Home

Sunday, 8 August 2021

காகா காலேல்கர் : மாபெரும் நாடோடி

17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார். அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களை அண்ணா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, ஐயா என உறவுச்சொற்கள் வழியாக அழைப்பதையும் உரையாடுவதையும் கண்டு மகிழ்ந்தார். சார், மேடம் போன்ற மேற்கத்தியச் சொற்களைவிட இத்தகு உறவுச்சொற்கள் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நடுவில் இயல்பான வகையில் ஒரு நெருக்கத்தை உருவாக்குவதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். அவரே தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட வழிமுறை அது. அன்று மாலையில் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் அதையொட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தார்.

அங்கிருந்த ஆசிரியர்களில் முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞரை பிள்ளைகள் அனைவரும் பாசத்தோடு காகா என அழைப்பதையும் அவரும் பிள்ளைகளோடு அன்புடன் பழகுவதையும் பார்த்து, அவரை எப்படியாவது தம் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று காந்தியடிகளுக்குத் தோன்றியது. காந்தியடிகளை முதன்முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுதான் காலேல்கருக்கும்  கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பாக சாந்தி நிகேதனுக்கு வருகை தந்திருந்த காந்திஜி ஆசிரம மண்டலியினர் வழியாக  காந்தியடிகளைப்பற்றிய தகவல்களை மட்டுமே அவர் தெரிந்துவைத்திருந்தார். அதுமட்டுமன்றி, காந்தியடிகள் எழுதிய இந்திய சுயராஜ்ஜியம் புத்தகத்தையும் முழுமையாகப் படித்திருந்தார். தான் தேடியலையும் இலட்சியத்தின் திறவுகோலை அந்தப் புத்தகத்தின் வழியாக அவர் ஏற்கனவே கண்டடைந்திருந்தார். அதனால் காந்தியடிகளுடன் ஆவலுடன் உரையாடினார் காலேல்கர். அந்த உரையாடலை மெல்ல வளர்த்து காலேல்கரைப்பற்றிய செய்திகளையெல்லாம் தெரிந்துகொண்டார் காந்தியடிகள்.

புனே நகரில் பெர்கூசன் கல்லூரியில் படித்துவந்த காலத்திலேயே தேசமெங்கும் சூறாவளியென வீசிய சுதந்திரப்போராட்டத்துடன் தன்னையும் இணைத்துக்கொண்டவர் காலேல்கர். தொடக்கத்தில் சாவர்க்கரின் இரகசிய இயக்கத்தில் சிறிது காலம் செயல்பட்ட பிறகு வெகுவிரைவிலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டவர். பட்டப்படிப்பை முடித்த பிறகு வழக்கறிஞராக இருந்த சுவாமி இராமதீர்த்தரின் வழியில் சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டக்கல்வி படித்தார். அப்போது அரவிந்தரின் கர்மயோகி இதழை தொடர்ந்து வாசித்துவந்தார். இராமதீர்த்தரின் போதனைகளை மராத்தியில் மொழிபெயர்த்தார். கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீகங்காதர ராவ் தேஷ்பாண்டேயின் ஆலோசனைக்கு இணங்கி பெல்காமில் இயங்கி வந்த தேசியக் கல்வி நிறுவனமான கணேஷ் வித்யாலத்தின் இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றினார். நாட்டு விடுதலைக்கான ஒரே வழி தேசியக்கல்வி மட்டுமே என அவர் ஆழ்மனம் உறுதியாக நம்பத் தொடங்கியது.

சூரத் காங்கிரஸில் வகுக்கப்பட்ட முக்கிய செயல்திட்டங்களை மக்களிடையில் உடனுக்குடன் கொண்டுசெல்லும் வகையில் தொடங்கப்பட்ட தைனிக் ராஷ்டிரமத்  என்னும் மராத்தி நாளிதழின் ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பணியாற்றினார் காலேல்கர். மாண்ட்லே சிறையில் திலகர் அடைக்கப்பட்ட நேரம் அது. ஆனால் அந்த இதழ் நீண்ட காலம் நீடித்திருக்க முடியவில்லை. விரைவிலேயே அரசாங்க ஆணையின்படி நிறுத்தப்பட்டது. திகைத்து நின்ற காலேல்கருக்கு பரோடாவில் கங்காநாத் பாரதி வித்யாலயத்தின் செயலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாண்டு காலத்திலேயே மற்றொரு ஆணையின் வழியாக அந்தத் தேசியப் பள்ளியின் செயல்பாடுகளை முடக்கியது அரசு.

அத்தருணத்தில் தன் மன உறுதியை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு குடும்பத்தைத் துறந்து காலேல்கர் இமயத்தை நோக்கிச் சென்றார். இயற்கையெழிலில் தோய்ந்தபடி மக்கள் வாழ்க்கைநிலைகளைப் புரிந்துகொள்ள ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு மைல்கள் நடந்தே மூன்றாண்டு காலம் சுற்றியலைந்தார். துறவறத்தின் தன்மைகளையும் துறவிகளின் கூட்டத்தையும் பார்த்தபின் துறவின் மீதான அவருடைய விருப்பம் தளர்ந்துவிட்டது. தேசியக் கல்விக்கொள்கை அவருடைய மனத்தில் மீண்டும் எழுச்சியுற்றது. அதனால் நேபாளம் வழியாக கல்கத்தாவுக்குச் சென்று அங்கிருந்து சாந்தி நிகேதனத்தை வந்தடைந்தார்.

தேசியக்கல்விக்கும் விடுதலைக்கும் காந்தியடிகள் மட்டுமே வழிகாட்டமுடியும் என்ற எண்ணம் மனத்தில் காலேல்கரின் மனத்தில் ஊறியது. காலேல்கரின் உதவியோடு சபர்மதியில் தேசியக்கல்விச் செயல்பாடுகளை உடனடியாகத் தொடங்கலாம் என்ற எண்ணம் காந்தியடிகளுக்கும் இருந்தது. அன்றே தாகூரை தனிப்பட்ட வகையில் சந்தித்து காந்தியடிகள் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி காலேல்கரை தன்னிடம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆசிரமத்தில் கல்விநிலையம் நன்றாகக் காலூன்றி இயங்கத் தொடங்கும்வரையில் சிறிது காலத்துக்கு காலேல்கரை அனுப்பிவைப்பதாக தாகூரும் தெரிவித்தார். காந்தியடிகளுக்கும் தாகூருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைப்பற்றி தெரியாமலேயே காலேல்கரும் அதே எண்ணத்தை தாகூரிடம் வெளிப்படுத்தி, சாந்திநிகேதனைவிட்டு வெளியேற அனுமதி கேட்டார். தாகூர் மகிழ்ச்சியுடன் அவருக்கு விடைகொடுத்து அனுப்பினார்.

சபர்மதிக்குச் செல்லும் பயணத்தில் பாதியிலேயே பரோடாவுக்கு அருகில்  இறங்கி, அங்கு வசித்துவந்த தன்னுடைய நெருங்கிய நண்பரும் கங்காதர வித்யாலத்தின் நிறுவனருமான கேசவ்ராவ் தேஷ்பாண்டேயைச் சந்திக்கச் சென்றார்.  அங்கிருந்த சாயாஜிபுரம் என்னும் கிராமத்தில் மக்கள் சேவையில் அவர் ஈடுபட்டிருந்த நேரம் அது. காலேல்கரைச் சந்தித்ததும் தனக்குத் துணையாக தன்னோடு தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார். சேவைக்கான உதவி என்று சொன்ன பிறகு காலேல்கரால் அவர் சொல்லைத் தட்டமுடியவில்லை. அவர் விருப்பப்படி அங்கேயே தங்கிவிட்டார். அந்தக் கிராமத்தில் ஒரு பால்பண்ணை தொடங்கப்பட்டது. ஒரு நாளிதழும் தொடங்கப்பட்டது. எல்லா வேலைகளிலும் காலேல்கர் அவருக்குத் துணையாக இருந்தார்.

பல மாதங்கள் காலேல்கரின் வருகைக்காகக் காத்திருந்த காந்தியடிகள், கடைசியாக அவர் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவலை அறிந்துகொண்டதும் நேரிடையாக தேஷ்பாண்டேவுக்கே கடிதம்  எழுதி ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் தொடங்கும் வேலை தாமதப்படுவதாகவும் காலேல்கரை உடனே அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். தேஷ்பாண்டே காலேல்கரிடம் உரையாடி நடந்த நிகழ்ச்சிகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு உடனடியாக காந்தியடிகளின் ஆசிரமத்துக்குப் புறப்பட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தற்செயலாக 10.04.1917 அன்று சம்பாரன் போகும் வழியில் பரோடா ரயில்நிலையத்தில் காலேல்கரைச் சந்தித்த காந்தியடிகள் நேரிடையாகவே அவரிடம் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஒருவழியாக காலேல்கர் ஆசிரமத்தை வந்தடைந்தார்.

இந்தி பிரசார வேலை தொடர்பாக காலேல்கரை சென்னைக்கு அனுப்ப நினைத்தார் காந்தியடிகள். அதைத் தெரிந்துகொண்ட காலேல்கர் அத்திட்டத்துக்கு உடன்பட மறுத்தார். காந்தியடிகளின் எண்ணங்களையும் செயல்முறைகளையும் சிறப்பியல்புகளையும் அருகிலிருந்து கவனிக்கும் ஆர்வத்துடன் வந்திருக்கும் தன்னால் ஆசிரமத்தைவிட்டு வெளியே செல்லமுடியாது என்று தெரிவித்தார். அதனால் ஆசிரமத்தில் கல்விக்கூட வேலையில் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருந்த கிஷோர்லால், நரஹரி, வினோபா, மதன்லால், பட்வர்த்தன் போன்றோடு காலேல்கரும் இணைந்து பணியாற்றலாம் என்று சொன்னார் காந்தியடிகள்.  பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் ஆகிய பாடங்களை அவர் மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்றுக்கொடுத்தார். பாடங்களுக்கு அப்பால் அவர் நிகழ்த்திய உரைகளால் மாணவர்கள் பெரிதும் கவரப்பட்டார்கள். வெகுவிரைவில் மாணவர்கள் பெரிதும் விரும்பும் ஆசிரியராக உயர்ந்தார் காலேல்கர்.

1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையையும் அரசு கொண்டுவந்த ரெளலட் சட்டத்தையும் எதிர்க்கும் விதமாக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் இந்தியர்கள் அரசுடன் ஒத்துழைப்பதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அரசு பள்ளிகளையும் கல்லூரிகளையும் மாணவர்கள் புறக்கணித்தல் என்பது அதன் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை வெற்றிபெற, மாணவர்களுக்கு உடனடியாக ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. இந்தச் சிந்தனையின் விளைவாக தேசிய கல்வி நிறுவனத்தின் தேவை உறுதியானது. அப்போது பம்பாய்க்கு அருகில் தலேகாமில் சமர்த்த வித்தியாலயமும் விபின் சந்திரபாலின் முயற்சியால் கல்கத்தாவில் வங்காள தேசியக் கல்வி நிறுவனமும் இயங்கிவந்தன. அத்தகு கல்வி நிலையமொன்றை காகா காலேல்கர் உதவியோடு அகமதாபாத்தில் நிறுவ நினைத்தார் காந்தியடிகள். அப்படி உருவானதுதான் குஜராத் வித்யாபீடம். 12.11.1920 அன்று காந்தியடிகள் அதைத் தொடங்கிவைத்தார். ஆங்கிலப் பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறிய அனைத்து மாணவர்களும் வித்யாபீடத்தில் இணைந்து கல்வியைத் தொடர்ந்தனர். ஒருவருடைய சிந்தனையில் தேசியக்கல்வி உருவாக்கும் செல்வாக்கைப்பற்றி நவஜீவன், யங் இந்தியா இதழ்களில் காலேல்கர் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார்.

வித்யாபீடத்தின் பயிற்றுமொழி பற்றிய விவாதத்தில் காந்தியடிகள் இந்தியை பயிற்றுமொழியாக வைத்துக்கொள்ளலாம் என கருத்துரைத்தார். ஆனால் காலேல்கர் குஜராத்தில் நடைபெறும் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி மொழியே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்றும் இந்தியை இரண்டாவது மொழியாக கற்பிக்கலாம் என்றும் கருத்துரைத்தார். நீண்ட நேர விவாதங்களுக்குப் பிறகு காலேல்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார் காந்தியடிகள். ஆங்கிலத்தையும் ஒரு மொழியாகக் கற்பிக்கவேண்டும் என்ற காலேல்கரின் யோசனையையும் காந்தியடிகள் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கித்வானியை அழைத்து, வித்யாபீடத்தில் ஆங்கிலத்துறையை உருவாக்கச் செய்தார்.

நவஜீவன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதும்படி காலேல்கரைத் தூண்டிக்கொண்டே இருந்தார் காந்தியடிகள். அடிப்படையில் மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காலேல்கர் அப்போது குஜராத்தியில் பேசுவதற்கு மட்டுமே பயிற்சியெடுத்திருந்தார். முதலில் அவர் தான் எழுதவிருப்பதை மராத்தியில் எழுதி பிறகு தன்னுடைய நண்பரான சுவாமி ஆனந்த் உதவியோடு குஜராத்தியில் மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினார். சிறிது காலத்துக்குப் பிறகு தமக்குத் தெரிந்த குஜராத்தியில் சொல்லச்சொல்ல, ஆனந்த் அதை நல்ல சொற்களால் அமைத்து கட்டுரையை முழுமை செய்யத் தொடங்கினார்.   ஆனால் அந்த நடைமுறை  அப்படியே தொடர்வதை விரும்பாத காலேல்கர் வெகுவிரைவிலேயே சொந்த முயற்சியால் குஜராத்தி எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். அவருடைய குஜராத்தி மொழியாளுமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார்கள். அந்த ஆண்டே அவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுதியொன்று குஜராத்தி மொழியில் வெளிவந்து அவருக்கு நல்ல புகழைத் தேடித் தந்தது. அவருடைய இமயப்பயணம் பற்றிய அனுபவக்கட்டுரை நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹிமாலயனோரவாஸ் என்ற தலைப்பில் வெளிவந்த அந்நூல் இலக்கிய உலகில் சிறந்த குஜராத்தி எழுத்தாளராக அவரை முன்னிறுத்தியது.

ஒத்துழையாமை இயக்கம் தேசமெங்கும் வேரூன்றிப் பரவிக்கொண்டிருந்த தருணத்தில் 02.05.1922 அன்று உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்ற இடத்தில் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சில போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்ற வீரர்கள் காவல் நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இந்தக் கலவரத்தில் இருபத்திரண்டு காவலர்கள் மாண்டுவிட்டனர். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காந்தியடிகள் உடனடியாக தன் இயக்கத்தை நிறுத்துவதாகத் தெரிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாவிரதம் இருந்தார். வன்முறை பெருகிவிடாதபடி அது தடுத்தாலும், ஆட்சிக்கு எதிரான எழுத்துகளை எழுதி வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி அரசு அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

அப்போது வித்யாபீடத்தின் பொறுப்போடு நவஜீவன் பத்திரிகையின் பொறுப்பையும் காலேல்கர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏறத்தாழ ஓராண்டுக்காலம் அப்பத்திரிகையின் ஆசிரியர் என்கிற நிலையில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுமக்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கினர். ஆயினும் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்திய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறைவாசத்தின் போது அவர் வடக்குச்சுவர் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். சிறையில் அறிமுகமான மெளலானா ஹுசேன் மஹமத் மதனியின் உதவியுடன் குரானைப் படித்து தேவையான விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்துக்கொண்டார். கல்வி என்பது மொழி, இனம், மதம் ஆகிய எல்லாவிதமான பேதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதற்கு காலேல்கர்  வாழும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.

சிறையிலிருந்து விடுதலை பெற்றபோது, காலேல்கர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏறத்தாழ இரண்டாண்டுகள் தொடர்ச்சியான மருத்துவத்துக்குப் பிறகே அவர் குணமடைந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய மனைவி அதே காசநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவத்தால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.  அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. தீவிரமான ஒரு செயலுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதன் வழியாகவே, மனைவியின் பிரிவுத் துயரத்திலிருந்து வெளிவர முடியும் என நம்பிய காலேல்கர் குஜராத்தி மொழியில் உடனே ஒரு பேரகராதியை உருவாக்கும் முயற்சியில் முழுமூச்சோடு ஈடுபட்டார். நரஹரிபாய், மகாதேவ தேசாய் போன்றோரின் உதவியுடன் மிகக்குறுகிய காலத்திலேயே செய்துமுடித்தார். இந்த அகராதியை குஜராத்தி மொழிக்கு காலேல்கர் வழியாகக் கிடைத்த மாபெரும் கொடை என்றே சொல்லலாம்.

குஜராத் வித்யாபீடத்தின் செயல்பாடுகளைக் குறித்து மக்கள் பெருமைப்பட்டனர். அங்கிருந்து படித்து வெளியேறும் மாணவர்கள் பெருமளவில் நல்ல தேசப்பற்று மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் விளங்கினார்கள். காலேல்கரின் எண்ணப்படி, குஜராத் பீடத்தின் தேசியக்கல்வி அரசியல் ஒற்றுமைக்கு ஒரு கருவியாக இருந்ததோடு மட்டுமன்றி, அறிவு வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவக்கூடிய விசையையும் அளித்தது.

12.03.1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கி தண்டி கடற்கரை வரைக்கும் நடைப்பயணத்தைத் தொடங்கினார். அவரோடு நடந்து சென்ற அறுபத்தெட்டு சத்தியாகிரகிகளில் காலேல்கரும் ஒருவர். இருபத்திநான்கு நாட்களுக்குப் பிறகு அந்தக் குழு தண்டியை அடைந்தது. 06.04.1930 அன்று  உடைப்பதாக அறிவித்தார். இது பேரளவில் சட்டமறுப்பு இயக்கமாக உருமாறி இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராகப் போராடத் தூண்டியது. 05.05.1930 அன்று தாராசனா உப்பு மையத்தில் அத்து மீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே காந்தியடிகளும் காலேல்கரும் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டனர்.

காலேல்கர் கதர்ப்பிரியர். சிறைச்சாலையில் ஒவ்வொரு நாளும் காந்தியுடன் இணைந்து இராட்டையில் நூல்நூற்றார். ஒருநாள் அவர் காந்தியடிகளிடம் இராட்டையின் வடிவமைப்பில் மாற்றம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். காந்தியடிகள் அவர் முயற்சியை வரவேற்பதுபோல சிரித்துக்கொண்டேஒரு கையால் தக்களியையும் இன்னொரு கையால் இராட்டையையும் சுழற்றினால்தான் தக்களியிலிருந்து நூலை எடுக்க முடிகிறது. உங்கள் முயற்சியால் ஏதேனும் ஒரு கைக்கு ஓய்வு கிடைத்தால் நல்லதுதான்என்றார். சிறையில் அடைபட்டிருந்த மற்றொரு கைதியின் உதவியோடு தக்களியை நிலைநிறுத்த வசதியாக அலுமியத்தாங்கி ஒன்றை உருவாக்கி இராட்டைக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்துவிட்டார் காலேல்கர். காந்தியடிகள் விரும்பியபடியே ஒரு கைக்கு ஓய்வு கிடைக்கும்படி செய்துவிட்டார். வெகுவிரைவிலேயே இந்த எரவாடா இராட்டை அமைப்பு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது.

காலேல்கருக்கு விண்மீன்களை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும். இரவு முழுதும் உலாவந்து அதிகாலையில் மறையும் ஒவ்வொரு விண்மீனின் பாதையையும் கவனித்துவந்தார் அவர். அவரால் புகழ்பெற்ற இருபத்தேழு விண்மீன்களையும் வானத்தில் எளிதாக அடையாளம் காட்டமுடியும். அந்த அளவுக்கு அவர் விண்மீன்களைப்பற்றி ஆழமாகத் தெரிந்துவைத்திருந்தார். காந்தியடிகளுக்கும் விண்மீன்கள் மீது ஆர்வத்தை உருவாக்க அவர் பெரிதும் முயன்றார். ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும் முன்பும் அதிகாலையிலும் அவருடைய கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்து, இறுதியில் வெற்றி பெற்றார். மெல்ல மெல்ல காந்தியடிகளும் வான சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்ட்வராக மாறினார்.

வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பும் முன்பே இர்வினுக்கு பதிலாக புதிதாக வந்திருந்த வைசிராய் வெலிங்க்டன் அடக்குமுறையைத் தொடங்கிவிட்டார். தேசிய நல மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஓர் அரசு ஆணையின் மூலமாக தடைசெய்தார். காலேல்கர் அரும்பாடுபட்டு வளர்த்த வித்யாபீடத்தை முடக்கி அரசே கையகப்படுத்திக்கொண்டது. எல்லாச் செயலாளர்களையும் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. காலேல்கர் பெல்காமுக்கு அருகிலுள்ள ஹிடங்லகர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இச்சிறையில் அவர் நூல்நூற்க அனுமதி கிடைக்கவில்லை. அதை முன்னிட்டு அவர் ஏழுநாள் உண்ணாவிரதம் இருந்தார். அதற்குப் பிறகே அவருக்கு நூல்நூற்கும் அனுமதி கிடைத்தது. இந்தச் சிறைவாசத்தின்போது சமூகத்தொண்டு பற்றியும் இயற்கையில் திளைக்கும் அனுபவம் பற்றியும் இரு முக்கிய நூல்களை மராத்தி மொழியில் எழுதினார்.

1934இல் காலேல்கர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்தபோது காந்தியடிகள் ஹரிஜன் யாத்திரையை மேற்கொண்டிருந்தார். காலேல்கரும் காந்தியடிகளுடன் இணைந்து சிந்து, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், வங்காளம் ஆகிய வடமாநிலங்களில் பயணம் செய்தார். அப்பயணத்தில் தேசியக்கல்வித் திட்டம் சார்பாக புதுப்புது கூறுகளை அவர் மக்களிடையில் முன்வைத்தார். அவருடைய உரைகள் அனைத்தும் காந்தியடிகளின் ஆதாரக்கல்வித் திட்டத்துக்கான விதைகளாக மாறின. காந்தியடிகள் குஜராத்துக்குத் திரும்பியதுமே குஜராத்தி இலக்கிய சம்மேளனத்தின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவு விழா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்றது. காலேல்கரும் அவ்விழாவில் கலந்துகொண்டு மிகச்சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். அந்த அரங்கில் குஜராத்தி மொழியில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகைநூலான ஜீவன் விகாஸ் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

1937இல் காந்தியடிகள் நாட்டு மக்கள் முன்பு ஆதாரக்கல்வித் திட்டத்தை அறிவித்தார். இதைப்பற்றி விவாதிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கல்வியாளர்கள் அழைக்கப்பட்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இத்திட்டத்தில் காலேல்கரின் பங்களிப்பு மிகமுக்கியமானது.

காந்தியடிகள் தம் பிரயாணத்தின் ஒரு பகுதியாக சாகர் என்னும் இடத்தில் தங்கியிருந்தார். அப்போது காலேல்கரும் அவரோடு இருந்தார். சாகரிலிருந்து சில மைல்கள் தொலைவில் உலகப்புகழ் பெற்ற ஜோக் அருவி இருந்தது. ஏறத்தாழ ஆயிரம் அடி உயரத்திலிருந்து பொழியும் அருவி அது. ஒருநாள் அதைப் பார்த்துவிட்டு வரலாம் என காந்தியடிகளை அழைத்தார் காலேல்கர். ”அப்படி என்ன அதிசயம் அங்கே இருக்கிறது?” என்று கேட்ட காந்தியடிகள் அவருடைய திட்டத்துக்கு உடன்படவில்லை. காலேல்கர் அந்த அருவியின் உயரத்தைப்பற்றி குறிப்பிட்டார். எந்த ஆச்சரிய உணர்வையும் வெளிப்படுத்தாத காந்தியடிகள்ஆயிரம் அடியெல்லாம் ஒரு உயரமா? மழை அதைவிட அதிகமான உயரத்திலிருந்து பொழிகிறதே, அது உனக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு தன் கடமையில் மூழ்கிவிட்டார். “நீ மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிற ஆள். ஒருவேளை அருவியைப் பார்ப்பது உனக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். எனக்கு ஒரு பயனும் இல்லை. வேண்டுமென்றால் நீ போய் பார்த்துவிட்டு வரலாம்என்று காலேல்கரை அனுப்பிவைத்துவிட்டார் காந்தியடிகள். காலேல்கர் உடனே புறப்பட்டுச் சென்று அருவியைப் பார்த்துவிட்டுத் திரும்பினார். இப்படி அருவி, ஆறு, கடல் என இயற்கை சார்ந்த இடங்களைத் தேடித் தேடி பயணம் செய்தார் காலேல்கர். தண்ணீர் இருக்கும் இடங்கள் தம்மைக் குளிர்விக்கின்றன என்று சொல்வது அவர் வழக்கம். கடலைத் தொட்டு வெட்டும் ஆயுதங்களென மழைத்தாரைகளைப்பற்றி காலேல்கர் எழுதிய கவித்துவம் ததும்பும் வரியை நினைவுகூர்ந்து சொல்லாத கவிஞரே இல்லை.

வித்யாபீடமும் சபர்மதி ஆசிரமமும் இல்லாத நிலையில் குஜராத்தைவிட்டு வெளியேற காந்தியடிகளிடம் அனுமதி கேட்டார் காலேல்கர். காந்தியடிகள் வெகுகாலத்துக்கு முன்பு தான் முன்வைத்த இந்தி பிரசார வேலையை அவருக்கு நினைவூட்டினார். அப்போது காந்தியடிகளின் யோசனையை ஏற்றுக்கொண்டார் காலேல்கர். உடனே இந்தி பேசாத எல்லா மாகாணங்களுக்கும் சென்று அங்கு வாழும் மக்களுக்கு இந்தி மொழியின் மீது ஆர்வம் பிறக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆண்டுக்கணக்கில் எட்டு மாநிலங்களில்  அலைந்த காலேல்கர் தொடர்ச்சியாக இந்தி பிரசார வேலைகளில் ஈடுபட்டார். இதற்காகவே ராஷ்டிரபாஷா பிரசார சமிதி என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

08.08.1942 அன்று பம்பாயில்வெள்ளையனே வெளியேறுஎன்ற தேசிய முழக்கம் எதிரொலித்தது.  அடுத்த நாளே காந்தியடிகளும் பல முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலேல்கருக்கு மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை விதித்தது அரசு. அத்தண்டனைக் காலத்தை அவர் வேலூர் சிறையிலும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிவனி ஸ்பெஷல் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

1945இல் காலேல்கர் சிறைவாசம் முடிந்து விடுதலை பெற்றார். அப்போது நாடே மதக்கலவரங்களில் மூழ்கியிருந்தது. அமைதியை நிலைநாட்டுவதற்காக காந்தியடிகள் பாடுபட்டுக்கொண்டிருந்தார். காந்தியடிகளுடன் காலேல்கரும் இணைந்து பயணம் செய்தார். தேசம் இரண்டாகப் பிரிவதை யாராலும் தடுக்க இயலவில்லை. இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு சுதந்திரம் பெற்றன. அதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே காந்தியடிகள் கொல்லப்பட்டார்.

காந்தியடிகள் மறைவுக்குப் பிறகு வார்தா சேவாசிரமத்தில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல தலைவர்கள் அங்கே கூடினார்கள். ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டுள்ள எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற காந்தியடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அனைவரும் செயல்படவேண்டும் என ஜே.சி.குமரப்பா தெரிவித்தார். அந்த யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அனைவரும் ஒன்றிணைந்த அந்த அமைப்புக்கு காலேல்கர் சர்வ சேவா சங்கம் என்று பெயர் சூட்டினார். இதற்கான விதிமுறைகளையும் அவரே உருவாக்கினார். இந்த மாநாட்டில் ஆண்டுதோறும் சர்வோதய சம்மேளனத்தை நடத்தவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதல் சம்மேளனம் ஒரிசாவில் அனுகுல் என்ற இடத்திலும் இரண்டாம் சம்மேளனம் ஐதராபாத்தில் சிவராம்பள்ளி என்ற இடத்திலும் நடைபெற்றன.

1948இல் நடுவண் அரசு சுருக்கெழுத்து வழியாக எழுதுவது பற்றியும் தட்டச்சுக்கு உகந்த வகையில் தட்டச்சுப்பொறியை வடிவமைப்பது பற்றியும் முடிவெடுக்கும் வகையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவுக்கு தலைவராக இருந்து வழிகாட்டினார் காலேல்கர். மொழிவல்லுநர்களோடும் தட்டச்சுப்பொறி வடிவமைப்பாளர்களோடும்  பல கட்டங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களிலிருந்து சில முக்கிய ஆலோசனைகளைப் பெற்று, இறுதியாக இந்தி மொழிக்கான தட்டச்சுப் பொறியை வடிவமைப்பதில் வெற்றி பெற்றார்.

1949இல் காந்தி நினைவு நிதி நிறுவப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காந்தி நினைவாலயம் உருவாக்கப்பட்டு, காலேல்கர் அதன் இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் அதை இரு பகுதிகளாகப் பிரித்தார். ஒன்றில் நூலகமும் மற்றொன்றில் வாசகர் கூடமும் அமைக்கப்பட்டன. நூலகத்தில் காந்தியடிகள் எழுத்துகள் அனைத்தும் வைக்கப்பட்டன. காந்தியடிகள் பிறருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு தொகுக்கும் முயற்சி தொடங்கியது.

சிறந்த கல்வியாளர், இலக்கிய ஆளுமை என்கிற வகையில் காலேல்கர் மாநிலங்களவை உறுப்பினராக 1952இல் நியமிக்கப்பட்டார். ஏறத்தாழ பன்னிரண்டாண்டு காலம் அவர் அந்தப் பதவியில் நீடித்தார். இந்தச் சமயத்தில்தான் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுக்கு காலேல்கர் தலைமை வகித்தார். அந்தக் குழு நாடெங்கும் பயணம் செய்து, தேச நிலவரத்தைப் பரிசீலித்தனர். இரண்டாண்டு காலம் தொடர்ச்சியாக பயணம் செய்து தேடித் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அவர் ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்தார், ஆனால் அரசு அதை ஏற்கவில்லை.

வாழ்நாள் முழுதும் கல்வியாளராகவும் தேசத்தொண்டராகவும் வாழ்ந்த அவர் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். மராத்தி, குஜராத்தி, இந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் அவர் எழுதினார். கவிதை, பயணக்கட்டுரைகள், வாழ்க்கைவரலாறு, தத்துவ விளக்கம், இயற்கையெழில் கட்டுரைகள் என அவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவருடைய இலக்கிய ஆளுமைக்கு சான்றாக உள்ளன.

உண்மையைத் தேடி அலையும் ஒரு நிரந்தர நாடோடியாகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்தார் காலேல்கர். பற்றுகளை நீத்தவர். நடமாடும் உலக அகராதி. சத்தியத்தின் வழி நடந்தவர். ஒழுக்கவாதி. இலட்சியங்களை உயிராக மதித்தவர். கவியுள்ளம் கொண்டவர். உலகத்தையே ஒரு குடும்பமாக மாற்றி வாழும் கனவைச் சுமந்திருந்தவர். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை அவர் பார்க்காத இடங்களே இல்லை. ஒவ்வொரு இடத்தையும் அவர் நடந்தே அறிந்திருந்தார். இப்படி ஆறுகளையும் மலைகளையும் அருவிகளையும் குன்றுகளையும் காடுகளையும் தேடித்தேடிச் சென்று பார்த்த அனுபவங்களைப்பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையெல்லாம் 1952இல் தொகுத்து ஜீவன்லீலா என்னும் தலைப்பில் தொகுத்து வெளியிட்டார். அத்தொகுதிக்கு எழுதிய முன்னுரைக்கு அவர் நின்று கரம்குவித்துத் தொழுதல் என்றே தலைப்பிட்டிருந்தார். இயற்கையை வணக்கத்துக்குரிய தெய்வமாகவே அவர் கருதினார் என்பதற்கு அந்த வாசகமே அடையாளம்.

சர்வோதயம் மலர்கிறது ஜூலை 2021