Home

Saturday 21 October 2017

பெற்ற மனம்- சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"



எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு வேலை கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவன் திருமணம் செய்துகொண்டான். தன் அறைக்குப் பக்கத்திலேயே அதே வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டில் குழந்தையின் மழலைச் சத்தம் கேட்டது. இந்திமொழியில் அவர்கள் அக்குழந்தையைக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவதையும் பேசுவதையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தளர்நடைபோட்டு அக்குழந்தை வாசலுக்கு வெளியே வரத் தொடங்கியதும் காலைநடைக்கு அக்குழந்தையையும் ஒரு தள்ளுவண்டியில் உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு வருவான் அந்த இளைஞன். அந்தக் குழந்தைக்கு சோறு ஊட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு வேளையிலும் ஒரு மணிநேரம் பிடிக்கும். சலிப்பே இல்லாமல் அவர்கள் இருவரும் அக்குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள்.


ஒருநாள் காலைநடையில் அந்த இளைஞன்மட்டும் தனியாக வந்தான். குழந்தை எங்கே என்று கேட்டேன்.  மனைவியும் குழந்தையும் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் என்றும் ஒன்றிரண்டு வாரங்களில் வந்துவிடுவார்கள் என்றும் சொன்னான். நடையின்போது எதைப் பார்த்தாலும் அவனுக்குக் குழந்தையின் ஞாபகம் வந்தது. ஒரு பூவைப் பார்த்ததும் "இந்நேரம் என் பொண்ணு இருந்தான்னா, அதப் பறிச்சிக் குடுத்தாதான் ஆச்சின்னு அடம் புடிப்பாள்" என்றான். ஒரு நாய்க்குட்டி குறுக்கில் ஓடியதைப் பார்த்ததும் "இந்நேரம் அவள் இருந்தான்னா, அந்த நாயக் கூட்டி வச்சி ரெண்டு கொஞ்சுகொஞ்சிட்டுதான் நகருவாள்" என்றான். பூங்காவில் பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலைப் பார்த்ததும், "ஊஞ்சல்னா அவளுக்கு ரொம்ப உயிர். ஒருதரம் உக்காந்துட்டான்னா, எறக்கி உடறது ரொம்ப சிரமம்" என்று புன்னகைத்தான். அவன் நினைவுகள் முழுதும் குழந்தைதொடர்பான நிகழ்ச்சிகள் அடர்ந்திருந்தன. அடுத்த நாள் முதல் "எப்ப வருவாங்க தெரியலையே, எப்ப வருவாங்க தெரியலையே" என்று புலம்பத் தொடங்கினான். முதல்நாள் இரவில் தூக்கமே வரவில்லையென்றும் குழந்தையின் துணிகளையெல்லாம் மெத்தைமீது பரப்பிவைத்துவிட்டு அவற்றின் மணத்தை நுகர்ந்தவாறு உறங்கியதாகச் சொன்னான். மறுநாள் "என்னால முடியலை சார், போய் அழச்சிட்டு வந்துடறேன்" என்று விமானத்தில் கிளம்பிச் சென்றுவிட்டான். ஆசை நிரம்பிவழிந்த அவன் கண்களைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. தோளைத்தட்டி வாழ்த்தி அனுப்பிவைத்தேன். இந்த எதிர்பார்ப்பும் வலியும் குடும்பவாழ்வில் இன்பமான ஒரு அவஸ்தை.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கொண்ட முல்லைத்திணைப் பாடல்கள் காத்திருத்தலின் வலியையும் எதிர்பார்ப்பின் ஆவலையும் ஒருசேர முன்வைப்பவை. குறிப்பிட்டுச் சொல்லிவிட்டுச் சென்ற கால இடைவெளி கடந்த பிறகும் வரவில்லையே என்கிற ஏக்கமும் பதற்றமும் நிறைந்து வழியும் சொற்கள் மனத்தை அசைக்கவல்லவை.  பிரிவு என்பது ஆண், பெண் இருவரையுமே வாட்டியெடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆணைப் பிரிந்த பெண்ணின்  பாடல்களும் பெண்ணைப் பிரிந்த ஆணின்  பாடல்களும் முன்வைக்கும் மனநிலையில் உள்ள சில அம்சங்கள் ஆழ்ந்து நோக்கத்தக்கவை. சேர்fந்திருந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் அடுக்கடுக்காக சொல்லப்படுவது ஒரு அம்சம். சேர்ந்திருந்த காலச்சூழலையும் இடவிவரங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து பெருமூச்சுடன் அசைபோடப்படுவது இன்னொரு அம்சம்.

சிபிச்செல்வனுடைய கவிதை பிரிவின் தளத்தை இன்னும் சற்றே விரிவுடையதாக்குகிறது. குழந்தையைப் பிரிந்திருக்கும் தாய் அல்லது தந்தையின் உணர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தப் பிரிவு தற்காலிகமாக ஏற்பட்டதாகவும் இருக்கக்கூடும். விடுமுறையை முன்னிட்டோ அல்லது ஏதேனும் திருவிழாவை முன்னிட்டோ, தாய் தன்னுடைய தாய்வீட்டுக்கோ அல்லது உறவினர்கள் வீட்டுக்கோ குழந்தையோடு சென்றிருக்கலாம். இதேபோன்ற ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு குழந்தையை தந்தை அழைத்துக்கொண்டு சென்றிருக்கலாம். குழந்தையின் நடமாட்டம் இல்லாத வீட்டின் வெறுமை உறைக்கத் தொடங்குகிறது. கலைந்து கிடக்கும் விளையாட்டுப் பொருட்கள், சுவர்முழுதும் நிறைந்திருக்கும் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் குழந்தையை நினைக்கவைக்கிறது. குழந்தையின் விரல்கள் துழாவிய கூழ் அமுதைவிட இனியதாக இருக்கும் அனுபவத்தை முன்வைக்கிறது ஒரு குறள். குழந்தையின் கைப்பட்டு உருண்டு கிடக்கும் பொம்மையும் குழந்தையின் விரல் தீட்டிய கோடுகளும் இன்னும் மேலான அனுபவத்தை வழங்குகின்றன. யாருமற்ற அறையில் மழலைமொழி மிதந்துவருகிறது.  பிஞ்சுப் பாதங்கள் பதித்து தத்தக்கா புத்தக்கா என்று அறைமுழுதும் தளர்நடைபோட்ட காட்சி கண்களில் சுடர்விடுகிறது. குழந்தையின் குறும்புகள் அடுக்கடுக்காக நினைவில் அவிழ, அக்கணமே குழந்தையைப் பார்க்கவேண்டும் என்கிற வேகம் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றாக இருக்கிறது. இன்னும் வராத குழந்தையைநோக்கி மானசிகமான ஒரு கோரிக்கையை அந்தத் தாய் அல்லது தந்தையின் மனம் ஏக்கமுடன் முன்வைக்கிறது. மழைக்கென காத்திருக்கும் மண்ணகத்தாரைப்போல, குழந்தையின் முத்தமழைக்காக காத்திருக்கிறது பெற்ற மனம்.

*

அரும்பின் குறும்பு

சிபிச்செல்வன்

கலைந்து குலைந்து யாவும்
யானையும் பறவையும் சிதறி
பஸ்ஸJம் ரயிலும் கவிழ்ந்து
தொட்டி மீன்கள் துள்ளிக் குதிக்க
சுவரெங்கும் ஓவியக் கோடுகள்
புத்தகங்களின் பக்கங்கள் கிழிபட்டு
எண்ணும் எழுத்தும்
கண்ணில் மின்னும்
சிலேட்டும் பலப்பமும்
வீசியழ
தூளியிட்டுத் தாலாட்ட
துள்ளியெழுவாய்
உன் மொழியின் குழறல்
இனிமை இனிமை
சிரிப்பின் ஈர்ப்பில் பரவசம்
கன்னம் கிள்ளியெடுக்க
காத்திருப்போர் காத்திருக்க
ஓடித் திரிவாய் ஏமாற்றி
அரும்பின் குறும்பு
எல்லையற்ற சுகம்
உன் முத்த மழை பொழிய
என்று வருவாயோ

*


இயல்பான இசைநயம் பொருந்திய கவிதைவரிகளுக்குச் சொந்தக்காரர் சிபிச்செல்வன். தொண்ணூறுகளில் தெரியவந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர். சாம்பல் காடு, கறுப்பு நாய் ஆகியவை  இவருடைய கவிதைத்தொகுதிகள். அருண் கொலேட்கர் எழுதிய பல கவிதைகளை தமிழாக்கம் செய்துள்ளார்.