Home

Saturday 21 October 2017

கற்பனையும் எதார்த்தமும்- நகுலனின் கவிதை


ஒரு விடுமுறை நாளில் பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். செவ்வக வடிவில் பூங்காவைச் சுற்றி நடையாளர்களுக்காகவென ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையொன்றிருந்ததுமழைக்காலத்தில் அடிக்கடி நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறும்போது பாதையில் யாராலும் நடக்கமுடிவதில்லைஏராளமான பேர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுண்டு. திரும்பிச் சென்ற யாரோ ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அன்று பாதை சீர்ப்படுத்தப்பட்டு சதுரக்கற்கள் பதிக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்ததுதொழிலாளர்களின் குழந்தைகள் அருகில் கொட்டப்பட்டிருந்த மணல்குவியலில் விளையாடிக்கொண்டிருந்தன


குழந்தைகளின் விளையாட்டுச் சத்தம் என் கவனத்தை ஈர்த்ததால் படிப்பதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தேன். இரண்டு சிறுவர்களும் சிறுமிகளும் அடங்கிய அந்தக் குழு மருத்துவர் நோயாளி விளையாட்டு விளையாடினார்கள். வயதில் மூத்த சிறுமி மருத்துவர். ஒரு கொடியை நறுக்கி முடிச்சுபோட்டு கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்புபோல சுற்றியிருந்தாள். இன்னொரு சிறுமி அவளுக்கருகே உதவியாளராக நின்றிருந்தாள். சிறுவர்களில் ஒருவன் நோயாளி. இன்னொருவன் நோயாளியை அழைத்துவந்தவன்.

நான் பார்த்தபோது மருத்துவச் சிறுமி தன் கழுத்திலிருக்கும் ஸ்டெதாஸ்கோப்பை நோயாளிச் சிறுவனின் மார்பிலும் முதுகிலும் வைத்துப் பார்த்தபடி ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.  "ராத்திரிலாம் வாந்தி பேதி டாக்டர்",  "தூங்கவே இல்ல டாக்டர்",  "நீங்கதான் கடவுள்மாரி காப்பாத்தணும் டாக்டர்.." என்றெல்லாம் நோயாளிக்குத் துணையாக நின்ற சிறுவன் கெஞ்சிக் கேட்டான். நோயாளிச் சிறுவன் மூச்சு வாங்குவதைப்போலவும் சோர்வில் சுருண்டுவிடுவதைப்போலவும் செய்தான்மருத்துவச்சிறுமி வாயைத்திறக்கவும் நாக்கை நீட்டவும் சொன்னபோதெல்லாம் அந்தச் சிறுவன் தட்டாமல் செய்தான். இறுதியில் மருத்துவரான சிறுமி உதவியாளளைப் பார்த்து "ஒரு ஊசி போடுங்க. செவப்பு மருந்துல ஒரு பாட்டில், பச்சை மருந்துல ஒரு பாட்டில் குடுத்தனுப்புங்க.." என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். ஒரு சின்ன குச்சியை  ஊசியாக  பாவித்த சிறுமி, மருந்தை ஏற்றி அவன் கையில் குத்திவிட்டு குடிப்பதற்கும் மருந்துகளைக் கொடுத்தாள். எல்லாமே பாவனைகள். அவர்கள் உலகமே வேறாக இருந்ததுகற்பனை அவர்களுக்கு மிகச்சிறந்த துணையாக விளங்கியது.

தன்னை வேறொன்றாக கற்பனை செய்துகொண்டு, அதன்படி நடக்கும் பழக்கம் குழந்தைப்பருவத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. அப்பாவைப்போல சிரித்துக்காட்டவும் அம்மாவைப்போல பேசிக்காட்டவும் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் எல்லாருடைய வீட்டிலும் உண்டு. அவர்கள் விளையாட்டிலும் இக்கற்பனை தொடர்கிறது. திருடன்-காவலர் ஆட்டம், ராஜா-மந்திரி ஆட்டம், ஆசிரியர்-மாணவர் ஆட்டம் என அவர்கள் கற்பனைவளத்தால் உதிக்கும் ஆட்டங்கள் ஏராளம். ஏதோ ஒரு கட்டத்தில் குழந்தைகளிடமிருந்து இக்கற்பனை உதிர்ந்துவிடுகிறது. நாகரிக அளவுகோல்கள் இதற்கு இடம்கொடுக்காததுகூட ஒரு காரணமாக இருக்கலாம்அபூர்வமாக, ஒரு சிலர்மட்டுமே தன் மனத்தில்  கற்பனைக்கு இடம்கொடுத்தபடி வளர்கிறார்கள். கற்பனையாற்றல் வளமான மனத்தின் ஆரோக்கியமான அடையாளம். வானத்தில் நிலவைப் பார்த்து, அந்நிலவின் வழியாகஅதே நிலவை வேறோர் இடத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் காதலியையும் பார்த்து மகிழ கற்பனை உள்ளவர்களால் மட்டுமே முடியும். தனக்குத் தேவையானதை தானே படைத்துக்கொள்ள கற்பனை துணையாக நிற்கிறது.

தனக்குத்தானே படைத்துக்கொள்ளும் ஆற்றலுள்ள ஒரு மனத்தின் சித்திரத்தை நகுலன் கவிதையில் காணலாம். நள்ளிரவு நேரத்தில் ஈடுபாட்டோடு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் செயல்பாட்டோடு தொடங்குகிறது கவிதை. அவர் அருகில் ஒரு பாம்பு சுருண்டு கிடக்கிறது. பாம்பின் வருகையைப்பற்றி படைப்பாளிக்கு எதுவுமே தெரியாது. அவர் படைப்பிலேயே மூழ்கியுள்ளார்ஆழ்மனத்தில் காலம் கரைந்து, ஒரு நதியாக மாற, அதில் வெள்ளப்பெருக்கெடுத்தோடுகிறது. ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. மனிதர்கள் எல்லாரும் நனைந்து உலவுகிறார்கள். கனவில் பெருகிய வெள்ளத்தில் தானும் நனைந்துவிட்டதாக நினைத்து, நனவில் தலைதுவட்டிக்கொள்கிறார். கனவும் நனவும் சட்டென ஒரு புள்ளியில் முயங்கி நின்றுவிடுகிறது.

கவிதையில் கவர்ச்சியான அம்சம் காலம் கண்ணாடியாகக் கரைகிறது என்னும் வாக்கியம். கண்ணாடி பிரதிபலிக்கலாம். உடைந்து நொறுங்கலாம். ஆனால் எப்படி உருகிக்கரைய முடியும்? கரைக்கப்பட்டு குழம்பான கச்சாப்பொருள்கள் உச்ச கொதிநிலையில் கண்ணாடியாக உருமாறுகிறது. கண்ணாடி என்பது இறுதிநிலை. கரைசல் என்பது தொடக்கநிலை. கவிதை தன் கற்பனையின் வழியாக காலத்தின் ஆதிநிலையைத் தொடுகிறது. அப்புள்ளியில் காலமே நதியாக மாறி வெள்ளக்காடாக, பிரளயமாக எங்கெங்கும் நிறைந்திருக்கிறது.   காலம் பிரளயத்திலிருந்து தொடங்குகிறது அல்லது ஒரு யுகம் அழிந்து அடுத்த புதிய யுகம் வரும்போது பிரளயம் எழுகிறது  என்பது ஓர் ஐதிகம். ஒரு மனம் தன் கற்பனையின் ஆற்றலால் பிரளயத்தை படைத்துப் பார்க்கும் விளையாட்டு கவிதையில் சாத்தியமாகி இருக்கிறது.

கவிதையின் மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு எழுத்தாளனையும் ஒரு பாம்பையும் அருகருகே படைத்துக்காட்டும் ஆரம்ப வரிகள். பாம்பு என்பதை நடுங்கவைக்கும் ஒரு உயிரெனக் கொண்டால், அதன் இருப்பையோ அல்லது அருகாமையையோகூட உணராத அளவுக்கு அசாதாரணமான உச்சக்கட்ட உணர்வெழுச்சியின் விளிம்பில் கற்பனை வீற்றிருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்னும் கணத்தில்கூட வற்றாத கற்பனை வழங்குகிற இன்பத்தில் திளைக்கிறான் மனிதன். இது ஒரு கோணம் மட்டுமே. இன்னொரு கோணத்தில் பாம்பாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, இயற்கையின் படைப்பில் இரண்டும் ஒன்றே. மேல், கீழ் என்னும் வேறுபாடு எதுவுமில்லை.

கற்பனையில் உருவாக்கிய பிரளயத்தில் நனைந்ததாக நினைத்து, எழுந்து துண்டெடுத்து தலைதுவட்டிக்கொள்வது கவிதையின் இன்னொரு உச்சம். கற்பனையும் எதார்த்தமும் முயங்கும் புள்ளி. சாக்கிய நாயனார் கற்பனையாக மனத்தில் கட்டிய கோயிலின் குடமுழுக்குக்கு ஈசனே நேராக வந்து கலந்துகொண்ட பெரிய புராணக் காட்சியை சற்றே நினைத்துக்கொள்ளலாம். கற்பனையின் ஒரு பகுதியை எதார்த்தம் தன் இன்னொரு பகுதியால் முழுமை செய்து பார்த்து மகிழ்கிற கணம் அதுஅத்தகைய ஒரு மாபெரும் கணத்தை கவிதையில் செதுக்கி நிறுத்துகிறது நகுலனின் கவித்துவம்.

*

நகுலன்

நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
எழுதிக்கொண்டிருக்கிறான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரளயமாகச்
சுழித்துச் செல்கிறது
விறைத்த கண்களுடன்
அதன்மீது செத்த மீன்கள்
மிதந்து செல்கின்றன
எழுந்து கோட் ஸ்டான்டில்
தொங்கிக்கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
கொள்கிறான்.

*

தமிழ் நவீனகவிதை யுகத்தின் தொடக்கக்காலக் கவிஞர்களில் முக்கியமானவர் நகுலன். தொடக்கக்காலத்தில் வெளிவந்த இவருடைய கோட் ஸ்டான்ட் கவிதைகள் என்னும் கவிதைத்தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்ற ஒன்று. சிறுகதை, நாவல், கட்டுரை என எல்லாத் தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. இவருடைய படைப்புகள் அனைத்தையும் தொகுத்து நகுலன் கவிதைகள், நகுலன் கட்டுரைகள், நகுலன் சிறுகதைகள், நகுலன் நாவல்கள் என நான்கு தனித்தனித் தொகைநூல்களை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

*