிறகு சங்கமமாகாமலேயே விலகியோடிப் போய்விடும் இடம் ஒன்றுண்டு. அது தண்டால் மலைப்பகுதி. அப்பகுதியை விவரிக்கும் காலேல்கர் அப்பகுதியில் புழக்கத்தில் இருக்கும் ஒரு தொன்மக்கதையையும் குறிப்பிடுகிறார். தண்டால் மலையருகில் யமுனையின் கரையில் வாசம் செய்தபடி தினமும் கங்கையில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஒரு முனிவர். வயதான காலத்தில் அவரால் தன் இருப்பிடத்திலிருந்து கங்கைக்கரை வரையிலான தொலைவை நடக்கமுடியாமல் போய்விட்டது. நீராடாமல் பூசைகளில் ஈடுபட முடியாமல் அவர் தவிப்பதைப் பார்த்து, கங்கை தன் ஓட்டத்தையே சற்று மாற்றிக்கொண்டு அவர் வசிக்குமிடத்துக்கு அருகிலேயே ஒரு சிற்றருவியாகப் பாய்ந்து வந்தது. முனிவர் மறைந்துபோனாலும் அச்சிற்றருவி இன்றும் பெருக்கெடுத்துப் பாய்ந்தபடி இருக்கிறது.

கங்கையின் ஓட்டத்தை மூன்று கட்டங்களாக வகுத்துரைக்கிறார் காலேல்கர். கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியிலிருந்து ஹரித்துவார் வரையிலான கங்கையின் ஓட்டம் முதல் கட்டம். ஹரித்துவார் முதல் பிரயாகை வரையிலான கங்கையின் ஓட்டம் இரண்டாவது கட்டம். பிரயாகையிலிருந்து கடலுடன் சங்கமமாகும் வரையிலான கங்கையின் ஓட்டம் மூன்றாவது கட்டம். அவற்றை ’திரிபதகா’ என்னும் சொல்லால் மூன்று அவதாரங்கள் என்றே குறிப்பிடுகிறார் காலேல்கர். மூன்று கட்டங்களில் ஹரித்துவாரிலிருந்து பிரயாகை வரைக்குமான கங்கையின் ஓட்டத்துக்கு உலக மதிப்பு மிகுதி. கோவிலுக்கு அருகில் உள்ள துறைகள், அவற்றையொட்டி ஓடும் மடுக்கள் எல்லாமே கங்கையின் அழகை பல மடங்காகப் பெருகவைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கு வீசும் காற்று. இமயத்தின் பனிச்சிகரத்திலிருந்து வீசும் காற்று முதன்முதலாக மானுடரையும் அவர்களுடைய குடியிருப்பையும் இந்த இடத்தில்தான் தொட்டுக் கடந்து செல்கிறது.

ஜோக் நீர்வீழ்ச்சியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்த்த அனுபவங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கிறது.  அமெரிக்காவுக்கு நயாகரா அருவியைப்போல இந்தியாவுக்கு இயற்கை வழங்கிய மாபெரும் சொத்து ஜோக் அருவி. 960 அடி உயரத்திலிருந்து அது விழுகிறது. விழும் வேகத்தில் மண்ணில் 150 அடி பள்ளத்தை அது உருவாக்குகிறது. அருவியுடைய வேகத்தின் காரணமாகவே, அந்தச் சூழல் பனிச்சாரலால் புகைமண்டி காட்சியளிப்பது வழக்கம். இதைக் காண்பதற்காகவே கர்ஸன் பிரபு என்பவர் இந்த இடத்துக்கு வந்ததாக ஒரு தகவல் உண்டு. காந்தி ஒருமுறை தன் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார். அங்கிருந்து நாற்பது ஐம்பது மைல்கள் தொலைவில் இருக்கும் அருவியைப் பார்த்துவிட்டு வரலாம் என்னும் திட்டத்தை காந்தியிடம் முன்வைத்தார் காலேல்கர். காந்தியோ தனக்கு நேரமில்லை என்றும் “நீ வேண்டுமானால் சென்று வா. நீ போய்வந்தால் மாணவர்களுக்கு ஒரு சில பாடங்களைச் சொல்ல வசதியாக இருக்கும்” என்று சொல்லி மறுத்துவிட்டார். ”ஜோக் உலகத்தின் அற்புதக்காட்சிகளில் ஒன்று” என்றெல்லாம் சொல்லி காந்தியைக் கரைக்க முற்பட்டார் காலேல்கர். காந்தியோ அவரிடம் மீண்டும் “960 அடி என்பதெல்லாம் ஒரு உயரமா? மழைத்தண்ணீர் அதைவிட உயரமான இடமான ஆகாயத்திலிருந்து விழுகிறது தெரியுமா? அது எவ்வளவு பெரிய அதிசயம்?” என்று சொல்லி மேலும் வாதத்துக்கு வழியின்றி முடித்துவிட்டார். பிறகு வேறு வழியில்லாமல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு காலேல்கர் ஜோக் அருவியைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். ஷராவதி ஆற்றங்கரை வரைக்கும் நீண்டிருக்கும் காட்டை நடந்து கடப்பது ஒரு பயணம். பிறகு அருவிக்கரை வரைக்கும் படகுப்பயணம். ஒவ்வொரு கட்டத்தையும் நேர்த்தியான சொல்லோவியங்களென தீட்டி வைத்திருக்கிறார் காலேல்கர். ரோரர், ராகெட், லேடி ஆகிய அருவிக்கிளைகளுக்கு அவர் ருத்ர, வீரபத்ர, பார்வதி என்னும் புதிய பெயர்களைச் சூட்டி அப்பெயர்த்தேர்வுகளுக்கான காரணங்களையும் சுவாரசியமாகச் சொல்கிறார்.

கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி, கோமதி ஆகிய நதிகளில் நீராடுவதைப்பற்றியும் அவற்றின் கரைகளில் செய்யப்படும் தானதர்மங்களைப் பற்றியும் ஏராளமாகச் சொல்லப்பட்ட போதிலும் அந்நதிகளை வலம்வருவதைப்பற்றி எக்குறிப்பும் புராணங்களில் இல்லை. அதற்கு விதிவிலக்கு நர்மதை. அந்த நதியை வலம்வருவது இன்றளவும் ஒரு சடங்காக உள்ளது. அதற்கு பரிகம்மா என்பது பெயர். முதலில் நர்மதை உற்பத்தியாகும் இடத்திலிருந்து தொடங்கி தென்கரை வழியாக கடலில் சங்கமமாகும் இடம்வரைக்கும் செல்லவேண்டும். பிறகு படகின் மூலம் வடகரையைத் தொடவேண்டும். அங்கிருந்து கால்நடையாக அமர்கண்டக் செல்லவேண்டும். வலம்வரும் போது எங்கும் நதியைக் கடக்கக்கூடாது. நதியின் பிரவாகத்தைவிட்டு வெகுதொலைவு செல்லவும் கூடாது. நீர் அருந்தவேண்டுமானால் நர்மதையின் நீரையே அருந்தவேண்டும். இப்படி நர்மதையை வலம்வந்த  காலேல்கரின் அனுபவம் அவரோடு சேர்ந்து நாமும் நடப்பதுபோல உள்ளது. தன் விழிகளால் கண்ட ஒவ்வொரு காட்சியையும் காலேல்கர் நம்மையும் காண வைத்துவிடுகிறார். ஜபல்பூருக்கு அருகில் பேடாகாட் என்னும் இடத்தில் நர்மதையின் ஓட்டத்துக்குக் காவலாக இருபுறங்களிலும் ஓங்கி உயரமாக நின்றிருக்கும் சலவைக்கல் மலைகளை முழுநிலவில் காண்பது மகத்தானதொரு அனுபவம். நிலவின் ஒளி முதலில் சலவைக்கல் மலையில் பட்டு பிரதிபலிப்பதையும், பிறகு ஆற்றின் மேற்பரப்பில் பிரதிபலிப்பதையும் பார்ப்பது மயக்கத்தையும் திகிலையும் ஊட்டும் ஒரு பேரனுபவம்.

டேராடூனுக்கு அருகில் உள்ள நதியின் பெயர் தீஸ்தா. அதாவது த்ரி- ஸ்ரோத்ரா. தனித்தனியாக நதிகள் மூன்று இடங்களில் உற்பத்தியாகி பிறகு அனைத்தும் இணைந்து ஒரே நதியாக ஓடுகிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசூங் சூ என்பது ஒரு நதி. பாவ்ஹூன்ரீ சிகரத்தின் அருகில் உற்பத்தியாகி வரும் லாசேன் சூ என்பது இரண்டாவது நதி. தாலூங் சூ என்பது மூன்றாவது நதி. இம்மூன்றும் இணைந்து தீஸ்தா என்னும் பெயருடன் ஓடத் தொடங்குகிறது. சிறிது தொலைவிலேயே இத்துடன் திக்சூ, ரோரோசூ, ரோங்கனீசூ, ரங்க்போசூ, ரங்கீத்சூ போன்ற ஆறுகள் வந்து இணைந்துகொள்கின்றன. எங்கெல்லாம் இரு ஆறுகள் கலக்கின்றனவோ, அங்கெல்லாம் கோம்போ எனப்படும் புத்தர் கோவில் காணப்படுகிறது.

வேத காலத்தில் விதஸ்தா என்று அழைக்கப்பட்ட நதியின் இன்றைய பெயர் ஜீலம். ‘உலகில் எங்காவது சொர்க்கம் இருக்குமெனில் அது இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது, இங்குதான் இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாக ஒன்றுக்கு மூன்று முறை முகலாயச் சக்கரவர்த்தியான ஜஹாங்கீர் சொன்ன வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்றும் ஜீலம் நதிக்கரையில் வீற்றிருந்து அதன் அழகை சொல்லாமல் சொன்னபடி உள்ளது. ஆறு இங்குமங்கும் சுற்றிக்கொண்டு மெதுவாக ஓடுவதால் அது அசைவதே தெரிவதில்லை. வராஹமூலம் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட பாராமுல்லா என்னும் இடத்தைக் கடந்தபிறகே ஜீலம் வேகம் கொள்கிறது.


கார்வார் அருகில் தேவ்கட் என்னுமிடத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தைக் காணச் சென்ற அனுபவமும் கார்வாரிலிருந்து கோகர்ணத்தைக் காணச் சென்ற அனுபவமும் சாகசப்பயணங்களுக்கு நிகரான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. கோதாவரியின் சரித்திரத்தோடு ராமர்-சீதை கதையையும், சந்த ஞானேஸ்வரரின் கதையையும் இணைத்துச் சித்தரிப்பது வாசிப்பில் ஒருவித ஆர்வத்தையே தூண்டுகிறது. கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்குச் செல்லும் வழியிலும் ஆப்பிரிக்கப் பயணப் பாதைகளிலும் கண்ட பலவிதமான ஆறுகளைப்பற்றிய தகவல்களை காலேல்கர் தொகுத்துச் சொல்லும் விதமே, அவற்றை நாமும் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என்னும் ஆவலை உருவாக்குகிறது. நேபாளத்தில் பாக்மதியையும் டேராடூனில் சஹஸ்ரதாராவையும் அசாமில் பரசுராமகுண்டத்தையும் பார்க்கச் சென்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு சிறுகதைக்குரிய அனுபவங்களைப்போல உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது. 

(புத்தகம் பேசுது இதழில் எழுதி வரும் தொடரின் மூன்றாவது பகுதி.)